கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 7

Rhea Moorthy

Moderator
Staff member
டீம் ஹெட், அதியனைக் காரசாரமாகத் திட்டிக் கொண்டிருந்த வேளையில், வெளியிலிருந்த அத்தனை பேரும் அதீத பதற்றத்தோடு கூடிப் பேசுவதைக் கண்டார்.

'திடீர்னு என்னாச்சு எல்லாருக்கும்?..' என்ற யோசனையோடு அவரும் அதியனும் வெளியே வந்தனர்.

"வொர்க்கிங் டைம்ல ஏன்‌ கும்பலா நிக்கிறீங்க?.. எதாவது ப்ராப்ளமா?.." என்றார் டீம்ஹெட்.

"எஸ் சார், எந்த கம்ப்யூட்டரும் வொர்க் ஆகல, சடனா ஆஃப் ஆகிடுச்சு.." என்றான் ஒருவன்.

"வாட்‌ நான்சென்ஸ்? ஏசி, லைட்‌ எல்லாமே ஆன்ல இருக்கும் போது சிஸ்டம் மட்டும் எப்படி ஆஃப் ஆகும்?" என்று கேட்டுக்கொண்டே வேகமாக ஒரு கணினியில் தன் கைத் திறமையைக் காட்ட முற்பட்டார் டீம்‌ ஹெட்.

அப்போதும் அது கம்முனு கிடக்க, யோசனையுடன் நெற்றியை நீவியவரின் எதிரே அதியன் வந்து நின்றான்.

"நான் எப்ப கிளம்பட்டும்?.." என்று விஷமமாய் புருவம் உயர்த்திச் சிரித்தவனைக் கண்டு அவருக்கும்‌ எதுவோ விளங்கியது.

அதியனை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள்ளே வந்தவர், "நீ எதாவது பண்ணுனியா?" என்றார் கோபமா.

"நான் உங்க முன்னாடி தானே நின்னேன்? அப்புறம் எப்படி என்னால செய்ய‌ முடியும்?" என்றவனின் குரலில் இருந்த கேலி டீம் ஹெட்டுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அதுவரை கோபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அவர் அறிவு சற்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தது.

'கொஞ்ச நேரம் முன்னால செல்போன எடுக்காமலேயே எனக்கு மெஸேஜ் அனுப்பினான். இப்ப ஒரே நிமிஷத்துல கம்பெனியோட எல்லா கம்ப்யூட்டரையும் ஆஃப் பண்ணிட்டான். இவனால எப்படி இதை செய்ய முடியுது?

ஹேக்கிங் கோட் ஏதாவது யூஸ் பண்றானோ? அப்படித்தான் இருக்கும்..

என் டீம்ல இருக்கிறதிலேயே இவன்தான் ரொம்ப டேலன்ட்டானவன். இவன் கையில வேற ஒரு ப்ராஜெக்ட் ஃபினிஷிங் ஸ்டேஜ்ல நிக்குது.

இந்த நேரத்தில வேலையை விட்டு தூக்கினா, என்‌ தலையில தான் அவன் வேலையும் வந்து விழும். கம்பெனி கம்ப்யூட்டர ஹேக் பண்ணவனுக்கு என் கம்ப்யூட்டரை ஹேக் பண்றது அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை.

தவிர, மேலிடத்துலயும்‌ ப்ராஜெக்ட்ட முடிச்சு அனுப்பச் சொல்லி ப்ரஷர் கூடும்.. இப்போதைக்கி இவனை விட்டுப் பிடிக்கலாம்" என்ற முடிவிற்கு வந்தவர்,

"சரி போய் வேலையப் பாரு.." என்றார் மனதே இல்லாமல்.

"இப்பத்தான் வேலைய விட்டு தூக்க போறேன்னு சொன்னீங்க, அதுக்குள்ள மாத்தி பேசுறீங்க.." என்று வேண்டுமென்றே அவரின் மனதைக் குடையும் படியான கேள்வியைக் கேட்டான் அதியன்.

"இல்ல, நீ போய் உன் வேலைய செய், மத்தத அப்புறமா பாத்துக்கலாம்.." என்றதுமே எல்லா கணினியும் உயிர் பெற்றது.

