கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 14

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—14





சுமதியின் கண்கள் சிவந்தது. அக்னி பார்வை பார்த்தாள். கதவை திறக்க சீதேவி வருவாள் என்று பார்த்தால் மூதேவி வந்து நிற்கிறாள். எல்லாம் இவளால் தானே வந்து? இவள் மட்டும் எவனோடவோ ஓடிப் போகாமல் இருந்திருந்தால்..அப்பா இறந்திருப்பாரா? அவள் தான் வசந்தா என்ற போலி மனுஷியிடம் சிக்கியிருப்பாளா?


“நீ எங்கே இங்கு வந்தே?”


“சுமதி...என் கூட வா. இப்பவாவது அவங்க யாருன்னு தெருஞ்சுதா உனக்கு? நான் உன்னை பெத்தவடி...உன்னை இப்படிப் பார்க்க...”


“சந்தோஷமா இருக்கா? திருப்திதானா? போயிடு. உன் மூஞ்சியை பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. நீ அம்மா இல்லை, சுயநலப் பேய்...”


லக்ஷ்மி எவ்வளவு கெஞ்சியும் அவளை தள்ளிவிட்டு சுமதி வெளியில் போனாள். நேரே தான் கணக்கு வச்சிருக்கும் வங்கிக்குப் போனாள். டோக்கன் வாங்கி அவள் காத்திருந்தபோது வங்கி மேலாளர் அவளை கூப்பிட்டார்.


“உன் கணக்கில் நூறு ரூபாய் தான் இருக்கு மேடம். நீங்க மூவாயிரம் வேணும்னு செக் எழுதியிருகீங்க...ஸாரி...”


“சார்...என் கணக்கில் இருபதாயிரம் இருந்ததே..”


“நேத்து தான் வசந்தா பேரில் ஒரு வித்ட்ராயல் ஆகியிருக்கு.”


அதிர்ந்து போனாள் சுமதி. அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை.


அம்மா என்று வாய் நிறைய அழைத்தாளே...மகள் போல் பாசம் காட்டினாளே...வீட்டை தான் பிடுங்கிக் கொண்டாள். அவள் பணத்தையும் அல்லவா சுருட்டிக் கொண்டு போய்விட்டார்கள்!


கையில் ஒரு பைசா இல்லை. ஜாயின்ட் அக்கௌன்ட் வைத்துக் கொண்டது தப்பாக போயிற்று. பாட்டி அவள் பேரில் வீட்டை எழுதி வைத்தது தப்பாக போயிற்று. வீட்டை எழுதி வாங்கிக் கொண்டாலும், எங்கே இவள் வந்து ஒட்டிக் கொள்வாளோ என்று விற்று விட்டு அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்.





வங்கியை விட்டு வெளியே வந்தாள். பசித்தது. காலையிலிருந்து பல்லில் பச்சை தண்ணீர் கூட படவில்லை. ஒரு வாழைப் பழம் வாங்கக் கூட காசில்லை. அவளுக்கு முதல் முறையாக அழுகை வந்தது. தெருவெல்லாம் அழது கொண்டே போனாள். வீட்டுக்குப் போக முடியாது. விற்று விட்டார்களே! என்ன செய்வது? ஒரு முடிவுக்கு வந்தாள். பிரதாப் வீட்டுக்குப் போனாள். அவளைக் கண்டதும் பிரதாப் ஒளிந்து கொண்டான். அவன் அம்மா அவளை முறைத்துப் பார்த்தாள்.


“இங்கே எதுக்கு வந்தே? கெட்டுப் போன பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஆதரவு இல்லம் இது இல்லை. ஏய்...பிரதாப்..நீ உன் வாயாலே அவளை போகச் சொல்லு....வா வெளியே...”


பிரதாப் வெளியே வந்தான். அவன் முகம் பேய் அறைந்தது போல் இருந்தது. “சுமதி..ப்ளீஸ் போயிடு? உன் மரியாதையை காப்பாத்திக்கோ. உன் மேல் உள்ள அக்கறையால் சொல்றேன்.”


