கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 3

Rhea Moorthy

Moderator
Staff member
வான் முழுவதிலும் கருவண்ணம் சூழ்ந்திருக்கும் நள்ளிரவுப் பொழுதானது, காதலர்களின் கண்களுக்கு மட்டும் காண்டீபனின் வர்ணப்பிரிகையாய் காட்சி தந்திடும்..

அதியனும்‌ அப்படி ஒரு ஞானக் கிறுக்கனாய், காதல் லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நேரம் கபிலன் அவன் எதிரில் வந்து நின்றான்..

அண்ட வெளிகளுக்கு அப்பால் திரிந்து கொண்டிருந்த அதியனின் மனது, சடாரென்று கால் வழுக்கி பூமியில் வந்து பொத்தென்று விழுந்தது.

'சிக்குச்சுடா‌ சிறுத்த..' என்று திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்த வேளையில் கபிலன்,

'அண்ணா சாரிண்ணா.. வீட்ல பொதுவா பொருள் வைக்கிற எல்லா இடத்திலேயும் தேடிட்டேன். வாட்ச் கிடைக்கல...

நான் அந்த வாட்ச்ச வேணும்னே தொலைக்கல, சத்தியமா நீ எங்கிட்ட கொடுத்த நிமிஷத்துல இருந்து என் கையிலதான் கட்டியிருந்தேன். நிஜமாவே எப்ப தொலைஞ்சதுனே எனக்குத் தெரியலண்ணா..

நான் காலேஜ்க்கு ரெடி பண்ணிட்டு இருக்கும் போதெல்லாம் அது என் கையிலதான் இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு பாதி தூரம் போயிட்டு இருக்கும் போது பாக்குறேன் காணும். வீட்ட விட்டு வெளிய போனதுக்கு அப்புறம் அதைப் பார்த்த மாதிரி ஞாபகமே இல்ல..

அதனால கண்டிப்பா அது வீட்டுக்குள்ளதான் விழுந்திருக்கும். நடக்கும்போது யாராவது எத்தி விட்டிருப்பாங்க.. சோபா, பீரோ, பிரிட்ஜ்க்கு கீழ போயிருக்கும்னு நினைக்கிறேன்.

சப்போஸ் நீ தேடினதுக்கு அப்புறமும் அந்த வாட்ச் கிடைக்கலைனா அப்பாட்ட போட்டுக் கொடுத்துடாதண்ணா.." என்று பாவமாய் இறைஞ்சினான்.

உயிர் போய் உயிர் வந்த நிலையிலிருந்த அதியன், தன்னைத் தேற்றிக்கொண்டு தம்பியையும் தேற்றலானான்.

"அடச்சீ.. இதுக்கு போய் ஏன்டா இவ்வளவு கவலை பட்டுக்கிட்டு இருக்க? அது கண்டெடுத்த வாட்ச் தானடா, யாரு தேடி வரப் போறா? அப்பா கேட்டா திருப்பிக் கொடுத்துட்டேன்னு பொய் சொல்லிடுறேன். நீ அதைப் பத்தி கவலைப்படாம போய் ரெஸ்ட் எடு, பார்த்துக்கலாம்" என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் அதியமான்.

அண்ணன் தன் பக்கம் நிற்கின்றான் என்றதும் சற்றே தைரியம் வர கபிலனும் நிம்மதியாய் உறங்கப் போனான்.

அதியமான் இறுதியாக தன் காதலிக்கு, 'டோன்ட் வொர்ரி ஐ வில் மேனேஜ் இட். கீப் ஸ்மைல் செல்லம்..' என்று ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டு தன் ஆபீஸ் பேக்கைக் கையில் எடுத்தான்.

எப்பாடுபட்டாவது விடுபட்ட வேலைகளெல்லாம் இன்று இரவோடு முடிக்க வேண்டும் எனும்‌ உத்வேகத்தோடு லேப்டாப்பை எடுத்து வெளியே வைத்தான்.

அப்போதுதான் அவன் கண்களில் அது பட்டது..

அந்த பையின் வலது மூலையில் மெல்லிய நீல வண்ணமாய் ஏதோ சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதியன் உற்று கவனித்தான், அங்கே அமைதியாக சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தது அந்த வாட்ச்..

"இது எப்படி இங்கே வந்தது? ஒருவேள தீபக் இந்த வேலைய பார்த்து இருப்பானோ? இருக்கும், கல்யாணத்துக்கு முன்னாலேயே எனக்கு எப்படியாவது டைவர்ஸ் வாங்கி கொடுக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியிறான் அவன்.."

என்று அதியனின் எண்ணங்கள் குறுக்க மறுக்காக ஓட, அந்த வாட்சை எடுத்து தங்கள் அறையிலிருந்த கபோர்டினுள் வைத்து மூடினான் அதியமான்.

அது தொலைந்ததால் தானே அவன் காதலி அவனைச் சந்திக்க காபி ஷாப் வரை வருகிறாள்?

குறைந்தபட்சம் காபி குடித்து முடித்த பிறகு உண்மையைச் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான் அந்த காதல் குறும்பன்..

