கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 20

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 20

"உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட இனிமேல் வரக்கூடாது" என்பது போல் அவள் இருபுறமும் அமர்ந்திருந்த அப்பா கனகசபாபதியையும் விக்னேஷையும் மாறி மாறிப் பார்த்தாள் நிலா. கண்ணீருக்காகக் கை நீட்டியது கொஞ்சம் சினிமாத் தனமாக இருந்ததோ என்று இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்க்கையில்,

இடையிட்ட மைக்கேல், "அண்ணே! அந்த ஜூஸை பாப்பா கையில குடுங்க. தூத்துக்குடியில் இருந்து வாங்கிட்டு வந்த சாத்துக்குடிம்மா.. அப்பா காலையிலிருந்து அதைத்தான் உட்கார்ந்து புழிஞ்சுட்டு இருக்கார்" என்றார்.

"வாட்! அப்பா உங்களுக்கு தூத்துக்குடியா? என்று விக்னேஷும்,

"இந்த ஹாஸ்பிடலுக்கு எப்படிப்பா வந்தீங்க?" என்று நிலாவும் ஒரே சமயத்தில் கேட்டனர். கேட்டவர்கள் அவர்களையே மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டனர். 'இவன் என்ன நம்ம அப்பாவை அப்பானு கூப்பிடுறான்? ஒருவேளை நமக்கு எதுவும் சொந்தமா? நம்ம அப்பாவை சித்தப்பா பெரியப்பா அப்படின்னு எதுவும் சொல்லப் போறானா?' என்று நிலா யோசித்தாள்.

'நமக்கும் கல்யாணம்னு ஒண்ணு எப்படியும் பண்ணித் தான் ஆகணும்.. எவனையோ கட்டுறதுக்கு இந்தப் பக்கியவே பண்ணிக்கிட்டா என்ன? புதுசா ஒருத்தனைப் பிடிச்சு, அவனுக்கு நம்ம வாழ்க்கை முறையை விளக்கி, அவனை ஒத்துக்க வைக்கிறதுக்கு எல்லாம் தெரிஞ்ச விக்னேஷே பரவாயில்லையோ?' என்று அவள் மனதில் வெகு நாட்களாக தோன்ற ஆரம்பித்திருந்தது.

நாளடைவில் இவனை விட்டால் எனக்கு யாரும் கிடைக்காது, என்னைத் தவிர இவனுக்கு யாரும் வாழ்க்கை கொடுக்கவும் முடியாது என்ற கருத்தே ரிப்பீட் மோடில் அவள் மனதில் ஓடியது. நடந்த அதிரடி சம்பவங்களால் அதைப்பற்றி மிகவும் அலசி ஆராயாமல் அந்த எண்ணத்தையே வளர விட்டிருந்தாள் மென்னிலா.

"தூத்துக்குடி இல்லப்பா.. அதுக்கு பக்கத்துல..தம்பி கொஞ்சம் ரைமிங்குக்காக அப்படி சொல்லிட்டாப்ல" என்று கனகசபாபதி சொல்ல,

"மைக்கேல்! நீங்கதான் எங்க அப்பாவுக்கு தகவல் கொடுத்து இங்க வர வச்சதா? உங்களுக்கு எப்படி தெரியும் எங்க அப்பாவை?" என்று கேட்க, அப்போது மைக்கேல் மதன காமராஜனின் மினி பிளாஷ்பேக் அங்கே விவரிக்கப்பட்டது. "வேலை வெட்டி இல்லாத மைக்கேலை நான்தான்மா உனக்கு பாதுகாப்புக்காக அனுப்பினேன்"

"எனக்கு நீங்க பாதுகாப்பு? சின்ன வயசுல என்னை ரோட்ல கிண்டல் பண்ண பசங்களையே போய் தட்டிக் கேட்க சொன்னா, 'விடு பாப்பா அவன் பாட்டு கத்திட்டு போறான்.. நமக்கு எதுக்கு வம்பு? ஒதுங்கி போயிடனும்'னு சொல்லுவீங்க. நீங்க எனக்கு பாதுகாப்புக்கு ஆளை அனுப்பினீங்களா? என்று மென்னிலா கேட்க, கனகசபாபதி தலைகுனிந்தார்.