“என்னோட வானம் இருட்டா இருக்கு பிரதாப். அம்மாவும் சித்தியும் வீட்டை வித்திட்டு போயிட்டாங்க. நான் அங்கு இருக்க முடியாது. என் பாங்க பாலன்ஸை சுத்தமா வழிச்சு எடுத்திட்டுப் போயிட்டாங்க. எனக்கு வேறு யாரும் இல்ல. ப்ளீஸ்..என்னை காதலிக்கறதா சொன்னியே...உன் பிரியமானவள் சீரழிவதை பார்த்திட்டு...”


“சொன்னா கேள். அபார்ஷன் பண்ணிக்கிட்டேன்னு கேள்விப்பட்டேன்.”


“அய்யோ இல்லை. முதலில் நான் குழந்தை உண்டாகவேயில்லை. அப்புறம் அல்லவா கருவை கலைக்க?...அபாண்டமா என் மேல் பழியை போடாதீங்க.”


அந்தம்மாள் உள்ளே போய் ஒரு பைல் எடுத்து வந்து சுமதியிடம் கொடுத்தாள். அது சுமதியின் மெடிக்கல் ரிப்போர்ட். அவள் இரண்டு மாதக் கருவை கலைத்திருப்பதாக அந்த ரிப்போர்ட் சொல்லியது. டாக்டரின் கையெழுத்தும் இருந்தது. இது வசந்தாவின் லீலை.


“நோ..இது பொய் ரிப்போர்ட்....சத்தியமா, ஏதோ சதி நடந்திருக்கு.”


“ஆமாடி..சதி நடக்கும். உன்னை பெற்ற பெண் போல் பார்த்த வசந்தா தான் காட்டினா. உன் மகனாலே என் பெண் சீர் கெட்டுப் போயிட்டா. மரியாதையா கல்யாணம் பண்ணி வைய்யுன்னு சொன்னா. என் மகன் சொன்னான். என் விரல் நுனி கூட அவள் மேல் பட்டதில்லை ஆன்ட்டி. என் அம்மா மேல் சத்தியம் என்றான். நீ எவன் கிட்டே கெட்டுப் போனியோ அவன் காலில் போய் விழு. இல்லை குளம் குட்டை எதிலாவது போய் விழு. இப்ப இடத்தை காலி பண்ணு.”


சடாரென்று சுமதி பிரதாப்பின் காலடியில் விழுந்தாள்.


“உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன் பிரதாப். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. எனக்கு மானம் பெரிசு. நீ கூட என்னை நம்பமாட்டியா?”


“என்ன செய்வது சுமதி?. உங்க அம்மாவே இந்த ரிப்போர்ட் காட்டிய பிறகு, எப்படி உன்னை நம்பறது? நீ சுத்தமானவள் என்பதற்கு ஆதாரம் இருக்கா?.”


விழுந்த வேகத்தில் எழுந்தாள் சுமதி.


“நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? உருகி உருகி காதலிச்சது எல்லாம் பொய்யா? அவ்வளவு தரம் தாழ்ந்தவளா நான்?. உன்னை காதலிச்சேன் பார்..எனக்குத் தான் அவமானம்..”


“ஏய்..என்ன பெரிய பத்தினி மாதிரி பேசறே? ஓடிப் போடி..”


சுமதியின் தலைமுடியை பிடித்து பிரதாப்பே இழுத்துக் கொண்டு போய் தெருவில் விட்டான். அக்கம் பக்கம் கூடிவிட்டது. ஏற்கனவே அவள் உள்ளே போனதும் பலர் ஜன்னலிலும் வாசலிலும் வந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்பொழுது தெருவில் இந்த டிராமா நடக்கவும் அவர்களுக்கு நல்ல அவல் கிடைத்தது.


“ஏண்டி சுமதி..உன்னை கெடுத்தவன் வீட்டுக்கே போகவேண்டியது தானே? அங்கே போய் நியாயம் கேளு..”


“யார் கண்டது இவனும் கெடுத்தானோ என்னவோ? வளைச்சுப் போட்டிருப்பா. அந்தக் குடும்பமே ஓடுகாலி குடும்பம் தானே?” இப்படி பல விமர்சனங்கள் பெண்களிடமிருந்தே வந்தது.


பிரதாப்பின் அம்மா ஆவேசத்துடன் வெளியே வந்தாள்.


