கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -7

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம்-7


ரதனுக்கு பட்டத்து இளவரசனாக அடுத்த பொறுப்பு தரப்படும் என்று அறிவித்தார் கிருஷ்ண உடையார்.


இந்த அறிவிப்பு இரண்டாவது மகளான தேவிக்கும் அவளது கணவர் திவாகருக்கும் பிடிக்கவில்லை.தேவியைப் பொறுத்தவரை தன் கணவரை பட்டத்து இளவரசராக பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதே அவளுடைய எண்ணம்.


ஆனால் கிருஷ்ண உடையாரைப் பொறுத்தவரை யார் நேர்மையாக இருக்கிறார்களோ? அவர்களுக்கு அடுத்த பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து ரதனைத் தேர்ந்தெடுத்தார்.ஆனால் தேவியைப் பொறுத்தவரை மாதேவியின் மேல் உள்ள அதிக பாசத்தினால் அவளுடைய கணவருக்கு பட்டத்து இளவரசன் கொடுக்கப் பட்டது என்று எண்ணினாள்.


கிருஷ்ண உடையார் தனது பொறுப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ரதனுக்கு தர ஆரம்பித்தார்.


நான்கு வருடம் பிள்ளை பேறு இல்லாமல் இருந்தார் மாதேவி.மருத்துவமனையில் போய் அவரை காண்பித்த பிறகு அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றே மருத்துவர்கள் சொன்னர்.



இரண்டு வருடம் இளையவளான தேவிக்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் ஆண்குழந்தை பிறந்தது.அந்த கர்வத்தினாலேயே அவள் மாதேவியின் கையில் குழந்தையை தரவோ அவள் அங்கிருந்தாலோ எறிந்து விழுவாள்.இதைப் பற்றி மாதேவி தன் தாய் குமாரி ராணியிடம் தெரிவித்தார்.



அவர் வந்து தேவியிடம் பேசியும் எந்த பலனும் இல்லை.பதவியின் ஆசையால் தேவி தன் உடன் பிறந்த சகோதரியே எதிரியாக எண்ணினார்.


கிருஷ்ண உடையாருக்கும் தேவியின் செயல் பிடிக்கவில்லை.ஆனால் அவளின் செயலை தடுக்கவும் முடியவில்லை.


கிருஷ்ண உடையாருக்கு குற்றவுணர்வாக இருந்தது.ஏற்கனவே குடும்பத்திலுள்ள சாபத்தைப் பற்றி அறிந்தும் தன் மருமகனுக்கு பட்டத்து இளவரசர் பட்டம் கொடுத்ததினால் தான் மகள் கருவுற முடியவில்லையோ என நினைந்து வருந்தினார்.


நடந்த விஷயங்களையும் மாதேவி தன் மனதில் உள்ள வலிகளையும் ரதனிடம் தெரிவிக்க இதைப் பற்றி யோசித்த ரதன் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.



எவரால் தங்களுக்கு சாபம் கிடைக்கப்பெற்றதோ? அவரிடமே மன்னிப்புக் கேட்க முடிவெடுத்தார் ரதன்.



அதனால் அலமேலம்மா விழுந்து தற்கொலை செய்துக் கொண்ட இடத்தில் ஒரு சிலையை நிருவி அந்த சிலைக்கு தினமும் வழிபாடு நடத்த முடிவெடுத்தார்.


இதைப் பற்றி கிருஷ்ண உடையாரிடம் தெரிவிக்க அவரும் ஏற்கனவே இருந்த குழப்பத்திற்கு விடையளிக்குமாறு அவர் வழி சொல்ல அதற்கு ஒப்புக் கொண்டார் கிருஷ்ண உடையார்.இவர்கள் சிலையை நிறுவ அடித்தளம் போடும் தருணம் மாதேவி கருவுற்றார்.


மாதேவி எல்லையில்லா ஆனந்தம் கொண்டார்.அலமேலம்மா மனம் இறங்குகிறது என்று இவர்கள் வேலையை துரிதப்படுத்தி சிலையை முடியும் தருவாயில் மாதேவிக்கு மகள் பிறந்தாள்.கிருஷ்ண உடையாரும் குமாரி ராணியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


ரதனும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்.கிருஷ்ண உடையார் பிறந்த குழந்தைக்கு அத்வதா எனப் பெயரிட்டார்.தேவிக்கு பெண் குழந்தை பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.அடுத்த பட்டத்து இளவரசனாக தன் மகனையே இவர்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்று நினைத்தார்.



