கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் உருகும் சத்தம் – 1

து ஒரு அழகிய விடியல் காலை பொழுது.. தஞ்சாவூர் அருகில் காவிரிக்கரையோரமாய் பச்சை பசேலென கிராமத்து வனப்பும், சிறு நகரத்துக்குள்ளான அனைத்து வசதிகளையும் கொண்ட அழகிய ஊர் அது.. ஊரின் மையப்பகுதியில், மிகப்பெரிய மாளிகை போன்றதொரு வீட்டின் அந்த பெரிய அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த, அழகிய பெரிய கடிகாரம் மணி காலை 6:30 எனக்காட்டியது.

"காவ்யா… காவ்யாக்கண்ணு!!"


அம்மாவின் குரல் கேட்டு கண் விழித்தாள் காவ்யா. அவள் அந்த வீட்டின் தேவதை. குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த செல்லப்பெண். 23 வயது அழகு பதுமை. சற்றே மாநிறத்தில், நீண்ட கரும் கூந்தல், பரந்த நெற்றி, அழகிய கண்கள், நீண்ட மூக்கு, திறமையான சிற்பி செதுக்கியதைப்போல உடல்வாகு என மொத்தத்தில் பார்க்கும் அனைவரையும் ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் எளிமையான தெய்வீக அழகு.

ஒரு பெண்ணின் அழகு, புற அழகை மட்டும் சார்ந்தது அல்ல. காவ்யா தோற்றத்தில் மட்டும் அழகியல்ல. உள்ளும் புறமும் அழகானவள். உயரிய பண்புகளோடு பெரியவர்களிடம் மரியாதை, மற்ற உயிர்களிடத்தில் அன்பு என கடவுளின் அற்புத படைப்புகளில் ஒருத்தி அவள். தஞ்சாவூரில் ஒரு தனியார் கல்லாரியில் எம்.இ. இறுதியாண்டு படிக்கிறாள்.

மகளின் அழகை பெருமிதத்தோடு ரசித்துக்கொண்டே தொட்டு எழுப்பிய அம்மாவின் கைகளை பிடித்து, கன்னத்தோடு அணைத்துகொண்டு சிணுங்கியவள்,

"அம்மா.. இன்னும் பைவ் மினிட்ஸ் தூங்கிக்கிறேன்மா ப்ளீஸ்?" என்று வழக்கமாய் சொல்வதைப்போல் சொல்லிவிட்டு, திரும்பவும் விட்ட தூக்கத்தை பிடிக்க எத்தனித்தாள்.

இன்னும் குழந்தையாய் சிணுங்கும் மகளை ரசித்தபடியே சிவகாமி, "மணி ஆயிடிச்சிமா…மறந்துட்டியா? இன்னைக்கு நாம நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போகணும்ல. உன் அத்தை இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா " என்றாள்.

அத்தை என்றதும் முகம் ரோஜாவாய் மலர சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். அதற்கு காரணம் அத்தை மட்டுமல்ல, அவனும் தான். அவன் அரவிந்தன். அவளது அத்தான். அத்தை பெற்ற அழகிய ராஜகுமாரன். இரண்டு வருடங்களாக அவனுக்காக காத்திருந்தவள், அவனது வருகைக்காக நேற்றெல்லாம் பரபரப்போடு வீட்டை அழகுபடுத்துதல், சமையலை திட்டமிடல் என்று ஓடியாடி களைத்திருந்தாள். அவனை காணப்போகும் அந்த நொடியை எண்ணி மனதில் ஏற்பட்ட பரபரப்பில் இரவு வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தவித்தவள் தன்னையுமறியாமல் உறங்கியிருந்தாள்.



மகளின் முகம் அத்தை என்றதும் மலர்ந்ததை சிவகாமி கவனிக்காமல் இல்லை. மனதோரம் சிறு கவலை எட்டிப்பார்க்க "கடவுளே, என் மகள் எப்போதும் இதே சிரிப்புடன் இருக்க வேண்டும்" என்று வேண்டியவளாய்,

"எழுந்திரிச்சி கிளம்புனா சரியா இருக்கும்டா.. பாட்டி உன்னை புடவை வேற கட்டிக்க சொல்லியிருக்காங்கல்ல? “ என்றாள்.

அவர்களது குடும்பம் ஒரு பாரம்பரிய விவசாய குடும்பம். தஞ்சாவூர் அருகில் வளமான பொன் விளையும் சிறிய ஊர் அவர்களது ஊர். காவ்யாவின் தாத்தா சிவராமன், காவேரி கரையோரமாய் பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்.

சிவராமன் அதிகம் படிக்கவில்லை என்றாலும் நல்ல புத்திசாலி. தனது மூதாதையர் வழி வந்த நிலங்களை தனது கடின உழைப்பால் பல மடங்கு பெருக்கினார். அவரது மனைவி அமிர்தம் அம்மாளும் பெயருக்கேற்றாற்போல் நல்ல மனம் கொண்டவர்.

