கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 1

Rhea Moorthy

Moderator
Staff member
அளவுக்கு அதிகமான காதல் உணர்வினால் தடம் புரண்ட கருமேகங்கள், அதிகாலைப் பொழுதென்றும் பாராமல் மண் மகளை, மழையெனும் கரம் நீட்டி ஆரத் தழுவிக் கிடந்த அதிகாலைப் பொழுது..

மும்பையிலிருந்து சென்னை நோக்கி தடதடவென்று பயணித்துக் கொண்டிருந்த தொடர் வண்டியில், நம் நாயகன் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

ட்ரெயின் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு முன்னாலேயே, பயணிகள் அனைவரும் தங்களுடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு, முண்டியடித்த படி இறங்கத் தயாரானார்கள்.

ட்ரெயின் நின்ற பிறகும் சயனப் பெருமாள் போல அசந்து உறங்கிக் கொண்டிருந்த நம் நாயகனை, ஒரு பெரியவர் வந்து தோளைத் தட்டி எழுப்பி விட்டார். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அதிரடியாய் கண் விழித்து எழுந்தவன், தான் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தை உணர்ந்ததும், படக்கென்று மேல் பெர்த்திலிருந்து கீழே குதித்தான்.

"தம்பி.. பார்த்துப்பா.. பார்த்து இறங்கு.. கை கால்ல அடிபட்டுடப் போகுது" என்று பாசத்துடன் சொன்னார் அந்தப் பெரியவர்.

அவன் சற்றே சங்கோஜமாக தலையைச் சொறிந்தபடி, "என்ன எழுப்பி விட்டதுக்கு ரொம்ப நன்றிங்க, நேத்து முழுக்க அலைச்சல் ஜாஸ்தி, அதான் அசந்து தூங்கிட்டேன்.." என்று சொல்லிக் கொண்டே லோயர் பெர்த்தின் கீழ் இருந்த தன் லக்கேஜை வெளியே இழுத்தான்.

அந்தப் பெரியவர், "உண்மையில நான்தான்பா உனக்கு நன்றி சொல்லனும். எனக்கு பேக் பெயின் இருக்கு, அப்பர் பெர்த்துல தூங்க முடியாது.. நேத்து டிடிஆர் ஸீட்ட மாத்தித் தரச் சொல்லி சுமாரா பத்து பேர் கிட்ட கேட்டாரு, யாருமே எழுந்து வரல.

நீ யாரோ எவரோ எனக்கு தெரியாது, ஆனா படக்குனு உன் சீட்ட எனக்கு விட்டுக்கொடுத்த.. நீ மட்டும் இல்லேன்னா நான் நேத்து முழுக்க தூங்க முடியாம ரொம்பவும் சிரமப்பட்டிருப்பேன். உன் பேர் என்ன தம்பி?" என்றார்.

"என் பேர் அதியமான். எங்கம்மா ஒரு தமிழ் டீச்சர் அதனால், அவங்களுக்கு பிடிச்ச இந்தப் பெயரை எனக்கு வச்சுட்டாங்க. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்ன அதின்னு கூப்பிடுவாங்க, உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி கூப்பிட்டுக்கோங்க.." என்று மெல்லிய புன்னகையோடே பேசினான் அதி.

"இந்த பேருக்கு ஏன் தம்பி இப்படி சலிச்சுக்குற, உங்கம்மா உனக்கு ஒரு நல்ல ராஜாவோட பேரைத் தான வச்சிருக்காங்க? நீயும் பார்க்குறதுக்கு ராஜாவாட்டம் தான் தெரியற" என்றார்.

அந்தப் பெரியவர் சொன்னது சரிதான்.. அதியமான் தன் பெயருக்கேற்றபடி ஆறடிக்கும் அதிகமான உயரம் கொண்டவன். உயரத்திற்கு ஏற்றார் போல உலக்கைக்கு நிகரான தோள்களும் தொப்பையில்லா வயிறும், காண்போரைக் கட்டி இழுக்கும் கண்களும், கத்தி முனை மூக்குமென தமிழ் இளவட்டங்களுக்கே உரியத் தனித் தன்மையோடு வளர்ந்து இருக்கிறான் அதியமான்.

பெரியவரிடம் கேலியாக, "ஒரு ஸீட் கொடுத்ததுக்காக நீங்க இவ்வளவு பெரிய பாராட்டுப் பத்திரம் வாசிப்பீங்கன்னு, சத்தியமா நான் எதிர்பார்க்கலைங்க.." என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டான்.

பெருந்தன்மையான அவன் பேச்சைக் கேட்டு மெல்லச் சிரித்த பெரியவரும், தன்னுடைய பையை எடுத்துக் கொள்ள, இருவரும் இணைந்து ட்ரெயினிலிருந்து கீழே இறங்கினர்.

