கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இரண்டாம் நிலவு ! - 3

இரண்டாம் நிலவு !

அத்தியாயம் - 3



மறுநாள் விடியல் அழகாக இருந்தது. உறக்கத்தில் இருந்த சித்துவை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் சினாமிகா. மெல்ல கண் திறந்தவன் முன் புன்னகையுடன்... தன் எழில் முகம் காட்டினாள். அவளின் புன்னகையில் மனம் நிறைய... உற்சாகமாக எழுந்து அமர்ந்தான் சித்து.

"குட்மார்னிங் டாலி... பேபி. " என்றவன் தன் கைகளை நீட்டி அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான்.

"குட்மார்னிங் ப்பா.. " என்ற அவளும் அவனோடு பின்னிக்கொண்டாள்.

"இன்னிக்கு என்ன டாலி பேபி... செம சந்தோஷமா இருக்காங்க. என்ன விசயம் ? "

"அப்பா.. இன்னிக்கு ஸ்கூல் ஓபன் ஆகுது. என் பிரன்ட்ஸை எல்லாம் பார்க்கப்போறேன். இனிமே ஈவினிங் வரை போரடிக்காம இருக்கும். மிஸ் எல்லாம் என்னை கொஞ்சுவாங்க. நான் குட் கேர்ள் இல்லையா... அதுதான். " என்றவள் முகம் ஆயிரம் விளக்கின் ஒளியை பிரதிபலித்தது.

"அங்க அங்க பிள்ளைகள் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம் பிடிக்கும்.. ஆனா.. இங்க என் பொண்ணு சமத்தா ஸ்கூலுக்கு போக உற்சாகமா தாயாராகறா... " என்றான் சித்து.

"நான் குட் கேர்ள் ப்பா... " என்றாள்.

நிர்மலா.. டாலிக்கு பாலும்... சித்துவிற்கு காபியும் கொண்டு வந்தார். அதை வாங்கி குடித்துவிட்டு இருவரும் தயாராக தொடங்கினர். டாலியை பள்ளி வேனில் ஏற்றிவிட்டு விட்டு.. தன் அலுவலகம் நோக்கி வண்டியை கிளப்பினான் சித்து.

அப்போது அங்கே வந்தான் சங்கர்... "குட்மார்னிங் சித்து.. இப்போ தான் அம்மாவை பார்த்தேன்.... ஒரு வழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட போல.... பொண்ணு பார்க்க எப்ப போகலாம் ? "

"என்னமோ பொண்ணு ரெடியா இருக்கற மாதிரி கேட்கறே ? " என்றான் சித்து எரிச்சலை உள்ளே அடக்கி...

"பொண்ணு ரெடியா தான் இருக்கு. நீ சரின்னு சொன்னா... இன்னிக்கு.. இப்பவே கூட போகலாம். " என்ற சங்கரை வினோதமாக பார்த்தான் சித்து.
அவன் பார்வையின் பொருள் புரிந்தவனாக... "சித்து... எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு இருக்கு. ரொம்ப நல்ல டைப்... எல்லோரையும் அனுசரிச்சு நடந்துக்கற குணம். டாலிக்கு நல்ல அம்மாவா இருப்பா... " என்றவன் முடிக்கும் முன்... சித்து....

"ஸ்... டாலிக்கு லல்லியை தவிர வேற யாரும் அம்மாவாக முடியாது சங்கர். அதை முதலில் மனசில் வெச்சிக்கோ. " என்றான்.

"ஏன் டா எடுத்தெரிஞ்சி பேசறே... ? "

"டேய்.. என் டாலியை பெத்தெடுக்க தன் உயிரையே கொடுத்தவ லல்லி... எவளோ ஒருத்தி... அதை சொந்தம் கொண்டாட விட மாட்டேன். "

அவன் குரலின் ஆத்திரம் சங்கரை திகிலடைய வைத்தது. "சரி டா... ஸாரி. அந்த பொண்ணு நல்ல பொண்ணு... பொறுப்பான பொண்ணு. அதை தான் அப்படி சொல்லிட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ. " என்ற சங்கர் சற்று இடைவெளி விட்டு.... "உனக்கு அந்த பொண்ணை பார்க்கனும்னா சொல்லு.... இல்லன்னா பரவாயில்லை.... விட்டுடறேன். ஒண்ணும் பிரச்சனை இல்லை... கிளம்பறேன்... " என்றுவிட்டு நகர்ந்தான் சங்கர்.

