கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 11

Rhea Moorthy

Moderator
Staff member
வலை கொண்டு அடக்கி வைக்கும் மிருகமா காதல்? அது காற்று போலக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிப் பாய்வது. வெளிச்சமும், நீரும் இல்லாத இடத்தில் கூட உயிர்களை வாழ வைக்கும் உன்னத சக்தி அது..

அதியனின் காதல் உணர்வு அவனது இள மனதினை, 'கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு அவளைத் தேடி ஓடு' எனச்சொல்லி உந்தி தள்ளியது.

எல்லா இளைஞர் இளைஞிகளையும் போல நிஜ வாழ்வினை மறந்துவிட்டு, தன் கனவு தேசம் இருக்கும் பாதையில் போக முடிவெடுத்தது அதியனின் மனம்.

'என்ன ஆனது அவளுக்கு? எதற்காக என்னைப் பிடிக்காதது போல் பேசுகிறாள்? ஒரு வேளை பிரதமர் சொன்னது போல் அமெரிக்காவும் ரஷ்யாவும் என்னைக் குறி வைக்கிறதா? அதற்காகத் தான் உளவாளிகளை அனுப்பி அவளைப் பின் தொடர்ந்து வருகிறார்களா?

எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்ற என் தீட்சு இவ்வாறெல்லாம் பைத்தியக்காரத்தனம் செய்கிறாளா? எனில் நான் அவளை விரைந்து சென்று காப்பாற்ற வேண்டுமே?' என்று வரைமுறை இல்லாத அளவுக்குக் கற்பனைகள் அவனுள் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது..

அப்படி ஒரு சிந்தனை வந்த பிறகு அங்கேயே நின்று யோசித்துக் கொண்டிருக்க அவன் என்ன அவ்வளவு நல்ல பிள்ளையா?

'என்ன ஆனாலும் சரி, அவளை நேரடியாகப் பார்த்து பேசி, அவளை என்னோடு அழைத்து வந்தால் மட்டுமே என் மனம் ஆறும். எங்களுக்கு இடையில் எத்தனை தடைகள் வந்தாலும் எக்காரணம் கொண்டும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்றொரு முடிவிற்கு வந்துவிட்டான் அதியன்.

நள்ளிரவு என்றும் பாராமல் தன் வாட்ச்சின் உதவியுடன் பாதுகாப்புக் காவலர்களை மீறி, திருட்டுத்தனமாய் தன் புது இல்லத்திலிருந்து வெளியேறிக் குதித்தான் அதியன்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் வாட்ச் ஒரு பைக் போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டது. போன முறை அவளோடு உல்லாசமாக பைக்கில் சுற்றிய நினைவுகளின் தாக்கத்தால் வாட்ச் தானாக பைக் உருவத்தை எடுத்துக் கொண்டது.

அது புரிந்த அதியன், பைக்கை பார்த்து சின்ன புன்னகை பூத்தான். இருள் படர்ந்த நேரத்தில், அவளது ஹாஸ்டலை சென்றடைவது அவனுக்கு அவ்வளவு பெரிய காரியமாக இருக்கவில்லை..

அதுவும் போக நெடுநாட்களுக்குப் பிறகு, தனக்கு விருப்பமான முறையில் தனியே வீதியில் உலவுவது வேறு அவனுக்குள் அளவில்லாத ஆனந்தத்தை உருவாக்கியது.

தீராத் தேடலோடு தேவியவள் சந்நதிக்கு வந்து சேர்ந்தான், அந்த ஆசை அடங்காத பக்தன். அவன் கேள்விகள் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டிய அவனின் தேவியோ, தன்‌ ஹாஸ்டல் அறைக்குள் ஆனந்தமாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

நேரம் ஏற்கனவே இரண்டு மணியை நெருங்கிவிட்டதால், ஹாஸ்டலில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஹாஸ்டல் வாட்ச்மேன் உட்பட..

'பெண்கள் மட்டுமே புழங்கக்கூடிய பகுதியில் ஒரு ஆண் நுழையலாமா?.. சாதாரண ஆளாக இருந்தால் கூட பரவாயில்லை, பத்து பேரோடு உன் விஷயம் முடிந்துவிடும். இப்பொழுது உலகமெல்லாம் உன் பெயர் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நீ எது செய்தாலும் அது உனக்கு மட்டுமல்ல உன் தேசத்திற்கும் சேர்ந்து இழி நிலையை உருவாக்கும்' என்று புத்தி சொல்லும் எந்த கூற்றையும் அவன் மனம் ஏற்கத் தயாராக இல்லை.

ஆனாலும் ஏதோ தெய்வாதீனமாக நேரடியாக நுழையாமல், ஸ்பைடர் மேன் போல வாட்ச்சின் உதவியோடு ஜன்னல் வழியே அவள் அறைக்குள் குதித்து இறங்கினான்.

விண்ணில் இருக்கும் வெள்ளி நட்சத்திரங்களோடு விளையாடும் குழந்தை போலச் சிரித்த முகத்தோடு போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் தன் காதலியின் சயன நிலையைக் கண்டதும் சத்தமாய் சிரித்து விட்டான்.

