கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இறுதி அத்தியாயம்

Rhea Moorthy

Moderator
Staff member
அந்த வார இறுதியில், அதியனுக்கான ப்ரெஸ் மீட் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. டிஜிபி தேர்ந்தெடுத்திருந்த ஒரு ரகசிய அரங்கத்தில் மீட்டிங் நடைபெற இருப்பதாக, அனைத்து மீடியாக்களுக்கும் முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஊடகங்களின் நிருபர்களும், ஒரு சில வெளிநாட்டு ஊடகங்களில் நிருபர்களும் சொன்ன நேரத்திற்கு முன்பாக அங்கு வந்து குவிந்திருந்தனர். அவர்களின் அதிநவீன கேமராக்கள் அங்கு நடப்பதை லைவில் தத்தமது தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

காவலர்கள் படை சூழ மேடைக்கு வந்த அதியன் கையில் ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்து, வந்திருந்த அத்தனை பேரும் தங்களுக்குள் சலசலக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் குழப்பம் புரிந்த அதியன், "குட் ஈவ்னிங் எவ்ரி ஒன், நான் அதியன். கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும், அதிசய சக்தி இருக்குறதா நீங்க புகழ்ந்து தள்ளின அந்த வாட்ச்க்கு நான்தான் ஓனரா இருந்தேன். ஆனா இப்ப அந்த வாட்ச்சுக்கு ஒரு நண்பன் கிடைச்சுட்டான்.." என்று சொல்லிக்கொண்டே அபியை நோக்கிக் கை நீட்டினான்.

நிருபர்கள் அனைவரும் அவசர அவசரமாய் தங்கள் கேள்விகளை விவாதிக்கத் துவங்க, "ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க. உங்க எல்லாரோட கேள்விக்கும் நிச்சயமா பதில் சொல்லிட்டு தான் நாங்க ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்புவோம்.

அதனால ஒன் பை ஒன் எல்லாரும் உங்க கேள்விய கேளுங்க, எல்லாருக்கும் கண்டிப்பா வாய்ப்பு உண்டு.." என்ற அதியன் முதல் வரிசையில் இருந்த முதல் ஆளை நோக்கிக் கை நீட்டினான்.

நிருபர், "ஏன்‌ உங்க வாட்ச்ச நீங்க அந்த சின்னப் பையனுக்கு கொடுத்தீங்க?" என்றார்.

"நான் கொடுக்கல, அதுவே தனக்கான நபரை செலக்ட் பண்ணிக்கிச்சு, நெக்ஸ்ட் பெர்சன்" என்று இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்த நிருபரை நோக்கிக் கை நீட்டினான்..

"இந்த வாட்ச்சால எப்படி இவ்வளவு பெரிய விஷயங்கள செய்ய முடியுது?"

"இது சில நேரங்கள்ல சுயமா செயல்படுது, சில நேரங்கள்ல உத்தரவைக் கேட்டு செயல்படுது. இன்னும் என்னவெல்லாம் செய்யும்னு போகப் போகத்தான் தெரியும்.."

மூன்றாம் நிருபர், "இது ரோபோவா?"

"ஆரம்பத்துல நானும் இத ஏதோ புது மாதிரியான ரோபோனுதான் நினைச்சேன். ஆனா இது உயிரோட இருக்குன்றது எனக்கே இப்பதான் புரியுது ஆரம்பிச்சிருக்கு.."

நான்காம் நிருபர், "உயிரோட இருக்குனா? கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க"

"கடந்த மூணு நாளா இதைவச்சு நம்ம கவர்மெண்ட் நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சிருக்கு. அவங்களோட முடிவு படி இது ஒரு ஏலியன்.." என்றதும் எதிரிலிருந்த நிருபர்கள் அத்தனை பேருக்கும் தாங்கள் கேட்க வந்த கேள்விகளே மறந்து போனது.

அதிர்ச்சியில் அத்தனை பேரும் முகத்தில் ஈயாடாமல் அமர்ந்திருக்கக் கண்ட அதியன், "எஸ், இதோட உடல் இந்த பூமியில இல்லாத ஒரு புதுவிதமான செல்லால உருவாக்கப்பட்டு இருக்கு.

என்கிட்ட இருந்த வரைக்கும் வாட்ச் எந்த ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்கல, அதனால அரசாங்கத்தால எதையும் கண்டுபிடிக்க முடியல. இந்த பையன்கிட்ட வந்ததுக்கு அப்புறம் வாட்ச் நிறைய‌ மாறியிருக்கு.

அவன ஒரு நண்பனா இது பாக்குது, அதனால அவன் என்ன சொன்னாலும் கேக்குது. கூடிய சீக்கிரமே இந்த வாட்ச் பத்தின நிறைய தகவல்கள கவர்மெண்ட் வெளியிடும். அதுவரைக்கும் எந்த கட்டுக்கதையும் கட்டாம நீங்க எல்லாரும் தயவு செஞ்சு கொஞ்சம் பொறுமையா‌ இருங்க" என்றான்.

அவன் கூறிய விஷயங்களைக் கேட்டு நிறைய பேருக்கு குழப்பங்கள் உருவானதால், அதன்பிறகு ஒரு சிலர் மட்டுமே கேள்விகளைக் கேட்க முன்வந்தனர்.

நிருபர், "நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தா இனிமே உங்களோட இடத்தில இந்த பையன்தான் இருக்கப் போறானா?"