"ம்ச்... காலங்காத்தால வான்ட்டடா வந்து வாங்கி கட்டிக்கிட்டு போறான். இவனை என்ன பண்றது. இவனும் அம்மாவும் பிளான் பண்ணி தான் எல்லாத்தையும் பண்ணறாங்க போல.... பொண்ணை ரெடியா வெச்சிக்கிட்டு தான் நேத்து அட்வஸ் பண்ணினாங்க போல.... இப்போ எப்படி இதை அவாய்ட் பண்றது. " என்ற சிந்தனையுடன் தன் வண்டியை கிளப்பினான் சித்து.

சங்கர் யோசனையுடன் நடந்து சித்துவின் வீட்டை அடைந்தான். "அம்மா.. " என்றவன் அழைக்க... நிர்மலா வேகமாக வந்தார்... "என்னப்பா கேட்டியா ? என்ன சொன்னான். ? " என்று ஆர்வமாக கேட்க.

"அம்மா... சித்துவுக்கு வேற பொண்ணு பார்க்கலாம். " என்றான்.

"ஏன்ப்பா... போட்டோ பார்த்துட்டு வேண்டான்னு சொல்லிட்டானா ? " என்று வருத்தமாக கேட்டார் நிர்மலா.

அவன் சித்து பேசியதை கூறி... "அந்த பொண்ணு ஏற்கனவே பல கஷ்டங்களை அனுபவிச்சிட்டா ம்மா... இப்போ அவ தேடறது ஒரு மன நிம்மதி தரும் துணையை தான். இவனுக்கு அந்த பொண்ணை கட்டி வெச்சா... இவன் வார்த்தையாலையே அவளை இன்னும் நோகடிச்சிடுவான். " என்று மிகுந்த வருத்தத்தில் கூறினான் சங்கர்.

"எனக்கு என்னமோ ஒரு தடவை இரண்டு பேரும் சந்திச்சி பேசினா.. சரியா வரும்ன்னு தோனுது சங்கர். ஒரு தடவை அவங்களை சந்திக்க வைக்க முயற்சி செஞ்சி பார்க்கலாம். அவன் சாயந்திரம் வந்ததும்... நான் பேசி அவனை சம்மதிக்க வைக்கறேன். " என்றார் நிர்மலா.

சங்கரின் பார்வை அவரிடம் வேண்டாம் என்று கெஞ்சியது. அவரோ... "சங்கர் கொஞ்சம் பெரிய மனசு பண்ணுப்பா... என் மகன் பேத்தியோட எதிர்காலமே இப்போ உன் கையில் தான் இருக்கு. அவனை பத்தி உனக்கு நல்லாவே தெரியும்... அவன் கோவக்காரனா மாறிப்போக காரணமே லல்லியோட இழப்பு தான். அதை மாத்த இன்னோரு பொண்ணால தான் முடியும். நீ அந்த பொண்ணை பத்தி சொன்னதும் தான் நான் துணிஞ்சி... நேத்து அவனோட சண்டை போட்டு சம்மதிக்க வெச்சேன். இந்த வாய்ப்பை தவறவிட எனக்கு இஷ்டமில்லை... ப்ளீஸ் சங்கர்... இந்த அம்மாவுக்காக.... " என்று பதிலுக்கு வார்த்தையில் கெஞ்சினார்.

"சரிம்மா.. நீங்க அவனை சம்மதிக்க வைங்க. நான் பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணறேன். அங்க வந்து அந்த பொண்ணை சங்கடப்படுத்தாம இருந்தான்னா போதும் எனக்கு. " என்று கூறி பெருமூச்சை இழுத்துவிட்டான்.
பிறகு மணியை பார்த்தான்... "சரிம்மா.... டைமாகுது நான் கிளம்பனும். " என்றபடியே விடைப்பெற்று தன் பிளாட் நோக்கி சென்றான் சங்கர்.

