கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உளி தாங்கும் கற்கள் -அத்தியாயம் 3

Rosie kajan

Moderator
Staff member
அத்தியாயம் 3
அடுத்தநாள் திங்கள்கிழமை. பாடசாலை நாள் தானே? இரவிரவாகப் புரண்டுவிட்டு அதிகாலையில் தான் கண்ணயர்ந்திருந்தேன் என்று நினைக்கின்றேன். நான் என்று இல்லை, வீட்டில் மற்றவர்களும் தூங்கினார்கள் என்று சொல்ல முடியாது.

பெரிய அறைக்குள் தூங்கும் அக்காக்கள் இருவரும் மாறி மாறித் தண்ணி குடிப்பதும் கழிப்பறை போவதுமாக இருந்தார்கள். அம்மாவுக்கருகில் கிடந்த என்னால் அவர் அழுது கொண்டிருப்பதை உணர முடிந்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டே கிடந்தார்.

வரவேற்பறையில் நாங்கள் படுத்திருந்த இடத்திலிருந்து சற்றே தள்ளிக் கிடந்த அப்பா அசையாது கிடந்தாலும் எப்போதும் அவர் பக்கமிருந்து எழும் குறட்டை ஒலி வரவில்லை என்றதிலிருந்தே அவரும் விழித்தே கிடக்கின்றார் என்று புரிந்தது.

இது, இதுவரைக்கும் அனுபவத்திறியாத ஒரு மனக்கனம். ஆமாம்! நான்கு வருடங்களுக்கு முன்னர் வரையெல்லாம், போதியளவு பணவசதி இல்லை என்றதுதான் எங்களுக்கிருந்த ஒரேயொரு குறை. அப்பாவின் சிறு பெட்டிக்கடையில் வரும் வருமானம் நாளாந்தத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானதாக இருப்பதில்லை. குடும்பமும் பெரிதுதானே? அதனால், முக்கித் தக்கித்தான் குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

'எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தானே? பிள்ளைகள் நாலுபேருமே நல்ல கெட்டிக்காரர்கள்; தலையெடுத்திட்டா இந்த இழுபறியெல்லாம் பஞ்சாப் பறந்திரும்.' என்று, அம்மாவும் அப்பாவும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதிலும், ஒரே ஆண் மகனான அண்ணாவில் மலையளவு நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.

இப்படியிருக்கையில், பள்ளி சென்ற அண்ணாவைக் காணவில்லை என்று அந்தரித்து அலைமோதிய போதும், அவன் இயக்கத்துக்குத்தான் சென்றுவிட்டான் என்பது நிச்சயமாகி, உடனடியாகச் சந்திக்க முடியாது என்றறிந்து, வன்னிக்காட்டுக்குள் என்ன என்னமாதிரியான இடர்களுக்குள் இருக்கின்றானோ என்று கதை கதையாகக் கதைத்தழுத போதெல்லாம் எங்கள் உள்ளங்கள் கனத்தில் குப்புற விழுந்து துடித்துப் போயினதான்.

அதோடு, அவன் இப்படி இயக்கம் சென்றுவிட்டது வெளியில் தெரியவர வேறுவகையில் ஆபத்துகள் வந்துவிட்டால்? வீட்டில் இரு குமர்ப்பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற பயம் வேறு ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.

அதெல்லாமே ஒரு நெடிய ஆறுமாதங்கள் கடந்த பின்னர், அமைதிப்படையென்று வந்த பட்டாளம் சூறாவளியாகச் சுழன்றடித்துவிட்டுத் திருப்தியோடு தம் நாட்டுக்குத் திரும்பிச் சென்றபின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து சென்றால் நாவற்றுகுழிப் பாலம் கடந்த பின்னர் வரும் ஒரு தென்னந்தோட்டத்திலுள்ள முகாமில் அண்ணா இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, அரக்கப் பரக்கச் சென்று, மொட்டைத் தலையோடு உருமாறியிருந்த அண்ணாவைக் கண்டதும் பனிபோல விலகிப் போனதே!

குபுக்கென்று சூடாக வழிந்த கண்ணீரைக் கரம் கொண்டெல்லாம் துடைக்காது அப்படியே குப்புறப்புரண்டு தலையணைக்குள் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டேன்.