கோயில் திறப்பு விழாவை அத்வதாவை முன்னிலைப் படுத்தி செய்தனர்.சிலை நிறுவியவுடன் மாதேவி கருவுற்றதால் அத்வதாவிற்கு முன்னிலைப் படுத்தப் பட்டது.வார ஒருமுறையேனும் அத்வதாவை அலமேலம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.அத்வதா பிறந்த மறுவருடம் தேவிக்கு இரண்டாவதாய் பெண் குழந்தை விண்கா பிறந்தாள்.


ரதனுக்கு பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டதால் கிருஷ்ண உடையாரும் குமாரி ராணியும் தன் பேத்தி அத்வதாவை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டனர்.அத்வதாவின் இரண்டாவது வயதில் மாதேவி இரண்டாவதாக கருவுற்று அதில் பெண்குழந்தை ஆரலி பிறந்தாள்.


அதனால் கிருஷ்ண உடையாருடனும் குமாரி ராணியுடனும் அவள் அதிகமாக இருந்தாள்.அதனால் கிருஷ்ண உடையார் தன் எண்ணங்களை அத்வதாவிற்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.அதனால் சிறுவயதிலிருந்தே அத்வதாவிற்கு இரக்க குணம் அதிகமாய் இருந்தது.


தனது வேலையாட்களிடம் கூட அவள் தன்மையாக எடுத்துச் சொல்வாள்.ஆனால் அவளோடு வளர்ந்த மற்ற இரு சகோதரிகளான ஆரலியும், விண்காவும் அரசகுடும்பத்தின் அத்துணை குணநலன்களோடு வளர்ந்தனர்.



தாத்தாவுடன் அதிகமாய் அத்வதா இருக்க விரும்புவாள்.அவளை விட வயது மூத்தவனான பிரகத்தன் இதை எல்லாம் விரும்பவில்லை.தன் தாயோடும் தந்தையோடும் இருக்கும் சகல வசதிகளையும் பயன்படுத்தி இன்பம் காண்பதிலேயே இருந்தான்.


ஆரலியும் விண்காவும் அங்குள்ள பெரிய பணக்கார மாணவர்கள் பயிலும் பள்ளியில் படித்தனர்.ஆனால் அத்வதா அதை மறுத்து சாதாரணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே படித்தாள்.அவளைப் பொறுத்தவரை கடவுளின் படைப்பில் எல்லோரும் ஒன்று தான் இதில் பணக்காரனாக இருப்பதினால் உள்ள வித்தியாசத்தை அவள் விரும்பவில்லை.



இந்த சிறுவயதில் அவளுக்கு இருந்த நல்ல குணங்களால் அங்குள்ள ராஜ வம்சத்தில் உள்ள மற்றவர்களுக்கு அவளது செய்கை பிடிக்கவில்லை.ரதனுக்கு பொறுப்புகள் அதிகமானதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.


அதோடு அத்வதா கிருஷ்ண உடையாரின் கண்காணிப்புக்கு கீழ் வளர்வதால் அவள் நன்றாக வளருவாள் என்று நினத்தார்.


நான்கு வருடம் கழித்து பிறந்த பிள்ளையானதால் மாதேவியும் குமாரி ராணியும் அவளை வெளியூரில் தங்கி படிக்க அனுப்ப விரும்பமால் தங்கள் அருகினிலேயே வைத்தனர்.மற்றபடி வீட்டில் அவளுக்கு பல மொழிகளைப் பற்றி படிக்கவும் அது தவிர அவளுக்கு விருப்பமான படிப்பைத் தவிர மற்ற திறனையும் வீட்டிலிருந்தே பயில வைத்தனர்.

கிருஷ்ண உடையாரின் பேச்சை மற்ற குழந்தைகள் விரும்புவதில்லை. அவர் அழைத்தாலும் அவரின் பேச்சை கேட்பதை விட விளையாட்டிலோ வேற எதாவது செய்வதிலேயே நேரத்தை செலவிட நினைத்தனர்.