"அப்போ உள்ள சூழ்நிலை பாப்பா அது. உன்னோட நல்லதுக்காக என் தரப்பிலிருந்து நான் ஏதாவது செய்யணும் இல்லை? நீதான் எங்க பேச்சைக் கேட்காம போயிட்ட.. எனக்கும் உங்க அம்மாவுக்கும் மனசே விட்டுப் போச்சு" என்று கனகசபாபதி கூற,

"எனக்குப் பாதுகாப்புக்கு இவரை அனுப்புனீங்கன்னு சொல்லாதீங்க. வேணும்னா என்னை உளவு பார்க்க அனுப்பினேன்னு சொல்லிக்கோங்க என்றால் நிலா. கனகசபாபதி கோபத்தில் ஏதாவது வெடிப்பார் என்று விக்னேஷ் ஆவலுடன் எதிர்பார்க்க,

"அப்படித்தான் இருக்கட்டுமே பாப்பா.. அதுக்குப் பேரு என்னவா இருந்தா என்ன? நீ எப்படி இருக்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சுக்கணும். அதுக்கு இப்படி ஒரு குறுக்கு வழி. தப்புன்னா மன்னிச்சுக்கோ பாப்பா" என்று கூற சப் என்றானது விக்னேஷுக்கு.

இப்படி ஒரு அப்பா.. அப்புறம் ஏன் இவ நினைச்சதை செய்ய மாட்டா என்றெண்ணிய படியே அவன் நிலாவைப் பார்த்திருக்க, "டேய் நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா?" என்றது அவனது மனசாட்சி.

"அதெல்லாம் விடுங்க.. இவன் ஏன் உங்களை அப்பான்னு சொல்றான்.. நீங்க ஏன் ஜூஸையும் பாசத்தையும் சேத்துப் புழிஞ்சுக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டவாறே கனகசபாபதியின் கையில் இருந்த பழச் சாறுக் குவளையை வாங்கி அருந்த ஆரம்பித்தாள் மென்னிலா.

இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் திரு திரு என்று மைக்கேல் விக்னேஷ் கனகசபாபதி மூவரும் விழித்தார்கள். நிலா வருவதற்கு முன்பாகவே அவள் மேல் தனக்கு இருக்கும் ஆசை பற்றிக் கூறி அவள் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான் விக்னேஷ். அதை எப்படி நிலாவிடம் சொல்வது, நாங்கள் முடிவெடுத்து விட்டோம், நீ தான் சம்மதிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த ஒரு வார்த்தைக்காகவே ஓடி விட மாட்டாளா என்று யோசிக்க, மூன்று பேரின் முகத்தையும் சேர்த்து வைத்தாற்போல் ஒரு வட்டம் போட்ட நிலா,

"மூணு பேரும் உக்காந்து என்ன கதை சொல்லலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க.. எனக்கு ஒரு வேலை இருக்கு" என்று எழுந்து சென்றாள்.

வாசலில் அவளுடைய பாதுகாவலர்கள் இருவர் இருந்தனர். மருத்துவமனையில் விக்னேஷ் இருந்த அறைக்கு அடுத்த அறையும் இவர்களின் தேவைக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் சென்று அமர்ந்து சில நிமிடங்களுக்கு ஒற்றை விரலால் தன் நெற்றியைத் தட்டிய நிலா அருவிக்கு அலைபேசியில் அழைத்தாள்.

