கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் 9

Rhea Moorthy

Moderator
Staff member
தீவிரவாதிகள் பள்ளிக் குழந்தைகளைப் பிடித்து வைத்திருக்கும் செய்தியைப் பார்த்ததும், அன்றைய தினம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் அத்தனையும் பெருக்கெடுத்துப் பாய அளவுக்கதிகமாய் கோபம் வந்தது அதியனுக்கு.

சின்னஞ்சிறு குழந்தைகள் அழுவது போல அவன் விழிகளுக்குள் உருவான மாயக்காட்சி அவனைப் பதைபதைக்க வைக்க, 'பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது' என்று அதியனின் இள நெஞ்சினைச் சூடேற்றி விட்டது.

"அம்மா நான் வெளியில போயிட்டு வந்திடுறேன்" என்று பைக் சாவியை எடுக்கப் போனவனைப் பிடித்துக் கொண்டார் கிரகலட்சுமி.

"எங்கடா இந்த நேரத்துல போற? ஏற்கனவே உனக்கு காத்து கருப்பு அடிச்சிருக்கோனு நான் பயந்து போய் இருக்கேன், இந்த நேரத்தில நீ வெளியில் சுத்த வேண்டாம். பேசாம உள்ள போய் படுத்து தூங்குடா" என்றார்.

"அம்மா நான்‌ போகணும்" என்று அதி அடம்பிடிக்க,

தணிகாசலம், "டேய், அம்மா சொல்றாள்ல? உள்ள‌ போ" என்றார் உத்தரவாய்.

இதற்கு மேல் மறைத்து வைத்து பிரயோஜனமில்லை என்று துணிந்த அதியன், "இல்லப்பா நான் அந்த ஸ்பாட்டுக்கு போகணும்‌, அந்த பசங்கள காப்பாத்த என்னால எதாவது செய்ய முடியுதான்னு பாக்கணும்" என்றான்.

அதிர்ந்து போனவர்கள், "என்னது, நீ எதாவது செய்வியா? இது என்ன சென்னையில் வந்த வெள்ளம்னு நினைச்சியா? தீவிரவாதிங்ககிட்ட போலீஸே திணறிட்டு இருக்கு.

நிறைய விஐபி குழந்தைங்க சம்பந்தப்பட்டு இருக்கிறதால, கவர்மெண்ட்டே என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பிப் போய் இருக்காங்க. அந்த விஐபிட்ட இல்லாத செல்வாக்காடா நமக்கு இருக்கப் போகுது?" என்றார்.

"பேசிட்டு இருக்க முடியாதுப்பா, டைம் இல்ல. நான் போயிட்டு வந்து எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே, அவர்களின்‌ ஆணையையும் மீறி அந்த பள்ளியை நோக்கித் தன் பைக்கில் பறந்தான் அதி.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் அரை கிலோமீட்டர் சுற்றளவுக்குக் காவலர்களும் மீடியாக்களும் நிறைந்து கிடந்தனர்.

'எப்படி உள்ளே செல்வது?' என்று தவித்தவனுக்கு, உதவும் பொருட்டு தரையில் ஒரு ஐடி கார்டு கிடந்தது.

அதை எடுத்துப் பார்த்தான், ஒரு குறிப்பிட்ட மீடியாவின் கேமராமேன் உபயோகப்படுத்தும் ஐடி கார்டு. பத்திரமாய் தன் கையில் பிடித்துக் கொண்டு, காவல்துறை வளையத்தைத் தாண்டி உள்ளே சென்றான்.

அதற்குள்ளும்‌ ஒரு அளவிற்கே மீடியாக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் போலீஸ் படையும் மிலிட்டிரியும் அந்தப் பள்ளியைச் சுற்றிலும் குவிந்து கிடந்தனர்.

மீடியாக்கள் அனைத்துமே இப்பொழுது தீவிரவாதிகள் வெளியிட்ட கோரிக்கையைப் பற்றி தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர். அதியன் தனக்கு அருகிலிருந்த ஒருவர் பேசுவதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான்..

அவர்கள் பேசும் வார்த்தையில் இருந்து தீவிரவாதிகள் நூறு கோடி ரூபாய் பணமும், சமீபத்தில் பிடித்து வந்த மூன்று தீவிரவாதிகளின் விடுதலையையும் தங்கள் பக்க கோரிக்கையாய் வைத்திருப்பதை புரிந்து கொண்டான்..

ஒரு துரும்பு கிடைத்தாலே அதை வைத்துக் கதை கட்டும் மீடியாக்களுக்கு, இப்பொழுது ஒரு பெரிய ஆலமரமே கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு எப்படி பிடிக்கறதோ அப்படி நியூஸைத் திகில் கலந்து கொடுத்து, மக்களுக்கு பிரஷரை ஏற்றும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

பச்சைப் பிள்ளைகள் மாட்டிக்கொண்டு இருப்பதன் காரணமாக, அரசாங்கம் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தீவிரவாதிகளுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்திருந்தது.

'நேரம் கடத்தக் கடத்தப் பிள்ளைகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை, நிறைய குழந்தைகள் உள்ளே இருப்பதால் அரசு சார்பில் எந்த ரிஸ்க்கும் எடுக்க இந்திய அரசாங்கம் தயாராக இல்லை..' என்று அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

'எதாவது அசம்பாவிதம் நடந்தால் உலகம் முழுவதும் இந்திய அரசாங்கத்தின் மேல் இருக்கும் மதிப்பு போய் விடும். இதை விரைவிலேயே சுமூகமாக முடிக்கத் திட்டமிட்டே அரசு இவ்வாறு செயல்படுகிறது' என்று அத்தனை மக்களுக்கும் புரிந்துதான் இருந்தது.

காவலர்கள் குழுமியிருக்கும் பகுதியிலிருந்து சென்னையின் டிஜிபி, தன் குழுவோடு வெளியே வருவதைக் கண்ட அதியன் அவரிடம் சென்று, "சார், பசங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாம என்னால இந்த பிரச்சனைய சரி செய்ய முடியும்" என்றான்.