"பூனைக்குட்டி, என்ன நல்லா கடுப்பேத்தி விட்டுட்டு இது எப்படி தூங்குது பாரு.." என்று கோபமும் காதலும் கலந்து கொஞ்சும் அந்த காதலனை எந்தக் கேட்டகரியில் நாம் சேர்ப்பது?

அவன் அருகில் இருப்பது தெரியாமல் ஆனந்த சயனத்திலிருந்த தீட்சு உறக்கத்திலும், "அதி.. அதி.." என்று அவன் பெயரைச் சொல்லிப் பிதற்றிட, அவனுள்ளிருந்த மிச்ச சொச்ச கோபமும் துளி மிச்சமின்றி வடிந்து போனது.

அவள் தலை மேட்டில் மண்டி போட்டு அமர்ந்த அதியன் கண் கட்டும் காதலோடு, "தீட்சு, ஏன்டி‌ செல்லம் என்ன அவாய்ட் பண்ற? உனக்கு ஏதாவது பிரச்சனைனா என் கிட்ட ஓப்பனா சொல்ல மாட்டியா?

இப்பவே உன்ன என் புது வீட்டுக்குத் தூக்கிட்டு போக போறேன், அதுக்கப்புறம் உனக்கு எந்த பிரச்சனையும் வராது.." என்று உளறி, அவள் கூந்தலை வருடி, கூடவே கன்னத்தையும் கிள்ளி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த பிள்ளையைப் பாடாய்ப் படுத்தினான்.

அவன் ஸ்பரிசத்தால் விழி திறந்த தீட்சண்யா, அத்தனை அருகில் அவனைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

"நீ.. எப்படி? நீ எப்படிடா வந்த?" என்று தூக்கக் கலக்கத்தில் திக்கித் திணறிப் பேசிட,

"நான் நிஜத்துல வர முடியுமா? இது உன் கனவுடி" என்று அவளையே கலாய்க்க முயன்றான் அதியன்.

"போடா லூசு, கனவு எது நிஜம் எதுனு தெரியாத அளவுக்கு நான் என்ன சின்ன பாப்பா வா? யார கேட்டு உள்ள வந்த நீ?" என்று கடுங் கோபத்தோடு கை நீட்டிப் பேசினாள்.

அப்போதுதான் அவளது வலது கையில் கட்டு போடப்பட்டிருப்பது அதியன்‌ கண்களுக்குத் தெரிந்தது.

"என்னடி இது? இவ்வளவு பெரிய கட்டு போட்டு வச்சிருக்க? என்னாச்சு? யாராவது உன்ன அட்டாக் பண்ணாங்களா? ஏன்‌‌ எங்கிட்ட இதப்பத்தி நீ முன்னாடியே சொல்லல?

இரு இப்பவே பிஎம்ட்ட பேசி உன்ன யாரு அட்டாக் பண்ணாங்கனு கண்டுபிடிக்கிறேன். அவனுங்கள சும்மா விட மாட்டேன் நான், எந்த நாட்டுக்காரனா இருந்தாலும் அவன் சாவு என் கையாலதான்.." என்று உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொண்டே சென்றான்.

"டேய் அதெல்லாம் ஒன்னுமில்லடா" என்று அவள் எதையோ சொல்ல வரும் முன் முந்திக் கொண்ட அதியன்,

"உனக்கு எதுவும் தெரியாது தீட்சு.. அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த வாட்ச்க்காக நிறைய அண்டர் கிரவுண்ட் வேலையெல்லாம் பார்க்கும்னு, பிஎம்மே எங்கிட்ட நேரடியா சொன்னாரு.

உன்ன அட்டாக் பண்ணின ஆளுங்க பார்க்க எப்படி இருந்தாங்க? அவங்க டிரஸ், ஜூவல்ஸ், கார்னு ஏதாவது ஒரு அடையாளம் நியாபகம் இருந்தாலும் சொல்லு.." என்று அவளைப் பிடித்து உலுக்கினான்.

ஏதோ பெரிய ஜேம்ஸ்பாண்ட் போல தொட்டதிற்கெல்லாம் அமெரிக்காவைத் துணைக்கு அழைக்கும் அவன் அலப்பறை தாங்க தீட்சு, "வில் யூ ஸ்டாப் இட் அதி?" என்று ஒற்றைச் சத்தத்தில் அவனை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தாள்.

இம்முறை அதியன் அமைதியாக அவள் முகம் பார்த்திருக்க, "என்ன யாரும் அட்டாக் பண்ணல அதி, நான் நான் பாத்ரூம்ல வழுக்கி விழுந்திட்டேன். விழுந்து ஹாஸ்பிடல் போய் பெட் ரெஸ்ட் எடுத்துட்டு, ரூமுக்கு திரும்பி வந்து இன்னியோட ஒரு வாரம் ஆயிடுச்சு.

இன்னும் நாலு நாள்ல பேண்டேஜ் கழட்டிடுவாங்க, அதுக்கப்புறமா வழக்கம் போல நான் என் வேலைய செய்ய ஆரம்பிக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு.." என்றவளின் கடைக் கண் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நின்றது.

