அத்தியாயம்—16
நம்பமுடியாத திருப்பங்கள் சினிமாவில் தான் வரும். நிஜ வாழ்க்கையிலும் வரும் என்று சுமதி எதிர்பார்க்கவில்லை. அங்கு குழுமியிருந்த கூட்டமும் எதிர்பார்க்கவில்லை. சைந்தவி மைக்கை வாங்கி தெளிவாகச் சொன்னாள்.
“இந்த நபரை எனக்கு முன்பே தெரியும். இவர் அசோக் என்று தான் எனக்கு அறிமுகம். எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். பிறகு இவரை நான் பார்க்கவேயில்லை. இப்பொழுது தான் பார்க்கிறேன்.
ஆனால் இதற்கிடையே நான் ஒரு ரெஸ்டோரெண்டில் இவரையும் இந்தப் பெண்ணையும் பார்த்தேன். இந்த விலாசினி அவரை மிரட்டிக் கொண்டிருந்தாள். தன் கணவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டாள். அவன் ஒரு ஜெயில் கைதி என்பதால் தன்னால் முடியாது என்று இவர் சொன்னார். அதற்கு அவள்
“நீங்க உங்க கம்பெனியில் வேலை வாங்கித் தரவில்லை என்றால் உங்க பெயரை நாரடிச்சிடுவேன்னு..” இவள் இப்படி சொல்லி மிரட்டியதை நான் என் செல்லில் வீடியோ எடுத்திருக்கேன்...” அந்த வீடியோவை பிரின்சிபாலிடம் காட்டினாள் சைந்தவி. கூட்டம் நிசப்தமாக கேட்டுக் கொண்டிருந்தது. யார் சொல்வது நிஜம்?
“ஸாரி...ஸாரி...ஸாரி மிஸ்டர் அசோக் தேவராஜன்...வெரி ஸாரி..”
அப்பெண் நழுவி ஓடப் பார்த்தாள். அவளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். தேவராஜன் என்ற அசோக் கண்ணில நன்றி நீர்.
“அந்தப் பெண் தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று அதனால் தான் வீடியோ எடுத்தேன். அது அவருக்கும் தெரியாது. நான் அங்கு வந்தது இருவருக்கும் தெரியாது. ஒரு நிரபராதியை அவமானப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தான் நான் இதை சொல்ல வந்தேன். என் பேச்சை இவ்வளவு நேரம் கேட்டதுக்கு நன்றி..” மேடையிலிருந்து விடு விடுவென்று இறங்கி வந்துவிட்டாள் சைந்தவி.
வீட்டுக்கு வந்த பின் சுமதி அவளைப் பிடித்துக் கொண்டாள்.
“அந்த கேடுகெட்டவனுக்கு போய் பரிந்து பேசினியே. உனக்கு பயித்தியமா சைந்தவி? அவன் தான் தகாத முறையில் நடந்தான் என்பது தானே நிஜம். இப்படி கவுத்திட்டியே? அவனை நீ நேசிக்கலை அவன் தான் நேசிச்சான்னு சொன்னே....உன்னை மேடையில் அவமானப்படுத்தி தற்கொலை வரை கொண்டு போனவனுக்கு எதுக்கு வக்காலத்து வாங்கறே? எனக்குப் புரியவில்லை. நான் ரொம்ப கடுப்பில் இருக்கேன்.” என்று பொரிந்து தள்ளினாள் சுமதி.
“சுமதி...பொய் குற்றச்சாட்டினால் நான் பட்ட அவமானத்தை நான் மறக்கலை. இந்தப் பெண் விலாசினி அவனை மிரட்டிக் கொண்டிருந்தது உண்மை. அந்தப் பெண் ஒரு தீவிரவாதி கும்பலைச் சேர்ந்தவள். தற்செயலாக இது எனக்குத் தெரிந்தது. முகநூல் மூலமாக இவளும் மற்ற மூன்று பேரும் மாதா கோவிலில் குண்டு வெடிக்க திட்டமிட்டிருந்தனர். அவளைப் பிடிக்க காத்திருந்தேன். போலீசிடம் தகவல் கொடுத்திட்டேன். இந்நேரம் அவளை போலிஸ் பிடிச்சிருக்கும். அவள் அசோக் தேவராஜை பழி வாங்க நினைத்துவிட்டாள். போயிட்டுப் போறான்....விடு..பிழைத்துப் போகட்டும். அவன் முழு பெயர் அசோக் தேவராஜன் என்று இன்னிக்குத்தான் தெரிஞ்சது.”