அதியன், "ஆமா.." என்றதும்,

"இது முட்டாள்தனமான வேலை, உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா? இதுக்கு பதிலா அந்த வாட்ச்ச நேரடியா நாம நம்மளோட எதிரிகள் கையில கொடுத்திடலாம்.." என்று நிருபர்கள் அனைவரும் ஆளாளுக்கு குரல் உயர்த்த ஆரம்பித்தனர்.

'இதைத்தான் ஆரம்பத்திலிருந்து உனக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறேன், இப்போதாவது முடிவை மாற்றிக் கொள் அதியா' என்று தன் பார்வையாலேயே அதியனுடன் உரையாடினார் டிஜிபி.

இப்போதும் அவர் கோரிக்கையை நிராகரித்த அதியன் நிருபர்களைப் பார்த்து, "ப்ளீஸ் ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்க, அப்பதான் கேள்வியும் பதிலும் எல்லாருக்கும் புரியும்" என்றிட,

விருட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்த ஒரு நிருபர், "இவ்வளவு பெரிய ஆபத்தான பொருள, ஐ மீன் உயிருள்ள வெப்பன, ஒரு சின்னப்பையன் கையில கொடுத்தா விளைவுகள் ரொம்ப விபரீதமாக இருக்கும்னு உங்களுக்கு புரியலையா மிஸ்டர் அதியமான்?" என்று சிடுசிடுத்தார்.

"அந்த பையனோட நல்ல மனச பார்த்து, அதுவே அவன செலக்ட் பண்ணிருக்குனு ஆரம்பத்திலேயே சொன்னேன்ல சார்?"

"இருபத்தஞ்சு வயசுல இருக்கிற உங்கள விட, அப்படி எந்த விஷயத்துல அந்த எட்டு வயசுப் பையன் ஒசத்தினு எங்களுக்குப் புரியிற மாதிரி சொல்ல முடியுமா?" என்றதும் ஒரு நொடி பதில் சொல்லத்‌ தயங்கினான் அதியன்.

அடுத்த கணமே, குழந்தையை அழைத்து அவர்களின் முன்னால் நிற்க வைத்து, "உங்க கேள்விக்கான பதில நான் சொல்றத விட இவனே சொன்னா இன்னும் சுலபமா உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்.." என்றான் அதியமான்.

கோலிக் குண்டு கண்களோடு எட்டு வயதுப் பிள்ளை அத்தனை அறிவு ஜீவிகளின் முன்னால் நிறுத்தப்பட, அந்தப் பால் முகத்தைப் பார்த்ததும் அதுவரை மளமளவென்று கேள்வி கேட்ட அத்தனை நாக்குகளும் தன் பெட்டிக்குள் அடங்கிப் போய் கிடந்தது.

உலக நாடுகளுக்கு இடையே நிகழும் போட்டிகள், மனிதர்களுக்கு நடுவேயான அரசியல் சூழ்ச்சிகள், நாளுக்கு நாள் அதிபயங்கரமாக உருவாக்கப்படும் அணு ஆயுதங்கள், ஒட்டுமொத்த தேசத்தையும் ஒரே வாரத்தில் வீழ்த்த செய்யும் கிருமிகள் என்று எதைப் பற்றியும் தெரிந்திராத அக்குழந்தையிடம் என்ன கேள்வி கேட்பது? என்று எவருக்கும் தெரியவில்லை.

அப்போது முதல் வரிசையிலிருந்த முதிய வயது நிருபர் சிரித்த முகத்துடன் மேடை ஏறி வந்து, "உன் பேரென்ன கண்ணா?" என்று சாதாரணமாய் விவாதத்தை ஆரம்பித்தார்.

தன்னைப் பார்த்து அன்பாய் சிரிக்கும் தாத்தாவைக் கண்டு தானும் சிரித்த குழந்தை, "அபிநாஷ்.." என்றது.

"அழகான பேரு, எனக்கு உன்ன காண்ணானு கூப்பிட ரொம்ப பிடிச்சிருக்கு. செல்லமா அப்படியே கூப்பிட்டுக்கவா?" என்றார் வயது முதிர்ந்த நிருபர்.

"ம்.." என்று சந்தோஷமாய் தலையாட்டினான் அபிநாஷ்‌.

"உங்கிட்ட ஒரு வாட்ச் இருக்கே அத வச்சு நீ என்ன செய்யப் போற கண்ணா?" என்று குழந்தைக்குப் புரியும் வகையில் எளிமையாய் தன் கேள்விகளைக் கேட்டார் அந்த முதியவர்.

"அதியமான் அங்கிள்‌ மாதிரி எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணப் போறேன். உங்களுக்கும் ஹெல்ப் பண்ணுவேன் தாத்தா" என்றான் அபிநாஷ்‌..

"வெரிகுட், உனக்கும் உன் ப்ரெண்டுக்கும் சண்டை வருது. உன்னால அவன ஜெயிக்க முடியல, உன்னோட வாட்ச் அவன கொல்லச் சொல்லி உங்கிட்ட கன் எடுத்துக் கொடுக்குதுனு வச்சுக்கலாம். நீ என்ன கண்ணா பண்ணுவ?"

"கன் வச்சு சண்ட போட மாட்டேன், சுட்டுட்டா என் ப்ரெண்டு செத்திடுவான்ல? இந்த வாட்ச்ச வச்சு மத்தவங்களுக்கு ஹெல்ப்தான் பண்ணனும், ஹர்ட் பண்ணக்கூடாது.."

"அப்படினு யாரு கண்ணா உனக்கு சொல்லித் தந்தா?"

