கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -18

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம்-18


அத்வதா எழுந்ததும் அவளுடனே எழுந்தவன் அவள் பேசுவதற்கு முன்பே அவனே அவளை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினான்.


"இதோ இவங்க தான் மிஸ் அத்வதா நம்ம புது டிசைனர் அண்டு பிரிண்டிங் எல்லாம் இவங்க செக்ஷன்ல வரும்.சின்ன கம்பெனி பட் ரொம்ப வருஷமா இந்த பிரிண்டிங் வொர்க்ஸை இந்த கம்பெனி செய்துட்டு வர்றாங்க இப்போ இவங்களோட தலைமையில் நம்ம கம்பெனியோட சேர்ந்து இருக்காங்க, அவங்களோட இன்னொரு பாட்டனர் மிஸ் ரேகா என்றதும் அவளும் எழுந்துக் கொண்டாள்.இவங்க இதுக்காக அப்ராடுல போய் ஸ்பெஷலா படிச்சுட்டு வந்து இருக்காங்க இவங்க ரெண்டு பேருடைய வொர்க்ஸ் ரொம்ப யங்கு அண்டு டிரெண்டிங்கா இருக்கும்னு நினைக்கிறேன் விஷ் தெம்" என்று அவன் கைகளைத் தட்ட… சுற்றி இருந்தவர்களும் அவர்கள் இருவரையும் பார்த்து கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.


அத்வதாவிற்கு நடப்பதை எல்லாம் நம்பவே முடியவில்லை.அவள் எப்படித் தன்னை பற்றி சொல்ல… என்று நினைத்திருந்தவளுக்கு அவனின் திடீர் அறிமுகப்படுத்துதலில் திணறிப் போனாள்.


அதன் பிறகு மற்ற விஷயங்களைப் பற்றி பேச நேரம் வேகமாக கடந்தது.அவன் அவளைப் பற்றி சொல்லும் போது மட்டும் தன் பார்வையை செலுத்தியவன் அடுத்து அவள் இருப்பதாக அவன் காட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.


மேலும் சில விவாதிப்புகளுக்குப் பின்னர் மதிய இடைவேளை வர… எல்லோருக்கும் சிறு ஓய்வு கிடைக்கப்பட்டது.


அத்வதாவால் அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.ரேகாவின் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டவள் "ரேகா நாம இந்த ப்ராஜக்டை வேண்டாம்னு சொல்லுவோமா? எனக்கு ரொம்ப பயமாகவும், பதற்றமாகவும் இருக்கு"


"அத்து ஏன் இப்படி பயப்படுறே? அதான் ரூபன் உன்னைப் பற்றி நல்ல விதமாகத் தான் சொல்லி இருக்காங்க நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை அதோட நீ எவ்வளவு பெரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவள், உனக்கு ஏன் பயமாக இருக்கு? தைரியமா இரு.ஏன் ரூபன் இருக்கிறதுனால யோசிக்கிறியா?"


அவள் அப்படிக் கேட்டதும் பதில் சொல்லத் தெரியாமல் ஆமாம் இல்லை என்று ஒரே நேரத்தில் தலையசைத்தாள்.


அவளின் நிலையைப் பார்த்து ரேகா "அத்வதா உன் வீட்டில் உள்ளவங்ககிட்ட திரும்ப பேச நல்ல வாய்ப்பு வந்திருக்கு அதைப் பற்றி மட்டும் யோசி வேற எதைப் பற்றியும் நினைக்காதே ஸ்டே பாஸிட்டிவ், அதோட ரூபன் உன்னை கொடைக்கானல் போன பிறகு தானே உன்னை பார்த்ததா சொன்னாங்க ஆனால் அதுக்கும் ரெண்டு மூணு மாசத்திற்கு முன்னாடியே நாம இந்த டீலிங்க பத்தி பேசினோமே"


"ஆமாம் உண்மை தான், அவன் என்னை எப்போ பார்த்தான்னு தெரியலை,அவனாகச் சொன்னாகத் தெரியும் பார்க்கலாம்" என்றாள்.