“சைந்தவி உன் பெருந்தன்மையை நினைச்சு என் மனசு நெகிழ்கிறது. உனக்கு நல்லதே நடுக்குமடி..உன்னை தோழியாக அடைஞ்சதுக்கு நான் பெருமைப்படறேன்...”
அவர்கள் கூட ராஜேஷும் இருந்தான். அவன் சைந்தவியை பாராட்டினான். “”வாழ்க்கையில் சில விஷயங்களை லெட் கோ பண்ணிவிடணும். அதைத் தான் சைந்தவி செய்திருக்கிறாள். அவள் அவனின் மானத்தை காப்பாற்றியது அவனை குற்ற உணர்வுடன் தலை குனிய செய்யும். அவனுக்கு இது தான் தண்டனை.”
“உண்மை தான் மன்னிப்பதால் நம் மனம் அமைதி பெறுகிறது. குற்ற உணர்வு அவனுக்கு ஏற்படும். இவ்வளவு நல்ல மனம் உடையவளுக்கு தான் செய்த துரோகம் எவ்வளவு பெரிசு? அவன் குறுகிப் போவான். அது தான் அவனுக்கு சரியான தண்டனை...குட் சைந்தவி நீ ஜெயிச்சிட்டே...”
அவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்ணை போலீஸ் பிடித்துவிட்டது என்ற பரபரப்பு செய்தி டி.வி யில் வந்தது. கூட்டத்தை கட்டுபடுத்தி அந்த விலாசிணியை பிடித்து கொண்டு போனதை பார்த்தார்கள்.
தேவராஜன் வீட்டுக்கு வந்தான் .“சைந்தவி.. நீ என்னை மட்டும் காப்பாத்தலை நாட்டையே காப்பாத்திட்டே. உன்னை நான் நேசிச்சதை விட நீ என்னை நேசிக்கிறேன்னு இப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன். உன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பறேன். என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்தியிருப்பே..” என்றான் பெருமிதத்துடன்.
சைந்தவி சிரித்தாள். “உங்க பெயர் என்ன என்று முதலில் சொல்லுங்கள். தேவராஜா அசோக்கா.?”
“என் முழுப் பெயர் அசோக் தேவராஜ் தான். உன்னை மேடையில் நான் அவமானப்படுத்தினேன். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொன்ட பெண்ணும் அதற்கு ஒத்துழைத்தாள். அவள் இறந்து போய்விட்டாள். பெண்ணுக்குப் பெண் செய்த துரோகம் தான் அவள் சீக்கிரம் இறந்துவிட்டாள் போலும். இப்ப நினைச்சால் எனக்கு அவமானமா இருக்கு. இவ்வளவு கீழ்த்தரமா நான் இறங்கிவிட்டேனே....ஸாரி ஸாரி சைந்தவி. அதுக்கெல்லாம் காப்பன்சேட் பண்ணத் தான் உன்னை திருமணம் செய்து கொள்ள வந்திருக்கேன்.” அவன் சொல்லி முடித்தான். அவள் சரி சொல்லிவிடுவாள் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.
“அசோக்....மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்றது தான் வாழ்க்கை. வேறு யாராயிருந்தாலும் நான் இப்படித்தான் செய்திருப்பேன். அதுக்காக உங்களை நான் காதலிக்கறதா அர்த்தம் இல்லை..”
“நீ பொய் சொல்லாதே சைந்தவி. நான் உன்னை முழு மனசோட
ஏத்துக்கிறேன்...பயப்படவேண்டாம். நீ என்னை காதலிக்காவிட்டால் இப்படி வீடியோ கூட எடுத்திருக்க மாட்டே. யூ டூ லவ் மீ.”
சுமதிக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. சைந்தவி ஒப்புக் கொண்டுவிடப் போகிறாளா? இப்பவும் ஆணவத்தில் பேசுகிறான். இவன் முழு மனசோடு ஏத்துக்கிறானாமே! சுமதி சைந்தவியை பார்த்தாள். என்ன செய்யப் போகிறாள்?
