அத்தியாயம்---8
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கோவலன் கௌந்தியைடிகளிடம் அடைக்கலமாக கொடுத்தான். கௌந்தியடிகள் கண்ணகியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதை இளங்கோவடிகள் கூறுகிறார். எல்லோரும் கௌந்தியடிகள் ஆகிவிடமுடியுமா? கடவுள் அவளை பெரியம்மா வீட்டில் அடைக்கலமாக கொடுத்தார். அவள் ஒரு வாய் சாப்பிட ஓராயிரம் வேலை பார்க்க வேண்டியிருந்தது. மூன்று பெண்களிடம் வசவு வாங்க வேண்டியிருந்தது. பெரியப்பாவின் கஞ்சத் தனத்துக்கு அவள் பலியாக வேண்டியிருந்தது. அப்பாடா...அந்த நரக நாட்கள் முடிவுக்கு வந்தன. உலகத்தில் தனியாக இருந்துவிடலாம் அடிமையாக இருக்க முடியாது என்று அவள் உணர்ந்தாள். வீடு பிடித்துக் கொடுத்து அவளுக்கு சகல உதவியும் செய்த அசோக்கை அவள் தெய்வமாக நினைத்தாள். ஆபத்பாந்தவன்....
“ரொம்ப நன்றி அசோக் சார்...எனக்கு நீங்க விடுதலை வாங்கிக் கொடுத்தீங்க. என் சுயம் காத்துக் கொள்ள ஒரு வேலையும் பார்க்க உதவி செஞ்சீங்க...எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..”
அவள் கை கூப்பினாள். கண்களில் நீர் நின்றது.
“ஒ.நோ..இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்றீங்க? ஒரு நல்ல காரியம்
செஞ்சேன்னு எனக்கு சந்தோஷமா இருக்கு. வீட்டுக்கு ஒரு நாள் வாங்க...” என்று இயல்பாகச் சொன்னான். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. அவள் கள்ளமில்லா உள்ளம் அவனை நட்புடன் ஏற்றுக் கொண்டது. அவள் இழந்த சிரிப்பை மீட்டுக் கொடுத்திருக்கான். அது எவ்வளவு பெரிய விஷயம்!
சின்ன வீட்டில் வாழ பழகிக் கொண்டாள். கடையில் நாள் முழுக்க வேலை. இரவு பத்து மணிக்கு வந்து முடிந்ததை சமைத்து அவள் படுக்க இரவு பதினொன்று ஆகிவிடும். ரெண்டு மாசம் போனதும் தன் சம்பளப் பணத்தில் பெரியம்மாவுக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனாள்.
“உன் மூஞ்சியையே நாங்க மறந்திட்டோம். நீ எதுக்கு வந்திருக்கே?”
அவள் அவமதிப்பை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தாள்.
“உங்களுக்கு நான் வேண்டாத பதர். ஆனால் எனக்கு நீங்க நெல்மணி. உயிர் கொடுத்த இன்னொரு கடவுள். பெரியம்மா...நான் சொன்னபடி உங்களுக்கு ஒரு புடவை வாங்கி வந்திருக்கேன். ப்ளீஸ் வாங்கிக்
கோங்க....இனிமே வரமாட்டேன்..எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன்.
எப்ப வேணா நீங்க என்னை இந்த விலாசத்தில் பார்க்க வரலாம்..”
அவள் புடவை பார்சலை மேஜை மேல் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். நம் கடமையை செய்துவிட்டோம். அவ்வளவு தான். அவர்கள் அவமானப் படுத்தியதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது...மனதை சமாதானப் படுத்திக் கொண்டாள். ஆட்டோவோ பஸ்சோ பிடிக்காமல் நடந்தே தன் வீட்டுக்கு வந்தாள். வழி நெடுக அவள் அழுது கொண்டே வந்தாள். ஒரு கனிவான வார்த்தைக்கு கூடவா பஞ்சம்? நல்லயிரும்மா என்ற ஒற்றை சொல் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும்? அம்மா நீ ஏன் போனாய்? அப்பா..பொத்தி பொத்தி வளர்த்தியே.....ராஜகுமாரியாக வலம் வர செய்தியே...அழுக்கு மனசுகள் இருக்கும் என்று சொல்லிக் கொடுக்கவில்லையே? நல்ல வேளை தங்கை இல்லை----இந்த கஷ்டத்தை அவள் அனுபவிக்க வேண்டாமுன்னு தான் கடவுள் அவளையும் எடுத்துக் கொண்டாரோ?