அதைக் கேட்ட அத்தனை காவலர்களும், ஏதோ ஒரு அரைக்கிறுக்கு பெருமைக்காகவோ யூ டியூப் சேனலுக்காகவோ தங்களிடம் வம்பு செய்ததாக நினைத்துச் சிரித்தார்கள்.

இறுகிய முகத்தோடு நின்றிருந்த டிஜிபி, "என்ன தம்பி? உள்ளே இருக்குறதென்ன உன் தாத்தனா? பேசி சமாதானம் பண்ண? அவங்க இன்டர்நேஷனல் டெர்ரரிஸ்ட், எந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாதுனு நாங்களே பயந்துட்டு இருக்கோம். நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணாம போயிடு, இல்லனா உன்ன பிடிச்சு உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்" என்றார்.

"இல்லை சார், என்னால அத்தனை பிள்ளைகளையும் சின்னக் கீறல் கூட இல்லாம காப்பாத்த முடியும். நான் உண்மைய தான் சொல்றேன், என் கையில எந்த வெப்பனும் இல்லாம வெறும் கையோட உள்ள போறேன். என்னை நம்புங்க" என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

"இடியட், இந்த லூச கொண்டுபோய் ரெண்டு நாள் ஜெயில்ல போடுங்க" என்று உத்தரவிட்டவர் முன்னேறிச் செல்ல,

அதியன் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு, "ப்ளீஸ் சார், எனக்கு ஒரே ஒரு தடவை சான்ஸ் கொடுங்க. என்னால முடியும்" என்று கத்திக் கதற ஆரம்பித்தான்.

டிஜிபி தன் அனுபவத்தில் பல நூறு குற்றவாளிகளையும் பல்லாயிரம் நல்லவர்களையும் பார்த்து இருப்பவர். அவருக்கு அதியன் முகத்தில் எந்த ஒரு திருட்டுத்தனமும் இருப்பதாக தோன்றவில்லை..

ஆனால் அதற்காக அவன் கேட்டவுடன் உள்ளே அனுப்பி விட முடியுமா? வேலை நேரத்தில் தொல்லை செய்யும் இவனை எப்படியாவது விலக்கி வைக்க வேண்டும் என்ற மட்டிலேயே அவர் எண்ணம் இருந்தது.

அவர் பொறுமையை சோதிக்கும் படியாக அதியன் நடந்து கொண்டதில் வெகுண்டெழுந்தார் டிஜிபி..

அவன் போட்ட சத்தம் கேட்டுச் சுற்றி இருந்த அத்தனை மீடியாக்களும் தத்தமது கேமராவை அவன் புறமாகத் திருப்பியது.

யாரோ ஒரு இளைஞன் டிஜிபியின் கால்களைப் பற்றிக் கதறுவதும், மற்ற காவலர்கள் அவனைப் பிடித்து இழுப்பதுமாய் அங்கே ஏதோ தள்ளு முள்ளு நிகழ்ந்தது.

டிஜிபி மீடியாக்களை சமாளிக்கும் விதமாய், "நத்திங், உள்ள இருக்குற ஒரு குழந்தையோட ரிலேஷன் இவரு. நீங்க வாங்க சார், நாம பேசிக்கலாம்" என்று அதியனை தரதரவென்று இழுத்துக் கொண்டு மீண்டும் காவலர்கள் படை குழுமியிருக்கும் பகுதிக்குள் சென்றார்.

மீடியாக்கள்‌ தொட முடியாத தூரத்திற்கு வந்ததும், "நாங்க இங்க என்ன நிலமைல இருக்கோம்னு தெரியுமாடா உனக்கு? ஒழுங்கா வாயால சொன்னா கேட்க முடியலையா? நூத்துக் கணக்கான குழந்தைங்க உள்ள சிக்கி இருக்காங்க, அவங்கள காப்பாத்த அப்படி என்னடா ப்ளான் வச்சிருக்க நீ?" என்று கர்ஜித்தார்.

"எங்கிட்ட எந்த ப்ளானும் இல்ல.." என்றதும், டிஜிபி பொறுமையைத் துறந்து கையில் லத்தியை எடுத்துக் கொண்டு, "அப்புறம், வேற என்ன இருக்கு?" என்றார்.

"ஒரு அதிபயங்கரமான வெப்பன் இருக்கு" என்ற அதியன், தன் வாட்ச்சை கன் மோடுக்கு மாற்றினான்.

மாயம் போல் வாட்ச் உருமாறியதில் டிஜிபி உட்பட அத்தனை கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. அதியன் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றபடி விதவிதமாய் மாற்றிக் காண்பித்தான்.

"இது என்னது? நீ யாரு? மேஜிக் பண்றவனா, இல்ல சயின்டிஸ்ட்டா?" என்று அவர் ஏகப்பட்ட கேள்விகள் கேட்க,

அதியன், "எனக்கு இது என்னனே தெரியாது சார், வாட்ச்தானனு கீழ கிடந்ததை எடுத்துப் போட்டேன்‌. அப்ப இருந்து ஒவ்வொரு நிமிஷமும் உயிரை கையில பிடிச்சுக்கிட்டு சுத்துறேன். இதுல இன்னும் எவ்வளவு ஃபெசிலிட்டி இருக்குனு கூட எனக்கு தெரியாது" என்றான்.

டிஜிபி அவன் கையைப் பற்றி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார். அது என்ன மாதிரியான உலோகம் கொண்டு செய்த பொருள் என்று அவராலும் யூகிக்க முடியவில்லை..

நேரத்தை கடத்தாத டிஜிபி, "நீ நினைக்கிற மாதிரி எல்லாம் உருமாறுதே, அதால இந்த பில்டிங்கோட ப்ளூ பிரின்ட் காட்ட முடியுமா?" என்று கேட்டார்.