அதைப் பார்த்தவருக்கு இன்னும் அதிர்ச்சியாக, அதியனை ஒரு மாதிரி பார்த்தார்.

அதியனோ இதழை வளைத்துச் சிரித்தபடியே, "தேங்க்யூ சார்.." என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அவன் சென்று கொஞ்ச நேரம் வரை பேயறைந்ததைப் போல இருந்தான் அந்த டீம்ஹெட். அவர் முகத்தில் அத்தனை குழப்ப ரேகையும் ஒருங்கே செயல் பட்டுக் கொண்டிருந்தது.

அதியன் சந்தோஷமான மனநிலையுடன் தன் சீட்டிற்கு வந்தமர்ந்தான்.

பக்கத்து இருக்கையிலிருந்த தன் காதலியிடம், "என்னடா செல்லம் அதுக்குள்ள வேலை பார்க்க ஆரம்பிச்சுட்ட?" என்றான்.

"வேற‌ என்ன பண்ணனுமாம்?" என்றாள் கணினியிலிருந்து தன் கண்களைத் திருப்பாமலேயே.

"மாமனுக்காக வெய்ட் பண்ணனும். அவன டீம் ஹெட் கூப்பிட்டாரே, என்னாச்சோ ஏதாச்சோனு எதாவது கவலை இருக்கா உன் முகத்துல?" என்றான்.

தீட்சு, "அதான் முழுக் கொழுக்கட்டை மாதிரி திரும்பி வந்துட்டியே, அப்புறமெதுக்கு ஐயாவைப் பத்தி நான் கவலைப் படனும்?" என்று அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான பஞ்ச் திருப்பிக் கொடுத்தாள்.

"ம்ச்சு, ஏழு மலை ஏழு கடல் தாண்டி எகிறி குதிச்சு என் செல்லத்தை பார்க்க வந்தேன், நீ இப்படி எடுத்தெறிஞ்சு பேசலாமா? நான் ஒவ்வொரு நிமிஷமும் உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா? நீ என்ன கொஞ்சம் கூட மிஸ் பண்ணவே இல்ல, போடி உன் பேச்சு கா" என்றான் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.

"இதோ பார்ரா? கவிஞனுக்கு காதல் பொத்துக்கிட்டு வருது, அதுசரி உனக்கு கடலை எல்லாம் தாண்ட தெரியுமா? இந்தா இந்த ஆஃபிஸ் கட்டிடத்த தாண்டி ஒரு அடி போ பாக்கலாம்."

"நான்‌ போறதுக்கென்ன? உன்னையும் சேர்த்துக் கூட்டிட்டு போவேன். அப்படி செஞ்சா நீ எனக்கு என்ன தருவ?" என்றவனின் கண்கள் இரண்டும் அவளின் மாதுளம் பிஞ்சு இதழ்களைக் குறி வைத்துக் குவிந்து நின்றது.

அவன் முகத்தைத் தன் கையால் பற்றி தன்னிலிருந்து திருப்பிய தீட்சு, "இந்த வாயில வடை சுடற வித்தைய எங்கடா கத்துகிட்ட? எப்ப பாரு பேசிப் பேசியே ஆளை கவுத்துடுற" என்று பொய்யாய் குறைபட்டுக் கொண்டாள்.

"ஆமா, அப்படியே கவுத்துட்டாலும் நீதான் எதுக்கும் மசிய மாட்டேங்குறியே!! சரி வா, புது பைக் வாங்கியிருக்கேன், சாயங்காலம் வீட்டுக்கு போனா கழுதைய உட்கார வெச்சு ரவுண்டடிக்கனும். அதுக்கு முன்னால என் தேவதைய ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போறேன்" என்றான் அதி.

"கழுதையா? யாருடா அது? ஓ, கபிலனா? ஹா.. ஹா.. நல்லாத்தான் பேரு வெச்சிருக்க. நான் இப்ப வர முடியாது, ஒரு இம்பார்ட்டண்ட் வொர்க் இருக்கு. ஏற்கனவே லேட் ஆகுதுனு டீம்ஹெட் வறுத்து எடுத்திட்டாரு. இப்ப போய்‌ பர்மிஷன் கேட்டேன், அவரு அகோரியா மாறி‌ அப்படியே என்ன கடிச்சித் தின்னுடுவாருடா" என்றாள்.