"யாரும் சொல்லல, சுட்டா செத்திடுவாங்கனு எனக்கே தெரியும்."

"ஒருவேள சில பேட் பாய்ஸ் உங்க ஸ்கூலுக்கு வர்றாங்க, அவங்க கையில நிறைய கன், பாம் எல்லாம் இருக்கு. உங்கள எல்லாம் சுட்டுக் கொல்ல பாக்குறாங்க. அப்பவும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவியா? இல்ல திருப்பி அட்டாக் பண்ணுவியா செல்லம்?"

"ரெண்டுமே செய்ய மாட்டேன்.."

"அப்புறம் எப்படிப்பா உன் ப்ரெண்ட்ஸ் டீச்சர்ஸ காப்பாத்துவ?"

"முதல்ல அவங்ககிட்ட இருக்குற கன், பாம் எல்லாத்தையும் எடுத்து போலீஸ்ட்ட தந்திடுவேன். அப்புறம் அந்த பேட் பாய்ஸ ஈசியா புடிச்சு ஜெயில்ல போட்டுடலாமே."

"அப்படி செஞ்சா அவங்க திரும்பவும் ஜெயில்ல இருந்து தப்பிச்சுப் போய் தப்பு பண்ணுவாங்களேப்பா" என்று தன் சாணக்கிய தனத்தைக் காட்டினார் அவர்.

"பரவாயில்ல, மறுபடியும்‌ புடிச்சுட்டு வந்து ஜெயில்ல போடுவோம். அடுத்தும் தப்பிச்சா நான் இன்னொருதடவ போய் பிடிச்சுட்டு வருவேன்.."

"அதுக்கு பதிலா அவங்கள முதல் தடவையிலயே சுட்டுடலாமே?"

"அப்படி செஞ்சா அந்த பேட் பாய்ஸோட வீட்ல இருக்குறவங்க அழுவாங்கள்ல?"

அவன் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ஸ்தம்பிம்பித்து போனவர், "ஆமா, கண்ணா. ஆனா நம்ம நாட்டுக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்க உன்ன மாதிரி மத்தவங்கள பார்த்து இரக்கப்பட மாட்டாங்களே?அப்புறம் ஏன் நாம மட்டும் அந்த பேட் பாய்ஸ்க்காக இரக்கப்படனும்?" என்றார்.

"ஆனா சுட்டுட்டா அவங்க செத்துப் போயிடுவாங்களே, அதுக்கப்புறம் அவங்க எப்படி குட் பாயா மாற முடியும்?"

"அதுக்காக எதிரிங்க மனசு மார்ற வரைக்கும் நாம வெயிட் பண்ண முடியாதுலப்பா?"

"ஏன் எதிரினு சொல்றீங்க? நாம அவங்க கூட ஷேக் ஹேண்ட் கொடுத்து ப்ரெண்ட்ஸாகிடலாம்ல?" என்றான் அபிநாஷ்.

"அது முடியாதுப்பா.."

"எங்க டீச்சர், 'நாம விட்டுக் கொடுத்தா எல்லாரோடவும் ப்ரெண்ட்ஸா இருக்க முடியும்'னு சொன்னாங்களே.."

"சரி, நாம ப்ரெண்ட்ஸாக ட்ரை பண்ணுவோம். ஆனா அந்த பேட் பாய்ஸ் உங்கூட ப்ரெண்டா பேசிட்டு, திடீர்னு ஒரு நாள் வாட்ச்க்காக உன்ன தூக்கிட்டு போய் கொலை செய்ய ப்ளான் பண்றாங்க.

அங்கிருந்து உன்னால தப்பிக்க முடியல, அப்ப என்ன செய்வ? அவங்களுக்கு ஷேக் ஹேண்ட் தருவியா? இல்ல உன் வாட்ச்கிட்ட சொல்லி அவங்கள அடிப்பியா?"

அபிநாஷ், "அடிப்பேன், கயிறால கட்டிப் போடுவேன். ஆனா கொல்ல மாட்டேன், அது தப்பு. தப்பு செஞ்சா சாமிக்கு பிடிக்காது.." என்ற அடுத்த நொடி அவன் கையிலிருந்த வாட்ச் கிளவுசாக உருமாறியது.

என்ன நடக்கிறது என்று மற்றவர்கள் யோசிக்கும் முன்பே, அது கொஞ்சம் கொஞ்சமாய் தன் அளவைக் கூட்டி அபிநாஷின் வலது கை முழுவதையும் ஒருவித கவசத்தால் மூடிக்கொண்டது.

அச்சத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் விழிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரம், அவனோ சந்தோஷமாக அனைவரையும் பார்த்துக் கையசைத்தான்.

அதியனோடு இருக்கும் வரையில் கிளவுஸ் அளவு மட்டுமே செயல்பட்ட வாட்ச், சிறுவனோடு இணைந்த பிறகு நிறைய மாற்றங்களைச் சந்தித்து வந்தது. அதிலும் இப்போது அது கொண்டிருக்கும் பரிமாணம், எவருமே இதுவரையில் எதிர்பார்த்திராத ஒன்று.

அதியன், "இப்பவாச்சும் புரிஞ்சுக்கோங்க, வாட்ச் இந்தக் குழந்தையோட இருக்குறதாலயே ரொம்ப வேகமா வளருது. அதுக்குக் காரணம் அவன் எல்லா உயிரையுமே சமமா மதிக்கிறான். தன்ன கொல்ல வர்ர எதிரியக்கூட, தான் கஷ்டப் படுத்திடக் கூடாதுன்ற அளவுக்கு அவன் மனசு பரிசுத்தமா இருக்குது.