அவர் சொன்னதை அவனும் வாட்ச்சிடம் கேட்க, அடுத்த கணமே அவர்களின் முன் ஒட்டுமொத்த கட்டிடத்தின் ப்ளூ ப்ரின்ட்டும் ஒருமுழ அளவிலான வரைபடமாய் ஒளிர்ந்தது. அதில் குழந்தைகள் இருக்கும் இடமும் தீவிரவாதிகள் இருக்கும் இடமும், தனிப்பட்டுக் காட்சி தர டிஜிபி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவருக்கு அதியன் மேல் அபரிமிதமான நம்பிக்கை உருவானது..

அதி விரைவாகச் செயல்பட்டு முதலமைச்சரிடம் அனுமதி வாங்கியவர் அதியனிடம், "உன்ன உள்ள விடச் சொல்லி சிஎம் ஆர்டர் கொடுத்துட்டாரு. நூறு‌ கோடி பணத்த எடுத்துகிட்டு, மூணு டெர்ரிஸ்ட்டையும் நீதான் உள்ள கூட்டிட்டு போகணும், பட் உன் உயிருக்கு நாங்க கேரண்டி கிடையாது.

தீவிரவாதிகள் தப்பிச்சாலும் பரவாயில்ல, எக்காரணத்தைக் கொண்டும் அந்த குழந்தைகளுக்கு எதுவும் ஆகக் கூடாது. தேவையில்லாம எதையும் பண்ணி, பசங்க உயிர ரிஸ்க்ல தள்ளிடாத" என்று ஏகப்பட்ட முறை வார்னிங் கொடுத்து தயார் படுத்தினார்.

மறுபுறம் ஒரு பெரிய கன்டெயினரில் மூன்று தீவிரவாதிகளும் பயங்கர பாதுகாப்போடு வந்து இறங்கினர். அதியன் கையில் நூறு கோடி ரூபாய் பணப் பை கொடுக்கப்பட்டது‌..

தீவிரவாதிகள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்க, அதியனுக்கு மட்டும் குண்டு துளைக்காத உடைகள் மாட்டி விடப்பட்டது.

மூன்று தீவிரவாதிகளும் அதியனும் பள்ளி கட்டிடத்திற்குள் நுழைந்தனர். நுழைவு பகுதியில் தயாராக நின்றிருந்த ஒரு தீவிரவாதி அதியன் உடலைச் சோதனை செய்துவிட்டு, ஆயுதம் எதுவும் இல்லை என்றதும் உள்ளே அனுப்பினான்.

அதியன் ஆயுதமின்றி வருவதால் இன்ன பிற தீவிரவாதிகள், இந்திய அரசு அஞ்சிவிட்டதாகவே முடிவு செய்தனர்‌. ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்ட தீவிரவாதிகள் தனது குழுவோடு இணைந்து விட்டதால் அசால்ட்டாகவே நடந்து கொண்டனர்.

நால்வரும் பள்ளியின் மையப்பகுதியில் இருக்கும் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ப்ளூ பிரிண்ட்டை பார்த்துவிட்டு வந்திருந்த அதியனுக்கு ஏற்கனவே தெரியும், இந்த இடம்தான் தீவிரவாதிகளுக்கு இப்போதைக்கான முதன்மைப் பகுதியென...

பள்ளியின் முதலாம் தளத்தில் குழந்தைகள் அனைவரும் இரண்டு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் அமரவைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் கையில் அதிநவீன துப்பாக்கிகள் இருப்பதையும் அதியன் முன்பே ப்ளூ பிரிண்ட் வசதியால் தெளிவாய் பார்த்துவிட்டான்.

ஆதலால் அவன் ஒரு அடிமை போல நடந்து கொண்டான்.

இங்கிருந்த தீவிரவாதிகளில் இருவர் அதியன் கொண்டு வந்த பணப் பையை வாங்கிக் கொண்டு, அவன் கையை தூக்கியபடி மண்டியிடச் சொன்னார்கள்.

அதியனும் அவர்கள் சொன்னது அத்தனையையும் அச்சு பிசகாமல் செய்தான். பணத்தை எண்ணுவதற்கு ஒரு ஆள் போனதும், விடுதலையாகி வந்திருக்கும் மூவரின் உடலையும் சோதிக்க இருவர் வந்தனர்.

விடுதலையான தீவிரவாதிகளில் ஒருவன், "டேய் நாங்க நல்லாதான் இருக்கோம், போலீஸ் எங்க உடம்புல எதையும் ஃபிக்ஸ் பண்ணல. சீக்கிரமே இங்கிருந்து எப்படியாவது கிளம்பிடனும்" என்று சந்தோஷமாய் சொன்னனான்.

அதியனை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தவன், "இவன என்னடா பண்றது?" என்றான்.

"பசங்களோட சேர்த்து முடிச்சிடுவோம்" என்றான் இன்னொருவன்..

பணம் சரியாக இருப்பதாய் தகவல் வர, பள்ளிக்கு பின்புறம் தீவிரவாதிகள் கேட்ட வாகனங்களும் வந்துவிட்டது... அனைத்தும் சுமூகமாக நகர்கிறது என்றெண்ணி அவரவர் வேலைகளைச் செய்யத் துவங்கினர்.

அத்தனை பேரும் முழுமூச்சாய் செயல்படும் நொடிக்காகக் காத்திருந்த அதியன், "ஷூட்.." என்று உரக்கக் கத்த, அடுத்த கணமே அத்தனை தீவிரவாதிகளின் உடலுக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரம் தாக்கிய அடுத்த கணமே தீவிரவாதிகள் அனைவரும் நின்ற இடத்திலேயே மயங்கிச் சரிந்தனர்.

பயந்து அழுது களைத்துப் போயிருந்த குழந்தைகளிடம் சென்ற அதியன், "குட்டீஸ், கெட்ட பசங்க எல்லாரும் ஓடிப் போயிட்டாங்க. நீங்க ஹேப்பியா வீட்டுக்குப் போகலாம், வாங்க.. வாங்க.." என்றதும், அன்னை தேடிய‌ பிள்ளைகள் சிறகில்லாப் பட்டாம்பூச்சி போலப் பாய்ந்தடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

கட்டிடத்திற்கு வலதுபுறம் ஒரு குடில் அமைத்து அமர்த்தி வைக்கப்பட்டிருந்த பெற்றோர்கள், "அம்மா அப்பா.." என்ற அலறலோடு பிள்ளைகள் ஓடி வருவதைக் கண்டதும் உயிர் பெற்ற உடலாகினர்.

