கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 33

Aathirai

Active member
அத்தியாயம் 33

உள்ளே வந்த இனியன், “அஞ்சலி.. இங்க வா.” என்றான்.

பதட்டத்துடன் அவன் கத்துவதைப் பார்த்தவள் உள்ளே இருந்து ஓடி வந்தாள். “என்னாச்சு இனி.? ஏன் இப்படி கத்தற.?” என்றாள்.

“அவன் எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போறான்.? எதுக்கு அவன உள்ள விட்ட.?” என்றான் கோபத்தில்.

“இனி, திடீர்னு தான் வந்தான். நான் உள்ள வாங்கன்னு கூப்பிடுவேனா.? அவனா உள்ள வந்துட்டான். என்னால எதுவும் பண்ண முடியல.” என்றாள்.

“அவன் என்ன மிரட்டிட்டுப் போறான்.? நீ என்ன பண்ண.?” என்றான்.

“நான் அவனுக்கு ஒன்னும் பயப்படல. நான் தைரியமா தான் பேசினேன். அதே மாதிரி, செல்வம் அத்தான் வச்சிருந்த ஆதாரங்கள கொடுக்க சொல்லி கேட்டான்.” என்றாள்.

“அதுக்கு நீ என்ன சொன்ன.?” என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான் இனியன்.

“ஒரு நிமிஷம் வெய்ட் பண்ண சொல்லிட்டு, மேல நாம நாசம் பண்ண அவனோட போட்டோவைக் கொண்டு வந்து கொடுத்துட்டேன்.” என்றதும், அவனது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

“என்ன காரியம் பண்ணிருக்க நீ.? அதான் அவன் என்ன மிரட்டிட்டுப் போறான். கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா.? அதை நாம எப்படி கிழிச்சி வச்சிருக்கோம். அதைக் கொடுத்து அவனுக்கு நம்ம மேல உள்ள கோபத்த அதிகப்படுத்தியிருக்க.” என்றான் எரிச்சலில்.

“அவன் மட்டும், வீட்டுக்கு வந்து கண்டபடி பேசிட்டுப் போறான். அந்த இடத்துல யார் இருந்தாலும் கண்டிப்பா அவன கொன்னே போட்டுடுவாங்க. நானா இருந்ததால என் கோபத்தை இப்படிக் காட்டிட்டேன்.” என்றாள் அவளும் எரிச்சலில்.

“நீ என்ன சொன்னாலும், எனக்கு நீ செஞ்சது தப்புன்னு தான் தோணுது. இதோட பின் விளைவுகளை நாம எப்படி ஹேண்டில் பண்ணப் போறோம்னு நினைச்சா தலையே சுத்துது.” என்று பதட்டத்துடன் கூறியவனை புதிதாய்ப் பார்த்தாள்.

“அப்போ, நீ என்னைத்தான் தப்பு சொல்ற.? அவன் என்ன சொல்லியிருந்தாலும் நான் செஞ்சது தான் தப்பு. இல்ல.?” என்று கேட்டாள்.

“ஆமா, நீ பொறுமையா இருந்திருக்கணும். அந்த கிழிஞ்ச போட்டோவ நீ அவன்கிட்ட கொடுத்திருக்கக் கூடாது.” என்று சொல்லிவிட்டு வேகமாய் அறைக்குள் சென்றான்.

அவள் ஒரு நிமிடம் அங்கேயே அமர்ந்துவிட்டாள். அவனது வார்த்தைகளில் காயப்பட்டவளாய், வேறு எதுவும் பேசத் தோன்றாமல் இருந்தாள். தன்னைக் குற்றம் சொல்ல எப்படி இவனுக்கு மனது வந்தது.? தன்னை ஒரு காமுகன் வர்ணித்த விதத்தை எப்படி சரியென்று எடுத்துக்கொள்ள முடியும்.?

கையில் என்ன கிடைத்தாலும் எடுத்து அடித்து விடலாம், எனும் அளவுக்கு கோபம் வந்தது. ஆனால், அனைத்தையும் இவன் வார்த்தைக்காக பொறுத்துக் கொண்டு போனால், இவன் இப்படிப் பேசிவிட்டுப் போகிறான் என்று நினைத்தாள்.