பன்னிரெண்டு வயதாக இருக்கும் அத்வதா வாரத்தின் இறுதி நாளில் அலமேலம்மா கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் பொழுது அங்கே அவளுக்கு விருப்பமான அறையில் அவள் வரைந்து பாதியில் விட்டுச் சென்ற ஓவியத்தை அங்கே அவளை விட வயதில் மூத்தவன் ஒருவன் இவள் வரைந்த படத்தை உட்கார்ந்து வரைந்து முடிக்கும் தருவாயில் இருப்பதைக் கண்டு வேகமாய் அவனுக்கு அருகில் ஓடியவள்


"ஏய் எழுந்திரு யார் நீ? என்னோட ரூம்ல இருக்க? என் ஓவியத்தை எப்படி நீ வரைவே? எவ்வளவு தைரியம் உனக்கு? "


அவனோ அவளை மேலும் கீழும் பார்த்தபடி "ஓவியத்தை வரைவதற்கு தைரியம் தேவையில்லை வரைய தெரிஞ்சா போதுமே"என்று அவன் சிரித்துக் கொண்டு சொல்ல…


இவளோ அவனை முறைத்துக் கொண்டு "தாத்தா … அம்மா … பாட்டி யாராவது வாங்க இங்கே வாங்க" என்று அவள் கதற....


என்னவென்று மூவரும் அவள் அறைக்கு வேகமாய் வந்தனர்.தாத்தா அத்வதா அருகில் வந்து "என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி சத்தம் போடுற? "


"தாத்தா இங்கே பாருங்க இவன் யாருன்னே தெரியலை என்னோட ஓவியத்தை அவன் வரைஞ்சு முடிச்சுட்டான்"என்று அழாத குறையாக அவள் சொல்ல…


கிருஷ்ண உடையார் அவன் வரைந்த படத்தின் நேர்த்தியைக் கண்டவர் "நல்லா அழகா வரைஞ்சு இருக்கிறானே" என்றார்.



"தா...த்தா… நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன சொல்லுறீங்க?"


அம்மாவும் பாட்டியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றனர்.



அவளைப் பார்த்து சிரித்தவர் "அத்வதா இவன் யாரோ இல்ல உன் அத்தைப் பையன் தவரூபன் ஊர்ல இருந்து இன்னைக்குத் தான் வந்து இருக்கான் அவனுக்கு தெரியாது புதுசு ஓவியம் தானே வரைந்தான் அதுக்காக நீ இவ்வளவு கோபம் கொள்வது சரியில்லைமா"


அவர் அப்படி சொன்னதும் அவனோ அவளைப் பார்த்து வாய்மூடி சிரித்தான்.அதைக் கண்டதும் அவளுக்கு அழுகை வந்ததை அடக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே வேகமாக ஓடினாள்.


தாத்தா "அத்வதா" என்று அழைத்தும் அவள் எதுவும் கேட்காமல் வெளியே ஓடினாள்.


தாத்தா அவனருகில் வந்து "தவரூபா ரொம்ப அழகா வரைஞ்சு இருக்கே என் பேத்தி உன் படத்தோட நேர்த்தியைப் பார்த்து கண்டிப்பா வியந்து பாராட்டி இருப்பாள். ஆனால் இன்னைக்கு என்னவோ சரியில்லை போல" என்று அவன் தோளை தட்டி விட்டுச் சென்றார்.


தவரூபனுக்கு அத்வதாவை தொல்லை செய்வதில் சந்தோஷம் இருப்பதாய் நினைத்தான்.அதனால் அவளை விடக் கூடாது என்று விரும்பினான்.


மதியம் வேளையில் கோட்டையின் மேல் தளத்தில் போய் அமர்ந்தவள் சாப்பிட கூட கீழே வரவில்லை.அவள் சாப்பிட வரவில்லை என்பது அங்குள்ள அனைவருக்கும் தெரிந்தது.


கிருஷ்ண உடையார் எல்லோரையும் சாப்பிட சொல்லி விட்டு அவர் மேல்தளத்தில் உள்ள தனது பேத்தியை காணச் சென்றார்.


அதைப் பார்த்த மாதேவி "அப்பா அவ சாப்பிட வரலைன்னு நீங்க ஏன் மேலே போறீங்க? பசித்தால் அவளே கீழே வருவாள்"


"இல்லைம்மா நானே போய் கூடிட்டு வரேன்" என்று சென்றார்.