நான் ஏதோ பாவம் செஞ்சிருக்கேன்...அதான் இப்படி...
“ஹாய்...சைந்தவி..” அவள் அருகே ஒரு பைக் நின்றது. அவள் சிந்தனை தடை பட்டது. நிமிர்ந்து பார்த்த அவள் கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்பதை அவன் பார்த்துவிட்டான் பாஸ்கர். அவளின் புதிய நண்பன். பைக்கை விட்டு இறங்கினான். “வாங்க..ஒரு கப் காப்பி சாப்பிட்டிட்டு போலாம்..” ஹெல்மெட்டை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் அவள் தோளை ஆதரவாக அணைத்து எதிரே உள்ள காபி ஷாப்புக்கு கூப்பிட்டான். அவள் அவன் கையை மெல்ல தட்டி விட்டாள்.
“பாஸ்கர்....நீங்க போங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு..”
“இத பாருங்க சைந்தவி. நானும் உங்க வர்க்கம் தான் அநாதை. தனிமை எவ்வளவு துன்பமா இருக்கும்னு எனக்கும் தெரியும். உங்களை என் சகோதரியா நினச்சு கூப்பிடறேன்....வாங்க..”
சகோதரி என்ற வார்த்தை அவளுக்கு பிடித்தது. மெல்ல புன்னகைத்தாள். அவள் இளைப்பாற ஒரு மனம் கிடைக்கும் போது எதற்கு மறுக்கணும்?...அவன் கண்ணியமானவனாக அவளுக்குத் தோன்றியது. சுடு சொற்களே கேட்டு பழகியவளுக்கு இது புதுசு.
“சரி..தாங்க்ஸ் பாஸ்கர்..” பாஸ்கர் பக்கத்து கடையில் வேலை செய்யும் இளைஞன். அது ஒரு புத்தக கடை.
இருவரும் காப்பி ஷாப்புக்குள் நுழைந்தார்கள்.
“என்ன சாப்பிடுறீங்க சைந்தவி?”
“காப்பி போதும்...”
“எனக்கு டீ தான் பிடிக்கும். சமோசா ஒரு ப்ளேட் ஆர்டர் பண்றேன். இருவரும் ஷேர் பண்ணிக்கலாம்..”
அவள் தலையாட்டினாள். சூடான காபியும்..சமோசாவும் அவளுக்கு தேவாமிருதமாக இருந்தது. அவள் உள்ளத்தில் ஊறிய சந்தோஷத்தை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. முகத்தில் அது தெரிந்தது. அவனும் சந்தோஷமாக உணர்ந்தான். சொன்னான். “ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் இன்று தான் ஏதோ வரம் கிடச்ச மாதிரி உணர்றேன்...எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த ரெண்டு மாசமா நான் நோட் பண்ணிட்டு தான் இருக்கேன். பதவிசா நடக்றீங்க. மெல்ல பேசறீங்க. சிரிச்ச முகமா இருக்கீங்க...அதான் உங்க கண்ணிலே இன்று கண்ணீர் பார்த்ததும் துடிச்சிட்டேன். தப்பா நினைக்காதீங்க இப்படி நானும் சமயத்திலே அழதிருக்கேன். அதான் உங்க கண்ணீருக்கு என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும். பணக்கார பசங்களுடன் எனக்கு ஒட்டவே ஒட்டாது. சாதாரண பசங்க.வேற மாதிரி நியூசன்ஸ். .சிகரட் குடிப்பதும்....தண்ணி அடிப்பதும்...பொண்ணுகளை பார்த்து கேவலமா கமென்ட் அடிப்பதும்...அவங்க கிட்டேயும் ஓட்டலை. அவங்களுக்கும் என்னைப் பிடிக்கலை. ஸோ....தனிமை தான். சைந்தவி நாம இனி ப்ரெண்ட்ஸ். ஒ’கே..” அவன் கையை நீட்டினான். அவள் தயங்கினாள். உடனே அவன் கையை இழுத்துக் கொண்டான். அவள் சிரித்தபடி சொன்னாள்
“ஒ.கே...” கை கொடுக்கவில்லை.