"நீயும் பிரபாவும் எங்கே இருக்கீங்க?" என்று கேட்க, நீ சொன்ன மாதிரியே பாப்பாவை வச்சிட்டு கார்ல சிட்டியை சுத்திட்டே இருக்கேன்.. பாப்பாவே ரொம்ப கிண்டல் பண்றா. அரதபழசான சினிமா டெக்னிக்கை யூஸ் பண்றீங்க ஆன்ட்டி, ஏதாவது ஒரு இடத்தில் நிப்பாட்டுங்கன்னு சொல்றா.. எத்தனை நாள் தான் நானும் பெப்பா பிக் பார்க்குகிறது? என் வயசுக்கு ஏத்த மாதிரி வேற ஏதாவது கார்ட்டூன் போட்டுத் தாங்கன்னு கேட்கிறா"

"சரி சரி..கட் பண்ணு கூப்பிடுறேன்" என்று நிலா அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியை இயக்கிப் பார்க்க, அய்யாசாமியின் கைது குறித்த செய்தி அத்தனை சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 'ஆளுங்கட்சி பெரிய மனிதனின் அராஜகங்கள்' என்ற பெயரில் மென்னிலாவின் ஹேக்கர்கள் அணியும், வெண்பாவின் சாகசங்களும் ஈட்டிக் கொடுத்த அத்தனை செய்திகளும் தேசிய, மாநில ஊடகங்களைக் கடந்து சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி இருந்தன. அதன் விளைவாக மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் அய்யாசாமியைக் கைது செய்து இழுத்துச் சென்றனர். ஆளுங்கட்சித் தலைவரான முதல்வர் தன் கட்சிக்கும் அய்யாசாமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அவரை எப்போதோ கட்சியிலிருந்து நீக்கி விட்டாயிற்று, மாறனைப் பற்றித் தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மாறனும் தன் பொறுப்பில் இருப்பதால் இனிமேல் எதிரிகளால் தொல்லை வராது என்று உணர்ந்து கொண்ட நிலா அருவிக்கு அழைத்து 'பிரபாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்துரு' என்றாள். அதே சமயம் வெண்பாவும் தன் கணவர் தமிழரசனுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி, இளம் தலைவர், வருங்கால முதல்வராகும் வாய்ப்புடைய இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த தமிழரசன் இப்போது ஒரு பெண்ணுடன் கைகோர்த்து நெருக்கமாகச் செல்கிறாரே, அதுவும் ஒரு பதற்றத்துடன் மருத்துவமனைக்கு வருகிறார்களே, என்ன என்று அவர் பின்னால் சில லோக்கல் மீடியாக்காரர்கள் வந்தனர். உடன் வந்த பெண் துடிப்பான போலீஸ் அதிகாரி வெண்பா என்று அறிய இன்னும் அவர்கள் புறமிருந்து பல யூகங்கள் புறப்பட்டன.

இது எதையும் கண்டுகொள்ளாத தமிழரசனும் வெண்பாவும் முதன்முதலாகத் தங்கள் மகளை சேர்ந்தாற்போல் சென்று பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பில் நிலா இருந்த அறையை நோக்கி நடந்தனர். "பிரபாவை இங்கே வர சொல்லிட்டீங்களாமே? அய்யாசாமியைத் தானே அரெஸ்ட் பண்ணி இருக்காங்க? மாறன் தலைமறைவாயிட்டான்" என்று வெண்பா பரபரக்க, அத்தனை கேள்விகளும் பயமும் தமிழரசனிடமும் இருந்தது. ஆனால் அவனது பதட்டம் அவன் முகத்தில் தெரியாது அவன் நிலாவைப் பார்க்க,

"ஏங்க? நீங்க ஆளுங்கட்சியில இருக்குறதிலேயே இளைய அமைச்சர் அப்படித்தானே?" என்றாள் நிலா. அவனிடம் நேரடியாக இதுவரை அவனிடம் அப்படி யாருமே கேட்டதில்லை. அதனால் தமிழரசன் முகத்தில் அதிர்ச்சி.

"இவ்வளவு பெரிய பவர்ஃபுல்லான ஆளுன்னு வெளியே சொல்லிக்காதீங்க.. அசிங்கம். பெத்த புள்ளையை, கட்டின பொண்டாட்டியை கூட வச்சு வளர்க்கத் துப்பு இல்ல.. உங்களுக்கு எல்லாம் எதுக்கு கரை வேஷ்டி சட்டை" என்று அவனுடைய வேட்டியையும் சட்டையையும் சுட்டிக் காட்டினாள்.