அன்று இரவு, அமைதியாகவே அவர்களின் உணவு வேளை முடிந்தது. காலையில் இருவரும் ஒன்றாய் சாப்பிட நேரமில்லை. இப்பொழுதோ ஒன்றாகச் சாப்பிட்டாலும் பேசத் தோன்றவில்லை. இதுதான் நேரமோ என்று தோன்றியது.

புதிதாய் இந்த வீட்டிற்க்கு வந்து ஒரு நாள் தான் ஆனது. ஆனால், அதற்க்குள் அவர்களுக்குள் இப்படி ஒரு சண்டை வருமென்று இருவரும் நினைக்கவே இல்லை. அந்தப் பரமசிவனால் அதற்க்குள் பிரச்சினை வருமென்றும் இருவரும் எதிர்பார்க்கவில்லை.

படுக்கையில் இருவரும் இருபுறமாய் முதுகு காட்டிப் படுத்திருந்தனர். தூக்கம் ஏனோ வர மறுத்தது. அஞ்சலியின் கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகளும் வந்தன. எதுவும் பேசிப் பயனில்லை என்று தோன்றியது அந்த நிமிடத்தில்.

நடு ஜாமத்தில், திடீரென்று இனியனுக்கு விழிப்பு வந்தது. எப்படித் தூங்கினான் என்றே தெரியவில்லை. எழுந்து பாத்ரூம் போக எண்ணி திரும்பியவன் படுக்கையில் அஞ்சலியைக் காணாது திகைத்தான்.

ஒரு நிமிடம் பதட்டமானது அவனுக்கு. அவள் எங்கே என்று தேடினான். ஒவ்வொரு அறையிலும் பார்த்தான் அவளைக் காணவில்லை. அவனின் பதட்டம் இன்னும் அதிகமாகவே செய்தது.

பத்தாத குறைக்கு அந்தப் பரமசிவன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க, அவனது இதயம் வேகமாகத் துடிப்பதைப் போல் இருந்தது.

மேலே இருந்த மாடிக்குச் சென்றான். அங்கே இருந்த அறையிலும் அவள் இல்லை. பதட்டத்துடனே திரும்பியவன், அங்கேயே வெளியே செல்லும் கதவு திறந்திருப்பதைப் பார்த்தான். சட்டென்று அங்கே சென்றான்.

பல்வேறு மரங்கள் சுற்றி இருக்க, காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்த நிலையில் அஞ்சலி ஒரு மூளையில் கையைக் கட்டி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. ஓடிச்சென்று அவளைத் திருப்பினான்.

எதிர்பாராமல் திருப்பியவனின் கையை விலக்க முயன்றவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டான். இனியனின் உடம்பு நடுங்குவதை அவளால் நன்றாகவே உணர முடிந்தது. தன்னை அணைத்தவனை விலக்க முயன்று தோற்றுப் போனாள்.

ஒரு சிறு விசும்பல் சத்தம் கூட கேட்டது. அதைக் கேட்டவள், “இனி... அழறியா.?” என்று அவனை கஷ்டப்பட்டு விலக்கி விட்டுக் கேட்டாள்.

அவனோ, திரும்பி நின்று கண்ணைத் துடைத்துவிட்டு மறைக்க முயன்றான். “ஏய்.. இங்க பாரு இனி. எதுக்கு அழற.? என்னைக் காணோம்னு தேடுனியா.?” என்று உணர்ச்சிவசப்பட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு. நீ இந்நேரத்துக்கு இங்க என்ன பண்ற.?” என்று கேட்டவனின் கண்களில் இருந்த சிறு துளியைத் துடைத்து விட்டுக் கேட்டாள்.

“எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயந்துட்டியா.?” என்றாள் தலையைக் குனிந்து.

“திடீர்னு உன்னை ரூம்ல காணோம்னு தேடினேன் தெரியுமா.? நேத்து அவன் மிரட்டுனதுலயே கொஞ்சம் எனக்கு பயமாதான் இருந்தது. அவன் உன்னை ஒன்னும் பண்ணிடக்கூடாதுன்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கு அஞ்சலி. அதனால தான் உன் மேல கோபப்பட்டேன்.” என்றவனை அணைத்துக்கொண்டாள்.