என்ன மாதிரி உங்கள மாதிரி இந்தக் குழந்தையோட மனசுல எந்த விதமான வன்மமும் இல்லன்றதுனால மட்டும்தான், வாட்ச் அவனைத் தன் தலைவனா தேர்ந்தெடுத்து இருக்கு.

இன்னும் தெளிவா சொல்லனும்னா, இந்த வாட்ச் கடவுளே இவனுக்குக் கொடுத்த வரம். அத நானோ நீங்களோ அவன்கிட்ட இருந்து பறிக்க முடியாது. நம்ம சந்ததி தான் இந்த பூமி மேல அக்கறையே இல்லாம இயற்கைய நாசம் பண்ணி வாழ்ந்திட்டு இருக்குது.

அட்லீஸ்ட் நமக்கு அடுத்த சந்ததியாவது உலகத்தோட ஒன்றி ஒரு சந்தோஷமான வாழ்க்கைய வாழட்டுமே?" என்றிட அங்கிருந்த அத்தனைபேரும் கரகோஷம் அளித்து அதியனின் கருத்தை வரவேற்றனர்.

லைவ் டெலிகாஸ்ட் என்பதால் அத்தனை சேனல்களும்‌ தங்களது டிஆர்பியை அதிகரிக்க நினைத்து, அடுத்தடுத்து நிறைய விவாதங்களையும், ஓட்டெடுப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தித் தள்ளியது‌.

வாட்ச்சிற்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தம் வெகு வேகமாய் விரிவடைந்து வருவதைக் கண்டு, பொதுமக்கள் அனைவரும் குழந்தைக்கே முன்னுரிமை தர ஆரம்பித்தனர்.

அதியனும் வாட்ச்சும் ஒரு சேர அபிநாஷைத் தேர்ந்தெடுத்ததால் கவர்ண்மெண்டிற்கும் இப்போது வேறு ஆப்ஷன் இல்லை. அதுவும்போக வாட்ச் அபரிமிதமான பலத்திற்கு மாறி வருவதால், அதியனின் இடத்தில் அபிநாஷை வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது அரசாங்கம்.

அன்னை தந்தையை இழந்த அபிநாஷின் படிப்பு, பயிற்சி என்று அனைத்தையும் கவனிக்க அரசு ஒரு குழுவினை உருவாக்கியது. ஒருசில நாட்கள் மட்டுமே அவனோடு தங்கி இருந்த அதியன் குடும்பம், மெல்ல மெல்ல அவனை விடுத்து தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கியது.

அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை மீண்டும் தொடர அரசாங்கம் அனுமதி தந்திருந்ததால், எந்த நிபந்தனையும் இன்றி அனைவரும் அவரவர் பணியிலேயே திரும்பவும் சேர்ந்துவிட்டனர்..

அவசர கதியில் அலுவலகத்திற்குத் தயாராகிடும் அதியனும், கல்லூரிக்குக் கிளம்பிடும் கபிலனும் தொலைந்து போன‌ தங்களின் ஸாக்ஸைத் தேடி அலைந்தனர்.

அதிகாலை நேரத்து சுப்ரபாதமும் அவசரகதியில் உருவான உப்புமாவுமாய் கிரகலட்சுமி வளைய வர, மீண்டும் அதியன் வீடு பழையபடி களைகட்ட ஆரம்பித்தது.

தன் பைக்கில் ஏறி அலுவலகம் போகும் அதியனை, ஆங்காங்கே ஒரு சிலர் புகைப்படம் எடுத்து விளையாடிட, அத்தனை பேருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்த அவன் தன் பாதையில் விரைந்து சென்றான்.

வாட்ச்மேன் முதல், டீம் ஹெட்‌ வரைக்கும் அவன் வரவை அதிசயித்துப் பார்க்க, அவன் கண்கள் தேடும் தாரகையோ தலை நிமிராது தன் கணினியோடு கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

முதலில் டீம்ஹெட் அறைக்கு விரைந்தான் அதியன்..

"உன்னோட பழைய ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு அதியா, மொத்த டீமும் புது ப்ராஜெக்ட்ல இறங்கிடுச்சு. நீ இந்த மாசத்தோட என்டு வரைக்கும், ஏதாவது ஒரு வொர்க்க ஃபாலோ பண்ணு. அடுத்த மாசத்துல இருந்து உனக்குன்னு தனியா வேலை பிரிச்சுத் தரேன்" என்றார் அவர்.

"ஓகே சார், ஒரு சின்ன விஷயம்.. இதுக்கு முன்னால சில நேரங்கள்ல நான் உங்ககிட்ட மிஸ் பிகேவ் பண்ணியிருக்கேன், ரியலி சாரி" என்றான்‌ அதியன்.

அவனை ஏற இறங்க பார்த்த டீம் ஹெட், "நீ மட்டும் இல்ல அதியா, நாம எல்லாருமே ஏதாவது ஒரு சிச்சுவேஷன்ல அப்படி வழிமாறி போயிடுறோம். ஆபீஸ், வேலை, டார்கெட், ரேட்டிங்னு ஓடிக்கிட்டு இருந்த என் வாழ்க்கைய நீதான் வழி மாத்தின..

கடிவாளம் கட்டின குதிரை மாதிரி ஒரே பாதையில நான் தொடர்ந்து ஓடிக்கிட்டு இருந்திருந்திருந்தா, இன்னைக்கு இருக்கிற மனமாற்றம் என் வாழ்க்கையில வந்திருக்கவே வந்திருக்காது.

