கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 4

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
அத்தியாயம் 4


சுமதியின் வீறிட்ட குரல் கேட்டு அந்த வளாகமே கூடி விட்டது. அங்கே சைந்தவி கண்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்தது. இடி வந்து தாக்கியது போல் ஸ்தமித்து நின்றாள்.


“தள்ளுங்க தள்ளுங்க காற்று வரட்டும். ராஜேஷ்..ராஜேஷ்...என்னப்பா ஆச்சு? யாராவது அவன் கையில் சாவி கொடுங்களேன்..”


ஆளாளுக்கு பெரியவர்கள் சிலர் ராஜேஷின் வலிப்பு நிலையை கண்டு பதறி நின்றனர். மெல்ல மெல்ல அவன் தன்னிலை அடைந்தான். அவன் முகம் வேர்த்துவிட்டது. பலகீனமாக இருந்தான். எழுந்து கொள்ள முடியவில்லை. வீட்டுக் கதவை அப்பவே திறந்திவிட்டிருந்தாள் சுமதி. அப்படியே அவனை அலக்காக தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்தினார் கீழ் வீட்டு ஆஜானு பாகுவான மனிதர் சுந்தரேசன். மின் விசிறியை போட்டார். “தண்ணீ கொண்டு வாங்க..” சுமதி ஓடிப் போய் எடுத்து வந்தாள். அவனுக்கு மெல் குடிக்க கொடுத்தார்கள். அவன் சிறிது குடித்துவிட்டு போதும் என்றான். அந்த நேரம் கனகம் வந்தாள். நிலைமையை பார்த்துவிட்டு அழத் தொடங்கினாள். அதற்குள் யாரோ டாக்டரை வரவழைக்க அவர் பார்த்துவிட்டு “பயப்பட ஒண்ணுமில்லை. அவர் இதற்குரிய மாத்திரை எடுதுக்கலையா?” என்று கேட்டார். அவன் மெதுவாகப் பேசினான்.


“மறந்து விட்டது...எலெக்ட்ரிக் பில் கட்டிட்டு. போன் பில் கட்டிட்டு..


மதியம் ஹோடேலில் சாப்பிட்டேன். அப்பவே ஒரு மாதிரி இருந்தது.


மாத்திரையை எடுத்துக்க மறந்து விட்டது அப்ப தான் ஞாபகம் வந்தது. டாக்டரை பார்த்திட்டு வரலாம்னு போனேன். கிளினிக் திறக்கலை. வெயிட் பண்ணினேன். இப்ப வருவாங்க இப்ப வருவாங்கன்னு காத்திட்டு இருந்தேன். அவர் வரலை கிளம்பி வந்திட்டேன். வீட்டில் வந்து பார்த்தால் வீடு பூட்டி இருந்தது...”


அவனுக்கு மூச்சு வாங்கியது. கனகம் புலம்பினாள்.


“அய்யோ..நான் இன்று பார்த்து கோவிலில் ரொம்ப நேரம் இருந்திட்டேனே...அவனுக்கு டென்ஷன் ஆகிவிட்டது. மாத்திரையும் சாப்பிடலை...அதான் இப்படி ஆயிடுச்சு..”


டாக்டர் பீஸ் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.


சுற்றி நின்றவர்கள். பலவிதமான அட்வைஸ் கொடுத்தனர்.


“ரொம்ப நன்றிங்க. நீங்க எல்லோரும் இல்லாட்டி என்ன ஆகி இருக்குமோ?” கண் கலங்கி கை கூப்பினாள் கனகம்.


“என்னம்மா நீங்க....இதுக்கெல்லாம் போய் நன்றி அது இதுன்னு சொல்லிக்கிட்டு. இது கூட உதவி செய்யலைன்னா அப்புறம் மனுஷனா பிறந்ததுக்கு என்ன பிரயோசனம்..வரோம்மா. பார்த்துக்கோங்க. தம்பி மாத்திரையை மறக்காம போட்டுக்கோப்பா. ஜோபியிலேயே இரண்டு எப்பவும் போட்டு வச்சுக்கோ..”


சொல்லிய சுந்தரேசன்...ராஜேஷை தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினார்.





எல்லோரும் போனதும் சைந்தவி “ஆன்ட்டி..என்னை மன்னிச்சிடுங்க.”