அவள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க… அங்கே வந்த கிருஷ்ண உடையார் அவளுக்கு அருகில் உட்கார்ந்தார்.அவர் அருகில் வந்து உட்கார்ந்ததை கவனித்தும் கவனிக்காமல் அவள் உட்கார்ந்து இருக்க…



"அத்வதா அத்வதா" என்றழைக்க…


அவளோ அமைதியாக இருந்தாள்.


"தாத்தா மேல கோபமா இருக்கியா"


அதே அமைதி தொடர்ந்தது.


"என் பேத்தி நான் என்ன சொன்னாலும் கேட்பான்னு நினைச்சேன்.ஆனால் அதை எல்லாம் இல்லைன்னு ஆக்கிடுவே போல இருக்கே எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என்று அவர் தலை கவிழ்ந்து பார்க்காதவள் அப்பொழுது பார்க்க…


"தாத்தா எனக்காக நீங்க ஏன் தலை கவிழ்ந்து இருக்கீங்க?"


"வேற என்னம்மா செய்ய சொல்லுற? நான் சொன்ன மாதிரி எப்போ நீ இருக்கலையோ? அப்போ எல்லாம் எனக்கு தலை குனிவு தான்"


"ஏன் தாத்தா இப்படி சொல்லுறீங்க?"


"வேற என்னம்மா நீ? நான் உன்கிட்ட எப்பவும் என்னச் சொல்வேன்? உன்னுடைய பொருளை மத்தவங்களுக்கு பகிர்ந்துக்கனும் தானே சொல்லி இருக்கேன்"

"ஆமாம் தாத்தா.ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிச்சு நான் வரைஞ்ச படம் ஆச்சே"


"ஆமாம் அத்வதா அதைத் தான் நானும் சொல்றேன்.உனக்கு எது விருப்பமோ அதை மற்றவங்களுக்கு பகிர்ந்தளிப்பதில் தான் உண்மையான பகிர்ந்தளிப்பே இருக்கு, அதை விட்டுட்டு உனக்கு தேவையில்லாததை மற்றவங்ககிட்ட பகிர்வது பெரிய விஷயம் இல்லை" என்று அவர் சொன்ன பிறகு தான் அத்வதாவிற்கு தான் செய்தது தவறு எனப் புரிய உடனே தாத்தாவைக் கட்டிக் கொண்டவள் அவரிடம்


"சாரி தாத்தா இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்றாள்.


அன்பாய் ஆரத் தழுவிக் கொண்டவர் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டவர் "என்னோட அத்வதா எப்பவும் நான் பெருமைப்படுறமாதிரி தான் இருப்பாள்"என்றார்.


"கண்டிப்பா தாத்தா நீங்க சொல்ற மாதிரி தான் நான் எப்பவும் இருப்பேன்" என்றாள்.


"வாம்மா சாப்பிட போகலாம்" என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்றார்.


அங்கே யாரும் சாப்பிடமால் அவருக்காக காத்திருந்தனர்.


அதைக் கண்ட கிருஷ்ண உடையார் "ஏன் இன்னும் யாரும் சாப்பிடலை? "


"அப்பா நீங்க சாப்பாடு வேண்டாம்னு போன பிறகு எங்களுக்கு எப்படி சாப்பிட பிடிக்கும் அதான் உங்க பேத்தியை நீங்க சமாதானம் படுத்திட்டு வர்ற வரைக்கும் நாங்க காத்திருந்தோம்" என்றார்.



"ஆமாம் மாமா வாங்க ஒன்றாக சாப்பிடலாம்" என்றார் தவரூபனின் தாய்.


"சரி வாங்க சாப்பிடலாம்" என்று கிருஷ்ண உடையார் அமர அவருக்கு அருகில் அத்வதாவையும் அமர வைத்து அவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டார்.


இதை எல்லாம் முறைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த தவரூபன் 'இந்த அம்மா வந்த பிறகு தான் நாங்க எல்லோரும் சாப்பிடனுமா? ரொம்ப ஓவரா இருக்கு'என்று நினைத்துக் கொண்டு அவன் எழும் பொழுது அவனுடைய அம்மா அவனுடைய கையைப் பிடித்து கண்களால் சாப்பிடு என்று காட்ட….


மனதிலோ "இரு உன்னை இன்னைக்கு என்ன செய்றேன்னு பாரு" என்று மனதில் கருவிக் கொண்டு அமைதியாய் சாப்பிட்டு விட்டு எழுந்தான்.



