Aathirai
Active member
அத்தியாயம் 27
முகுந்தன் மாலதியின் மேல் தான் தவறு இருக்கிறது என்று சொன்னதும், அனைவரும் மாலதியைத் தான் பார்த்தனர். அவளோ என்ன சொல்வது என்று தன் தலையைத் தொங்கப்போட்டவாறு அமைதியாய் இருந்தாள்.
“என்னாச்சு மாலதி.? நீ என்ன தப்பு பண்ண.?” என்றார் திலகா.
“அவ எந்த முகத்தை வச்சிட்டு மா சொல்வா.? எவ்வளவு கெஞ்சியிருப்பேன்.? கேட்கவே இல்ல மா. என்னை ஒரு மனுஷனா மதிக்கவே இல்ல. அதனால தான் நான் அடியோட மாறிட்டேன். இவளுக்கு தண்டனைய கடவுளே கொடுக்கட்டும்னு இருந்தேன்.” என்றான் முகுந்தன்.
“முகுந்தா, தயவு செய்து என்ன நடந்ததுன்னு ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தராவது சொல்லுங்க. எங்களுக்கு தலையும் புரியல, வாலும் புரியல.” என்றார் நடராஜன்.
“கல்யாணம் ஆகி மூணாவது மாசத்துலயே இவளுக்குத் தள்ளிப் போச்சு பா. அப்போ அவ அவங்க அம்மா வீட்டுல இருந்தா. நான் போன் பண்ணப்போ கூட, என்கிட்ட விஷயத்த சொன்னா. நான் டாக்டர்கிட்ட போய் செக் பண்ணிட்டு சொல்லுன்னு சொன்னேன். அப்போ சரின்னு சொல்லிட்டு, அதுக்கப்பறம் என்ன பண்ணா தெரியுமா பா.? என்னோட முதல் குழந்தைய கருவுலயே அழிச்சிட்டா பா இவ. ஆனா, என்கிட்ட அதுவே அபார்ஷன் ஆயிடுச்சுன்னு சொல்லி நாடகம் ஆடினா. ஆனா, நான் நம்பல. அவ பார்த்த அதே ஹாஸ்பிடலுக்குப் போய் விசாரிச்சப்ப தான் எனக்கு உண்மை என்னன்னு தெரிஞ்சது. எனக்கு வந்த கோபத்துக்கு இவள கொன்னே போட்டுடலாம்னு தோணுச்சு. ஆனா, எதுக்கு இப்படி பண்ணான்னு கேட்கணும்னே போனேன். ஏன்டி இப்படி பண்ணன்னு கேட்டா, கல்யாணம் ஆகி மூணு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள எனக்கு குழந்தை ஆச்சுன்னா, அத சாக்கா வைச்சுட்டு நீங்க என்னை ஆம்பூர்க்கு கூட்டிட்டுப் போக மாட்டிங்க. அப்பறம் முழுசா ரெண்டு வருஷம் கழிச்சு தான் போக வேண்டிய சூழ்நிலை வரும். அதனால தான் அப்படி செஞ்சேன்னு சொன்னா. இதெல்லாம் ஒரு காரணமா பா. எப்படி அந்த பிஞ்ச கருவுலயே இவளால அழிக்க முடிஞ்சது.? அதனால தான் பா, இவளோட வாழ விருப்பம் இல்லாம, மாசம் ஒரு தடவை அதுவும் உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு மட்டும் தான் வரேன். மத்தபடி இவ மேல எனக்கு எந்த ஒரு விருப்பமும் இல்ல. என்னால இவள டைவர்ஸ் பண்ண முடியும். ஆனா, உங்க மரியாதை என்னாகுன்னு யோசிச்சு தான் சும்மா இருக்கேன்.” என்று இத்தனை வருடங்களாக மனதில் தேக்கி வைத்திருந்த தன் மனக்குமுறலைக் கொட்டினான் முகுந்தன்.
“டேய்.. ஏண்டா இதை இத்தனை வருஷமா எங்ககிட்ட இருந்து மறைச்சீங்க.? இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே.? குழந்தை உண்டாகறதும், அது அழியறதும், கல்யாணம் ஆகற பொண்ணுங்களுக்கு சகஜம். ஆனா, அது ஒரு சில சூழ்நிலையால அந்த மாதிரி நடக்கறதும் உண்டு. அவ தப்பு பண்ணிட்டா டா. கொஞ்சம் சுயநலமா யோசிச்சு அப்படிப் பண்ணிட்டா. ஆனா, அதுக்காக நீங்க மூணு வருஷமா இப்படியே இருக்கறது இன்னும் தப்பு முகுந்தா. இத இதுக்கு மேலயும் நாங்க வளர விடறதா இல்ல.” என்று அழுதபடியே சொன்னார் திலகா.
“போதும் மா. அவ பண்ண தப்புக்கு நானும் சேர்த்து தண்டனை அனுபவிச்சிட்டுப் போறேன். விட்டுடுங்க.” என்றான் முகுந்தன் விரக்தியாக.
