அத்தியாயம் 3
அடுத்தநாள் திங்கள்கிழமை. பாடசாலை நாள் தானே? இரவிரவாகப் புரண்டுவிட்டு அதிகாலையில் தான் கண்ணயர்ந்திருந்தேன் என்று நினைக்கின்றேன். நான் என்று இல்லை, வீட்டில் மற்றவர்களும் தூங்கினார்கள் என்று சொல்ல முடியாது.
பெரிய அறைக்குள் தூங்கும் அக்காக்கள் இருவரும் மாறி மாறித் தண்ணி குடிப்பதும் கழிப்பறை போவதுமாக இருந்தார்கள். அம்மாவுக்கருகில் கிடந்த என்னால் அவர் அழுது கொண்டிருப்பதை உணர முடிந்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டே கிடந்தார்.
வரவேற்பறையில் நாங்கள் படுத்திருந்த இடத்திலிருந்து சற்றே தள்ளிக் கிடந்த அப்பா அசையாது கிடந்தாலும் எப்போதும் அவர் பக்கமிருந்து எழும் குறட்டை ஒலி வரவில்லை என்றதிலிருந்தே அவரும் விழித்தே கிடக்கின்றார் என்று புரிந்தது.
இது, இதுவரைக்கும் அனுபவத்திறியாத ஒரு மனக்கனம். ஆமாம்! நான்கு வருடங்களுக்கு முன்னர் வரையெல்லாம், போதியளவு பணவசதி இல்லை என்றதுதான் எங்களுக்கிருந்த ஒரேயொரு குறை. அப்பாவின் சிறு பெட்டிக்கடையில் வரும் வருமானம் நாளாந்தத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானதாக இருப்பதில்லை. குடும்பமும் பெரிதுதானே? அதனால், முக்கித் தக்கித்தான் குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
'எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தானே? பிள்ளைகள் நாலுபேருமே நல்ல கெட்டிக்காரர்கள்; தலையெடுத்திட்டா இந்த இழுபறியெல்லாம் பஞ்சாப் பறந்திரும்.' என்று, அம்மாவும் அப்பாவும் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதிலும், ஒரே ஆண் மகனான அண்ணாவில் மலையளவு நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.
இப்படியிருக்கையில், பள்ளி சென்ற அண்ணாவைக் காணவில்லை என்று அந்தரித்து அலைமோதிய போதும், அவன் இயக்கத்துக்குத்தான் சென்றுவிட்டான் என்பது நிச்சயமாகி, உடனடியாகச் சந்திக்க முடியாது என்றறிந்து, வன்னிக்காட்டுக்குள் என்ன என்னமாதிரியான இடர்களுக்குள் இருக்கின்றானோ என்று கதை கதையாகக் கதைத்தழுத போதெல்லாம் எங்கள் உள்ளங்கள் கனத்தில் குப்புற விழுந்து துடித்துப் போயினதான்.
அதோடு, அவன் இப்படி இயக்கம் சென்றுவிட்டது வெளியில் தெரியவர வேறுவகையில் ஆபத்துகள் வந்துவிட்டால்? வீட்டில் இரு குமர்ப்பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற பயம் வேறு ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.
அதெல்லாமே ஒரு நெடிய ஆறுமாதங்கள் கடந்த பின்னர், அமைதிப்படையென்று வந்த பட்டாளம் சூறாவளியாகச் சுழன்றடித்துவிட்டுத் திருப்தியோடு தம் நாட்டுக்குத் திரும்பிச் சென்றபின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து சென்றால் நாவற்றுகுழிப் பாலம் கடந்த பின்னர் வரும் ஒரு தென்னந்தோட்டத்திலுள்ள முகாமில் அண்ணா இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, அரக்கப் பரக்கச் சென்று, மொட்டைத் தலையோடு உருமாறியிருந்த அண்ணாவைக் கண்டதும் பனிபோல விலகிப் போனதே!
குபுக்கென்று சூடாக வழிந்த கண்ணீரைக் கரம் கொண்டெல்லாம் துடைக்காது அப்படியே குப்புறப்புரண்டு தலையணைக்குள் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டேன்.
அன்றைய நாள் என் மனக்கண்ணில் பசுமையாய் ஓடித் திரிந்தது. எங்கள் பிள்ளையைப் பார்க்க வந்தோம் என்று வாயிலில் நின்ற இயக்க அண்ணையிட்டச் சொல்லி, அனுமதி பெற்று, தென்னந்தோட்டத்தில் கொஞ்சத்தூரம் உள்ளே ஓட்டமும் நடையுமாகச் சென்று, அங்கிருந்த பழைய வீட்டுக் கட்டிடத்தின் முன்னால் காத்து நின்ற நிமிடங்கள் சில, யுகங்களாகக் கடந்திருக்க, தனக்கேயுரிய சிறு புன்முறுவலோடு வந்தான் அண்ணா.
