கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 24

Aathirai

Active member
அத்தியாயம் 24

மாலதியின் அழுகை, மற்றும் கோபத்திற்க்கான காரணம் என்னவென்று தெரிந்தாலும், இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் எந்த ஒரு பெண்ணும் கொஞ்சம் மனஉளைச்சலில் தான் இருப்பாள் என்று அஞ்சலி நினைத்தாள்.

அங்கு இருந்து எதையும் பேச வேண்டாம் என்று நினைத்தவர்கள், திலகா கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டு மேலே உள்ள தங்களது அறைக்குச் சென்றனர்.

உள்ளே நுழைந்ததுமே இனியன் கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தான். அதைப் பார்த்து அஞ்சலிக்கு சிரிப்பு வந்தாலும், அவளின் யோசனை அனைத்தும் மாலதியின் மேலேயே இருந்தது.

யோசனையுடனேயே வந்தவளை அரைக் கண்ணால் பார்த்தவன், அவளை அப்படியே இழுத்துத் தன் மேல் விழச் செய்தான் இனியன். இதை எதிர்பாராதவள், “ஏய்.. இனி.. என்ன இது விளையாட்டு.? விடு. இப்போதானே ரூம்குள்ள வந்த. அதுக்குள்ள என்ன உனக்கு ரொமான்ஸ் வேண்டியிருக்கு.?” என்று சொன்னவளைப் பார்த்து,

“ஏய்.. நீ என்ன எனக்கு ரொமான்ஸ் வரதுக்கு டைம் டேபிள் போட்டுத் தருவ போலிருக்கு.? எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் என் பொண்டாட்டியைக் கொஞ்ச முடியும்.? இப்போ எனக்குத் தோணுது. அதனால தான் இழுத்தேன்.” என்று சொல்ல,

அவனை முறைத்தபடி நின்றிருந்தவளின் முகத்தில் படர்ந்திருந்த யோசனையை புரிந்தவன், அவளைப் பிடித்துத் தன் மடி மேல் உட்காரவைத்தபடி பொறுமையாய்ப் பேசினான்.

“இங்க பாரு செல்லம். நான் நாலு சுவத்துக்குள்ள தான பண்றேன். என்ன பப்ளிக்லயா பண்ணிட்டேன்.? அப்படி பண்ணா வேணும்னா நீ திட்டறதுல அர்த்தம் இருக்கு. இன்னைக்கு காலைல இருந்தே உன் மேல எனக்கு ஒரு கண்ணு. இந்த சாரில நீ எவ்ளோ க்யூட்டா இருக்க தெரியுமா.?” என்று அவளின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளியவனை மெல்லியதாய் ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வை, எப்படிப்பட்ட பார்வை என்பதை அறியவே அவனுக்கு சில நாட்களாகும் என்று தோன்றியது.

“சரி, உன் பிரச்சினை தான் என்ன.? உனக்கு என்ன தெரியணும்.?” என்றான் இனியன்.

“ஏன், அத்தான் மாலதி அக்காவ இன்னும் கூட்டிட்டுப் போகாம இருக்காங்க.? அவர் வரதும் ரொம்ப அபூர்வம்னு சொல்றாங்க. அப்படி என்னதான் பிரச்சினை அவங்களுக்குள்ள.?” என்றாள்.

“ஹூம்ம்.. நீ ஊரான் வீட்டுப் பிரச்சினையெல்லாம் பாரு. உன் வீட்டுக்காரனை மட்டும் பார்க்காத.” என்று சொன்னவனிடம் திரும்பியும் ஒரு முறை முறைத்து விட்டு எழப் போனவளை,

“ஏய்ய்.. சரி தாயே.. சொல்றேன்.. வா..” என்று மீண்டும் பிடித்து இழுத்து உட்கார வைத்தபடி சொல்ல ஆரம்பித்தான்.

முகுந்தன் ஆம்பூரில் உள்ள லெதர் ஃபாக்டரியில் வேலை செய்கிறான். மாதம் நல்ல வருமானம் வந்தது. தன் கூடவே வேலை செய்கிறவர்களுடன் நல்ல பழக்கமும் ஏற்பட்டது.

முகுந்தனுடன் வேலை செய்கிறவர்கள் நாலைந்து பேர் சேர்ந்துதான் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு இருப்பர். அவர்களுள் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்க்கு இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் சென்று வந்தனர்.

