கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 26

Aathirai

Active member
அத்தியாயம் 26

அடுத்த நாள் காலை அனைவரும் நேரமாகவே கிளம்பி ஏலகிரிக்குச் செல்ல ஆயத்தாமாயினர். இதற்க்காகவே மகேந்திரா எக்ஸ்யூவி வண்டியைத் தனது டிபார்ட்மெண்டில் இருந்து ஏற்பாடு செய்திருந்தான் இனியன்.

ஏழு பேர் அமர்ந்து செல்லும் வண்டியில் ஆறு பேரும் கிளம்பினர். வழியில் தங்களது குலதெய்வம் கோவிலான புத்து மாரியம்மனை தரிசித்து விட்டுச் சென்றனர்.

திருப்பத்தூரிலிருந்து வெறும் அரை மணி நேர பயணமே என்பதால் மிகவும் மெதுவாகவே வண்டியைச் செலுத்தினான் இனியன். பின்னால் மாலதியும் முகுந்தனும், நடுவில் நடராஜனும் திலகாவும், முன்னே இனியன் வண்டியை ஓட்ட, அருகே அஞ்சலி அமர்ந்திருந்தாள்.

வண்டி எடுத்ததிலிருந்தே இனியன் அவர்களிடம் ஏதாவது ஒரு பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்க, அஞ்சலியும் ஒரு குதூகலத்தில் நடராஜனிடமும், அவ்வப்போது திலகாவிடமும் பேசிக்கொண்டு வந்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் ஏலகிரி போயிருக்கீங்களா மாமா.?” என்றாள் அஞ்சலி நடராஜனிடம்.

“ம்ம்.. நாங்க சும்மா, சும்மா போவோம் மா. இவனுங்க சின்ன பசங்களா இருக்கும் போது, வருஷம் ஒரு தடவையாவது வந்துட்டு, ஒரு நாள் என்னுடைய ஃப்ரெண்ட் வீட்டுல தங்கிட்டு, எல்லா இடமும் சுத்திப் பார்த்துட்டு தான் போவோம். முகுந்தன் இருக்கற இடமே தெரியாது. இவன் இருக்கானே, சரியான அறுந்த வாலு. இப்போதான் மா அடங்கி இருக்கான். அப்போவெல்லாம் நாங்க சமாளிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவோம். எங்க போனாலும் ஏதாவது ஒரு வம்பிழுத்துட்டு வருவான். இல்லைன்னா வேற ஏதாவது பிரச்சினைய உண்டு பண்ணுவான். அவன் இதெல்லாம் உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டானே.?” என்றார் நடராஜன்.

அவர் சொன்னதும், அஞ்சலி சிரிப்புடன் இல்லை என்று தலையாட்ட, இனியனும் பழைய நினைவுகளை நினைத்துச் சிரித்தான்.

“ஆனா, முகுந்தன் வேலைக்குப் போனதுக்கப்பறம் அப்படியே விட்டுட்டோம். அதுக்கப்பறம் ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்குத்தான் போறோம். இதுல, நீயும், மாலதியும் தான் புதுசு. ஆனா, அந்த இடங்களெல்லாம் திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காது. அதுவும், அந்த முருகன் கோவில என்னால மறக்கவே முடியாது.” என்று கண் கலங்கினார் திலகா.

என்னவாயிற்றோ.? என்று விழித்தனர் அஞ்சலியும், மாலதியும்.

