கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இளமையில் தனிமை... ரியா மூர்த்தி

கொடூரமே அது தான்.... எத்தனை கோவம் மனஸ்தாபம் இருந்தாலும் பெத்த பிள்ளைங்க முன்ன காட்டக்கூடாது... அவங்கள பாகம் பிரிக்கவும் கூடாது..... அப்படி பண்றதுக்கு பதில் கருவுலையே கலச்சி இருந்தா கூட அந்த பாவ அளவு கம்மியா போயிருக்கும். உயிரோட பாகம் பிரிக்கறது பிள்ளைங்களுக்கு நரகத்துக்கு மேல..... சூப்பர் சிஸ்👏👏👏👏👏
 

Rubavathy

Active member
இன்றைய சூழல்நிலைக்கு ஏற்ற கதை.. கணவன், மனைவி பிரியலாம், ஆனால் தாய், தந்தை பிரியக்கூடாது. அது அவர்களை மட்டுமே நம்பி இந்த பூமிக்கு வந்த அந்த குழந்தைக்கு இவர்கள் செய்யும் துரோகம்.. வித்யா போன்ற பல குழந்தைகள் இன்று இருக்கும் நிலையை கண்முன் காட்சிய காட்டீங்க. சுப்பர்..
 
இளமையில் தனிமை

- ரியா மூர்த்தி



அடைமழை விடாது அடித்துப் பொழிந்திருந்த அந்திமாலை நேரம். அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம் ஓய்ந்து ஆழ்கடல் போன்றதொரு அமைதியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது அந்தப் பள்ளிக்கூட வளாகம்.



சின்னஞ்சிறு அருவியாய் வானிலிருந்து வந்திறங்கும் மழைத்துளிகளை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் வித்யா. அவள் முதுகில் ஒன்றாம் வகுப்பிற்குரிய புத்தகங்களும், கையிலிருந்த லஞ்ச் பேகில் காலியான வாட்டர் பாட்டிலும் டிபன் பாக்ஸும் இடம் பிடிந்திருந்தது.



வாட்டர் பாட்டிலின் மூடியைத் திறந்தும் மூடியும் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தையின் வதனமெங்கிலும் பய ரேகைகள். பசும் பூங்கரமிரண்டும் பறக்கத் துடிக்கும் பாவாடையை, முட்டியோடு அழுந்தப் பற்றும் வேலையில் மும்மரமாய் இருந்தது.



வேடனைக் கண்டது போல் மிரண்டிருந்த மான் விழிகளோ, அடங்க மறுக்கும் கண்ணீரை வெளியேற்றவா வேண்டாமா என்று உள்ளே வெளியே விளையாட்டு விளையாடிற்று..



கார்டிசோல், அட்ரலின் சுரப்பிகள் தன் தனித்திறமையை அவள் உடலில் செயலாக்கி, அவளின் பயத்தை ஊருக்கே தம்பட்டம் அடித்தன.



ஆளரவமற்ற அத்துவானக் காட்டில், தான் மட்டும் தனித்து விடப்பட்டிருப்பதைப் போன்றதொரு நிலையிலிருந்த அவளுக்கு அவசரமாய் அவளின் அம்மா வேண்டும். அணைக்கக்கூட வேண்டாம், அடித்து இழுத்துச் சென்றாலே போதும் எனுமளவு பயம் அவளுள்.



அடிக்கும் குளிருக்கும் அவசரமாய் சுச்சூ வருவதைப் போன்று அடிவயிறு முட்டியது. அவள் நிற்கும் வராண்டாவின் கடைசியிலிருந்த கழிவறை, கருப்புக் கரம் நீட்டி தன்னிடம் வரும்படி அழைப்பது போலிருக்க, கால்களை இறுக்கமாய் சேர்த்துக் கட்டிக் கொண்டாள் வித்யா.



'இங்கேயே சுச்சூ போனாலும் போவேனே தவிர, உன்னிடம் வரமாட்டேன்..' எனும் உறுதி அந்தப் பிஞ்சுக் கால்களிடையே ஒளிந்திருந்தது.



சற்று தூரத்தில், மழைக் காற்றால் தலையாட்டும் மரம் கூட, மாந்திரீகம் செய்யப்பட்ட பிசாசைப் போல அவள் கண்களுக்குக் காட்சி தந்தது. அச்சத்தோடு அசையாமல் நின்றிருந்த உயிர்ப் பதுமையோ, பேயாட்டம் ஆடித்திரியும் அம்மரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்..



