கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 4

Rhea Moorthy

Moderator
Staff member
அதியன் கண்ணால் காண்பதை நம்ப முடியாமல் திகைத்துப் போய் இருந்தான்.

சற்று முன்னால் தன் கையாலையே வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டு விட்டு வந்த ஒரு பொருள்.. எப்போது, எப்படி தன் பைக்குள் மீண்டும் வந்ததென்று அவனுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.

அவன் மனம் முழுவதும் திகில் பரவ, உடலெல்லாம் வெடவெடத்துக் கிடந்தது..

'எப்படி ஒரு வாட்ச்சால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானாகவே வர முடியும்? இதெல்லாம் நிஜ வாழ்வில் சாத்தியமா? இல்லை டெக்னாலஜி அவ்வளவு வளர்ந்துவிட்டதா?

ஒரு வேளை நான்தான் கற்பனை செய்து கொண்டிருக்கின்றேனோ?' என்று அவன் மனம் இங்கும் அங்கும் ஊசலாடியது.

ஒருவேளை மனப்பிராந்தியாக இருக்குமோ என்று எண்ணியவன் மீண்டும் அந்த வாட்ச்சின் இருப்பினைப் பார்த்து நிதர்சனத்தை உறுதிபடுத்திக் கொண்டான்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு உண்மை விளங்கிட, அவன் உடலில் உதறல் இன்னும்‌ அதிகமாகியது..

'பேய், பிசாசு, செய்வினை சம்பந்தப்பட்ட வாட்ச்சா இருக்குமோ?!' என்று அவன் புத்தி கோக்கு மாக்காக யோசிக்க ஆரம்பித்தது.

அதியன் என்றில்லை, அவன் இடத்தில் யார் இருந்தாலும் இந்தச் சூழ்நிலையில் இப்படிதானே யோசிப்பார்கள்?!..

அதீத குழப்பத்தில் சிக்கியிருந்த அவன் மனம், என்றோ பார்த்த பேய் படங்களை எல்லாம் இன்று தூர்வாரிக் கொண்டிருக்க, "நிச்சயமாக இது பேய்களின் வேலைதான்.." என்ற முடிவிற்கு வந்து விட்டான் அதியன்.

பேய்‌ படங்களில் பேய்களை விரட்ட என்னென்ன வழிமுறைகளெல்லாம் உண்டோ அவற்றை எல்லாம் அவசர அவசரமாய் அதியனும் செய்ய ஆரம்பித்தான்..

முதல் வேலையாய், ஆபீஸ் பேக்கில் இருந்த அந்த வாட்ச்சை அலுங்காமல் குலுங்காமல் தூக்கிக் கொண்டு போய் பால்கனியில் போட்டான்.

நொடி நேரம் கூட தாமதிக்காமல் விருட்டென பாய்ந்து உள்ளே வந்தவன், டம்.. என்ற சத்தத்தோடு பால்கனிக் கதவை இழுத்துப் பூட்டினான்.

பேயின் சக்தியை முறியடிக்க காலம் காலமாய் திரைப்படங்களில் போதிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் அவன் அறிவினை ஆக்கிரமிக்க, வேக வேகமாய் கிச்சனுக்குச் சென்று கைக்கு கிடைத்த பூண்டு, தக்காளி, வெங்காயத்தோடு சிறிது கறிவேப்பிலையையும் அள்ளிக் கொண்டான்.

கடுகையும் சேர்த்து எடுத்திருந்தால் கையோடு தக்காளி சட்னி செய்திருக்கலாம்.. ஐடியா இல்லாத பையன்...

கூடுதல் ஃபிட்டிங்காக துடைப்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்.

பால்கனி கதவின் கீழே, வரிசை வாரியாய் அள்ளி வந்ததெல்லாம் ஆட்டோமேட்டிக்காக அவன் கைகள் அடுக்கி வைத்தது.

'அடுக்கி முடிக்கிற வரைக்கும் பேய் வீட்டுக்குள்ள வந்துடக்கூடாது ஆண்டவா‌..' என்று அவன் இதயம் வேறு அச்சத்தில் டமால் டமாலென்று முரசடித்துக் கொண்டு கிடந்தது.

அனைத்தையும் அடுக்கி முடித்ததும், அதியன் மனம் சற்றே நிம்மதி கொள்ள, மூச்சை இழுத்து விட்டு தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பேய் கதவினைத் துழைத்து உள்ளே வருமோ என்றொரு யோசனை வர, இம்முறை தெய்வங்களின் உதவியை நாடினான் அவன்.

இவ்வளவு நாட்களாகக் கேட்பதற்கு ஆளில்லாமல் சுவற்றில் நூலாம்படையுடன் ஊசலாடிக் கொண்டிருந்த மகாலட்சுமி காலண்டர், இன்று அவன் கண்களுக்கு ஆபத் பாண்டவனாகத் தெரிந்தது.

காலண்டரையும் மேஜை விரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சாய்பாபா புகைப்படமிட்ட விரிப்பையும் எடுத்துக் கொண்டான்.