“ஸாரி இனி. நீ இவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு நான் நினைக்கல.” அவன் தலைமுடியைக் கோதிக்கொண்டே சொன்னாள்.

“ம்ம்ம்... நீதான எனக்கு எல்லாமே. உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால அதை தாங்கிக்க முடியாது அஞ்சலி. அதனால தான் எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன், நீ பொறுமையா இருன்னு சொல்றேன். ஆனா, நீ கேட்க மாட்டிங்கற.” என்றான்.

“சரி, முதல்ல கீழ போலாம் வா.” என்று அவனைக் கூட்டிக்கொண்டு சென்றாள்.

இருவரும் அவர்களது அறைக்குத் திரும்பினர். அவனை பெட்டில் அமர வைத்தவள், “இப்போ நான் சொல்றத பொறுமையா கேட்பியா.?” என்றாள்.

“ம்ஹூம்ம்.. மாட்டேன்.” என்றான் இனியன்.

“ஏன்.? நான் சொன்னா நீ கேட்க மாட்டியா.?” என்றாள்.

“என் மடி மேல வந்து உட்காரு. அப்போதான் கேட்பேன்.” என்று குழந்தை போல் சொன்னவனைப் பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்தவள், அவன் தோள்களைப் பிடித்தபடி மடிமேல் வந்து அமர்ந்துகொண்டாள்.

அவள் அமர்ந்ததும் அவளின் இடையைக் கட்டிக்கொண்டவன், “ம்ம்.. இப்போ சொல்லு.” என்றான்.

“உன்னோட பொருள யாராவது உன்கிட்ட இருந்து பறிக்கணும்னு நினைச்சா அத உன்னால ஏத்துக்க முடியுமா.?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் முகம் சுருக்கியவன், “ஏன் திடீர்னு இப்படிக் கேட்கற.?” என்று குழப்பமாய்க் கேட்டான்.

“முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு.” என்றாள் தீர்க்கமாய்.

“பறிக்கணும்னு நினைச்சா விட மாட்டேன். ஆனா, தன்மையா கேட்டா கொஞ்சம் யோசிப்பேன்.” என்றான்.

“சரி, அந்தப் பொருள் நானா இருந்தா.?” என்று அவள் கேட்டதுமே, ஒரு கணம் திகைத்தான் இனியன். அவள் இடையைப் பற்றி இருந்தவன், அதை விடுவித்து

“என்ன லூசு மாதிரி உளர்ற.?” என்றான்.

“நான் உளரல இனி. இன்னைக்கு அவன் வந்து பேசுனதுலயே அவனோட இண்டென்ஷன் என்னன்னு எனக்குப் புரிஞ்சுது. அவன் பேசின ஒவ்வொரு வார்த்தைக்கும், பார்வைக்கும் என்ன அர்த்தம்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது.” என்றவளைத் தீவிரமாய்ப் பார்த்தான் இனியன்.

“அவன் உன் மேல ஆசைப்படறானா.?” என்றான்.

“ம்ம்ம்... நான் கேட்ட வார்த்தைகள நீ கேட்டிருந்தா அந்த இடத்துலயே அவன நீ கொன்னிருப்ப. நல்லவேளை நீ அங்க இல்ல. என்னால என் கோபத்த எப்படி வெளிப்படுத்த முடியும் சொல்லு.? அதனால தான், அந்த போட்டோவை கொடுத்து அவன வெறுப்பேத்தினேன். அதுக்கு மேல வேற என்ன பண்ண முடியும் சொல்லு.” என்று சொல்லும் போதே, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ஏய்.. நீ ஏண்டி செல்லம் அழற.? அவன் அப்படியெல்லாம் பேசினானா.? என்ன திமிரிருந்தா அவனோட மனசுல இப்படி ஒரு எண்ணமிருக்கும். அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட பேசறோம்னு கொஞ்சம் கூட ஒரு வெட்கமே இல்லாம பேசிட்டுப் போயிருக்கான். இவன ஏதாவது பண்ணியே ஆகணும்.” என்ற தீவிர யோசனையில் இருந்தவனின் கன்னத்தைத் திருப்பினாள்.

