கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆயிரம் காலத்து பயிர்

Rajasree Murali

Moderator
Staff member
விடியற்காலை மூன்று மணியிருக்கும். மொபைல் போன் விடாமல் அடிக்கவே அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கார்த்திகேயன் தூக்க கலக்கத்துடன் வாய் குழறியபடியே ஹலோ யாரு பேசறது என்றவன் மறு முனையிலிருந்து வந்த செய்தியால் அதிர்ந்து போனான். அண்ணே என்ன சொல்றீங்க, நேத்து கூட சரவணன் கிட்டே பேசினேன். நல்லாத்தானே பேசினான். என் கிட்ட ஒன்னுமே சொல்லலையே அண்ணே, என்னாச்சு அண்ணே என்று கதறியபடியே கேட்டான். மறுமுனையிலிருந்து எனக்கும் ஒன்னுமே புரியலைப்பா. வளர்மதியின் அலறல் சத்தம் கேட்டுத்தான் ஓடினோம்.பார்த்தா சரவணன் தூக்கில தொங்கிகிட்டு இருக்கான். எங்க கிட்ட கூட ஒன்னுமே சொல்லலைப்பா. நீ இப்பவே புறப்பட்டு வா கார்த்தி. அப்பா, அம்மா, வளர்மதி மூன்று பேரையும் பார்த்தால் ரொம்ப கவலையாக இருக்கு என்று சொல்லியபடியே வச்சிடவா என்றபடி போனை வைத்தனர்.

கார்த்தி அதிர்ச்சியில் உறைந்து போய் பிரம்மை பிடித்தது போல் அப்படியே நின்று கொண்டிருந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்னால் தன்னை பஸ் ஏற்றி விட்டு சிரித்தபடியே கை ஆட்டிய சரவணன், டேய் கார்த்தி பத்திரம்டா போனவுடன் போன் பண்ணு, உடம்பை பார்த்துக்கடா, ரொம்ப நேரம் கண் முழிச்சு வேலை செய்யாதே, வேளா வேளைக்கு நன்றாக சாப்பிடுடா என்று அத்தனை பாசத்துடனும் கரிசனத்துடனும் சொன்னவன் கண் முன்னே வந்தான். தாங்க முடியாமல் ஓவென்று அழுதான். என்ன பிரச்சினை இருக்கும் தற்கொலை பண்ணிக்கொள்ளும் அளவுக்கு. சரவணனும் கார்த்தியும் இரட்டை பிறவிகள். பார்க்க அச்சு அசல் ஒன்று போலவே இருப்பார்கள். உயரம், நிறம், குரல் எல்லாமே ஒன்று போலவே இருக்கும். அப்பா வேலாயுதம் அம்மா கோமதி இருவருக்குமே சில சமயங்களில் அவர்களை அடையாளம் தெரியாது. இதில் சரவணன் படிப்பை ஐந்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டான். ஆர்வமும் இல்லை. படிப்பும் வரவில்லை. கையெழுத்து போட தெரிஞ்சா போதும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டு அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கி விட்டான்.வேலாயுதமும் அவனை வற்புறுத்தவில்லை. ஆனால் கார்த்தி நன்றாகவே படித்தான். பத்தாம் வகுப்பு வரை அந்த ஊரிலேயே படித்தவன் 11, 12ம் வகுப்புகளுக்கு பக்கத்து டவுனுக்கு சைக்கிளில் சென்று படித்தான். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவன் அப்பாவுடன் சண்டை போட்டு மதுரை கல்லூரி ஒன்றில் பட்டபடிப்பு சேர்ந்தான். அப்போதெல்லாம் இவனை பார்த்து சரவணன் மாய்ந்து போவான். என்னமா படிக்கிறான். இவன் கூட ஒன்னா பிறந்த நமக்கு ஏன் படிப்பு வரவேயில்லை என்று தன்னை தானே நொந்து கொள்வதுடன், தன் அப்பாவிடம் கேட்பான், ஏம்பா நான் இப்படி இருக்கேன். அவன் இவ்வளவு புத்திசாலியா இருக்கான் என்று. அப்போதேல்லாம் வேலாயுதம் அவனை ஆறுதல் படுத்தும் விதமாக டேய் சரவணா, என்னைக்கேட்டா நீ தான் அவனை விட ஒசந்தவன்ம்பேன் உன்னால் எத்தனை பேர் பிழைக்கிறாங்க. நம்ப நிலத்தில் நீ எத்தனை பேருக்கு கூலி குடுக்கறே. அதுவுமில்லாம விதை விதைக்க ஏர் உழுவது, தண்ணி பாய்ச்சுவது களை எடுக்க, கதிர் அறுக்க, விளைச்சலை பாதுகாத்து வியாபாரம் செய்து வெயில் மழை குளிர்ன்னு பார்க்காம நீ உழைக்கிற மாதிரி கார்த்தியால முடியுமாடா. அவன் படிக்கிறான், நாளைக்கு சம்பாதிச்சான்னா அது அவன் குடும்பத்துக்கு மட்டும் தான் பலன் தரும். ஆனா நீ அப்படி இல்லடா. என்னிக்கிருந்தாலும் நாம இங்க கஷ்டப்பட்டு உழைச்சாத்தான் டவுன்ல இருக்கறவங்க நல்லா சாப்பிட முடியும் தெரியுதா? கண்டபடி போட்டு குழப்பிக்காதே, போடா போய் வேலைய பாரு என்று சரவணனை தட்டி கொடுப்பார். அவருக்கு என்னிக்குமே இவன் தான் செல்லம். கோமதிக்கு கார்த்தி தான் செல்லம்.