மழைச்சாரல் இன்னும் வேகம் குறையாமல் மண்ணோடு சரசமாடிக் கொண்டிருந்ததால், மனிதர்கள் கூட்டம் ட்ரெயினில் இருந்து இறங்கியதும் நிற்கக் கூட விரும்பாமல் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டிருந்தது.

முதியவரும் இளையவனும் அளவளாவிக் கொண்டே அன்ன நடை நடக்க, அங்கே தரையில் ஒரு வாட்ச் கிடப்பதைப் பார்த்தார் பெரியவர். அதைக் கையில் எடுத்தவர் தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினார்.

அவரைத் தொடர்ந்து அதியமானும் கண்ணுக்குத் தெரியும் தொலைவு வரையில் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தான். கண்ணுக்குத் தெரியும் தூரம் வரையில் ஒருவர் கூட இல்லை..

அடை மழையிலிருந்து தப்பிப்பதற்காக அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிய ஜனக் கூட்டத்தினர் எவரும் இந்த பகுதிக்குத் திரும்பி வர வாய்ப்பும் இல்லை என்று இருவருக்கும் தெரியும்.

அந்தப் பெரியவர் வாட்ச்சை பார்த்துக் கொண்டே, "எவனோ மறந்து விட்டுட்டுப் போயிட்டான் போலத் தெரியுது, இந்தாப்பா இதை நீ வச்சுக்கோ.." என்று அதியமான் கையில் கொடுத்தார்.

அதியமான் அதை தன் வலது கையால் வாங்கி முன்னும் பின்னும் திருப்பி திருப்பிப் பார்த்தான். அது ஒரு அல்ட்ரா மாடர்ன் செல்போன் வாட்ச், அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த கம்பெனியின் பெயரும் இல்லை.

"இல்லைங்க, இது பாக்குறதுக்கு கொஞ்சம் காஸ்ட்லியான வாட்ச் மாதிரி தெரியுது. கண்டிப்பா செல்போன் சிம்கார்டோட இத கனெக்ட் பண்ணி இருப்பாங்க, நமக்கு எதுக்குங்க வம்பு? நாளைக்கு யாராவது தேடி வந்து நாமதான் திருடினோம்னு சொல்லிட்டா ரொம்ப அசிங்கமா போயிடும்.." என்றான் அதியமான்.

"மொத்த ட்ரெயினும் காலியா கிடக்கு, மழை வேற சோன்னு கொட்டுது.. கையிலிருந்து கழன்டு விழுந்த இந்த வாட்ச்சுக்காக எவனாவது திரும்பி வருவானா? சும்மா எடுத்துட்டு போப்பா, அப்படியே யாராவது திரும்ப கேட்டாலும் கொண்டு வந்து தரேன்னு சொல்லிக்கோ" என்றார் பெரியவர்.

அப்போதும் அதியமான், "இல்லைங்க எனக்கு வேண்டாம், நீங்க வேணும்னா எடுத்துட்டு போங்க.." என்றான்.

அதற்குப் பெரியவர், "நான் கிராமத்தான், எங்க ஊர்ல சட்டை போட்டுகிட்டு கூட நடக்கமாட்டேன்.. இதுல வாட்ச் ஒரு கேடா? இந்த வாட்ச் பாக்குறதுக்கு உன்ன மாதிரி இளவட்ட பசங்க கட்டிக்கிற மாதிரிதான் இருக்கு. இங்கயே கிடந்தா பெருச்சாளி கடுச்சு வீணாத்தான் போகும், அதுக்கு நீயே எடுத்துட்டுப் போலாம், இந்தாப்பா பிடி.." என்று வலுக்கட்டாயமாய் அவனுடைய கையில் திணித்து விட்டுப் போனார்.

அதி அதை ஆன் செய்து செட்டிங்ஸ் எப்படி இருக்கிறதென்று பார்த்தான். அதில் ஜிபிஎஸ், லவுட் ஸ்பீக்கர், ஸ்டோரேஜ், மல்டி மீடியா என்று ஏகப்பட்ட வசதிகள் இருந்தது. ஆனால் எந்த இடத்திலேயும் பொருளின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ளும் படியான தகவல் எதுவும் இல்லை.

'நல்ல வொர்த்தான வாட்ச்சுதான், அந்தப் பெரியவர் சொன்ன மாதிரி இது இங்கேயே கிடந்தா ஒண்ணு திருட்டு போகும், இல்ல குப்பைக்குப் போகும். நாமளே நம்ம வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம்.. நாளபின்ன யாராவது கேட்டா, திருப்பி கொடுத்திடுவோம்.." என்ற முடிவோடு அதை தன் வலது கரத்தினில் மாட்டிக் கொண்டான்.

பொதுவான ஆண்களும் பெண்களும் தங்களின் இடது கரத்தில்தான், வாட்ச் பிரேஸ்லெட் போன்ற உபகரணங்களை அணிவார்கள்.. வெகு சிலரே வலது கையில் வாட்ச் அணியும் பழக்கம் உடையவர்கள். அதில் அதியமானும் ஒருவன்..