“நீ எவ்வளவு யோசிச்சாலும் நாம எதுவும் டேரக்ட்டா பண்ண முடியாது. ஆனா, இன்டேரக்ட்டா வேணும்னா ஏதாவது பண்ணலாம்.” என்றாள்.

“இன்டேரக்ட்டா என்ன பண்ண முடியும் சொல்லு.?” என்றான்.

“அவன் பண்ற தப்புகளுக்கு அவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கல தானே! அவன் பண்ணாத தப்புகளுக்கு தண்டனை கிடைக்க வைப்போம். அதுல இருந்து அவன் வெளி வரதுக்குள்ள, அடுத்த அடி கிடைக்கணும். இப்படியே ஒவ்வொரு விஷயமா செய்யணும். கடைசியா அவனோட பெரிய ரகசியத்த அவன் எதிர்பார்க்காத டைம்ல நாம வெளிய விட்டோம்னா அவனுக்கு அது பெரிய அடியா இருக்கும். அதுக்கான நிரந்தர தண்டனைய அவன் அனுபவிச்சே ஆகணும்.” என்றாள்.

“ம்ம்... நீ சொல்றதும் கரெக்ட் தான். ஏன்னா, தப்பு பண்றவன், பண்ணாத தப்புக்கு தண்டனைய அனுபவிக்கும் போதுதான், பண்ண தப்போட வலி தெரியும். அதுக்கான வேலைகள சீக்கிரமே ஆரம்பிக்கணும். ஆனா, இது நான் மட்டும் செஞ்சா எப்படியும் என்னோட டிபார்ட்மெண்ட்ல இருக்கற ஸ்பைக்கு தெரிஞ்சு, அது அவனோட காதுக்கு போயிடுமே.” என்றான்.

“அதுக்கு ஒரு வழி இருக்கு. நீ, மைது, அப்பறம் அருண்னு எல்லாருமே சேர்ந்து வேலை செஞ்சா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். அதனால, யார்கிட்டயாவது சொல்லி, அவங்க ரெண்டு பேரையும் உன்னோட டிபார்ட்மெண்ட்டுக்கு மாத்த சொல்லி ரெகமண்ட் பண்ணு. அப்போதான் இது சரிவரும்.” என்றாள்.

“ம்ம்.. கண்டிப்பா. நான் கமிஷனர் சார் கிட்டயே பேசிப் பார்க்கறேன். இன்னைக்கு அவர்கிட்ட இருந்து பேசினதுலயே அவர் ரொம்ப நல்ல டைப்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எல்லா விஷயத்துலயும் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கார்.” என்றான் ஒரு புன்னகையுடன்.

“உனக்கு பரவால்ல இனி. கமிஷனர் சார் பரவால்ல. எனக்கு கலெக்டர் சார் ரொம்ப மோசம். இன்னைக்கு என்னை வெல்கம் பண்ணக் கூட இல்ல. அவரோட ரூம்க்கு போய் பேசினா, ரொம்பத் திமிரா, ஹார்ஷா பேசறார்.” என்றாள்.

“ஐயோ! அப்பறம் நீ என்ன பண்ண.?” என்றான் ஆர்வமாய்.

“நானா, நீங்க யார் சொல்லி இப்படியெல்லாம் பேசறீங்கன்னு எனக்குத் தெரியும். ஹார்ஷா பேசி தேவையில்லாம சிசிடிவி கேமராவுல சிக்கிடாதீங்கன்னு சைலண்ட்டா சொல்லிட்டு வந்துட்டேன்.” என்றாள்.

அதைக் கேட்டு புன்னகைத்தவன், “எங்கிருந்து உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு செல்லம்.?” என்றான்.

“எல்லாமே என்னோட இனி இருக்கற தைரியத்துனால தான்.” என்றாள் கண் சிமிட்டி.

அப்படிச் சொன்னவளை அள்ளி அணைத்து முத்தமிட்டான் இனியன்.

(தொடரும்....)
 
Top