அதன் பிறகு அவர்கள் அடிக்கடி அங்கு சந்தித்துக் கொண்டார்கள். அவள் தன் கதையை சொன்னாள். அவன் பிரமித்துவிட்டான்.
“எவ்வளோ பெரிய சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கீங்க....கொஞ்சம் கூட கர்வமே இல்லையே...படிச்சிருக்கீங்க.....வேற வேலைக்கு ட்ரை பண்ணுங்க....” என்றான். அவளை அவன் மிகவும் மதித்தான். பல அவமதிப்புகளுக்குப் பின் அந்த மரியாதை கலந்த அன்பு அவளுக்கு தேவையாக இருந்தது. உலகம் அழகாகத் தெரிந்தது. அவள் காலுன்ற உதவிய அசோக்....மனதால் செழிப்படைய வைத்த பாஸ்கர். வரம் கிடைத்த மாதிரி தான் என்று உணர்ந்தாள். கடவுள் கதவை திறக்காவிட்டாலும் ஒரு ஜன்னலையாவது திறந்திருக்காரே என்று மகிழ்ந்தாள். வேலையில் ஏற்படும் சின்ன சின்ன அசௌகரியங்கள்...எரிச்சல்கள்....சிரிப்புகள் எல்லாத்தையும் பாஸ்கரிடம் பகிர்ந்து கொண்டாள்.
“அந்த கிழட்டு மானேஜர் சொள்ளு விடுவது பார்த்தா எனக்கு பரிதாமபாக இருக்கு. இந்த வயசில் அவருக்கு ஏன் இந்த சபலமோ?”
“ப்ரீத்தின்னு ஒரு பொண்ணு.....எப்ப பார் மேக் அப் பத்தியே பேசறா. பணக்காரப் பெண்கள் வாங்கும் பேஸ்பாக் வாங்கி வச்சுக்கிட்டு நொடிகொருதரம் கண்ணாடி பார்த்து..கலஞ்சிடுச்சா...மை இசி இருக்கான்னு கேட்டுக் கிட்டே இருப்பா...மத்த பொண்ணுங்க அவ முதுகுக்கு பின்னால் சிரிக்றாங்க...பாவம்..”
இப்படி கடையில் உள்ள மனிதர்கள் பற்றி ஏதாவது சொல்லுவாள் சைந்தவி. அன்று காப்பி சாப்பிட்டுவிட்டு உரையாடல் அதோடு நின்றது. இருவரும் அன்று ச்னதொஷமாக உணர்ந்தனர்.
அவனிடம் ஒரு நாள் “உங்க கதையை சொலுங்க..” என்றாள் சைந்தவி. அவன் தலை குனிந்தான். முகத்தில் இருள் சூழ்ந்தது.
“என் அப்பா ஜெயிலில் இருக்கார். என் அக்காவை ஒரு நாள் ஒரு கயவன் கெடுக்க வந்தான். நான் அப்ப பதினாலு வயசு. அவனை கத்தியாலே குத்திட்டேன். அப்பா பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டார்.....அடுத்த வருஷம் அவருக்கு விடுதலை..”
“அக்கா....என்னாச்சு உங்க அக்காவுக்கு?”
“தற்கொலை பண்ணிக்கிட்டாங்க...”
டேபிளில் நீண்டு இருந்த அவன் கையை பிடித்து ஆறுதல் சொன்னாள். கிட்டத்தட்ட அவள் கதை தான். அகால மரணங்கள். போலிஸ் கோர்ட் கேஸ்...சொந்தங்களின் நிராகரிப்பு..வலி வேதனை..
“பாஸ்கர்...உங்களுக்கு நான் எப்பவும் துணையா இருப்பேன். உங்க அக்கா ஸ்தானத்தில் இருக்க முடியாது. அதுக்கு வயசு பத்தலை . உங்க தங்கை ஸ்தானத்தில் இருப்பேன்.”