“ஒரு பாலைவனம் கிடச்சாலும் அங்கே ஒரு பூஞ்சசோலையை உருவாக்கும் மனசு மனுஷனுக்கு உண்டு. நான் அப்படித்தான் என் வாழ்க்கையை மலர வைக்க நினைக்கிறேன். உன்னை மன்னிச்சிட்டேன். அதான் உன்னை மிரட்டினவளை வீடியோ பிடிச்சதை காட்டினேன். நீயே ஒரு கைதி. கண்ணியமா வாழ்ந்திட்டிருந்த அப்பாவியான பாஸ்கரை திருடன் என்று ஜெயிலுக்கு அனுப்பினே. உன்னிடம் கடன் வாங்கிய பாவத்துக்கு நான் உன்னோடு படுத்தேன்னு மேடையிலே பொய் சொன்னே. உன் கூட நான் எப்படிடா வாழ முடியும்? இது உனக்கு நான் போட்ட பிச்சைன்னு கூடவா உனக்குத் தெரியலை? தன் வினை தன்னைச் சுடும். நீ அன்று எனக்கு செய்ததுக்கு தண்டனை இன்று உன்னை நான் காப்பாத்தினது. மன்னிக்கறது தான் பெரிய தண்டனை. ஆனால் நீ எனக்கு செய்த துரோகத்தை நான் மறக்கலை. கெட் லாஸ்ட். மேலும் நான் என் மனசுக்கு உகந்தவரை
தேர்ந்தெடுத்துட்டேன்......நோ வேக்கென்சி..”
அசோக்கின் முகம் மாறியது. “அந்த கிரேட் பர்சன்....என்னைவிட உன் மனதை கவர்ந்த அந்த பர்சன்...யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“இவர் தான்...என் மனதுக்கு இனியவர். உண்மையிலே ஹி இஸ் ஏ கிரேட் பர்சன். நானும் என் தோழி சுமதியும் அவமானப்பட்டு நின்ன போது அடைக்கலம் கொடுத்த பெரிய மனசு படைத்தவர்..”
அவள் சுட்டிக் காட்டியது ராஜேஷை.
“இவனா?...ஸாரி இவரா? ஸாரி உன் சாய்ஸ்சை மறு பரிசீலனை பண்ணிக்கோ சைந்தவி. உன் அழகுக்கு..”
“மன ஊனம் உடைய உங்களை விட இவர் பல மடங்கு அழகானவர். அழகான மூஞ்சியை விட அழகான மனசு தான் வாழ்கைக்கு தேவை மிஸ்டர் அசோக் தேவராஜ்...”
அவன் விருட்டென்று போய்விட்டான். சுமதி முகத்தில் சந்தோசம். ராஜேஷ் முகத்தில் இன்ப அதிர்ச்சி. அவன் ஓரளவு ஊகித்திருந்தான் என்றாலும் அவள் வாயால் கேட்டது மகிழ்ச்சி அளித்தது.
ரவிச்சந்திரனின் முகத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுமதி. கடற்கரை. அவள் கையில் அவன் அவள் பிறந்த நாளுக்கு பரிசாகத் தந்த பட்டு புடவை இருந்தது. அவன் முகத்தில் சந்தோசம்.
“சுமதி..உன்னை சந்தேகப்பட்டது என் முட்டாள் தனம் தான். ஸாரி. நீ இன்னும் என்னை நினைச்சிட்டிருக்கே. என் பாக்கியம். உனக்குத் தெரியுமா நான் உன்னைத் தேடி எப்படியாவது உன்னை கைபிடிக்கனும்னு கங்கணம் கட்டியிருந்தேன். அதுக்காக என் அம்மாவை விட்டு வந்திட்டேன். ராஜரத்தினம் என்னை தத்து எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டதும் சரி என்று வந்துவிட்டேன். இன்னொரு விஷயம் தெரியுமா? சைந்தவியும் நீயும் ஒன்னா வாழ்ந்திட்டிருக்கறதை கண்டு பிடிச்சேன். சைந்தவியிடம் பழகி உன்னிடம் என் மன மாற்றத்தை சொல்லி உன்னை மணக்கலாம்னு நினச்சேன். அதனாலே அவளை என் கூட லஞ்ச் சாப்பிட வைத்தேன். நான் அவளிடம் எல்லாம் சொல்வதற்குள் இப்படி நடந்துவிட்டது. போனது போகட்டும், இனிமே நாம் கல்யாணம் செய்து கொள்ள தடையில்லை...”
