கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 28

Aathirai

Active member
அத்தியாயம் 28

திலகா சொன்ன வார்த்தைகளைத் தன் இதயத்திடமும், மூளையிடமும் சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் மாலதி.

ஆனால், அங்கே முகுந்தன் தனது துணிகளை எடுத்து எப்பொழுதும் ஊருக்குக் கொண்டு செல்லும் பேகில் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அவன் திரும்பவும் ஊருக்குச் செல்லத்தான் இதை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் என்று நன்றாகவே மாலதிக்கு புரிந்தது. எப்படியாவது பேசி இன்று சமாதானம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தாள்.

“எதுக்குங்க எல்லா துணியையும் பேக்ல எடுத்து வைச்சிட்டிருக்கீங்க.?” என்று மாலதி கேட்டதும், அவளை நிமிர்ந்து பார்த்து ஒரு முறை முறைத்த முகுந்தன், எதுவும் பேசாமல் தன் பணியைத் தொடர்ந்தான்.

“ஏங்க, உங்ககிட்ட தாங்க பேசிட்டிருக்கேன்.” என்றபடி அவன் கைகளில் இருந்த துணியை வாங்க நினைத்தாள்.

அவனோ மறுப்பாய் அதை அவளிடம் தராமல் பேகில் துணித்தான். அப்படியே நிமிர்ந்தவன்,

“இனியன் போன் பண்ணி வரச் சொன்னான். வந்தேன். எல்லாரும் என்கிட்ட என்ன கேட்கணும்னு நினைச்சாங்களோ அதை நான் சொல்லிட்டேன். அவ்ளோதான். என்னோட வேலை முடிஞ்சிடுச்சு. இதுக்கும் மேல எனக்கென்ன வேலை.? நான் கிளம்பறேன்.” என்று தன் பேகை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்ப எத்தனித்தான்.

ஆனால், மாலதி விடவில்லை. அவன் பேகை வற்புறுத்தி வாங்கி வைத்தவள்,

“ஏங்க. சொன்னாக் கேளுங்க. நான் உங்ககிட்ட பேசணும். நீங்க இப்படி எதுவுமே பேசாம கிளம்பறது நியாயமே இல்லைங்க.” என்றாள்.

“எது நியாயமே இல்ல.? அப்போ, நீ பண்ணதெல்லாம் நியாயமா.? அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு நான் அமைதியா தான போறேன். அப்போ, நீயும் அப்படியே அமைதியா இரு.” என்று திரும்பவும் பேகை எடுக்கப் போனான்.

அவள் விடாமல் அவனையே பிடித்தாள். சட்டென்று அவன் கால்களை தன் இரு கைகளால் பிடித்துக் கொண்டாள்.

“தயவு செய்து நான் சொல்றதக் கேளுங்க. நான் பண்ணதெல்லாம் தப்பு தான். ஒரு நிமிஷம் எனக்காக இருங்க. எங்கயும் போகாதீங்க.” என்று கெஞ்சினாள்.

“ஏய்.. காலை விடு, எதுக்கு இப்போ இப்படி நாடகம் ஆடற. உன்னோட நாடகத்தை இந்த வீட்டுல இருக்கறவங்க வேணும்னா நம்பலாம். ஆனா, நான் அதை நம்பறதுக்குத் தயாரா இல்ல. விடு என்னை.” என்று அவன் கால்களை விடுவிக்க முயன்றான்.

ஆனால், மாலதி விடவே இல்லை. இன்னும் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டாள்.

“இப்போ விடப் போறியா இல்லையா.?” என்று இறுதியாய்க் கூறினான்.

“இல்லைங்க. உங்கள நான் ஏமாத்தணும், நாடகம் ஆடணும்னு நினைக்கலைங்க. நிஜமாலுமே நான் சொல்றதைக் கேளுங்க. நான் இவ்ளோ நாள் எப்படி வேணும்னா இருந்திருக்கலாம். ஆனா, இந்த நிமிஷம் நான் அப்படி இல்ல. நிஜமா என்னை நம்புங்க.” என்று கதறி அழுதபடி கெஞ்சினாள்.

நிமிர்ந்து தலையை வேறு புறமாய் திருப்பிக் கொண்டிருந்தவன், குனிந்து ஒரு நிமிடம் அவளைப் பார்த்தான்.

ஒரு நாளும் மாலதி இதுபோல் தாழ்ந்து பேசி பார்த்ததில்லை. என்றும் திமிராய் நடந்து கொள்வாளே தவிர, இதுபோல் அழுதும் பார்த்ததில்லை. இந்த நிமிடம் இப்படி அழுகிறாள், கெஞ்சுகிறாள் என்றால் தானும் சற்று இறங்கிப் போவதே நல்லது என்று தோன்றியது முகுந்தனுக்கு.

“சரி, காலை விடு. என்ன சொல்லணுமோ சொல்லு.” என்று வேண்டா வெறுப்பாய் சற்று மனம் இறங்கினான்.