முந்திக் கொண்ட வெண்பா, "நிலா! அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறதே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் காலேஜ் டைம்ல இருந்து லவ்வர்ஸ். அவர் தன்னோட அடையாளத்தை மறைச்சு தான் காலேஜ் படிச்சாரு.. அப்புறம் அப்புறம் அப்புறம்.." என்று கூற,

"இந்த சீனை நான் நிறைய கதைகள்ல, சினிமாவில் பாத்து இருக்கேன்.. உங்க ரெண்டு பேத்துக்கும் கசமுசாவாகி, அப்புறம் நீங்க ப்ரெக்னன்ட் ஆகி, அது தெரிஞ்சு இவரோட அப்பா உங்களுக்குள்ள வந்து… அந்த வழக்கமான ஸ்டோரி தானே?" என்றாள் நிலா.

"பாதி கரெக்ட். அதாவது எங்க காதலுக்கு எதிரி இவங்க அப்பா கிடையாது.. கட்சிக் காரங்க தான். ரொம்ப துல்லியமா சொல்லப்போனா அய்யாசாமி ஃபேமிலி தான். அவங்களுக்கு எதிரா இவர் ஆரம்பத்துல இருந்து குரல் கொடுத்துக்கிட்டு இருந்தார்.. கட்சியில இவரோட அரசியல் எதிரில் அவங்க தான். நான் கூட ஐபிஎஸ் படிச்சு, போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்து இவரோட நடவடிக்கைகளுக்கு உறுதுணையா இருக்கணும் அப்படின்னு தான் பேசிக்கிட்டோம். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு. வெண்பாவை உங்ககிட்ட ஒப்படைச்சது என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அந்தத் தகவலும் எனக்கு லேட்டா தான் தெரியும். அந்த முயற்சியில் எங்களுக்கு பதில் என் பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் உயிரை விட்டாங்க. மனசைக் கல்லாக்கிக்கிட்டு கைக்குழந்தையை அவங்க கிட்ட கொடுத்துட்டு நான் வெளியூர் போயிட்டேன். என்னைக் காணோம் அப்படின்னு இவர் பல வருஷமா தேடிட்டு இருந்தார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சியில நான் பந்தோபஸ்த்துக்கு போனப்ப என்னைப் பார்த்தார். அதில் இருந்து போன்ல தான் பேசுகிறோம் முதல் தடவையா ஆறு வருஷம் கழிச்சு இப்பதான் நாங்க சந்திக்கிறோம்" என்றபடி தமிழரசனின் கையைப் பிடித்து அவன் மேல் சாய்ந்து கொண்டாள் வெண்பா.

"ஆமாங்க! என் குழந்தையை இவ்வளவு நாள் காப்பாத்தினதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. இன்னைக்கு இந்த மாறனுக்கு மட்டும் ஒரு வழி பண்ணிட்டு மீடியா முன்னாடி என் குடும்பத்தை அறிமுகப்படுத்திடுவேன்" என்று தமிழரசன் கூற,

"தயவு செஞ்சு செய்யுங்க.. எனக்குத் தெரிஞ்சு ஆறு ஏழு வருஷமா தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குப் பொண்ணு பாத்துட்டே இருக்காங்க" என்றபடி மீண்டும் தொலைக்காட்சியை நோக்கி பார்வையை பதித்தாள் நிலா. அய்யாசாமியின் கைது குறித்த சம்பவங்களை ஒரு ரசனையுடன் அவள் பார்க்க,

"இப்ப நான் முன்னாடி மாதிரி இல்ல.. கட்சிப் பணிகள், அரசாங்க பொறுப்புகள் இதை மட்டும் பார்த்துகிட்டு இருந்த நான் இப்ப உண்மையான அரசியல்வாதி ஆயிட்டேன். நமக்கும் நிறைய ஆளுங்க இருக்காங்க. என் பொண்ணு மேல கை வச்சவன் வைக்கத் துணிஞ்சவன்னு தெரிஞ்ச பிறகும் நான் எப்படி மாறனை விட்டு வைப்பேன்? அவனைத் தேடித்தான் அத்தனை பேரை அனுப்பி இருக்கேன்" என்று தமிழரசன் சொல்ல,