சிறிது நேரம் கழித்து தோட்டத்திற்கு போகும் வழியில் அத்வதா தன் நீண்ட பின்னலிட்ட தலைமுடியை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டு துள்ளியபடி நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது அவள் இந்தப்பக்கமாகத் தான் வருவாள் என்று காத்து தூண்களில் ஓரமாய் காத்திருந்த தவரூபன் அவள் வந்ததும் பின்னால் நின்று ஆடிக் கொண்டிருந்த அவள் மூடியைப் பிடித்து இழுத்தான்.


இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அத்வதா வலியில் "அம்மா வலிக்குது" என்று தன் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்க்க…


அங்கே அவள் பின்னலை தன் கையில் பிடித்து சுற்றி வைத்துக் கொண்டு நின்றிருந்தான் தவரூபன்.


அவனைக் கண்டதும் "டேய் விடுடா எனக்கு வலிக்குது"


"உனக்கு வலிக்குதுன்னா நான் விட்டுவிடனுமா? "


"ஆஆஆஆ…. வலிக்குதுடா விடு எதுக்கு என்னை இப்போ தொல்லை பண்ணுற"


"நீ பெரிய மகாராணியா? நீ வர்ற வரைக்கும் நாங்க எல்லோரும் சாப்பிடாமல் வெயிட் பண்ணனுமா? ரொம்ப ஓவரா இல்ல"


"டேய் வலிக்குதுடா விடுடா நான் யாரையும் சாப்பிட வேண்டாம் சொல்லை"

"ஏய் என்ன? நீ சாப்பிட வராததுனாலத் தான் தாத்தா உன்னை தேடி மேலே வந்தாங்க தாத்தா சாப்பிடாமல் வந்ததுனாலத் தான் யாரும் சாப்பிடலை .அது சரி இது வரைக்கும் என்னை எத்தனை தடவைடா போட்டு பேசினே? ஒழுங்கா மரியாதையா சார் என்னை மன்னிச்சு விட்டுட்டுங்கன்னு கெஞ்சிக் கேளு உன்னை விடுறேன்" என்று அவன் சொல்ல…



அதுவரை பொறுமையாய் இருந்தவள் பொறுமையிழந்து கோபமாய் "உங்களை சாருன்னு தானே சொல்லனும் கொஞ்சம் பிடிச்சி இருக்கிற முடியை லேசா விடுங்க நான் உங்க பக்கம் திரும்பி சாரி சார்னு சொல்றேன் சரியா" என்று அவள் சொன்னதும் அவன் தலையை முடியின் பிடியை லேசாக விட்டதும் அவன் புறமாக திரும்பி அவன் சட்டையைப் பிடித்து இழுக்க..


இதை சற்றும் எதிர்பாராத தவரூபன் அவளைப் பிடித்து இழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் இழுக்க… கடைசியில் நிலைதடுமாறி தவரூபன் கீழே விழ அவனுக்கு மேல் இவள் விழுந்தாள்.


அவன் மேல் விழுந்ததும் இது தான் சமயம் என்று அவள் அவன் தலை முடியைப் பிடித்து இழுக்க அவனோ வலி தாங்காமல் ஜடையை விட்டு அவள் தலையை பிடிக்க இருவரும் பிடியை விடுவதாக இல்லை.இருவருக்கும் வலி தாங்க முடியாமல் அழுதுக் கொண்டே தங்கள் பிடியை விடாமல் பிடித்துக் கொண்டனர்.



அவன் அவளைப் பிடித்து உருட்டி கீழே தள்ளி அவள் மேலே உட்கார்ந்தும் அவள் அவன் தலைமுடியை விடுவதாய் இல்லை.


"ஏய் தலையை விடுடி"


"முடியாதுடா"

"முடியாதா நான் உன் மேல உட்கார்ந்து இருக்கேன் என் வெயிட் முழுசும் இறக்குனேன்னு வை நீ அவ்வளவு தான் சட்னி ஆயிடுவே"


"டேய் நான் சட்னி ஆக மாட்டேன். உன் முடியைப் பிடிச்சு நான் இழுக்கிறதுல இன்னைக்கு உன் முன்னால உள்ள முடி அவ்வளவும் பிடுங்கி என் கையில் வந்துச்சுன்னா நீ சொட்டை ஆயிடுவ டா" என்று அவள் கத்த…


அவனுக்கோ அவமானமாய் போக அவள் மேல் நல்ல சட்டமாய் அமர்ந்துக் கொண்டான்.

