கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் 2 - அத்தியாயம் 9

Aathirai

Active member
அத்தியாயம் 9

அடுத்த நாள் விடியற்காலை 5.30 மணியளவில் அஞ்சலி குளித்து முடித்து, புதுமணப்பெண்ணாக வெளியே வந்த போது இன்னும் அந்த இரவின் வெட்கத்தில் இருந்து மீளாமல் தனக்குள்ளேயே உண்டான சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

தனது சந்தோஷத்திற்குக் காரணமான தன் கணவன் இனியனைப் பார்த்தாள். அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அருகில் போய் நின்று அவனை ரசித்தவாறு நின்று கொண்டிருக்க, திடீரென்று அவள் கைகளைப் பிடித்து மெத்தையில் இழுத்து அணைத்து முத்தமிட்டான் இனியன். இதை சற்றும் எதிர்பாராதவள், வெட்கத்தில் அவனிடமிருந்து விலக முயல, அவன் உடும்புப் பிடியாய் அவளைப் பிடித்த வண்ணம் இருந்தான்.

“இனி, விடு ப்ளீஸ். இப்போதான் குளிச்சிட்டு வந்தேன். அதுக்குள்ள ஏன் இப்படிப் பண்ண.? நான் கீழே போய் விளக்கு பத்த வைச்சு சாமி கும்பிடணும். நீ இப்படிப் பண்ணதால, நான் திரும்பவும் போய் குளிக்கணும். ஹூம்ம்ம்...” என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, அவனோ, அவளைப் பிடித்தவாறே அவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

“ஏய்.. அஞ்சலி. இன்னைக்குத் தான் உன்ன இப்படி குளிச்சி முடிச்சு வந்ததும் எவ்ளோ அழகா இருக்கன்னு பார்த்துட்டிருக்கேன். நீ என்னடான்னா விடு, விடுன்னு கெஞ்சற.? சோப்பு வாசனை கூட இன்னும் போகல. சூப்பரா இருக்கு. இப்படி கெஞ்சறதுக்கு பதிலா, கொஞ்சினா நல்லா இருக்குமே செல்லம்.” என்று அவனோ அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“ஐயோ. அம்மா. என்ன இது செல்லம், கில்லம்ன்னு. திடீர்னு புதுசு, புதுசா எல்லாம் கூப்பிடற.?” என்று அவன் மீசையை செல்லமாக கிள்ளியவாறே கேட்டாள்.

“அதெல்லாம், அப்படித்தான். சில சமயம் கொஞ்சும் போது வரும். அப்படிக் கேட்கும் போது ரசிச்சுக்கணும். அவ்ளோதான். சரி சொல்லு, எப்படி இவ்ளோ அழகா இருக்க.? உன் அழகின் ரகசியம் என்ன.?” என்று திரும்பவும் அவளை வர்ணித்துக் கொண்டிருந்தான்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல. இப்போ நீ விடலன்னா, நான் கத்தி ஊரையே கூட்டிடுவேன். விடப்போறியா இல்லையா.?” என்று விடாப்பிடியாகக் கேட்டாள்.

“எங்க கத்து பாக்கலாம். அவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு.?” என்று அவளை வம்பிழுக்க.

அவளும் கத்த முயற்சி செய்ய, அவள் வாயை இழுத்துப் பிடித்து கத்த முடியாதபடி மூச்சு முட்ட முத்தமிட்டான் இனியன். மூச்சு தாங்க முடியாமல் திணறினாள் அஞ்சலி. தன் பலத்தையெல்லாம் இழுத்து அவனை உதறித் தள்ளியவள்,

“ம்ம். இனி, தயவு செய்து போய் பிரஷ் பண்ணு. அப்படியேவா கிஸ் பண்ணுவ. ம்ம்.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.” என்று ஒமட்டியபடியே பாத்ரூமில் நுழைந்தாள். மீண்டும் ஒரு முறை குளித்து முடித்து வெளியே வந்தவள், அவனிடம் வராமல் தூரமாகவே நின்றாள்.

“ம்ம்ம். அந்த பயம் இருக்கணும். எங்காவது சத்தம் போட்ட, அப்பறம் இப்படித்தான் பண்ணுவேன். போ..” என்று சிரித்துக்கொண்டே எழுந்து வந்தான். அவன் திரும்பவும் ஏதாவது செய்வதற்க்குள் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்து கிட்டத்தட்ட ஓடியபடி ரூமை விட்டு வெளியேறி கீழே வந்தாள். மணி 6 ஐக் கடந்திருந்தது.