நிர்மலா சித்துவிடம் எப்படி பேசி சம்மதிக்க வைப்பது என்ற யோசனையுடனே இருந்தார். நேற்று இரவு அவனிடம் பேசியதின் படபடப்பே இன்னும் குறையாமல் இருக்க... இன்றும் பேச வேண்டுமே.. என்ற பாரம் அவரை மன அழுத்ததில் ஆழ்த்தியது. மாலை வந்தது... பள்ளி முடிந்து வரும் சினாமிகாவை அழைத்து வரை வேன் நிறுத்துமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் அவருடன் சங்கரின் மனைவி யசோதாவும் சேர்ந்து கொண்டாள். இருவரும் பேசிய படியே வேன் நிற்கும் இடத்தை அடைந்தனர்.

"ஏன்ம்மா.. ஒரு மாதிரியா இருக்கீங்க ? உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே.. ஏன் டல்லா இருக்கீங்க... " என்றபடியே நிர்மலாவின் கைகளை பிடித்து பார்க்க அது சில்லிட தொடங்கி இருந்ததை உணர்ந்தாள். அதற்குள் நிர்மலா மயக்கநிலைக்கு போக... அவரை தாங்கி பிடிக்க முடியாமல்... அவரை தன் மீது சாய்ந்துக் கொண்டு கீழே சரிந்தாள் யசோதா.

அதற்குள் வேன் வந்துவிட... அருகே இருந்தவர்களும் உதவி செய்ய... ஆட்டோவில் நிர்மலாவை ஏற்றி... மருத்துவமனை நோக்கி அழைத்துச் சென்றாள் யசோதா. அவளுடன் சினாமிகாவும் பிரியதர்ஷனும்.... பயந்தபடியே பயணிக்க... அருகே இருந்த மருத்துவமனையில் ஆட்டோ நின்றது.

ஆட்டோ டிரைவர் மருத்துவமனை உள்ளே ஓடி.. ஒரு செவிலியருடன் வந்தார். செவிலியர் நிர்மலாவின் நாடியை பிடித்து பார்த்து... "பல்ஸ் வீக்கா இருக்கு... சீக்கிரம் ஸ்டெச்சர் கொண்டு வாங்க... " என்று மற்றொருவரிடன் கூற..... உள்ளே இருந்து வந்த ஸ்டெச்சரில் நிர்மலாவை கிடத்தி உள்ளே அழைத்துச்சென்றனர். மருத்துவர் வந்தார்... பரிசோதனை கூடத்தில் அவருக்கு பரிசோதனை நடந்துக்கொண்டு இருக்க... யசோதா சித்துவுக்கும் சங்கருக்கும் கைப்பேசி வாயிலாக தகவல் கொடுத்தாள்.

முதலில் வந்தது சங்கர் தான். "என்னாச்சு யசோதா ? அம்மா இப்போ எப்படி இருக்காங்க. " என்று கேட்க.

"அம்மா... இப்போ நல்லா இருக்காங்க மாமா. பீப்பீ.. லோ.. ஆகிடுச்சாம். இப்போ தான் டெஸ்ட் ரிசல்ட் வந்துச்சு... டாக்டர் பயப்பட வேண்டான்னு சொல்லிட்டு போயிருக்காங்க. ஆனா இனிமே ரொம்பவே ஜாக்கரதையா பாத்துக்க சொல்லி இருக்காங்க. " என்று பதில் சொன்னாள்.

"எல்லாம் இந்த சித்துவோட பிடிவாதத்தால தான். நாம சொல்ற எதையும் காது கொடுத்து கேட்கறதே இல்லை. அவனை பத்தி மட்டுமே யோசிக்கறான். அவனோட அன்பு தான் உயர்ந்ததா.... என்ன ? அப்போ நம்மோட அன்பெல்லாம் ... ச்சே... " என்றவன் குரல் கேட்டவரே உள்ளே நுழைந்தான் சித்து.