அதைத் தன் விரலால் தொட்டுத் துடைத்த அதியன், "ஏன் எங்கிட்ட சொல்லல? ஆரம்பத்திலேயே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அப்பவே உன்ன அப்போலோ ஹாஸ்பிடல்ல வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணியிருப்பேனேடி. எப்ப கேட்டாலும் வேலை இருக்கு, பிஸியா இருக்கேன்னு ஏன்டி என்ன ஏமாத்துன?" என்றான்‌.

"பெரிய‌ அடி இல்ல, சாதாரண ஹாஸ்பிடல்லயே ட்ரீட்மெண்ட் எடுத்து முடிச்சிட்டேன், ஐ ஏம் ஆல்ரைட் நவ். உனக்கு பெரிய இடத்தில சம்பந்தம் இருக்குன்றதால, நீ இப்படி திருட்டுத் தனமா லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள வரக்கூடாது. இப்ப கிளம்பு, மத்தத நாளைக்கு காலையில போன்ல நாம பேசிக்கலாம்.." என்று தயவு தாட்சண்யமின்றி அவனை அங்கிருந்து விரட்டும் வேலையில் மும்மரமானாள் தீட்சண்யா..

"என்னாச்சுடி உனக்கு? ஏன் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற? நான் உன்ன எவ்வளவு விரும்புறேன்னு உனக்கே நல்லா தெரியும். அப்புறம் எப்படி உன்னால ஈவு இரக்கம் இல்லாம நடந்துக்க முடியுது?" என்று அன்னைக்கு ஏங்கும் பிள்ளையாய் அவளிடம் தன் காதலை யாசித்தான்.

"ஏன்னா நீ என்னோட அதி இல்ல. உன் கண்ணுக்கு இந்த வாட்ச்சால உனக்கு கிடைச்ச பெருமையும் அதிகாரமும் மட்டும்தான் தெரியுது. உனக்குள்ளே தொலைஞ்சு போன என்னோட அதியன எவ்வளவு தேடினாலும் என்னால கண்டு பிடிக்க முடியல.

என்னோட அதியன் எவ்வளவு நல்லவன் தெரியுமா? யாரு எப்போ உதவி கேட்டாலும் ஓடிப்போய் செய்வான். பெரியவங்க சின்னவங்கனு பாகுபாடு பாக்காம அத்தனை பேர்கிட்டவும் அன்பா பழகுவான்.

அவனோட அன்பான குணத்துக்காக மட்டும்தான் நான் அவன விரும்பவே ஆரம்பிச்சேன், இப்ப அவனையே மொத்தமா தொலைச்சுட்டு நிக்கிறேன்.." என்றவளின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழியத் துவங்கியது.

"என்ன பேசுறடி நீ? இப்பவும் நான் அதே அதியன்தான். டிவில நியூஸ் பேப்பர் எல்லாம் என் பேர்தான் ஓடுது, நான் உதவி பண்ற விதம் மாறிடுச்சே ஒழிய நான் உன் அதியன்தான்டி" என்று தன் மனதின் நிலையை தன்னவளுக்கு எடுத்து உணர்த்த முயன்றான்.

"உதவி பண்ற, அத நான் இல்லனு சொல்லல.. ஆனா நான் காதலிச்ச அதியன் எப்பவும் தான் செஞ்ச நல்லத யாருக்கும் சொல்லிக் காட்ட மாட்டான். ஆனா நீ அப்படியா இருக்க?

நான் எப்ப போன் பண்ணினாலும் நான் அது செஞ்சேன், நான் இது செஞ்சேன்னு நீ மட்டும் தான் பேசுற. எனக்கு பேசுறதுக்கான இடைவெளி கூட தர மாட்டேங்குற.

அப்படிப்பட்ட ஒருத்தனோட வாழ்க்கையில எனக்கான இடம் எப்படி கிடைக்கும்? எனக்கு இப்ப அடிபட்டதே உன்ன பத்தி நான் புரிஞ்சுக்க கடவுள் உருவாக்குன சந்தர்ப்பம்னு நினைக்கிறேன்.

என்னால என்‌ அதி இல்லாமக்கூட வாழ முடியும், ஆனா உன்ன மாதிரி தற்பெருமை கூடிப் போன ஒருத்தனோட வாழ முடியாது. தயவு செஞ்சு என்ன விட்டுப் போயிடு" என்று முகத்தில் அறைந்தார் போலப் பேசி விட்டாள் தீட்சு.

'இதற்கு மேல் இங்கே நின்று கொண்டிருந்தால் தானும் சுயநிலை இழந்து எதையாவது பேசிவிடுவோம்' என்பதால் அதியன் அவளைச் சமாதானம் செய்யும் வேலையைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

நேற்று வரை சாதாரண மனிதனாக வாழ்ந்த ஒருவனுக்கு, ஒரே மாதத்தில் விண்ணைத் தொடும் புகழ் கிடைத்திருக்கிறது. தன்னையும் மீறி வாய் தவறி வரும் பெருமைகளைச் சொல்லாமல் தவிர்க்க அவன் என்ன ஞானியா?

அவ்வப்போது ஆசாபாசங்களுக்கு ஆட்படும் சாதாரண மானிடன் தானே அதியனும்! காதலியே காதலைத் தூக்கி எறிந்து பேசிய பிறகு, யாரிடம் போய் அவன் தன் காதலைக் காப்பாற்ற முடியும்?