அதுவரையில் அமைதியாய் தூறிக் கொண்டிருந்த வானத்திற்கு அவள் மேல் என்ன கோபமோ, சடாரென்று ஒரு பெரிய மின்னலையும் அதைத் தொடர்ந்ததொரு பலத்த இடியையும் தரையிறக்கியது.



மின்னல் வெளிச்சத்துக்கே உடல் உறையுமளவு பயந்த பிள்ளை, செவியதிரும் இடிச் சத்தத்தைக் கேட்டதும் வாய் விட்டுக் கதறியழ ஆரம்பித்துவிட்டது. அஞ்சி நடுங்கும் அப்பெண் பிள்ளைக்கு வஞ்சகம் இழைக்கும் எண்ணத்தோடு, வான் மகனும் மழையின் தீவிரத்தைப் பெரிதாக்கினான்.



அனாதை போல அழுது கரைந்த குழந்தையை ஆற்றுவாரும் இல்லை.. தேற்றுவாரும் இல்லை.. அழுதழுது ஓய்ந்த பிறகு அவளுக்கே தொண்டை வறண்டு கேவல் நின்று போனது.



வரிவரியாய் வடிந்திருந்த கண்ணீர் கோடுகளை அவளுக்குத் துடைக்கத் தோன்றாததால், காய்ந்த வடுக்கள் போல அவள் பொன்வண்ண கன்னமெங்கும் தன் ஓவியத்தை வரைந்து வைத்திருந்தது கண்ணீர்த் துளிகள்.



அழுத அசதியாலும், அமைதியான சூழ்நிலையாலும் அவள் கண்கள் சொருகத் துவங்கிய நொடிதனில், பள்ளிக்கூட கேட் அருகே இரண்டு தெரு நாய்கள் சண்டையிடும் சத்தம் கேட்க, படக்கென தன் விழிகளைப் பெரிதாய் விரித்துக் கொண்டாள்.



'கோபமாகச் சண்டையிடும் நாய் இரண்டும் உள்ளே வந்தால் தன்னைக் கடிக்குமோ?' எனும் பயத்தில் வராண்டாவில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தூணின் பின்புறம் ஒளிந்து கொண்டாள்.



அடுத்த சில நிமிடங்களுக்குள் மழைச் சத்தத்தினைத் தவிர அவளுக்குத் துணைக்கு அங்கே எதுவுமில்லை..



அம்மாவை நினைத்துக் கொண்டே நகத்தைக் கடித்திருந்த பிள்ளைக்கு எதிரில் ஏதோ ஒரு நிழலாடியது. தன்னிச்சையாய் தலை நிமிர்ந்து பார்த்தாள், பள்ளியின் பியூன் தாத்தா பல்லைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தார்..



அவரைப் பார்த்ததும் காரணம் தெரியாமலேயே பயந்து பின்னால் போனாள் வித்யா. கறைபடிந்த பற்களைக் காட்டிக் கொண்டு அவர் அவளை நெருங்கிட, பதறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.



எங்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடியவளின் கண்ணெதிரே பள்ளிக்கூடத்தின் சின்னஞ்சிறு பிள்ளையார் கோவில் தென்பட்டது. முழுமனதோடு தெய்வத்தை நம்பும் பிஞ்சு மனதாகையால், தெய்வமே துணை எனும் நினைப்போடு கோயிலின் உட்பகுதியில் சென்று மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டாள்.



அந்த தாத்தா தன்னைக் கண்டுபிடித்து விடுவாரோ எனும் அச்சம், அவள் இதயக் கூட்டினுள் இருந்த கடிகாரத்தை வேகமாகச் செயல்பட வைத்தது. இருந்தும் ஒருமுறை வெளியே எட்டிப்பார்க்கத் துணிவு வராததால், குத்துக்காலிட்டு தன் லஞ்ச் பேகினைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் வித்யா.



அப்போது அவளெதிரில் ஒருசில கருநிற சிற்றெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அவள் கவனம் முழுவதும் எறும்பின் மீது குவிந்ததால் தாத்தாவை தற்போதைக்கு மறந்துவிட்டது அப்பிள்ளை மனம்.



கழுவாமலிருந்த டிபன் பாக்ஸைத் திறந்து ஆங்காங்கே ஒட்டி இருந்த உணவுப் பொருட்களை எல்லாம் வழித்து எடுத்து, எறும்புக் கூட்டத்தின் நடுவே வைத்தாள் அச்சிறு அன்னபூரணித் தாய். ஆரம்பத்தில் விலகி ஓடிய எறும்புகள் உணவின் வாசனையை உணர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து உண்ணத் தொடங்கியது.