அப்போது தான் அனைவரும் எழுந்து இருந்தனர். அவள் வந்து வீட்டு வாசலைப் பார்த்தாள். கோலம் எதுவும் போட்ட மாதிரி தெரியவில்லை. எனவே, வாசலைப் பெருக்கி அழகான கோலம் போட்டு, அதன் நடுவில் மாட்டு சாணம் எடுத்து வந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பருத்திப் பூவை பறித்து வந்து வைத்தாள்.

அதற்க்குள் மாடுகளிடமிருந்து பாலை கறப்பவர் வந்து முதல் சொம்பை அவளிடம் கொடுத்தார். முதல் சொம்பு பால் வீட்டிற்கு என்றும், மீதமுள்ளது தான் மற்றவர்களுக்கு என்று விளக்கமும் அளித்தார். அவள் அதை வாங்கிக் கொண்டு வந்து அடுக்களையில் வைத்து பால் காய வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி பாலைக் காய்ச்சினாள்.

பால் காய்ச்சியதும், அங்கே உள்ளவர்கள் அனைவருக்கும் என்ன வேண்டுமென்று கேட்டு காபி, மற்றும் ஹார்லிக்ஸ் என்று தேடிப் பிடித்து, இருந்ததைப் போட்டு அனைவருக்கும் கொடுத்தாள். குடித்தவர்கள், ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்று மனதார பாராட்டினர். சிலர் எதுவும் சொல்லவில்லை. மாலதியும், திலகாவும் அப்போது எழுந்திருக்கவில்லை.

அடுத்து பூஜை அறையில் இருந்த சாமி பட்த்தின் மேல் இருந்த காய்ந்த பூக்களை எல்லாம் எடுத்து அதற்க்கென்று இருந்த பெட்டியில் போட்டு விட்டு, வெளியே சென்று பூஜைக்கு வைக்கும் பூக்களை எல்லாம் பறித்து வந்து சாமி படங்களுக்கு வைத்து, விளக்கிற்க்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினாள். மங்களகரமான வாசனை மிக்க, சாம்பிராணி பற்றவைத்தாள்.

சாம்பிராணி வாசனை வீடெங்கும் பரவ அந்த வாசனையிலேயே திலகா எழுந்து வந்தாள். அனைவரும் காபி குடித்து முடித்திருக்க, “ஏம்மா, இப்படிதான் லேட்டா எழுந்திருப்பியா.? பாரு புது மருமக அருமையா காபி கலந்து எல்லாத்துக்கும் குடுத்துட்டு, சாமியும் கும்பிட்டாச்சு. நீ இப்போ தான் எழுந்து வர, பெரிய மருமக தான் ஏதோ புதுசா கல்யாணமான மாதிரி இன்னும் எழுந்தே வராம இருக்கா.” என்று ஒரு பெரியவர் சொல்ல, திலகாவிற்கு கோபமாக வந்தது.

உள்ளே அடுக்கலையில் நுழைந்தவள் அங்கே அஞ்சலி ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். திலகா தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்ததும், ஒரு நிமிடம் அப்படியே நின்றாள் அஞ்சலி.

“வாங்க அத்தை, காபி கலந்து தரட்டுமா.?” என்றாள்.

“உன்ன யாரு இதெல்லாம் பண்ண சொன்னா.? காலைலயே என்ன திட்டு வாங்க வைச்சுட்ட. என்ன பண்ணிட்டிருக்க.?” என்றாள்.

“காபி மட்டும் தான் போட்டேன் அத்தை. வேற எதுவும் பண்ணல. டிஃபன் என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா அதையே பண்ணிடறேன்.” என்று அவள் தன்னடக்கத்துடன் பேச, திலகாவோ மாலதி அன்று சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.

“அத்தை, நீங்க வேணும்னா பாருங்க, வரவ உங்களுக்கு ஒரு காபி கூட போட்டுத் தர மாட்டா. கலெக்டர்ன்ற திமிருல ஊறிப் போயிருப்பா. உங்கள காலணாக்கு கூட மதிக்க மாட்டா. எப்படியும் சமையல் ரூம் பக்கமே எட்டிப் பார்க்கப் போறதில்ல. அப்போதான் உங்களுக்கு இந்த மருமகளோட அருமை புரியும்.” என்று கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்க்கு முன்பு தான் சொன்னாள்.

ஆனால், இன்று நடப்பதோ எல்லாமே தலைகீழ். அஞ்சலி புதுமணப்பெண்ணானாலும், அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு, முதல் நாளே அனைத்தையும் செய்ய ஆரம்பித்து விட்டாள். மாலதியின் கூற்று பொய்யாகிப் போனதை, திலகா நினைத்துக் கொண்டிருக்க, அஞ்சலி அவரை அழைத்துக்கொண்டிருந்தாள்.