குருதி வடியும் இதயத்தைக் கையில் ஏந்திக் கொண்டே அவ்விடம் விட்டுக் கிளம்பினான் அதியன். தாங்க முடியாத சோகத்தோடு, தலையைத் தொங்கப் போட்டபடி வீடு வந்து சேர்ந்தான். அவன் மனதில் இதுநாள் வரையிலும் இல்லாத ஒரு வித வெறுமையும் குழப்பமும் குடியேறி இருந்தது.

'உலகம் முழுவதும் தன்னைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். என்னைத் தெரியாதவர்களே இல்லை எனுமளவு நானும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றேன்..

ஆனால் ஏன் இந்த தீட்சு என் பெருமைகளைக் கண்டு சந்தோஷம் கொள்ளவில்லை? நான் என்பதே அவளும் நானும் தானே? எனக்குக் கிடைக்கும் அத்தனை வெகுமதிகளிலும், அவளுக்கும் சரி பாதி பங்கு உண்டு என்று ஏன் அவள் புரிந்து கொள்ளாமல் போனாள்?

பணமும் புகழும் வந்ததால் அவள் பொறாமையில் என்னை ஒதுக்குகிறாளா? இல்லை அவளை ஒதுக்கி வைத்து விடுவேன் என்று சந்தேகம் கொள்கிறாளா?

நான் சாதாரண அதியமானாய் இருக்கும் போது எப்படியெல்லாம் என்னோடு ஒட்டி உறவாடினாள்? இப்போது கழுத்தைப் பிடித்து விரட்டாத குறையாய் வெளியனுப்பி விட்டாளே?' என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில்,

கார்டனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த கபிலன் அவன் கண்களில் பட்டான்.

அவன் முன்னால் சென்று நின்ற அதியன், "கபிலா.. உங்கிட்ட ஒண்ணு கேக்கனும்" என்றான்.

அதியனை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே, "என்னடா? அதிசயமா என்ன தேடி வந்திருக்க?" என்றான் கபிலன்.

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன், தன் கைக்கு வாட்டமாகக் கிடைத்த தம்பியிடம், "ஏன்டா உன்கிட்ட நான் வந்து நின்னதே இல்லியா?" என்று பொரிந்து தள்ளினான்.

"அது நம்ம வீட்டுல இருக்கிற வரைக்கும், இங்க வந்ததுக்கு அப்புறம் நீ என்கிட்டயும் அம்மா அப்பாகிட்டயும் பேசவே இல்லையேடா?" என்றான்.

அப்போதுதான் அதியனுக்கு தங்கள் வீட்டில் இருந்த வரை தினமும் தானும் கபிலனும் சண்டை போடுவதும், உப்பு பெறாத விஷயங்களைத் தூக்கிக் கொண்டு போய் அம்மா அப்பாவிடம் மாட்டி விடுவதும், அதற்கென‌ நட்ட நடு ஹாலில் ஒரு பஞ்சாயத்து நிகழ்வதும் மனக்கண்ணில் வந்து போனது.

'இங்கு வந்த பிறகு அதைப் போன்ற பழைய குறும்புகள் எதுவும் நாங்கள் செய்யவே இல்லையே? ஏன்? இவனுக்கும் என் மேல பொறாமை வந்துவிட்டதா?' என்று எண்ணிய அதியன், தன் சந்தேகத்தைக் கபிலனிடம் கேட்டான்.

கோபத்துடன் அவனை முறைத்த கபிலன், "ஏது, உன்ன பார்த்து எனக்கு பொறாமை வருதாக்கும்? நீ அப்படி என்ன சாதிச்சு கிழிச்சுட்டனு நான் பொறாமைப் படணுங்கிற?" என்று வகையாக வச்சு செய்தான்.

தன் காலால் அவன் பின்னங்காலை எட்டி மிதித்த அதியன், "ஏன்டா? ஐ ஏம்‌ எ செலபிரிட்டி, ஊர்ல இருக்கிற பாதி பேருக்கு எம்மேலதான் பொறாமை, யூ‌ க்நோ நா?" என்று வம்பிழுத்தான்.

அவனைத் திருப்பி மிதித்த கபிலன், "இருந்துட்டுப் போடா வெண்ண, ஆனா அது எதுவும் உனக்குச் சொந்தமில்லப்பு. இதோ இந்த இத்துனூண்டு வாட்ச்க்குதான் சொந்தம்.

நெல்லுக்கு பாய்ச்சின தண்ணிய வேற எதுவோ சேர்ந்து அனுபவிக்கும்னு சொல்லுவாங்களே, அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் தான் ராஜா நீ.

அதுக்கு கிடைக்க வேண்டிய மாலை மரியாதை எல்லாம் உனக்கு கிடைக்குது, கொய்யால அதுக்காக நீ பண்ற அலப்பறை எல்லாம் இருக்குதே. தாங்க முடியலடாப்பா, வரவர நீ என்ன தம்பியாவே மதிக்க மாட்டேங்கிற.

நான் எப்ப உங்கிட்ட பேச வந்தாலும் நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? எவ்ளோ பேர காப்பத்தினேன் தெரியுமா? எங்கெல்லாம் போயிட்டு வந்திருக்கேன் தெரியுமா? அங்க என்னவெல்லாம் எனக்கு திங்க கொடுத்தாங்க தெரியுமானு பேசிப்பேசியே என் உசுரையும் எடுக்கிற.