தன் படையலை ஏற்றுக் கொண்ட எறும்புக் கூட்டத்தைப் பார்த்துப் புன்னகைத்தாள் வித்யா. அவள் புன்னகை பொறுக்காத வான் மகனோ பெருங்காற்றோடு சிறிது நீர் சேர்த்து அவள் இருக்கும் திசையில் சாரலாய் தெளித்துவிட்டான்.



தான் இருக்கும் இடமும், தனக்கிருக்கும் எதிரியும் சடாரென்று அவளுக்கு ஞாபகம் வர, அவிழ்ந்த மலர் போன்ற தன் முகத்தை மெதுவாக வெளியே நீட்டிப் பார்த்தாள். அங்கே தூரத்தில் பியூன் தாத்தா இவளைப் பார்த்தபடியே நின்றிருந்தார்.



'ஆ...' எனும் அலறலோடு மீண்டும் தன் பதுங்கு குழிக்குள் பதுங்கிவிட்டது அப்பிஞ்சு.



பயத்தில் அவளுக்கு மீண்டும் சுச்சூ வரும் போலிருந்தது.. அம்மா உடனே வேண்டுமென்று கத்தி அழத் தவித்தது அவளின் உதடுகள்.. ஆனால் மூச்சுகூட விட முடியாத அளவிற்குப் பயம் இருந்ததால் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.



நொடிகள் ஒவ்வொன்றும் நரகமாய் நகர்ந்திருந்த நேரம், ஒரு காரின் ஹாரன் சத்தம் அவள் காதுகளில் வந்து தேனாய் பாய்ந்தது. இதுவரையில் பதுங்கியிருந்த இடத்தை விட்டு விருட்டென எழுந்தவள், பூந்தென்றலாய் சத்தம் வந்த திசையில் பாய்ந்தோடினாள்.



காரிலிருந்து இறங்கிய சங்கவி, கண்ணீரும் கம்பலையுமாய் ஓடிவரும் தன் குழந்தையைப் பார்த்துப் பதறிட, அதுவரை தூரத்தில் நின்று கொண்டிருந்த பியூன் தாத்தாவும் சங்கவியிடம் விரைந்து வந்தார்.



'அம்மா... அம்மா...' என்று அதைத்தவிர வேறெதுவும் பேசாது அழுது தேம்பிய குழந்தையைத் தூக்கித் தன் மார்போடு இறுக்கிக் கொண்டார் சங்கவி.



"என்னடா என்னாச்சு? ஏன் என் செல்லம் இவ்வளவு அழுது? மழை ஜாஸ்தியா இருந்ததால அம்மா ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்டா, இனிமே இப்படி நடக்காது" என்று சமாதானம் சொல்லிக் கொண்டே வித்தியாவின் கண்ணீரைத் துடைத்து விட்டார் சங்கவி.



அந்நேரம் பியூன் தாத்தா அங்கு வர, மீண்டும் அம்மாவின் கழுத்து வளைவில் பதுங்கிக் கொண்டது குழந்தை.



அவள் பயம் புரிந்த சங்கவி பியூன் தாத்தாவிடம் சற்றே கோபமாய், "வித்யாவோட க்ளாஸ் டீச்சர் எங்க? நான் வர்ற வரைக்கும் அவங்க இவளோட இருக்கனும்ல? சின்னப் பிள்ளைய ஏன் தனியா விட்டுட்டுப் போனாங்க?" என்று பொரிந்து தள்ளினாள்.



சங்கவி பேசி முடிக்கும் வரையில் நிதானம் காத்த தாத்தா, "டீச்சர் பாப்பாவோடதான் ரொம்ப நேரம் நின்னாங்க, நடுவுல தலை வலிக்குதுனு எங்கிட்ட சொல்லிட்டு டேப்ளட் எடுக்குறதுக்காக ஸ்டாஃப் ரூமுக்கு போனாங்க.." என்றார்.



சங்கவி கண் ஜாடையால் வித்யாவிடம் அதை உறுதி செய்து கொண்ட பின், "அப்புறம் ஏன்டா இங்க வந்து தனியா நிக்கிற?" என்றார்.