உன் சேட்டைக்கு பிறகுதான் நான் வீடு, குடும்பம், வொர்க்கர்ஸ் ரிலாக்ஸேஷன்னு சின்ன சின்ன விஷயத்தில் கவனம் எடுத்தேன். இப்ப என் குடும்பமும் ஹேப்பி, என் டீம் மெம்பர்ஸும் ஹேப்பி.

நம்மள மாதிரியே எல்லாரோட வாழ்க்கையிலயும் அந்த வாட்ச் மூலமா நல்ல மாற்றம் வரணும் அதியா, போய் வேலையப் பாரு" என்று இன்முகத்தோடு அனுப்பி வைத்தார்.

இருக்கைக்கு வந்தவனிடம் தீபக், "ஹாய் டியூட், நாந்தான் தீபக், இங்கதான் சில பல வருஷமா குடியிருக்கிறேன். இனிமே நாமெல்லாம் ஒண்ணா வேலை செய்ய போறோம், உங்க பேர் சொல்லுங்களேன், தெரிஞ்சிக்கிறேன்" என்றான்.

அதியன், "அடப்பாவி, சத்தியமா முன்ன பின்ன தெரியாதவன் மாதிரியே இருக்குடா நீ பேசுறது.." என்று வாய் மூடி அதிசயித்தான்.

தீபக், "பின்ன? போனவன் அப்படியே மொத்தமா எங்களை மறந்து போயிட்டல? உனக்காக என்னவெல்லாம் தியாகம் செஞ்சிருக்கேன், எனக்கு ஒரு ஃபோன் பண்ணி பேசினயாடா வெண்ண?" என்று அதியனின் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

"டேய், என் போன புடிங்கி வச்சுகிட்டாங்க, சேப்டிக்காக என் சிம்ம லாக் பண்ணிட்டாங்க. அந்த வீட்ல இருந்து வெளியில யாருக்கும் போன் பண்ண முடியாது.

ஆத்திர அவசரத்துக்குக் கூட போன் தரலைடா, ஒவ்வொரு தடவையும் டிஜிபிட்ட பேசித்தான் கால் கனெக்சன் வாங்க முடியும். தரமாட்டேன்னு சொல்லிட்டா அதுவும் போச்சு.." என்று உண்மையைச் சொன்னான் அதியன்.

"ஆஹான்? அப்ப அந்த பொண்ணு போனுக்கு மட்டும் எப்படி போன் போச்சு? அமெரிக்க ராணுவம் அதுக்குன்னு தனியா உனக்கு உதவி செஞ்சதா?" என்று தீட்சண்யாவைக் காண்பித்துக் கேட்டான் தீபக்.

தீட்சண்யா, "ஹலோ மிஸ்டர், உங்க பிரச்சனையில தேவையில்லாம என்ன இழுத்தா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன் பாத்துக்கோங்க.." என்று குரலை மட்டும் இவர்கள் இருந்த திசைக்கு அனுப்பி விட்டு, முகத்தைத் தன் கணினியிலேயே வைத்துக் கொண்டாள்.

தீபக், "மேடம் ரொம்ப சூடா இருக்காங்க போல?"

"வாய மூடுடா கொரங்கு, ஏற்கனவே அவளுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு. எப்படி சமாளிச்சு சரிக்கட்டப் போறேன்னு எனக்கே தெரியல. நீ வேற குறுக்கால பாயாத" என்று தீபக்கை தள்ளிக் கொண்டு சென்றான் அதியன்.

அவன் செயல் அவள் இதழில் சிறு புன்னகையை விதைத்தாலும், அவ்வளவு சுலபத்தில் இறங்கி வரக்கூடாது எனும் உறுதியோடு நின்றாள் தீட்சு.

அவள் மனதிலிருந்த உறுதியை அதியனின் காதல் பார்வையும், அக்கறை எடுத்து அவன் கொண்டு வந்த காஃபியும் கரைக்கவியலாது போனது. அன்று மதியம் வரைக்கும் அப்படி எப்படி என்று ஓட்டியவனால் அதற்கு மேலும் அவளது பாரா முகத்தைத் தாங்க முடியவில்லை.

நண்பனின் முகம் வாடினால் சும்மா இருப்பானா தீபக்?

தீட்சுவை டீம் மீட்டிங் என்ற பெயரால் அழைத்துக் கொண்டு சென்றவன் அதியனை அழைத்து, "டேய், உன் மூஞ்சிய பாக்க சகிக்கல. அதுனால ஒரு சீக்ரட் சொல்றேன், டேபிள்ள அவளோட மொபைல் கிடக்கும் பாரு.

அத எடுத்து உன்னோட வாட்ஸ் அப் நம்பருக்கு அவ அனுப்பின மெசேஜ் எல்லாம் வாசி. அப்பதான் அவ பக்கம் இருக்கிற நியாயம் உனக்குப் புரியும்.." என்று தகவல் தந்துவிட்டு நல்ல பிள்ளையாய் மீட்டிங்கில் கவனம் செலுத்தலானான்.

அடுத்த கணமே அவள் செல்போனை எடுத்து வாட்ஸ் அப் போய் பார்த்தான் அதியன்..

அதில் இத்தனை நாட்களுக்கும் அவள் அவன் எண்ணிற்கு அனுப்பிய மெசேஜ் அனைத்தும் ஒவ்வொன்றாய் வரிசை கட்டி நின்றன...