அதற்குக் காரணம் அவனின் அம்மா கிரகலட்சுமி.. தமிழ் ஆசிரியர் பணியில் இருப்பவருக்கு தன் வலதுகையினை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதி இன்பம். அதனாலேயே வலதுகையில் கைக்கடிகாரம் அணிவதைப் பழக்கமாக வைத்திருந்தார்.

அதியமான் தன் அப்பாவின் உடல் அமைப்போடும் அம்மாவின் குணத்தோடும் பிறந்திருப்பவன்.. ஆதலால் அவன் அம்மாவிடமிருந்து நீதி, நேர்மைகள் போல சிற்சில குண நலன்களும் அவனோடு வந்து ஒட்டிக் கொண்டது.

அதியமானின் தம்பி கபிலன் அப்படியே இவனுக்கு நேர் எதிர்மறை குணம் கொண்டவன். தற்சமயம் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருபவன், அவன் அடித்த லூட்டிகளை இந்திய வரலாற்றிலேயே எவரும் செய்ததில்லை எனலாம்..

இவ்வளவிற்கும் இவர்களின் அப்பா தணிகாசலம் ஒரு கணக்கு வாத்தியார்.. அவரின் பெயரைக் கேட்டாலே அத்தனை மாணவர்களும் தெறித்து ஓடுவார்கள். அவரின் நேர்மையான குணத்திற்காக அடிக்கடி பணி மாற்றம் நிகழ்வதும் உண்டு.

தாத்தா கட்டி வைத்த வீடும், தங்கமாய் இரு ஆண் பிள்ளைகளும் இருப்பதனால் கிரகலட்சுமியின் மிடில் கிளாஸ் வண்டி, எங்கேயும் முட்டாமல் மோதாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அப்பாவுக்கு, அடங்காத வானரம் போன்ற கபிலன் பிள்ளையாய் வந்து பிறந்து இருக்கின்றான்.

இருந்தும் படிப்பில் அவன் கனகச்சிதமாய் இருப்பதால் இதுவரையில் அவனை அப்பாவிடமிருந்து அம்மாவும் அண்ணனும் சேர்ந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர். அதியமானுமே போன வருடந்தான் தன் படிப்பை முடித்து விட்டு, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலையில் சேர்ந்திருந்தான்.

அந்த அளவிற்கு அவர்களின் வீட்டில் படிப்பு அதி முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. வாத்தியார் வீட்டுப் பிள்ளை மக்கு எனும் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் தணிகாசலம் அத்தனை உறுதியாய் இருந்தார்.

மரியாதை நிமித்தமாக அதியனும் அப்பாவின் முன் அடங்கித்தான் இருப்பான். வீட்டு வாசல்படியைத் தாண்டி விட்டால் அவனும் ரெட்டை வால் குருவிதான். அவன் குறும்புகள் அத்தனையும் ஊமைச் சேட்டைகளாகவே இருப்பதால் அடுத்தவர் கண்களுக்கு அவன் ஒரு பொறுப்பான ஆண்மகன்..

அவனையும் கலங்கடிக்கும் படியாக வரம் வாங்கி வந்து பிறந்திருக்கிறாள் பெண்ணொருத்தி..

தீட்சண்யா.. பெயருக்கேற்றபடி தீட்சண்யமான கண்களோடு பிறந்தவள்.. பழுக்கக் காய்ச்சிய தங்கத்தின் தேகத்தோடு, பருத்தி ஆடையில் பவனிவரும் அந்த அழகுப் பதுமைக்கு அவள் அலுவலகத்தில் மட்டுமே பத்து பதினைந்து பேர் ரசிகர்கள்..

அதியனின் கலகலப்பான பேச்சுக்கும், கேட்கும் போதெல்லாம் உதவி செய்யும் குணத்துக்கும் அவனுக்கும் நிறையப் பெண் ரசிகைகள் உருவாகி இருந்தன. அதிலும் ஒருசில பெண்கள் அவனிடம் நேரடியாகவே தங்களது காதலையும் சொல்லிவிட்டிருந்தனர்.

அவர்கள் அத்தனை பேரையும் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்ததன் பாவம்தான், அதியனை இப்பொழுது தீட்சண்யா உருவத்தில் விரட்டுகிறது.. அவன் தன்னைத்தான் விரும்புகிறான் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், வேடிக்கைக்காக அவனைச் சுற்றலில் விடும் குணம் அவளுக்கு..