“ஏய்..மரியாதையா போயிடு இல்லை போலீசை கூப்பிடுவேன். நீ கெட்டதும் அல்லாமல் எங்க பையன் பேரையும் கெடுக்க வந்தியா?”


யாரோ ஒரு பெண் பரிதாபப்பட்டு சொன்னாள்.


“கண்ணு....போயிடும்மா. பொண்ணுனா இவங்களுக்கு தூசு தான்.”


சுமதி நிதானமாக சொன்னாள்.


“போயிடறேன்....” பிரதாப் அருகில் வந்தாள். அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பிறகு அவனை ஓங்கி அறைந்தாள். ஒரு விரலை காட்டி எச்சரித்தாள். பின் விடுவிடுவென்று அங்கிருந்து மறைந்தாள். பகலெல்லாம் கடற்கரையில் சுற்றினாள். பசியும் பட்டினியுமாக பைத்தியக்காரி போல் திரிந்தாள். அவள் வேலை பார்க்கும் பள்ளியிலும் அவளை விரட்டிவிட்டால்?...மனம் குழம்பியது. எல்லாமே இருட்டாக இருந்தது. இரவு வந்தது. கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள துணித்து விட்டாள். மனிதர்களுக்கு இரக்கம் இல்லை. இயற்கைக்கு இருந்தது. அவளைக் காப்பாற்றியது.


சைந்தவியையும் சுமதியையும் சேர்த்து வைத்தது. சுமதியை யாரும் வேலையில் இருந்து போகச் சொல்லவில்லை. அது தான் அவர்கள் வாழ துருப்புச் சீட்டாக அமைந்தது.





ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும். ஆனால் மூடிய கதவையே நாம் பார்த்துக் கொண்டிருப்பதால் திறந்திருக்கும் கதவை நாம் கவனிக்க முடியாமல் போகிறது. அப்படியொரு நிலையில் இருந்த இருவர்----அவ்வளவுதான் வாழ்க்கை அவ்வளவு தான். நமக்கு வாழ்க்கை இல்லை என்ற அவசர முடிவு எடுத்து தங்களை


மாய்த்துக் கொள்ள துணிந்தார்கள். அவர்கள் இருவரின் கையையும் கோத்து விட்டது இயற்கை. இதோ அவர்களுக்கும் வந்திருக்கிறது புது வசந்தம். இருவரும் தோழிகள் ஆனது தெய்வச் செயல். இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். இருவரும் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்கள். எப்படி உருவாகியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். ஒருவருக்கு ஒருவர் வளர மென்மையாக வழி வகுத்தார்கள். இது தான் அவர்களின் ஆழ்ந்த நட்புக்கு இலக்கணமாக அமைந்தது. தங்கள் எண்ணங்களை புரிந்து கொள்ளும் உயர்ந்த உள்ளம் கொன்டவர்கள் ஆனார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்சிகளைப் பற்றி பேசுவார்கள். சின்ன மனிதர்கள் பிறரின் தவறுகளைப் பற்றியே பேசுவார்கள். சுமதியும் சைந்தவியும் அவர்கள் முன்னேற்றம் பற்றி மட்டுமே பேசினார்கள். இன்று அவர்கள் தைரியமாக இந்த உலகை எதிர்கொள்கிறார்கள் என்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் ‘உன்னால் முடியும்’ என்று ஊக்குவித்துக் கொண்டதால் தான்.





இவை எல்லாவற்றையும் சைந்தவி ராஜேஷுக்கு சொல்லி முடித்தாள். அவன் மெல்லிய குரலில் சொன்னான்.


“எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கு. சர்கஸில் கூண்டுக்குள் ஒருவன் பைக் ஒட்டுவான். அது பயிற்சியால் வந்த வெற்றி. நீங்கள் அப்படித்தான் கூண்டுக்குள் அடைபட்டு அவமானப்படுத்தப்பட்ட பின்னும் எழுந்து நிக்றீங்கன்னா...ஹாட்ஸ் ஆப்...”


