கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே!!! அத்தியாயம் - 11

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 11

“ஒரு அழகான பெண்ணை... அழகாகக் காட்டுவது என்னோட வேலை இல்லை அவந்திகா! ஒரு சாதாரணப் பெண்ணையும்... பேரழகியாகக் காட்டுவது தான் என்னைப் போன்ற டிசைனர்களோட வேலை! நீங்க சொன்ன அந்த ‘லக்’ என் வீட்டு வாசல் கதவைத் தட்ட... நான் மூன்று மாதம், பதினெட்டு மணிநேரம் உழைக்க வேண்டியிருந்தது!” என்றாள் அடிமுட்டாளுக்கு விளக்குவது போல.


ஏதோ கோவமாகப் பதில் பேச அவந்திகா வாயைத் திறக்க, அவளை முந்திக்கொண்ட சூர்யா “இந்தப் பெண்கள் இருக்காங்களே! அப்பப்பா... எங்க ஒண்ணா கூடினாலும்... அவங்க பேச்சும், மூச்சும்... நகை, புடவை, அழகு இதைத் தவிர வேற எதைப்பற்றியும் இருக்காது!” என்று அலுத்த குரலில் புலம்பினான்.


“ஜான் கீட்ஸ் கூட... ‘அ திங் ஆப் ப்யூட்டி இஸ் அ ஜாய் பார் எவர்’ன்னு சொல்லியிருக்கார். அப்பேற்பட்ட கவிஞரே, அழகு எப்பொழுதும் ஆனந்தத்தைக் கொடுக்கும் என்று சொல்லும்போது... அந்த அழகை மேம்படுத்த உதவும் நகையையும், உடையையும் பற்றிப் பேசினால் என்ன தப்பு?” என்று எப்பொழுதும் போல் சூர்யாவிடம் துடுக்காகப் பேசினாள் குழலி.


“இந்த... இந்த நாளுக்காகத் தான் நாங்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்!” என்று படபடவென்று கை தட்டிய சரத், “நம்ம தில்லாலங்கடி எஸ்.பியையே வாயடைக்க வைத்த கார்குழலிக்கு... பிக் ரௌண்ட் ஆப் அப்ளாஸ் ப்ளீஸ்!” என்று உரைக்க, அனைவரும் சிரிப்புடன் கரகோஷம் எழுப்பினர்.


அது அடங்குவதற்குள், “அது மட்டுமா? நம்ம க்ரோனிக் பேச்சுலர் எஸ்.பியைத் தலைகுப்புற காதலில் விழ வைத்த கார்குழலிக்கு... எல்லோருமா ஒரு ‘ஓ’ போடுங்க!” என்று பூஜா ஒத்து ஊத... அங்கே எழுந்த ‘ஓகோ’ ஒலியின் சத்தம் காதைப் பிளந்தது.


புதியவள் என்ற இறுக்கம் முற்றிலும் தளர, அதன்பின் ஆளாளுக்கு ஏதேதோ பேச... பார்ட்டி களை கட்டத் தொடங்கியது.


இதில் ஏதும் பங்கேற்காது, தன் பார்ட்டியிலேயே சற்று அமைதியாகத் தள்ளி நின்று, எல்லோரும் புகழ்ந்து தள்ளும் அந்த ஆன்டிக் நகையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான் சூர்யா.


நகையைப் பற்றிப் பெரிதாக ஏதும் அறியாத அவன் கண்களுக்கே, அந்த டிசைன் அழகாக இருப்பதாகத் தான் தோன்றியது. ஆனால் அது நகையின் அழகா, இல்லை அதை அணிந்திருப்பவளின் தங்க கழுத்தின் வனப்பினால் வந்ததா என்றுதான் புரியவில்லை. அதுவும் அந்தக் கருநீல சேலையில், கழுத்தில் கிடந்த அந்த மாலை... அவளின் சுவாசிப்புக்கு ஏற்றவாறு ஏறி இறங்க... அவனால் பார்வையை அங்கிருந்து அகற்ற முடியவில்லை.


“என்ன மச்சான்... நாங்க எப்படா இடத்தைக் காலி பண்ணுவோம்னு இருக்கா? இல்லை, எங்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள உத்தேசித்து இருக்கிறாயா?” என்று கண்சிமிட்டிய சரத், சூர்யாவின் காதில் கிசுகிசுத்தான்.


தலையைப் பலமாக ஆட்டி நடப்பிற்குத் திரும்பிய சூர்யா, எதுவும் பேசாது தன் கையிலிருந்த மதுவை ஒரே வாயில் தொண்டை எரிய உள்ளே தள்ள... குழலியின் சிரிப்பு இனிய நாதமாய் அவன் காதில் விழுந்தது.


மனதில் மூண்ட எரிச்சலுடன் காலியான மதுக்கிண்ணத்தை வைத்துவிட்டு, அடுத்ததைக் கையில் எடுத்தான். எப்பொழுதுமே பெயருக்காகக் குடிக்கும் அவன், இன்று தன் அளவை மீறிக் குடிப்பதை உணர்ந்த போதும் கூட, ‘இந்த மாயமோகினி... என்னைக் குடிகாரனாக ஆக்காமல் விடமாட்டாள் போலயே?” என்று அவளை மனதில் சபித்துக்கொண்டே, சரத்திடம் திரும்பி பிஸினஸ் பேச... அவனை ஒட்டியபடியே அவந்திகாவும் அதில் சேர்ந்து நின்றாள்.