இருவரும் ஒன்றரை வருடங்கள் முன்பாக ஒரே நாளில் தான் பணியில் சேர்ந்தார்கள். ஆரம்பத்தில் அதியனும் அவளிடம் ஒரு நல்ல நண்பனாகத்தான் பழகினான். நாளாக நாளாக அவளிடம் இருந்த ஏதோ ஒரு தனித்தன்மை அதியனுக்கு அவளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

தன்னை அறியாமலே தான் அவள் பக்கம் ஈர்க்கப் படுவது புரிந்ததும், உள்ளத்தினுள் உரம் போட்டு வளர்க்கப்படும் காதல் செடியின் உயரத்தை உணர்ந்தான் அவன். உணர்ந்ததோடு மட்டும் இல்லாமல், அவளிடமும் அவ்வப்போது பேச்சு வாக்கில் ஜாடை மாடையாகத் தன் மன விருப்பத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

அவன் எப்படிப் பேசினாலும் சரி, அவளிடமிருந்து அவனுக்குச் சாதகமாய் எந்த பதிலும் வராது..

மற்றபடி நன்றாகப் பேசுவாள், இனிமையாய் பழகுவாள், கள்ளம் கபடமின்றி சிரிப்பாள், அதியனைக் காணுமென்றால் மெனக்கெட்டுத் தேடுவாள், அவன் உதவி தேவை என்று வாய் திறந்து கேட்கும் முன்னால் ஒடி வந்து முதல் ஆளாக நிற்பாள்..

ஆனால் காதலென்று வரும் போது மட்டும் புதிதாக வானத்திலிருந்து வந்திறங்கிய ஏலியன் போல வித்தியாசமாக நடந்து கொள்வாள்.

'இந்த பிசாசுக்கு என்னதான் பிரச்சனை? ஒரு வேளை நானே நேரடியா என் மனசுல இருக்கிறத சொல்லனும்னு எதிர்பார்க்கிறாளா? இன்னும் கொஞ்ச நாள் என்னோட பழகி பார்க்கணும்னு நினைக்கிறாளா? இல்ல வேற எதாவது பெர்சனல் பிராப்ளம் இருக்குதா?' என்று மண்டை காய்ந்து போனான் அதியன்.

எவ்வளவு யோசித்தாலும் அவள் குணம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆழ்கடலை விடவும் பெண் மனம் ஆழம் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?

தயக்கம் விட்டு அவளிடம் நேரடியாக போய் காதலைச் சொல்வதற்கு அதியனுக்கு ஒரு நிமிடம் போதும்..

ஆனால் அவள், 'என் மனசுல அப்படி எதுவுமே இல்ல டா..' என்று முக்த்தில் அடித்ததைப் போல் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனால் என்ன செய்ய முடியும்?!

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்னும் பழமொழிக்கு ஏற்ப, காலம் கனியும் வரை காத்திருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டான் அதியன்.

ஐயோ பாவம்.. அவனுக்கான பழம் அத்தனை சுலபத்தில் கனியப் போவது கிடையாது.

அந்த கேடிப் பெண், 'அவனே துணிவு வந்து பேசும் வரையில் பத்திரமாய் தன் காதல் ஃப்ரீஸருக்குள் உறங்கட்டும்!..' என்று பூட்டி வைத்து விட்டாள்..

தன்னவளின் மனம் புரியாமல், கலிகாலத்து விசுவாமித்திரன் போல சுற்றிக் கொண்டிருந்தான் அதியமான்..

'பொண்ணுங்கள மாதிரி வித்தியாசமான ஜீவராசி இந்த உலகத்திலேயே கிடையாதுப்பா. தன்னை விட பலசாலியாக இருக்குற ஆம்பளைங்கள கிறுக்கு புடிச்சி அலைய விடறதுல அவங்களை அடுச்சுக்க ஆளே கிடையாது.. என் காதலி மட்டும் அதிலிருந்து விதிவிலக்கா என்ன? அவளும் கிட்டதட்ட அதே வேலையைத்தான் பாக்குறா..' என்பதே அவன் அறிவு இறுதியாய் அடைந்த ஞானம்..

ஆனால் அவளின் ஞானம் அவனை விடவும் நூறு மடங்கு அதிகப் படியானது..

அவன் எப்போது எங்கே சுற்றிக் கொண்டிருப்பான் என்று அவளுக்கு யாரும் தகவல் சொல்வது கிடையாது. ஆனால், எப்போதும் அவன் இருக்கும் இடத்தையும், எப்போது வந்து செல்கிறான் என்பதையும் மிகத் துல்லியமாய் அனுமானித்து விடுவாள்.

இதோ இப்போதும் கூட அவன் தன் ட்ரெயின் நிற்கும் நேரத்தை நேற்றிரவு வாட்ஸப்பில் அனுப்பியதோடு சரி, அதன் பிறகு அவளுக்குத் தொடர்பு கொள்ளவே இல்லை.

ஆனாலும் சரியாக அவன் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே, 'வீட்டுக்கு போயிட்டியா அதி?..' என்ற மெசேஜ் அனுப்பி விட்டாள்.