அள்ளி அணைத்து முத்தமிட்டு, ஆறுதல் சொல்லி அன்பைப் பொழிந்து என்று அவர்கள் தங்களுக்கு மட்டுமே உரிய உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர்.

காவலர்கள் கூட பிள்ளைகள் பத்திரமாகத் திரும்பி வருவதைக் கண்டதும், ஓர் நொடி உலகம் மறந்து ஆனந்தக் கூத்தாடினர்.

டிஜிபி பொறுப்பாய் செயல்பட்டு, கட்டிடத்திற்குள் மயங்கி விழுந்து இருக்கும் தீவிரவாதிகள் அனைவரையும் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தார்.

கூடவே பிள்ளைகளையும் பெற்றோரையும் அவசர அவசரமாய் அங்கிருந்து அப்புறப்படுத்தும் ஏற்பாட்டில் கவனமானார்..

அத்தனையையும் செய்து முடித்துவிட்டு அமைதியாய் அமர்ந்திருக்கும் அதியனைக் காண்கையில், டிஜிபி கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வராதது ஒன்றுதான் குறை. மீடியாக்களோ உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமல், திகைத்துப்போய் நின்றிருந்தனர்.

அதியனின் முகம் அத்தனைக் கேமராவிலும் பதிவாக, அவனை அப்படியே கமிஷனர் ஆபீஸ்க்கு தூக்கிச் சென்றது காவலர்கள் குழு. அவன் அறியாமலேயே டிஜிபி அவன் வீட்டு பாதுகாப்பிற்காகச் சிலரை நியமித்து விட்டார்.

அவன் முகம் லைவ் டெலிகாஸ்டில் ஒளிபரப்பானதால் அவனைத் தெரிந்த அத்தனை பேரும் அடுத்தடுத்து அவன் எண்ணுக்கு அழைப்பு விடுத்தனர்.

அதியன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த டிஜிபி, "என்ன நடந்தது? உன்னால எப்படி எல்லாரையும் ஒரே நேரத்துல கரெண்ட் ஷாக் வச்சு மயக்கமடைய வைக்க முடிஞ்சது?

உனக்கு மேல் ப்ளோர் மேல இருந்தவன், கீழ வாசலுக்கு காவலுக்கு நின்னவன், பக்கத்து ரூம்ல பணத்த எண்ணினவன்னு எல்லாரையும் மயங்க வச்சுட்ட.

போதாக் குறைக்கு அவங்ககிட்ட பாம் இருந்ததே, அதையும் அதே நேரத்துல செயலிழக்க வச்சிருக்க, எப்படி இதெல்லாம்?" என்று ஆர்வம் பொங்கக் கேள்விகளைக் கேட்டார்.

"நீங்க உயிர் சேதம் இல்லாம பசங்கள காப்பாத்தினா போதும்னு நினைச்சீங்க, நான் தீவிரவாதிகளையும் தப்பிக்க விடக்கூடாதுனு நினைச்சேன்.

பழைய தீவிரவாதிகள நீங்க கன்டெயினர்ல கொண்டு வர ஏற்பாடு செய்யும் போதே, நான் என் வாட்ச் கிட்ட என் கண்ணோட கலருக்குப் பொருந்திப் போற ஒரு லென்ஸ் செய்யச் சொல்லிக் கேட்டேன்.

அந்த லென்ஸ் என் கண்ணுக்கு மட்டும் லைவ்வா ஸ்கூலோட ப்ளூ பிரிண்ட்ட காட்டுச்சு. பப்ஜி கேம் மாதிரி உக்காந்த இடத்திலிருந்தே அந்த பில்டிங்ல என்ன நடக்குது, யார், எங்க, என்ன பண்றாங்கனு என்னால பாக்க முடிஞ்சது.

இந்த வாட்ச்சால கம்ப்யூட்டர கட்டுப்படுத்த முடியும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். தீவிரவாதிகள் வச்சிருக்கிற பாம் ரிமோட், துப்பாக்கிகள கட்டுப்படுத்துமானு தெரியல.

எதுக்கும் முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு அவங்களோட ஒவ்வொரு ஆயுதத்துலயும், கொஞ்சமா போய் ஒட்டிக்க சொன்னேன். வாட்ச் செஞ்சது..

அவங்க ஆயுதங்களை என்னோட வாய்ஸ் மூலமா கண்ட்ரோல் பண்ண முடிந்தது. சப்போஸ் நான் மாட்டிகிட்டாகூட ஆயுதங்கள செயல்படாம செஞ்சுட்டா, குழந்தைகளுக்கு பெருசா எந்த பாதிப்பும் வராதுனு ஒரு எண்ணம். அதனால அமைதியா இருந்து அடிக்க முடிவெடுத்தேன்..

என் கைக்குப் பணம் வந்ததும், பயந்த மாதிரியே உள்ள போனேன். நான் நினைச்சதைப் போல, என்ன சோதனை செஞ்ச தீவிரவாதி இந்த வாட்ச்ச பெருசா கண்டுக்கல.

அவங்க ஆசைப்பட்டபடி பணம், பழைய தீவிரவாதிகள், வண்டினு எல்லாமே வந்ததால கிட்டத்தட்ட ஜெயிச்சுட்டதா நினைச்சு கொஞ்சம் அசால்ட்டா இருந்தாங்க. எல்லாரோட கைக்கும் வேலை வர்ற ஒரு நொடிக்காகத்தான் நான் அவ்வளவு நேரம் காத்திருந்தேன்.

என்ன அறியாமக்கூட எந்தக் குழந்தைக்கும் ஆபத்து வந்திடக்கூடாதே..