அந்த ஊரில் அவர்கள் குடும்பத்திற்கென்று நல்ல மரியாதை இருந்தது. இரு மகன்கள் ஒரு மகள் என்று சிறிய குடும்பம். தூரத்து சொந்தங்களிலேயே மருமகள்கள் சிவகாமியும் அருணாவும் வாய்த்ததால் குடும்பம் சிதறாமல் ஒற்றுமையையாய் இருந்தது. அமிர்தம் அம்மாளின் திறமை என்றும் சொல்லலாம். மகளையும் மருமகள்களையும் பிரித்து பார்க்காமல் ஒன்றாக நடத்தியதும் ஒரு காரணம்.

மூத்த மகன் மணிமாறனுக்கு ஒரு மகள், இளைய மகன் ரெத்தினவேலுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என வளமான குடும்பத்தை கட்டிக்காத்தார்.

மகள் வசந்தாவை தஞ்சாவூரில் மணம் முடித்து கொடுத்தனர். அவளது கணவர் சுகுமாரன் மின்சாரவாரியத்தில் பெரிய பதவியில் இருந்தார். அவர்களது ஒரே மகன் அரவிந்தன் தான் காவ்யாவின் உள்ளம் கவர்ந்த கள்வன்.

அமெரிக்காவில் வேலை செய்பவன் இரண்டு வருடங்கள் கழித்து நேற்று தான் விடுமுறையில் வந்திருந்தான். இதோ இன்று வசந்தாவும் சுகுமாரனும் மகனோடு வருவதாக சொன்னதும் சிவராமனும் அமிர்தம் அம்மாளும் முதலில் குல தெய்வ வழிபாட்டிற்க்கு ஏற்பாடு செய்து விட்டிருந்தனர்.

" சரிம்மா.. எப்போ கிளம்பனும்?"

"நான், உன் சித்தி, பாட்டி, தாத்தா ரெடி. அப்பாவும் சித்தப்பாவும் அப்பவே கெளம்பி வயல் வரைக்கும் போயிருக்காங்க. இப்போ வந்துடுவாங்க. நாங்க பூஜை சாமான் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கோம். ப்ரவீண் கூட எழுந்து கிளம்பிட்டு இருக்கான். நீயும் மித்ராவும் சட்டுன்னு கிளம்புனா அத்தையும் மாமாவும் வந்த உடனே கிளம்ப வேண்டியதுதான்” சொல்லி முடித்த அம்மாவை புன்சிரிப்போடு பார்த்தாள்.

"அம்மா யு ஆர் சோ ஸ்வீட்மா. ஒரு சின்ன கேள்விக்கு எவ்ளோ பெரிய பொறுப்பான பதிலை சொல்ற? " அம்மாவின் கன்னத்தை செல்லமாய் கிள்ளியபடியே சொன்னாள்.

"என்ன கொஞ்சினது போதும். சீக்கிரம் எழுந்து கெளம்புமா'' என்று சிரித்தபடியே அறையை விட்டு நகர்ந்தாள் சிவகாமி.

அழகாய் சோம்பல் முறித்துவிட்டு பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மித்ராவை எழுப்பினாள்.

"ஏய் மித்ரா, எழுந்திரு."

"அய்யோ அக்கா.. ஏன் இப்புடி மிட் நைட்ல எழுப்புற?" என்று புரண்டு படுத்தாள் மித்ரா.

"மிட் நைட்டா.. இரு சித்திய கூப்புடுறேன் " என்று வேகமாய் "சித்தீ" என்றவளை தாவி வந்து வாயை மூடினாள். " அக்கா.. இன்னைக்கு என் ஹெல்ப் ஒனக்கு ரொம்ப தேவைப்படும். அதை மறந்துடாத" என்று விளையாட்டாய் மிரட்டியபடியே அவளது அறைக்கு சென்றாள்.

மித்ரா எதை சொல்கிறாள் என்று புரிந்ததும் அவளை அறியாமல் முகம் சிவந்தது. அவளது பால் வடியும் முகம் சிவக்க காரணமாய் இருந்தவன் அரவிந்தன். அவனை நினைத்த நொடியிலேயே அவள் உடல் சிலிர்த்தது.. அவளை கவர்ந்தது அவனது ஆறடிக்கும் மேலான உயரமா. திரண்ட தோள்களா. காந்த கண்களா. கவர்ந்திழுக்கும் புன்சிரிப்பா. அவனது காதலும் நேசமும் சிந்தும் பார்வையா. குறும்பு பேச்சா. அத்தை மகன் என்ற உறவா. நினைவு தெரிந்து அவன் உன்னவன் என்று மனதில் ஆழ பதிந்த உணர்வா. இல்லை இவை எல்லாமேவா. அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவளது தவம் எல்லாம் வாழ்க்கை முழுதும் அவனை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது நடக்குமா ? நினைத்த மாத்திரத்தில் சற்றே அவள் முகம் வாடியது.