அப்பவே நான் உன்ன அண்ணன் போஸ்ட்ல இருந்து தூக்கி போட்டுட்டேன். இனி நீ யாரோ நான் யாரோ..

முன்னெல்லாம் என்ன அம்மாவும் அப்பாவும் குப்ப தொட்டில இருந்து எடுத்துட்டு வந்து வளர்த்தாங்கனு‌ நீ புருடா விடும்போது கவலையா இருக்கும். இப்ப அது உண்மையாக இருக்க கூடாதானு தோணுதுடா..

இந்த குடுகுடுப்புக்காரனுக்கு நான் தம்பியே இல்லனு சொல்லிட்டு, சட்டு புட்டுனு இந்த வீட்ல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்னு கோக்கு மாக்கா ஐடியா வருது.

எங்கள அவ்ளோ டார்ச்சர் பண்றடா நீ.." என்று அதுநாள்வரை தன் மனதினை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை உண்மைகளையும் தன் அண்ணன் முன் போட்டு உடைத்து விட்டான்.

கல்லூரியில் பயிலும் இளவட்ட வயது என்பதால் கபிலனுக்குத் தான் உபயோகிக்கும் வார்த்தைகள் எதிரில் இருப்பவரின் மனதை எந்த அளவிற்கு நோகடிக்கும் என்று அப்போது தெரியவில்லை..

அண்ணனின் அசிரத்தையான குணத்திற்குத் தக்க பதிலடி தந்து விட்டதாக எண்ணியவன், தன் வார்த்தைகளைக் கேட்ட அண்ணனின் மனநிலை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் வீட்டினுள்ளே சென்று விட்டான்.

ஆனால் அவன் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்ற அதியனுக்கு தீட்சண்யாவின் கோபத்திற்கான காரணம் விளங்கிவிட்டது. புது வீடு, புது வாழ்க்கை என்று அனைத்தும் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவன் அந்தப் பூந்தேகத்தாள் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

அவளும் கபிலனும் சொன்னதைப் போல, அவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். அடுத்தவர்களுக்கான வாய்ப்பைத் தர மறந்து போனான்..

தீட்சண்யாவும் அதியனும் ஒன்றாக வேலை பார்த்த நாட்களில் அவன் அவள் சாப்பிடுவது, தூங்குவது, வீடு போய் சேர்வது என்று அனைத்திலும் அக்கறை காட்டுவான். அதே அதியன்தான் இப்போது அந்த வார்த்தைகள் எல்லாம் அப்படியே தலைகீழாய் மாற்றி, தான் சாப்பிடுவது, தூங்குவது என்று மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான்.

'எதைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்வது? முதலில் என் சமாதானத்தை அவள் ஏற்பாளா? ஒட்டுமொத்தமாக வெறுக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய பாவம் செய்யவில்லையே? பிறகேன் அவளும் கபிலனும் இவ்வளவு தூரம் மாறிப் போயினர்?

இத்தனை நாட்களாக அவர்களுக்காக என்னவெல்லாம் செய்திருப்பேன்? அத்தனையையும் தூக்கி எறிந்து விட்டார்களே..' என்று அதியன் யோசித்துக் கொண்டிருந்த நேரம், அவன் வீட்டுக் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் அவனை நோக்கி ஓடி வந்தனர்.

"என்னாச்சு?" என்றான் அவர்களின் பதற்றம் புரிந்த அதியன்‌.

"சார், திருச்சியில நிலநடுக்கம் வந்திடுச்சு சார், ரொம்ப பயங்கரமான நிலநடுக்கமாம். சிஎம் இப்பவே உங்கள ஹெலிகாப்டர்ல கிளம்ப சொல்றாரு.." என்று பரபரத்தனர்.

ஆபத்து காலங்களில் அவன் விரைந்து வருவதற்காக அவனுக்கெனத் தனி ஹெலிகாப்டரே தந்திருக்கிறது இந்திய அரசு என்பது கூடுதல் தகவல்..

அவர்களின் அவசரம் புரிந்த அவனும் கடகடவென்று ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஓடினான். அதியனோடு இரண்டு வீரர்கள் மட்டும் உள்ளே ஏறினர். அனைவரும் அமர்ந்த அடுத்த கணமே ஹெலிகாப்டர் திருச்சியை நோக்கிப் பறக்கத் துவங்கி விட்டது.

ராணுவ வீரர்கள் அணியும் பாதுகாப்பு கவசமும், ஹெல்மெட்டும் அவனுக்கு தரப்பட, அவற்றை அணிந்து கொண்டே, "எவ்வளவு மோசமா இருக்குனு ஏதாவது சொன்னாங்களா?" என்றான்.

"இல்ல சார், தகவல் கிடைச்சதும் உங்க கிட்ட வந்துட்டேன். இனி தான் டீடெயிலா கேக்கணும்" என்றான் முதலாமவன்.

"இப்பவே கேளுங்களேன்" என்று அதியன் ஆணையிட, அவனுக்கு அடிபணிந்து வீரனும் தன் கையிலிருந்த வாக்கி டாக்கி மூலமாக தனக்குத் தகவல் தந்த அதிகாரியைத் தொடர்பு கொண்டான்.