என்று கனகம் காலில் விழுந்தாள். கனகம் வியப்புடன்


“நீ ஏன் என் காலில் விழணும்மா? அவனுக்கு இந்த வியாதி அவங்க அப்பா இறந்த போதே வந்திடுதும்மா. எல்லாம் கிரகம். உணர்ச்சி வசப்பட்டா இப்படி ஆயிடும். அதான் அவனை கோபப்படாம பார்த்துக்கிறேன். மாத்திரையும் ஒழுங்கா சாப்பிட வச்சசிட்டிருக்கேன்.”


அவள் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் படர்ந்தது. நெடுநாள் சோகம் இது என்று சுமதிக்குப் பட்டது.


“ஆன்ட்டி...அவர் வந்ததும் சாவியை கொடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என்னவோ? கொஞ்சம் டிலே ஆயிடுச்சு..அதான் எங்களுக்கு குற்ற உணர்வா இருக்கு..” என்று பயந்து கொண்டே சொன்னாள் சுமதி. நன்றாக திட்டப் போகிறாள் என்று நடுங்கினாள்.


அழது கொண்டிருந்தாள் சைந்தவி.


“பொண்டுகளா...இதுக்கு நீங்க என்ன செய்வீங்க.? சும்மா இருங்க. நீங்களும் என் புள்ளைங்க மாதிரி. நீங்க இங்கே வந்த நாளிலிருந்து அடக்க ஒடுக்கமா இருக்கீங்க. எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை. இந்தக் காலத்து பொண்ணுகள் மாதிரியா நடந்துக்கிறீங்க?. யாரு பெத்த புள்ளைகளோ....தனியா இருக்கேங்க. நாம தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. சரி சாப்பிடுதீகளா? சப்பாத்தி பண்றேன்.”


சைந்தவியும் சுமதியும் நெகிழ்ந்து போனார்கள். இன்று இந்த நெருக்கம் அவர்களுக்கு மனிதர்களில் நல்லவர்களும்..ரொம்ப நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று புரிய வைத்தது.. கனகம் சப்பாத்தி செய்ய எழுந்து போனாள்.


“ஸாரி ராஜேஷ். நாங்க உடனே வந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது.” இருவரும் சேர்ந்தே சொன்னார்கள். ராஜேஷ் சிரித்தான். “குண்டு பிசாசுகளா...உங்களுக்கு இருக்கு. வச்சுகிறேன்.”


“யாரை?..” என்று சைந்தவி கிண்டல் அடித்தாள்.


“ரண்டு பேரையும்...”


“ஒஒஒ...ஆசை தான்...”


கனகம் வர அவர்கள் வாயை பொத்திக் கொண்டார்கள்.


கனகம் வற்புறுத்த ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு


“ராஜேஷ் குட்நைட்..” என்று சொல்லி தங்கள் வீட்டுக்கு ஓடினார்கள்.





சுமதியும் சைந்தவியும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கண்ணீர் துளிர்க்க நின்றாகள். “கனகம் ஆன்ட்டி...அம்மா மாதிரி பேசறாங்க இல்லே.? இவ்ளோ அன்பை நான் அனுபவிச்சதே இல்லே. ராஜேஷ் தங்கமடி...” சைந்தவி சொல்ல. சுமதி ஆமோதித்தாள். அன்று இரவு அவர்கள் என்றுமில்லாத அமைதியுடன் உறங்கினார்கள்.





அலுவலகத்துக்கு உற்சாகத்துடன் கிளம்பும் சைந்தவி அன்று பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத எல்.கே.ஜி குழந்தை போல் முரண்டிக் கொண்டு நின்றாள்.


“சுமதி நான் இன்னிக்கு லீவ் போட்டுடட்டா.?”


“போடு...”


“போடவா.?”


‘போடேண்டி...நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்.?”


“இல்லே..நீ வேண்டாம்னு சொல்வேன்னு பார்த்தேன்.”


“அப்ப உனக்கு போக விருப்பம் இருக்கு. அந்த ரவிச்சந்திரனுக்காக யோசிக்கிறே..ரைட்டா.?”


“ஆமாடி...அவன் கீழே வேலைப் பார்க்கப் பிடிக்கலை.”


