கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம் ...அத்தியாயம் 2

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
அத்தியாயம்---2



அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சைந்தவிக்கு வேலை சரியாக இருந்தது. இந்த மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்ததே சுமதி தான். அன்று அவர்கள் இருவரும் நனைந்த உடையுடன். மாற்று உடையின்றி மணல் அப்பிய மேனியுடன் மணல்வெளி தாண்டி பீச் ரோடின் பிளாட்பாரத்தின் ஆரம்பத்தில் இருக்கும் காந்தி சிலைக்கு அடியில் வந்து அமர்ந்தார்கள். இரவு முழுக்க அங்கேயே கிடந்தார்கள். அதிகாலை சூரியனின் முதல் ஒளி பட்டதும் விழித்துக் கொண்டார்கள். உடை காய்ந்து விட்டிருந்தது. இருவருக்கும் மேலே என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“சுமதி...இப்போ வேலை தேட வேண்டியது தான் நம் முதல் வேலை.”

“எனக்கு வேலை இருக்கிறது சைந்தவி. நான் பள்ளிக்குச் சென்றால் போதும் வேலையை தொடரலாம். என் உடைகள்...பாங்க பாஸ் புக் எல்லாம் அம்மாவும் சித்தியும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.”

“அப்படியா? அம்மாவுமா? நம்பவே முடியலையே. அப்படி என்ன தான் பிச்சனை.?”

“சொல்றேன்..அதுக்கு இப்ப என்ன அவசரம்? பாங்கியிலிருந்து என் பணத்தை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அது எனக்கும் அம்மாவுக்குமான ஜாயின்ட் அக்கௌன்ட். சைந்தவி. நாம இப்ப பாப்பர்...என்னோட செயினை விற்று பணம் வாங்கி...முதலில் ஒரு வீடு பார்க்க வேண்டும்..” கிளம்பினார்கள். முடிந்தவரை முடியை கோதிவிட்டு பின்னிக் கொண்டார்கள். உடையை கையால் நீவிக் கொண்டு செருப்பில்லாத காலோடு நடந்தார்கள். நேரம் போகப் போக வெளிச்சம் ஏற ஏற பலரின் பார்வை அவர்களை மொய்த்தது. அதை முடிந்தவரை அலட்சியப்படுதிவிட்டு நடந்தார்கள்.



அடகுக் கடையில் செயினை கழற்றிக் கொடுத்தாள் சுமதி. எடை பார்த்தான். ஆறு பவுன் இருந்தது. அடகு வைக்கவென்றால் இரண்டு லட்சம் தருவதாக சொன்னான். ரொம்ப குறைவு என்று சுமதிக்குத் தோன்றியது என்றாலும் வாய் பேசாமல் படிவங்களில் கையெழுத்து போட்டு தன் பழைய வீட்டின் அட்ரெஸ் எழுதிக் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு வெளி வந்தார்கள். அப்பாடா....பணம் கையில் இருப்பது ஒரு தெம்பை தந்தது. ஒரு லாட்ஜில் ரூம் போட்டார்கள். குளித்து சாப்பிட்டு எழுந்ததும் மனசுக்கு இதமாக இருந்தது. அதே உடையைத்தான் அணிய வேண்டியிருந்தது.

“சுமதி நீ யாரோ..நான் யாரோ...உன் துணை இல்லேன்னா நான் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன்....எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை..” கண் கலங்கினாள்.

“சும்மா இரு..இத போய் பெரிசா சொல்லிக்கிட்டு. எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ. உறவுகள் கைவிட்டதும் என்னால் தாங்க முடியலை. இனி வாழவே முடியாதுன்னு பயந்திட்டேன். நல்ல வேளை நீ வந்தே.” அவள் சைந்தவியை கட்டிக் கொண்டாள்.

“சுமதி முதல்லே நாம டிரஸ் எடுத்துப்போம்...’

“ஆமா..பிறகு நாம் வீடு பார்க்கும் வேட்டையை ஆரம்பிக்க வேண்டியது தான்.”