அடுத்த நாள் காலை அவளைச் சந்திப்பதற்கென்றே பிரத்யேகமான ஆடை, வாசனைத் திரவியங்கள் என்று புது மாப்பிள்ளை போல் தயாராகினான் அவன்.

அண்ணனின் நடவடிக்கைகளைக் கொண்டே விஷயத்தை ஓரளவு யூகித்துவிட்ட கபிலன், "செம சீனா இருக்கு.. பாத்து பத்திரமா பண்ணுணா, இல்லனா பல்பு வாங்கிட்டு வந்து நிக்கப்போற.." என்று கலாய்த்தான்.

அபசகுணமாய் பேசும் அவனுக்கு நின்று பதில் சொல்ல நேரமில்லாத அளவுக்கு, அதியனின் உள்ளத்தினுள் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது..

அவசர அவசரமாக தயாராகிய அதியன், உண்ணாமல் கொள்ளாமல் ஓடுவதைக் கண்டு கிரகலட்சுமியும் சற்றே புருவம் சுருக்கினார்.

"ஈவ்னிங் சேர்த்து சாப்பிடுறேன், சாரிம்மா.." என்று அதியன் ஓடுவதிலேயே குறியாய் இருக்க, பிழைத்துப் போ என்று அவரும் விட்டுவிட்டார்.

அத்தனை பேரையும் சமாளித்த அதியன், தன் வீட்டு வாசற் படியைத் தாண்டிய அடுத்த கணமே, கபோர்டினுள் இருந்த வாட்ச் தன் இருப்பிடத்தை விட்டு மெல்ல அசைந்து கொடுத்தது..

அது தெரியாத அதியனோ அதீத சந்தோஷத்தோடு காபி ஷாப்பை நோக்கி தன் எந்திரப் புரவியைப் பறக்க வைத்துக் கொண்டிருந்தான்.

அதிசயத்திலும் அதிசயமாய் அவனுக்கும் ஐந்து நிமிடம் முன்னாலேயே தீட்சண்யா அங்கே வந்து ஆஜராகியிருந்தாள்.

அதியன் பைக்கை விட்டு இறங்குவதைக் கண்டதும், சாலையோரத்தில் நின்றிருந்த சின்னஞ்சிறு பெண்ணொருத்தி அவனிடம் வேகமாக ஓடி வந்தாள்..

அவள் கைகளிலிருந்த வண்ணமில்லா ஓவியப் புத்தகங்கள், அதன் உரிமையாளர் தெருவோர விற்பனையாளர் என்று ஓசையில்லாமல் பறைசாற்றியது.

"அண்ணா.. அண்ணா.. கலரிங் புக் வாங்கிக்கோங்க அண்ணா.." என்று கெஞ்சும் விழியால் அவள் கேட்க, அதியனும் முகம் சுளிக்காமல் இருபது ரூபாய் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டான்.

கெஞ்சாமல் கொஞ்சாமல் முதல் விற்பனை சுமுகமாக முடிந்ததால் உண்மைப் புன்னகையைச் சிந்திய பிஞ்சு முகம், "தேங்க்ஸ்ணா.." என்று தன் உள் மன நன்றியைப்‌ படம் போட்டுக் காட்டியது‌.

அதியன் தன் பைக்கின் முன் பகுதியில் இருந்த பையில் அதை நுழைத்திட, சின்னச் சிரிப்புடன் அந்தச் சிறுமி துள்ளிக் கொண்டு அடுத்த கஸ்டமரைத் தேடி ஓட ஆரம்பித்தாள். அவள் பின்னோடு பவ்.. பவ்.. என்று குரைத்துக்கொண்டே ஒரு குட்டி நாயும் ஓடியது.

"வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை, பாரபட்சம் காட்டுவதில் அந்தக் கடவுள் மனிதர்களை விடவும் கெட்டிக்காரன்.." என்று எண்ணிக் கொண்டே காபி ஷாப்பில் நுழைந்தான் அதியன்.

அவ்வளவு நேரமும் கண்ணாடிக் கதவுகளின் வழியே அவன் செய்கையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீட்சண்யாவோ, அதியனின் இளகிய மனதை எண்ணி பெருமை கொண்டாள்.

'பிற‌ உயிர்களிடத்தே சிறிதளவேனும் இரக்கம் காட்டும் ஆண்மகன், நிச்சயம் பெண்டாட்டியின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பான் இல்லையா?' என அவள் மனம் தன்னவன் பெருமையைத் தராசில் வைத்து அழகு பார்த்தது.

அடுத்த இரண்டு விநாடியில், அவளுக்கு எதிரிலிருந்த காலியான இருக்கையை உரிமையுடன் ஆக்கிரமித்தான் அதியன்.

அவன் அங்கு அமர்ந்த அடுத்த கணமே, தன் கைப்பையில் கையை விட்டவள், சில நூறு ரூபாய் தாள்களை கொத்தாக அள்ளி அவன் எதிரில் நீட்டினாள்.

அவள் செயல் புரிந்த அதியன் மனதில் தன்மானம் அடிபட்ட வலி மேலோங்க, "என்னதிது?" என்று கோபமாகக் கேட்டான்.