“உங்க காதலை என்னென்பது? தாஜ்மஹால் தான் கட்டணும்.”
அவள் குரலில் ஏளனம் இருப்பது கண்டு அவன் விழித்தான்.
“பிரதாப் என்ற ரவிச்சந்திரன் அவர்களே...உங்க உள் நோக்கம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம். சைந்தவி உங்க அம்மாவைப் போய் பார்த்திட்டு தான் வந்திருக்கா. பெத்த தாயை விட்டிட்டு கேவலம் ராஜரத்தினத்தின் செல்வாக்குக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தத்து மகனா போக முடிவு பண்ணிட்டே இல்லே? உன் அம்மா அழுதிட்டு இருக்காங்க. முதல்லே போய் அவங்களோடு சேரு. அப்ப தான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும். உன் காதலெல்லாம் வெறும் இன்பாக்சுவேஷன்...உன் மேலே உயிரையே வச்சிருந்த என் மேலே கொஞ்சம் கூட கவலைப்படாமே கெட்டுப் போனதாவும், நான் அபார்ஷன் பண்ணிக்கிட்டதாவும் சொன்னியே...அதை கூட மன்னிக்கலாம்ன்னு வச்சுக்கிட்டாலும்..உன் தாயை பரிதவிக்கவிட்டு வேறு குடும்பத்தை ஏத்துக்கிட்டு வந்திட்டியே நீயெல்லாம் ஒரு மனுஷனா? மிஸ்டர் உங்க பட்டுப் புடவை போக வேண்டிய இடம்...”
அந்தப் புடவையை கடலில் தூக்கி எறிந்தாள். “இதோடு உன் நினைவுகளையும் தூக்கி எறிஞ்சிட்டேன்” என்று விட்டு கம்பீரமாக நடந்தாள்.
“நினச்சேன்...நீ தான் அந்தஸ்துக்கும் செல்வாக்குக்கும் ஆசைப்பட்டு அந்த ஊனமுற்ற ராஜரத்தினம் மகன் அருணை கல்யாணம் பண்ணிக் சம்மதிச்சிட்டியாமே...உன் வண்டவாளம் தெரியாதா?” அவன் கேலி பண்ணி சொல்லியது கேட்டு அவள் சொன்னாள்.
“உன்னை மாதிரி ஊனமுற்ற மனமுடயவனை கல்யாணம் பண்ணிக் கொள்வதைவிட அவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது மேல். இனிமே இந்த மாதிரி பச்சோந்தியா இல்லாம போய் உன் அம்மா கூட சேர். ராஜரத்தினம் சார் நாளைக்கு நீ போனால் உன்னை துரத்திவிட காத்திட்டிருக்கார்...”
பிரதாப் தான் தோத்துப் போய்விட்டதை உணர்ந்தான்.
“ஒ..அப்படியா? நீ ரொம்ப ஒழுங்கோ? உன் அம்மாவை பரிதவிக்கவிட்டு அத்தையை அம்மான்னு சொல்லிட்டு திரிஞ்சியே. நீ செஞ்சா அது நியாயம். நான் செஞ்சா அது அநியாயம்..பேஷ்..”
“உன் அம்மா உன்னை இருபத்தி ஐந்து வருஷம் பாசத்தோட வளர்த்தாங்க. உனக்காகவே வாழ்றாங்க. சொத்துக்காக நீ அவங்களை விட்டதும்....நான் என் அம்மாவை குழந்தையிலிருந்தே பிரிந்ததும் ஒன்னாகுமா? என் அத்தை செய்த சதிக்கு நான் என்ன செய்ய முடியும்?. வீட்டை அவங்க கேட்டவுடன் அவங்க பேர்ல எழுதிக் கொடுத்திட்டேன். என் பாங்க பாலன்சை எடுத்திட்டுப் போனாங்க. நான் விட்டிட்டேன். எங்கோ நல்லபடியா இருக்கட்டும்னு நன்றிக் கடன்பட்டு சும்மா இருந்தேன். மேலே பேசாமே உன் மரியாதையை காப்பாத்திட்டு போயிடு. இதுவே நான் உன்னை கடைசியா பார்த்தா இருக்கட்டும். உன் அம்மாவின் கண்ணீரில் நீ பெரிய வி.ஐ.பி யா வாழ ஆசப்படறியே....ஸாரி பிரதாப்..என்னை மறுபடியும் திராட்டிலே விடமாட்டேன்னு என்ன நிச்சயம்?”