அவள் அப்போதுதான் காலை விட்டாள். அவள் விட்டதும், கட்டிலில் போய் பேகை வீசிவிட்டு தொப்பென்று அமர்ந்தான்.

அவனது அருகே நெருக்கமாய் போய் அமர்ந்தவாறே, அவன் தோள்களின் மேல் கை வைத்தாள். அது பிடிக்காமல் அதை விலக்கி விட்டான்.

“ஏங்க, நான் உங்ககிட்ட அன்பா நடந்துக்கக் கூடாதா.? நான் அவ்ளோ வேண்டாதவளா ஆகிட்டேனா உங்களுக்கு.?” என்றாள் அழுதவாறே.

“ஹூம்ம். அன்பு, அதைப் பத்தி நீ பேசறியா.? அப்படின்னா அர்த்தம் என்னன்னு தெரியுமா உனக்கு.? தேவையில்லாத விஷயத்தைப் பத்தி பேசாம என்ன சொல்லணுமோ சொல்லு.” என்றான் மிரட்டும் தொணியில்.

“நான் அப்போ தப்பு பண்ணேன் தாங்க. அது நான் ஒரு தூண்டுதல்ல பண்ண தப்பு. எனக்கு யாரும் அது தப்பு தான்னு சொல்லிக் கொடுக்கல. அப்படி சொல்லியிருந்தா, அந்தத் தப்ப நான் பண்ணிருக்க மாட்டேன். இப்படி உங்ககிட்ட பேசாம, உங்கள பிரிஞ்சிருக்க மாட்டேன். இதுதான் தப்பு, சரின்னு என்னை சொல்லிக் கொடுத்து வளர்ந்திருந்தா பரவாயில்ல. ஸ்கூல் படிப்போட சேர்த்து மேலயும் படிச்சிருந்தா, கொஞ்சமாவது புத்தி என்ன சொல்லுதோ அதை செஞ்சிருப்பேன. மத்தவங்க சொல்றது மட்டும் தான் என் புத்தியில் ஒட்டுச்சே தவிர, ஒருவருமே எனக்கு நல்லது சொல்லித் தரல. அப்படி இருக்கும் போது, என்னோட பேச்சும், செயலும், அதுக்குத் தகுந்த மாதிரியே மாறிடுச்சு. அதனால தான் நான் அப்படி இருந்துட்டேன். ஆனா, இப்போ இந்த நிமிஷம் எனக்குள்ள இருந்த பழைய மாலதி செத்துட்டா. இனிமேல் புது மாலதியா, கல்யாணம் பண்ணி புதுசா வீட்டுக்கு வந்திருக்க மாலதியா என்னை ஏத்துக்கங்க. நான் இதுவரைக்கும் எப்படி இருந்தேனோ, அதெல்லாம் மறந்துட்டு உங்களோட மாலதியா இனிமேல் இருக்கப் போறேன்.” என்றவள் வார்த்தையில் சற்று தெளிவு இருந்தது.

ஆனால், முகுந்தனிடம் எந்த ஒரு பதிலும் இல்லை. அமைதியாய் கட்டிலில் தன் இரு கைகளையும் அதன் மேல் வைத்தபடியே அம்ர்ந்திருந்தான்.

தன் கணவன் இன்னும் தன்னை நம்பவில்லை என்று நினைத்தவள், அவனது கையைப் பிடித்துக் கொண்டு, அதன் மேல் சாய்ந்தபடி அழுதாள் திரும்பவும்.

“உங்களைக் கெஞ்சிக் கேட்கறேன். நீங்க என்னை மன்னிச்சு திரும்பவும் ஏத்துக்கணும். நான் மாறிட்டேன். எல்லா தப்பையும் உணர்ந்துட்டேன். இனிமேல் யாரையும் கேவலமா பேச மாட்டேன். யாரைப் பத்தியும் தப்பா சொல்ல மாட்டேன். உங்களுக்கு உண்மையா இருப்பேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்.” என்று சின்னக் குழந்தை போல் கெஞ்சி அழுதவளை ஏனோ மனம் வெறுக்கத் தோன்றவில்லை.

இந்த முறை நிஜமாகவே அவளின் வார்த்தைகளில் உண்மை இருந்ததை முகுந்தனால் உணர முடிந்தது. தன் கையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தவளை, ஒரு நிமிடம் பார்த்தான்.

அவள் கைகளை எடுத்து விட்டு, அவள் தாடையைத் தன் கையால் பிடித்தவன், ஒரு நிமிடம் அவள் கண்களைப் பார்த்தான். அந்தக் கண்களிலும் முன்னர் இருந்த மாலதியின் கண்களைப் போல் பொய்யில்லை.

அவள் கன்னங்களில் வழிந்தது, நீலிக் கண்ணீரில்லை. நிஜமாகவே வந்த கண்ணீர். அதை முழுமையாய் தெரிந்துகொண்டவன் பேசினான்.

