கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 18

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 18

சுவாசக் குழாய் மற்றும் இன்ன பிற குழாய்களை உடலெங்கும் தாங்கியபடி கண்மூடி படுத்துக் கிடந்த விக்கியை தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவின் கண்ணாடி துவாரம் வழியே பார்த்த வெண்பாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

மூத்த மருத்துவர் அழைப்பதாக வந்து செவிலியர் கூற, இடிந்து போய் அமர்ந்திருந்த நிலாவைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினாள் வெண்பா.

"மேடம்! அவர் உடம்புல ஏதோ ஒரு பெயர் தெரியாத விஷம் பரவியிருக்கு, எதுவா இருந்தாலும் இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சத் தான் சொல்ல முடியும். பார்ப்போம் கடவுள் கருணை இருந்தா அவர் கண் விழிப்பார்" எனத் தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி பேசினார் மருத்துவர்‌.

"என்ன சார் சொல்றீங்க? அது ரொம்பச் சின்ன ஊசி தானே! "எனக் கண்கள் கலங்கிய படி கேட்ட நிலாவிடம், "நல்லவேளை நீங்க ஊசி குத்துனப்ப பாத்தீங்க, இல்லன்னா என்னென்னே தெரியாம அவர் இறந்து போயிருப்பாரு."

"டாக்டர் சார், எனக்குத் தலையும் புரியல ,வாலும் புரியல. புரியுற மாதிரி சொல்லுங்களேன் "எனப் படபடத்தாள் வெண்பா.

"மிஸ்.வெண்பா, விக்னேஷ் உடம்புல சக்தி வாய்ந்த நியூரோடாக்ஸின் அதாவது நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கிற விஷம் செலுத்தப்பட்டுருக்கு. இதே அளவுக்கான விஷம் குழந்தைங்க உடம்புலயோ இல்ல வயசானவங்க உடம்புலயோ இருந்திருந்தா அவங்களை உயிரோட மீட்க முடியாதும்மா."

"அய்யோ" எனச் சன்னமான அலறல் நிலாவிடம் இருந்து எழுந்தது.

"கவலைப்படாதீங்க விக்னேஷோட உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. ஆனா, அவரோட மூளையோட செயல்பாடுகள் எப்படி இருக்கும்னு தெரியல. மறதி இருக்கலாம், இல்லைன்னா கை கால் செயல்படாம போகலாம், பேச முடியாமப் போகலாம் "என்று மருத்துவர் ஒவ்வொரு அணுகுண்டாகப் பாய்ச்சினார்.

"வெண்பா! அந்த ஊசி உண்மையிலேயே பிரபா உடம்புல தான் ஏத்தணும்னு பார்த்திருக்காங்க! நல்லவேளை விக்கி நடுவுல வந்து பிரபாவைக் காப்பாத்திட்டார்" என்று நடந்த நிகழ்வுகளைக் கூறிய நிலா, தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று சில நொடிகள் கழித்தே புரிந்து கொண்டாள்.

'நல்லவேளை விக்கி நடுவுல வந்தார்னு சொல்லி வெச்சிருக்கோம். விக்கியோட உயிர் மட்டும் துச்சமா என்ன! சே பிரபாவுக்காக எவ்வளவு சுயநலமா இருக்கோம். எனக்கு பிரபா எப்படியோ அப்படித்தானே விக்கியோட அம்மாவும் அவனை நேசிச்சுருப்பாங்க! நமக்கு நெருங்குன உயிர்னா மட்டும் பொக்கிஷம் மத்த உயிர் எல்லாம் கேவலமா என்ன? 'என்று நினைக்க நினைக்க, நிலாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

'இல்லவே இல்ல விக்கியோட உயிரும் எனக்குப் பொக்கிஷம்' என தீர்மானமாக நினைத்தவள், கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீர்த் துடைத்தபடி, வெண்பாவைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.

தன் உடையெங்கும் கண்ணீரை சிதறவிட்டபடி அழுது கொண்டிருந்தாள் வெண்பா.