"ரொம்ப சீன் போடாதீங்க.. அவ்வளவு ஒர்த்தெல்லாம் இல்ல நீங்க. மாறன் இப்போதைக்கு உங்களுக்கு கிடைக்க மாட்டான். ஏன்னா என் கஸ்ட்டடியில தான் இருக்கான்" என்று நிலா கூட அந்த இரண்டு அப்பாடக்கர்களுக்குமே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

"இவ்வளவு எதிர்பார்க்கல மிஸ் நிலா உங்ககிட்ட. இவ்வளவு டேலண்ட்டும் ஆளுமையும் உங்களுக்கு இருக்கிறதால தான் மாறன் கட்டுனா உங்களைத் தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்திருக்கான். அது மட்டுமா பிரபா பத்திரமா இருந்ததும் இந்த உங்களோட தைரியத்தால தான். நீங்க பேசாம எங்க கட்சியில் சேர்ந்திடுங்களேன்" என்று தமிழரசன் கேட்டான்.

இவர்களது உரையாடலை இவ்வளவு நேரம் அரை வாசலில் நின்றிருந்த விக்னேஷ் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். மாறனை பிடித்து நிலா வைத்திருக்கிறாள் என்று அவனுக்குமே ஒரு அதிர்ச்சி. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "அப்ப நான் மட்டும் என்ன தக்காளி கொக்கா? அய்யாசாமி- மாறன் குரூப்புக்கு எதிரா கொடுத்த பாதி இன்பர்மேஷன் என்னோடது. அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து நிறைய இன்ஃபோவ லவட்டி இருக்கேன். சார்கிட்ட சொல்லு நிலா.. அப்படியே அந்த கவர்மெண்ட் காண்ட்ராக்ட்.. அதுக்கு சாரைக் கொஞ்சம் மனசுக்கு சொல்லு அதுக்கு ஆரம்பிச்சது தானே இவ்வளவு போராட்டமும்" என்று தன் காரியத்தில் கவனமாகக் கேட்டான்.

"எனக்கெல்லாம் காரியம் நடக்கணும். அதான் முக்கியம். யாரு செஞ்சாங்க என்கிற பெருமை முக்கியம் இல்ல.. அதெல்லாம் இதோ இவருக்குத் தான் தேவை. இவனை வேணா அள்ளிக்கிட்டு போய் உங்க கட்சியில் சேர்த்துக்கோங்க" என்றபடி நிலா சேனலை மாற்றினாள்.

அப்போது அருவி பிரபாவுடன் உள்ளே வர, பாசப் போராட்டங்களும் அன்புப் பரிமாற்றங்களும் அங்கே அடுத்த அரை மணி நேரத்திற்கு நடந்தன. அருவி ஏற்கனவே உன் அம்மா அப்பாவை சந்திக்க போகிறோம் என்று சொல்லித் தான் பிரபாவைக் கூட்டி வந்திருந்தாள்.

அதனால், "கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.. எவ்வளவு நாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? அப்படி என்ன உங்களுக்கு வேலை?" என்று கடிந்து கொண்டாள் பிரபா. சிறுது நேரத்தில் வருத்தம் மறைந்து அம்மா அப்பாவை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டாள். பெரிய கவலை தீர்ந்த மகிழ்வில்,

"நாங்க இவளை அழைச்சிட்டுப் பின் வாசல் வழியாப் போறோம்.. வாசல்ல மொத்த மீடியாவும் நினைக்கிறாங்க. ஒரு ரிசப்ஷன் வச்சு என் பேமிலியை அனவுன்ஸ் பண்றேன், நீங்க எல்லாம் கண்டிப்பா வரணும்" என்று கூறிவிட்டு தமிழரசன் விடை பெற இத்தனை நாள் சொந்த மகள் போல் வளர்த்த பிரபாவை இனி விருந்தினர் போலத் தான் சந்திக்க முடியும் என்ற கனமான உண்மை நிலாவின் மனதை பாரமாக்கியது. அருவியும் கண்களில் ஈரத்துடன் இதற்கெல்லாம் மௌன சாட்சியாக ஓரமாக அமர்ந்திருந்தாள்.