பால்கனி கதவிலிருக்கும் ஆணியில் அவற்றை நேர்த்தியாய் தொங்க விட்டதும், தங்களுக்கும் அந்த வாட்ச்சுக்கும் நடுவே மிகப் பெரிய மதில் சுவரே கட்டிவிட்ட திருப்தி அதியனுக்கு.

'இனி எந்த அன்னிய சத்தியும் என் வீட்டினுள் நுழைய முடியாது..' என்ற தைரியத்தோடு போய் படுத்து உறங்கலானான்.

அச்சமும் குழப்பமும் அவன் மனதை அளவுக்கதிகமாக ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், கண்டகண்ட கனவுகள் வேறு அவன்‌ சிந்தையில் தத்தமது படையெடுப்பினை நிகழ்த்தியது..

நாலா திசைகளிலும் புகை சூழ்ந்த கானகத்தின் நடுவே, தனியொரு ஆளாக ஓடிக் கொண்டிருந்தான் அதியன்..

தரைமேல் வளர்ந்திருந்த பச்சை புற்களெல்லாம் விரல்களாய் மாறி அவன் பாதங்களை பற்றி இழுத்துக் கொள்ளத் துடித்தது.

அவற்றிடமிருந்து தப்பித்து எம்பி குதித்தபடி ஓடிக் கொண்டிருந்தவனை, உயர்ந்த மரத்தின் கிளை ஒன்று, வேகமாக சாய்ந்து வந்து அடித்துக் கீழே தள்ளியது..

அதில் பத்து பதினைந்தடி தூரம் தள்ளிப் போய் விழுந்தவனை, தரையிலிருந்த புற்களும் இலைகளும் சேர்த்து ஈசல் போல மொய்த்துக் கொண்டன.

மரமெல்லாம் தத்தமது வேர்களை பெயர்த்தெடுத்துக் கொண்டு கொடூர முகத்துடன் இவனை நோக்கி வர, அவற்றிடமிருந்து தப்பிக்க நினைத்து, பின் புறமாய் தரையிலேயே ஊர்ந்தவனை எதுவோ விடாமல் இழுத்துப் பிடித்தது.

அதியனின் மார்பிலேறி அமர்ந்திருந்த அதன் கணம் தாங்காமல், அவனுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது.

பயத்துடன் கண்கள் மிரள தன் மார்பில் அமர்ந்திருந்த மர மனிதனைப் பார்த்திருந்தான் அதியன்.

எவ்வளவு முயன்றும் அவனால் அந்த மர‌ மனிதனை மீறி அசைய முடியவில்லை..

வெகுவாய் முயன்று, "ஏன் என்னை புடிச்சு அமுக்குற? உனக்கு என்ன வேணும்?" என்று கத்த ஆரம்பித்தான் அதியன்.

"பண்றதையும் பண்ணிட்டு ஏன் அமுக்குறனு வேற கூசாம கேக்குறியாடா?, இன்னிக்கி உன்னை சட்னியாக்காம விட மாட்டேன்டா.." என்று சொல்லிக் கொண்டே இன்னும் உக்கிரமாய்‌ தாக்கினான் அந்த மர மனிதன்.

அடுத்த நொடியே அனைத்து இலைகளும் கிளைகளும் அதியனை நெருங்கி வந்து இன்னும் இன்னும்‌ அமுக்கியது.

கூடவே, "சாவுடா.. டயருக்கு கீழ வச்ச எலுமிச்சம் பழம் மாதிரி உன்ன நசுக்கு நசுக்குனு நசுக்கிப் புழியப் போறேன்.." என்று கர்ஜித்தான் அந்த மர மனிதன்.

அந்தக் குரலும் உருவமும் தனக்கு எங்கோ பழக்கப்பட்டதைப் போல் இருக்க, அதியன் தப்பிக்க முயற்சிப்பதை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு, சற்று பொறுமையாய் யோசிக்க ஆரம்பித்தான்.

ஆம்!.. அது அவன் தம்பி கபிலனின் குரல்தான்..

'செடி கொடிகள், மரங்களுக்கெல்லாம் கடவுள் கபிலனின் குரலையா வைத்திருக்கிறார்?!?! ரசனையற்றவர்..' என்று எண்ணிக் கொண்டே வேர்க்க விறுவிறுக்க கண் விழித்தான் அதியன்.

மரம், செடி, கிளை அத்தனையும் கனவு.

ஆனால் அவன் அடி வாங்கியது மட்டும் நிஜம்..

அதியனின் மார்பில் ஏறி அமர்ந்திருந்த கபிலன், உறங்குகின்ற மனிதன் என்றெல்லாம் ஈவு இரக்கம் பார்க்காமல், அதியனை மொத்து மொத்தென்று மொத்திக் கொண்டிருந்தான்.

கனவு கலைந்ததும் விருட்டென்று விழித்தெழுந்த அதியன், தன் மார்பிலிருந்த கபிலனை பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, "டேய் எருமை மாடு, என்னடா பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டான்.