"ப்ளீஸ் வாங்கிக்கோடா, அடுத்தவங்க பொருள்னு தெரிஞ்சும் நான் தான் அதை எடுத்து விளையாடி தொலைச்சேன். நீ அதே மாதிரி வேற ஒரு வாட்ச் வாங்கிக்கோ. சப்போஸ் யாராவது வந்து கேட்டா கொடுத்துடு, இல்லனா அது என்னோட கிப்ட்டா உன்கிட்டயே இருக்கட்டும்" என்றாள்.

அதியனுக்கு இப்போது அவளை இழுத்துப் போட்டு நாலு மொத்து மொத்தி விட வேண்டும் என்ற மனநிலை, ஆனால் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான்.

அவன் மௌனம் நீடிப்பது கண்டு நீட்டிய கையைத் தயக்கத்துடன் மடக்கிக் கொண்ட தீட்சண்யா, "ஐயம் ஸாரிடா எனக்கு இதைத் தவர வேற வழி தெரியல, ராத்திரி முழுக்க தூக்கமே வரல தெரியுமா? அந்த வாட்ச்க்கு சொந்தக்காரங்க உன்ன போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டா என்ன பண்றது?" என்றாள்.

பெண் மனதிற்கு கற்பனா சக்தி அதிகம், அது ஈரைப்‌ பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி யோசிக்கும் வல்லமையைப் பெற்றது.. தீட்சுவும்‌ இப்போது அப்படி ஒரு கதையை தனக்கு தானே உருவாக்கிக் கொண்டு அஞ்சுகிறாள் என்று அதியனுக்கு நன்றாகப் புரிந்தது..

ஆனால் கோபத்தில் தான் ஏதாவது சொல்லிவிட்டால் நிச்சயம் அவளும் கோபம் கொள்வாள். ஏற்கனவே வாட்ச் தொலைந்ததால் பயந்து கிடக்கிறாள்..

பயத்தோடு கோபம் சேர்ந்தால் அதன் எதிரொலி படு பயங்கரமாக இருக்கும் என்று அவளைப் பார்த்த நாள் முதலே உணர்ந்திருந்தான் அதியன்.

"ஏதாவது பேசு அதி" என்ற பிறகும் அவன் வாய் திறக்காமல் இருக்க, "உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா?" என்றாள் புத்தி தெளிந்து..

"இல்ல நீ செஞ்ச காரியம் எனக்கு ரொம்ப இனிச்சது" என்றான் அதியன்.

அவ்வளவு கோபத்திலும் தன்னைக் காயப்படுத்தி விடக்கூடாதென்று, குறும்புச் சொற்கள் கலந்து பேசும் அவன் அன்பை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாள் தீட்சண்யா.

'உர்...' என்று உணவில்லாத புலியைப் போல் அமர்ந்திருக்கும் தன் காதலனைக் குளிர்விக்க இரண்டு கோல்ட் காபியை ஆர்டர் கொடுத்தாள் தீட்சு.

அவள் எதிர்பார்த்தது போலவே கோல்ட் காபி அதன் வேலையைச் சிறப்பாகச் செய்தது.

அவள் கள்ளச் சிரிப்பும், தனக்காக மெனக்கெட்டு அவள் ஆர்டர் செய்த கோல்ட் காபியும், அவன் உதட்டில் சிறு புன்னகையை விளைவித்தது.

அவன் சிரித்துவிட்டான் என்றதும், உள்ளுக்குள் கொஞ்சம் துணிச்சல் பிறக்க, "இதுக்குப் போய் இவ்வளவு கோபம் வருமா அதி உனக்கு?" என்றாள் அவள்.

"பணத்த கொடுத்து, நீ வேற நான் வேறனு என்னை பிரிச்சுப் பாத்தா எனக்கு கோபம் வராதா? நான் என்ன அப்படியா உன்கூட பழகிட்டு இருக்கேன்? அதையாவது மன்னிக்கலாம், அதுக்கு காரணம்னு ஒன்னு சொன்னியே. அதைமட்டும் சத்தியமா என்னால மன்னிக்கவே முடியாதுடி.." என்றான் அதியன்.

அவன் வார்த்தைகளைக் கேட்டதும் அந்தப் புள்ளி மான், கொஞ்சம் வெட்கத்தோடு இணைந்த ஒரு மென் புன்னகையினை வலையாய் விரித்தது..

'வீழ்வேனா நான்?' என்பதைப் போல வேறு திசையில் முகத்தை திருப்பிக் கொண்டான் அதியன்.

அவன் கோபமும் சரிதானே!!

ஆரம்ப நாட்களில் நண்பன் என்ற எல்லைக் கோட்டில் நியாயவானாக நின்றிருந்தவன், காதலெனும் கள்ளத்தனம் உள்ளத்தில் குடிபுகுந்த பிறகு, அவ்வப்போது அனுமதியின்றி அவளிடம் உரிமை எடுத்துக் கொள்கிறான்.

அதன்‌ காரணத்தை ஆரம்பத்திலேயே அவள் கவனித்திருந்தாலும், அவனாய் வாய்திறந்து சொல்லும் வரையில் சீண்டி விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவளுள்.

சொல்லத் தவிக்கிறான் அவன், கேட்கத் துடிக்கிறாள் இவள்.