இதற்கு மேல் இவளாக இங்கிருந்து தப்ப முடியாது என்று அமைதியாக
இருந்து விட்டாள்.


அடுத்து இன்னும் சில விவாதிப்பிற்கு பின் அன்றைய நாள் கழிந்தது.


மறுநாள் வர வேண்டுமே என்று எண்ணத்தோடு அவள் ரூபனின் அலுவலகத்திற்கு வந்தாள்.


அவள் வந்ததும் ரூபனின் பி.ஏ "மேம் உங்களுக்கு தனி கேபின் ரெடி பண்ணி இருக்கு,நீங்க அங்கே உங்க வேலையை பார்க்கலாம்" என்று அவளை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.


ரூபனின் அறைக்கு எதிரே அவளுடைய கேபின் இருந்தது.அவளை உட்கார வைத்து விட்டு "மேம் நீங்க உங்க வேலையைப் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.


இவள் சுற்றிப் பார்க்க எல்லோரும் அவரவர் வேலையில் மும்மூரமாய் இருந்தனர்.


அப்படியே மெதுவாய் அவன் அறையை பார்க்க அங்கே அவன் இல்லை என்பது தெரிந்தது.


அப்பொழுது அவளுடைய கைப்பேசி அழைக்க… அதை எடுத்து பார்த்தவள் ரேகா என்று பெயர் வர எடுத்துப் பேசினாள்.


"ஹலோ ரேகா சொல்லு"


"எப்படி இருக்கு"


"எல்லாம் அப்படியே ஸ்மூத்தா போகுது"


"அப்படியா! சந்தோஷம் எதாவது வேலைக் கொடுத்து இருக்காங்க?"


"இல்லை என் வேலையைத் தான் பார்க்கச் சொல்லி இருக்காங்க"


"அப்படியா! அப்போ இப்போ உள்ள டிரெண்டிங் என்னன்னு பாரு அதுல நம்ம புது ஐடியாஸ் எது செய்தால் நல்ல இருக்கும்னு கிரியேடிவ் பண்ணி பாரு.உனக்கு எதாவது தோணும்"


"ம்ம்… நீ சொல்ற மாதிரி செய்றேன்" என்று அவள் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.


அதனால் சுற்றி நடப்பதை பற்றி கவனிக்காமல் வேலையில் மும்மூரமாக இருந்தாள்.


அவள் இப்போது வந்துள்ளவைகளைப் பற்றி அவள் பார்த்து அதில் தன்னுடைய யோசனைகளை போட்டு அவள் செய்துக் கொண்டிருந்தாள்.


தவரூபன் உள்ளே வந்தான்.வந்தவன் அவளைப் பார்க்க அவள் கணினியில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றான்.


அடுத்து அவன் தன் வேலைகளில் கவனம் செலுத்தினாலும் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டான்.


அவள் தன்னுடைய வேலையிலேயே மூழ்கி இருந்தாள்.மதிய இடைவேளை வந்து எல்லோரும் சாப்பிட சென்று விட்டனர்.அவள் நேரத்தைப் பார்க்காமல் இருக்க…


இவன் மட்டும் தனியாக தன் வேலைகளை முடித்து விட்டு சாப்பிடும் இடைவேளை நேரம் முடியும் தருவாயில்
சாப்பிடச் செல்லுவதற்காக வெளியே வந்தான்.அவள் அங்கேயே
உட்கார்ந்திருப்பதைப் பார்த்து மெதுவாக அவள் அருகில் வந்து 'என்னச் செய்துக் கொண்டிருக்கிறாள்' என்றெண்ணி அவன் அவளின் கழுத்திற்கு அருகே குனிந்து இவளும் கணினியைப் பார்த்தான்.


அதுவரை வேலையில் மும்மூரமாய் இருந்தவள் தன் கழுத்தின் மேல் சூடான மூச்சுக் காற்று பட்டு உணர்ந்தவள் சட்டென்று திரும்ப குனிந்து இருந்தவனின் அவளின் மெல்லிய உதடுகள் அவனின் முரட்டு கன்னங்களில் அழகாய் மெதுவாய் தொட்டுக் கொண்டது.


அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க… அவனும் திடீரென்று தன் கன்னத்தில் பட்ட குளுமையின் உணர்வினை உணர்ந்துக் கொண்டே அவளைப் பார்க்க அவள் பதற்றத்தோடு வேகமாய் எழுந்துக் கொண்டாள்.


அவனோ எதுவும் நடவாதது போல் நிமிர்ந்து அவளை ஆழமாய் பார்க்க… அவளோ நடந்த நிகழ்வினை என்னவென்று சொல்லத் தெரியாமல் பதற்றத்தோடு அவனை பார்க்காமல் குனிந்தபடி நிற்க…



"வதா… மிஸ் அத்வதா என்னுடைய ஆபிஸ்ல நான் யாரையும் பட்டினி போட்டு வேலை வாங்குறது கிடையாது"

அவளோ நடந்தது ஒன்று அவன் பேசுவது சம்பந்தமில்லாமல் இருப்பதை உணர்ந்து அவள் விழிக்க…


"இப்போ லன்ஞ் டைம் நீங்க சாப்பிட போகமா வேலை பார்த்துட்டு இருக்கீங்க நான் அப்படி எல்லாம் யாரையும் வேலை வாங்குறது கிடையாது அதோடு நீங்க இந்த டைம்மை விட்டுட்டா அடுத்து இன்னொரு டைம் நான் கொடுக்க மாட்டேன்" என்றான்.


அப்பொழுது தான் அவள் தன்னைச் சுற்றி கவனித்தாள் அந்த இடத்தில் யாரும் இல்லை எல்லோரும் சாப்பிட சென்றிருப்பதைத் தான் அவன் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டு "சாரி சார்" என்றாள்.


"ம்ம்… ஓகே போய் உங்க வேலையை முடிச்சுட்டு வந்த அடுத்த வேலையைப் பாருங்க.இன்னைக்கு மட்டும் தான் இந்த எக்ஸ்யூஸ் எல்லாம்" என்று முகத்தை கடினமாய் வைத்துச் சொல்லி விட்டு அவளைக் கடந்துச் சென்றவன் தன் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்றை படர விட்டு மெதுவாய் ஒரு கையால் தன் கன்னத்தை தடவி இன்னொரு கையால் தன் நெஞ்சை தடவிச் சென்றான்.


இவளோ மனதினுள் 'அவன் கன்னத்தை நான் முத்தமிட்டதை நான் உணர்ந்தேனே ஆனால் அவன் எதுவும் நடக்காதது போல் சாப்பிட ஏன் போகலைன்னு கேட்டுட்டு போறான் ஒருவேளை எனக்கு தான் அப்படி பீல் ஆச்சோ?' என்று யோசித்து நின்றிருந்தாள்.


இந்த விஷயம் அவ்வளவு பெரிய விஷயமாகததால் அவள் ரேகாவிடம் சொல்லவில்லை.மறுநாளும் இப்படியே கழிந்தது.


ஒருவாரம் கழிந்த நிலையில் எல்லோரும் அவர்கள் அத்தனை நாட்களில் இனிமேல் எப்படி இதை மேலும் மெருகேற்றுவது என்று அவர்களுக்கான வேலையில் முடித்து இருந்தனர்.


இப்பொழுது அத்வதா முறை வர அவளின் வேலையின் தீவிரத்தைப் பார்த்து அசந்து விட்டனர்.


எந்த வண்ணத்திற்கு என்ன டிசைன் கொடுக்கலாம் அந்த டிசைனின் மேல் மேற்க்கொண்ட வேலைப்பாடுகள் மற்றும் அது என்ன வகை துணிகளில் எந்த டிசைன் கொடுத்தால் அது அழகாய் துணியோடு சேர்ந்து ஒரு புது வித கலெக்ஷனே தந்தது.