“அது ஒரு கதை. இந்த வாலுப் பையனுக்கு ஏழு வயசு இருக்கும் போது போயிருந்தோம். அப்போ, எங்க கண் முன்னாடி இருந்த பையன் ஒரு நிமிஷத்துல திடீர்னு காணாமப் போயிட்டான். எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அய்யோ எங்க புள்ளைய யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு தேடாத இடமே இல்ல. அப்போ, இங்கிருக்கற முருகனைத்தான் உங்க அத்தை வேண்டிக்கிட்டா. அவ வேண்டினதுக்கப்பறம் தான் ஒரு புதர்கிட்ட மயங்கிக் கிடக்கறான். பசி மயக்கமா, இல்ல என்ன மாயமோன்னு தெரியல. அவன் எப்படி அங்க போனான்னு அவனுக்கே தெரியல. அதுக்கப்பறம் அந்த முருகன் கோவிலுக்குப் போறதுக்காகவே ஏலகிரி போவோம். ஆடி மாசம் அந்தக் கோவில்ல ரொம்ப விசேஷமா இருக்கும். ஒரு தடவை அதுக்காகவும் போயிருந்தோம். ரொம்ப நல்லா இருந்துச்சு.” என்று நடராஜன் பல கதைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்.

இவர்கள் இப்படியாக பேசிக்கொண்டே இருக்க, பின்னால் இருந்தாலும், முகுந்தன் மாலதியுடன் பேசவே இல்லை. இருவரும் அமைதியாகவே வருவதைப் பார்த்த இனியன் அவர்களிடம் சற்று வம்பிழுக்கலாம் என்று எண்ணினான்.

“அண்ணி, ரொம்ப நாள் கழிச்சு அண்ணா வந்திருக்கார். பின்னால தனியா வேற உட்கார்ந்திருக்கீங்க. ரெண்டு பேரும் ரொமான்ஸ் எதுவும் பண்ணலையே.? ஏன்னா, புது ஜோடி நாங்க தான். நீங்க இல்ல.” என்றதும்,

பெரியவர்கள் சிரிக்க, முகுந்தனும், மாலதியும் ஒரு மாதிரி ஆகிவிட்டனர். “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல கொழுந்தனாரே. நாங்க எங்க தனியா விட்டாலும் இப்படித்தான் வருவோம். எங்களுக்கெல்லாம் அப்படின்னா என்னன்னே தெரியாது. நீங்க வேற.” என்று முகுந்தனை ஒரே வார்த்தையில் இறக்கிப் பேசினாள்.

அவள் அப்படிப் பேசியதன் உணர்வை அவர்கள் நால்வரும் புரிந்து கொண்டனர். ஆனால், முகுந்தனுக்கு அது தர்மசங்கடமாக இருந்ததோ தவிர, அதன் வலியை உணரவில்லை. அதே போல், அவளை ஒரு முறை முறைத்தான். ஆனால், மாலதியோ அதை சட்டை செய்யவில்லை.

இவையனைத்தையும் இனியன் கண்ணாடி வழியே பார்த்தபடி தான் வந்தான். சீக்கிரமே இவர்களின் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தான். அப்படியே பேசிக்கொண்டு வந்ததில் ஏலகிரி வந்துவிட்டது.

அவர்கள் முதலில் சென்றது ஏலகிரி முருகன் கோவிலுக்குத்தான். இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரியில் சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன. ஆனால், முதலில் நடராஜனும், திலகாவும் போக வேண்டும் என்று விரும்பியது அங்கே தான். உள்ளே சென்று முருகனை தரிசித்தனர்.

“ஹூம்ம்.. சுத்திப் பார்க்கன்னு கூட்டிட்டு வந்துட்டு இங்கயும் கோயிலுக்கு வந்திருக்காங்க. இவங்களையெல்லாம்.” என்று மனதில் அவர்களை நினைத்து திட்டிக்கொண்டிருந்தாள் மாலதி.

அதை முருகனே கேட்டாரோ என்னவோ, திலகா அருகே வந்து, “மாலதி நல்லா வேண்டிக்கோ. உன் புருஷன் மனசு மாறி உன்னைக் கூட்டிட்டுப் போகணும், சீக்கிரமே குழந்தை பிறக்கணும்னு. நீ மனசார வேண்டினா கண்டிப்பா முருகன் உன்னுடைய வேண்டுதல நிறைவேத்துவார். இது நான் அனுபவப்பட்ட உண்மை. அதனால தான் சொல்றேன்.” என்றார்.