சுமதி எங்கோ போய்விட்டாள். தியாகம், நேர்மை, நியாயம் எனும் மூன்று குனங்களின் சங்கமமாக இருக்கிறாள். பிரதாப்பால் அவளை எட்டி விட முடியுமா? இமயமலையை தொட காத்தாடியால் முடியுமா? வானத்தில் கூட பறக்க முடியாமல் அது தரையில் கிழிந்து விழுந்தது. பிரதாப்புக்கு பேச என்ன இருக்கிறது?
சுமதி அம்மாவின் காலில் விழுந்து வணங்கினாள்.
“ராஜேஷ்..உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. அம்மாவை அலட்சிய படுத்தியது தான் நான் செய்த மிகப் பெரிய தப்பு. அதான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிச்சேன். என்னை மன்னிச்சிடும்மா. நீ எவ்வளவோ தரம் உண்மையை சொல்ல வந்தே நான் தான் அவங்க இரண்டு பேர் பேச்சைக் கேட்டுக்கிட்டு...”
லக்ஷ்மி மகளை அனைத்துக் கொண்டாள்.
“உன் மேல் தப்பில்லை கண்ணே. மூணு மாசக் குழந்தையாக உன்னை பிடுங்கிக் கொண்டு போய் வச்சுக்கிட்டாங்க. என்னைப் பற்றி அவதூறு சொல்லி சொல்லியே பிரிச்சிட்டாங்க. இந்தத் தம்பியிடம் கடவுள் என்னைக் கொண்டு வந்து சேர்த்தார். எனக்கு என் மகள் கிடைச்சிட்டா. உன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை.”
லக்ஷ்மிக்கு அந்த கொடூர நாள் நினைவுக்கு வந்தது. குழந்தை சுமதிக்கு பால் கொடுத்துவிட்டு அவள் வேறு உடை மாற்ற உள்ளே போனாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை வசந்தா எடுத்துக் கொண்டு ஓடியதை லக்ஷ்மி பாத்ரூம் ஜன்னல் வழியே பார்த்தாள். அவள் குளிக்காமல் புடவையை கட்டாமல் உள் பாவாடையை மார்பின் மேல் கட்டிக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். குழந்தையை மீட்க நினைத்தபோது கணவன் வாசு உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். பால்காரன் கோவிந்து பால் கணக்கு பார்த்து வைத்துக் கொண்டு காசு வாங்க லக்ஷ்மிக்காக காத்திருக்கிறான். அவன் வந்திருப்பது அவளுக்குத் தெரியாது. அந்த நேரம் லக்ஷ்மி உள் பாவாடையை மேலோடு கட்டிக் கொண்டு வந்ததை பார்த்து இருவரும் திடுக்கிட்டனர். அப்புறம் சொல்ல என்ன இருக்கிறது? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இவள் விளக்கங்களை அவள் கணவன் கேட்கவில்லை. பால்காரனையும் அவளையும் இணைத்துப் பேசினான் வாசு. வசந்தா தூபம் போட குழந்தை சுமதியை தகாத முறையில் பெற்றுக் கொண்டாள் என்று கத்தினான். மறு நாள் தூக்கு போட்டுக் கொண்டு செத்தான். வசந்தாவுக்கு இது நல்ல சாக்காக இருந்தது. நேரம் பார்த்து பால்காரனை அனுப்பி வைத்தது அவள் தான். சுமதியிடம் அவள் தாய்யைப் பற்றி திரித்து சொல்லி குழந்தையிலிருந்தே அவள் மனசை விஷமாக்கினாள்.
அவளுக்கு குழந்தை இல்லை. பொம்மை போல் அழகாக இருந்த சுமதியை திருடிக் கொண்டு வந்து விட்டாள். பாசத்தோடு வளர்த்தாளா இல்லையா என்று தெரியவில்லை. அம்மாவின் வீடு சுமதிக்கு போய்விட்டது என்றவுடன் ஆத்திரம் அடைந்தாள். வீட்டை நைசாக எழுதி வாங்கிக் கொண்டாள். எங்கே அவள் யார் சொல்லியாவது வீட்டை கேட்டு கேஸ் போட்டுவிடுவாளோ என்று பயந்து அவள் மேல் அபாண்ட பழி சுமத்தி வீட்டை விற்றுவிட்டு ஒடிவிட்டாள். ராஜேஷிடம் லக்ஷ்மி இதெல்லாம் சொல்லி அழதாள். அலுவலகத்தில் ஒரு அறை இருந்தது ராஜேஷுக்கு. அதில் லக்ஷ்மி அம்மாளை தங்க வைத்தான். கண்டிப்பாக அவளை அவள் மகளிடம் சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுத்தான். இதோ சேர்த்துவிட்டான்.