அதோடு அதை எந்த மாடலில் தைத்தால் அழகாய் இருக்கும் என்பதற்கான விளக்கங்களும் அதோடு ஒத்துப் போவதாய் உள்ள ஓவியங்கள் என எல்லாமே அசத்தலாய் இருந்தது.அதோடு ஒவ்வொன்றும் ரிச்சாகவும் டிரெண்டிங்காக இருந்தது.மூன்று மாத வேலையை அவள் ஒரே வாரத்தில் முடித்து இருப்பதை பார்த்து எல்லோரும் ஆச்சரியத்தில் அவளை பார்த்தனர்.


தவரூபனே அசந்து விட்டான் அவளின் திறமையைக் கண்டு …


எல்லோரும் ஒன்றாக அவளுக்கு கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.


அவன் எழுந்து "வாழ்த்துக்கள்" என்று சொல்லி கைகளை நீட்ட… அவள் தயங்கி நிற்க… அவன் ம்ம்ம்… என்று கையைப் பார்த்து கண்ணைக் காட்ட.... அவள் தன் கையை அவன் கையோடு கோர்த்து "தாங்க்ஸ்" என்றாள்.


மறுநாள்…


ரூபனின் அலுவலகத்தில் அவளுக்கான வேலையை வந்து அவனது உதவியாளர் பெண் வந்து சொல்லி விட்டுச் செல்வாள்.அன்று வெகு நேரமாகியும் அவள் வராததால் அவளே அவனுடைய அறைக்குச் சென்றாள்.


கதவைத் தட்டிக் கொண்டு நிற்க… அவன் உள்ளே அழைத்தான்.


"சார் இன்னைக்கு என்ன வேலைன்னு இன்னும் சொல்லலை?"


"அது என்னுடைய பி.ஏ இன்னைக்கு வரலை, எனக்கே நிறைய மீட்டிங் இருக்கு நிறைய இடத்துக்கு போகனும் அதைப் பற்றி சொல்லி ஞாபகப்படுத்த ஆள் இல்லை அந்த பைல்ஸ கரெக்ட்டா சொல்லனும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எனக்கு கொஞ்சம் பி.ஏ வாக வொர்க் பண்ணுறியா? உன்னோட வேலைத் தான் எல்லாம் முடிச்சிட்டியா?மற்றவங்களுக்கு அதோட வேலை இருக்கு உன்னால முடியுமா? முடியாதா?" என்று அவன் வெளிப்படையாய் கேட்க....


இவள் முடியாது என்று பதில் சொன்னால் அவனுக்கு வருத்தத்தை தரும் என்று ஒருநாள் தானே என்று சரியென்று ஒத்துக் கொண்டாள்.


"ம்ம்… சரி இன்னைக்கு ஒருநாள் தானே பண்றேன்" என்றாள்.


"ஓகே தாங்க்யூ, இதோ இன்னைக்கான ஷெட்யூல் இதுல இருக்கு அதை சரியாக பார்த்து அரை மணி நேரத்திற்கு முன்பு ஞாபகப்படுத்தி விடு" என்றான்.


அவளும் சரியென்று அவன் கொடுத்த பைலை எடுத்து பார்க்கத் துவங்கினாள்.அதில் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு பிறகு நடக்கும் மீட்டிங்கிற்கான பைலைத் தேடுவதற்காக அவனிடம் "சார் பைல்ஸ் எல்லாம் எங்கே இருக்கும்?"


"அதோ அங்கே இருக்கும்" என்று அவனது அறையின் உள்ளே இருந்த ஒரு சின்ன அறையை காண்பித்தான்.


அவள் அங்கே செல்ல… இவன் தன் மடிக்கணினியில் வேலையில் இருந்தான்.


இவள் அங்கு சென்று அதில் குறிப்பிட்டு இருந்த நம்பர் பைலை தேடி எடுத்து பார்த்தாள்.அதில் இன்னும் சில பைல்கள் இருக்க… அதை தேடி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.