எப்ப எல்லாரும் ஏதாவது ஒரு வேலைய செய்ய ஆரம்பிச்சாங்களோ அந்த செகண்டே வாட்ச்ச ஷூட் பண்ணச் சொல்லி ஆர்டர் கொடுத்துட்டேன். என் மனசுல இருக்குறத புரிஞ்சுகிட்டு சத்தமில்லாம வேலையை முடிச்சிடுச்சு இந்த வாட்ச்‌

பில்டிங்க்குள்ள இருந்த ஆளுங்கள மட்டுமில்ல, பில்டிங்க்கு பின்னால இருக்குற பழைய பாலத்துல நின்னுக்கிட்ட இருந்த அவங்க ஆட்களும் கரண்ட் ஷாக் அடிச்சி மயங்கி விழுந்துட்டாங்க.."

டிஜிபி, "என்னது? பில்டிக்கு பின்னாடி வேற ஆட்கள் இருந்ததா?" என்று‌ அவசரமாய் தன் இருக்கையிலிருந்து எழுந்திரிக்க,

"பதட்ட படாதீங்க சார், நாம அங்கிருந்து கிளம்ப முன்னாலேயே உங்க டீம் மெம்பர்ஸ் எல்லாருக்கும் அதைப் பத்தின தகவல வாட்ஸ் அப்ல அனுப்பிட்டேன்.‌ இந்நேரம் அவங்க அந்த ஆளுங்கள அரெஸ்ட் பண்ணிருப்பாங்க.." என்று சாதாரணமாய் சொன்னான் அதியன்.

"என் டீம் மெம்பர்ஸோட போன் நம்பர் எல்லாம் எப்படி உனக்கு தெரியும்?" என்று டிஜிபி குறுக்கு விசாரணை செய்ய,

"இந்த பயலுக்கு அதெல்லாம் சப்ப மேட்டரு சார். அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட், நாளபின்ன நான் உங்ககிட்ட எதையாவது சொல்லணும்னு நினைச்சா ஃபோன் பண்ணித்தான் பேசுவேன். மெசேஜ்ல எது வந்தாலும் அது இந்த பய பாக்குற‌ வேல, கொஞ்சம் முன்ன பின்ன வார்த்தை விட்டிருந்தா என்ன என்கவுன்டர்ல போட்றாதீங்க" என்றான்.

"நானாவது உன்ன என்கவுண்டர்ல போடுறதாவது, நீதான்பா இன்னிக்கி நம்ம நாட்டோட ஹாட் டாபிக். டிவியப் பாரு.." என்று‌ அறையின் மூலையிலிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தார்.

அதில் எந்த சேனல் வைத்தாலும் அதியனின் முகமே மின்னியது..

"வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்திருக்காங்க. இஃப் யூ டோண்ட் மைண்ட் நான் ரெண்டு கால் பண்ணிக்கட்டுமா? என் அம்மாவும், என் காதலியும் இந்த நியூஸ் பார்த்து ரொம்ப பயந்து போய் இருப்பாங்க.." என்று டிஜிபியிடம் கோரிக்கை வைத்தான்.

அலுவலகத் தொலைபேசியை அவன் முன் கொண்டு வந்து வைக்கச் சொன்னார் அவர். முதலில் தன் அம்மாவிற்குக் கால் போட்டான் அதியன்..

அவன் ஹலோ என்றதுதான் தாமதம், "டேய் அதி, எங்கடா இருக்க? டிவில உன்னையத்தான் காட்டிட்டு இருக்காங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்குடா தம்பி. நீ எங்க இருந்தாலும் வீட்டுக்கு வந்துருடா" என்று அழுதார்.

"அம்மா பயப்பாடாதீங்க, நான் போலீஸ் பாதுகாப்போட பத்திரமாத்தான் இருக்கேன். என்ன இங்க ஒரு விஐபி மாதிரி ட்ரீட் பண்றாங்க, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லமா.

இப்போ நான் வெளியில வந்தா மீடியா என்ன தேடி வந்து தேவையில்லாத கேள்வி கேட்டு நொங்கெடுப்பாங்க. வீடு ஆபீஸ்னு எல்லா இடத்திலேயும் கூட்டம்‌ கூடும்னு டிஜிபிசார் சொல்றாரு.

இந்த பரபரப்பு அடங்கினதும் அவரே என்ன வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுடுவாரு, அது வரைக்கும் நீங்க எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க.." என்றான்.

"சரிய்யா.." என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பாக கபிலன் வெடுக்கென போனைப் பிடுங்கி, "டேய் அண்ணா, நீ பத்திரமா இருக்கியா?" என்றான்.

"ம், நான் நல்லா இருக்கேன். நீ இரண்டு நாள் காலேஜ் லீவு போட்ரு, அம்மா அப்பாவையும் வேலைக்கு போக வேணாம்னு சொல்லிடு. வீட்டுக்கு வேண்டியது எல்லாம் நீயே வாங்கு, அவங்கள யார் கூடவும் பேச விடாத. அப்பாவித்தனமா எதாவது உளறிட்டா பிரச்சனையாகிடும்.." என்றிட,

தன் அண்ணன் கூற வரும் காரணத்தைப் புரிந்து கொண்ட கபிலன், "சரிடா, அப்பாட்ட குடுக்குறேன்" என்று போனை கை மாற்றினான்.

"அப்பா, சாரிப்பா.. அந்த டைம்ல என்னால எதையும் நின்னு பேச முடியல, அதான் நீங்க சொன்னாலும் கேட்காம கிளம்பிட்டேன்" என்றான்.

"அதனால என்னப்பா? நீ இத்தனை குழந்தைங்க உயிரை காப்பாத்தி இருக்கனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மாவ நாங்க பாத்துக்கிறோம், நீயும் ஜாக்கறதையா இரு" என்றார்.

"சரிப்பா" என்று சந்தோஷத்துடன் போனை வைத்தவன், அடுத்து சிரித்த முகத்துடன் தீட்சண்யாவிற்கு போன் பண்ணினான்.

போனை எடுத்ததும், "டேய் அதி, எங்கடா இருக்க?" என்றாள் பதற்றத்துடன்.