கார்த்தி நம்மையெல்லாம் விட்டுட்டு பட்டணத்துல சரியான சாப்பாடு இல்லாம கொழந்தை ரொம்ப கஷ்டப்படுறான் என்று புலம்புவாள். அவன் லீவில் ஊருக்கு வரும்போதெல்லாம், டேய் கார்த்தி என் அண்ணன் மக வளர்மதி கண்ணுக்கு லட்சணமா இருக்காடா. அவளை கல்யாணம் செய்துக்கோ என்று வற்புறுத்துவாள். சிரிப்பை பதிலாக தந்து விட்டு கிளம்பி விடுவான். ஒரு நாள் சரவணன் போன் செய்து, டேய் கார்த்தி எனக்கு வளர்மதியை ரொம்ப பிடிக்கும்டா. அவளுக்கும் என் மேல ரொம்ப பிரியம். ஆனா அவ 12ம் வகுப்பு வரை புடிச்சிருக்கா. அது தாண்டா யோசனையா இருக்கு. நீ தான் அப்பா அம்மா கிட்ட பேசி எங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யணும் என்றான். கார்த்தி அவனிடம், இதெல்லாம் பெரியவங்களா பார்த்து செய்யணும்டா. நீ அப்பா அம்மா கிட்ட தைரியமா சொல்லு என்றான். சரவணனின் நியாயமான விருப்பத்தை பெற்றவர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல நாளில் சரவணன் வளர்மதி திருமணத்தை நடத்தி வைத்தார்கள். முதலாம் ஆண்டு திருமண நாளிற்கு அவர்களின் அன்பும் காதலும் நிறைந்த வாழ்க்கைக்கு பரிசாக ஜனனி குட்டி வந்துதித்தாள்.

அந்த குடும்பத்தில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நன்றாக போய்க்கொண்டிருந்த சரவணனின் வாழ்க்கையில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சினை வந்தது. எதுவும் புரியாமல் குழம்பியபடியே ஊருக்கு கிளம்பினான். அடுத்த நாள் மாலை கிட்டத்தட்ட மணி ஐந்தாகிவிட்டது. இவன் போய் சேருவதற்கு. அழுகையுடனும் துக்கத்துடனும் பஸ்சிலிருந்து இறங்கியவன் எதிரே கும்பலாக உறவினர்களும் ஊர்காரர்களும் நடுவில் சோகத்தில் தள்ளாடியபடியே அப்பா. நடக்க கூட சக்தியில்லாமல் வந்த அவரை இரண்டு பேர் தாங்கி பிடித்தபடி வந்தனர். இவனை பார்த்தவுடன் வேலாயுதம் ஓவென்று கதறினார். வாரி கொடுத்துட்டேண்டா நம் சரவணனை என்று அலறினார். என்னப்பா நான் கடைசியா ஒரு முறை அவனை பார்க்க முடியாம பண்ணிடீங்க என்று இவன் அழுதபடியே கேட்க கூட வந்த உறவினர், தம்பி ரொம்ப நேரம் வச்சிக்க முடியலைப்பா. போலீஸ் ஆஸ்பத்திரி எல்லாம் முடிஞ்சி அவனை எங்க கிட்ட கொடுக்கவே ரொம்ப டைம் ஆயிடுச்சுப்பா என்று முடிக்கும் முன் வாங்கப்பா என்று கைத்தாங்கலாக அழைத்து வந்தான். வீடே இருளில் மூழ்கி இருக்க சாவு வீட்டில் நடக்கும் வழக்கமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்க அம்மா சரவணனின் போட்டோவை பார்த்து கதறி அழுதுகொண்டு இருந்தாள். வளர்மதி நிலை குத்திய பார்வையுடன் உட்கார்ந்திருக்க அம்மாவின் அலறல் அந்த தெருவையே அழ வைத்தது. கார்த்தி, சரவணன் ஒன்னுமே சொல்லாம போயிட்டான்டா என்று அவன் தோளில் சாய்ந்தபடி கேவி கேவி அழ ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த இரண்டு வயது ஜனனி குட்டி கண்களை கசக்கியபடியே கார்த்தியின் அருகில் வந்தவள் அய் அப்பா என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அப்பா நீ தாமி கித்த போயித்தேன்னு சொன்னாங்க, சீக்கமா வந்துத்தியா ஐய்யா என்று கைகளை தட்டியபடியே வளர்மதியிடம் ஓடினாள். அம்மா, அப்பா வந்துத்தா என்று தன் கொஞ்சும் மழலையில் பேசவே வளர்மதியும் அங்கிருந்த எல்லோருமே அழக்கூட மறந்து வாயடைத்து போனார்கள். வளர்மதி லேசாக தலை சுற்றி மயங்கி சரிந்தாள்.