அவள் அந்த பைலை எடுத்து அவனிடம் வந்து கொடுத்தாள்.அவன் அதை வாங்காமல் அவளையே பார்த்தான்.
அவள் ஒன்றும் புரியாமல் அவனிடம் "சார் பைல் வாங்கிக்கோங்க, அடுத்த அரைமணி நேரத்துல மீட்டிங் இருக்கு"


அவன் அவளை புரியாத பார்வை பார்த்தவன் "நான் உன்கிட்ட என்ன உதவி வேணும்னு கேட்டேன்?"

"இன்னைக்கு ஒருநாள் உங்க பி.ஏவாக இருக்கச் சொன்னீங்க"


"என்னோட பி.ஏ. நான் எங்கே போனாலும் அவங்க என்னோட வருவாங்க நான் அட்டன் பண்ணப் போற பைல்ஸ்ஸோட அதனால நீயும் என்கூட வரனும்"


அவன் அப்படிச் சொன்னதும் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவன் இப்படி வெளியே அவனோடு போக வேண்டும் என்று சொல்வான் என்று அவளும் எதிர்ப்பார்க்கவில்லை.இப்பொழுது முகத்தில் அறைந்தார் போல் முடியாது என்று சொல்ல முடியாது என்பதால் அவளும் ஒருநாள் தானே என்று வரேன் என்று ஒத்துக் கொண்டாள்.


"ம்ம்… வரேன் அடுத்த இரண்டு மணிநேர கழித்து உள்ள மீட்டிங்கான பைலையும் எடுத்து வைக்கிறேன்" என்று அடுத்த பைலையும் தேடி எடுக்கச் சென்றாள்.அவள் சென்றதும் அவன் அவள் போவதையே யோசனையோடு பார்த்தான்.


சிறிது நேரத்தில் அவன் கழற்றி வைத்திருந்த மேல் கோட்டை எடுத்து மாட்டி விட்டு… "போலாமா வதா"


அவனது அந்த வதா அழைப்பில் சட்டென்று தடுமாறியவள் அவனைப் பார்க்க… அவனோ என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்க… அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள்.


அவன் முன்னால் செல்ல… இவள் அவனின் பின்னாலேயே சென்றாள்.அவர்கள் இருவரும் சென்றதை அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் பார்த்தனர்.


எப்பொழுதும் காரின் பின்னால் அவன் அமர… அவனின் உதவியாளர் முன்னால் அமருவாள்.ஆனால் இன்று அவன் காரைத் திறந்து பின்னால் உட்கார்ந்துக் கொண்டு "வதா உள்ளே வா" என்றான்.


அவள் முன்னால் உள்ள கதவை திறக்கப் போக… அவன் மறுபடியும் "வதா இங்கே உட்காரு, டிரைவர் முன்னால் உள்ள டோரை க்ளோஸ் பண்ணுங்க" என்று அவளுக்கு அடுத்த வழியே இல்லை என்பது போல் அவன் செய்தான்.


அத்வதாவும் வேறு வழியில்லாமல் பின்னால் வந்து அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.இருவருக்குமிடையில் சிறு இடைவெளியே இருந்தது.அவளோ காரின் கதவோராமாய் ஒட்டி உட்கார்ந்திருந்தாள்.



அவன் நல்ல தாராளமாய் இரண்டு கால்களையும் விரித்தது போல் உட்கார்ந்திருந்தான்.

"வதா கதவு மேல ரொம்ப சாய்ந்துக்காதே! அப்புறம் ஓடுற காரிலிருந்து விழுந்துடப் போறே கொஞ்சம் பக்கத்தில் வந்து உட்காரு"அவன் சிரித்துக் கொண்டே தன் அருகில் உள்ள இடத்தைக் காட்டினான்.


அதற்கு அவள் மெதுவாய் அவனிடம் "சார் என்னை நீங்க அத்வதா கூப்பிடுங்க"

"ஏன் பெயரை ஷார்ட் பண்ணி சொன்னால் பழைய ஞாபகம் வருதா?"


இதற்கு 'என்ன பதில் சொல்ல?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே… அவனே தொடர்ந்தான்.