"என்னாச்சு வெண்பா, பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது" என அவரின் தோளை மென்மையாக அழுத்திக் கூறினாள் நிலா.

"இல்ல நிலா! எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துடுச்சு. பிரபாவை பத்திரப்படுத்தணும்னு தான் அவளை உங்கிட்ட அனுப்பி வெச்சோம். இப்ப அவளுக்கு உன் பக்கத்துல இருக்கும் போதே ஆபத்து நெருங்கிடுச்சுன்னா இனியும் உன் இடம் சேஃப் இல்ல. பிரபா எங்க?" என அழுகையினூடே பரபரப்பில் உண்மையை உளறிவிட்டாள் வெண்பா.

பிரபாவை ஆபத்து நெருங்கி நூலிடுக்கில் அவள் தப்பியிருக்காள் என்ற செய்தி அறிந்ததும், வெண்பாவின் மனம் அவளறியாமல் ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டது.

"வெண்பா! இல்ல எனக்குப் புரியல, நான் தானே பிரபாவை உங்ககூட சேஃபா அனுப்பி வெச்சேன். நீங்க என்ன மாத்தி சொல்றீங்க?"

நிலாவிடம் இருந்து இப்படி கேள்வி வந்ததும் தான், தான் என்ன உளறினோம் என்பதை உணர்ந்து கொண்டாள் வெண்பா. ஆனால் இனி பிரபா நிலாவோடு இருக்கப் போவதில்லை, அதனால் இனியும் அவளிடம் மறைக்க வேண்டியது இல்லை என்பதால் அனைத்தும் உண்மைகளையும் கூறினாள் வெண்பா.

"என்னது வெண்பா உங்க குழந்தையா? இதை நான் எப்படி நம்புறது? எதுக்காக சின்ன குழந்தையைப் பிரிஞ்சு இவ்வளவு வருஷமா இருக்கீங்க! உங்க கணவர் எங்க? அது எப்படி நான் பிரபாவை நல்லா பாத்துப்பேன்னு உங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு? நீங்க தான் அம்மாங்குறதுக்கு ப்ரூஃப் என்ன இருக்கு?" என அதிர்ச்சி குறையாமல் தோட்டாவில் இருந்து நிற்காமல் பாயும் குண்டுகளால் கேள்விகளை அனுப்பினாள் நிலா‌.



"நிலா! நான் தான் அவளோட அம்மாங்குற உண்மை மட்டும் இப்போதைக்கு போதுமே! "என கெஞ்சுதலாக ஒலித்த வெண்பாவின் குரல், நிலாவிற்கு ரொம்பப் புதிது.

சொல்ல முடியாத ஏதோ ஒரு ரகசியமும் அதற்கு பின்னால் இருந்த மன அழுத்தமும் நிலாவிற்குப் புரிய, அவள் வெண்பாவின் கையை மென்மையாக அழுத்தினாள்.

"எதுக்காக எங்கிட்ட பிரபாவோட பொறுப்பை ஒப்படைச்சீங்கன்னு கேட்டியா! இதுக்காகத் தான் நிலா" என நிலாவின் கையும், தன் கையும் சேர்ந்து இருப்பதை ஜாடையாகக் காட்டிய வெண்பா, "சொல்லித் தெரிவதில்லை மன வருத்தமும், ஆசையும். எதிர்ல இருக்குறவங்க தனக்குத் தானே புரிஞ்சுக்கிட்டாத் தான் உண்டு. பிரபாவை நீ கண்ணும் கருத்துமா பார்த்துப்பேன்னு நானும், அவளோட அப்பாவும் நினைச்சோம். அதே மாதிரி தான் நடந்துச்சு. இன்ஃபாக்ட் எங்களை விட நீ ரொம்ப ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்ட!"