"அந்தக் கவலையெல்லாம் உனக்கெதுக்கு? டீம்ஹெட் நம்ம பையன், என் பாக்கெட்லதான் அவன வச்சிருக்கேன். எப்ப வேணாலும் எங்க வேணாலும் நாம போகலாம், எவனும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான் வா" என்று அவளை வம்படியாய் இழுத்துக் கொண்டு சென்றான் அதி.

அவர்கள் இருவரும் வந்ததையும், அதியனின் கையில் வண்டிச் சாவி சுழன்றதையும் பார்த்தவர், 'என்ன?' என்று பார்வையாலேயே கேட்டார்.

"நாங்க ரெண்டு பேரும் வெளியில போயிட்டு வர்றோம், ஒரு ஹால்ப் டே மட்டும் லீவு வேணும்" என்றான் அதி.

'டேய் நீ வந்ததே இப்பத்தானடா? வந்தவன் சும்மா உக்காந்து ஓபி அடிச்சாலும் பரவாயில்லை. ஒழுங்கா வேலை செய்யற அவளையும் ஓட்டிகிட்டு போகப் பாக்குறியே? இதுக்குத்தான் இவ்வளவு வேகமாக ஆபீஸ் வந்தியாடா?' என்று மனதிற்குள் புலம்பியவர் நிஜத்தில், வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்திருந்தார்..

அவர் அமைதியைக் கண்டு பயந்துபோன தீட்சு, "சார், நான் வேண்டாம்னு தான் சொன்னேன், இவன்தான் கேட்கல சார்" என்று அக்மார்க் ஸ்கூல் பிள்ளை போல அவனைப் போட்டுக் கொடுத்தாள்.

அவள் ஆக்டிங் கண்டு மெல்லச் சிரித்த அதியன், "பாப்பா பயப்படுதுல, சீக்கிரமா ஓகே சொல்லுங்க சார்" என்றான்.

"தாராளமா போய்ட்டு வாங்க சார், உங்களை வேண்டாம்ன்னு நான் சொல்ல முடியுமா? நீங்க எவ்வளவு பெரிய ஆளு நீங்க இல்லாம இந்த ஆபீஸே இல்ல, தயவு செஞ்சு கிளம்புங்க" என்றார்.

தீட்சண்யா வியப்போடு அவரைப் பார்க்க, அதி அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.

இருவரும் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்ததும் அவள் அதியனின் பைக்கை பார்த்துவிட்டு, "வாவ் சூப்பரா இருக்கு அதி" என்று துள்ளிக் குதித்தாள்.

"உனக்கு பிடிச்சிருக்கா செல்லம்?"

"ரொம்படா.."

"சரி சொல்லு, எங்க போகலாம்?"

"பெசன்டு நகர் பீச் போகலாம் டா, உன்கூட போகணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை" என்றாள் தீட்சண்யா.

இருவரும் பெசன்ட் நகர் பீச்சை நோக்கி பயணமானார்கள். புது பைக் அதில் காதலியுடன் உல்லாசப் பயணம், அவனை ரொம்பவே உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது.

பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விட்டு, இருவரும் கடல் அலையை அருகிலிருந்து பார்க்கும் தூரத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

ஆங்காங்கே ஜோடி ஜோடியாக நிறையக் காதலர்கள் கடலைகளை வறுத்துக் கொண்டிருக்க, இவர்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகினர்.

கடல் அலையின் ஓசை காதில் ரம்மியமாக ஒலிக்க, அதைக் கேட்டுக் கொண்டே அலையை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.

ஏக கடுப்புடன் அவளைப் பார்த்தவன், "நான் ஒருத்தன் இங்க மண்டை காய்ஞ்சு வந்திருக்கேன், கொஞ்சமாவது என்னை பாக்குறியாடி?" என்று அவள் கன்னத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தன் புறம் திருப்பினான்.