அன்றைய நாள் என் மனக்கண்ணில் பசுமையாய் ஓடித் திரிந்தது. எங்கள் பிள்ளையைப் பார்க்க வந்தோம் என்று வாயிலில் நின்ற இயக்க அண்ணையிட்டச் சொல்லி, அனுமதி பெற்று, தென்னந்தோட்டத்தில் கொஞ்சத்தூரம் உள்ளே ஓட்டமும் நடையுமாகச் சென்று, அங்கிருந்த பழைய வீட்டுக் கட்டிடத்தின் முன்னால் காத்து நின்ற நிமிடங்கள் சில, யுகங்களாகக் கடந்திருக்க, தனக்கேயுரிய சிறு புன்முறுவலோடு வந்தான் அண்ணா.

பாய்ந்து சென்று கட்டிப் பிடித்தழுதார் அம்மா. அழுதுகொண்டே அண்ணாவிடம் அம்மா கேட்ட முதல் கேள்வியே "துண்டு குடுத்திட்டு வீட்டுக்கு வந்திரு ராசா; என்ர தலையை அடைவு வச்செண்டாலும் உன்ன வெளிநாடு அனுப்புறன்; சத்தியமாடா!" என்றதுதான். அந்தக் கேள்வி இன்றுவரை அண்ணாவை நோக்கிப் பலவழிகளிலும் போனாலும் அவன் முகத்திலோ, அதே அமைதியான முறுவல் மட்டுமே!

"இயக்கத்துக்கு எண்டு போற எல்லாரும் துண்டு குடுத்திட்டு வந்திட்டா?" என்றும் சிலவேளைகளில் கேட்டுவிட்டுப் போவான்.

அண்ணாவின் நெருங்கிய சிநேகிதனின் அண்ணாவும் என் அண்ணாவுக்கு நெருங்கிய நண்பன் தான். யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி தொடங்கியபொழுதே கொழும்பு சென்றுவிட்டார். அமைதிப்படை திரும்பிச் சென்ற கையோடு யாழ் வந்தவர் அண்ணாவையும் சென்று சந்தித்தார்.

"டேய்! உது எல்லாத்தையும் விட்டுட்டு வந்திரு! காசு எதுவும் குடுக்க வேணும் எண்டாலும் நானே குடுக்கிறன்; இப்பவே என்னோட கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போறன்." என்று கெஞ்சிக்கொண்டு நின்றவர். அதற்கும், பதினாறே வயதிலிருந்த என் அண்ணாவின் முகத்தில் முறுவல் மட்டுமே பதிலாக வந்திருந்தது. இப்போதும் அப்பப்ப நாங்கள் 'விட்டுட்டு வந்திரு' என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை என்பதுவும் எங்களுக்கு உறுதியாகத் தெரிந்தே இருந்தது.

"அப்ப அரசியல் பிரிவுக்குச் சரி வந்திரு தம்பி!" என்றும் சொல்லி இருக்கிறாள் பெரியக்கா.

"யாழ்பாணத்துப் பெடியள் பே சொகுசுக்காரர் என்ற ஒரு கத இயக்கத்தில இருக்கு; எல்லாரும் அரசியலுக்கு வந்தா அங்க நிண்டு சண்டை போடுறது ஆரு? நான் எப்பவும் அந்தப் பிரிவிலதான் இருப்பன்.' என்றும் சொல்லி இருக்கிறார், அண்ணா.

மீண்டும் கண்ணீர் கரை தட்டியது. "எதுவும் வேணாம், என்ர அண்ணா உயிரோட இருந்திர வேணும்; அதுமட்டுமே போதும்." என்று முணுமுணுத்த என் முதுகில் பட்டென்று ஒன்று விழத் துள்ளியெழுந்தேன்.

"விடிஞ்சப் பிறகும் நடுவீட்டுக்க இப்பிடிப் படுத்துக் கிடக்கிறயே, எத்தின மணி தெரியுமா?' என்று கண்டித்த பெரியக்கா, என் முகம் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டாள்.

"விசரி! என்னத்துக்கு இப்ப அழுகிற? தம்பி நத்தாருக்கு வாறன் எண்டவன், கட்டாயம் வருவான்; உன்னத்தான் திருப்பி திருப்பிக் கேட்டவன், வடிவாப் படிக்கச் சொன்னவன்." அன்பாகக் கடிந்து ஆறுதல் சொல்ல, மறைத்து அடக்க நினைத்தையும் மீறி, என் கண்கள் கசிந்தன. விம்மிவிட்டேன்.