இருந்தும் வயதுக் கோளாறு என்னும் போர்வை, இருவரின் இடையில் திரைச்சீலையாக ஊசலாடிக் கொண்டிருந்து.

ஆரம்பித்த சண்டையை முடிக்கும் விதமாக இருவரது கோல்ட் காபிக்கும் சேர்த்து அவனே பில் கட்ட, அதை நான் ஏற்றுக் கொண்டேன் எனும் விதமாக அமைதியாக அமர்ந்திருந்தாள் தீட்சு.

தன்னையும் தன் கருத்தையும ஏற்றுக் கொண்டாள் என்பதில் அதியனுக்கு ஏகபோக சந்தோஷம். தன் வாழ்வின் குறிப்பிடத் தக்க நாளாக, இந்நாளை நினைத்துக் கொண்டு, தன்னவளின் கரம் பற்றியபடியே அலுவலுகம் புகுந்தான் அதியன்.

அவன் எந்த நேரத்தில் இந்த நாள் தன் வாழ்க்கையின் அதிமுக்கியமான நாள் என்று நினைத்தானோ தெரியவில்லை..

பாவம், அவன் எதிர்காலத்தில் இந்த நாளைத் தான், தினம் தினம் நினைவு கூறப் போகின்றான் என்பதை அவனே இப்போது அறிந்திருக்கவில்லை.

அலுவலகம் ஆரம்பித்து விட்டது..

அன்றைய‌ தினம் ஆரம்பம் முதலே அதியன் மீட்டிங் மீட்டிங் என்று அலைந்து கொண்டிருந்ததால், மதியம் வரை அவனால் கான்பிரன்ஸ் ஹாலை விட்டு வெளியே வர இயலவில்லை.

மதிய உணவு இடைவேளையிலும், அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகே அவனுக்கு சாப்பிட நேரம் கிடைத்தது..

ஆள் அரவமற்று வெறிச்சோடி கிடந்த டைனிங் ரூமிற்கு ஆதரவளிக்க விரைந்து சென்றான் அதியன்.

கொலைப் பசியோடு லன்ச் பாக்ஸை திறந்தவனின் கண்ணெதிரில், நீலநிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது அந்த வாட்ச்.

திறந்த வேகத்திலேயே லஞ்ச் பாக்சை படக்கென்று மூடியவன், அக்கம் பக்கத்தில் ஆள் நடமாட்டம் தெரிகிறதா? என்று பார்த்தான்.

நல்லவேளை ஒரு ஈ காக்கா கூட இல்லை.‌.

புஸ் என்று அடிவயிற்றிலிருந்து அனல் காற்றை வெளியேற்றி விட்டு பொறுமையாய் லஞ்ச் பாக்சைத் திறந்தான் அவன்.

நீல நிறத்தில் மினுக் மினுக்கென்று ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த வாட்ச், இவனையே உறுத்து விழிப்பது போல் இருந்தது அதியனுக்கு.

'இத நான் வீட்டுல இருந்த கபோர்டுக்குள்ள தான வச்சிட்டு வந்தேன், எப்படி இங்கே வந்தது?..' என்று தலையைப் பிய்க்காத குறையாய் யோசித்துக் கொண்டிருந்தான்.

அதியனுக்கு சடாரென்று கபிலனின் ஞாபகம் வந்தது..

'நிச்சயம் இது அவன் வேலையாகத்தான் இருக்கும். நேற்றிரவு நான் அவனை வைத்து கேம் ஆடியதை மனதில் வைத்துக் கொண்டு, என்னை வஞ்சம் தீர்க்கவே இவ்வாறு செய்திருக்கிறான்..' என்ற முடிவிற்கு வந்து விட்டான் அதியன்.

ஏனென்றால் அதியன் காதலிப்பதும், யாரைக் காதலிக்கிறான் என்பதும், உடன் பிறப்பான கபிலன் ஆரம்ப நாட்களிலேயே கண்டு பிடித்துவிட்ட ஒரு விஷயம்.

அதியனும் காதல் மயக்கத்தில் அவ்வப்போது, அவளோடு இருந்த சம்பவங்கள் பற்றிய ஒன்றிரண்டு வார்த்தைகளை வாய் தவறி பேசி விடுவான். அப்படி உளறியதில் ஒன்றுதான் அவளோடு தினமும் உட்கார்ந்து உணவருந்துவது..

இருந்தாலும் அப்பா அம்மாவிடம் போட்டுக் கொடுத்தால், தன் ரகசியங்கள் அத்தனையையும் அதியன் வெளிப்படுத்தி விடுவான் என்ற அச்சத்தோடு, கபிலன் அண்ணணின் ரகசிங்களை தன் மனப் பெட்டகத்தில் பூட்டி வைத்திருந்தான்.

இது மட்டுமல்ல இது போல பலநூறு உடன்படிக்கைகளை, அண்ணன் தம்பி இருவரும் அவ்வப்போது தங்களுக்குள் மானசீகமாய் போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த சம்பவம் சற்றே விதிவிலக்காகி விட்டது..

'நான் வருத்தப்படும் போது ஒரு வார்த்த ஆறுதலா பேசல, ஆனா உன் லவ்வரு வருத்தப்பட்டானு தெரிஞ்சதும் ஹாஸ்டலுக்கே போய் சமாதானப்படுத்துறியா? இருடா உன் லவ்வுக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன்..' என்று கபிலன் இப்போது எதிரில் நின்று பேசுவதைப் போலிருந்தது அதியனுக்கு..