அவளுக்கு வலித்தும் வலிக்காத மாதிரி கத்தாமல் இருந்தாள்.


கடைசியில் இவர்கள் இருவரின் சண்டையைப் பார்த்த தோட்டக்காரன் மாதேவியிடமும் குமாரி ராணியிடம் வந்து சொல்ல… அவர்கள் அருகில் இருந்த தவரூபனின் தாய் பிருந்தா அவர்களும் கேட்டு மூவரும் அங்கே ஓடி வந்தனர்.



இவர்கள் இருவரும் சண்டைப் போடுவதைப் பார்த்த மூவருக்கும் சிரிப்பு தாளாமல் அவர்கள் அருகில் வந்து இருவரையும் பிடித்து இழுத்து பிரித்து விட்டனர்.


தலை முடி எல்லாம் கலைந்து இருவரும் மண்ணில் உருண்டு அழுக்கு படிந்து சின்னச் சிறுவர்கள் போல் அடித்துக் கொண்டு எழுந்தனர்.


அவர்களைப் பார்த்ததும் மாதேவி அத்வதாவிடம் "என்ன அத்வதா நீ சின்னப் பசங்க மாதிரி மண்ணுல உருண்டு அவன் கூட சண்டைப் போட்டுட்டு இருக்கே மன்னிப்பு கேளு"


"அம்மா அவன் தான் என்னை முதல்ல வம்புக்கு இழுத்தான்"என்று பதில் பேச….


பிருந்தா தவரூபனிடம் "ரூபா நீ பெரிய பையன் தானே சின்னப் பொண்ணுக்கிட்டே இப்படி மண்ணுல உருண்டு பிரண்டு சண்டைப் போடுற இது சரியில்லைப்பா அவகிட்ட மன்னிப்பு கேளு" என்றதும்


"முடியாது அம்மா அவ என்னைப் பார்த்து டா போட்டு பேசுறா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று அவன் கோபமாய் முகத்தை திருப்பிக் கொள்ள…


மாதேவி அத்வதாவிடம் "அத்வதா நீ இப்போ தவரூபன்கிட்டே மன்னிப்பு கேட்கிறியா? இல்லை நான் தாத்தாவும் அப்பாவும் வந்தவுடன் சொல்லட்டுமா? " என்று அவர் மிரட்ட…. அவளோ அவனையே முறைத்துக் கொண்டு இருந்தாள்.


பிருந்தா மகனிடம் "ரூபா ப்ளீஸ்டா அம்மாக்காக ப்ளீஸ்" எனக் கெஞ்ச … அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் அவனும் அம்மாவின் மிரட்டலுக்கு பயந்து அவளும் சரியென்று ஒத்துக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் "சாரி" என்றனர்.


அதைப் பார்த்த குமாரி ராணி "ம்ம்ம்…. ரெண்டுபேரும் எப்படி ஒரே நேரத்துல கரெக்டா முடிவு பண்ணி பேசுறீங்க? "என்று கிண்டலாய் சிரித்துக் கொண்டுச் சொல்ல…


"இவ கூட நானு" என்று அவன் திருப்பிக் கொள்ள…


"வ்வாவே இவன் கூட முடியாதுப்பா" என்று அவள் தலையை திருப்பிக் கொள்ள ….


பெரியவர்களுக்கு இவர்கள் இருவரின் சண்டையும் விளையாட்டாய் தெரிந்து சிரித்தனர்.


குமாரி ராணி இவர்களிடம் "சரி ரெண்டு பேரும் போய் குளிச்சு டிரெஸ்ஸை மாத்திட்டு வாங்க திரும்ப பேசலாம்" என்றார்.


'இனிமேல் இவன் கண்ணு முன்னாடி வரக் கூடாது' என்று அவளும்


'இனிமேல் இந்த ராட்சசியை எவன் பார்ப்பான்'என்றும் அவனும் நினைத்துக் கொண்டு செல்ல…


இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்கள் நினைத்த மாதிரி உடனே நடக்கவே இல்லை.


(தொடரும்)
 

Mohanapriya M

Well-known member
😂oh ho ithu chinna vayasulaiye arampitchatha 😂 apo konjam kastam tan 🤣 enaku ennoda palaya memories elam vanthu poguthu adichu urundu mannula porandathu elam😍
 
Top