"ஸ்ஆ... என்னடா‌ பண்ற?" என்று வெடுக்கென அவன் கைகளைத் தட்டிவிட முயன்றாள் தீட்சு.

உடும்பு பிடிக்காரன் கொஞ்சமும் இசைந்து தராததால், அவன் தீண்டலில் அவளின் மாம்பழக் கன்னங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பழுப்பேற அதன் அழகில் சொக்கிப் போனான்‌ அதியன்.

"விடுடா வலிக்குது" என்றவள் அவனைச் செல்லமாய் முறைத்துப் பார்த்தாள்.

"இங்கயாவது கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விடு, நான் ரொம்ப ஏங்கிப் போயிருக்கேன்" என்று அவள் இடைப் பிரதேசத்திற்கு கையை கொண்டு செல்ல,

இரக்கமின்றி அதைத் தட்டி விட்டவள், "ஹலோ மிஸ்டர், நான் இன்னும் உங்க காதலையே கண்பாம் பண்ணல. அதுக்குள்ள ரொமான்ஸ் கேக்குதோ?" என்றாள் கேலியாய்.

அவளின் உதாசீனத்தால், அவனும் கோபமாய் திரும்பிக் கொள்ள, அவளுக்குத்தான் அந்த சிடுமூஞ்சியைப் பார்த்து பாவமாகிப் போனது.

"சாரிடா" என்று அவனை தன் பக்கம் திருப்பினாள்.

சட்டென்று கோபம் தெளிந்தவன், அவள் இடையைப் பற்றித் தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான்.

அவள் வெக்கத்துடன், "டேய் எல்லாரும் பாக்கறாங்கடா" என்றாள்.

"ஆமா, இங்க யாருக்கும் வேற வேலை இல்லை பாரு, நம்மள பாக்குறதுக்கு" என்று சலித்துக் கொண்டவன்,

"ஆபீஸ் பார்டர தாண்டி தூக்கிட்டுப் போனா நான் கேக்குறதத் தருவேன்னு சொன்னேல, ஒரே ஒரு முத்தம் கொடுடி. பைக் வாங்குனதுக்கு ஞாபகமா வச்சுக்குறேன்" என்று ஆண்கர்வம் விட்டுக் கெஞ்சினான்.

"அதுக்கென்ன தாராளமா தர்றேன், வா போய் கொடுத்துட்டு வருவோம்" என்று தன் இடத்திலிருந்து எழுந்து நின்றாள்.

அவனோ புரியாமல், "எங்கே" என்றான்.

"நீ தான பைக் வாங்குனதுக்கு ஞாபகார்த்தமா முத்தம் கொடுக்கச் சொன்ன? அதான் போய் பைக்குக்கு கொடுத்துட்டு வருவோம்" என்று மொக்கை ஜோக் அடிப்பவளை, முறைத்துக் கொண்டே எழுந்தவன் அவளை அடிப்பதற்காகக் கையை ஓங்க, அவள் சிரித்துக் கொண்டே துள்ளி ஓட ஆரம்பித்தாள்.

மான்விழியாளின் துள்ளலும் துடிப்பும் அந்த ஆண்புலியின் சிந்தையைக் கவர்ந்திழுக்க, உள்ளுக்குள்ளிருந்த எழுந்த இயல்பான ஆசையோடு அவளைத் துரத்திச் சென்ற அதியன், இரண்டே நொடியில் அவளைப் பிடித்துக் கொண்டு மணலில் விழுந்தான்.

உருண்டு புரண்டு எழுந்த இருவரும் சிரிப்புடன் மூச்சு வாங்கிட, அதி பேராசையுடன் மெல்லத் தன் பார்வையைச் சுழல விட்டான். இதுவரை யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, பேதையவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

ஆசை கொண்டவன்தான்‌ என்றாலும் முதல்முதலாய் அவன் அத்துமீறுவது கண்டு தீட்சு அதிர்ந்து உடல் சிலிர்க்க, அவள் அதிர்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அக்கள்வன் ஈரம் பூத்திருந்த அந்தச் செவ்விதழைத் தன் இதழால் பற்றிக் கொண்டான்.