“அத்தை, அத்தை.. என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க.?” என்று அவள் திலகாவை உலுக்கியதும் தான் பார்த்தாள்.

“அத்தை, நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு புரியுது. இவ பெரிய கலெக்டர்ன்னு சொன்னாங்களே, எந்த வேலையும் செய்ய மாட்டான்னு நினைச்சிருப்பீங்க. ஆனா, அப்படியெல்லாம் இல்ல அத்தை. நீங்க எந்த வேலையா இருந்தாலும் சொல்லுங்க. நான் கண்டிப்பா பண்ணுவேன். நான் இங்க வரும் போதெல்லாம் எல்லா வேலைகளையும் செய்வேன். நீங்க எதுவும் நினைக்க வேண்டாம். வெளில தான் நான் கலெக்டர். வீட்ல நான் ஒரு மருமகளா என்னோட எல்லா கடமைகளையும் செய்வேன்.” என்று தெளிவாக சொல்லிக்கொண்டிருக்க, திலகாவோ பதில் பேச முடியாமல் திணறினாள். தான் நினைத்தது தவறோ என்று ஒரு எண்ணம் அப்போதுதான் முதலில் உதித்தது.

“ஹே.. சூப்பர் அஞ்சலி. ப்பா என்ன வசனம். அம்மா இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அதனால தான் எதுவும் பேசாம நிக்கறாங்க.” என்று சொன்னபடியே அடுக்களையின் வெளியே நின்றிருந்தான் இனியன்.

திலகா தான் யோசித்தது எதையும் காட்டிக் கொள்ளாமல், அங்கே இருந்து வெளியே சென்றார். அவர் பேசாமல் போவதையே இருவரும் பார்த்தனர். இனியன், அஞ்சலியிடம் திரும்பி, “ஏய். பொண்டாட்டி, எனக்கு காபி தரமாட்டியா.?” என்றபடியே அவளிடம் நெருங்கி வந்தான்.

“ச்சூ.. பேசாம இரு. யாராவது வந்துடப் போறாங்க. உன் ரொமான்ஸெல்லாம் ரூம்ல வைச்சுக்கோ.” என்று அவள் அவனைத் தள்ளிவிட, வேண்டுமென்றே அவள் இடுப்பைப் பிடித்து கிள்ளினான்.

“ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. ஏய் என்ன பண்ற இனி.? பேசாம இருக்க மாட்டியா.?” என்று அவனை அடிக்க வர, அவன் சிரித்துக்கொண்டே அவளிடமிருந்து நழுவி வெளியே செல்ல முயல அப்போது மாலதி வந்து விட்டாள்.

அவர்களின் செயலைப் பார்த்தவள், “என்ன கொழுந்தனாரே, காலைல கூட ஒரே ரொமான்ஸ் போல. இது எல்லாரும் வந்து போற இடம். உங்க சேட்டையெல்லாம் ரூம்ல வைச்சுக்கோங்க. இங்க இப்படியெல்லாம் பண்ணாதீங்க.” என்று சொன்னாள்.

உடனே இனியன், “அண்ணி, சும்மா சொல்லாதீங்க. நீங்க மட்டும் என்ன, கல்யாணமாகி வந்த புதுசுல ஒரு வயசுப் பையன் வீட்ல இருக்கான்னு கூட பார்க்காம நீங்களும், அண்ணனும் ரொமான்ஸ் பண்ணலயா. அது மாதிரி தான் இதுவும்.” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.

மாலதிக்கு என்னவோ போல் ஆனது. இவன் என்ன, இப்படி சொல்லி விட்டான் என்று முழித்துக் கொண்டிருந்தாள். அஞ்சலி மௌனமாக சிரித்துக்கொண்டே வெளியே வந்து விட, மாலதிக்கு கோபம் கோபமாக வந்தது.

பெரியவர்கள் சிலர் அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அனைவரையும் அழைத்தனர். முடிந்தவரை வருகிறோம் என்று கூறினர் இருவரும். அடுத்து, காலை உணவு தயாராகியது. இருவரும் சாப்பிட்டு விட்டு, குலதெய்வம் கோவிலுக்குக் கிளம்பினர்.

அடுத்த நாள் கரி விருந்துக்கு சொந்த, பந்தங்கள் அனைவரையும் அழைத்திருந்தனர். அந்த நாள் அதற்க்கே சரியாகப் போய்விட்டது. அந்த இரண்டு நாட்களும், அஞ்சலி தன்னால் இயன்ற அளவு வேலைகள் அனைத்தையும் செய்தாள். மாலதியும், திலகாவும் இதை எதிர்பார்க்கவில்லை.