திருமணம் முடிந்தவன் செஞ்சியைச் சேர்ந்தவன் என்பதால், அப்பொழுதே ஆம்பூரில் வாடகைக்கு புது வீட்டைப் பார்த்து அதில் தன் புது மனைவியுடன் குடியேறினான். புதுமணப் பெண் என்பதால், எங்கே புதிதாகச் சென்றாலும், வந்தாலும் கழுத்தில் நிறைய நகைகளைப் போட்டுக்கொண்டே செல்வாள் அவள்.

சில நாட்கள் கழித்து அவன் நைட் ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் போது கதவு திறந்திருந்தது. வீடு முழுக்க அனைத்தும் சிதறிக் கிடந்தது. உள்ளே அவர்களுடைய படுக்கையறையில் அவனுடைய புது மனைவி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாய்க் கிடந்தாள்.

அதைப் பார்த்து கதறி அழுதவனுக்கு அப்போதுதான், அங்கே இருந்த பீரோ முழுவதும் துணிகள் சிதறியபடி இருக்க, நகை வைக்கும் அறை காலியாக இருந்தது. நகைகளுக்காக அவன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

போலீஸார் வந்து விசாரித்துச் சொல்வதாய் சொன்னார்களே தவிர, இதை யார் செய்தார்கள் என்பது இப்போது வரை மர்மமாய் உள்ளது. அப்போதே அங்கே குடி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

அந்த பயத்தினாலேயே முகுந்தன் திருமணம் முடிந்ததும், அவனோடு மாலதியைக் கூட்டிச் செல்லாமல் இங்கேயே இருக்க வைத்துவிட்டான். அவளைக் கூட்டிக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் தோன்றினால், அன்று தன் நண்பனின் மனைவிக்கு நேர்ந்த கொடுமையே அவன் நினைவுக்கு வரும். அதனால், அப்படியே விட்டுவிடுவான்.

அதன் பிறகு, அவன் வாரம் ஒரு முறை வந்து போய்க்கொண்டிருந்தான். அதாவது, திங்கள் முதல் சனி வரை வேலை இருக்கும். சனிக்கிழமை இரவு வந்தால், ஞாயிறு இரவு கிளம்பிவிடுவான். அப்போது மாலதிக்கு முதன் முறை நாட்கள் தள்ளிப் போனது. ஆனால், என்ன காரணத்தினாலோ சில நாட்களிலேயே அது தங்காமல் போனது.

அதன் பிறகு, முகுந்தன் வருவது மாதத்திற்க்கு இரண்டு முறை என்றானது. பிறகு, இப்போதோ மாதத்திற்க்கு ஒருமுறை தான் வந்து செல்கிறான். இப்படியே மூன்று வருடங்கள் போய்விட்டது.

என்று தன் அண்ணன் கதையைக் கூறி முடித்தான் இனியன். அவன் சொல்லி முடித்ததும் அஞ்சலியின் மன எண்ணத்தில் பலவாறு வந்து போன கேள்விகளையும், யோசனைகளையும் ஆராய்ந்தான் இனியன். அவளைத் தன் மடி மேல் அமர வைத்திருந்தவன், அப்படியே அவள் இடுப்பைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.

“ப்ச்.. என்ன இனி. எதுக்கு இப்படிப் பண்ற.?” என்றாள் எரிச்சலுடன்.

“என் செல்லத்துக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன்.? ரொம்ப யோசனையோடவே இருக்கியே.! அதான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டனே,.அப்பறமும் என்ன.?” என்றான்.

“இல்ல, இனி. இது ரொம்பத் தப்பு. அங்க கல்யாணம் ஆகிப் போனவங்க எல்லாருக்குமே இப்படித்தான் நடந்ததா.? அங்கிருக்கவங்க யாருமே கல்யாணம் ஆகாமத்தான் இருக்காங்களா.? இது ரொம்ப முட்டாள் தனம் தெரியுமா.? மாசத்துக்கு ஒருதடவை வராங்க. அப்போ மட்டும் வந்தாப் போதுமா.? இதுல அந்த அக்காவ மட்டுமே குறை சொல்றது எந்த விதத்துல நியாயம்.? அவங்க பேசறதுதான் ஒரு மாதிரி. மத்தபடி அவங்க இப்படி இருக்கறதுக்குக் காரணம் உங்க அண்ணா தான்.” என்றாள்.