“மாலதி, உன்னை எனக்குப் பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல, உன்னை என்னவளா ஏத்துக்கிட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, நீ அதுக்கப்பறம் நடந்துக்கிட்ட விதம் என்னை ரொம்பவுமே பாதிச்சுது. அதுவும், நம்ம குழந்தைய நீ கருவுலயே அழிச்சது என்னால இப்பவும் ஏத்துக்கவே முடியல. அதுக்கப்பறமா தான் நான் உன்னை வெறுக்க ஆரம்பிச்சேன். நான் இப்படி இருக்கறது தான், நான் உனக்கு குடுக்கற சரியான தண்டனைன்னு தோணுச்சு. அப்படியாவது நீ மனசு மாறி உன்னை மாத்திக்கிட்டு சரியா இருப்பன்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு எந்த வாய்ப்பும் நீ கொடுக்கல. அதுக்கப்பறம் தான் நீ ரொம்ப மோசமானவளா மாறிட்ட. அப்போ நான் நடந்துக்கிட்ட விதம் சரிதான.? நீயே சொல்லு.” என்றான் முகுந்தன் தன் சரியான கேள்வியைக் கேட்டபடி.

“சரிதாங்க. ஆனா, நான் அந்தத் தப்பை வேணும்னு பண்ணலங்க. அம்மா தான், ஆடி மாசத்துல சேர்ந்துட்டீங்க. சித்திரை மாசம் தான் புள்ள பொறக்கும். செத்துப் பொழைக்கிற குழந்தைக தான் அதிகம். இது வேண்டாம். கருவுலயே அழிச்சிரு. அதுதான் நல்லது. நீ யார்கிட்டயும் சொல்லாத. அப்படியே தெரிஞ்சாலும், அதுவா அழிஞ்சிருச்சுன்னு சொல்லிடுன்னு சொல்லி என் மனசக் கலைச்சுட்டாங்க. அப்போ இருந்த மாலதிக்கு சுயபுத்தி கிடையாது. அதனால தான் உங்ககிட்ட கூட சொல்லாம அந்தத் தப்பைப் பண்ணேன். நானா எதுவும் பண்ணலங்க.” என்றாள்.

முகுந்தனோ மௌனமாய் இருந்தான்.

“அதுக்கப்பறம் நீங்க என்கிட்ட சரியா பேசாம இருக்கறதும், கடனுக்கேன்னு ஊருக்கு வந்துட்டுப் போறதும், என்னை உங்க கூட கூட்டிட்டுப் போகாம இருந்ததும் என் மனசை ரொம்ப பாதிச்சிடுச்சு. அதனால தான் சில சமயங்கள்ல ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன். வேண்டாத வேலையெல்லாம் பண்ணினேன். ஆனா, இப்போ அதெல்லாம் தப்புன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. நீங்க என்னை நம்புங்க.” என்று திரும்பவும் கதறினாள்.

அவளின் உண்மையான கதறலைக் கேட்டவன், இனிமேலும் அவளை தண்டிப்பது தேவையில்லை என்று உணர்ந்து அவளை ஒரு கையால் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

வருடங்களாய் இந்த அணைப்பை உணர முடியாமல் போன மாலதிக்கு அவனது அணைப்பு ஆறுதலுக்கும் மேலான ஒரு உணர்வைத் தந்தது.

அவனை அப்படியே கட்டிப் பிடித்தபடி ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்தாள். இரண்டரை ஆண்டுகளாய் தனக்குள் தேக்கி வைத்த கண்ணீர் அனைத்தும் அவளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது.

மெல்ல அவளை விடுவித்தவன், அப்படியே அவளை படுக்க வைத்து, நெற்றியில் இதமாய் முத்தமிட்டான்.

அந்த முத்தத்தில், அவளுக்குள் இருந்த சகல தீய எண்ணங்களும் தவிடு பொடியாகின. காதலும், ஏக்கமும் மட்டுமே அவளது கண்ணில் காத்துக்கொண்டிருந்தன.

அதை உணர்ந்தவன், மென்மையாய் அவளது இதழ்களில் முத்தமிட்டான். அதை தனக்கு சம்மதம் என நினைத்தவள் அவனை அப்படியே இறுக அணைத்துக் கொண்டாள்.

நீண்ட நாட்களாய் தேக்கி வைத்திருந்த ஏக்கமும், காதலும், அன்பும், வெட்கமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு பறிமாறிக் கொண்டிருந்தன.

இரு உயிர்களும், ஓருயிராய் இணைந்திருந்த அந்த இரவு, அவர்களுக்கு நல் இரவாய், முதல் இரவு போல அமைந்தது.

அவர்கள் குடும்பத்தினரின் உண்மையான வேண்டுதலால் அந்தக் கடவுள் அமைத்து வைத்த இனிமையான இரவு அது.

(தொடரும்...)

 
Top