இவ்வளவுக்கும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நம்ம ஊர் ட்ரெயின் எதிர்பார்த்ததைவிட அரைமணி நேரம் முன்னதாகவே சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து விட்டது..

அவள் மெஸேஜ் பார்த்ததுமே, பயண களைப்பினால் உடல் அசந்து சோர்வாக இருந்தவனின் முகம் அன்றலர்ந்த மலராய் விரிந்து விட்டது. ஆனாலும் வீட்டின் நடு மையத்தில் சட்டமாக அமர்ந்திருந்த அப்பாவின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க நினைத்தான் அதியன்.

கிச்சனிலிருந்த அம்மாவிடம், "அம்மா.. வந்துட்டேன்.." என்றான்.

நான்கு நாட்களுக்குப் பிறகாக வீடு திரும்பியிருக்கும் தன் மூத்த பிள்ளையின் குரலைக் கேட்டதும் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு வந்தார் கிரகலட்சுமி.

"ஒரு ஃபோன் பண்ணிட்டு வர மாட்டியாடா? இரு டீ போட்டு தர்றேன்.." என்று சொல்லிக்கொண்டே பால் பாத்திரத்தைத் தூக்கி அடுப்பில் வைத்தார்.

"டீ வேண்டாம்மா.. நைட்டு சரியா சாப்பிடலை, நான் போய் குளிச்சுட்டு வந்து டிஃபன் சாப்பிட்டுக்கிறேன்.." என்றான் அதியன்.

"சரிடா, போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே கிச்சனிலிருந்து புறப்பட்டு விட்டான் அதியன்.

ஆனாலும், "ம்.. நல்லாத்தான்மா போச்சு.." என்று பதில் அளிக்கவும் தவறவில்லை..

அறைக்குள் போனதும் மனது முழுவதும் உற்சாகம் குடிகொள்ள, பேக்கை மெத்தை மேல் போட்டு விட்டு, அவளிடம் சேட் பண்ண வசதியாக பால்கனி பக்கம் போய் அமர்ந்து கொண்டான்.

"நான் வீட்டுக்கு வந்தது உனக்கு எப்படி டி தெரிஞ்சது? பின்னாடி ஆள் விட்டு பாலோ பண்றயா?" என்று கேட்டான்.

"இந்த பாடி சோடாவ ஆள் வச்சு வேற ஃபாலோ பண்ணனுமாக்கும்? நான் சும்மா கெஸ் பண்ணி கேட்டேன் அவ்வளவுதான், நெஜமாவே வீட்டுக்கு போயிட்டியா?" என்றாள்.

"அதெப்படி டி? கெஸ் பண்ணி சொன்னாக் கூட இதுதான் நான் ட்ரைன்ல இருந்து இறங்க வேண்டிய நேரம். ஆனா நான் கரெக்டா வீட்டுக்குள்ள என்டர் ஆன அடுத்த நிமிஷம், நீ வீட்டுக்கு போயிட்டியான்னு கேக்குற.. எப்படி உன்னால இவ்வளவு சரியாக கெஸ் பண்ண முடியுது?!.." என்று வார்த்தையால் வலை விரித்துப் பார்த்தான்.

"ஐயோ ராமா.. சத்தியமா நான் குத்து மதிப்பாத்தான்யா கேட்டேன். எனக்கு எங்க ஹாஸ்டல் மெஸ்ல சாப்பாடு போட ஆரம்பிச்சிட்டாங்க, நான் கிளம்பறேன்.. நீயும் தூங்காம சீக்கிரமா கிளம்பி ஆபீஸ் வா, அங்க நாம சாவகாசமாக உட்கார்ந்து உன் டூர் கதையெல்லாம் பேசிக்கலாம்.." என்று தப்பித்து ஓடிப்போய் விட்டாள்.

"அடியே பொண்டாட்டி, பயங்கரமான ஆளுடி நீ. உன்ன கட்டிக்கிட்டா நான் உன்ன ஏமாத்தவோ, ஒரு குட்டி சீட்டிங் செய்யவோ முடியாது போல இருக்கே?!" என்று அவள் இல்லாத நேரம் பார்த்து அவளைச் செல்லமாகத் திட்டினான் அதியன்.

அவன் வாய்தான் திட்டிக் கொண்டே இருந்தது, உள்ளமோ அவள் தன் மேல் காட்டிடும் அக்கறையை நினைத்து இனம்புரியா ஒருவித மாய வலையில் சிக்கிச் சில்லிட்டுப் போயிருந்தது.

தேடினாலும் கிடைக்காத இந்த இதமான தருணங்களை உணர்வுப் பூர்வமாய் அனுபவித்துக் கொண்டே வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அப்போது திடீரென பால்கனி கதவு படாரென்று திறந்து கொண்டது..

கனவு கலைந்ததால் திடுக்கிட்டு எழுந்த அதியன் முன்பு அவன் தம்பி கபிலன் ஈரத் துண்டை உதறிக் கொண்டிருந்தான்.