பியூன் தாத்தா, "பாப்பாவ திட்டாதம்மா, தப்பு எம்மேலதான். பச்சப்புள்ள பாவம் தனியா நிக்குதேன்னு பக்கத்துல போனேன், நான் பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள என்ன பார்த்து பயந்து ஓடிடுச்சு.. ஏன் இப்படி பயப்படுறா?" என்றார்.



ஆறு மாதங்களுக்கு முன்பு வரையில் வித்யா இப்படி இருந்ததில்லை.. இப்போதுதான் இப்படி எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகிறாள்.. அதன் காரணம் இன்றுவரை சங்கவிக்கு புரியாத புதிராக இருந்தது..



"நேத்துதான் குட் டச் பேட் டச் அவளுக்கு சொல்லி கொடுத்தேன், அதான் பயந்துட்டா போல. சாரிங்க..' என்று வாய்க்கு வந்த பொய்யை அடித்துவிட்டாள் சங்கவி.



என் அனுபவத்தில் எத்தனை மனிதர்களையும் எத்தனைப் பொய்களையும் பார்த்திருப்பேன் என்பதைப்போல தாத்தா நின்றிருக்க, அவர்கள் இருவருக்கும் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.



அதில் வித்யாவின் தந்தை அஷ்வின் அமர்ந்திருக்க, அடுத்த நொடியே அம்மாவின் கழுத்திலிருந்து கழன்று கொண்ட பிள்ளை, கைகளை றெக்கையாய் விரித்தபடி அப்பாவிடம் ஓடியது.



தேம்பியழும் தன் பிள்ளையின் விழியிலிருந்து விழும் நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் அஷ்வின் இதயத்தில் குத்தீட்டியாய் குத்திட்டு நிற்க, கைநிறைய வாரி அள்ளிக் கொண்டான் தன் சந்தோஷப் புதையலை..



நெடுநாட்களுக்குப் பிறகுத் தன் பிள்ளையைக் கண்ட அஷ்வின் கண்களிலிருந்த பரவசம், ஒரு தந்தையாய் தாத்தாவிற்கு வெகு சுலபமாய் பிடிபட்டது.



"நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. உங்களுக்குள்ள ஏதாவது மனக்கசப்பு இருந்தா, அத உங்க புள்ளைக்காக மறந்திடுங்க. பிரச்சனை இல்லாத வீடுனு ஒண்ணு உலகத்துலயே இல்ல, பிரச்சனைக்கு முடிவா எல்லாரும் கோர்ட் படி ஏறினா புள்ளைங்கதான் நிர்கதியா நிக்கும்.." என்றார்.



அஷ்வின், "அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க.." என்று சமாளிக்க முயல,



தாத்தா, "எனக்கு எழுபத்தஞ்சு வயசு. நான் தினமும் ஆயிரம் புள்ளைங்கள இந்த ஸ்கூல்ல பாக்குறேன் தம்பி. யாரு வீட்டுப்புள்ள எப்படி பழகும், அதுகளுக்கு எந்த குணம் எப்படி வந்திருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். உங்க புள்ள அளவுக்கதிகமான தனிமையால ரொம்ப பயந்திருக்கு..



பச்சப்புள்ள தன் மனசுல இருக்குறத சொல்லிச் சிரிக்க ஆள் இல்லைனா, தனக்கு சொல்லி அழவும் ஆள் இல்லைன்ற முடிவுக்கு போயிடும். இப்ப வரைக்கும் உங்க பாப்பா என்ன பார்த்து பயந்தத உங்ககிட்ட சொல்லவே இல்ல பாருங்க.." என்றதும்,



சங்கவியின் மனம் அவர் கூறியதிலிருந்த உண்மையினை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது.



"இன்னிக்கி உங்களுக்கு உங்க பிரச்சனை பெருசா இருக்கலாம், ஆனா பத்து வருஷத்துக்கு அப்புறம் வாழ்க்கை மாறி இருக்கும். தனிமையில வளர்ற உங்க புள்ளைக்கி எதையும் எதிர்த்து நிக்கிற திராணி இருக்காது, உலகமே ரொம்ப கொடூரமா இருக்கும். ஆசையா பெத்து வளக்குற புள்ளைக்கி தயவு செஞ்சு அந்த தண்டனைய தந்துடாதீங்கய்யா.." என்று கைகூப்பி இறைஞ்சினார் தாத்தா.



சங்கவிக்கும் அஷ்வினுக்கும் நிதர்சனம் விளங்கிற்று, வித்யாவைச் சேர்த்தணைத்தபடி தங்களின் வீட்டுக்குக் கிளம்பினர்.
Super
 
Top