நிலாவையே பார்த்தபடி நின்றான் விக்னேஷ். நிலாவின் மன வருத்தம் அவனுக்குப் புரியத்தான் செய்தது. அவளை எப்படி திசை திருப்புவது தொழில் காதல் இரண்டிலும் முன்னேற வேண்டும் அதற்கு இந்த ராட்சசி அடம்பிடிக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்று நினைத்து அவளருகே சென்றான் விக்னேஷ்.

அலுவலக வேலைகளில் மூழ்கி விக்னேஷின் இடத்தையும் கடந்த ஒரு வாரமாக இட்டு நிரப்பியிருந்த பிரசன்னா, சோர்வுடன் உள்ளே வந்தான். "என்னடா ஆச்சு? நிறைய எமோஷனல் சீன்ஸ் ஓடி இருக்கும் போலையே? இந்த ஹாஸ்பிடலில், ஏர்போர்ட், அப்புறம் கல்யாண மேடை, இது பக்கத்துல எல்லாம் வச்சு நடக்கிற சீன்ஸ்ல ஓவர் எமோஷன் எப்பவும் வழிஞ்சு ஓடுதே.. அது ஏன்டா விக்கி? சரி என்ன பண்ணுனீங்க? எதிரிகளை எல்லாம் முடிச்சுட்டீங்களா? மாறனை இன்னும் ஒழிக்கலையாடா? பேசாம என்னை பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலகி விட்டுடேன்.. இல்லை வேலையை விட்டுத் தூக்கிடு.. நான் வேற வேலையைப் பார்த்துட்டுப் போயிடுறேன்.. முடியலடா உன்னோட" என்று புலம்பிக் கொண்டே உள்ளே வர, அருவியைப் பார்த்தவுடன் அவனது புலம்பல் நின்றது.

பேசியும் பார்த்தும் பல நாட்களாகி இருந்தபடியால், "நலம் தானா?" என்று அவன் கண்ணாலேயே கேட்க, "உடலும் உள்ளமும் நலம்தானா?" என்று பதிலுக்குக் கேட்டாள் அருவி.

"சரி சரி! உங்க கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம் என்னன்னு வெளியே போய் டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க" என்று நிலா கூற, தன் காதுகளையே நம்ப முடியாமல் திரும்பிப் பார்த்தாள் அருவி.

பிரசன்னா, "என்னடா சொல்றாங்க சிஸ்டர்?" என்று கேட்க, "சரியா தான்டா கேட்டீங்க.. உங்க சிஸ்டர் என்கிட்ட ஏதோ தனியா பேச விரும்புறாங்க போல. நீ உன் ஆளைக் கூட்டிட்டு வெளியே போயிரு" என்றான் விக்னேஷ்.

அவன் பார்வை மட்டும் நிலாவின் முகத்தை விட்டு விலகவே இல்லை. நிலாவும் இப்போது டிவியை அணைத்துவிட்டு கால் மேல் கால் போட்டபடி கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் கோர்த்தவாறு விக்னேஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"காலையிலிருந்து கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா அந்தப் பாட்டையே ஹாம் பண்ணிக்கிட்டு இருந்தேன் தெரியுமா? இப்போ திடீர்னு அந்தப் பாட்டுக்கு வேலையே இல்லாம போச்சு!" என்றபடி காதலுடன் அருவியை நெருங்கினான் பிரசன்னா.