பேசி முடித்தவன் அதியனிடம், "கொஞ்சம் ரிஸ்க்தான் சார், ரிக்டர்ல 8.4 காட்டுதுனு சொல்றாரு. ஏழு இருந்தாலே பயங்கரமான நிலநடுக்கம்னு சொல்லுவோம்.." என்றிட, அதியனுக்கு நிலநடுக்கத்தின் கொடூரம் புரியத் துவங்கியது.

தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "வேற ஏதாவது சொன்னாங்களா?" என்றான்.

அதியன் இளகிய மனது உடையவன் என்று தெரிந்த அந்த வீரன், "இல்ல சார்" என்று மழுப்பப் பார்த்தான்.

"பொய் சொல்லாதீங்க, சேதாரம் எவ்வளவு இருக்குனு தெரிஞ்சா இப்ப இருந்தே நாம என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு யோசிச்சு வச்சுக்க முடியும். அதனாலதான் கேட்கிறேன்" என்று அழுத்தம் திருத்தமாய் பேசினான்.

அந்த ராணுவ வீரனுக்கும் அதியன் சொல்வது சரி என்று தோன்றிட, "அந்த ஊர்ல இருக்கிற பாதி வீடு நொறுங்கிப் போயிடுச்சுன்னு சொன்னாங்க. மூணு பாலம் உடைஞ்சிடுச்சு, ஆத்து தண்ணி வழிமாறி ஊருக்குள்ள வந்துடுச்சு.

ஸ்ரீரங்கம் கோவிலோட கோபுரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறதா சொல்றாங்க. என்னோட கணக்கு சரியா இருந்தா குறைஞ்சது அம்பதாயிரம் டெத் இருக்கும், லட்சத்துக்கு மேல பேஷன்ட்ஸ் லிஸ்ட் வரும்.

இதுவுமே நீங்க எந்த அளவுக்கு வேகமா எல்லாரையும் காப்பாத்துறீங்கன்றத பொறுத்துதான் சார்.." என்று அத்தனையையும் புட்டுப்புட்டு வைத்தான்.

"திருச்சியோட மொத்த பரப்பளவு எவ்வளவு இருக்கும்?"

முதலாமவன், "தெரியல சார், கேட்டு சொல்லட்டுமா?" என்றிட,

"குத்து மதிப்பா 150 கிலோமீட்டர் இருக்கலாம் சார்.." என்றான் இவர்களின் உடன் இருந்த மற்றொருவன்.

"என்னென்ன வசதிகள் எல்லாம் நமக்கு அங்க ரெடியா இருக்கு?"

"ஹெலிகாப்டர் நாலு வருது.." என்றான் முதலாமவன்.

"நாலுதானா?"

"ஆமா சார், அவ்வளவுதான் கிடைச்சது. மீட்புக்குழுவால தரைவழியாவே சுலபமா செயல்பட முடியும் இல்லையா? அதனால நாலே ஜாஸ்தினு மேலிடம் சொல்லிடுச்சு. இந்நேரம் அவங்க ஸ்பாட்டுக்கு வந்து இறங்கி இருப்பாங்க. துணைக்கு தீயணைப்பு துறை, போலீஸ், நிறைய காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்னு எல்லாரும் தன்னார்வலர்களா வந்திருக்குறதா சொன்னாங்க."

"இருந்தாலும் அவ்வளவு பெரிய ஏரியாவ நாம கவர் பண்றது எந்த அளவுக்கு சாத்தியம்னு எனக்குத் தெரியல. ஜனங்கள வெள்ளத்துல இருந்து ஈசியா தூக்கினமாதிரி கட்டிட இடிபாட்டுக்குள்ள சிக்கி இருக்கிறவங்கள தூக்க முடியாது இல்லையா?..

ஒரு ஏரியாவுல இருக்குற கட்டிடங்கள் மட்டும் இடிஞ்சிருந்தாக்கூட ஓரளவுக்கு இந்த வாட்ச்ச வச்சு மேனேஜ் பண்ணலாம். ஊர் முழுக்க ஒட்டு மொத்தமா இடிஞ்சு கிடக்கும் போது வாட்ச் எவ்வளவு தூரந்தான் கவர் பண்ணும்?

நாம ஏதாவது ஒரு வியூகம் வகுக்கணும், என்ன செய்யலாம்?" என்று அவர்களிடமே கேள்வி கேட்டான்.

இருவரும் அவனோடு இணைந்து சகஜமாய் பேசத்துவங்க, ஒரு அற்புதமான சக்கர வியுகம் அங்கே உருவானது..

திருச்சியின் மையத்திலிருந்த ஒரு கல்லூரி வளாகத்தின் முன்பு அதியனை அவன் ஹெலிகாப்டர் இறக்கிவிட்டது. முதல் வேலையாக ஊருக்கு நடுவிலிருந்த பாலத்தை நோக்கிப் பறந்தனர் அதியனும் அவனோடு வந்த இருவரில் ஒருவனும்.

மற்றொரு வீரன் அவர்கள் தரையிறங்கிய கல்லூரியில் பயிலும் ஹாஸ்டல் மாணவர்களிடம் இருந்து, சேதம் அடையாத ஒரு லேப்டாப்பைக் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.