“ஹூம்ம். இத நீ இப்போ தான் சொல்ற. இத நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியாச்சு. அதைப் பத்தி அப்பாவும், அம்மாவும் பேசியாச்சு. ஆனாலும், அவன் பிடியே குடுக்க மாட்டீங்கறான். நாங்க என்ன பண்றது சொல்லு.?” என்றான்.

“நாளைக்கு உங்க அண்ணாவ லீவு போட்டுட்டு வரச் சொல்லு இனி. நாம நாளைக்கு ஒரு பிளான் பண்ணுவோம். அதுக்கப்பறமாவது அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்.” என்றாள்.

“அய்யோ.. அப்படி என்னமா பிளான் போட்டு வைச்சிருக்க.? சொல்லு பார்ப்போம்.” என்று இனியன் கேட்க, அஞ்சலி அவனிடம் சொன்னது சரியென்றே பட்டது அவனுக்கு.

“பரவால்ல அஞ்சலி. நீயும் நல்லாவே பிளான் பண்ற. பேசாம எங்க டிபார்ட்மெண்ட்ல ஏதாவது பிராப்ளம்ன்னா உன்கிட்ட தான் பிரச்சினைய சால்வ் பண்ண ஏதாவது பிளான் இருக்கான்னு கேட்கணும்.” என்றான்.

“ஹூம்ம். அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். நான் போய் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்.” என்று எழுந்தவளை, திரும்பவும் பிடித்து இழுத்தவன் அவன் நெற்றியை அவளின் நெற்றியோடு முட்டியவாறே குழைந்தபடி கேட்டான்.

“சரி பிளான்ல்லாம் அப்பறம் இருக்கட்டும். இன்னைக்கு நைட் ஏதாவது ஸ்பெஷல் இருக்கா.?” என்றான்.

“அதை நீ அத்தைக்கிட்ட தான் கேட்கணும். ஏன்னா அவங்க தான டின்னர் செய்வாங்க.” என்றாள் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல்.

“ஏய்.. உனக்கு நான் எதைப்பத்தி கேட்கறேன்னு நிஜம்மா தெரியல.? அப்படியே பப்பா பாரு, ஒண்ணும் தெரியாத மாதிரியே பேசு. ரொம்பக் காஞ்சு போயிருக்கேன் செல்லம். டெய்லியும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துட்டு நீயும் டயர்டா இருக்கன்னு தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல. ஆனா, இன்னைக்கு நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும். போன வாரம் காஞ்சிபுரத்துல இருக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்தது. இன்னைக்கு நைட்டும் ஒண்ணு சேரலாமா.?” என்று அவன் கேட்ட குழைவில் அந்த இடத்தில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் நிச்சயம் சம்மதம் சொல்லித்தான் ஆக வேண்டும். அன்புக் கணவன் ஆசைக் காதலாய்க் கேட்கும் போது அவளால் எப்படி சம்மதம் சொல்லாமல் இருக்க முடியும். ஆனால், அவள் அதை வேறு விதமாகச் சொல்ல எண்ணினாள்.

அவனோ கேட்டுவிட்டு அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ தன் சம்மதத்தைச் சொல்ல, அவன் இதழ்களை வருடிவிட்டு அதில் ஒரு முத்தத்தையும் கொடுத்து விட்டு, “ஓகே..” என்று சொன்னவாறு அவனை அப்படியே கட்டிக்கொண்டாள்.

இனியனோ ஏதோ விளையாட்டில் தங்கப்பதக்கம் வாங்கிய மகிழ்ச்சி போல், “யெஸ்.. யெஸ்..” என்று தன் கையை மடக்கி வெற்றி பெற்றுவிட்டதற்க்கான குதூகலத்தைக் காண்பித்தான்.

அன்று இரவு, அனைத்து உணவுகளையும் சமைத்து முடித்திருந்தார் திலகா. மாலதி வெளியே அப்பொழுதும் வராமலே இருக்க, அஞ்சலி கூடவே இருந்து சிறு சிறு உதவி செய்தாள் திலகாவிற்க்கு.