இருவரும் ரங்கநாதன் தெரு துணிக் கடைகளில் ஏறி இறங்கினார்கள். ஆளுக்கு ஆறு ஆறு செட் சூடிதார்கள்....உள்ளாடைகள் வாங்கிக் கொண்டார்கள். .புதிய உடையை உடுத்திக் கொண்டு வீடு வேட்டைக்கு கிளம்பினார்கள்.



ஒரு வாரம் சுற்றி திரிந்ததில், வீடு ஒன்று சூளை மேட்டில் அமைந்தது. சிறிய அடுக்குமாடி குடியிருப்பு. இரண்டு படுக்கை அறை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு பத்து பன்னிரண்டு நிமிடத்தில் நடந்தே வந்து விடலாம்.

“ஹே...வீடு கிடைச்சாச்சு....ஜாலி. புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்...”என்று பாடினாள் சைந்தவி. இரண்டு சிட்டுக் குருவிகள் போல் அவர்கள் கலகலத்து சிரித்துப் பேசினார்கள். நாலு வீடுகள் கொன்ட குடியிருப்பு. கீழ் வீட்டார் இருவருக்கும் பின்னால் சிறிய தோட்டம் இருந்தது. அங்கு அவர்கள் துணிகளை காயப் போடுவது...துணி துவைப்பது என்று புழங்கிக் கொள்ளலாம். மேல் வீட்டில் ஒரு மொட்டை மாடி இருந்தது. இரு வீட்டவரும் துணிகள் காயப் போட்டுக் கொள்ளலாம். அன்று அந்த மொட்டை மாடியில் படுத்துக் கொண்டார்கள் இருவரும். கடைகள் எல்லாம் பக்கத்திலேயே இருந்ததால் தலையணை..போர்வை என்று வாங்கி இருந்தார்கள். தனிக் குடித்தனம் கண ஜோராக இருந்தது.

“சைந்தவி நாளை நாம் பாத்திரங்கள் வாங்கிக் கொள்ளலாம். எதிர் வீட்டு அம்மாள் கனகம் காஸ் தரேன்னு சொன்னாங்க.”

“ஆமா...அவங்க மகனோட காஸ் சிலிண்டர் இரண்டு இருக்காம். அவங்க வெளிநாடு போயிட்டாங்களாம். நாம யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க...செம லக் இல்லே?’

“வாழ்க்கையிலே தான் நமக்கு லக் இல்லே. வாழ்ற இடம் கிடைத்த லக்காவது நமக்கு இருக்கே... என்ன சொல்றே சைந்தவி.”

“நான் ரொம்ப ரொம்ப லக்கி சுமதி. ஓசியிலே எனக்கு எவ்வளவு நல்லது நடந்திருக்கு.? நான் இத ஒரு நாளும் மறக்கவே மாட்டேன் சுமதி. நான் பட்ட அவமானங்கள் எல்லாம் ஓடியே போச்சு...எனக்கு வாழணும்னு ஆசை வந்திடுச்சு...வாழ நினைத்தால் வாழலாம்..” யாரும் இல்லை என்ற தைரியத்தில் பாடினாள் சைந்தவி.

“இப்படி கழுதை மாதிரி கத்தினா மனுஷன் எப்படி தூங்கறது? இந்த மாடி உங்களுக்கு மட்டும் சொந்தம்ன்னு நினைப்பா.?” ஒரு இளைஞனின் குரல் கேட்டது. படுத்திருந்த சைந்தவி எழுந்து உட்கார்ந்தாள். “மொட்டை மாடி எங்களுக்கு மட்டும் சொந்தமில்லேன்னு எங்களுக்கும் தெரியும். ஆனால் குரல் எங்களுக்கு சொந்தம். பாடுவோம் கழுதை போல கத்துவோம். நாய் போல குறைப்போம். உங்களுக்கு என்ன மிஸ்டர்? கம்முன்னு போங்க.” சுமதி அவளை அடக்கினாள்.

“ஸாரி சார்...நாங்க கிழே போயிடறோம்...ஏய் வா போகலாம்.”