" செவ்வந்தி கண்ணத் துடை! இதை அம்மா கண்டா தானும் சேர்ந்து அழுவாடி." சொல்லிக்கொண்டே என் கண்களைத் துடைத்தாள் பெரியக்கா.

"எழும்பு, போர்வைய அப்பிடியே சுருட்டி வைக்காமல் உதறி வடிவா மடிச்சு உள்ள வச்சுப் போட்டுப் பாயைச் சுருட்டி வை. ம்ம் ...கெதியா. ஓடிப்போய்ப் பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடு பாப்பம்!" என்று, எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு அப்பால் சென்றவள் கண்களும் நிறைந்திருந்ததைக் கண்டேன் நான்.

எனக்குச் சொல்லிவிட்டுத் தானே கலங்கி நிற்கிறாள் என்றால்?

என் மனம் காந்திய வயிறோடு இணைந்து தடதடத்தது. இப்படியே நின்றால் சரியா?
 

Rosie kajan

Moderator
Staff member
போர்வையை உதறி மடித்துத் தலையணையின் மீது வைத்துப் பாயைச் சுருட்டிக் கொண்டுபோய் சின்ன அறைக்குள் அம்மா அப்பாவின் பாய்களின் மீது வைத்துவிட்டுக் கிணற்றடியை நாடிச்சென்றேன்.

சின்னக்கா குளிச்சுக் கொண்டிருந்தாள். கிணற்றடியிலிருந்த கோபால் பல்பொடியில் சிறிதாய் இடக்கையில் கொட்டிக்கொண்டு, திரும்ப வந்து குசினி வாசல் படியில் அமர்ந்து பல்லு விளக்க, முறைத்தாள் சின்னக்கா.

அதைக்கண்டு கொள்ளாமல், "அம்மா எங்கக்கா?" கேட்டேன் நான்.

"சோம்பேறி! எழும்பி நிண்டு தீட்டுப்பாப்பம். கெதியா வெளிக்கிட்டுட்டு இன்னொருக்காப் படி! நேற்றுக் கணக்குக்கொப்பி எடு எண்டு சொல்ல மெல்ல நழுவிப் போய்ட்ட என்ன? இன்டைக்குப் பள்ளியால வந்தோன்ன கணக்குக்கொப்பியோட வந்து குந்த வேணும்." சொல்லிக்கொண்டே, குளிச்ச ஈரத்தோடு என்னைக் கடந்து சின்ன அறைக்குள் சென்றாள். அங்கு வைத்துத்தான் ஆடை மாற்றுவோம்.

"நீ அவளுக்குக் கதை சொல்லு, பார் துணியில இருக்கிற ஈரத்தப் பிழிஞ்சிட்டு வந்து மாத்தக் கூடாதாடி? வீடெல்லாம் ஈரம். உடுப்ப மாத்தீட்டுத் துடைச்சு விடு!" பெரியக்காவின் அதட்டல் சின்னக்காவை நோக்கிப் பறந்தது.

'எப்பிடி வாங்கினயா? வாங்கினயா?' சின்னக்காவைப் பார்த்து மனதுள் சிரித்தபடி கிணற்றடிக்குச் செல்லவும் கழிப்பறைப் பக்கத்திலிருந்து வந்தார் அம்மா.

"இதுக்க ஒருவாளித் தண்ணி ஊத்தம்மா!" என்று, கழிப்பறை வாளியை வைத்தவரின் முகம் உப்பிப் போயிருந்தது. பார்க்கப் பெரும் பாவமாக இருந்தது.

' ஒரு வாளித் தண்ணியா? ஒரு ரூபா தரவேணும் தருவீங்களோ?' என்று கேட்க வாய் உண்ணிவிட்டுப் பிறகு கேட்காமல் தண்ணியை அள்ளி வார்த்தேன்.