அடுத்தடுத்து உருவான அணுத்தாக்குதலால், மனம் மயங்கிய மங்கையின் தேகம் புதுவித பரவசத்துடன் சுழன்றது. அவள் உடல் பலமிழந்து முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டு அவளைச் சோதனை செய்தது.

நெடுங்கால வேண்டுதலை தன் தேவதையின் முன்‌ இறக்கி வைக்க ஆரம்பித்தவனுக்கு, அதை முடிக்க வழி தெரியாமல் போக, வெளிவர விரும்பாமல் அதிலேயே ஆழ்ந்து மூழ்கிப் போனான்.

அப்போது அங்கே வந்த ஐந்தாறு குண்டர்கள், அப்பகுதியிலிருந்த மற்ற காதலர்களைத் தேடிப்போய் வம்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் தெறித்து ஓடினர்..

அவர்களுடைய பார்வை தங்கள் வரவைப் பொருட்படுத்தாமல், முத்தத்தில் மூழ்கி இருக்கும் அதியனின் மேல் பதிந்தது..

கூட்டத்தின்‌ தலைவன், "ஏன்டா, நாம‌ வந்திருக்கோன்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல், அங்க ஒருத்தன் ஜல்சா பண்ணிட்டு இருக்கான் பாருங்க" என்று மற்றவர்களைத் திசைதிருப்பினான்.

"அதான?" என்றபடி அனைவரும் அதியனின் அருகில் வந்தனர்.

"டேய் தம்பி, என்னடா நீ தனியா சிரமப்படுற போல இருக்கு? நாங்க வேணும்னா உனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டுமா? மாப்பிள்ள, நீ தம்பிய பிடிச்சுக்கோ, நான் இந்த குட்டிய பாக்குறேன்" என்றான் தலைவன்.

தீட்சு பயமும் கோபமும் கலந்த குரலில், "சீ.. பொறுக்கிங்களா, என் மேல கையை வச்சா, அத்தனைபேரையும் லாக்கப்ல தள்ளிடுவேன்" என்று அச்சுறுத்த முயன்றாள்.

"இங்க பார்றா மீனு துள்ளுது, கொழம்பு வைக்கலாமா?" என்று முடிந்த மட்டும் வன்மமாய் பேசிட,

அதியன் அன்பான முகத்துடன், "அண்ணனுங்களா.. உங்க நல்லதுக்காக சொல்றேன், தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க. அப்புறம் ஐயோனாலும் அம்மானாலும் என்னால எதுவும் பண்ண முடியாது" என்றான்.

தலைவன், "என்னங்கடா‌ இது? நாம பேச வேண்டிய டயலாக் எல்லாம் இந்த புள்ள பூச்சி பேசுது? மச்சி, இவன தூக்கிட்டுப் போய்‌ நாலு சாத்து சாத்தி கடல்ல போடு. நான் அதுவரைக்கும் நம்ம மீன்குட்டிக்கிட்ட கொஞ்சம் லவ்ஸ் பண்ணிட்டு இருக்கேன்."

தீட்சண்யா பயத்துடன் அதியனின் முதுகுக்குப் பின் மறைய முயன்றாள்.

"ஏம்மா இத்தன பேர் இருக்கோம், அவன ஒன்டுறியே? இந்த அத்தான புடிக்கலியா?" என்று சொல்லிக் கொண்டே தலைவன் தீட்சுவை நோக்கிக் கை நீட்ட, அதியன் அவன் கையை வலுவாய் பிடித்து இழுத்தான்.

அடுத்த கணமே அந்தத் தலைவன் தலைகுப்புற கவிழ, அவன் சகாக்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் அதியைப் பிடிக்கப் பாய்ந்து சென்றனர். அத்தனை பேரும் மொத்தமாகப் பறக்க, அப்போதுதான் அவனது முழங்கை வரை க்ளவுஸ் அணிந்தது போல், எதுவோ இருப்பது மற்றவர்கள் கண்களுக்குத் தெரிந்தது.