அதியன், "அறிவு கெட்ட தடிமாடு, கதவை இப்படித்தான் உடைக்கிற மாதிரி திறப்பியா?" என்றான்.

"ஆங்.. நீ இங்க நிக்கிறனு எனக்கென்ன ஜோசியமா தெரியும்? கதவுக்கெல்லாம் பயப்படுற உனக்கு எவன்டா ஐடி கம்பெனில வேலை கொடுத்தது? தள்ளு தள்ளு.." என்று அவனைத் தள்ளி விட்டுவிட்டுத் தன் ஈர உடைகளைக் காயப்போட ஆரம்பித்தான்.

தன்னவள் தன்னைச் சீக்கிரம் வரச் சொன்னது அதியனின் புத்தியில் உரைக்க, தம்பியோடு வம்பு வளர்ப்பதை விடுத்து போனையும் வாட்ச்சையும் செல்பில் வைத்து விட்டு வேகவேகமாய் குளிக்கச் சென்றான்.

அதியன் குளித்து விட்டு டவலோடு வெளியில் வரும் போது, அவனுடைய தம்பி கபிலன் மெத்தை மேல் ஒரு பக்கமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டு அந்த வாட்ச்சை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

கபிலன் குழந்தைப் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட வயதில் நிற்கும் இளைஞனாதலால் குறும்புக்குப் பஞ்சமின்றி இருக்கும் அவன் செயல்களெல்லாம்.

அப்பாவின் கண்டிப்புக்கு அடங்காத அவன்தான், அந்த வீட்டின் வில்லன். அவன் தலையைத் தப்புவிக்க தமையனும் தாயும் பல தடவை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து உள்ளனர்.

அவனுக்கு அதியன் கொண்டு வந்த அந்த வாட்ச் ரொம்பவே பிடித்துப் போனது..

"ஏன்டா அண்ணா, எனக்காகத் தான் இத நீ வாங்கிட்டு வந்தயா? எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு" என்று தன் கையில் கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் லூசு.. யாரைக் கேட்டு இந்த வாட்ச்சை எடுத்த? இது வேற ஒருத்தரோட வாட்ச், ரயில்வே ஸ்டேஷன்ல தெரியாம மிஸ் பண்ணிட்டு போயிட்டாங்க. அவங்க எப்ப கேட்டாலும் திருப்பி கொடுக்கனும், எடுத்த இடத்திலயே அத கொண்டு போய் வைடா.." என்று கத்தினான்.

"அண்ணா நல்லவனா இருக்கலாம், அதுக்காக உலகமகா நல்லவனா இருக்க முயற்சி பண்ணாத.. அதான் மிஸ் பண்ணிட்டாங்கன்னு நீயே சொல்றல, அவங்க திரும்ப கேக்குற வரைக்கும் இது நம்ம பொருள்.." என்றான் கபிலன்.

"அந்தப் பேச்செல்லாம் வச்சுக்காத, குடுன்னு சொன்னா திருப்பிக் கொடு.." என்று சத்தம் போட்டான் அதி.

"முடியாது போடா.." என்று வேகமாக ஹாலுக்கு ஓடிவிட்டான் கபிலன்.

ஏற்கனவே பள்ளிக்கூடத்திற்கு தாமதமாகி விட்டது என்ற அவசரத்தில், வேகவேகமாய் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த கிரகலட்சமியிடம் சென்று நியாயம் கேட்டான் கபிலன்.

"டேய் அதியா.. ஒரு நாள் தானடா தம்பி அந்த வாட்ச்ச கேக்கறான், எடுத்துட்டு போயிட்டு வரட்டும்" என்று தீர்ப்பு சொல்லி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார் அவனுடைய அம்மா..

அதியனோ விடாப்பிடியாய் தன் தம்பியைப் பார்த்து, "டேய் அதுல நான் பாம் வச்சிருக்கேன், கரெக்ட் டைம்ல கரெக்டான ஸ்விட்ச்ச நீ ப்ரஸ் பண்ணலனா, பயங்கரமா பீப் சவுண்ட் வரும். அடுத்த அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிச்சிடும்.." என்றான்.

"பரவாயில்ல.. உன் புண்ணியத்தில எனக்கு ஒரு நாள் காலேஜ் லீவு கிடைக்கும். வைக்கறதுதான் வைக்கற கொஞ்சம் பெரிய பாம்மா வச்சுவிடு.. எங்க காலேஜ் கட்டிடமெல்லாம் ரொம்ப பழசு, ஏதோ பெயிண்ட் அடிச்சு புதுசு மாதிரி பாவ்லா பண்ணி வச்சிருக்கானுங்க.