“முடியாது. இந்தாள் அந்த மூலையில் படுக்கட்டும். நாம இங்க படுத்துக்கலாம். உள்ளே ஒரே புழுக்கம் சுமதி. மின்விசிறி இன்னும் வாங்கலை. புழுங்கி செத்திடுவோம். படு பேசாமே...”

“வெக்கமா இல்லை. ஒரு ஆம்பளை படுக்கும் இடத்தில வந்து தடி மாடு மாதிரி படுக்றீங்க..” என்றான்.

“டேய்...அவ்வளவு தான் உனக்கு மரியாதை. போடா இடியட். இங்கே தான் படுப்போம். நீ கீழே போ. உனக்குத் தான் மின்விசிறி இருக்கே.”

“திமிர் பிடித்த பெண்கள்...ஸாரி பேய்கள்...நாளைக்கு வச்சுக்கிறேன்..”

அவன் தன் பாயை சுருட்டிக் கொண்டு போனான்.

“யாரை...” என்று சைந்தவி கேட்டது நல்ல வேளை அவன் காதில் விழவில்லை. இருவரும் சிரித்தார்கள்.

“அவன் காதில் விழுந்திருந்தால் எவ்வளவு அசிங்கமா போயிருக்கும்? கொஞ்சம் சும்மா இரேன். சரியான வாயாடியா இருப்பே போலிருக்கே ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது மாதிரி அவனை விரட்டிட்டோம். யாருடி அவன்?”

“அவன் அந்த கனகதம்மாளின் இரண்டாவது மகன். அவன் மூஞ்சியை சரியா பார்க்கலையே. நீ பார்த்தே? ஜோரா இருந்தானா? இல்லே சொங்கியா? சரி போகட்டும். எப்படி நிலா அடிக்குது பார்! ஆகா..’நிலாக் காயிது...நேரம் நல்ல நேரம்..”

“ஷ்....நீ பி.சுசிலா இல்லை. கண்டசாலா. கொஞ்சம் பாடறத நிறுத்து. அவன் ஓடியதில் நியாயம் இருக்கு. தமாஷ் பண்றேன்னு அவனோட வம்பு வச்சுக்காதே சைந்தவி. நாம் இருபது வயது பெண்கள். கொஞ்சம் அடக்கம் தேவை..”

கடகடவென்று சிரித்தாள் சைந்தவி...”எந்த நூற்றாண்டில் இருக்கே சுமதி? அவன் தான் நம்மை கண்டு பயந்து ஓடிட்டான்.”

“இவ்வளவு துடிப்புள்ள நீ சாகப் பார்த்தியே? முட்டாள்..”

“இவ்வளவு விவேகம் உள்ள நீ சாகப் பார்த்தியே முட்டாள்...” இருவரும் சிரித்தார்கள். காற்று அவர்களை வருடிச் சென்றது.



எட்டாண்டுகள் முந்தி நடந்த இந்த சம்பவத்தை நினைத்து சிரித்தாள் சைந்தவி. அவளோட பாஸ் அவளை ஏறிட்டார்.

“உனக்கு நான் நோட்ஸ் எடுக்கத் தான் டிக்டேட் பண்ணிண்டிருக்கேன். சிரிக்க சொல்லி டிக்டேட் பண்ணலை...” என்றார் கடுமையாக.

“ஸாரி சார்...ஏதோ நினைவுகள்...சொல்லுங்க சார்..”

“போதும்..இன்று இது ஒண்ணு தான். ஆமா உன் கிட்டே நான் சொன்னேனே. அது பத்தி நீ யோசிச்சியா.?”

“எது? உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா.?”

“ஏன்..உனக்கு கசக்குதோ.? நாலு வீடு. இரண்டு கோடி பேங்க் பாலன்ஸ். ஒரு எஸ்டேட். ராணி மாதிரி இருக்கலாம்..தினம் ஒரு நகை அணியலாம். தினம் ஒரு டிராமா பார்க்கலாம்...”

“சேடி மாதிரி இருக்கலாம். சார்.....அவர் அடிபட்டு வீல் சேரில் கிடக்கார். இந்த பணத்தை வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய? எனக்கு வேணும் வாழ்க்கை. கேளிக்கை இல்லை.”