அவர்கள், "டேய் என்னடா இது? அயர்ன் மேன் கையாட்டம்?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து நிற்க, அதியனையும் மீறி அவன் கையிலிருந்து தீக் கங்குகள் பூப்பூவாகப் பறந்தது.

"தலைவா, நெஜமான நெருப்பு" என்று கத்திக்கொண்டே அனைவரும் பின்னால் நகர்ந்தனர்.

அதியனுக்கே அது அதிர்ச்சியைத் தர, கையை உதறியபடி, தன்னை சரி செய்ய முயன்றான்.

தலைவன், "ஏய், பிஸ்கோத்து பயடா இவன், எதாச்சும் புது டைப் பொம்மையா‌ இருக்கும், வந்து அமுக்கி புடிங்கடா. இன்னிக்கி இவன் கைய உடைக்காம இங்கிருந்து போகக் கூடாது" என்று தன் ஆட்களுக்குக் கட்டளை விடுத்தான்.

உள்ளுக்குள் குளிர்காய்ச்சல் கொண்டு நடுங்கும் அளவுக்கு உதறல் இருந்தாலும், ஆணையிட்டவன் தலைவன் என்பதால் அத்தனை பேரும் இரண்டு அடி முன்னால் வந்தனர்.

அடுத்த நொடியே அதியன் கையிலிருந்த கிளவுஸ் உருமாறி, அதிநவீனத் துப்பாக்கியாய் அவன் கையில் நின்றது. இப்போது பொய்யா, மெய்யா என்று சோதித்துப் பார்க்க எவனுக்கும் துணிச்சல் வரவில்லை.

தலைவன் தன் திமிரைக் காட்ட நினைத்து, முன்னால் வர துப்பாக்கி தன்னிச்சையாக செயல்பட்டு மிகச் சரியாக அவன் காலுக்கு ஒரு இன்ச் இடைவெளியில் ஓசை எழுப்பாமல் சுட்டது.

மற்றவர்கள் அனைவரும் விழுந்தடித்து பின்னால் நகர, அதியனின்‌ துப்பாக்கி இப்போது மெல்லியக் கம்பிகளாய் சுழன்று பாய்ந்தது. விநாடி பொழுதுக்குள் அது அந்த குப்டர்கள் அனைவரையும் அக்கம்பியால் கட்டிப் போட்டது.

கை கால்கள் கட்டுண்ட நிலையில் அத்தனை குண்டர்களும் தரையில் விழ, அதியனின் கையிலிருந்த வாட்ச் துப்பாக்கி, அணுகுண்டு, கத்தி, கடப்பாரை, கதிர் அரிவாள் என்று ஏகப்பட்ட உருவங்களை மாற்றி மாற்றிக் காட்டியது. இத்தனைக்கும் அதிலிருந்து துளியளவு சத்தம் கூட வரவில்லை.

அதைப் பார்த்து மிரண்ட கயவர்கள் தப்பிச் செல்ல நினைத்து தரையில் மண் புழு போல ஊர்ந்து போகத்துவங்கினர்.

அதியன் அவசரக் குரலில், "வேணாம், அவங்கள விட்ரு" என்று தன் வாட்ச்சிற்கு உத்தரவிட, அது அத்தனைக் கம்பிகளையும் திரும்ப மீட்டுக் கொண்டது.

தீட்சண்யா இப்போது குண்டர்களை விட அதியைப் பார்த்து அதிகம் பயந்துபோய் கிடந்தாள்..

தடியர்கள் அவ்விடத்தை விட்டு ஓடியதும் அதியனின் வாட்ச் மீண்டும் அவன் கையில் அழகாகச் சுருண்டு படுத்துக்கொண்டது. அதுவரை ஒரு மாய லோகத்தில் இருப்பது போல நிஜம் புரியாது விழித்துக் கொண்டிருந்தவன், தொப்பென்று அங்கேயே அமர்ந்தான். அவனுக்கும் தன் கண்களால் பார்த்த எதையும் நம்ப முடியவில்லை.

'தம்மாத் துண்டு வாட்ச்சுக்குள்ள எத்தனை வெப்பன் இருக்குது? ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட்ல எவ்வளவு வித்தை காட்டிருச்சு?' என்று தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு, அப்போதுதான் தன்னுடன் வந்த தன் காதலியின் ஞாபகம் வந்தது..

மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் நடுங்கிக் கொண்டே தன்னைப் பார்க்கும் அந்தத் தேவதையின் முகம் அதியனின் இதயத்தைக் கசக்கிப் பிழிய, "இங்க வா செல்லம்" என்று கைநீட்டி அழைத்தான்.

அவன் அருகே வர பயந்த தீட்சு, "என்னடா இதெல்லாம்? நீ உண்மையிலேயே என் அதியனா இல்லையா?" என்றாள்.

"பயப்படாதடி, நான் உன் அதியன்தான்" என்றபடி அவளருகில் சென்றவன், இதுவரை நடந்த அத்தனையையும் அவளுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னான்.

"இதுதான்டி என் பிரச்சனை, நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும், இந்த வாட்ச் என்னை விட்டு போகமாட்டேங்குது.."

பிரம்மை பிடித்ததைப் போல் விழித்த தீட்சு, "அதி, இது ஏதோ மர்மமா இருக்குடா, வா நாம போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் சொல்லிடலாம்.‌ இல்லனா பின்னாடி எதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது?

ஒரு வாட்ச்சால இத்தனை பண்ண முடியுதுனா, இது எங்கிருந்து வந்திருக்கும்? ஏதாவது டெர்ரரிஸ்ட் வேலையா இருக்குமோ? உனக்கு ஏதாவது ஆகிடுமோனு எனக்கு பயமா இருக்குடா" என்று அவள் பாட்டுக்கு ஏதேதோ அடுக்கிக் கொண்டே செல்ல,

"இல்லடி, இதால எனக்கு எந்த ஆபத்தும் இல்ல. என்னை யாராவது அடிக்க வந்தா மட்டுந்தான் இது இப்படி பண்ணுது, என்னை ரொம்பவே பாதுகாக்குது.

என்மேல ஒரு சின்னக் கீரல் கூட விழ விடுறதில்ல. இல்லனா என்மேல் லாரி மோதினதுக்கு அப்புறமும், நான் இப்படி முழுசா வர முடியுமா?" என்று ஆர்வத்தில் உளறிவிட்டான்.

"ஆக்சிடெண்ட்டா? எங்க? எப்போ? யார் பண்ணினா?" என்று அதற்கும் சேர்த்து தீட்சு பதறிட,

அதியன், "நீ பயப்படுற அளவுக்கு எந்த அட்டாக்கும் இல்லடா. சாதாரணமா நடக்குற ஆக்சிடென்ட்தான், ஆனா என் வண்டி காயலான் கடையில போடுற அளவுக்கு சல்லி சல்லியா நொறுங்கிப் போச்சு. என் உடம்புல சின்ன சிராய்ப்பு கூட இல்ல பாரு..

இதுக்குக் காரணம் இந்த வாட்ச்தான். ஒரு அம்மா கருவரையில குழந்தைய தாங்குறது மாதிரி என்ன தாங்குச்சு. பூ போலக் கொண்டு வந்து தரையில இறக்கி விட்டுச்சு" என்றான் அதி நெகிழ்ச்சியுடன்.

அவன் உணர்வுகளைக் கண்டு பயம் தெளிந்த தீட்சண்யா, தனது பூங்கரத்தால் அந்த வாட்ச்சை வருடிக் கொடுத்தபடியே, "இதுட்ட இருந்து மத்தவங்கள காப்பாத்த போலீஸ் ஸ்டேஷன் போறத தவிர வேற வழியே இல்லைடா..

வெளிப் பார்வைக்கு இது வெறும் வாட்ச். ஆனா இதுக்குள்ள ஏகப்பட்ட வெப்பன்ஸ் ஒளிஞ்சிருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால உன் எதிரிய இது அட்டாக் பண்ணுச்சுனு சொன்னா யாராவது நம்புவாங்களா?

பிரச்சனை வர முன்னால நாம போலீஸ்ட்ட சொல்லிடுறதுதான் நல்லது.." என்றாள்.