"வெண்பா மேடம்! எனக்குத் தெரிஞ்சு பிரபாவோட அப்பா சாதாரண ஆளா இருக்க முடியாது, நிச்சயம் அவர் ஒரு பெரிய பிக் ஷாட்டா தான் இருக்கணும்" என நிலா கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் ஆமோதிப்பாய் சிரிப்பை மட்டும் உதிர்த்தாள் வெண்பா.

"விக்கி அட்டெண்டர் யாருங்க அவர் கண் முழிச்சிட்டாரு" என செவிலியர் வந்து அழைத்ததும், நிலாவை முந்திக் கொண்டு முதலில் சென்றது வெண்பாவே.

"விக்கி, இவங்களைத் தெரியுதா பாருங்க" என அவனருகில் நின்று கொண்டிருந்த மருத்துவர், நிலாவைக் காட்ட அவன் தெரியவில்லை என்பது போல் தலையை அசைத்தான்.

"விக்கி நீங்க மட்டும் இல்லைன்னா இப்ப பிரபா இல்லை" என வெண்பா நா தழுதழுத்த அவளைப் பார்த்து மட்டும் மென்னகை புரிந்தான்.

"மிஸ்டர். விக்னேஷ் இவங்களைத் தெரியுதா?" என அவன் வெண்பாவைப் பார்த்து புன்னகை செய்ததைக் கண்டு மருத்துவர் கேட்க, ஆமாம் தெரிகிறது என்பது போல் தலையை அசைத்தான் விக்னேஷ்.

'ச்சே இவனுக்கு என்னை ஞாபகமே இல்லைன்னா என்ன அர்த்தம்! நான் அவன் மனசுல பிடிச்சிருக்குற இடம் அவ்வளவு தானா! என் மேல தான் தப்பு, மனசுக்குப் பிடிச்சிருந்தும் ரொம்பவே பிகு பண்ணிட்டேன் போல' எனக் கண்கள் கலங்க நின்றவளை யாரோ போல் பார்த்தான் விக்னேஷ்.

"விக்னேஷ் எப்படி இருக்கீங்க! நீங்க மயங்கி விழுந்ததும் நான் ரொம்பவே பயந்துட்டேன். ஏதாவது பேசுங்க விக்கி" எனக் குரல் உடைந்து பேசுபவளை ஒரு மார்க்கமாகப் பார்த்த வெண்பா, அவர்கள் இருவரும் தனியே பேசிக் கொள்ளட்டும் என அறையின் வெளியே போய் நின்று கொண்டாள்.

"நான் நல்லாயிருக்கேன், ஆனா நீங்க யாரு? "என தட்டுத்தடுமாறி பேச முடியாமல் திணறித் திணறி பேசிபவனைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தவள்," சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க நான் அப்புறம் வரேன் "என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று அறையில் இருந்து வெளியே சென்றாள் நிலா.

"நிலா! ஐ திங், உங்களுக்கு விக்னேஷ் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு போல, அதான் இப்படி இருக்கீங்க!" என கலங்கிப் போய் நிற்கும் நிலாவைப் பார்த்து கூறிய வெண்பா," இனியும் பிரபாவை உங்ககிட்ட விட்டு வைக்கிறது நியாயம் இல்லை நிலா, சோ இப்பவே நான் அவளை எங்கயாவது கண் காணாத இடத்துக்கு அழைச்சிட்டுப் போயிடறேன் "என வெண்பா தாய்மையின் பிரதிபலிப்பில் கூற,

"நீங்க வேணும்னா குடுக்கவும், வேண்டாம்னா எடுக்கவும் பிரபா ஒண்ணும் பொம்மை இல்ல, நானும் தான்" என மருத்துவமனை என்று கூட பாராமல் கத்திவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "என்னால பிரபா இல்லாம இருக்க முடியாது வெண்பா. நீங்க ஆபத்துன்னு தெரிஞ்சதும், பயந்துக்கிட்டு பிரபாவை எங்கிட்ட ஒப்படைச்சீங்க. ஆனா நான் இவ்வளவு நாள் எத்தனையோ ஆபத்துக்கள்ல இருந்து அவளை தனியாளாக் காப்பாத்தி இருக்கேன். அதுனால பிரபா எங்கூட, எங்கூட மட்டும் தான் இருப்பா" என முகம் சிவக்க மூச்சு வாங்க பேசி, தானும் தாய்மை உணர்வில் சளைத்தவள் இல்லை என்று நிரூபித்தாள் நிலா.