"க்கா..” அலறியபடியே வாயில் பிரஷ் வைத்தபடியே மறுபடியும் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

"என்னடி ? ஏன் இப்படி கத்துற"

"அக்கா உன் பிங்க் கலர் லெஹெங்காவ நான் இன்னைக்கு கோவிலுக்கு போட்டுக்குறேன்.. ஓகே வா"

"ஓகே டி.. அதுக்கு ஏன் கத்துற? தாத்தா கேட்டா திட்ட போறாரு.. அந்த லெஹெங்கா வாங்குனது மட்டும் தான் நான்.. போடுறதுல்லாம் நீ தானே .. அப்புறம் ஏண்டி ஒவ்வொரு டைமும் கேக்குற"




"இருந்தாலும் உன் பெர்மிஷன் இல்லாம போடுறது தப்பு இல்ல " என்று கண் சிமிட்டியவளை,

“அவ்ளோ நல்லவளா நீ” என்றாள் காவ்யா.

"உனக்கு என்னம்மா. நீ அனுஷ்கா மாதிரி அம்சமா இருக்க. எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்கு. நாங்கல்லாம் அப்படியா? கொஞ்சம் ரிச்சா போட்டாதான் பசங்கள திரும்பி பாக்க வைக்க முடியும் “ என்று நீட்டி முழக்கினாள் மித்ரா.

அவளை குறும்பாய் ரசித்தபடியே "அடிப்பாவி. அப்போ நீ கோவிலுக்கு சாமி கும்பிட வரல. சைட் அடிக்க தான் வர்றியா?" என்றாள்.

''ஹலோ மேடம், தாங்கள் எதுக்கு வரீங்க? " கண் அடித்தபடியே கேட்ட தங்கையை வெட்கம் தாங்காமல் தலையணையால் அடிக்க வந்தாள்.

மித்ரா காவ்யாவின் சித்தப்பா ரெத்தினவேலின் மகள். அவளைவிட ஐந்து வயது சிறியவள். இருவரும் சொந்த அக்கா தங்கையாகவே பழகினர். பிறந்தது முதல் ஒரே வீட்டில் அதுவும் பெரியவர்கள் ஒற்றுமையாய் இருந்ததால் சிறியவர்களுக்கும் அது தானாகவே வந்து விட்டிருந்தது.

யில் கழுத்து நிற சில்க் காட்டன் புடவையில் தேவதையாய் மின்னினாள் காவ்யா. மெல்லிய கண்களை உறுத்தாத ஒப்பனையில், அடர்த்தியான கூந்தலை மிகவும் நேர்த்தியாக பின்னி ஒரு சைடாக முன்பக்கம் விட்டு, அம்மா வைத்து விட்ட மல்லி சரத்தோடு. சற்றே மெல்லிய வெட்கத்தோடு வளைய வந்த பேத்தியை பெருமிதத்தோடு பார்த்த அமிர்தம் அம்மாள்,

"என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா" என்றபடியே கைகளால் திருஸ்டி கழித்தாள். பாட்டியை பார்த்து புன்னகைத்தவள் "பாட்டி தாத்தா பக்கத்துல வந்து நில்லு" என்றபடியே இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினாள்.

சிவகாமியும் அருணாவும் மன நிறைவோடு ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க.. அப்போதுதான் உள்ளே நுழைந்த மணிமாறன் புடவையில் தன் மகளை ரசித்தபடி நின்றார்.

"நல்லா இரும்மா. உன் மனம் போல் என் பேரனோட பல்லாண்டு காலம் வாழணும்" என்று சிவராமன் பேத்தி தலையில் கைவைத்து ஆசீர்வதிக்க அமிர்தம் அம்மாள் அவளை வாரி அணைத்து கொண்டாள்.

“வசந்தாவும் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கா. இன்னைக்கு கோவில்ல வச்சி கல்யாண பேச்ச ஆரம்பிச்சிடணும்பா" மணிமாறன் சொல்லி முடிப்பதற்குள் ரெத்தினவேலும் சேர்ந்துகொண்டார்.

"ஆமாம்பா.. ஊர்ல கூட கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டுலயே மாப்பிளையை வச்சிக்கிட்டு ஏன் இன்னும் கல்யாண சாப்பாடு போடா மாட்டேங்கிறோம்ன்னு." என்றார்.

பெரியவர்கள் பேசியத்தைக்கேட்டு மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் சற்றே மனக்கலக்கத்துடன் பயத்தில் மனது வேகமாக அடித்துக்கொள்ள மெதுவாக மித்ராவை பார்த்தாள் காவ்யா.

" ஒண்ணும் பயப்படாத" என்பதுபோல் சைகை செய்தாள் மித்ரா.

விதியை வெல்ல மதியால் மட்டும் முடியும் என்றால் பலர் வாழ்வை வென்று விட்டிருப்பர்.
 
Last edited by a moderator:

Akila vaikundam

Moderator
Staff member
அக்கா இரண்டாவது முறையா இந்த கதையை படிக்க ஆரம்பிக்கறேன்
சூப்பர் கா வாழ்த்துக்கள் கா
 
Top