"நாம போலீஸ் ஸ்டேஷன் போனாலும் இந்த வாட்ச் என்ன விடாதுடி. சப்போஸ் இது வெளியில தெரிஞ்சா விஷயம் மீடியா வரைக்கும் போயிடும். எல்லாரும் என்னை ஒரு காட்சிப் பொருளா பார்ப்பாங்க.

யாரு கண்டா? கவர்மென்ட்டே என் கையை எடுத்து ஆராய்ச்சி பண்ணினாலும் பண்ணுவாங்க, நினைச்சாலே பயமா இருக்கு. இது பாட்டுக்கு கம்முன்னு என்னோடவே இருந்துட்டு போகட்டும்.

நம்மளே தேவையில்லாத பிரச்சனைய இழுத்து வச்சுக்க வேண்டாம்" என்றான் அதி.

தீட்சண்யாவிற்கும் அவன் சொல்வதிலிருந்த நியாயம் புரிய, அமைதியாக வாட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எங்க கழட்டிக் கொடு, பாக்குறேன்" என்று வாங்கிய தீட்சு முன் பக்கம் பின் பக்கம் எல்லாம் திருப்பிப் பார்த்தாள்.

"இதெல்லாம் நான் முதல் நாளே ட்ரை பண்ணிட்டேன், எவ்வளவு தூரம் செட்டிங்ஸ் போய் செக் பண்ணாலும் ஒரு சேஞ்ச்சும் இல்ல.." என்றவனின் குரலில் வெறுப்பு நிறைந்து கிடந்தது.

"இது உன்ன விட்டு போக எதுவும் செய்ய முடியாதா அதி?" என்றாள்.

தனக்கு ஆரம்பக் கட்டத்தில் உருவான பய உணர்வு இப்பொழுது இவளை ஆக்கிரமித்திருக்கிறது என்று புரிந்த அதியன், அவள் விரலோடு விரல் கோர்த்து, "உனக்கு பயமா இருக்காடி?" என்றான்.

"உண்மைய சொல்லனும்னா, துப்பாக்கிய பார்க்கும் போது ஹார்ட் பீட் கேக்குற அளவுக்குப் பயம் இருந்துச்சு, எப்ப இந்தப் பையன் உன் உயிரைக் காப்பாத்தினான்னு சொன்னியோ அப்ப இருந்து பயம் இல்லடா. ஆனா உன்னால யாருக்காவது ஏதாவது ஆகிடுமோனு கவலையா இருக்கு.." என்றாள்.

'ஆண்களை விடப் பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்று தன் அம்மா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை' என்று, இப்போது புரிந்து கொண்டான் அதியன்.

நேசம் மிகுந்த புன்னகையோடு, "ஆபீஸ்க்கு டைம் ஆச்சு, போவோமா? பைக் மேட்டர்ல என் தம்பிய சமாதானப் படுத்த போன் வாங்கி தரேன்னு வாக்கு கொடுத்து தொலைச்சிட்டேன். ஈவ்னிங் சீக்கிரமா வீட்டுக்குப் போய், அந்த எருமைய நான் கடைக்கி கூட்டிட்டு போகணும். இல்லைனா அந்த சனியன் ஏழரையை கூட்டி விட்ருவான்" என்றான் அதி.

"உன்ன இந்தப் பாடு படுத்துறானே, அவனை இந்த வாட்ச் எதுவும் செய்யலையாடா?" என்றாள் தீட்சண்யா.

"அதுக்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கல. என்ன ஒண்ணு, நான் பேச நினைக்கிறத இந்த வாட்ச் மெசேஜா அனுப்பிடுது. அந்த பிரச்சனை பெருசாக வாய்ப்பிருக்கு...

ஒரு நாள் என் தம்பின்ற கொசு என் கையில் சிக்கும், அன்னிக்கி இருக்கு அதுக்கு" என்று சொல்லிச் சிரித்தான் அதி.

அவளும் அவன் புன்னகையோடு இணைந்து கொள்ள, இருவரும் மீண்டும் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள். மாலை ஆனதும் அவளை ஹாஸ்டலில் விட்டு விட்டு, அதி தன் வீடு நோக்கிப் பறந்தான்.
 
Top