எப்போதும் போலவே அப்பா நேரத்துக்கே வெளியில் சென்றிருந்தார் போலும். நானும் ஒரு காக்காய்க்குளிப்புப் போட்டுவிட்டு, முதல் நாளே சிரட்டைக்கரி அயன் பொக்சில் அயன் பண்ணிவைத்த யூனிபோம் போட்டு, டை குத்திவிட்டு, இரண்டு பக்கமும் அரைகுறையாக அவிழ்ந்து தொங்கிய பின்னல்களைப் பிரித்தபடி சின்ன அறை யன்னல் கம்பிகளிடையே தொங்கிய இரண்டு சிவப்பு ரிப்பன்களையும் அங்கு கிடந்த சீப்பையும் எடுத்துக்கொண்டு வெளியில் வர, “செவ்வந்தி, முதல் வந்து தேத்தண்ணியக் குடி!" என்றழைத்தார் அம்மா.

"நீங்க முதல் வந்து தலையை இழுத்து விடுங்கோம்மா!" என்றேன் நான்.

"அம்மா வேலையா எல்லா நிக்கிறா? இங்க வா நான் இழுத்து விடுறன்." பெரியக்கா வந்தாள்.

"உங்களுக்கு இண்டைக்குக் கம்பஸ் இல்லையாக்கா?" என்றபடி, மீண்டும் பின்புறவாயிலால் இறங்கி நிக்க, மேல்படியில் நின்றவாறே என் தலையை இழுக்கத் தொடங்கினாள் அக்கா.

"இருக்கு, பத்து மணிக்குத்தான்.” என்றபடி இழுத்தவள், "கெதியா தேத்தண்ணியக் குடிச்சிட்டுப் புட்டுக் கிடக்கு சாப்பிடு! பிறகு அவள் விட்டுட்டுப் போயிருவாள், நடந்து போக வேண்டி வரும்." எச்சரிக்கை செய்தாள்.

"எனக்குப் புட்டு இப்ப வேணாம். பாணில்லையாம்மா?"

"அப்ப அவிச்ச புட்டைக் கொட்டுறதா சொல்லு? வந்து பேசாமல் சாப்பிடு! மனுசர் உள்ள விசரில உணக்கை கேட்குதா?"அம்மாவின் குரலில் கோபம்.

"எனக்குப் பசிக்கேல்ல; தேத்தண்ணி மட்டும் போதும்; அது பழைய புட்டுத்தானே? இப்ப அவிச்ச மாதிரிச் சொல்லுறீங்க?" என்றும் சொல்லிவிட்டேன்.

சடக்கென்று என் தலையைத் தன் புறமாகத் திருப்பிப் பார்த்தார் அக்கா.

"ஐயோ வலிக்குதக்கா! பின்னல விடுங்கோ!"

"இங்க பார் செவ்வந்தி, மற்ற நாள் போல இல்ல; வீடிருக்கிற நிலம விளங்குதுதானே? சத்தம் போடாம தாறதச் சாப்பிட்டுட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பு சரியா?" அடிக்குரலில் அவள் அப்படிச் சொல்ல மளுக்கென்று வடிந்தது, கண்ணீர்.

"இப்ப என்ன சொல்லீட்டன் எண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிற? பதினாலு வயதாப் போச்சு, சாப்பாட்டு விசயத்தில இன்னுமா உன்னோட மல்லுக்கட்ட வேணும்? வெள்ளணக் காலத்தால பிரச்சனைப்படாமல் போய்ச் சாப்பிடு!”

அக்காவின் அதட்டல், விறுவிறுவென்று சென்று என் தட்டில் போட்டிருந்த புட்டையெடுத்துக் கையில் ஏந்திக் கொள்ள வைத்தது.

அடுத்து வந்த இரு நாட்களிலும் பெரிதாக விசேசம் இல்லை என்றாலும் எங்கள் வீடு மட்டும் கனமான அமைதிப் போர்வையில் உறங்காது விழித்திருந்தது. அவ்வளவும் தான்.

அம்மாவுக்குக் கொஞ்சம் உடல் சுகமில்லாது போயிருந்தது. செய்வாய், புதன் கிழமைகளில் பெரியக்காவும் சின்னக்காவும் தான் சமைத்தார்கள். நானும் உதவிகள் செய்து கொடுத்திருந்தேன்.