“அம்மா..என்னை மன்னிச்சிடும்மா..” என்று நூறு முறை சொல்லிவிட்டாள் சுமதி. லக்ஷ்மி மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “சரிம்மா...இப்பவாது நீ கிடச்சியே..இந்த பாவிகள் நிறைந்த உலகத்தில் இவ்வளவு அப்பாவியாக இருந்தியே. அது தான் உன் தப்பு. எல்லாம் மறந்துவிடு. நான் இருக்கேனில்லே ”
அங்கே யாரோ பூக்களை தூவி ஆசீர்வதித்து போல் சூழ்நிலையே மலர்ந்தது. இது தான் சொர்க்கம் என்று சுமதி உணர்ந்தாள்.
அமெரிக்கா சென்று ஓரளவு குணமடைந்து வந்தான் அருண். வீல் ஷேர் வாழ்க்கை இல்லை. ஓரளவு கைபிடியை வைத்துக் கொண்டு அவனால் நடக்க முடிந்தது. ராஜரத்தினதுக்கு அவ்வளவு சந்தோசம்.
“ரொம்ப நன்றி சைந்தவி. இந்த பிராட் ரவிச்சந்திரனை எனக்கு அடையாளம் காட்டியதுக்கு. அப்புறம் உன் தோழி சுமதி அருணை கல்யாணம் பண்ண சம்மதிச்சதுக்கு. நான் ரெண்டு கல்யாணத்தையும் ஜாம் ஜாம் என்று நடத்தப் போகிறேன்...”
சைந்தவி செய்த தப்பு அசோக்கை நம்பி அவனிடம் பணம் வாங்கியது. “அதுக்கு நல்ல அனுபவிசிட்டேன்.” என்றாள் சைந்தவி ராஜேஷிடம். சுமதி செய்த தவறு பெத்த தாயை அலட்சியப்படுத்தியது
“என்னதான் அம்மாவைப் பற்றி அவர்கள் தவறாக பேசினாலும் அதை நம்பியிருக்கக் கூடாது. நான் செய்த தவறு அது தான். அதுக்கு நல்லா அனுபவிச்சிட்டேன்.’
“இனிமேல் சந்தோஷமாக வாழப் போறீங்க...அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு..குழந்தைகளா இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று சைந்தவியையும் சுமதியையும் அனைத்துக் கொண்டாள் கமலம், ராஜேஷின் அம்மா.
இருவரின் கல்யாணமும் பிரமாதமாக நடந்தது. அவர்கள் வாழ்க்கை புதிய அழகுடன் பூத்துக் குலுங்கியது. ஆற்று நீர் ஓரிடத்தில் நிற்பதில்லை. ஓடிக் கொண்டே இருக்கும். வாழ்கையும்
அப்படித்தான். யாருக்காகவும் காத்திருக்காது....ஓடும் நீரலைகள் போல் மனிதர்கள் தங்கள் சுக துக்கங்களோடு ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். நீரலைகள் நிலவில் வெள்ளிக் கம்பிகள் போல் இருக்கிறது. சூரிய ஒளியில் தங்கக் கம்பிகள் போல் இருக்கிறது. மர நிழல் அடியில் ஓடும் நீரலைகள் இருண்டு காணப்படும்.
“நாம இப்போ சூரிய ரேகைகள் பட்ட நீரலைகள் போல் அழகுற மினுமினுக்கிறோம்...இதயத்தில் வெளிச்சம் இருந்து கொண்டிருக்கும் வரை நமக்கு தங்க கம்பியான நீரலைகளின் தன்மை தான் இருக்கும்.” சுமதி சைந்தவியிடம் சொல்ல
“யூ ஆர் ரைட் மை டியர்..” என்று ராஜேஷும் அருணும் சொன்னார்கள். பாலைவன வாழ்க்கை நந்தவனம் ஆயிற்று.