"ஐயா கமிஷனர் ஆபீஸ்ல இருக்கேன், நீ கவலைப்படாம இரு. மேபி ஒன் ஆர் டூ வீக்ஸ் இங்க இருக்க சொல்லுவாங்கனு நினைக்கிறேன். நான் திரும்பி வந்ததும் உன்னதான் முதல்ல வந்து பார்ப்பேன், அப்பப்ப கால் பண்றேன்" என்றான்.

"எனக்கு பயமா இருக்குடா, உனக்கு எந்த ஆபத்தும் வந்திடக் கூடாதுனு சாமிட்ட வேண்டிகிட்டே இருந்தேன்.." என்று அழுதாள்.

"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பயப்படலாமா? தைரியமா இரு, சீக்கிரம் வந்திடுவேன். எல்லாரும் பாக்குறாங்க, வச்சிடுறேன்டி" என்று பொத்தாம் பொதுவாய் சமாதானப் படுத்திவிட்டு போனை வைத்தான்.

அனைத்தும் சுபமாய் முடிந்த பிறகு அதியனைச் சுற்றி ஒரு குழு அமர்ந்தது. அதில் டிஜிபி ஒருவரைத் தவிர வேறு எவரையும் அதியனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் வயதும் பார்வையும் அவர்களது பதவியின் பலத்தை அதியனுக்கு எடுத்துணர்த்த, பொத்தாம் பொதுவாய் அனைவருக்கும் ஒரு வணக்கம் வைத்தான்.

ஒருவர், "ஸோ, நீ செஞ்சது எல்லாத்துக்கும் காரணம் உன் வாட்ச்னு சொல்லுறியா?" என்று கட் அன் ரைட்டாகப் பேசினார்.

"ஆமா சார், அது எனக்கு நம்ம சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல கிடைச்சது. அதுக்கப்புறம் நான் அதை தூக்கி எறிஞ்சாலும், ஹட்ச் டாக் மாதிரி அது என்ன விட மாட்டேங்குது" என்றான்.

"நீ சொல்ற எதுவும் நம்புற மாதிரி இல்லையேப்பா, எங்க அந்த வாட்ச்ச குடு பாக்கலாம்" என்று வாங்கி அதைத் திருப்பி திருப்பி பார்த்தார் ஒருவர்.

"பார்த்தா சாதாரணமாத்தான் தெரியுது, இது உன்ன ஃபாலே பண்ணி வருமா?" என்றார்.

"ஆமா சார்" என்று‌ அவன் சொல்லி முடிக்கும் முன்பாக, அவர் தனக்கருகில் இருந்த ஜன்னல் வழியே வாட்ச்சினைத் தூக்கி எறிந்தார்.

வீசிய வேகத்தில் அது கீழே தரையில் விழுவது அவர் கண்களுக்குத் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. அதியன் அவர் செய்கையால் சிறிதும் முகம் மாறாமல் அமர்ந்திருக்க, அவனை நோக்கி அவர் ஒரு அடிதான் வைத்திருப்பார். வாட்ச் மீண்டும் பறந்து வந்து அவன் கைகளைக் கட்டிக் கொண்டது.

அங்கிருந்த அத்தனை பேரும் அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவரோ அதை வாங்கித் தன் காலுக்குக் கீழே வைத்து மிதித்து உடைத்தார்..

அதியன், "இப்படி செய்யாதீங்க, அந்த வாட்ச் கோபப்பட்டா திருப்பி அட்டாக் பண்ணும்" என்று சொல்லி முடிக்கும் முன்பாக, தன்னை மிதிப்பவரின் காலைப் பிடித்துத் தலைகீழாகத் தொங்க விட்டது அந்த வாட்ச்.

பாய்ந்து ஓடிவந்த அதியன் அவரைப் பிடித்துக் கொண்டு, "இவர விடு.. இவர விடு.." என்று கத்த, மற்ற அனைவரும் உதவிக்கு ஓடி வர, சில நிமிடங்கள் அவ்விடமே களேரப்பட்டது.

முழுதாய்‌ மூன்று நிமிடங்கள் கழித்தே வாட்ச் தன்னை மிதித்தவரை தரையில் இறக்கி விட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின்னால் நகர்ந்தவர், மறுபடியும் அந்த வாட்ச்சைப் பார்க்கவே பயந்து போனார்.

டிஜிபி, "இதுக்குதான் நான்‌ நேரடியா பார்த்தேன், ஸ்ட்ரெயிட்டா அடுத்த ஸ்டெப் போயிடுங்கனு சொன்னேன். இப்பவாவது நான் சொல்றத கேளுங்க" என்றார்.

மற்றொருவர், "எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு செய்ய முடியாது சார். மெடிக்கல் டீம் டெஸ்ட் எடுத்ததுக்கு அப்புறம் பாக்கலாம்" என்று அந்தக் குழு உறுப்பினர்கள் கராராய் பேச, டிஜிபி வேறு வழியில்லாமல் அமைதியாக அமர்ந்தார்.

மருத்துவக் குழு உள்ளே வரவும் அதியன், "சார் வாட்ச் ரொம்ப கோபமா இருக்கு, இப்பதைக்கு எதுவும் வேண்டாம் சார். ஒரு அரை மணி நேரம் கேப் விட்டு டெஸ்ட் எடுங்க" என்றான்.

"அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா" என்று சமாளித்த குழு உறுப்பினர்கள், மருத்துவர்களைப் பார்த்து, "போய் உங்க வேலையப் பாருங்க" என்று உத்தரவிட்டனர்.

மருத்துவர்கள் குழு அவன் அருகே சென்று இன்ஜெக்ஷனைக் கையில் எடுத்தனர். அவ்வளவுதான், அந்த வாட்ச் கிளவுஸாக மாறி, எதிரிலிருந்தவர் கழுத்தில் கை வைத்து அப்படியே ஒரு அடி உயரத்திற்குத் தூக்கி விட்டது.