"நான் என்னோட பி.ஏ.லலிதாவையே லல்லு லல்லு அப்படின்னு ஷார்ட் பண்ணி தான் கூப்படுவேன் இட்ஸ் மை ஹாபி" என்று தோள்களை உலுக்கிச் சொன்னான்.


அவளுக்கு 'ம்ஹீம் லல்லு குல்லுன்னு எனக்கே பதிலா?'என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.


அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்தது.அவன் இறங்கிய பின் அவளும் வண்டியை விட்டு இறங்கினாள்.


அந்த கம்பெனியின் மீட்டிங் அறைக்கு அவன் செல்ல… இவள் வெளியே காத்திருந்தாள்.

நேரம் வேகமாய் செல்ல… இவள் ரேகாவின் அழைபேசிக்கு அழைத்தாள்.அவள் எடுக்கவே இல்லை.இவள் சோர்ந்து போய் தன் கைப்பேசியில் தனது வேலைக்கான மற்ற விஷயங்களைப் பற்றி பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு இருந்தாள்.


தவரூபனின் அலைபேசி அவளிடம் தான் இருந்தது.அந்த அலைபேசி அழைத்தது.இவள் யாரென்றுப் பார்க்க… அதில் மாதேவியின் புகைப்படத்தோடு அவரின் பெயரும் வந்தது.


மாதேவியின் புகைப்படத்தைப் பார்த்ததும் அவள் கண்கள் முழுவதும் நீரை நிரப்பிக் கொண்டது.அந்த புகைப்படத்தில் மாதேவி எலும்பும் தோலுமாய் பார்க்கவே ரொம்ப மோசமாக இருந்தார்.கண்ணிற்கு கீழே கருவளையம் என்று பார்க்கவே முடியாத நிலைமையில் இருந்தார்.



அவரை அப்படி பார்த்ததும் அவளால் தாங்க முடியவில்லை.தன் தாயின் நிலைமைக்கு தன்னை தவிர வேறு யாரு காரணமாக இருக்க முடியும்? என்ற எண்ணமே அவளை இன்னும் சங்கடத்தில் ஆழ்த்தியது.


அலைபேசி முழுவதும் அடித்து முடியும் தருவாயில் சட்டென்று அழைப்பை எடுத்தாள்.அங்கே மறுமுனையில் "ஹலோ ரூபா … ஹலோ" என்று அழைக்க…


அம்மாவின் குரலைக் கேட்டவளோ வாயை மூடி அழுதுக் கொண்டிருந்தாள்."ரூபா நான் பேசுறது கேட்குதா? நீ ஏன் எதுவும் பேசுறது எதுவுமே கேட்கலையே" என்று அவர் கேட்டும் இவள் பதில் சொல்லாமல் அம்மாவின் குரலைக் கேட்டுக் கொண்டே அழுதாள்.


ரூபனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மாதேவி அழைப்பை துண்டித்தார்.


அத்வதா அழுதுக் கொண்டே அழைப்பு நின்று போன அந்த கைப்பேசியிடம் "அம்மா என்னை மன்னிச்சிடுங்க அம்மா நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி உங்களை கஷ்டப்படுத்திட்டு இருக்கேன், இப்போக் கூட உங்ககிட்ட பேச எனக்கு தைரியமே வரலை ஏன்னா நான் உங்ககிட்ட பேசி நீங்க என்னை வெறுத்து விட்டால் என்னால தாங்க முடியாதே" என்று அவள் தனியாய் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தவரூபன் அங்கே தான் நின்றுக் கொண்டிருந்தான்.


அவள் பேசிவிட்டு நிமிர்ந்துப் பார்க்க… அங்கே அவன் நிற்பதைப் பார்த்து பதறியபடி எழுந்தாள்.


அவளை கோபமாய் பார்த்தவன் தன் மனதில் நான்கு வருடங்களாய் உள்ள அவள் மீதான கோபத்தின் தாக்கமாய் "இன்னும் எத்தனை நாளுக்கு அவங்களுக்கு இதே மாதிரி கஷ்டத்தை கொடுக்கலாம்னு இருக்கே"



"அ...து...வந்து" என்று அவள் பதில் தெரியாமல் திணற….