"பார்த்தா தெரியல? உன் சங்க நெறிச்சு கொல்லப் போறேன்.." என்றான் கபிலன்.

"அதான் நீ உக்காந்திருந்த அழக பார்த்தாலே தெரியுதே.. பச்ச குழந்த மாதிரி படுத்து தூங்குற என் மேல ஏறி ராட்சஷனாட்டம் டான்ஸாடிட்டு இருக்குற.. எதுக்குடா தேவையில்லாம என்ன அட்டாக் பண்ணுற?.." என்றான் அதியன்.

"என்னது?! நீ பச்ச குழந்தையா? தண்ணி லாரிக்கு டிரவுசர் போட்ட மாதிரி இருந்துட்டு, உன்னை விடச் சின்னப் பையனை ஏமாத்தறியே வெக்கமா இல்ல?" என்றான் கபிலன்.

அரைத் தூக்கத்தில் எழுந்ததனால் தன்னை மறந்து, "நான் எப்படா உன்ன ஏமாத்தினேன்?" என்றான் அதியன்..

"நான் வாட்ச்ச மிஸ் பண்ணிடேன்னு சொன்னதும், அன்னிக்கு என்னை எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணின?.. என் வாழ்க்கையிலேயே அன்னைக்குத் தாண்டா முதல் முறையா உங்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டேன்..

அதுவும் எப்படி? மானசீகமான மன்னிப்பு. செய்யாத தப்புக்கு இந்த கபிலன மன்னிப்பு கேக்க வச்சல..

நீ ஆடுறது பிக் பாஸ விட கொடூரமான கேம்னு தெரியாம, எப்படியாவது சன்டே அந்த வாட்ச்ச தேடிக் கண்டு பிடிச்சுத் தரேன் அண்ணான்னு எல்லாம் சொன்னேனே..

அப்போ கூட என் மேல உனக்கு இரக்கம் வரலைல??

அப்பாவும் அம்மாவும் திட்டும் போதாவது, நம்ம தம்பியே ஐயோ பாவமேனு என்ன காப்பாத்தினயாடா நீ? கிராதகா.. காமுண்டகா.." என்று வாய்க்கு வந்ததெல்லாம் வசைபாட ஆரம்பித்தான் கபிலன்.

அதியன், "டேய்.. டேய்.. எல்லை மீறிப்‌போற.. என்ன இருந்தாலும் நான் உன் அண்ணன், அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்னு பழமொழியே இருக்கு.." என்றான் கபிலனை விட்டு தூரமாக ஓடியபடியே..

"குறுக்க பேசாதடா பன்னி, குறி மிஸ்ஸாகுது.." என்றபடி அதியனின் முதுகில் கும்மாங்குத்து குத்தினான் கபிலன்.

"பயங்கரமா வலிக்குது, எலும்பு ஏதாவது உடைஞ்சிடப் போகுதுடா பஞ்சப் பரதேசி.."

"போவட்டும், எனக்கு இனிமே அண்ணனும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். உன்ன கொல்லாம விடமாட்டேன்டா கொய்யால.." என்று மீண்டும் மல்யுத்தத்தில் இறங்கினான் கபிலன்.

அவனிடமிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தும்‌ வேண்டுமென்றே சிக்கிக் கொண்டு, "விடுடா விடுடா" என்று சிரித்துக் கொண்டே அதியன் விளையாட,

"விடமாட்டேன்னா விடமாட்டேன்தான்" என்று கபிலன் கத்த,

இருவரும் போட்ட இரைச்சலில் கிரகலட்சுமி இவர்கள் அறைக்கே வந்து விட்டார்.

"டேய்.. இன்னும் சின்னப் புள்ளைங்கன்ற நினைப்பாடா உங்களுக்கு? வளந்த பசங்க, எனக்காக கிச்சனுக்கு வந்து கூட‌மாட வேலை செய்யலைனாலும் பரவாயில்ல, இப்டி காது கிழியிற மாதிரி கத்தி தொலைக்காதீங்கடா.."

"இவன்தான்மா ஆரம்பிச்சான்.." என்று அதியன் கூற,

"எல்லாமே இவனாலதான்மா" என்று கபிலன்‌ கதற, கிரகலட்சுமி‌ இருவருக்கும் பொதுவாய் இரண்டு கொட்டு வைத்தார்.

கபிலன், "எந்த வீட்லனாலும் புள்ளையா‌ பொறக்கலாம், வாத்தியார் வீட்ல மட்டும் புள்ளையா பொறக்ககூடாது. கொட்டி கொட்டியே எங்கள ரொம்ப உயரமா வளர வச்சிருக்கீங்க.."

"சம்பந்தா சம்பந்தமில்லாம உளறாதடா.. ராஜாவாட்டம்‌ ரெண்டு ஆம்பளப் புள்ளைங்கள வச்சிருக்கா, இவளுக்கு கவலையே இல்லனு ஊருக்குள்ள எனக்கு ரொம்ப நல்ல பேரு..