“சைந்தவி...நல்ல வேலை நல்ல சம்பளம். பழகிய ஸ்டாஃப். அவன் ஒருத்தன் தானே பிராப்ளம்? அவன் நல்லவனா இருக்க சான்ஸ் இருக்கில்லே. போய் பார்..நீ நினைச்சா மாதிரி இருந்தா அப்ப பார்த்துக்கலாம். வேலையை விடறது சுலபம்...வேலை கிடைப்பது கஷ்டம். பிறகு வருத்தப்பட்டு பிரயோஷனமில்லை”


“நீ சொல்வது தான் சரி. நீ என்ன பண்ணப் போறே? கல்லூரிக்கு போய் வேலையை ஒத்துக்கப் போறியா இல்லை இங்கேயே...”


“ஒரு வாரம் டைம் இருக்கே. யோசிக்கலாம். இளம் குழந்தைளுக்கு சொல்லிக் கொடுப்பது சௌகர்யம் தான். ஸ்விம்மிங் பூலில் நீந்துவது மாதிரி பாதுகாப்பு. கல்லூரிப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது கடலில் நீந்துவது மாதிரி.....உலகத்தை பேஸ் பண்ணனும்னா அது நல்ல சாய்ஸ். முடியவே முடியாதுன்னு நினைச்சேன்...யாரோ ஒரு ஆளுக்காக நான் ஏன் நல்ல சந்தர்ப்பத்தை விடணும்ன்னு


தோணுது .?”


“யூ ஆர் ரைட் மை டியர்...” என்று பாடிய சைந்தவி அலுவலகம் கிளம்பத் தயாரானாள். இருவரும் கிளம்பினார்கள். போகும் முன் எதிர் வீட்டு கதவை தட்டினார்கள். கனகம் கதவு திறந்தாள்.


“ஆன்ட்டி இன்னிக்கு காஸ் வந்தாலும் வரும். கொஞ்சம் வாங்கி வைங்க. எங்கே ராஜேஷ்?” கனகம் பணமும் சாவியும் வாங்கிக் கொண்டு உள்ளே போனாள். சைந்தவி உள்ளே நோட்டம் விட்டாள்.


“ஹாய்...என்ன கிளம்பிட்டீங்களா? குடுத்து வச்ச மகராசிகள். உங்களைப் போல் சோம்பேறிகளையும் வைத்து குப்பை கொட்றாங்களே...அவங்களை சொல்லணும்...” என்று கிண்டல் பண்ணினான். அவன் நகைச்சுவை அவன் நல்ல மனசை காட்டியது.


“என்ன எங்களை மட்டம் தட்ரீங்க...டூ பாட்...”


“பின்னே மாடியிலிருந்து இறங்கி வர சோம்பேறித்தனப் பட்டு தானே என்னை தவிக்க விட்டீங்க? சீக்கிரம் வந்திருந்தால் நான் மாத்திரையை எடுத்திட்டிருப்பேன்...எல்லாரும் வந்து அனுதாபத்தோடு


வேடிக்கை பார்த்திருக்க மாட்டாங்க...”


இருவரும் முகம் வாட நின்றார்கள். “ஸாரி ராஜேஷ்...”


“உங்களை குறை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...என் மேலேயும் தப்பிருக்கு. உங்க கிட்டே என் பிரச்சனை பற்றி சொல்லி இருக்கணும். எனக்கு இப்ப அதிகம் இப்படி வர்றதில்லை, அதான் அசால்ட்டா இருந்திட்டேன். எல்லோரும் பார்த்தது எனக்கு சங்கடமா இருந்தது.” ராஜேஷ் கண் கலங்கிற்று. அவர்களுக்குப் புரிந்தது.


“என் மேல் தான் தப்பு ராஜேஷ். சுமதி உடனே இறங்கனும்னு தான் அவசரப்பட்டா. நான் தான் விளையாட்டுத்தனமா தடுத்திட்டேன். விளையாட்டு வினையா போச்சு. ரியலி ஸாரி...”