“முகுந்தா நீ இப்படி சொல்லாத. மனுஷங்க தப்புப் பண்றது இயல்பு. ஆனா, அவங்க ஒரு கட்டத்துல மாறுறதுக்கும் நாம வாய்ப்பு கொடுக்கணும். எதுவுமே பண்ணாம அப்படியே விட்டா எல்லாருக்கும் தான் கஷ்டம்.” என்றார் நடராஜன்.
“அவளுக்கு எல்லா வாய்ப்பும் நான் கொடுத்தாச்சு பா. இவள்லாம் என்னைக்கும் திருந்த மாட்டா. அதுவும், அவ வாய் இருக்கே அது சும்மாவே இருக்காது. யாரைக் கோர்த்து விடலாம்.? யாரைப் பிரச்சினைல மாட்டி விடலாம்னு தான் யோசிச்சிட்டு இருப்பா. விடுங்க அவ தப்புக்கான தண்டனைய அவ அனுபவிச்சித்தான் ஆகணும்.” என்றான்.
“இல்ல அத்தான். நீங்க இப்படி சொல்லக் கூடாது. என்னதான் தப்பு பண்ணாலும், நாம அதை எடுத்து சொல்லிப் புரிய வைக்கணும். அதுக்கும் மேல புரிஞ்சுக்கலன்னா தான் நாம் கோபப்படணும். இதே விஷயத்தை நீங்க இப்படிப் பண்ணாம உங்க அன்பால நீ பண்ணது தப்புன்னு சொல்லி புரிய வைச்சிருந்தா, ஒரு வேளை அக்கா இப்போ மாறியிருந்திருக்கலாம்னு தான் எனக்குத் தோணுது. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க தான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அக்காவ திரும்பவும் ஏத்துக்கணும். நீங்க ஏத்துக்கிட்டா அவங்க கண்டிப்பா உங்களுக்கு உண்மையா நடந்துப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று அஞ்சலி பேசினாள்.
அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாலதியின் நெஞ்சில் ஆழமாய்ப் பதிந்தது. இத்தனை நாள், தான் எவ்வளவு பெரிய தவறைச் செய்துள்ளோம் என்று நினைக்கும் போது, அவளை நினைத்து அவளுக்கே வெறுப்பு உண்டானது.
“நீதான் மா இப்படிப் பேசற. ஆனா, இவ உனக்கும் எத்தனையோ கெடுதல் நினைச்சிருக்கா. ஏன், உன் கல்யாணத்தப்போ இவளும், இவளோட வீட்டுல உள்ளவங்களும் எவ்ளோ பண்ணாங்கன்னு உனக்குத் தெரியாது மா. எதுவுமே எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிருக்கா. ஆனா, எனக்கு எல்லாமே தெரியும். அம்மாகிட்ட உன்னைப் பத்தி தப்புத் தப்பா சொல்லி, உங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல விடாம செஞ்சதும் இவதான். நீ இவளுக்குப் போய் சப்போர்ட் பண்றியே.?” என்றான் முகுந்தன்.
“பரவால்ல அத்தான். அது ஒரு கெட்ட நேரம்னு நினைச்சுப்போம். இப்போ, எல்லாமே நல்லபடியா தான் நடந்துட்டிருக்கு. அத்தை இப்போ என்கிட்ட நல்ல விதாமாத்தான் பழகறாங்க. அதே மாதிரி அக்காவும் கண்டிப்பா என்கிட்ட நல்ல விதமா பழகுவாங்க. ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க அவங்கள திரும்பவும் மனசார ஏத்துக்கணும். அப்போதான் அவங்க சந்தோஷப்படுவாங்க. ஒரு குடும்பத்துல எல்லாரும் நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருக்கணும். அதுதான் நியாயம். நாங்க ரெண்டு பேரும் சரி, அத்தையும், மாமாவும் சரி சந்தோஷமா தான் இருக்கோம். ஆனா, நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கும் போது, எப்படியோ போகட்டும்னு எப்படி விட முடியும்.? அதே சந்தோஷம் உங்களுக்குள்ளயும் இருக்கணும். அதுதான் நாங்க வேணும்னு நினைச்சோம்.” என்றாள் அஞ்சலி.
“ஆமா அண்ணா, உங்க ரெண்டு பேருக்காகவும் தான் இந்த ஒன் டே ட்ரிப். உங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்ன பிரச்சினை ஓடிட்டு இருக்குன்னு எங்களுக்குத் தெரியல. ஆனா, இதை இப்படியே விடக்கூடாதுன்னு தான் முடிவு பண்ணோம். அதனால தான் நேத்து உன்னை உடனே கிளம்பி வான்னு சொன்னேன். அண்ணி தப்பு பண்ணிட்டாங்க. தப்பு பண்ணாத மனுஷங்க எங்க ணா.? அவங்க திருந்தறதுக்கு நீ சான்ஸ் கொடுக்கணும் இல்ல. இந்நேரம் பழைய அண்ணியா இருந்தா எவ்வளவு பேச்சு பேசியிருப்பாங்க தெரியுமா.? இப்போ அமைதியா இருக்கறதப் பார்த்தாலே தெரியலையா.? அவங்க கண்டிப்பா தன்னை மாத்திக்குவாங்க. நீதான் இப்போ அவங்கள ஏத்துக்கணும்.” என்றான் இனியன்.