மாட்டிக் கொண்ட நபர் பயந்து போய் கத்திக் கதறிட, அதி பதறியபடி, "விடு விடு" என்று தன் வலது கையை இடது கையால் அடித்துப் பார்த்தான்.

அப்போதும் அது அடங்காமல் சீற, அவனைச் சுற்றியிருந்த மற்ற மருத்துவக் குழு ஆட்கள் விட்டால் போதும் என்று வெளியே ஓடி விட்டனர்.

டிஜிபி, "முட்டாள்தனமா பண்ணாதீங்கனு சொன்னா கேக்குறீங்களா சார்? அந்த பையன பார்த்தா பொய் சொல்ற‌ மாதிரிறா இருக்கு? அவன் என்ன சொல்ல வர்றான்னு ஒரு தடவை காது கொடுத்து கேளுங்களேன்" என்று அதியனுக்கு ஆதரவாகச் சத்தம் போட்டார்.

அனைவரும் இம்முறை டிஜிபியின் குரலுக்குச் செவிசாய்த்து அமைதி காத்தனர். சுற்றுச்சூழல் அமைதியான பிறகு வாட்ச் அந்த ஆளைத் தூக்கித் தூர எறிந்திற்று.

மயிரிழையில் மரணத்தைத் தொட்டுத் திரும்பியவன், செய்து வைத்த சிலை போல விழுந்த இடத்திலேயே கிடந்தான். கண்களைத் திறந்தபடி படுத்துக் கிடப்பவனை, அவன் சகாக்கள் இருவர் வந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

டிஜிபி, "ஏன் தம்பி இது இப்படியெல்லாம் செய்யுது?" என்று கேட்டார்.

"யாராவது என்ன அட்டாக் பண்ண வந்தா இப்படி செய்யும் சார், மத்தபடி‌ வேற யாரையும் டிஸ்டர்ப் பண்ணாது."

"அப்புறம் எப்படிதான்ப்பா நாங்க உன்ன டெஸ்ட் பண்றது?"

"எனக்கும் தெரியலியே சார், எதுக்கும் நாளைக்கி வரைக்கும் எதுவும் செய்யாதீங்க. அதுக்கப்புறம் நானே உங்களக் கூப்பிட்டு டெஸ்ட் எடுக்க சொல்லுறேன்.." என்றான் அதியன்.

அவன் சொல்வதைக் கேட்டதும் அந்தப் பெரிய மனிதர்கள் அனைவரும் தங்களுக்குள் கூடி ரகசியக் குரலில் குசுகுசுவெனப் பேசினார்கள்.

பிறகு டிஜிபி அதியனிடம் வந்து, "எங்களுக்கு உன் மேல நம்பிக்கை இருக்குது தம்பி, ஆனா இந்த வாட்ச் மேல நம்பிக்கை இல்ல. உன் முகம் இப்ப எல்லாருக்கும் தெரியும், அதனால இனிமே நீ வெளியில எங்கேயும் போக வேணாம்‌.

கெட்டவங்க கைக்கு இவ்வளவு பெரிய ஆயுதம் போச்சுனா, அவங்களால ஒரு நாட்டையே சுலபமா அழிக்க முடியும்‌. நான் சிஎம்ட்ட பேசி உனக்காக ஒரு வேலையும், உன்ன தங்க வைக்கிறதுக்கான ஏற்பாடுகளையும் கேட்டுட்டு வர்றேன்.." என்றார்.

அவர் சொல்ல வந்த விஷயத்தின் வீரியம் புரிந்ததும் அதியன், "சார்.‌. நான் தனி ஆள் இல்ல. அம்மா அப்பா தம்பி எல்லாரும் என்ன நம்பித்தான் இருக்காங்க, இதனால அவங்களுக்கு ஏதாவது.." என்று அவன் இழுக்க,

"தெரியும்பா, நீ இங்க வர முன்னாலேயே உன் வீட்டுக்கு நான் பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டேன். சிஎம்ட்ட பேசினதும் அவங்களையும் கூட்டிட்டு வந்திடலாம். அதுவரைக்கும் அவங்களுக்கே விஷயத்த சொல்லாதப்பா.." என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டுத் தந்தார்.

அதியனுக்கும் அவர் சொல்வதே சரி என்று புரிய, சம்மதமாய் தலையசைத்தான். அடுத்த நாளே அவன் குடும்பத்திற்குப் பாதுகாப்பு முறைகளுடனான ஒரு வீடு தரப்பட்டது.

அதியனுக்குத் தமிழகக் காவல் துறையின் கீழ் ஒரு பெரிய பதவி தரப்பட்டது‌. மேற்கொண்டு அந்த வாட்ச்சை வைத்து அவன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று‌ சோதித்துப் பார்க்கப் பயிற்சியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கபிலனுக்கான வகுப்புகள் கூட சில நாட்களுக்கு ஆன்லைனில் நெறிப்படுத்தப்பட, விஷயத்தின் வீரியம் அவன் அப்பா அம்மாவிற்கும் புரியத் துவங்கியது.

கபிலன், "டேய் அதியா உனக்கு இவ்வளவு பெரிய வீடு கொடுத்திருக்காங்களா? மாடி வீடு, ஸ்விம்ங் பூல், கார்டன்னு வீடு செம கலக்கலா இருக்குடா. மாடியில இருக்குற பெரிய ரூம் எனக்குத்தான், ஏற்கனவே கர்சீப் போட்டு வச்சுட்டேன்‌, யாரும் கேக்கக் கூடாது பாத்துக்கோங்க.." என்றான்.

அதியன், "அது எனக்குடா"

"இனிமே எனக்குடா, மாட்டேன்னு சொன்ன எக்குத்தப்பா எதையாவது போட்டுக் கொடுத்துடுவேன்" என்று அச்சுறுத்தினான்.

'இந்த நாய் செஞ்சாலும்‌ செய்யும்' என்று எண்ணிய அதி, "அங்க பேய் இருக்கு‌. ராத்திரியானதும் நாலுகால்ல நடந்து வரும், நல்லா என்ஜாய் பண்ணு" என்றான் கடுப்புடன்.