'அடப்பாவி..‌ அப்டினா நேத்து நைட் நான் என் லவ்வரோட பேசினது அத்தனையையும் நீ ஒட்டுக் கேட்டுட்டியா?

உன் ஃபேஸ் ரியாக்ஷனையும், அழுற மாதிரி நீ கொடுத்த ஆக்டிங்கையும் பார்த்து நான் அத்தனையும் உண்மைனு நம்பிட்டேனேடா..

நான் உனக்கு சின்ன ஆப்பு அடிச்சதுக்காக, நீ என்ன கழு மரத்தில ஏத்திவிட பாத்திருக்க.. நல்ல வேள இன்னைக்குனு பார்த்து எனக்கு ரொம்ப நேரம் மீட்டிங் வச்சானுங்க..

இல்லனா என் கதி என்னவாகியிருக்கும்? யமகாதகப் பயடா நீ, இன்னைக்கு ராத்திரி உனக்கு இருக்குடா கச்சேரி..' என்று வீராவேசமாய் புலம்பிக் கொண்டே மதிய உணவை உண்டு‌ முடித்தான் அதியன்.

முற்பகல் பொழுது முழுவதும் கான்ஃபரன்ஸ் மீட்டிங்கிலேயே கழிந்துவிட்டதால், பிற்பகலில் விடுபட்டிருந்த வேலைகள் அதியனை கசக்கிப் பிழிந்தது.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் தன் தேவலோகக் கன்னிகையைக் காணக் கூட நேரமில்லாமல், விருவிருவென வேலை செய்து கொண்டிருந்தான் அதியன்.

நேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தீபக், "அதியா, தீட்சு ரெண்டு பேரும் காபி குடிக்க வாங்க.." என்று அழைத்தான்.

தீட்சு நெளித்துக் கொடுத்தபடியே தன்‌ இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்..

அந்தப் பக்கம் திரும்பக் கூட நேரமில்லாத அதியன், "காபி குடிக்கிறதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்கல, நீங்க போங்க நான் அப்புறமா குடுச்சுக்கிறேன்" என்றுவிட்டு தன் வேலையிலேயே கண்ணாய் இருந்தான்.

தீபக், "சரி வாம்மா தீட்சு, நாமளாவது போய் குடுச்சிட்டு வருவோம்" என்றழைத்தான்.

ஆனால், தீட்சண்யாவோ அசையாமல் சிலை போல நின்று கொண்டிருந்தாள்.

தீபக் அவளை உலுக்கி, "தீச்சு, தீச்சு பாப்பா, என்னாச்சு உனக்கு?" என்று கேட்டான்.

அவளோ தீபக்கிற்க்கு பதில் சொல்லாமல், "என்னதிது அதி?" என்று அதியனிடம் கேள்வி கேட்டாள்.

"நம்ம ப்ராஜக்ட் வேலை தாண்டி, இதையே என்னதிதுனு கேக்குற.. தீடீர்னு என்னாச்சு உனக்கு?" என்றான் அதியன்.

"நான் அதைக் கேக்கலடா நல்லவனே.. உன் வலது கையில ஏதோ இருக்கே, அதைக் கேக்குறேன்" என்றதும், அதியனும் அவசரமாக தன் கையைப் பார்த்தான்..

அவன் வலது கரத்தினில் அந்த கருநிற வாட்ச், நீல நிற ஒளியை மினுக்மினுக்கென்று வெளிப்படுத்திக் கொண்டு, அமைதியாகச் சுருண்டு படுத்திருந்தது.

பேயைப் பார்த்தவன் போல சடாரென்று கையை உதறிக் கொண்டு எழுந்த அதியன், "இது.. இது எப்படி என் கையில? இத.. இத நான்.." என்று தமிழ் மொழியே தெரியாதவன் போல் பிதற்றினான்.

"அதைத்தாண்டா நானும் கேக்குறேன் வெண்ண.." என்று உறுமினாள் தீட்சண்யா.

இருவருக்கும் இடையில் புகுந்த தீபக் வில்லத்தனமாகச் சிரித்துக் கொண்டே, "ப்ளான் பண்ணி பண்ணிருக்கான் தீட்சு, இத நீ இப்டியே சும்மா விடக்கூடாது.." என்றதும் தீட்சண்யாவின் செவிகள் தீபக்கின் புறமாக திரும்பியது..

"உண்மையத்தான்மா சொல்றேன், இந்தப் பையன் ரொம்ப நாளா அந்த காபி ஷாப்க்கு உன்ன கூட்டிப் போகனும்னு நினைச்சுட்டு இருந்தான்.

அதுக்கு நீ ஒத்துகல, அதனால இந்த சான்ஸ்ஸ யூஸ் பண்ணிட்டான் போல.. என்ன இருந்தாலும் இவன் நம்ம பய, பார்த்து பதமா செய்மா" என்று இன்னும் அதிகமாக தூபம் போட்டுவிட்டுப் போனான்.