"சங்கர்.. " என்று சித்து அழைக்க திரும்பினான் சங்கர். அவன் பார்வையில் அத்தனை கோபம்.

"இதோ வந்துட்டான். நாம கிளம்பலாம் யசோதா. அவங்க அம்மாவை பாத்துக்க அவனுக்கு தெரியும். " என்ற சங்கர் வெளியேற முயல...

"என்னங்க நீங்க... நேரம் காலம் தெரியாம சண்டை போட்டுக்கிட்டு. ஏற்கனவே பிள்ளைகள் வேற பயந்து போய் இருக்கு. இதுல நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க... நீங்க தர்ஷுவையும்.. டாலியையும் கேன்டின் கூட்டிக்கிட்டு போய்... அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க. " என்று யசோதா கூற... அறையில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த இரு மழலையையும் கண்டனர் சங்கரும் சித்துவும்.

சித்துவை கண்டதும்.. எழுந்து வர முயன்ற டாலியை சங்கரின் கோபக்குரல் தடுத்திருக்க.. இப்போது.. அவனை நோக்கி ஓடி வந்தாள். அவளை வாரி எடுத்தவன் தன் நெஞ்சோடு சேர்த்து முதுகை தட்டிக்கொடுத்தான் சித்து.

"பயப்படாதே டாலி.. பாட்டிக்கு ஒண்ணுமில்லை. " என்று ஆறுதல் கூறினான்.

"டாலி.. அங்கிளோட போய்.. பால் சாப்பிட்டு வா... அதுக்குள்ள பாட்டி எழுந்திடுவாங்க. " என்று யசோதா கூற.

"எனக்கு எதுவும் வேணாம். நான் அப்பாவோட இருக்கேன். எனக்கு பயமா இருக்கு. " என்றாள் டாலி.

"அண்ணா நீங்களே சொல்லுங்க.. அப்போ தான் போவா... பாவம் எதுவும் சாப்பிடல.. பசிக்கும் இல்ல. " என்று சித்துவிடம் யசோதா கூற..

"ஆமாம் டாலி.. நீ அங்கிளோட போய்.. பால் சாப்பிட்டு வா.. அப்பா டாக்டரை பார்த்துட்டு வரேன். " என்று சித்துவும் அறிவுருத்தினான்.

"எனக்கு பயமா இருக்குப்பா... தனியா போக மாட்டேன். நீங்களும் வாங்க... " என்று அழுதாள் டாலி.

"டாலி.. சங்கர் அங்கிளோட போ.. பால் குடிச்சுட்டு வா.. அடம்பிடிக்காதே... அப்பா ஏற்கனவே ரொம்ப டென்ஷனில் இருக்கேன். " என்று சித்து குரல் உயர்த்த..

"என்ன அண்ணா நீங்க ? அவ ஏற்கனவே பயந்து போய் இருக்கா... உங்க கிட்ட சொன்னேன் பாருங்க.. " என்று கடிந்துக்கொண்ட யசோதா.. டாலியை சித்துவிடம் இருந்து பிடுங்கி தன்னோடு சேர்த்தணைத்தாள். தன் மகன் தர்ஷனையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டு... "நானே கூட்டிக்கிட்டு போறேன். இரண்டு பேரும் எப்படியோ சண்டை போட்டு... அழிச்சிப்போங்க. " என்று வசைப்பாடி விட்டு வெளியேறினாள்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க... அங்கே அமைதி நிலவியது. சித்து மௌனமாக தன் தாய் படுத்திருந்த படுக்கையின் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான். சங்கர் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றான். சிறிது நேரத்தில் கண் திறந்தார் நிர்மலா.

"அம்மா.. " என்றது சித்துவின் குரல் விசும்பலாக.

"சித்து... என்னால முடியல டா... இத்தனை வருஷம் போராடி உன்னை வளர்த்தேன். இனியும் உன்னோட போராட என்னால முடியாது. என்னை விட்டுடு... நான் போறேன். உன் அப்பாக்கிட்ட போய் சண்டை போடனும். " என்றார் நிர்மலா அழுகையுடன்.