“என்னடா..அந்த புள்ளைகளை கோவிச்சிட்டு இருக்கே?. பாவம் தனியா இருக்கிற பொண்டுகள். நாம தான் ஆதரவா இருக்கோணும். நீங்க போங்கடா கண்ணுகளா..” என்று அவர்களை புன்சிரிப்புடன் அனுப்பி வைத்தாள். “தேங்க்ஸ் ஆன்ட்டி. ஸாரி ராஜேஷ்..” சொல்லிவிட்டு அவர்கள் படியிறங்கி போனார்கள். அவர்கள் முகம் வாடி இருந்தது. அவனை காயப்படுதிவிட்டோமே!


“அம்மா....நீ எதுக்கு மூக்கை நுழைக்கிறே? அவங்களுக்கு அவங்க பண்ற தப்பு தெரியணும் அதான் சொன்னேன்...வேற ஒண்ணுமில்லை..”


“சரிடா..டென்ஷன் ஆகாதே. நல்ல பிள்ளைகள். கொஞ்சம் குறும்பு ஜாஸ்தி. அது கூட அந்த சைந்தவி தான். சுமதி தங்கமான பொண்ணு. உனக்கு அது மாதிரி நல்ல பொண்ணு கிடச்சா நல்லது”


“ஆரம்பிச்சிட்டியா? வரன் பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைஞ்சது போதாதா? எனக்கும் கல்யாணத்துக்கும் ராசி கிடையாது. இந்த காலத்துப் பொண்ணுங்க நல்லா இருக்கிற பையன்களையே ஆயிரத்தெட்டு குறை சொல்றாங்க..என்னை மாதிரி குறை இருக்கிறவங்களை எப்படி ஏத்துப்பாங்க.? வீண் கனவு காணாதே.”


“இல்லடாப்பா. உன் அண்ணன் அமெரிக்கா போய் செட்டில் ஆயிட்டான். பணம் அனுப்பறான். மத்தபடி ஏதோ வேற்று கிரகத்து ஆள் மாதிரி நடந்துக்கிறான். எவ்வளவு நாளைக்கு நான்? உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா?”


ராஜேஷ் மெளனமாக இருந்தான். இதெக்கெல்லாம் பதில் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று அவன் மௌனம் சொல்லிற்று. தனக்கும் ஒரு துணை கிடைக்கும் என்று அவன் நினைத்த காலம் ஒன்று இருந்தது. அவன் எல்லோரிடமும் உண்மையை சொல்லி விடுவான். தனக்கு இப்பொழுது எல்லாம் வலிப்பு வருவதில்லை. மாத்திரைகள் உட்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். இது மாதிரி வந்தே நாலு வருஷம் ஆகிறது. பயப்படத் தேவையில்லை..என்று தெளிவாகச் சொல்லி


இருக்கிறான். அவர்கள் உற்சாகம் உடனே போய்விடும். போய் தகவல் சொல்றோம்னு போய்விடுவார்கள். பதிலே வராது. கனகம் தான் மனம் தாளாமல் போன் பண்ணி விசாரிப்பாள். வேறே இடத்தில் பிக்ஸ் ஆகிவிட்டதுன்னு சொல்லிவிடுவார்கள். ராஜேஷ் வக்கீலுக்கு படித்திருக்கிறான். தனியாக ப்ராக்டிஸ் பண்ணுகிறான். அவன் அலுவலகம் வீட்டிலிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு கடையின் மாடி போர்ஷனில் இருந்தது. ரொம்ப பெரிய வருமானம் இல்லை என்றாலும் அவனுக்கு அது ஒரு தெம்பை கொடுத்தது. வீட்டில் உட்கார்ந்து கொண்டு அய்யோ இப்படி ஆகிவிட்டதே என்று சுயபச்சாதாபம் அடைந்து மனதை அலட்டிக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல். மனதை டைவர்ட் பண்ணிக் கொண்டான்.


“ராஜேஷ் சாப்பிடு. நீ இன்று வீட்டிலேயே இரு. நாளைக்கு உன் ப்ராக்டிஸ்சை வச்சுக்கலாம்...வா சூடா இட்லி சாப்பிடு.”