திலகா சொன்னதை மாலதி கேட்க வேண்டாம் என்றாலும், அவர் சொன்ன விஷயங்கள் தனக்கானவை என்பதால், கண்ணை மூடி அவர் சொன்னதையே முருகனிடம் சொன்னாள். அதை முருகன் கேட்பாரோ, மாட்டாரோ.? ஆனால், ஏதோ ஒரு நம்பிக்கையில் வேண்டினாள்.

அவள் வேண்டிக்கொண்டு கண் விழித்த போது, அவள் கையில் ஒரு பூவைக் கொடுத்தார் பூசாரி. ஏனோ அவளுக்கு அழுகை வந்தது. முருகனைப் பார்த்தால் கல் நெஞ்சும் கரையுமல்லவா.?

மீண்டும் முருகனை வணங்கிவிட்டுத் திரும்பினாள். அங்கே முகுந்தன் தன் செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பதில் மும்முரமாய் இருந்தான். மற்றொரு புறம், இனியனும், அஞ்சலியும் சாமியின் விபூதி பிரசாதத்தை இருவரும் மாற்றி நெற்றியில் இட்டுக்கொண்டனர். அதே போல், அஞ்சலிக்கு இனியன் குங்குமமும், பூவும் வைத்து விட்டான்.

அதைப் பார்க்கும் போது ஏனோ மாலதிக்கு பொறாமை வராமல் ஏக்கம் வந்தது. இவர்கள் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆனாலும் எத்தனை அந்யோன்யமாய் இருக்கிறார்கள்.? ஆனால், தானும் திருமணமாகி மூன்று வருடங்களில் இது போல் ஒரு நாள் கூட இருக்கவில்லையே.!! என்று நினைத்தாள். சிறிது கண்ணீரும் சிந்தினாள்.

முருகனை நன்றாக தரிசித்து விட்டு, அங்கேயே தாங்கள் கொண்டு வந்திருந்த காலை உணவை உண்டு விட்டு, வேறு இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாயினர்.

அடுத்ததாக அவர்கள் சென்ற இடம், புங்கனூர் ஏரி. இது ஏலகிரியின் முக்கியமான சுற்றுலாத் தலம். அதைச் சுற்றிலும் நிறைய இடங்கள் உள்ளதால் அங்கேயே சென்றனர். அந்த ஏரியை ரசிப்பதற்க்காகவே ஒரு இயற்கைப் பூங்கா அருகே உள்ளது.

அங்கே ஒரு செயற்கை நீர்வீழ்ச்சியும் உள்ளது. அதில் சிறுவர்களுக்கான இடமாக குதூகலமாய் குளித்தபடி ஆடிக்கொண்டிருந்தனர். அதையெல்லாம் பார்த்து ரசித்தபடி நடந்தனர். அங்கிருந்து ஏரியைப் பார்க்கும் போது, கொள்ளை அழகாய்த் தெரிந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.

ஓரிடத்தில் அமர்ந்தவர்கள், முகுந்தனிடம் அப்படியே பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தனர். “டேய் அண்ணா, நீ இந்த மாதிரி இடங்களுக்குப் போய் எத்தனை வருஷம் இருக்கும்.?” என்று இனியனே முதலில் ஆரம்பித்தான்.

“எனக்கு எதுவும் ஞாபகமே இல்லடா. எல்லாம் சின்ன வயசுல போனதுதான்னு நினைக்கிறேன். வேலைக்குப் போனதுக்கப்பறம் எங்கயுமே போகல.” என்றான் மிகச் சாதாரணமாக.

“ஹூம்ம்.. அந்த அளவுக்கு வேலையா உனக்கு.? சரி, அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு அப்பறம் அண்ணியக் கூட கூட்டிட்டுப் போகலையா.?” என்றான்.

முகுந்தனுக்கு அப்போதுதான் இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று புரிந்தது. பத்தாத குறைக்கு மாலதியோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“இல்லடா. அதுதான் சொன்னேனே வேலை டென்ஷன்.” என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தான் முகுந்தன்.