"அம்மா... தயவுசெய்து அழாதீங்க. இவனுக்காக நீங்க பட்ட கஷ்டமெல்லாம் போது... இவனும் இவன் பொண்ணும் எப்படியோ போகட்டும். நீங்க என்னோட வந்துடுங்க.... உங்க புள்ளையா என்னை ஏத்துக்கோங்க. " என்றான் சங்கர் அழுகையுடன்.

"வந்துடறேன் சங்கர்... என்னை கூட்டிக்கிட்டு போ... உன் வீட்டில் ஒரு ஓரமா இருந்திடறேன். என்னால இதுக்கு மேல இவங்களோட போராட முடியாது.... " என்றார் நிர்மலா பதிலுக்கு.

"போதும்... நிறுத்துங்க. இப்போ என்ன ? நான் கல்யாணம் பண்ணிக்கனும். அதுக்கு நீங்க பொண்ணும் பார்த்திட்டீங்க... இப்போ நான் அதுக்கு சம்மதிக்கனும் அவ்வளவு தானே... சம்மதிக்கறேன். நீ எந்த பொண்ணை காட்டினாலும்... சரி... கட்டிக்கறேன். இனிமே இரண்டு பேரும் பிளாக்மெயில் பண்ணாதீங்க. " என்றான் சித்து எரிச்சலாக.

"அப்படி பிளாக்மெயில் பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. நீ உன் இஷ்டத்துக்கு இரு.... நீ சரின்னு சொன்னாலும்... உன்னை நம்பி ஒரு பொண்ணோட வாழ்க்கையை அடகு வைக்க நான் தயாரா இல்லை. " என்றான் சங்கர் கடுமையாக.

அவனையே வெறித்தான் சித்து... "என்ன பாக்கற... ஏதோ ஒரு நல்ல பொண்ணு கிடைச்சிருக்கு.... உனக்கு பொருத்தமா இருக்குமேன்னு நினைச்சு அம்மா கிட்ட சொன்னேன்.... ஆனா உன்னோட ஆங்காரத்துக்கு ஒரு பொண்ணை பலியாக இப்போ எனக்கு இஷ்டமில்லை. " என்றான் சங்கர்.

"இப்போ என்ன ஆங்காரமா நான் நடந்துக்கிட்டேன் சங்கர் ? "

"நீ பேசற ஒவ்வொரு வார்த்தையிலும் அது இருக்கு சித்து. யோசிக்காம பேசற... யோசிச்சி பாரு... ஆங்காரம் என்னன்னு தெரியும். " என்றான் சங்கர்.

அவன் முகத்தில் குழப்பம்... அப்போது யசோதா குழந்தைகளுடன் அங்கே வந்துவிட்டாள். அதனால் பேச்சு நின்றது.

"நான் அம்மாவை பாத்துக்கறேன் சங்கர். நீயும் யசோதாவும் குழந்தைகளோட கிளம்புங்க... நாங்களே காலையில் வந்திடறோம். " என்று சித்து தன்மையான குரலில் கூறினான்.

பிறகு டாலியை நெருங்கி... "டாலி... நீ இன்னிக்கு சங்கர் அங்கிளோட அவங்க வீட்டில் இரு. அப்பா காலையில் பாட்டியோட வந்திடறேன். அதுக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு போகலாம். சரியா... அடம்பிடிக்காம இரு. " என்று கண்டிப்புடன் கூற.. அவளும் பதில் பேசாமல் அவர்களோடு சென்றாள்.

அதன்பின் மௌனமாக அமர்ந்து விட்டான் சித்தார்த். நிர்மலா மாத்திரையின் உதவியால் உறங்கிவிட்டார். சித்து வெளியே வந்தான்... வெற்று வானம் அவனை வரவேற்றது. " இந்த வானத்தில் மீண்டும் நிலா தோன்றும். ஆனால் என் வாழ்வில் இன்னோரு நிலவு... தோன்றுவது சாத்தியமா ? " என்ற கேள்வியுடன் நின்றான்.


நிலா வரும்......
 
Top