“இன்நேரம் நாங்கள் போன இடம் புல் முளச்சிருக்கும் ராஜேஷ். தனித் தனியா இருந்த போது போராட முடியலை. எங்க பலகீனம் ஜெயிச்சிடுச்சு. சேர்ந்து கொண்டோம் பாருங்க....அந்த பலம் தான் எங்க வெற்றிக்கு காரணம். இனிமே யாரும் எங்களை கீழே தள்ளி


மிதித்து அவமானப்படுத்த முடியாது.” அவள் புன்னகைத்தாள். அதில் கொள்ளை அன்பு கொட்டிக் கிடந்தது.


“உண்மை தான். இப்ப பாரு உன் சிரிப்பு நீ உன்னையே நேசிக்கறதை காட்டுது. அப்படி நம்மை நாமே முதலில் லவ் பண்ணாத் தான் இந்த உலகத்தை லவ் பண்ண முடியும்...நமக்கு என்ன நடக்கிறது என்பது பத்து பெர்சென்ட் தான். மீதி தொண்ணுறு பெர்சென்ட் நாம் அதற்கு எப்படி ரீஆக்ட் பண்ணுகிறோம் என்பதில் தான் இருக்கிறது...சைந்தவி உன்னோடு மனம் விட்டுப் பேசியதில் எனக்கு நூறு யானை பலம் வந்தா மாதிரி இருக்கு. அம்மா என்னைப் பற்றி அதிகம் கவலைப் படறாங்க. அவங்களுக்கு பிறகு என் கதி என்னாகுமோன்னு கலக்கம். நான் அம்மாவுக்காக டென்ஷன் ஆகாம இருக்க கத்துக்குக்கிட்டேன்.


அன்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் போனது தால் தான் ‘ஹலோ இதோ நான் இன்னமும் இருக்கிறேன்’ என்று அந்த வியாதி தலை நீட்டிவிட்டது. சில சமயம் ஏதாவது சிந்திக்கும் போது உடல் நிலை மறந்துவிடுகிறது..”


“அதுக்குத் தான் நீங்க கல்யாணம் பண்ணிக் கொள்ளனும்னு சொல்றது. ஆண்களுக்கு பெண் கிடைப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?” என்றாள் சைந்தவி.


“கிடைக்கலாம். என் மனநிலை, என் ஊனம், என் பலவீனம் எல்லாம் தெரிந்த பெண் இருந்தாதான் பண்ணிக் கொள்ள முடியும்? இல்லாவிட்டால் அவள் கிழக்கே திரும்பி நிற்பாள் நான் மேற்கே திரும்பி நிற்பேன். பாதிப்பு எனக்குத் தான். மறுபடியும் அந்த நோய் தலை காட்டிவிட்டால் கிழிந்தது கிருஷ்ணகிரி. அப்புறம் கோர்ட் வாசல் மிதிக்கவேண்டிய டென்ஷன் வரும். எதுக்கு வம்பு? இப்படியே இருந்துவிடுவது நல்லது.” அவன் தெளிவாகப் பேசினான்.


“உங்களுக்கு அம்மா மாதிரி ஒரு பெண் கிடைக்க என் வாழ்த்துக்கள். கிடைக்கும். கிடைக்கும். நன் கூட சொல்கிறேன்...”


“பார்க்கலாம். சரி அது இருக்கட்டும். சைந்தவி உன் கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். என் அலுவலக அறைக்கு ஒரு நாள் ப்ரீயா இருக்கும் போது வரணும்...”


“என்ன விஷயம் ராஜேஷ்?”


“மிக முக்கியமான விஷயம்..கண்டிப்பாக உன்னிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கு.”





சுமதியும் சைந்தவியும் அன்று இரவு பேசிக் கொண்டிருந்தார்கள். காத்தாட மொட்டை மாடியில் தெருவை..வானத்தை...உயிரோட்டமான மனிதர்களின் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டே பேசுவது சுகமான அனுபவம் ஆகும்.


“சுமதி..நான் ராஜேஷிடம் இன்று பேசிக் கொண்டிருந்தேன். பாவம் ரொம்ப நல்லவர். அவருக்கு கல்யாணம் ஆகும் என்ற நம்பிக்கையே அவருக்கு இல்லை. அவங்க அம்மா பாவம். சாமியை வேண்டாத நாளில்லை. மகனுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு பிரார்த்தனை மேல் பிராத்தனை...அது பலிக்கணும்னு நானும் வேண்டிக்கிறேன்.”