அன்றுதான் திலகா சிறிது அஞ்சலியுடன் பேச ஆரம்பித்திருந்தார். அந்த நேரம் மாலதி உடன் இல்லாமல் இருந்ததே நல்லதாகிப் போனது. இனியன் கீழே இறங்கி வந்து தன் அம்மாவிடம் வந்தான்.

“அம்மா, டின்னர் எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா.?” என்று கேட்க,

“எல்லாம் ரெடியாயிடுச்சு டா. சப்பாத்தி, குருமா, கிச்சடி, சட்னி. இதோ டேபிள்ல வைச்சிருக்கேன் பாரு. சாப்பிடறியா.?” என்று கேட்டார் திலகா.

இங்க வேண்டாம் மா. நாம எல்லாத்தையும் எடுத்துட்டு தோட்டத்துக்குப் போய் உட்கார்ந்து சாப்பிடுவோம். ரொம்ப நாள் ஆச்சு இல்ல.?” என்றான்.

“ஆமா, திலகா நானுமே சொல்லணும்னு நினைச்சேன். அங்கயே போய் உட்கார்ந்து சாப்பிடலாம்.” என்றார் நடராஜனும்.

“ம்ம்.. சரிங்க. போகலாம்.” என்று சொன்னதும், அனைவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றனர். மாலதி வராததைக் கண்டு அஞ்சலிக்கு சற்று வருத்தமாக இருந்தது.

எப்படியாவது அவளைச் சமாதானம் செய்து அழைத்து வரலாம் என்று திரும்பவும் அவளது அறைக்குச் சென்றாள்.

“அக்கா, நீங்க இன்னும் ஏன் ரூம்லயே அடைஞ்சு கிடக்கறீங்க.? வெளிய வாங்கக்கா. எல்லாரும் தோட்டத்துக்குப் போய் சாப்பிடலாம். உங்களுக்காக தான் எல்லாரும் வெயிட் பண்றாங்க.” என்றாள்.

“தயவு செய்து என்னை வற்புறுத்தாத. நான் என்ன பண்ணா உங்களுக்கென்ன.? நீங்க எல்லாரும் போய் நிம்மதியா சாப்பிடுங்க. என்னைத் தனியா விடுங்க.” என்று இன்னும் வெறுப்பை உமிழும் வார்த்தைகளாகவே பேசினாள் மாலதி.

“அக்கா, நாம எல்லாரும் ஒரே குடும்பம் தானே.? எல்லாரும் அங்க இருக்கும் போது, நீங்க மட்டும் தனியா அதுவும் அழுதுட்டு இருந்தா எங்களுக்குக் கஷ்டமா இருக்காதா.? மதியம் நீங்க ரொம்ப சோகத்துல இருந்தீங்க. நீங்களா சமாதானம் ஆயிடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா, நீங்க இன்னும் அப்படியே தான் இருக்கீங்க. உங்க பிரச்சினை என்னன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு. அதை நான் சரி பண்றேன். உங்க மேல எந்தத் தப்பும் இல்ல.” என்று அவள் சொன்னதும், படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

“இத்தனை வருஷமா இங்க யாராலுமே என்னோட பிரச்சினையத் தீர்க்க முடியல. இப்போ வந்தவ நீ, என்னோட பிரச்சினையத் தீர்க்கப் போறியா.? சும்மா எதையோ பேசணும்னு பேசாத.” என்றாள் எரிச்சலாக.

“இல்லக்கா, நிஜமாலுமே தான் சொல்றேன். நீங்க என்னை நம்பலாம். நாளைக்கு உங்களுக்கே நான் சொல்றது உண்மைன்னு புரியும். இப்போ சாப்பிட வாங்கக்கா.” என்றாள்.

ஒரு நிமிடம் யோசித்தவள், “சரி போ. நான் அங்க வந்து சாப்பிடல. நான் இங்கயே சாப்டுக்கறேன்.” என்று அப்போதைக்கு சொன்னாள் மாலதி.

சரி எப்படியோ சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டதே அதிகம் என்று நினைத்தவள், அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். இவள் எப்படி என் பிரச்சினையைத் தீர்ப்பாள்.? என்ற கேள்விக்குறியுடனேயே அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மாலதி.

(தொடரும்...)
 
Last edited:
Top