இதை பார்த்த கோமதி தன்னை சுதாரித்துக்கொண்டு, வளரு வளரு நீயும் எங்களை ஏமாத்திட்டு போயிடாதேடி என்று கதறியபடியே முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பியவள், அம்மாடி கொழந்த பயப்படறாம்மா கொஞ்சம் சுதாரிச்சுக்கோம்மா.மெல்ல அவளை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து போய் படுக்க வைத்து விட்டு, ஜனனி குட்டி ஒண்ணுமில்லேடா கண்ணு அம்மா தூங்கறா வாடா என் செல்லமே என்று அணைத்தபடியே அங்கிருந்த உறவுக்கார பெண்ணிடம் அவளை கொடுத்து சாப்பிட வைத்து தூங்க வை என்று சொல்லியபடி வாசலில் உட்கார்ந்திருந்த கார்த்தியின் அருகில் தானும் உட்கார்ந்து சோர்ந்து போய் அவன் மடியில் தலை வைத்து சத்தமில்லாமல் கேவி அழத்தொடங்கினாள். ஏய் கோமதி எல்லாருக்கும் நீ தாண்டி தைரியம் சொல்லணும். நீ இப்படி அழுதா உன் உடம்பு என்னத்துக்கு ஆவும். சர்க்கரை வியாதிகாரிடீ நீ உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நாங்க அம்புட்டு பேரும் அவ்ளோதான். துக்கம் மேலிட வேலாயுதம் சொல்லும் போது, கார்த்திக், அம்மா நான் வந்துட்டேன் இல்ல கவலைப்படாதே என்றவன் அப்பா ஏதாவது தெரிஞ்சதா. அவன் சிநேகிதங்க கிட்ட பேசினீங்களா என்றான். ஆமாம்பா இப்பத்தான் மூணு பயலுங்களை பார்த்தேன். அவங்க கிட்ட விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாம நிறைய நஷ்டம்டா, என்ன பண்றதுன்னே தெரியலேன்னு புலம்பியிருக்கான். அவன் என்கிட்டே சொன்ன கடைசி வார்த்தை நானும் கார்த்தி மாதிரி நல்லா படிச்சிட்டு வேலைக்கு போயிருந்தால் நிறைய சம்பாதிரிச்சி இருக்கலாம் இல்லப்பான்னு சொன்னான். இப்ப கொஞ்ச நாளா அவந்தாம்பா எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தான். எனக்கு இதயம் சம்பத்தப்பட்ட நோய் வந்ததுலேர்ந்து முன்ன மாதிரி என்னால வீட்டுக்கும் வயக்காட்டுக்கும் அலையை முடியலடா. படுபாவி என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தான்னா எப்படியோ சமாளிருசிப்பேனே என்றார். இதற்கு நடுவே கோமதி கார்த்தியிடம், கார்த்தி அவனை மூடின ஈரம் கூட காஞ்சிருக்காது. உன் கிட்ட இப்படி பேசறேன்னு நினைச்சுக்காத. இருபத்தி ரெண்டு வயசு தாண்டா ஆவுது அவளுக்கு. அவளை நினைச்சாலே வயிறு கலங்குதுடா. அவளுக்கு நாம ஏதாவது செய்யணும்டா என்று புலம்பியவளை ஆறுதல் படுத்தி நான் கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன் என்றவன் சரவணன் இல்லாத அந்த ஊரில் நடக்கும் போது துக்கம் தொண்டையை அடைக்க அங்கிருந்த கிணற்றின் திட்டின் மீது உட்கார்ந்து யோசித்தான். சரவணன் தோற்ற விவசாயத்தை கையிலெடுப்போம். அதை பத்தி தெரிந்து கொள்ள குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும். ஆபீசை தொடர்பு கொண்டு தன் நிலை பற்றி விளக்கி வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்தபடி வீட்டை நோக்கி நடக்கலானான். அப்பா அம்மாவிடம் தன் திட்டம் பற்றி எடுத்துசொல்லும் போது நீ என்ன பண்ணாலும் எங்க கூடவே இருக்கறது எங்களுக்கு சந்தோசம் என்றார் வேலாயுதம்.