பாம் வெடிச்சா அவங்களுக்கும் கட்டிடத்தை இடிக்கற வேலை மிச்சமாகும்.. எங்களுக்கும் மாசக்கணக்கா லீவு கிடைக்கும்.. நீயும் இந்த ஐடி வேலைய தலைமுழுகிட்டு மூணு வேளையும் உன்ன உட்கார வச்சு சோறு போடுற ஜெயிலுக்கு போயி சந்தோஷமா இருக்கலாம்.. கூடவே இந்த வாட்ச்சும் எனக்கு கிடைக்கும்.. கிளம்பு கிளம்பு" என்று யோசனை சொல்லியபடியே வாட்ச்சை தன் கையில் கட்டிக் கொண்டான்.

அதியன், "டேய் குடுடா.." என்று கத்திக்கொண்டே இரண்டு அடி முன்னால் எடுத்து வைக்க, அவர்களின் அப்பா தணிகாசலம் பெட் ரூமில் இருந்து வெளியே வந்தார்.

இங்கு நடந்த கலவரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல கபிலன் டைனிங் டேபிளில் சமத்தாக அமர்ந்து கொண்டான். அப்பாவைக் கண்டதும் அதியனும் பின் வாங்கி விட, அடுத்த ஐந்து நிமிடத்திற்கு வீடே அடுத்தடுத்த வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அதியனும் அமைதியாக டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு கபிலனிடம் சைகையால் வாட்சை திரும்பித் தரச் சொல்லி கேட்டு பார்த்தான்..

பலமுறை மறுத்த கபிலன் இறுதியாய் ரகசிய குரலில், "இது திருட்டு வாட்ச்னு அப்பாட்ட சொல்லிடுவேன்டா.." என்று மிரட்டினான்.

'விட்டால் இவனே என்னை பிடிச்சுக் கொடுத்துடுவான், இதுக்கு மேல இவனோட போராடி நம்மால ஜெயிக்க முடியாது சாமி..' என்று தண்ணீர் தெளித்து விட்டான் அதியன். வீடு பழையபடி அமைதியானது...

மணி எட்டரை அடித்ததுமே வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றனர்.

அதியன் அமைதியாக சாப்பிட்டு முடித்துவிட்டு, ஆபீஸிற்குத் தேவையானதை எல்லாம் லக்கேஜ் பேக்கிலிருந்து எடுத்து ஆபீஸ் பேக்கில் அடுக்கி வைத்தான்.

அதியன் தான் அனைவரும் சென்ற பிறகு கடைசியாகப் புறப்படும் நபர்..

அவன் ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டிருக்கும் போதே தீட்சண்யா, "என்னப்பா வீட்டிலிருந்து கிளம்பியாச்சா?" என்று மெஸேஜ் அனுப்பிவிட்டாள்.

தன் ஸ்பை நாயகியின் சாதுரியத்தை நினைத்துச் சிரித்த அதியமான், "கிளம்பிட்டேன்.. இதோ வண்டிய ஸ்டார்ட் பண்ணப் போறேன். நீ என் மண்டைக்கு மேல வச்சிருக்கற கேமராவை கொஞ்சம் ஆப் பண்ணு, நான் என்ன செஞ்சாலும் உனக்கு லைவ்ல டெலிகாஸ்ட் பண்ணிட்டு இருக்கு.." என்று நக்கலாக ஒரு மெஸேஜை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

"நக்கலு.. சரி சரி, சீக்கிரமா வா நான் ஆபீஸ் கேட் பக்கத்திலதான் வெயிட் பண்றேன்" என்ற அவளுடைய மெஸேஜை பார்த்த அடுத்த கணம், தன் எந்திரப் புரவியை ஆபீசை நோக்கி பறக்க விட்டான் அதியன்.

ஊருக்கு அவுட்டரில் கோபுரங்கள் போல உயர்ந்து நிற்கும் ஆயிரத்தெட்டு ஐடி கம்பெனிகளில் அவனுடையதும் ஒன்று. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே இவனும் இவனுடைய நண்பனும் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட்டார்கள்.

அவர்களைப் போலத்தான் தீட்சண்யாவும் கேம்பஸில் செலக்ட்டாகி கம்பெனிக்குள் நுழைந்த யுவதி, அவளுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. படித்த படிப்பிற்கு ஒரு நல்ல வேலையில் சேர்வது அவளுக்கு நெடுநாள் கனவு.

ஆகையால் வீட்டில் கெஞ்சி கூத்தாடி சம்மதம் பெற்று, சென்னைக்கு வந்து ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கிறாள்..

மெழுகு பொம்மை போல் இருக்கும் அவளுக்கு விரைவிலேயே திருமணம் செய்துவிட வேண்டும் என்று அவள் பெற்றோரு முனைப்புடன் இருப்பது அதியன் அறிந்த செய்தி.

ஆரம்பம் தொட்டே மூவரும் ஒரே டீமில் இருந்ததாலும், மூவருக்கும் ஒரேமாதிரியான குணம் இருந்ததாலும் வெகு சுலபத்திலேயே நண்பர்களாய் இணைந்து விட்டார்கள்..