“அண்ணா, எங்களோட வேலைல இருக்கற பிரஷர விட உனக்கு ஒண்ணும் பெரிய டென்ஷன் அங்க இருக்கப் போறது இல்ல. ஏன்னா, எங்களோட வேலைல ஆபத்தும் சேர்ந்து இருக்கு. ஆனா, நாங்களே அதைப் பத்தி யோசிக்காம ஃபேமிலி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு இந்த வந்திருக்கோம். ஆனா, நீ ஏன் அதெல்லாம் யோசிக்காம வேலை வேலைன்னே இருக்க.?” என்று இனியன் கேட்டதும் முகுந்தனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.

“ஆமாண்டா பெரியவனே, உன்னால நினைச்சா சந்தோஷமா இருக்க முடியும். ஆனா, நீ அப்படியிருக்க முயற்சி கூட பண்ண மாட்டிங்கற. எங்களை விடு. உன்னையே நம்பி ஒருத்தி இருக்காள்ன்ற ஒரு எண்ணம் கொஞ்சமாவது இருக்கா.?” என்றார் நடராஜன் அடுத்ததாய்.

இந்தக் கேள்விக்கும் அவனின் பதில் மௌனம் மட்டுமே. “ஆமா முகுந்தா, எல்லாரும் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. நீயும், மாலதியும் இன்னும் எத்தனை நாளைக்கு இதே மாதிரி இருக்க முடியும்.? உங்க பேர் சொல்ல குழந்தைக வேண்டாமா.?” என்றார் திலகா.

முகுந்தன் இப்போதுதான் வாயைத் திறந்தான். “தெரியும் மா. அடுத்து நீங்க எங்க வருவீங்கன்னு. டேய் இனியா, இதுக்குத்தான் எனக்கு போன் போட்டு உடனே வரச் சொன்னியா.? நானும் எதையும் யோசிக்காம வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்.” என்று நொந்துகொண்டான்.

“இப்போ, என்னடா உன்னைக் கேட்டுட்டோம். இங்க பாரு ணா, நாமெல்லாம் ஆம்பளைங்க. நம்மள யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா, பொம்பளைங்களத் தான் எல்லாரும் கேட்பாங்க. நேத்து அண்ணிய எவ்ளோ கேவலமா நம்ம உறவுக்காரங்க பேசினாங்க தெரியுமா.? பாவம் அண்ணி நேத்து ஃபுல்லா அழுதுட்டே இருந்தாங்க. ஆனா, அதுக்குக் காரணமான நீ அங்க எதுவும் தெரியாம வேலை பண்ணிட்டிருக்க. அண்ணா, நீ கொஞ்சமாவது ரெஸ்பான்ஸிபிள்ளா இருக்கணும். அதுக்காகத்தான் எல்லாரும் சொல்றோம். நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு.” என்றான் இனியன்.

“என்ன யோசிக்கணும்.? என்ன யோசிக்கணும்னு சொல்ற.? எல்லாத்துக்கும் காரணம் நானா.? ஹூம்ம்.. எல்லாப் பழியையும் என் மேலயே போடுங்க. அவன் என்ன தப்பு பண்ணா தெரியுமா.? அது தெரிஞ்சா யாரும் இப்படி என்னை மட்டுமே பேச மாட்டிங்க.” என்று முகுந்தன் பொங்கி எழுந்தான்.

இப்போது, அனைவரின் பார்வையும் மாலதியின் பக்கமாய்த் திரும்பியது. அவளோ செய்வதறியாது நின்றுகொண்டிருந்தாள். அவளைப் பார்த்து ஆவேசமாய் வந்த முகுந்தன்,

“ஏய்.. என்னடி ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கற. சொல்லு, நான் ஏன் இப்படி இருக்கேன்னு. நீ ஏன் இந்த தண்டனைய அனுபவிக்கறன்னு.” என்றான்.

அப்படி என்ன தப்பை மாலதி செய்து விட்டாள்.? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இப்போது ஓடியது.

(தொடரும்...)
 
Top