ஆனா உங்கள வச்சுகிட்டு ஒரு காபி கூட என்னால நிம்மதியா குடிக்க முடியாதுன்ற உண்மை யாருக்காவது புரியுதா? உருண்டு பொரண்டு சண்டை போடுற அளவுக்கு உங்களுக்குள்ள என்ன தாண்டா பிரச்சனை?" என்று கேட்டார்.

அதியன் வாய் திறப்பதற்கு முன்பு முந்திக் கொண்ட கபிலன், "அம்மா, முந்தாநாள் நைட் வாட்ச்ச காணும்னு இவன் நம்மள என்னென்ன பாடு படுத்தினான்? இங்க பாருங்கம்மா அந்த காணாம போன வாட்ச்ச" என்று அதியனின் வலது கையைப் பிடித்து, அம்மாவின் முன்பு நீட்டினான் கபிலன்.

அதியன் தன் வலது மணிக்கட்டை கட்டி பிடித்தார் போல, உறங்கிக் கொண்டிருந்தது அந்த வாட்ச்சையே அப்போதுதான் பார்த்தான்.

அவன் ஏற்கனவே முதல் நாள் இரவே அதை பேய் வாட்ச் என்று முடிவு கட்டிவிட்டானே..

போதாக் குறைக்கு இரவெல்லாம் கொடூரமான கனவுகளாலும், அதிகாலையில் தம்பியாலும் தாக்கப் பட்டிருந்ததால், அதீத மன உளைச்சலில் சிக்கித் தவித்திருந்தது அதியன் மனம்.

அப்படிப்பட்டவன் தன் கையில் வாட்ச்சைப் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு அதைக் கழற்றி எறிந்தான்.

தொடக் கூடாததைத் தொட்டதைப் போல வாட்ச்சை வேகமாக வீசி எறிபனை, மற்ற இருவரும்‌ உக்கிரமாய் முறைத்துக் கொண்டு நின்றனர்.

அதியனோ, "கபிலா, அத தூக்கி வெளியில போடுடா, சீக்கிரமா அத தூக்கி வெளில போடுடா" என்று கத்தினான்.

ஆனால் கபிலனோ கிரகலட்சுமியைப் பார்த்து, "பாருங்கம்மா உங்க‌ செல்லப் புள்ளையோட லட்சணத்த, கையும்‌ களவுமா‌ மாட்டினதால எப்படியெல்லாம் நடிக்கிறான் பாருங்க.." என்று அதியனை அம்மாவிடம் மாட்டி விடுவதிலேயே குறியாக இருந்தான்.

அதியன் பதற்றம் நிறைந்த குரலில், "அம்மா அது பேய் வாட்ச்மா, கபிலன்ட்ட அத வெளியில தூக்கிப் போடச் சொல்லுங்க.." என்றதும் அவ்வளவு நேரமாய் கோபமாய் இருந்த கிரகலட்சுமியே சிரித்துவிட்டார்..

கபிலனும் நக்கலாய் சிரித்துக் கொண்டே, "ஆனாலும் நீ அநியாயத்துக்கு நடிக்கிறடா.. ஆனா எங்கம்மா உன் நடிப்பையெல்லாம் பாத்து ஏமாற மாட்டாங்க. அவங்கள ஒன்னும் தெரியாத சின்ன பாப்பானு நினைச்சயா? ராஜாமாதா அட்டாக் திஸ் அக்யூஸ்ட்.." என்று அம்மாவின் தலையில் ஒரு கூடை ஐஸை கவிழ்க்க முயன்றான்.

"போதும் நிறுத்து கபிலா, எனக்கு உன்னையும் தெரியும், அவனையும் தெரியும்.." என்று கபிலனின் கட்டுரைப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் கிரகலட்சுமி.

வீட்டின் நாட்டாமை, தன் தீர்ப்புக்கு தயாராகிவிட்டார் என்றதும் அண்ணன் தம்பி இருவரும்‌ அமைதியாய் நின்றிருந்தனர்.

"அதியா, ஏன்டா இப்படி செஞ்ச? கூடப் பொறந்த தம்பிக்கு ஒரு நாள் இந்த வாட்ச்ச கொடுக்குறதுல உனக்கு என்ன கஷ்டம் வரப்போகுது?"

"ஐயோ அம்மா, நான் சொல்றத நம்புங்க. அன்னைக்கு கபிலன் கேட்டதுமே நான் அந்த வாட்ச்ச அவனுக்குக் கொடுத்துட்டேன்.

ஆனா, அந்த வாட்ச்தான் ஏனோ என்ன விட்டு போக மாட்டேங்குது, திரும்பத் திரும்ப என்கிட்டயே வருது. நேத்து நைட் கூட வாட்ச்ச நான் ஆபீஸ்ல வச்சுட்டுதான் வந்தேன்‌. அது எப்படி நம்ம வீட்டுக்கு வந்ததுனே எனக்குத் தெரியலம்மா.