"குட் மார்னிங் அதியா.. நேத்து நைட் தூள் பண்ணிட்ட, தீவிரவாதிங்கள கொன்னு குழந்தைங்கள காப்பாத்தினது உன் லவ்வர் தானனு எல்லாரும் கேட்கும் போது எவ்வளவு பெருமையா இருக்குது தெரியுமா?

உன்ன உங்க வீட்டுக்கு எப்ப விடுவாங்க? ஐ மிஸ் யூ டா..

எங்க இருக்க?.. உன் நம்பர்க்கு கால் போகவே மாட்டேங்குது, எங்க இருந்தாலும் பத்திரமா இருடா..

எப்ப என்ன பார்க்க வருவ? எனக்கு உன் முகத்த பார்க்கனும்னு‌ இருக்கு. ரெண்டு நாள்லயே உன்ன ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். காரணமில்லாம அழுகையா வருதுடா, நம்ம பழைய போட்டோஸ பார்த்துட்டே இருக்கேன். இதுவும் இல்லனா என்ன ஆகியிருக்கும்னு எனக்கே தெரியல அதி, மிஸ் யூ சோ மச்டா..

பசிக்குதுடா, நீ பக்கத்துல இருந்திருந்தா இந்நேரம் ஏதாவது செஞ்சு என்ன சாப்பிட வச்சிருப்ப..

அம்மா வர்றாங்கடா, நாளைக்கு முழுக்க அவங்களோடதான் இருப்பேன். நீ போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்டா, கோச்சுக்காத.. ரெண்டு நாள்தான், பொறுத்துக்க..

நீ என்னோட சேர்ந்து போகணும்னு நினைச்ச காஃபி ஷாப்க்கு இன்னிக்கி போனேன், நீ என் பக்கத்துல இல்லன்ற வலி ரொம்ப பெருசா தோணுது. நெஞ்சு வலிக்கிற‌ மாதிரி இருந்துச்சு, ஆர்டர் பண்ண காஃபிய ஒரு சொட்டு கூட குடிக்காம கிளம்பி வந்துட்டேன்.

மழை விழுது அதியா, ரொம்ப குளிருது.. எனக்கு உன் மூச்சுக்காத்து வேணும்டா..

ஆபீஸ்ல வேலை செய்ய முடியல. ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியா இருக்கு, உன் சீட்ல எவனோ இருக்கான். முடியலடா..

அதியா.. அதியா.. அதியா.. அதியா..

பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன், ரொம்ப வலிச்சது. அம்மா அப்பாட்ட சொன்னா வேலையவே ரிசைன் பண்ண வச்சிடுவாங்க. நீ பக்கத்துல இருந்திருந்தா என்ன நல்லா பாத்துட்டு இருந்திருப்ப. இப்ப எப்படி இருக்குதுன்னு கேட்க எனக்கு யாருமே இல்ல அதியா...

ரெண்டு நாள் முழுக்க ஹாஸ்பிடல்ல இருந்தேன், கண்ண மூடுனா நீதான் தெரிஞ்சடா. மயக்க மருந்தோட வேலையா, இல்ல நிஜமாவே நீ என் எதிர்ல நிக்கிறியானு தெரியல. ஒரு தடவ உன்ன பாக்கணும் போல இருக்கு, உண்மையிலயே நீ என் பக்கத்துல இருக்குறதா நினைச்சு பேசிட்டே இருந்தேன்‌‌. காலையில சிஸ்டர் வந்து தூக்கத்துல நிறைய உளறினேனு சொன்னதுக்கு அப்புறம்தான் அத்தனையும் கனவுனு புரிஞ்சது. நீ எங்க இருக்க அதியா?

ப்ளீஸ் கால் பண்ணுடா..

நேத்து நைட் கால் பண்ணின, அப்பதான் தூங்குறதுக்காக டேப்ளெட் போட்டுட்டு படுத்தேன். உன் கால் வந்ததும் ஆசையோட எடுத்தேன், என்ன ஒரு வார்த்தை பேச விடாம நீயே பேசுற. உன்னையே நினைச்சுகிட்டு இருந்த என்ன பார்க்க எனக்கே முட்டாள் மாதிரி தோணுதுடா..

அதியா.. உன்னோட சகஜமா பேசணும்னு ஆசைப்பட்டேன், ஆனா நீ மாறிட்ட.. எனக்கு என்னோட சிரிச்சு பேசுற‌ என் அதி வேணும்.

மிஸ்ஸிங் யூ டா..

என்னால முடியல, நான் ரொம்ப தனியா இருக்கிற மாதிரி தோணுது. அம்மாட்ட போகணும் போல இருக்கு, நீ எனக்கு வேண்டாம், உன்னால உருவான காதலும் காயமும் எனக்கு வேண்டாம். குட் பை அதியா.. எங்க இருந்தாலும் நல்லா இரு.."

வாசித்து முடித்த அதியனுக்கு அவள் எதை இழந்தாள் என்று இப்போதுதான் தெளிவாய் புரிந்தது.

எடுத்த இடத்திலேயே செல்போனை திரும்ப வைத்தவன், மீட்டிங் முடிந்து அவள் வெளியே வரும் தருணத்திற்காகக் காத்திருந்தான்.

அவள் வந்ததும், "தீட்சு, சாரிடி" என்று அவளின் பூங்கரந்தனைப் பற்றினான்.

"சாரி, நீங்க யாரோனு நினைச்சி என்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க.." என்று அவனை உதாசீனப்படுத்தி விட்டுச் சென்றாள்‌.