உயர்ந்து வளர்ந்த பாலம் மிகச்சரியாக நட்ட நடுவில் உடைந்து, வாயைப் பிளந்ததொரு தோரணையில் காட்சி தந்தது. அதிலிருந்து சிதறிய துண்டுகள் அத்தனையும் கீழே இருந்த சாலையை அடைத்துக் கொண்டு கிடந்தது.

இதுதான் இந்த ஊரின் பிரதானச் சாலை. மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் அத்தனை பேரும் அவ்வழியேதான் பயணிக்க வேண்டி வரும். ஆதலால் முதலில் சரிசெய்ய வேண்டிய இடமும் இதுவே என்ற முடிவுக்கு அதியன் முன்னமே வந்திருந்தான்.

அதியன் வாட்ச்சிடம், "பாதைய சரி செய்யனும்" என்றதும், பூனை குட்டி போலச் சமத்தாக அவன் கையிலிருந்து கீழே இறங்கியது வாட்ச்.

தன்னைத் தானே ஒரு மெல்லிய சுவர் போலச் செய்து கொண்ட அது, பாதையின் நெடுக தரையைத் தேய்த்துக் கொண்டே நகர ஆரம்பித்தது. எண்ணி பத்து வினாடிக்குள் உடைந்து விழுந்த பாலத்தின் பாகங்கள் அனைத்தும், சாலையோரத்திற்கு நகர்த்தப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது.

அந்தத் தகவலை அதியனுடன் வந்திருந்த வீரன், கல்லூரியில் லேப்டாப்போடு அமர்ந்திருக்கும் மற்றொரு வீரனுக்கு தன் வாக்கி டாக்கி மூலம் தெரிவித்தான். மற்றவர்களிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த அந்த வீரன், அடுத்த கட்டமாய் இவர்கள் இருவரும் போக வேண்டிய இடத்தைப் பற்றிச் சொன்னான்.

இதற்குள் மீட்புப் படையினரும் பகுதி வாரியாய் தங்களைப் பிரித்துக் கொண்டு புயல் வேகத்தில் கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

சிறு வீடுகளைக் கொண்டிருந்த மக்களுக்கும், குடிசை வீட்டு மக்களுக்கும் பெரிய அளவிற்குச் சேதாரம் இல்லை. அவர்கள் அத்தனை பேரையும் மீட்புப் படையினரே மீட்டெடுத்து, பாதுகாப்பான பகுதியைத் தேடி அனுப்பி வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

நிறைய மாடி வீடுகளும், அங்கங்கே முளைத்திருந்த ஒரு சில அப்பார்ட்மெண்ட்டுகளும் பலத்த அடி வாங்கியிருக்க, அதனுள் மனிதர்கள் சிக்கி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது மீட்புக் குழுவுக்குப் பயங்கர தலைவலியாக இருந்தது.

இதற்கெனவே தயாராகி வந்திருந்த அதியன், தன் வாட்ச் மூலம் லென்ஸ் உருவாக்கி ஒவ்வொரு கட்டிடத்தையும் ஊடுருவிப் பார்த்தான். இடிபாடுகளுக்குள்ளே சிக்கி இருக்கும் ஆட்களின் இடமும், எவ்வளவு பேர் மாட்டி இருக்கின்றனர் என்பதும் அதியனுக்குத் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.

ஆட்கள் சிக்கியிருக்கும் இடம் வரையில் வாட்ச், சுவர்களில் சுலபமாய் துளை உருவாக்கிவிட மீட்புக்குழு வெகு விரைவாய் உள்ளிருந்த ஆட்களை வெளியே இழுத்து வந்துவிட்டனர்.

கல்லூரியிலிருந்து முதலாம் ராணுவ வீரன் தன் வாக்கி டாக்கி மூலமாக அடுத்தடுத்த பகுதிகளைப் பற்றிய தகவலைத் தர, அதியனும் அவனுடன் வந்த வீரனும் அதிவிரைவாய் செயல்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதியைச் சரி செய்துவிட்டனர்.

மீதிப் பகுதிகளுக்கான மீட்புப் பணிகளையும் சோம்பலின்றி செய்ய நினைத்து, ஒருவரை ஒருவர் உற்சாகப் படுத்திக் கொண்டு விரைந்து சென்றனர்‌.

சோழன் நகர் பகுதியில் மூன்று மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்ட் முற்றிலுமாய் நொறுங்கிக் கிடந்தது. அதியன் பெரும் முயற்சி செய்து இடிபாடுகளிலிருந்து ஒரு சிலரை உயிரோடு மீட்டுக் கொண்டு வந்தான்.

ஆயினும் அதன் அடித்தளத்தில் வசித்த இரண்டு குடும்பங்கள் கட்டிடம் இடிந்து விழுந்த அடுத்த நொடியே தனது இன்னுயிரைத் துறந்துவிட்டது. உயிரோடு இருந்தவர்களை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்த அதியன், அடுத்த பகுதியை நோக்கி விரைந்த வேளையில், ஒரு சிறுவன் வந்து அதிய‌ன் கையைப் பிடித்து நிறுத்தினான்.