'இதென்னடா இது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போனது' என கவலையில் வெண்பா திகைக்க, 'இதெல்லாத்துக்கும் ஒருத்தன் தான் காரணம் அவனைப் போட்டுத் தள்ளிட்டா எல்லா சரியாயிடும் 'என தனக்குள்ளுயே மூர்க்கமாக சொல்லிக் கொண்டவள், யாருக்கோ அழைத்து கிசுகிசுப்பாகப் பேசினாள்.

ஆனால் அந்த புறம் இருந்து வந்த செய்தி அவ்வளவு உவப்பானதாக இல்லை என்பது அவள் பொட்டென்று அலைபேசியை அணைத்து வைத்ததிலேயே தெரிந்தது.

"என்னாச்சு நிலா? யாரும் மாறனை தூக்க ஒத்து வரலையா! நான் எவ்வளவு பெரிய இடத்துல இருக்கேன்னு உனக்கே தெரியும். என்னாலேயே அவனை ஒண்ணும் செய்ய முடியலங்கறப்ப உன்னால மட்டும் முடியுமா என்ன? " என்ற வெண்பாவின் நியாயமான கேள்வி, நிலாவின் கோபத்தை தீ மூட்டி கொழுந்துவிட்டு எரிய வைத்தது.

"அதையும் பார்த்துடலாம் மேடம். பிரபா எனக்குத்தான்" என சவால் விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து விருட்டென நகர்ந்தாள் நிலா.

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நிலா, விக்கி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை.

"டேய் பிரசன்னா, நிலா எங்கடா ஆளையே காணும்? " என சற்றுத் தேறியிருந்த விக்னேஷ் தன்னை கவனித்துக் கொள்ளும் நண்பனிடம் கேட்க,

"ம்ம் நீ தான் அவளை யாருன்னே தெரியலைன்னு சொல்லிட்டீல்ல அதான் போயிட்டா" என்றான் பிரசன்னா.

"அய்யோ அது சும்மா சொன்னேன் டா! அப்படி சொன்னாலாவது அவளுக்கு என் மேல ஒரு இது வருமான்னு சோதிக்கத் தான் அப்படி செஞ்சேன். அவளுக்கு அந்த இதுவும் வந்துச்சுடா, அவளை எனக்கு நினைவில்லைன்னு சொன்னதும் அப்படி ஒரு வலி அவ முகத்துல. நிலாவும் என்னை நிச்சயமா லவ் பண்றாடா" என்று ஊர்ஜிதமாகச் சொன்னான் விக்னேஷ்.

அவன் மனதில் உலா வந்து கொண்டிருந்த நிலாவோ, அச்சமயம் வெண்பாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

"மேடம் உங்களுக்கு தேவையான ஐட்டம் இப்ப என் கஸ்டடியில். அவனை வாங்கிக்கிட்டு, பிரபாவை எங்கிட்ட குடுத்துடுங்க. உங்களுக்கு குழந்தை வேணும்னா இன்னொரு குழந்தையைப் பெத்துக்குங்க, எனக்கு பிரபா மட்டும் தான் குழந்தை" என்றவள் சட்டென்று நாற்காலியில் இருப்பவனின் கன்னத்தில் பொலிச்சென்று அறைந்தாள்.

அவளின் கை அவன் கன்னத்தில் பட்ட ஓசையும், அதற்கு எதிரொலியாய், "அய்யோ "என்று ஒலித்த மாறனின் குரலையும் கண்டுபிடித்த வெண்பா, நிலாவை சந்திக்க அவள் கூறிய இடத்திற்கு விரைந்தாள்.



















































































 
Top