"ஹேய், சாரினு சொல்றேன்ல?" என்று அவள் பின்னே வந்தான் அதியன்.

"என்ன வேணும் உங்களுக்கு? எதுக்காக இப்படி சீன் கிரியேட் பண்றீங்க?"

"என் செல்லக்குட்டிக்கு என் மேல எவ்வளவு கோபம் இருக்குனு எனக்கு தெரியனும். ஒரே ஒரு தடவ என்ன திட்டு, நான் அதுக்கப்புறம் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றான்‌ அதியன்.

"வித் ப்ளஷர், ஆரம்பிக்கட்டுமா சார்?"

"ஐயோ, இங்க இல்லமா, என்ன இருந்தாலும் இனிமே இங்கதான் நான் குப்பை கொட்டனும். நீ பாட்டுக்கு எக்குத்தப்பா எதையாவது சொல்லிட்டா என் மானம் கப்பலேறி கனடாவுக்கு போயிடும். அதனால நம்ம சங்கதிய வெளியில வச்சுக்கலாம், ப்ளீஸ்?" என்றான்.

தீட்சண்யா, 'இவன் ஏதாவது பிளான் பண்றானா?' என்று யோசித்துக் கொண்டிருக்க, "ஈவ்னிங் சிக்ஸ் தெர்ட்டி, ரெடியா‌ இரு" என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டான் அதியன்.

சொன்னதைப்‌ போலவே ஆறு முப்பதானதும் வெளியே வந்தாள் தீட்சண்யா..

எதிரிலிருந்த காஃபி ஷாப்பிற்கு அவளை அழைத்துச் சென்றான் அதியன்..

முன்பொருநாள் அதியனுக்கு கலரிங் புக் விற்பனை செய்த குழந்தை இன்று அதியனைப் பார்த்ததும் ஆசையோடு ஓடி வந்தது. இம்முறையும் மூன்று புத்தகங்களை வாங்கிக் கொண்டான் அதியன்.

"அண்ணா, உங்கள அந்த கடையில இருக்குற டிவில காட்டினாங்க. நீங்க செஞ்சதெல்லாம், சூப்பரா இருந்துச்சு. நீங்க ஏன் அண்ணா அந்த வாட்ச்ச வேற ஒரு பையன் கிட்ட கொடுத்துட்டு வந்துட்டீங்க?" என்றாள்.

"அது ஏன்னா, என் கண்ணுக்கு புக் விக்கிற நீ மட்டும்தான்மா தெரிஞ்ச. உன் கூடவே சுத்துற அந்த கால் உடைஞ்ச நாய்குட்டி, இத்தன நாள்ல ஒருதடவ கூட என் கண்ணுக்குத் தெரியவே இல்லம்மா. ஒருத்தன் உயர போகணும்னா ஒவ்வொரு உயிரையும் மதிக்க கத்துக்கணும்.

நான் இன்னும் அந்த அளவுக்கு பக்குவப்படல, அதான் என்ன திருப்பி அனுப்பிட்டாங்க" என்று தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை உண்மைகளையும் அந்த சின்னஞ்சிறு கைகளில் இறக்கி வைத்தான்.

அது அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த தீட்சுவிற்கு அவன் மனம் கொண்ட மாற்றம் புரிந்தது. இன்னும் எவ்வளவு தூரம் போகிறான் என்று‌ பார்க்க நினைத்து அவனுடன் அந்த காஃபி ஷாப்பிற்குச் சென்றாள்.

அவள் நினைத்தது போல அவன் அவன் மன்னிப்பு கேட்கவோ, தன் பக்கத்து நியாயங்களை எடுத்துச் சொல்லவோ முயலவே இல்லை..

'என்னதான் செய்யப் போகிறான்?' என்று குழப்பத்தோடு அவள் அமர்ந்திருக்க, அங்கே அவளின் பெற்றோரும் அதியனின் பெற்றோரும்‌ ஒருசேர உள்ளே நுழைந்தனர்.

அதிர்ச்சியில் தீட்சு விக்கித்துப் போயிருக்க அதியனோ அவள் பெற்றோரிடம் சகஜமாய் பேசி, தங்கள் இருவருக்கான ஊடலையும், அதன்பிறகு தனக்குள் உருவான மன மாற்றத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்லிவிட்டான்.

'மன்னியுங்கள்' என்றொரு வார்த்தை அவன் கேட்கும் முன்பாகவே தீட்சண்யாவின் பெற்றோர் அவனை மருமகனாய் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அத்தனை பேரும் கட்சி மாறுவது புரிந்ததும் முகத்தைச் சுருக்கியவளிடம், "நீ இப்பவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனுங்கிற அவசியம் இல்ல தீட்சு. வேற எவனும் துண்டு போடக்கூடாதுனு ஜஸ்ட் என் சீட்ட‌ ரிசர்வ் பண்ணி வச்சேன், அவ்வளவுதான்.

மத்தபடி உன் ஆசைப்படியே நாம இன்னும் நிறைய நாள் சண்டை போட்டு விளையாடலாம்.." என்றிட அவள் இடம் பொருள் ஏவல் மறந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

கபிலன், "விட்றாதீங்க அண்ணி.." என்று சினிமா ஸ்டைலில் பாட்டு பாட, தீட்சு உட்பட அங்கிருந்த அத்தனை பேரும் அவன் குறும்பில் சிரித்துவிட்டனர்.