அவர்களின் சம்மதத்துடன் மடமடவென வேலைகளை ஆரம்பித்தான். கடுமையாக உழைத்தான், விடியற்காலை ஐந்து மணி முதல் பகல் பதினோரு மணி வரை அப்பாவுடன் வயலுக்கு சென்று அவரின் உதவியுடனும் விஞ்ஞானத்தின் வழிகாட்டுதலுடனும் வேலை ஆட்களின் ஒத்துழைப்புடனும் விவசாயம் பயில ஆரம்பித்தான். ஐந்து மணிக்கு பிறகு தன்னுடைய ஆபீஸ் வேலை. ஆறு மாதங்கள் இப்படியே போகையில் அவனின் சேமிப்பு பணத்தைக்கொண்டு கடன் தொகையை அடைத்து குடும்பத்தை தலை நிமிர செய்தான். குழந்தை ஜனனியும் அவனுடன் ஒட்டிக்கொண்டு அப்பா அப்பா என்று அவனையே சுற்றி வந்தாள். வளர்மதியும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்துக்கொண்டு தங்களுடன் வந்து இருக்கும்படி அழைத்த பெற்றோர்களுடன் போகாமல் இது தான் என் வீடு கடைசி வரை இங்கேதான் இருப்பேன் என்று மறுத்து விட்டாள். ஒரு நாள் கோமதி கார்த்தியிடம் ஜனனி உன்னை அப்பாவாகவே நினைச்சுட்டாடா. நானும் உன்கிட்ட வளர்மதியை பத்தி பேசணும்னு இருந்தேன்டா. அவளுக்கு நீ தான் வாழ்க்கை கொடுக்கனும்டா என்றாள். இதை கேட்டதும் அதிர்ந்து போய் என்னம்மா சொல்றே என்றான். டேய் நான் ஒன்னும் தப்பா சொல்லலைடா நம்மூர் பக்கம் இப்படி நடப்பது வழக்கம் தான். அவளுக்கு வாழவேண்டிய வயசுடா என்றவளை அம்மா வளர் இதை தவறாக எடுத்துக்க மாட்டாளா என்றான். கோமதி உடனே நான் அவகிட்ட பேசி புரிய வைக்கிறேன் என்றவளை சரிம்மா, ஆனா வளர் மனப்பூர்வமா சம்மதிச்சாதான் இது நடக்கும் என்றான்.

கார்த்தி அவளை வற்புறுத்தி படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து சொல்லவே தபால் வழியில்மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க ஆரம்பித்து தன்னை அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டாள். பிறகு வரும் நாட்களில் தன்னுடைய படிப்பு பயன் பெரும் வகையில் அந்த கிராமத்தில் உள்ள படிக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் டியூஷன் சென்டர் ஒன்றை தொடங்கி கல்வியறிவு பெற செய்தான். காலம் தான் எல்லா ரணங்களையும் ஆற்றும் என்பதற்கேற்ப வேலாயுதமும் கோமதியும் கார்த்தியின் அன்பில் மகிழ்ந்தார்கள். பட்டப்படிப்பு முடித்த வளர்மதியிடம் நிறைய மாற்றங்கள். ஜனனி குட்டியும் பள்ளிக்கு சென்று மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு மாறினாள். அம்மா அப்பா சம்மதத்துடன் அந்த ஊர் பெரியவர்களின் ஆசியுடன் எளிய முறையில் வளர்மதியை தன் மனைவியாக்கிக்கொண்டான். விவசாயத்திலும் டியூஷன் சென்டரிலும் வளர்மதி அவனுக்கு துணையாய் நின்று தன் பங்களிப்பை முழுமையாக தந்தாள். அந்த மக்களுக்கு கார்த்தி தவிர்க்க முடியாத ஒருவனாக ஆனான். வாழ்வில் முழு நேர விவசாயியாகவும், நல்ல தகப்பனாகவும், கணவனாகவும் மாறிய கார்த்தி ஆனந்தத்தின் எல்லையை அடைந்தான்.
 
Last edited by a moderator:
Top