"அவங்களைப் பார்த்தியா அத்வதா என்ன கோலத்துல இருக்காங்கன்னு எப்படி இருந்தவங்க இப்போ என்ன நிலைமையில இருக்காங்கன்னு உனக்கு இன்னுமா புரியலை அந்தளவுக்கு கல் நெஞ்சக்காரியாடி நீ?அத்தையும் மாமாவும் என்ன தப்பு பண்ணாங்கன்னு அவங்களுக்கு இன்னும் நீ தண்டனை கொடுத்துட்டு இருக்கே? அப்படி என்ன தான் வேணும் உனக்கு? சொல்லு" என்று அவன் வார்த்தைகளால் அவளை வதைத்துக் கொண்டிருக்க…


இவளோ அழுதுக் கொண்டே "நிறுத்து ரூபன் என்னை இந்த மாதிரி பேசாதே! நான் அந்தளவுக்கு மோசமானவள் இல்லை".


"என்ன இல்லை? நீ பெற்றவங்களை வதைக்கிறியே அது தப்பில்லை,என்னைப் பார்த்த பிறகும் அவங்க பற்றி ஒரு வார்த்தை எப்படி இருக்காங்கன்னு கேட்க முடியலை உன்னைப் பற்றி நான் பேசக்கூடாதா?"



"ரூபா இப்படி எல்லாம் பேசாதே"


"என்ன பேசாதே? இவ்வளவு சொல்லுறேன்னு சரி வா இப்போவே அரண்மனைக்கு போகலாம்னு உன்னால சொல்ல முடியுதா?"


"எனக்கு பயமா இருக்கு. என்னால அம்மா முகத்தை பார்க்க முடியலை அதோட நான் ஏன் இப்படி செய்தேன்னு கேட்டால் நான் என்ன சொல்வேன்?"


"என்ன பயமா இருக்கா? எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்ட்டா
செய்து இருக்கே அதுக்கு பயப்படலை ஆனால் அத்தையைப் பார்க்க பயமா இருக்கா? அதோடு நீ ஏன் இப்படி பண்ணேன்னு அத்தைக்கிட்ட சொல்லு"


"இல்லை என்னால முடியாது.நான் அதை சொல்ல வேண்டி வந்துடும் தான் நான் அவங்களை பார்க்க வரலை" என்றாள்.


அவனுக்கு இன்னும் கோபம் அதிகமாகி "உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? இன்னும் எத்தனை வருஷம் அவங்க இந்த உலகத்துல இருப்பாங்கன்னு நீ அவங்களுக்கு வேதனையைக் கொடுத்துட்டு இருக்கே அத்வதா, யாரோ எதோ சொன்னாங்கன்னு உன்னை பெற்றவங்களை கஷ்டப்படுத்துறே அது உனக்கு புரியலை இதோ பாட்டியைப் பாரு நீ அந்த அரண்மனையை விட்டு போகும் போது படுக்கைல போனவங்க தான் இன்னும் அவங்களால நார்மலாக மாற முடியலை" என்று அவன் கைப்பேசியில் உள்ள வீடியோவைக் காட்டினான்.


அதை அவள் பார்த்தாள்.எலும்பும் தோலுமாய் படுக்கையில் படுத்துக் கிடந்தார்.எப்படி ராணியாக தாத்தாவின் தக்க துணையாக அவர் நடந்து வரும் பொழுதே அதோடு கூடிய சிரித்துக் கொண்டு நடந்து வருவதைப் பார்த்து இவளே எத்தனை தடவை பாட்டியைப் பார்த்து ரசித்து பார்த்திருக்கிறாள்.அப்படி கம்பீரமாய் பார்த்தவரை இப்படி அவளால் பார்க்க முடியவில்லை"