"இவ சும்மாவே ஆடுவா, பாவிப்பய அவளுக்குப் போய் ரெட்ட அடுக்கு சலங்கைய கட்டி விட்டுட்டுட்டு போறானே.." என்று பயந்தவாக்கில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அதியன்.

"ஸோ, நீ எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணிருக்க?!" என்று கொடூரமாக முறைத்தாள் தீட்சண்யா.

"ஏய், அப்படியெல்லாம் எதுவும் இல்லடி. உண்மையிலயே காபி ஷாப்ல இருந்து வெளியில வரும்போது, உன்கிட்ட உண்மைய சொல்லனும்னு தான் நினைச்சேன்.. ஆனா நீ என் கையப் புடிச்சதும் உலகத்தையே மறந்துட்டேன்" என்று தன்னிச்சையாக நயன்டீஸ் கிட்ஸைப் போல், உண்மை எல்லாம் உளறிக் கொண்டிருந்தான் அதியன்.

"நீ இவ்வளவு சீப்பா நடந்துப்பனு சத்தியமா எதிர்பாக்கல அதி. இனிமே என் கூட பேசாத போடா.." என்றவள் விருவிருவென்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாள்.

"தீட்சண்யா.. என் செல்லக்குட்டி.." என்று அதியன் எவ்வளவு கத்தியும் அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை..

'எல்லாம் இந்த சனியனால வந்தது.. இது லஞ்ச் பேக்ல தான இருந்து, எப்ப நான் என் கையில கட்டினேன்? நான் ஒரு அர லூசு..' என்று தன் கையில் இருந்தைக் கழட்டி கணினியின் முன் வீசி எறிந்துவிட்டு, தன்னவளின் பின்னால் ஓடினான் அதியன்.

அனைத்து ஐடி நிறுவனங்களிலும் இருப்பதைப் போல இங்கேயும் வராண்டா பகுதியில் ஒரு காபி மிஷினை வைத்திருந்தனர். அதன் அருகில் சென்ற தீட்சண்யா, தனக்கு மட்டும் ஒரு கப்பில் காபியை நிறைத்துக் கொண்டு ஜன்னல் ஓரத்தில் போய் நின்றாள்.

வால் பிடித்ததைப் போல் அவள் பின்னாடியே ஓடி வந்த அதியன், "ப்ளீஸ்டி, இப்படி பிஹேவ் பண்ணாத. நான் சொல்றத கொஞ்சம் கேளுடி, என் முகத்தைப் பாரு, நான் திட்டம் போட்டு ஏமாத்துற ஆளா?" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அவளோ கோபமாக, "நான் யார் கூடவும் இவ்வளவு க்ளோஸா பழகினது கிடையாது அதி. உன் கூடப் பழகுறேன்னா அதுக்கு காரணம் உன்னோட குணம்தான். நீ யாருக்கு, எப்ப கேட்டாலும் உதவி பண்ற.. உண்மையா இருக்க, நேர்மையா நடந்துக்குற..

அதனால தான் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சது. இப்ப நீ செஞ்ச விஷயத்தால எனக்கே என்ன முட்டாள்னு நினைக்கத் தோணுதுடா. தயவுசெய்து என் கண் முன்னாடி நிக்காத, போயிடு. எனக்கு அழுகையா வருது.." என்று அமைதியாக, அதே சமயம் அழுத்தமாகச் கூறினாள்.

அவள் கோபம் கரையைக் கடந்து விட்டது என்று புரிந்ததும், அதியனும் கோபத்தைக் கையில் எடுத்தான்.

"நான் என்ன செஞ்சுட்டேன்னு இப்ப நீ இந்த குதி குதிக்கற? ஒரு காபி ஷாப்க்கு உன்ன வர வச்சது அவ்வளவு பெரிய தப்பா? ஆரம்பத்துலயே நீ பிகு பண்ணாம வரேன்னு சொல்லிருந்தா, நான் ஏன் இப்படி வாய்ப்ப தேடி அலையப் போறேன்.

இவ்வளவு பேசுற நீ இன்னொரு விஷயத்த கவனிச்சுப் பார்த்தியா? உன்னைத் தவிர நான் வேற எந்தப் பொண்ணுகிட்டயும், இவ்வளவு உரிமையாவும் விளையாட்டுத் தனமாவும் நடந்துக்குறது இல்ல..

ஸேம் டைம், என்ன காபி ஷாப்க்கு கூப்பிடுற எந்த பொண்ணோடயும் போனதும் இல்ல..

உன் மேல இருக்குற உரிமையில கொஞ்சம் ஓவரா விளையாடினேன். அது உன்னை ஹர்ட் பண்ணிருச்சுன்னு எனக்குத் தெரியும். அதுக்காக நான் ஸாரி கேக்கவும் தயாரா இருக்கேன்..

உனக்காகத்தான் நான் எல்லாமே பண்றேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், ஏண்டி என்ன தூரத்துல வச்சே பாக்குற?

ஒரு தடவ.. ஒரே ஒரு தடவ என்னோட பொஸிஷன்ல இருந்து என் மனசைப் பாரு. அப்பத்தான் நான் உனக்கு எவ்வளவு தூரம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறேன்னு உனக்குத் தெரியும்" என்றவன் அவள் யோசிக்க ஏதுவாக அவளைத் தனியே விட்டுச் சென்று விட்டான்.