இது முதல் தடவ இல்ல, மூணாவது தடவ. எனக்கு என்னமோ இது பேய் வாட்ச்னுதான் தோணுதும்மா, பேசாம நாம இதத் தூக்கி வெளியில போட்டுடலாம்.

எதுக்கும் நம்ம வீட்டச் சுத்தி மஞ்சத் தண்ணி, கோமியமெல்லாம் தெளிச்சு விடுவோம்மா.." என்றான் அதியன்.

கபிலன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்து, "கணம் கோர்ட்டாளர் அவர்களே, கொரோனாவ விட கொடூரமான வியாதி உங்க அருமை புள்ளைதான் என்பது இதன் மூலம் ஆணித்தரமாய் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட்லயே எப்படி எப்படியெல்லாம் மாத்திப் பேசுறான்னு பாருங்கம்மா.." என்றான்.

"கபிலா, நான் சீரயஸ்ஸா சொல்றேன்டா.. அது ஏதோ அமானுஷ்ய சக்தி மாதிரி இருக்கு. அம்மா சத்தியமா நான் நேத்து நைட்டே அத தூக்கி வெளியில போட்டேன்டா.. வேணும்னா இங்க பாரு, அது திரும்ப வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு நான் செஞ்ச செட் அப்ப.." என்று நேற்றிரவு கதவினைச் சுற்றி செய்திருந்த அலங்காரத்தைக் காண்பித்தான்.

கிரகலட்சுமி, "அடப்பாவி, தக்காளி வெங்காயத்தை வெளக்கமாரோட சேர்த்து போட்டிருக்கியே.. இத இனி எப்படி நான் சமையலுக்கு யூஸ் பண்றது? உங்கப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சா அடுத்த ஒரு மாசத்துக்கு காய்கறி வாங்கி தர மாட்டாருடா" என்று திட்டிக்கொண்டே அது அனைத்தையும் புடவை முந்தானையில் முடிந்தார்.

அதியனோ அழும் குரலில், "அம்மா அத விடுங்க இந்த வாட்ச்ச முதல்ல வெளிய தூக்கி போடுங்க" என்றிட அவர் அவனை பார்வையால் எரிக்க முயன்று கொண்டிருந்தார்.

"டேய் கபிலா நீயாவது என்னை நம்பு, அது திரும்ப எப்படி என் கைக்கு வந்ததுன்னு இப்ப வரைக்கும் எனக்குத் தெரியல, அந்த வாட்ச் நமக்கு வேண்டாம்டா. அண்ணன் வேணும்னா உனக்கு வேற ஏதாவது காஸ்ட்லியானது வாங்கித் தரேன்டா" என்று இறைஞ்சினான்..

அம்மாவிடமும் தம்பியிடமும் தன்னைப் புரிய வைத்து விடும் நோக்கில், அதியன்‌ படும்பாடு விளங்காத கபிலன், "அம்மா நிமிஷத்துக்கு நிமிஷம் வாட்ச் பத்தின வார்த்தை மாறுது, நோட் தட் பாயின்ட்மா..

இன்னும் கொஞ்ச நேரம் போச்சுனா அது தானாவே நடந்து வந்து, என் கையில ஏறி உக்காந்துக்கிச்சுன்னு எதிர் கட்சிக்காரர் சொன்னாலும் சொல்லுவார்..

இதுக்கு நீங்க தான் உடனே ஸ்பாட் பனிஷ்மென்ட் கொடுத்தாகனும், இல்லனா நான் மேல் முறையீடு செய்ய அப்பாகிட்ட போவேன்" என்று மிரட்டல் விடுக்க ஆரம்பித்தான்.

அதியன், "டேய், நீ நம்புனாலும் நம்பலைனாலும் அது தாண்டா உண்மை, எருமை மாடே. அந்த வாட்ச் அதுவா வந்துதான் என் கையில் ஏறி உட்க்காந்திருக்கு கபிலா" என்றான்.

கிரகலட்சுமி தலையில் அடித்துக் கொண்டு, "ஈஷ்வரா.. பத்து புள்ள பெத்த என் பாட்டியெல்லாம் நோகாம அத்தனையும் வளர்த்து விட்டுட்டு மாசம் ஒரு ஊருனு டூர்‌ போயிட்டு இருந்துச்சு..

நான் ரெண்டே ரெண்டு புள்ளைய பெத்தேன், அதுங்க பண்ற அலும்பலால எப்ப வேணாலும் நெஞ்சு வலி வரும்ங்கிற மாதிரி இருக்கேன்..

ஏன்டா டேய், புள்ளைங்க பெருசாகப் பெருசாக அறிவு வளரும்பாங்க.. உங்க இரண்டு பேருக்கும் ஏன் இப்படி குறைஞ்சுட்டே போகுது?

ஏந்தான் இப்படி திணுசு திணுசா சண்டை பிடிக்கிறீங்களோ தெரியல.. வழக்கம் போல உங்களோட பிரச்சனையை நீங்களே பேசி தீர்த்துக்கோங்க, இல்லனா ரெண்டு பேரும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்.."