"நிறைவேறுமா நிறைவேறாதா என்ற தெரியாமல் இருந்த காதல் திடீரென்று சாத்தியமாகி, எப்ப கல்யாணம் வச்சுக்கலாம் அப்படிங்கற பேச்சு வரும் அதுவும் இன்னிக்கு வரும்னு நான் நினைக்கவே இல்ல.. இதோ பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கூட ஏதாவது கொலைகாரங்க வந்து டப்பு டப்புன்னு ஷூட் பண்ணிடுவாங்களோங்குற பயத்திலேயே கார்ல பிரபாவை வெச்சிகிட்டு ஊரை சுத்தி சுத்தி வந்தேன் தெரியுமா.. அப்பாடா!" என்றபடி தன் நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டாள் அருவி.

"அட! எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகுற? வா வா!" என்று பிரசன்னா இரண்டு கைகளையும் விதித்தவாறு அவள் அருகில் செல்ல,

" நோ ஹக்கிங்! இது ஹாஸ்பிடல்!" என்றபடி அவனிடம் இருந்து பதறி விலகினாள் அருவி.

அவர்கள் நின்று கொண்டிருந்தது மருத்துவமனை காரிடரில் ஒரு திருப்பத்தின் அருகே. படார் என்று அவள் விலகவும் திருப்பத்தில் கையில் ஒரு ட்ரேயுடன் வந்து கொண்டிருந்த செவிலியர் மேல் மோதவும் சரியாக இருந்தது. "அச்சச்சோ சாரி" என்று அருவி சொல்வதற்குள் பாய்ந்து கீழே விழுந்த பொருட்களை எடுக்கப் போனாள் அந்த நர்ஸ். அவளுடைய பதற்றம் வித்தியாசமாகத் தெரியவே, பிரசன்னா அதற்கு முன்பாகத் தலையிட்டுக் கீழே கிடந்த பொருட்களை எடுத்தான். ஒரு கையுறைக்குள் வித்தியாசமாக ஒரு பொருள் தென்பட்டது. அதை நர்ஸுக்கு முன்னால் அவன் கைப்பற்ற, பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அதில் இருந்தது ஒரு சிறிய கைத் துப்பாக்கி. அந்த நர்ஸ் திடீரென்று திரும்பி பின்புறமாக ஓட்டம் பிடித்தாள். "கார்ட்ஸ்! கார்ட்ஸ்!" என்று அருவி கத்த, அறைவாசலில் நின்றிருந்த பாதுகாவலர்கள் இவர்களது குறிப்பைபா புரிந்து கொண்டு அந்த நர்சைத் துரத்திச் சென்றனர்.

பிரசன்னாவுக்கு முதன்முறையாக துப்பாக்கியை கையில் ஏந்தியதில் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அதனுடனே விக்னேஷும் நிலாவும் இருந்த அறைக்குள் சென்று படார் என்று கதவைத் திறந்தான்.

அங்கே தன் காதலை எப்படி சொல்வது என்று பலவாறாக யோசித்து ஒரு வசனத்தைத் தயார் செய்து கொண்டு விக்னேஷ் நிலாவை நெருங்க, துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தான் பிரசன்னா. அதிர்ச்சியடைந்த விக்னேஷ் நிலாவின் மீது சாய்ந்தான்.

"உன் லவ்வை ஓகே பண்ணினதுக்கு தண்டனையா என்னைத் துப்பாக்கியை வச்சு சுட வர்றியாடா? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா?"
என்று விக்னேஷ் கேட்க,

"டேய் நீ வேற! சமயம் புரியாம காமெடி பண்ணிட்டு.. உன்னைக் கொல்றதுக்கு தான் டா இந்தத் துப்பாக்கி"

"அதைத் தான் டா நானும் கேக்குறேன்.. ஏன் என்னைக் கொல்றதுக்கு நீ துப்பாக்கி எடுத்துட்டு வந்தே? நான் உன் நண்பன் இல்லையா?" என்றான் விக்னேஷ்.

"லூசு.. ஒரு நர்சம்மா உங்க ரூமுக்கு உனக்கு மருந்து கொண்டு வந்துச்சு.. அருவி அவங்க மேல தெரியாம மோதி அவங்களைத் தள்ளிவிட்டுட்டா.. பார்த்தா அவங்க கைல இருந்து துப்பாக்கி விழுந்துச்சு.. அந்தப் பொண்ணை நம்ம கார்ட்ஸ் துரத்திட்டு போய் இருக்காங்க" என்க அருவிக்கு இன்னும் கை நடுங்கிக் கொண்டிருந்தது.