தன்னவள் புன்னகையைப் பார்த்ததும் சற்றே திருப்தி கொண்ட அதியன், "அங்கிள், நான் உங்க பொண்ண ஒரு முக்கியமான இடத்துக்கு இப்ப கூட்டிட்டு போகணும், அதுக்கு உங்க பர்மிஷன் வேணும்" என்று அநியாயத்திற்கு நல்ல பிள்ளை போல சீன் போட்டான்.

அவன் நடிப்பை நம்பி, "தாராளமா கூட்டிட்டு போங்க மாப்பிள்ள" என்று வழியனுப்பி வைத்தார் தீட்சுவின் அப்பா.

நேராக அவளை அபிநாஷ் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் அதியன்..

அவனைக் கண்டதுமே அத்தனைக் கதவுகளும் திறக்கப்பட, உரிமையாய் உள்ளே நுழைந்தவனை ஓடிவந்து கட்டிக் கொண்டான் அபிநாஷ்..

"ட்ரெயினிங் எல்லாம் ஒழுங்கா பண்றியா‌ அபி?" என்று கேட்டுக் கொண்டே தான் வாங்கி வந்திருந்த கலரிங் புத்தகங்களை அவன் கையில் தந்தான் அதியன்.

"ஐ, எனக்கு ஒண்ணு, வாட்ச்க்கு ஒண்ணு, டாமிக்கு ஒண்ணு" என்று பங்கு பிரிக்கும் வேலையில் பிள்ளை மும்மரமாய் இருக்க, அதியன் தன்னவளைத் தனக்கென ஒதுக்கியிருந்த தன் பழைய அறைக்கு அழைத்துச் சென்றான்.

'அப்படி என்ன‌ இருக்கிறது?' என்று‌ நகத்தைக் கடித்துக் கொண்டே உள்ளே சென்றவளுக்குப் பேரதிர்ச்சி.

அறையின் உட்பக்கம், படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த சுவர் முழுவதிலும் அவளின் ஆளுயர புகைப்படங்கள் ஓவியமாய் வரையப்பட்டிருந்தது.

கேள்வியாய் தீட்சு அவன் முகம்‌பார்க்க, "நான் உன்ன ஒருநாளும் மறக்கலடி, மறக்கவும் முடியாது.

நான் பக்கத்துல இல்லன்னு நினைச்சு நீ என்ன தேடின, நான் நீ என் பக்கத்திலேயே இருக்கிறதா நினைச்சு வாழ்ந்தேன்.

அவ்வளவுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த வித்தியாசம். காதல்ல இது சரி, இது தப்புனு எதுவுமே கிடையாது செல்லம். ஐ லவ் யூ சோ மச்டி" என்றதும்‌‌ அவன் மார்பில் புதைந்து கொண்டாள் தீட்சு.

அத்தனை நாட்களாய் தங்களுக்குள் தேக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த காதலையும், இருவரும் ஒற்றை அணைப்பில் எதிராளிக்குக் கடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது வெளியே இருந்த அபிநாஷ், "அங்கிள், இங்க வந்து பாருங்களேன்" என்று‌ குரல் எழுப்பினான்.

இருவரும் தங்கள் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே வந்து பார்க்க, வாட்ச் அவன் முழு உடலுக்கும் கவசமாய் மாறியிருந்தது.

அதியன், "வாவ் சூப்பர், நேத்து பார்த்தத விட இப்போ இதுல ஏதோ எக்ஸ்ட்ராவா தெரியுது, என்னனுதான் தெரியலடா" என்றான்.

"கலரிங் புக் தந்தேன்ல, அதுனால எனக்கு இது றெக்கை தந்திருக்கு அங்கிள்" என்றான்.

"எங்க‌ பறந்து காட்டு"

"வாட்ச், வா பறப்போம்" என்றான் அபிநாஷ்.

அடுத்த கணமே இயந்திர இறக்கைகளை விரித்து பறக்க ஆரம்பித்தது வாட்ச்.

கழுகுபோல வானத்தின் மேலே பறக்கும் பிள்ளையை பார்த்து அதிசயித்த தீட்சு, "இவ்வளவு சின்னப் பையன அவ்வளவு தூரம் தூக்கிட்டு போகுது, அவன் பயப்பட மாட்டானா? உன்ன சொல்லனும், ஏன்டா தனியா‌ விட்ட?" என்றாள்.

"யாரு, அவனா பயப்படுவான்? அவனுக்கு பயம்னா என்னனே தெரியாதுடி.."

"ரொம்ப சின்ன பையன்டா அபி, அவன உங்க குடும்பத்தோடவே வச்சிருக்கலாம்ல? ஏன் இங்க விட்டீங்க?" என்றாள்.

"இல்ல தீட்சு, வீடு குடும்பம்ன்ற கூட்டுக்குள்ள இவன அடைக்கக் கூடாது. அப்புறம் இவனும் என்ன மாதிரி என் நாடு என் மக்கள்ன்ற வட்டத்துக்குள்ள அடங்கிப் போயிடுவான்.

அவன் எந்த எல்லைக்குள்ளும் அடங்காத அந்த வானத்துல பறக்க வேண்டியவன், மேலயே இருக்கட்டும்.. இந்த உலகத்துல வாழ்ற ஒட்டுமொத்த உயிரினத்துக்கும் ஒருநாள் அபி தலைவனா வந்து நிப்பான்.." என்றான்.

அது உண்மை என்பதைப் போல அதியற்புத சக்தியாய் தரையிறங்கினான் அபிநாஷ்.

(முற்றும்)
 
Top