திலகா வேண்டுமென்றே ஏதாவது சொன்னாலும், அதை எதையும் பெரிது படுத்தாமல், அவள் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்தாள். இதற்கிடையில் இனியன் அவளிடன் அவ்வப்போது வந்து கொஞ்சிவிட்டுச் சென்றான். சில சமயம் உதவியும் செய்தான்.


அவற்றையெல்லாம் பார்க்கும் போது, மாலதிக்கு எரிச்சலாக இருக்கும். ஏனென்றால், முகுந்தன் எந்த வேலையும் அவளுக்கென்று இதுவரை செய்ததில்லை. நடராஜன் கூட, திலகாவிற்கு ஒரு சில சமயம் சமையலில் கூட உதவி செய்வார். ஆனால், இவன் அப்படிச் செய்து ஒருமுறை கூட மாலதி பார்த்ததில்லை. அதனாலேயே, இனியன் அஞ்சலிக்கு உதவி செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டாள்.

“என்ன கொழுந்தனாரே, வீட்டு வேலையெல்லாம் எப்போ செய்யக் கத்துக்கிட்டீங்க. பார்த்து ஒரே அடியா, நீங்களே எல்லா வேலையும் பார்த்து, அப்பறம் கலெக்டர் அம்மாக்கு எந்த வேலையும் இல்லாம போகப் போகுது.” என்று நக்கலாக சொன்னாள் மாலதி.

“அண்ணி, நீங்க வேணும்னா கலெக்டர்க்கு படிங்க. அப்பறம் பாருங்க, அண்ணா என்ன.? அம்மா, அப்பா எல்லாரும் வந்து உங்களுக்கு உதவி பண்ணுவாங்க. என்ன, படிக்கறீங்களா.?” என்று இனியன் திருப்பி கிண்டலாகக் கேட்டான்.

மாலதிக்கு முகமே சொங்கிப் போனது, தான் சரியாகப் படிக்கவில்லை என்பதை அவன் குத்திக் காட்டிப் பேசுவதாக எண்ணினாள். ஆனால், இனியன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை மாலதி புரிந்து கொள்வது கடினமே. அதன் பிறகு, அவர்களிடம் வாயைக் குடுக்காமல் சற்று அடங்கியே இருந்தாள் மாலதி.

கரி விருந்து முடிந்ததும் ஒவ்வொருவராக அவரவர் வீட்டிற்க்கு விருந்துக்கு இருவரையும் அழைத்தபடி இருந்தனர். அஞ்சலியின் சார்பில், அவளுடைய அத்தை, தாத்தா, பாட்டி மூவரும் வந்திருந்தனர். அவர்களும் ஒரு நாள் இருவரும் விருந்துக்கு வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். தங்களுக்கு கிடைத்திருப்பதே இந்த ஒரு வாரம் என்பது அதிசயமான ஒன்று. அதை பிரயோஜனமாக செலவழிக்க வேண்டும் என்று நினைத்தான் இனியன்.

அவர்களின் தேனிலவுக்காக அந்த நாட்களை உபயோகப்படுத்திக் கொள்ள திட்டமிட்டான். சொந்த, பந்தங்களின் வீடுகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், தேனிலவு கல்யாணம் ஆன பொழுதில் சென்றால் மட்டுமே ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்பதால் அவன் அந்த முடிவை எடுத்திருந்தான்.

தேனிலவுக்கான பேக்கேஜை அருணும், மைதிலியும் மற்றும் ஜீவாவும் அவர்கள் திருமணப் பரிசாகக் கொடுத்தனர். ஹிமாச்சலப் பிரதேசம், டார்ஜ்லிங், குலு மணாலி ஆகிய இடங்களுக்கு மூன்று நாட்கள் செல்வதாக இருந்த்து அந்த பேக்கேஜில்.

கரி விருந்து முடிந்த அன்று மாலையே பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டனர் இருவரும். அங்கே சென்று அனைத்து இடங்களையும் பார்த்த போது அவ்வளவு ஒரு சந்தோஷம் மனதில் குடிகொண்டிருந்தது இருவருக்கும்.

மூன்று நாட்கள் எப்படி கழிந்த்து என்றே தெரியவில்லை இருவருக்கும். அந்த மூன்றாம் நாள் இரவின் விளிம்பில் தான் இவை எல்லாவற்றையும் அஞ்சலி நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இனி, மூன்று நாட்கள் முடிந்து திரும்பவும் அவர்கள் வேலையைத் தொடங்க அங்கே செல்ல வேண்டும். இருவரின் வாழ்வில் இனி என்னென்ன நிகழப் போகிறது என்று தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.


(தொடரும்...)
 
Last edited:
Top