“தேங்க்ஸ் சைந்தவி....என்னால் அதிகம் படிக்கமுடியவில்லை. எப்படியோ பிளஸ் டூ படித்து முடித்தேன். பல வேலை பார்த்தேன். கடைசியில் இங்கே செட்டில் ஆகிட்டேன்..”
“மேலே படிக்கலாமே பாஸ்கர்..”
“ஓடலை. போதும். எனக்கு பெரிசா எந்த ஆசையும் இல்லை. இப்படியே காலத்தை கழிச்சிடலாம்னு இருக்கேன்...”
“முயற்சி பண்ணுங்க பாஸ்கர்...நான் சொல்லித் தரேன்.”
அவள் கொடுத்த ஊக்கத்தில் அவன் பி.ஏ தேர்வுக்கு படிக்க ஆர்ம்பித்தான். அவள் வீட்டுக்கு வந்து பாடம் கற்றான். அவர்கள் நட்பு கனிந்து பக்குவம் அடைந்திருந்தது. பணம் அந்தஸ்து....பதவி எதுவும் இல்லவிட்டாலும் இந்த வாழ்க்கை சுகமாக இருந்தது. இருவரும் நிறைய வாய்விட்டுச் சிரித்தார்கள். கூட பிறந்தால் தான் அண்ணன் தங்கையா? அவர்கள் ஒரு தாய் வயிற்று மக்கள் போல் பழகினார்கள்.
அசோக் அடிக்கடி சைந்தவியை வந்து பார்த்தான். அவளுக்கு ஏதாவது ஒரு பரிசு வாங்கி வருவான். ஸ்வீட் கடையில் பலகாரங்கள். விலை உயர்ந்த பேனா. சமயத்தில் பூ கூட வாங்கி வருவான்.
“எதுக்கு அசோக் இதெல்லாம்? நீங்க என்னை மேலும் மேலும் நன்றி கடன் பட வைக்றீங்க?” என்பாள் அவள். அவள் பாஸ்கரோடு பழகுவது பத்தி ஒரு நாள் கேட்டான்.
“சைந்தவி யார் அந்த பாஸ்கர்? உனக்கு உறவா? உங்களை அடிக்கடி காப்பி ஷாப்பில் பாக்றேன். ஜாக்கிரதை....நிறைய ரௌடிகள் இருக்காங்க..” எச்சரித்தான்.
“ச்சே ச்சே..அவர் ரொம்ப நல்லவர் அசோக். எனக்கு கூடப் பிறந்த அண்ணன் மாதிரி. பாவம்....அப்பா ஜெயிலில். ஒரே அக்கா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க....எல்லாம் என் கேஸ் தான். அதான் அவர் மேல் ஒரு அனுதாபம்..” என்று விளக்கமாக சொன்னாள்.
அசோக் சற்று அறுதலடைந்தான். அவன் சைந்தவியை காதலிக்கிறான். அவளிடம் சொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை பாஸ்கர் போட்டியாக வருவானோ என்ற பயம் அவனிடம் இருந்தது. சைந்தவி அவனை அண்ணன் என்று சொன்னது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
சைந்தவி பாஸ்கருக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்ததும் அவன் வீட்டுக்கு வருவதும் போவதும் என்று நிலைமை மாறியது. அசோக்குக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் சொன்னான். “சைந்தவி அவன் இனிமேல் வீட்டுக்கு வரக் கூடாது.”
“ஸாரி அசோக்...அவன் தேர்வு எழுதப் போகிறான். அதுவரை அவன் வருவான். வேறு வழி இல்லை..”
“சைந்தவி....இந்த வாழ்க்கை நான் கொடுத்தது. நீ கடனை அடைக்கவில்லை. அதுவரை நீ நான் சொல்வதைத் தான் கேட்கவேண்டும்.” சைந்தவி இது கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.
“நான் உங்க அடிமை இல்லை அசோக்..” அவள் பதில் அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபத்துடன் வெளியேறினான். அன்று முதல் சைந்தவிக்கு கஷ்ட காலம் ஆரம்பமானது.