கைப்பேசியை எடுத்து கையில் திணித்தவன் "பாரு நல்லா பாரு நீ விட்டுச் சென்றவங்களுடைய நிலைமையை பார்த்துக்கொள்.முதல்ல தாத்தாவோட பிரிவு அதை எப்படி சமாளிக்கன்னு யோசிச்சு இருந்தவங்களுக்கு அடுத்த அடியா யார்க்கிட்டயும் சொல்லாமல் போன உன்னை நினைத்தே இப்படி ஆகிட்டாங்க,இப்படித் தான் தாத்தா மற்றவங்களை வேதனைப்படுத்த உனக்கு சொல்லி வளர்த்தாரா?" என்று அவன் ஆத்திரத்தில் அவளது இருபக்க தோள்களைப் பிடித்து உலுக்கினான்.


அவனது அழுத்தமான பிடியை விட அவன் கேட்ட வார்த்தைகளின் வீரியத்தின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதவளாய் அப்படியே கீழே குனிந்தவாறே உட்கார்ந்தவள் அழுதுக் கொண்டே "ரூபா என்னை அரண்மனைக்கு கூடிட்டு போடா,நான் பாட்டி, அப்பா,அம்மாவையும் பார்க்கனும். அவங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் அதை ஏத்துக்கிறேன்" என்று அழுது சிவந்த கண்களோடு தன் ஒற்றைக் கையை தூக்கி நீட்டி அவனிடம் பிச்சைக் கேட்பது போல் கைநீட்ட… அவன் அவள் கையை தன் ஒற்றைக் கையை அவளிள் கையின் மேல் வைத்து அழுத்தமாய் பிடித்து "வா போகலாம்" என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.


அந்த நேரத்தில் அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை.அரண்மனைக்கு சென்றால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியோ, ஆரலியைப் பற்றியோ எதுவுமே அவள் நினைக்கவில்லை.


அவளின் நினைப்பு எல்லாம் அரண்மனைக்குச் சென்று எல்லோரையும் பார்க்க வேண்டும் என்பதே அவளிள் எண்ணமாக இருந்தது.


காரில் தன்னோடு அழைத்துச் சென்று தன்னருகே அவளை நெருக்கமாய் உட்கார வைத்தான்.அவள் பாட்டியின் அந்த வீடியோவையே திரும்பத் திரும்ப போட்டு பார்த்து அழுதாள்.கார் வேகமாக மைசூரை நோக்கிச் சென்றது.

அவன் அவளைப் பார்த்தலிருந்து எப்படியாவது அவளை தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இத்தனை நாட்கள் காத்திருந்தவனுக்கு இன்று அவள் அத்தையின் அழைப்பை பார்த்து அழுதுக் கொண்டு இருந்தவளைக் கண்டதும் எப்படியாவது இன்றே அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற முடிவோடு தான் ரூபன் அவளிடம் இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பேசி தன்னோடு அழைத்துச் செல்கிறான்.


ரதனும் மாதேவியும் பெற்ற பிள்ளையின் பிரிவால் புத்திர சோகத்தாவ் வாடித் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்கு நன்றாக தெரியும் அதனால் தான் இந்த அதிரடி முடிவு எல்லாம்.


அவளையே பார்த்திருந்தவன் மெதுவாய் அவளிடம் "கொஞ்சம் தள்ளி உட்காரு, இதுக்கு மேல என்னைத் தள்ளினால் நான் காரின் கதவை உடைத்து வெளியே தான் போய் விழனும்" என்றான்.



அப்பொழுது தான் அவள் கவனித்தாள்.அவனோடு நெருங்கி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விலகி உட்கார்ந்தாள்.


அதைக் கண்ட அவனோ "கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்கிட்ட தள்ளி உட்காருன்னு சொன்னப்போ அந்தப்பக்கமாய் ஓரமாய் உட்கார்ந்தே இப்போ என்னடான்னா ஒட்டி உறவாடுறே?"


அவன் அவளைப் பார்த்துக் கேட்க... இவளோ இவன் எப்பொழுது எப்படி பேசுறான்னு என்று புரியாமல் அவள் அவனைப் பார்த்தாள்.


(தொடரும்)
 
Top