எட்டு வயதே நிரம்பிய அந்தப் பிள்ளையின் முகத்தில் தூசியும் அழுக்கும் தன் முழு ஆளுமையைச் செலுத்தி இருப்பதைக்‌ கண்டு அதியன் மனம் இளகிப் போனது.

மீட்பு பணியில் இருந்த ஒருவரை அழைத்து, "இந்தப் பையனோட பேரண்ட்ஸ் எங்க இருக்காங்கனு பார்த்து இவன பத்திரமா ஒப்படைங்க" என்று குழந்தையை அவன் புறம் தள்ளினான்.

மீட்புக் குழு நபரோ, "சாரி சார், இவன் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருந்த குடும்பத்தை சேர்ந்த பையனாம். உயிர் பொழச்ச அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் தகவல் சொன்னாங்க, இப்ப இவனோட ஃபேமிலில யாரும் உயிரோட இல்ல" என்றதும் அதியன் மனம் உடைந்து போனது.

அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்ததால் தனக்குப் பரிட்சயமான அதியனை மட்டுமே நம்பிய குழந்தை, ராணுவ வீரனோடு செல்ல விரும்பாமல் அடம்பிடித்து அழுதது‌.

ஏற்கனவே தீட்சண்யாவுடன் சண்டையிட்டதால் சோர்ந்து கிடந்த மனதையும், உண்ணாமல் உறங்காமல் ஓடியாடி உழைப்பதால் ஓய்ந்து போன உடலையும் வைத்துக் கொண்டு அதியனால் மேற்கொண்டு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை.

இருந்தும் பிஞ்சுக் குழந்தையின் பிதுங்கிய இதழ்கள் அவன் மனதை அசைக்க, "நீ இப்ப இந்த மாமாகூட போ தம்பி. இதே மாதிரி பக்கத்து தெருவுலயும் ஒரு பில்டிங் இடிஞ்சு போச்சு. அதுக்குள்ள கொஞ்ச பேர் மாட்டிக்கிட்டு இருக்காங்க..

அவங்கள நாங்க சீக்கிரமா போய் காப்பாத்தணும். எல்லாரையும் பத்திரமா வெளிய எடுத்து விட்டுட்டு வந்து நான் உன்னோடவே இருக்கேன்.." என்று முடிந்த அளவுக்கு எடுத்துச் சொன்னான்.

அப்போதும் அந்தப் பிள்ளை அவன் விரலை விடாமல் பிடித்திருக்க, "சொன்னா கேளுப்பா, திரும்பி வந்ததும் நான் உனக்கு சாக்லேட் வாங்கித் தர்றேன்" என்று அக்குழந்தையை ஏமாற்ற முயற்சி செய்தான் அதியன்.

"எனக்கு சாக்லேட் வேணாம், டாமிதான் வேணும். என்னோட டாமி‌ உள்ள மாட்டிக்கிச்சு, அத மட்டும் வெளியில எடுத்துக் குடுங்க அங்கிள். அதுக்கப்புறம் நான் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்று தேம்பி அழுதது அந்தப் பிள்ளை.

"டாமினா உன் நாய்குட்டியா தம்பி?"

"ஆமா அங்கிள், அது எங்க வீட்டுக்கு பின்னால விளையாடிட்டு இருந்துச்சு, வாங்க நான் காட்டுறேன்" என்ற பிள்ளை அதியனை தன் வலு மொத்தமும் சேர்த்து இழுத்தது.

"இந்நேரம் அது செத்துப் போயிருக்கும் தம்பி, நான் வேணும்னா உனக்கு புது நாய்க்குட்டி வாங்கித்தரேன்" என்றான் அதியன்.

"இல்ல, அவன் கத்துற சத்தம் எனக்கு கேக்குது, ப்ளீஸ் என் டாமிய காப்பாத்திக் கொடுங்க" என்று அதியனின் காலைக் கட்டிக்கொண்டு அழுதான்.

"இல்லனு சொல்றேன்லப்பா" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அதியனின் அருகிலிருந்த வீரனின் வாக்கி டாக்கி அலற ஆரம்பித்துவிட்டது.

அதை எடுத்துப் பேசிய அவன், "சார் அடுத்த ஏரியாவுக்கு வேகமாக வர சொல்றாங்க, வாங்க போகலாம்" என்று அதியனை அவசரப் படுத்தினான்.

இங்கே குழந்தையோ தேம்பித் தேம்பி அழ, அதியன் குழந்தையைக் கட்டாயப்படுத்தி மீட்புக் குழுவினரின் கையில் கொடுத்துவிட்டு ராணுவ வீரரோடு இணைந்து நடக்க ஆரம்பித்தான்.

வேகமாகச் சென்று கொண்டிருந்த அதியனுக்கு தன்னிடம் எதுவோ குறைவதாகத் தோன்ற, யோசனையோடு தன் கையைப் பார்த்தான். அவன் கையிலிருந்த வாட்சைக் காணவில்லை..

'எங்கே போனது? நழுவி விட்டதா? இதுவரை இப்படி ஆனதில்லையே' என்று குழம்பியபடியே தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தான்.

அது அழுது கொண்டிருந்த அந்தச் சிறுவனின் கையில் ஏறிக்கொண்டிருந்தது.

 
Top