“ஏய்..என்னடி அவ்வளவு கரிசனம்? ஏதாவது லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சா? நான் பச்சை கொடி காட்றேன்.”


“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. கண்ட கண்ட முறை கெட்ட மனுஷங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது. இவருக்கு ஏன் யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க? உடல் ஊனம் எல்லோருக்கும் தெரியுது. மன ஊனம் கொன்ட பக்கிகளுக்கு அவர்களுக்கு பணம் இருக்குங்கற ஒரே காரணத்துக்காக தெரிவதில்லை, கல்யாணம் ஆகிடுது. இது ரொம்ப அநியாயம் இல்லே...அதைத் தான் யோசிச்சேன்.”


“கண்டிப்பா இது லவ் தான் சைந்தவி உன் கன்னம் சிவக்குது.”


“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை. நீ வேற. எனக்கு கல்யாணம் கட்டிக்க ஆசையே இல்லை. பட்ட அடி இன்னும் மறந்து போகலை.


நான் அந்த அசோக் பண்ணிய துரோகத்தை மறந்துட்டேன். ஆனால் அவன் அப்படி செய்ததை நான் மன்னிக்கவேயில்லை...”


“சரி விடு. துரோகிகளை மன்னிப்பது அவங்களுக்காக இல்லை. நமக்காக. நம் உள்ளம் அமைதி பெற...சந்தோசம் என்றால் என்னன்னு அறிந்து கொண்டு வாழணும். போயும் போயும் இவர்களின் துரோகத்தை நினச்சிட்டு பழி வாங்க அழும் போது மனசும் நெருப்பாயிடும். அப்புறம் அதில் அன்புப் பூக்கள் எப்படிப் பூக்கும்?”


“சைந்தவி எங்க கல்லூரி விழா நடக்கவிருக்கிறது. நல்ல நல்ல நிகழ்சிகள் நடக்க இருக்கு. மாணவிகள் எல்லாம் சேர்ந்து என்னை ஒரு ப்ரோக்ராம் பண்ணச் சொல்லி வற்புறுத்றாங்க...”


“ஏய்..நீ நல்ல பாடுவியே. பாடிவிடு...”


“பாட வேண்டாமாம். டான்ஸ் ஆடச் சொல்றாங். முடியாதுன்னுட்டேன்.”


“நல்ல ஐடியாடி...நீ ஆடறே..”


“இல்லே. நான் ஆடலை..”


“ஆடறே..”


அங்கே வந்த ராஜேஷ் “அடடா..என்ன தகராறு?”


என்று கேட்டான். நிலவின் ஒளியில் சைந்தவியின் முகம் செந்தாமரை போல் மலர்ந்ததை சுமதி கவனித்தாள்.


எதுக்கு இவ்வளவு வெக்கப் படறா? அவளுக்கு மூன்று வருஷம் தெரிஞ்ச ராஜேஷ் தானே? இன்று என்ன புதிய வெட்கம்? சம்திங் சம்திங் என்று சுமதி எண்ணிக் கொண்டாள்.


“என்னை போய் கல்லூரி விழாவில் ஆடச் சொல்றா சைந்தவி. நீங்களே சொல்லுங்க ஒரு லெக்சரர் ஸ்டேஜில் ஆடினா நல்லாவா இருக்கும்?” என்று சுமதி சொல்லி முடிக்கவில்லை ராஜேஷ் சொன்னான். “ஏன் இருவரும் ஆடுங்களேன்..”


“அப்படி சொல்லு ராஜேஷ். பிரமாதமான ஐடியா..”


இருவரும் விழாவில் ஆடினார்கள். அதற்கப்புறம் நடந்தது கண்டு அனைவரும் ஆடிப் போனார்கள்.
 

DivDiva

New member
இன்று தான்14பகுதியயும் படித்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍
 

sankariappan

Moderator
Staff member
ரொம்ப மகிழ்ச்சிமா. உஙகள் பதில்களே எங்களுக்கு டானிக். ரொம்ப நன்றி .
 
Status
Not open for further replies.
Top