“இலேம்மா..நான் போறேன். எனக்கு ஒண்ணுமில்லை. இனிமே மாத்திரை போட்டுக்காமே சுத்த மாட்டேன். இப்ப நான் நல்லாத் தான் இருக்கேன்.” அவன் சாப்பிட்டுவிட்டு, அம்மா சாப்பிட்டாளா என்று இருந்து கவனித்து விட்டு கிளம்பிவிட்டான். அவனுக்கு சைந்தவியின் ஞாபம் வந்தது. அவள் குறும்பு பிடித்தது. பாவம் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன கஷ்டமோ? இப்படி யாருமில்லாத அனாதையாக வந்து தங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி. மனுஷாளுக்கு மனுஷாள் பிரச்சனைகள். யாருக்குத் தான் இல்லை கஷ்டம்? பணம் இருந்தால் மனம் இல்லை. மனம் இருந்தால் பணம் இல்லை. “சார்...பார்த்துப் போங்க. ஸ்கூட்டரில் அடிப்பட இருந்தீங்க..” ஒரு இளசு சொல்லிற்று. ராஜேஷ் தன்னிலை அடைந்தான். கடவுளே..ஏதாவது விபத்து நடந்தால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும். “ஸாரி..ஸாரி..கவனிக்கலை..”


“நூத்தியெட்டை வரவழைச்சிடாதீங்க...” என்றபடி அவன் போனான்.





ராஜேஷ் தன் அறையில் வந்து உட்கார்ந்து கொண்டான். முருகன் படத்துக்கு புதுப் பூவை வைத்தான். ஊதுவத்தி கொளுத்தி வைத்தான். கற்பூரம் காட்டி வணங்கிவிட்டு உட்கார்ந்தான். கேஸ் கட்டை எடுத்து வைத்துக் கொண்டான். சொத்து தகறாறு காரணமாக அண்ணன் தம்பிக்குள் தாவா. அவன் போன் கிணுகிணுத்தது. எடுத்தான்.


“ஹலோ..ராஜேஷ் ஹியர்..”


“தம்பி ஒரு வழக்கு. நீ தான் தீர்த்து வைக்கணும்.”


“நீங்க நேரிலே வாங்க மேடம். பேசலாம்.”


“தம்பி..என்னால் பீஸ் எதுவும் கொடுக்க முடியாது. நான் ஏழை. பணத்தாலும் சரி உறவுகளாலும் சரி. பரம ஏழை..”


இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் அதிக பீஸ் வாங்குவதில்லை. ரொம்ப குறைத்து தான் வாங்குவான். ஒரே அடியாக ஒன்றுமே தர முடியாது என்று சொன்னால் எப்படி? யோசித்தான்.


“தம்பி..நான் ஒரு ஏழை தாய். என் மகளை கண்டுபிடித்து கொடுக்கணும்.”


“அம்மா..அதுக்கு நீங்க போலிஸ் ஸ்டேஷனுக்குத் தான் போகணும். நான் வக்கில்மா. டிடெக்டிவ் இல்லை...”


“தம்பி..தம்பி போனை வச்சுடாதேப்பா. ஒரு முறை உன்னைப் பார்த்து என் கேஸ் பத்தி சொல்றேன். நீ என்ன செய்யலாம்னு வழி காட்டு போதும். அதுக்கு பீஸ் கேக்க..”


“சரி வாங்க. அதுக்கெல்லாம் பீஸ் கேட்க மாட்டேன்..உங்ககிட்டே..”


பாவமாகத் தான் இருக்கு. பெற்றோர்களை கொண்டு போய் ரயில் நிலையங்களில் தள்ளிவிட்டு விட்டு டிக்கெட் எடுத்து வரேன் என்று ஓடிவிடும் பிள்ளைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். பாவம் இந்தம்மாவுக்கு அந்த நிலைமை தான் போலும். மகள் இவளை விட்டு விட்டு ஓடிவிட்டாள் போலிருக்கு. பையனோ பெண்ணோ பெற்றோரை தவிக்க விடுறவங்களை அவனால் மன்னிக்கவே முடியாது. அந்தம்மாள் உள்ளே வந்தாள். ஏறிட்டுப் பார்த்த ராஜேஷ் மனம் இளகியது. அந்தம்மாளுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும்.


“தம்பி..” என்று அவனை கையெடுத்து கும்பிட்டாள். அவள் தன் நிலைமை சொல்ல சொல்ல ராஜேஷ் திடுக்கிட்டான்
 
Status
Not open for further replies.
Top