பெண்களின் குணமே கெஞ்சினால் மிஞ்சிடும், மிஞ்சினால் கெஞ்சிடும்..

'முதல் முறையாக அதியன் என்னிடம் கோபப் பட்டிருக்கிறான்..' என்றுணர்ந்த பேதை மனம் அடிபட்ட மானாய் துவண்டு கிடந்தது.

அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் அனைத்தனையையும், தனக்குள்ளே மறுபடியும் நினைவு படுத்திப் பார்த்தாள் அவள்.

'அவன் என்ன நினைப்பில் இந்த வேலையைச் செய்திருப்பான்?' என்று யோசிக்கும் போது,

'ஒரு வேளை ப்ரப்போஸ் செய்வதற்கா அப்படி செய்திருக்கலாமோ?! அதற்காகத்தான்‌ இன்று டிப்டாப்பாய் டிரஸ் செய்து வந்திருக்கிறான் போலும்‌..' எனச் சுளீரென்று அவள் அறிவுக்கு உரைத்தது.

'காதலைச் சொல்ல வந்தவனிடம் நான் காசைக் கொடுத்ததும், அவனுக்கு எவ்வளவு வருத்தமாய் இருந்திருக்கும்?‌ நான்தான் அவசரப்பட்டு விட்டேன்..' என்றுணர்ந்தாள்‌ அவள்..

'அவன் என்னை தன்னில் ஒரு பாதியாக நினைத்துக் கொண்டிருக்கிறான். நான் தான் அது புரியாமல் அவனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்..

இப்போதும் நீதான் என்னை காஃபி ஷாப்க்கு கூப்பிட்ட, நானா ஒண்ணும் வரல எனும் வார்த்தையை விடவில்லையே அவன். அந்த அளவிற்கு என்னவன் என்னை விரும்புகிறான்..' என்ற உண்மை விளங்கியதும், தீட்சண்யாவின் மனதை மறைத்திருந்த கோபமெனும் கருமேகங்கள் விலகி காதலெனும் பூத்தூரல் தூவ ஆரம்பித்தது.

கணினியில் கவனத்தை வைத்திருந்த அதியனின் பின்னால் வந்து நின்றாள் தீட்சண்யா.

அவள் பின்னால் இருப்பதை உணர்ந்தாலும் திரும்பாமல், "என்ன மேடம்? இன்னும் மிச்ச மீதி எதாவது திட்ட வேண்டி‌ இருக்குதா?" என்று கேட்டான் அதியன்.

அவளோ பதில் சொல்லாமல் தன் கையிலிருந்த சூடான காபி கப்பை, அவன் முன்னால் வைத்து விட்டு, தன் இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.

'இந்த காபி கப் அவள் மனமாற்றத்திற்காக எனக்கு கிடைத்த பரிசு..' என்றுணர்ந்த அதியன், அவளருகில் சென்று அவள் கைகளை எடுத்து, தன் உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

அவ்வளவு தான் ஆண்களின் குணம்.. அடித்தாலும் அணைத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுத்துவிடும்..

"என் செல்லத்துக்கு என்மேல இருந்த கோபம் போயிருச்சா?" என்று உறவாடியது அதியன் உள்ளம்.

"இன்னும் முழுசாகப் போகல.. உன்னை நினைச்சு எனக்கு கவலையா இருந்ததனால, ஏதோ கொஞ்சம் இறங்கி வந்திருக்கேன். மத்தபடி என் கோபம் குறையிறதுக்கு குறைஞ்சது நாலு நாளாகும். போ, போய் உன் வேலைய கவனி.." என்று சொல்லி விட்டு இவள் தன் கணினியில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள்.

'இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்காளே, இதுவே இன்னைக்கி போதும். மிச்சத்த நாளைக்கி பார்த்துக்கலாம்..' என்ற நினைப்போடு, அவள் தந்த காபியை ருசித்துக் கொண்டே தன் வேலையில் மூழ்கினான் அதியன்.

அடுத்து வந்த இரண்டு மணிநேரமும் அதியனுக்கு ஒரு இடத்தில் நிற்க முடியாத அளவுக்கு வேலை இருந்தது. மும்பை பயணத்தின் போது அவன் தயாரித்து வைத்திருந்த, டாக்குமெண்ட்டை கையில் எடுத்துக் கொண்டு, டீம் ஹெட்டோடு சேர்ந்து ஒவ்வொரு தளத்திற்கும் அரைமணி நேரமென்று பிரித்துச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஓடியாடி அலைந்து அயர்ந்து திரிந்து அவன் உட்காரும் பொழுது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது.

இன்றைய வேலை நிச்சயம் இவ்வளவு நேரம் இழுக்கும் என்று முன்பே தெரிந்ததனால், மணி ஏழு இருக்கையிலேயே தீட்சண்யாவிற்கும் தீபக்கிற்கும், தான் இன்று புறப்பட நேரமாகும் காத்திருக்க வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.

அவர்கள் இருவர் மட்டுமல்ல அலுவலகத்திலிருந்த முக்கால் வாசி ஆட்கள், மணி எட்டரையைத் தொட்டதுமே கிளம்பியிருந்தனர்.