"பிரபாவைக் குறிவச்சு வந்ததுல எனக்கு அன்னைக்கு விஷ ஊசி போட்டாங்க, அந்தக் கொலை முயற்சியில் நான் தப்பிச்சிட்டேன்.. இன்னைக்கு துப்பாக்கி. ஆனா இது என்னை நோக்கி தோட்டாவை துப்ப வந்து இருக்காது.. இதோ மை டார்லிங்கை நோக்கி வேணா சுட வந்திருக்கும்" என்று நிலாவைக் காட்ட,

"எதே! டார்லிங்கா!" என்று அருவியும் பிரசன்னாவும் விழித்தனர். துப்பாக்கியால் சுட வந்த அதிர்ச்சியை விட இந்த அதிர்ச்சி அதிகமாக இருந்தது.

அப்படியா ஓகே சொல்லிட்டியா என்பது போல் அருவி நிலாவைப்பார்க்க, அந்த துப்பாக்கியை வாங்கி அதன் மேக் என்ன, குண்டுகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள் நிலா.

"நிலா. பாரு இவ்வளவு நாள் சும்மா பந்தாவுக்கு செக்யூரிட்டி வச்சிருக்கோம், நமக்கு என்ன ஆபத்து வரப்போகுதுன்னு நினைச்சேன்.. இப்ப பயந்து பயந்து உயிர் வாழுற நிலைமை வந்துடுச்சு. அப்படி ரிஸ்க் எடுத்து சம்பாதிச்சுட்டு திடீர்னு செத்துப் போயிட்டேன்னா, இதெல்லாம் யாருக்கு? நீ இல்லாத உலகத்தை எங்களால் கற்பனையே பண்ணியே பாக்க முடியல" என்றாள் அருவி கண்கலங்க.

"எனக்கும் எதை நோக்கி ஓடுறோம்.. கொஞ்சம் நிதானமா நிக்கலாமே அப்படிங்கற எண்ணம் கொஞ்ச நாளாவே இருக்கு.. அதுவும் இந்த ஒரு வாரமா அதிகமாக தான் இருக்கு.. இருந்தாலும் இன்னும் என்னுடைய லட்சியங்கள் நிறைய இருக்கே.." என்று அந்தத் துப்பாக்கியின் ட்ரிக்கரில் கையை வைத்தவாறே அதைத் தன் தாடையில் தட்டி யோசித்தாள் நிலா.

பூப்போல அந்தத் துப்பாக்கியை வாங்கிய விக்னேஷ் அதை ஒரு கவரில் போட்டு, "நிறைய பேரு கைரேகை இதுல விழவேண்டாம். அப்புறம் போலீஸ்காரங்களுக்குக் கஷ்டம்" என்றவன், "அவனவன் காதலை ஸ்டார்ட் பண்ணும் பொழுது கடற்கரை, பூக்கள், பரிசுகள்னு எவ்வளவு கில்மாவா ஸ்டார்ட் பண்றான். உனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது?" என்று தனக்குத் தானே பேச, ஒரு காதல் காட்சியை சர்வநிச்சயமாய் தடை செய்து விட்டோம் என்பதை உணர்ந்த பிரசன்னா, விக்னேஷின் கையில் இருந்து துப்பாக்கி அடங்கிய கவரை வாங்கி, "வா அருவி! போய் ஹாஸ்பிடல் அட்மின் கிட்ட கொடுப்போம்.. அந்த நர்ஸ் யாரு? துப்பாக்கி எங்கிருந்து வந்தது எல்லாம் தெரியணும்" என்றபடி தன் நண்பனுக்கும் காதலியின் நண்பிக்கும் தனிமை கொடுத்து வெளியேறினான்.


பைரவி தொடர்வாள்
 
Top