பாய்ந்து சென்று கட்டிப் பிடித்தழுதார் அம்மா. அழுதுகொண்டே அண்ணாவிடம் அம்மா கேட்ட முதல் கேள்வியே "துண்டு குடுத்திட்டு வீட்டுக்கு வந்திரு ராசா; என்ர தலையை அடைவு வச்செண்டாலும் உன்ன வெளிநாடு அனுப்புறன்; சத்தியமாடா!" என்றதுதான். அந்தக் கேள்வி இன்றுவரை அண்ணாவை நோக்கிப் பலவழிகளிலும் போனாலும் அவன் முகத்திலோ, அதே அமைதியான முறுவல் மட்டுமே!
"இயக்கத்துக்கு எண்டு போற எல்லாரும் துண்டு குடுத்திட்டு வந்திட்டா?" என்றும் சிலவேளைகளில் கேட்டுவிட்டுப் போவான்.
அண்ணாவின் நெருங்கிய சிநேகிதனின் அண்ணாவும் என் அண்ணாவுக்கு நெருங்கிய நண்பன் தான். யாழ்ப்பாணத்தில் பிள்ளை பிடி தொடங்கியபொழுதே கொழும்பு சென்றுவிட்டார். அமைதிப்படை திரும்பிச் சென்ற கையோடு யாழ் வந்தவர் அண்ணாவையும் சென்று சந்தித்தார்.
"டேய்! உது எல்லாத்தையும் விட்டுட்டு வந்திரு! காசு எதுவும் குடுக்க வேணும் எண்டாலும் நானே குடுக்கிறன்; இப்பவே என்னோட கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போறன்." என்று கெஞ்சிக்கொண்டு நின்றவர். அதற்கும், பதினாறே வயதிலிருந்த என் அண்ணாவின் முகத்தில் முறுவல் மட்டுமே பதிலாக வந்திருந்தது. இப்போதும் அப்பப்ப நாங்கள் 'விட்டுட்டு வந்திரு' என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை என்பதுவும் எங்களுக்கு உறுதியாகத் தெரிந்தே இருந்தது.
"அப்ப அரசியல் பிரிவுக்குச் சரி வந்திரு தம்பி!" என்றும் சொல்லி இருக்கிறாள் பெரியக்கா.
"யாழ்பாணத்துப் பெடியள் பே சொகுசுக்காரர் என்ற ஒரு கத இயக்கத்தில இருக்கு; எல்லாரும் அரசியலுக்கு வந்தா அங்க நிண்டு சண்டை போடுறது ஆரு? நான் எப்பவும் அந்தப் பிரிவிலதான் இருப்பன்.' என்றும் சொல்லி இருக்கிறார், அண்ணா.
மீண்டும் கண்ணீர் கரை தட்டியது. "எதுவும் வேணாம், என்ர அண்ணா உயிரோட இருந்திர வேணும்; அதுமட்டுமே போதும்." என்று முணுமுணுத்த என் முதுகில் பட்டென்று ஒன்று விழத் துள்ளியெழுந்தேன்.
"விடிஞ்சப் பிறகும் நடுவீட்டுக்க இப்பிடிப் படுத்துக் கிடக்கிறயே, எத்தின மணி தெரியுமா?' என்று கண்டித்த பெரியக்கா, என் முகம் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டாள்.
"விசரி! என்னத்துக்கு இப்ப அழுகிற? தம்பி நத்தாருக்கு வாறன் எண்டவன், கட்டாயம் வருவான்; உன்னத்தான் திருப்பி திருப்பிக் கேட்டவன், வடிவாப் படிக்கச் சொன்னவன்." அன்பாகக் கடிந்து ஆறுதல் சொல்ல, மறைத்து அடக்க நினைத்தையும் மீறி, என் கண்கள் கசிந்தன. விம்மிவிட்டேன்.
" செவ்வந்தி கண்ணத் துடை! இதை அம்மா கண்டா தானும் சேர்ந்து அழுவாடி." சொல்லிக்கொண்டே என் கண்களைத் துடைத்தாள் பெரியக்கா.
"எழும்பு, போர்வைய அப்பிடியே சுருட்டி வைக்காமல் உதறி வடிவா மடிச்சு உள்ள வச்சுப் போட்டுப் பாயைச் சுருட்டி வை. ம்ம் ...கெதியா. ஓடிப்போய்ப் பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடு பாப்பம்!" என்று, எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு அப்பால் சென்றவள் கண்களும் நிறைந்திருந்ததைக் கண்டேன் நான்.
எனக்குச் சொல்லிவிட்டுத் தானே கலங்கி நிற்கிறாள் என்றால்?
என் மனம் காந்திய வயிறோடு இணைந்து தடதடத்தது. இப்படியே நின்றால் சரியா?