அப்பா எங்கெங்கோ எல்லாம் திரிந்து விசாரித்துவிட்டு, "அப்படியெல்லாம் சண்டை தொடங்கிற போல ஒரு சிரமனும் இல்ல." என்று சொல்லிச் சமாதானம் செய்தவர், "எதுக்கும் ரெண்டு கிழமையால இன்னொருக்காப் போய்ப் பாப்பம்." என்று சொல்ல, "இந்த முறை எல்லாருமாப் போவம்" என்று சொன்னார் அம்மா.

"அதைப்பற்றி அந்த நேரம் பாப்பம்." பிடிகொடாது சொன்னார் அப்பா.

"இந்த முறை நானும் கட்டாயம் வருவன். தூரம் எண்டு சொல்லி எங்களை விட்டுட்டுப் போக வேணாம் பா. எத்தின தரம் கேட்டுட்டன் என்ர சைக்கிளை எப்ப ஒட்டித் தரப் போறீங்க?" நான் தான்.

அது ஒரு சின்ன சொப்பர் சைக்கிள் தான். அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் விற்ற போது சரியான கொஞ்சக் காசில் வாங்கினது. சரியான பழசும். ஆனாலும் எனக்கு அது போதும்.

பெரியக்கா கொஞ்சப் பிள்ளைகளுக்குக் டியூசன் சொல்லிக் கொடுக்கிறாள். "வடிவாப் படிச்சு O/L நல்ல ரிசல்ட் எடுத்தா டியூசன் காசில சேர்த்து வச்சுப் புதுச்சைக்கிள் வாங்கித் தருவன்." என்று சொல்லி இருக்கிறாள். அவளுக்குக் கம்பசில் கொடுக்கின்ற பெர்சரியில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் சைக்கிள் வாங்க எடுத்து வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாதமும் சொல்வாள். அது எங்கே? அந்த ஆயிரம் ரூபாய்கள் எங்கள் வீட்டுச் செலவில் கை கொடுத்துவிடுமே!

வியாழன், நவம்பர் 11...

விடியப்புறம் நான் ஒரு கனவு கண்டேன். அதில், பெரிய சாம்பல் நிறப் பறவையொன்று மிக வேகமாகப் பறந்து வந்து எங்கள் யன்னல் கம்பிகளில் முட்டி மோதித் தத்தளித்துப் போகின்றது. தன் சிறகிரண்டையும் விரித்து அடித்து அடித்து உள்ளே புக முடியாது அது எழுப்பிய தீனமான ஒலியில் என் நெஞ்சாங்கூடு சில்லிட்டுப் போயிற்று! அதுமட்டுமா? அதன் கண்கள் இரண்டும் அப்படி ஒரு மினுக்கத்தோடு உருண்டன, என்னையே பார்த்தபடி. அது கத்திய கத்தலில் நான் வாய்விட்டே அலறிக்கொண்டு எழுந்தமர்ந்துவிட்டேன்.

அது பார்த்தால் வீட்டில் என்னைத் தவிர மற்றவர்கள் முன்னரே எழுந்திருந்தார்கள். எல்லார் முகங்களிலும் கருமை அப்பியிருந்தது. நான் அழுதபடி அம்மாவின் அருகில் செல்கையில் தான் வெளியே எங்கோ தூரத்தில் விடாது ஒலித்த வெடிச்சத்தங்கள் கருத்தில் பதிந்தன.

"இந்தப் பக்கம் எண்டா எங்கவா இருக்கும்? இதுக்குத்தான் பிள்ளயும் போயிருப்பானா? கடவுளே அவனக் காப்பாத்து!" அம்மாவின் அழுகை வலுத்தது.

"எதுவும் நடக்க முதல் இந்த மனிசி தொடங்கீரும்!" சினந்தபடி எழுந்து வெளியில் சென்றார் அப்பா.

"பெத்த எனக்குத் தானே தெரியும்? உங்களுக்கு என்ன?"

அம்மாவின் கோபக் குரல் அவரைத் துரத்த, வெளியில் கூடிவிட்ட அயலட்டத்தோடு சேர்ந்து கொண்டார்கள், அப்பாவும் அவரைத் தொடர்ந்த அக்காக்களும்.

நானும் அம்மாவும் கண்ணீரோடு அமர்ந்திருந்தோம். என் வாயோ, "அண்ணா கவனமா வந்திரு!" என, உருப்போட்டபடி!
 
Top