என்று பொத்தாம் பொதுவாய் தீர்ப்பு கூறிவிட்டு அடுப்பங்கரைப் பக்கம் சென்றுவிட்டார்.

அம்மாவின் வாயால் இந்த வார்த்தையைக் கேட்பதற்காகவே இத்தனை நேரம் பாடுபட்டுக் கொண்டிருந்த கபிலன், அவர் அங்கிருந்து கிளம்பியதும் டப்பாங்குத்து ஆட ஆரம்பித்து விட்டான்..

அதியன் கபிலனிடம், "டேய் இது நிஜமாவே.." என்று ஆரம்பிக்கும் முன்பாகவே,

"அது பேய் வாட்ச்சோ, நாய் வாட்ச்சோ எனக்குத் தெரியாது. அடுத்த மாச சேலரில நீ எனக்கு ஒரு ஹெட்செட் வாங்கித் தர்ற. இல்லனா நான் அப்பாகிட்ட எக்கச்சக்க பிட்டா போட்டு விட்ருவேன் ராசா.." என்று சொல்லிக் கொண்டே டான்ஸ் ஆடியபடி பாத்ரூம் பக்கம் சென்றான்.

அம்மாவும் தம்பியும் அவரவர் வேலையைப் பார்க்கப் போன பிறகு, கழற்றி எரிந்த வாட்ச்சைப் பார்த்தான் அதியன்.

அது அவன் வீசி எரிந்த தூரத்தை விடவும் முன்னால் வந்திருந்தது..

அதியனுக்கு புரிந்து விட்டது.. வேறு எந்த பக்கமும் நகராது அது தன்னை நோக்கித் தான் நெருங்கி வருகிறது என்று.

'நான் எங்கு சென்றாலும் அது என்னைப் பின் தொடர்ந்து வருகிறது, ஆனால் இதை வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

எனக்குத்தான் பைத்தியக்காரப் பட்டம் கட்டுவார்கள். இதை என்ன செய்யலாம்?' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அந்த வாட்ச் தன் தூரத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கிக் கொண்டது.

யோசிப்பதற்கான கால அவகாசம் குறைந்து கொண்டே வருகிறது என்பது புரிந்ததும் அதியன் துரிதமாகச் செயல்பட ஆரம்பித்தான்.

தன் கைக்கெட்டும் தூரத்திலிருந்த கைக்குட்டையை எடுத்தவன், அதைச் சரியாக வாட்ச் மேல் தூக்கிப் போட்டான்.

கைக்குட்டை வலைபோல வாட்ச் மேல் விழ, அதை அப்படியே கரப்பான் பூச்சியைப் பிடிப்பது போல பிடித்து, நொடிகூட தாமதிக்காது தூக்கிக் கொண்டு போய் வெளியில் வீசி எறிந்து விட்டான்.

இப்படிச் செய்வதனால் அதனிடமிருந்து தப்பிக்க முடியுமா? முடியாதா? என்றெல்லாம் அவன் அறிவுக்கு அப்போதைக்கு யோசிக்கத் தோன்றவில்லை.

தற்போது தன் வீட்டில் அது இருக்கக் கூடாது என்பது மட்டுமே அவன் புத்தியில் இருந்ததால் அவ்வாறு செய்து விட்டான்..

ஆனால் அதைத் தூக்கி எறிந்த பிறகுதான் அதியனுக்கு ஒரு ஞானோதயம் வந்தது..

'அலுவலகத்திலிருந்து வீடு வரை மிகச்சரியாக பின்தொடர்ந்து வந்த அதற்கு, தெருவிலிருந்து வீடு வரை வர எவ்வளவு நேரம் ஆகும்?' என்று யோசித்துக் கொண்டு இருக்கையிலேயே தெருவில் கிடந்த வாட்ச், படாரென்று பறந்து வந்து அதியனின் வலது கை மணிக்கட்டில் ஆட்டோமேட்டிக்காக கட்டிக்கொண்டது.

புல்லட் ஷாட் வேகத்தில் பறந்து வந்து தன் கையைக் கட்டிக் கொண்டிருக்கும் வாட்ச்சைக் கண்டு‌ பயந்து போன அதியன், "ஐயோ அம்மா.." என்று கத்திக் கொண்டே தரையில் விழுந்துவிட்டான்.

பிள்ளைகள் இருவரும் சண்டை போடுவதாக நினைத்த கிரகலட்சுமி, "டேய் ரெண்டு பேரும் சத்தம் போடாம பேசி முடிங்கடா.. அப்பா வாக்கிங் போயிட்டு திரும்ப வர்ற நேரம்.

அவருக்கு மட்டும் உண்மை தெரிஞ்சது, உங்க ரெண்டு பேரையும் தலைகீழாக் கட்டித் தொங்க விட்டுருவாரு பார்த்துக்கோங்க.." என்று கிச்சனிலிருந்து தன் குரலை மட்டும்‌ அதியனின் திசையில் அனுப்பினார்..