“என்ன செய்ய? யாருக்கும் இரக்கமில்லை. என் பையன் வாழ்வில் விளக்கேத்த யார் வருவாளோ?” அவர் கண்ணில் நீர்.

“ஸாரி சார். நான் எந்த ஆணையும் நம்பவில்லை. வாழ்க்கையில் அடிப்பட்டவள். எனக்கு கல்யாண ஆசையே இல்லை...”

“இட்ஸ் ஒ.கே பேபி. ஏதோ நப்பாசை. கேட்டேன். நீ தப்பா நினைக்காதே. ஒ. கே உன் வேலையைப் பார்.”

“எஸ் பாஸ்...” ராஜரத்தினம் பெருமூச்சு விட்டார். ஒரே மகனுக்கு நேர்ந்த கதியை அவரால் ஜிரணிக்க முடியவில்லை.



வேலை முடிந்து சுமதி பள்ளியை விட்டு கிளம்பினாள். தலைமை ஆசிரியை அவளை பார்க்க விரும்புவதாக ப்யூன் மாணிக்கம் வந்து சொன்னான். “டீச்சர்..உங்களை ராஜேஸ்வரி அம்மா பார்க்கணும்னு கூட்டி வரச் சொன்னங்க. அவங்க உங்களுக்காக காத்திட்டிருக்காங்க”. பியூனுடன் சுமதி நடந்து போனாள். தலைமை ஆசிரியை முன் நின்றாள். ராஜேஸ்வரி சற்று பருமன். சுமார் ஐம்பது வயது இருக்கலாம். நரையே இல்லாத சுருள் முடி. அவளுக்கு இருப்பது போல. பிரதாப் எப்போதும் சொல்வான் சுமதி உன் முடி அழகே அழகு...அலை அலையாக கடல் அலை மாதிரி...உன் நெற்றியில் விளையாடும் குட்டி குட்டி சுருள்கள் ஒவ்வொன்றுக்கும் முத்தம் குடுக்கணும் போல இருக்கு...அய்யே என்று அவள் முகம் சிவப்பாள்.

“என்ன யோசனை சுமதி? உன்னை உட்காரச் சொன்னேன். இரண்டு முறை சொல்லிட்டேன்...”

“ஸாரி மேடம்...ஏதோ யோசனை. சொல்லுங்க..”

“நீ எம்.எட் முடிச்சிட்டே. ரொம்ப சந்தோசம் சுமதி. நாங்க கல்லூரி ஆரம்பிச்சிருக்கோம் தெரியுமில்லையா? இரண்டு வருஷம் ஆறது.”

“தெரியும் மேடம். என் சிநேகிதிகளின் தங்கைகள் நிறைய பேர் அங்கு சேர்ந்திருக்கிறார்கள். ரொம்ப நல்ல பெயர் வாங்கி இருக்கு உங்க

செந்தமிழ் கல்லூரி” என்றாள் சுமதி.

“ஆமா...நீ தமிழ் கற்பிக்க அங்கு போக முடியுமா? ஏன் சொல்றேனா உன்னாலே எம்.ஏ மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும். அந்த தகுதி உனக்கு இருக்கு. எதுக்கு நீ இந்த சின்னப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கே? அதுக்கு யார் வேணா கிடைப்பாங்க. பல்கலைக்கழக லெவலுக்கு சொல்லித் தர திறமையானவங்க வேணும். நீ இங்கு எட்டு வருடமா இருக்கே. உன் திறமை பத்தி எனக்கு நல்ல தெரியும். அதான் உன்னை நியமிக்கலாம்னு நினைக்கிறேன். சம்பளமும் அறுபதாயிரத்துக்கு குறையாது. என்ன சொல்றே நீ?”

சுமதி இதை எதிர்பார்க்கவில்லை. விழித்தாள்.

“யூ ஆர் அப்பாயின்டட்...” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்த இளைஞனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சுமதி.

 
Status
Not open for further replies.
Top