"பேயா இருந்தாலும் லவ் லெட்டர் கொடுப்போம்டா நாங்க" என்று சரிக்குச் சமமாய்‌ மல்லுக் கட்டினான்.

கிரகலட்சுமி, "எடு வெளக்கமாத்த, லவ் லெட்டர் தருவானாம்ல? என் புள்ளைய பார்த்து எப்படி நடந்துக்கனும்னு கத்துக்கோடா" என்று இடை புகுந்தார்.

"ஆமா, அவன் ரொம்ப யோக்கியம்.." என்று முணுமுணுத்தான் கபிலன்.

"அவன் யோக்கியன்தான்டா.. நம்ம தெருவுல, உன் காலேஜ்ல, எங்க ரெண்டு பேரோட ஸ்கூல்லனு‌ எல்லா இடத்திலேயும் என் புள்ள புராணம்தான் ஓடுது" என்று அதியனின் நெற்றியை வழித்தெடுத்து திருஷ்டி கழித்தார்.

கபிலன், "அதியா, இதுக்கு முன்னால அம்மாவை இவ்வளவு சந்தோஷமா நான் பார்த்ததே இல்ல. எல்லாரும் உன்னை பாராட்டவும், அவங்களுக்கு பெருமை தாங்கல. அதியன் எம்புள்ளைதான்னு நம்ம தெருவுல செம சீனு போட்டாங்க தெரியுமா? போற போக்க பார்த்தா நீ என்னவிட பிரபலமாகிடுவ போலயே" என்று வாய் ஓயாமல் பேசி தீர்த்தான்.

எப்போதும் இருவரையும் சத்தம் போடும் தணிகாசலம்கூட இன்று‌ சந்தோஷ மிகுதியால் எதுவும் சொல்லவில்லை. தன் குடும்பத்தினர் சந்தோஷம் கண்டு அதியனுக்கும் அன்று மனம் நிறைந்து போய் இருந்தது.

அதே சந்தோஷத்தோடு தன் காதலிக்குத் தொடர்பு கொண்டான்.

இரண்டு நாட்களாக நிகழ்ந்த அனைத்தையும் அவன் தன் காதலியிடம் ஒப்புவிக்க, அனைத்தையும் காது கொடுத்துக் கேட்ட தீட்சண்யா, "அப்போ உன்ன இனிமே என் பக்கத்து சீட்டுல பார்க்க முடியாதாடா?" என்றாள்‌ சோகமாய்.

"வேலை மாறினா, காதல் மாறுமாடி?.." என்று பாகாய் உருகினான்.

"ஆனாலும் இனிமே உன் கூட நான் காபி குடிக்க முடியாதுல? நீ தினமும் நாலு தடவ என்னை சாமாதானம் பண்ணுவ, அதெல்லாம் கிடைக்காதுல?" என்று ஏக்கமாகக் கேட்டாள்.

"யார் சொன்னா கிடைக்காதுனு? அதெல்லாம் இங்க இருந்தே செய்வேன்டி, என் செல்லக் குட்டி.. உன்னை அவ்வளவு சீக்கிரமா விட்டிருவேன்னு நினைச்சியா?" என்றான்.

"அதுவும் நீ பக்கத்துல இருந்து பேசுற‌ மாதிரி இருக்காதுடா, இப்பவே எனக்கு அழுகையா வருது தெரியுமா?.." என்று சொல்லி முடிக்கும்‌ போது அவள் குரல் குன்றிப் போய் இருந்தது.

"ஏய் அழுவுறியா? என்னடி இப்படி சின்னப் புள்ள மாதிரி பண்ற?"

"........."

"தீட்சு, அழாதடி.."

"........"

"பேசாம நீயும் இங்க வந்திடுறியா?"

"கூட்டிட்டு போறியா?"

"ம், அம்மாட்ட நைட் பேசுறேன். அழாம தூங்கு.."

"காலையில வரைக்கும் காத்திருக்கனுமா?"

"கனவுல வருவேன், நிறைய தருவேன். போய் படுத்து தூங்குடி செல்லம்" என்று குழந்தை போல அவளைத் தேற்றி அனுப்பினான்.

அன்றையே இரவே, அவளது ஆசைக்கிணங்கி தன் பெற்றோரிடம் தங்களது காதல் கதையை வெளிப்படுத்தினான் அதியன். தீட்சுவின் புகைப்படத்தைப் பார்த்ததுமே அவள் அழகில் மயங்கிய கிரகலட்சுமி, தன் மகன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

அப்பா முதலில் முகத்தைச் சுருக்கினாலும், அதியன் தங்கள் இருவருக்குமான பழக்கத்தை விளக்கியதன் மூலம், 'தீட்சண்யா தன் மகனின் நல்லது கெட்டது அனைத்தையும் அனுசரித்துச் செல்கிறாள்' என்ற புரிதல் வர, சம்மதமாய் தலையசைத்தார்.

அதியன், "உங்களுக்கு ஓகேனா இப்பவே அவங்க வீட்ல பேசி, அவளையும் இங்க கூட்டிட்டு வந்து வச்சுக்குவோம் அம்மா" என்றான்.

"இந்த மாசம் சரியில்லப்பா, இன்னும் இருபது நாளுக்கு எந்த நல்ல விஷயமும் பேசக்கூடாதுன்றது நம்ம சம்பிரதாயம். என் மகனோட வாழ்க்கை முழுக்க வரப்போற பொண்ண, ஒரு நல்ல நாள்ல போய் பார்க்கனும்னு அம்மா விரும்புறேன். இருபது நாள்தான? கொஞ்சம் பொறுத்துக்கோடா" என்று அதியனின் தலையை வருடி செல்லம் கொஞ்சினார் கிரகலட்சுமி.

இருபது நாளில் என்ன நிகழ்ந்துவிடும் எனும் எண்ணத்தோடு அவனும் சம்மதித்தான். ஆனால் வரப்போகும் இந்த இருபது நாட்கள்தான் அவன் வாழ்வையே புரட்டிப் போடப் போகின்றது..
 
Top