மிச்சசொச்ச ஆட்களும், கையிலிருக்கும் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்ப வேண்டுமென்று, துரித கதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதியனுக்கு அடுத்து வேலை இல்லை.

இருந்தாலும் அதீத அலைச்சலால் உடல் நோக, வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் தன்னை சற்றே ஆசுவாசப் படுத்திக் கொள்ள நினைத்து, இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.

அப்போது தான் அவன் கண்களுக்கு அந்த காபி கப்பும், அதன் பின்னால் அவன் வீசி எறிந்திருந்த வாட்ச்சும் தென்பட்டது.

காபி குடித்து மூன்று மணி நேரமாகியிருந்ததால் அந்த கப் சுத்தமாக காய்ந்து கிடந்தது.

வாடிய மலராய் கிடந்த அந்த கப்பை எடுத்த அதியன், தன் கைவசமிருந்த மார்க்கர் மூலம் ஒரு பெரிய இதய வடிவ படத்தினை அதன் மேல் வரைந்தான்.

அதனோடு சேர்த்து காபி கப்பை கட்டிப் பிடித்தார் போல வாட்ச்சை மாட்டி விட்டான்.

யாராவது பார்க்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் ஒரு திருட்டுப் பார்வை பார்த்து விட்டு, தீட்சண்யாவின் கணினிக்கு கீழே இருக்கும் டிராயரில் அதை பத்திரமாக வைத்துப் பூட்டினான்.

'நாளைக்கி காலையில அவ இத பார்த்ததும் என்ன நினைப்பா? ரௌடிப் பொண்ணு, வீடு புகுந்து வெட்டுவா..

ஒரு வேள‌ அவ இன்னைக்கி காலையில மாதிரியே வெட்கச் சிரிப்பு சிரிச்சா எப்படி இருக்கும்? அப்படியே இந்த வாட்ச்ச தன்‌‌ கையில போட்டுக்குவா.. அடுத்து ஈவ்னிங் அவுட்டிங், அப்புறம் மாசாமாசம் ஜாலி ட்ரிப்னு அடுத்த ஆறு மாசத்துக்கு என் வாழ்க்கைல லவ்வோ லவ்வுதான்..

அதுக்கப்புறமா மெல்ல மெல்ல ரெண்டு வீட்லயும் எங்க கதைய ஒப்பன் பண்ணி, ஒரு வருஷத்துல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிக்கனும். கண்டிப்பா ரெண்டு வருஷத்துக்குள்ள குழந்தை பெத்துக்கணும், டிலே பண்ணக்கூடாது..'

என்று எல்ஐசி ஏஜென்ட்டிற்கு மிச்சமாய் எதிர்காலம் குறித்து திட்டம் போட்டபடியே, தன் அலுவலக பேக்கை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி புறப்பட்டான் அதியன்.

வீட்டில் இன்று கபிலன் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே உறங்கிவிட்டான்‌. அப்பாவும் அம்மாவும் பேப்பர் திருத்தும் பணியில் வெகு தீவிரமாய் வேலை பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அந்த வேலையில் இருக்கும் நேரம் இருவரும் இங்கே கட்டிப்பிடித்து உருளும் சப்தம் கேட்டால் அப்பா நிச்சயம் தர்ம அடி தருவார் என்று விவரம் தெரிந்த வயது முதலே அனுபவப்பட்டவன் அதியன்.

ஆதலால் கபிலனுக்கான அர்ச்சனையை நாளை பார்த்துக் கொள்ளலாம், என்று தன் தினசரி வேலைகளில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தான் அவன்.

குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு, செல்போனை கையில் எடுக்கையில், மணி பத்தரையைக் கடந்திருந்தது.

அதற்குள் தீட்சண்யாவும் ஒரு குட்நைட் மெஸேஜை போட்டு விட்டு, உறங்கச் சென்று விட்டாள்.

ஆழந்த உறக்கத்தில் இருப்பவளை எழுப்ப வேண்டாம் என்று எண்ணியவன், அலுவலக வேலையைக் கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்தான்.

அதுவரை கேட்பாரற்று ஒரமாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆபீஸ் பேக்கை கையில் எடுத்து, லேப்டாப்பை லாவகமாய் வெளியே தூக்கினான்.

அதனடியில் மினுக்மினுக் என்று மின்னிக் கொண்டிருந்த அந்த நீல வண்ண வெளிச்சம் அதியனின் கண்களில் பட்டது‌.

'இது கனவா நனவா?! நான் அலுவலகத்தில் தானே இந்த வாட்ச்சை வைத்து விட்டு வந்தேன்?!' என்ற யோசனையோடு அதைக் கையில் எடுத்துப் பார்த்தான்.

அதன் வால்பேப்ரில் காபி கப்பில் அதியன் வரைந்து வைத்திருந்த இதய வடிவ ஓவியம், போட்டோவாக ஒட்டிக் கொண்டிருந்தது..

சத்தம் போடவோ தூக்கி எறியவோ தோன்றாதபடி உறைந்திருந்தது அதியனின் அறிவு.. முதல் முறையாக அந்த வாட்ச்சைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்தான் அதியன்.
 
Top