"சரிம்மா.." என்று பதிலளித்த அதியன், பயப்படுவதை நிறுத்திவிட்டு நிதானமாய்‌ யோசிக்க ஆரம்பித்தான்..

'எனக்கென்ன துன்பம்‌ வந்தாலும் பரவாயில்லை, ஆனால் என் குடும்பத்தை ஒரு சிறு தூசி கூட நெருங்கக் கூடாது' என்று சராசரி மிடில் க்ளாஸ் ஆண் பிள்ளையாய் அவன் மனம்‌ செயல்பட்டது.

வெகு ஜாக்கிரதையாக தன் கையிலிருந்த வாட்ச்சை கழற்றியவன், மீண்டும் அதை வெளியில் தூக்கி எறிந்தான்.

'அது மீண்டும் தன் கையை வந்தடையும் முன், வேகமாக பால்கனி கதவை பூட்டி விடவேண்டும்..' என்று அவசர அவசரமாக கதவைச் சாற்றித் தாழ்ப்பாள் போட முனைய, மிகச் சரியாக கதவு தாழிடப் படுவதற்கு ஒரு நொடி முன்பாக, அவனது வலது கையில் வாட்ச் வந்து ஒட்டிக் கொண்டது.

அதியனுக்கு நடப்பது எதையும் நம்ப முடியவில்லை..

மேற்கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கவும் தோன்றவில்லை..

அதிபயங்கரமான குழப்பத்தில் அவன் மனம் சிக்கி இருந்தாலும், 'இந்த அமானுஷ்யத்தால் தன் குடும்பத்திற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது..' என்ற ஒற்றை எண்ணம் மட்டும் அவன் சிந்தையில் ஆழப் பதிந்திருந்தது.

வீட்டிலிருந்த அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருக்க, அதியன் தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று வெளியே சென்றுவிட்டான்..

இரண்டு தெரு தள்ளி, ஆளரவம் எதுவும் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, 'அக்கம்பக்கத்தில் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா?..' என்று சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓட விட்டான்.

அப்படி யாரும் இல்லை என்பது உறுதியானதும், பைக்கிலிருந்து இறங்கி, தன் கையில் இருந்த வாட்சை கழட்டி கீழே போட்டான்.

அது அசையாமல் அப்படியே நிற்கவும், அருகில் கிடந்த பெரிய சைஸ் பாறாங்கல்லைத் தூக்கி, நங்கென்று வாட்ச்சின் தலை மேல் போட்டான் அதியன்.

க்ளக்.. என்ற சத்தத்தோடு வாட்ச் முற்றிலுமாய் உடைந்து நொறுங்க, 'இந்தப் பிரச்சனை இதோடு முடிந்து விட்டது..' என்ற திருப்தியோடு, பைக்கை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான் அதியன்.

அவன் அந்தத் தெருவின் எல்லையைக் கூட தாண்டியிருக்க மாட்டான். அதற்குள் அந்த வாட்ச் உடைவதற்கு முன் எப்படி இருந்ததோ, அப்படியே மீண்டும் வந்து அவன் கையினைக் கட்டிக் கொண்டது.

அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த அதியன், சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான்..

எதிரில் காரில் வந்து கொண்டிருந்த உத்தமர் ஒருவர், சென்னை பாஷையில் அவனுக்குச் சில நல்ல அறிவுரைகளை வாரி வழங்கிவிட்டுச் செல்ல, அதியன் பதற்றத்தில் நடுங்கும் கைகளோடு பைக்கை ஓரமாய் கொண்டு போய் நிறுத்தினான்.

'சற்று முன்பு என் கைகளாலேயே சல்லிசல்லியாக நொறுக்கப்பட்ட வாட்ச், மீண்டும் எப்படி பழைய நிலைக்கு மாறியது?..

என்னால் தீர்க்க முடியாத அளவிற்கு இது பெரும் பிரச்சனையாக போய்க் கொண்டிருக்கிறதே?.. இனி என்ன செய்வேன் நான்?' என்று நடுரோட்டில் தலையைப் பிய்த்துக் கொண்டு நின்றிருந்தான் அதியன்.

அந்தத் தெருவின் கடைசியில் ஏதோ நெருப்பு எரிவது போல் தெரிவது கண்ட அதியன் விரைந்து அங்கு சென்று பார்த்தான்..

யாரோ ஒருவர் அங்கிருந்த குப்பைகளை எல்லாம் கூட்டி நெருப்பு வைத்துக் கொண்டு இருந்தார்.

நெருப்பைப் பார்த்ததும் அதியனுக்கு மூளையில் மீண்டும் ஒரு குண்டு பல்பு எரிய, நெருப்பு வைத்தவர் அந்தப்பக்கம் போனதும், வாட்ச்சை எடுத்து நெருப்பில் போட்டான்.