முகுந்தன் அமைதியாகவே இருந்தான். “டேய்.. எல்லாரும் இவ்ளோ தூரம் சொல்றோம் இல்ல. அவளை மன்னிச்சிடு.” என்றார் திலகா.
“ம்மா.. உடனே மன்னிச்சிடுன்னா எப்படி மன்னிக்க சொல்றீங்க.? அவ எதையாவது நினைச்சுப் பார்த்தாளா.? இதுவே வேற புருஷனா இருந்தா, அடுத்த நிமிஷமே அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்திருப்பான். அதே மாதிரி இது வேற வீடா இருந்திருந்தா, வேற பொண்ணப் பார்த்து உடனே கட்டி வைச்சிருப்பாங்க. ஆனா, நாம யாருமே அப்படி யோசிச்சது கூட இல்லையேமா.? இப்போ கூட பாரு, நாம இவ்ளோ பேசறோம். ஒரு வார்த்தை அவளால பேச முடியுதா.?” என்றான் முகுந்தன்.
“என்னால பேச முடியலங்க. நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். நம்ம குழந்தைய அழிச்சது தப்புதான். எங்க வீட்டுல உள்ளவங்க பேச்சைக் கேட்டு நான் அப்படி பண்ணியிருக்கக் கூடாது. ஆனா, நான் அப்போ இருந்த மனநிலை வேற. நீங்க இதெல்லாம் தப்புன்னு சொல்லி எனக்குப் புரிய வைச்சிருந்தா நான் கண்டிப்பா யோசிச்சிருப்பேன். ஆனா, நீங்க முகம் கொடுத்துக் கூட அதுக்கப்பறம் என்கிட்ட பேசல. அதனால தான் எனக்குள்ள இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்கள் வந்துடுச்சு. இப்போதான் அதெல்லாம் எவ்வளவு பெரிய தப்புன்னு உணர்றேன். அத்தையும், மாமாவும் என்னை ஒரு வார்த்தை கூட, ஏன் இன்னும் குழந்தை ஆகலன்னு கேட்டது இல்ல. ஏன், அஞ்சலிக்கு கூட நான் நிறைய கெடுதல் நினைச்சிருக்கேன். ஆனா, நேத்தும் சரி, இன்னைக்கும் சரி அவ எனக்காக எவ்வளவோ உதவி பண்ணியிருக்கா. இன்னமும் நான் திருந்தலன்னா நான் மனுஷ ஜென்மமே கிடையாது. என் தப்ப நான் உணர்ந்துட்டேங்க. தயவு செய்து என்னை ஏத்துக்கங்க.” என்று அவனிடம் சென்று வேண்டினாள் மாலதி.
ஏனோ முகுந்தனுக்கு உடனே அவளை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. அவள் புறம் திரும்பாமல் வேறொரு பக்கமாகச் சென்று விட்டான்.
அஞ்சலிதான் வந்து மாலதியைத் தேற்றினாள். அவளோ விடாமல் அழுதுகொண்டே இருந்தாள். அனைவருக்கும் சங்கடமாகிப் போனது. ஆனாலும், இத்தனை வருடங்களாய் இவர்கள் இருவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்த பிரச்சினை என்ன.? என்று தெரிந்து விட்டதால் மனம் ஓரளவு ஆறுதலடைந்தது.
முகுந்தனைத் தேடிக்கொண்டு சென்ற இனியன் ஒரு மணி நேரம் கழித்து திரும்பி அவனுடன் வந்தான். அவன் மாலதியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. இதற்க்கு மேலும் இங்கே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பினார்கள்.
வீட்டிற்க்கு அருகில் போனதும், முகுந்தன் தன் நண்பனைப் பார்த்துவிட்டு வருவதாய்ச் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டான். அவர்கள் ஐவருக்கும் வருத்தமாகவே இருந்தது.
வீட்டிற்க்குச் சென்றதும் அனைவரும் அவரவர் அறையில் நுழைய, திலகா மாலதியை அழைத்துப் பேசினார்.
“மாலதி, இதுவரைக்கும் போனது போனதாகவே இருக்கட்டும். இனிமேலும் நீ முகுந்தனை விட்டுடக் கூடாது. அவன் மனசொடிஞ்சு போயிருக்கான். நீதான் தனிமையில அவங்கிட்ட எப்படிப் பேசிப் புரிய வைக்கணுமோ புரிய வை. அடுத்த முறை அவன் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போகணும். அவ்ளோதான்.” என்று அக்கறையுடனும், கண்டிப்புடனும் சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர் பேசியதில் இருந்த அர்த்தம் மாலதிக்கு இப்போதுதான் நன்றாகப் புரிந்தது. இதுவே பழைய மாலதியாய் இருந்தால், இதன் தழைகீழாய் தன்னையே குற்றம் சொல்லும் உலகம் என்று கரித்துக் கொட்டியிருப்பாள்.
முகுந்தனை எப்படிச் சமாதானம் செய்வது.? என்று எண்ணியவாறே அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மாலதி.
(தொடரும்...)