அலுவலக வேலை அவர்களை மூச்சுமுட்ட செய்தாலும், அவ்வப்போது சின்னச் சின்ன குறும்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை.

அதியன் சென்னையின் காலை நேரத்து டிராபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி ஒருவழியாய் ஆபீஸிற்க்கு வந்த சேர்வதற்குள் பணி பத்தை நெருங்கி விட்டிருந்தது. வந்ததுதும் வராததுமாய் அவன் கண்கள் தன்னிச்சையாய் தீட்சண்யாவின் முகத்தைத்தான் தேடின..

நான்கு நாட்களும் அவன் முகம் காணாமல் தவித்ததால் தான், அவனை விரைந்து வரச் சொல்லி உத்தரவிட்டிருந்தாள் தீட்சண்யா. அப்படியும் அதியன் வரத் தாமதமாகியதால் அவள் வாசலில் செக்யூரிட்டிக்குத் துணையாக நின்று கொண்டிருக்காமல், சமத்தான பிள்ளையாய் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.

ஒட்டுமொத்த அலுவலகமும் செயல்பட ஆரம்பித்த பிறகு, அவளுக்கும் உள்ளே செல்வதைத் தவிர வேறு வழி கிடையாது இல்லையா?!..

அதியனுக்குத் தெரியும், தன்னவள் எனக்காக நீண்ட நேரம் காத்திருந்த பின்னரே உள்ளே சென்றிருப்பாள் என்று. ஆதலால் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தர நினைத்தவன், பூனை போல சத்தம் இல்லாமல் அவள் இருக்கைக்குப் பின்னால் போய் நின்றான்.

கணினியில் அவள் கவனம் முழுவதும் குவிந்திருப்பதை உறுதி செய்து கொண்டவன், திடீரென்று அவளுடைய சேரைப் பிடித்து டபடபவென்று உலுக்கினான்.

அவளுக்கு இப்படி விளையாடுவது கொஞ்சங்கூட பிடிக்காது. அது தெரிந்தாலும் அதியன் எப்போதும் இப்படித் தான் அவளோடு விளையாடுவான். காதலியைச் சீண்டி விளையாடுவதில்தான், காதலன் தன் ஒட்டுமொத்த பராக்கிரமங்களையும் பயன்படுத்துகிறான் என்பது உலகறிந்த உண்மை..

அவன் வந்து விட்டானென்று தெரிந்ததும் கோபமும் சந்தோஷமும் ஒருசேரக் கலந்த முகவழகோடு திரும்பி பார்த்தாள் தீட்சண்யா..

"ஏன்டா ஏன்?" என்று அவளின் இதழ்கள் வெளியேற்றிய வார்த்தைகள் கோபமாய் இருந்தாலும், அவள் பார்வையில் இருந்த பாசமும் பரிதவிப்பும் அதியனுக்கு நன்றாகவே புரிந்தது.

"நாலு நாளா நான் இல்லாம மேடம் ரொம்ப ஜாலியா இருந்தீங்களாமே.. அதான் வந்ததும் வராததுமா ஸ்பாட் பனிஷ்மென்ட் கொடுத்தேன்" என்று சொல்லிச் சிரித்தான்..

"பரவாயில்லையே, ஸ்பை எல்லாம் வச்சு வேலை பார்த்திருக்கீங்க போல? அதுசரி, மும்பைல இருந்து எனக்கு என்ன வாங்கிகிட்டு வந்த?" என்றாள்.

"வாங்காம வந்தா ஆபீஸ்க்குள்ள நுழைய முடியுமா?" என்று சொல்லிக் கொண்டே ஆபீஸ் பேக்கை திறந்து, அதிலிருந்த அழகான ஒரு ஜோடி ஜிமிக்கியை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

அதைப் பார்த்த தீட்சண்யா சந்தோஷத்தோடு, "வாவ்.. அழகா இருக்குடா" என்றாள் அகம் மகிழ்ந்து.

"நீ போட்டுகிட்ட அப்புறம் பாரேன், அது இன்னும் அழகாக இருக்கும்.." என்றான்.

"ஐய வழியுது.. தொடச்சுட்டு வேலையப் பாருடா.." என்றாள்.

'எப்படி ட்ரை பண்ணினாலும் கேட் போடறாளே...' என்று புலம்பிக் கொண்டு, ஆபீஸ் பேக்கை மூடி வைக்கப் போனான்.

அப்போதுதான் நீல நிறத்தில் ஒளிவிடும் ஏதோ ஒன்று உள்ளே கிடப்பது அவன் கண்களில் தென்பட்டது.

கையைவிட்டு அதை வெளியே எடுத்தான், அது காலையில் கபிலன் கட்டாயப்படுத்தி பிடிங்கிக் கொண்டு சென்ற அந்த வாட்ச்..
 
Top