'ஒருவேளை இது நெருப்பில் எரிந்து சாம்பலாகி விட்டால், என்னைப் பின் தொடராது..' என்ற நப்பாசையோடு அதையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

ஆனால் அந்த வாட்ச்சோ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குளு குளுவென்று சுகமாய் அமர்ந்திருந்தது.

'எங்கே அது மீண்டும் தன்னிடம் வருமோ?!...' என்று நினைக்கையிலேயே அதியனுக்கு விழிபிதுங்கிற்று.

அவனுக்கு யோசிப்பதற்கு நெடுநேரம் கொடுக்காமல், அடுத்த இரண்டு நொடிகளிலேயே வாட்ச் மீண்டும் பறந்து வந்து அவன் வலது கையில் தஞ்சமடைந்திற்று‌..

நெருப்பின் சூடு அதில் இம்மியளவும் ஏறியிருக்க வில்லை என்று விளங்கியதும், அதியன் பதற்றத்தையும் தப்பிக்கும் முயற்சிகளையும் கைவிட்டு விட்டு, ஒரு நிரந்தர முடிவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

குப்பைக்குள்ளிருந்த ஒரு பழைய இரும்புப் பெட்டியையும், ஒரு‌ திடமான நைலான் கயிற்றையும் யாரும் பாக்கும் முன் எடுத்துக் கொண்ட அதியன், சற்று தொலைவிலிருக்கும் கூவம் ஆற்றை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான்.

அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாமல், அந்தச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தது.

கூவம் ஆற்றினை நெருங்கியதும் தன் பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு, சுற்றுப் புறத்தில் பார்வையைச் சுழல விட்டான்.

அவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை என்றதும், தயாராக வைத்திருந்த இரும்பு பெட்டிக்குள் அந்த வாட்சை வைத்து, கயிற்றால் நன்றாகக் கட்டி, பெட்டியையும் ஒரு பெரிய சைஸ் கல்லோடு சேர்த்து கட்டி, மொத்தமாய்த் தூக்கி கூவம் ஆற்றில் போட்டுவிட்டான்.

இம்முறை அந்த வாட்ச் தன்னிடம் திரும்பி வராது என்ற நம்பிக்கை 90% இருந்தாலும், வந்துவிட்டால் என்ன செய்வது? என்ற அந்தப் பத்து சதவீத அச்சம் வேறு அவன் மனதை வண்டாய் குடைந்தது.

'வரக்கூடாது வரக்கூடாது..' என்று தன்னுடைய இஷ்ட தெய்வத்தை, மனதினுள் வேண்டிக்கொண்டே அதியன் நின்றிருந்தான்.

அந்தோ பரிதாபம், அவன் இஷ்டதெய்வம் இன்றும் அவன் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை..

நீரினுள் சிறிது சிறிதாய் சலனம் தோன்ற, அதியன் மிரளத் தொடங்கினான்..

நீரின் அசைவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கிட, திடீரென மந்திரம் போட்டது போல் நீருக்குளிருந்து பறந்து வந்து அவன் கையைக் கட்டிக் கொண்டது வாட்ச்..

அதியன் அவசர அவசரமாக தன் சுற்றுப்புறத்தைப் பார்வையால் சோதித்தான். நல்ல நேரத்திற்கு அங்கே எவரும் இல்லை..

இதற்கு மேல் என்ன செய்வதென்று அதியனுக்குச் சுத்தமாகத் தெரியவில்லை.

வீட்டுப் பக்கம் போகவே மனம் வராமல் பைக்கை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ அலைந்து திரிந்தான் அதியன்.

அவன் மனம் முழுவதும், 'இந்த வாட்ச் என்னை இப்படித் துரத்துதே.. என்ன செய்தாலும் இதை அழிக்க முடியவில்லையே.. இந்த வாட்ச்சோடு எப்படி இனி நான்‌ காலம் தள்ளுவது?..' என்று அதிலேயே சுழன்று கொண்டிருந்தது.

மனம் ஒரு நிலையில் இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்ததால் அவன் கவனம் முழுவதும் வாட்ச்சிலேயே இருந்தது.

சாலையை கவனிக்க மறந்து பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவனின் பின்னால், அதிவேகத்தோடு வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென்று தன் கட்டுப்பாட்டை இழந்தது..

ஓட்டுநர் உத்தரவுக்கு அடங்க மறுத்த அந்த லாரி, சாலையின் இடது மூலைக்கும் வலது மூலைக்குமென்று ஊசலாடியபடி‌ வளைந்து நெளிந்து ஓடியது.

லாரியின் ஓட்டுநரோ தனக்கு முன்னால் இருக்கும் பைக்கை கவனித்ததும் ஹாரன், பிரேக், டைவர்ஷன் என்று அந்த விபத்தை தடுக்க எவ்வளவோ முயற்சித்துவிட்டார்..

அவரின் எந்த முயற்சிக்கும்‌ பலனளிக்காத லாரி தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அதியனின் பைக்கை, ஒரே அடியில் பத்தடி தூரத்திற்கு தூக்கி எறிந்தது.
 
Top