பஃபே முறை என்பதால் கூட்டம் மெல்ல கலைந்து, உணவு உண்ண ஆயத்தமாக... ‘வீட்டு மனிதனாக அனைவரையும் உபசரிப்பதை விட்டுவிட்டு... இவன் எங்கே போய்த் தொலைந்தான்?’ என்று குழலியின் கண்கள் சூர்யாவைத் தேடின.


சூர்யாவோ... இங்கே ஒருத்தி இருக்கிறாள் என்ற பிரக்ஞையே இல்லாமல், அவந்திகாவுடன் பேசியபடி, அவனுக்கும் அவளுக்குமாகப் பரிமாறிக் கொண்டிருப்பதைக் காண... பழுக்கக் காய்ச்சிய கம்பியை நெஞ்சில் சொருகியது போல் உணர... அதன் வலி தாங்காது, கண்கள் கலங்க துடிதுடித்துப் போனாள் குழலி.


“குழலி! ஏன் அங்கேயே நின்றுவிட்டாய்... சாப்பிட வரவில்லை?” என்று முன்னால் சென்ற பூஜா திரும்பி நின்று அழைத்த பின்னர் தான், தன்னிலை மறந்து ஆணி அடித்தது போல் நின்று விட்டதையே உணர்ந்தாள்.


‘தான் நிற்கிறோமா? இல்லை நடக்கிறோமா என்றே அறியாத அவல நிலைக்குத் தன்னைத் தள்ளிவிட்டானே. எவ்வளவு கேவலம்!’ என நொடிப்பொழுதில் அந்த வலியெல்லாம் கோபமாக மாற, இரண்டு நிமிடம் முன் நீர் தீரண்ட அதே கண்களில் இப்பொழுது கோபத்தீ கனன்றது.


எல்லோரும் “ஆகா... ஓகோ...” என்று புகழ்ந்து தள்ளிய உணவுப்பண்டங்கள் எல்லாம், இவளுக்குக் கரித்துண்டங்களாய் தொண்டையில் சிக்க... மருந்தை விழுங்குவதைப் போல் தண்ணீர் குடித்து உள்ளே இறக்கினாள். இவள் இப்படிப் பகீரத பிரயத்தனம் செய்து உணவை விழுங்கித் தொலைக்க, ஆனால் அவனோ ரசித்துப் புசிப்பதைக் காண குமட்டிக்கொண்டு வந்தது.


‘இவனால் மட்டும் தான்... இப்படி நடந்து கொள்ள முடியுமா? தன்னால் நடந்து கொள்ள முடியாதா?’ என்று ரோஷம் பொத்துக்கொண்டு வர நிமிர்ந்து நின்றாள்.


அந்த நொடியிருந்து தப்பித் தவறி கூட அவன் இருந்த பக்கம் தன் பார்வையைத் திருப்பவில்லை. திருப்பாதது மட்டுமில்லை, வீம்பிற்காக வந்திருந்தவர்களோடும் மிகுந்த உற்சாகத்தோடு பழகினாள்.


தனக்கும், குழலிக்கும் கிடைத்த சிறு தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட பூஜா, “கார்குழலி! நான் அதிகப் பிரசங்கித்தனமா பேசுகிறேன்னு நினைத்துக் கொள்ளாதே! ஆனால் இதைச் சொல்லாமல் இருந்தால்... என்னால் நிம்மதியாகத் தூங்க முடியாது!” என்று பீடிகையோடு ஆரம்பித்தாள்.


“முடிந்தளவு நான் சொல்வதைத் திறந்த மனதோடு கேள் குழலி! சரத், நான், மற்றும் இங்கே வந்திருக்கிறவங்க பலரும்... ஊட்டி ரெஸிடென்ஷியல் ஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள். எஸ்.பியுடன் நெடுநாட்களா பழகியவர்கள்!” என்று தயங்கியபடி சொன்னவள், பின் எதையோ சொல்ல முடியாமல் மென்று விழுங்குவது புரிந்தது.


“என்ன விஷயம் பூஜா? தயங்காமல் சொல்லுங்க!”


“ஒன்று புரிந்து கொள் குழலி! நீங்க பிரிந்திருக்கும் போதே... வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத எஸ்.பியா.... இப்போது உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்த பின் பார்க்க போகிறார்? நீங்க எந்தக் காரணத்திற்காகப் பிரிந்தீங்களோ... எனக்குத் தெரியாது! ஆனால் இப்போ ஒன்று சேர்ந்து விட்டீங்க. இனி உங்களுக்குள் எக்காரணத்தைக் கொண்டும் பிரிவு வரவே கூடாது!”


தன்னை சூர்யாவின் முன்னாள் காதலி என்று தவறாக யூகித்துப் பேசுகிறாள் என்று புரிய, ‘அது... நான் இல்லை!’ என்று மறுக்க வாயைத் திறந்தாள் குழலி.


“குறிப்பாக... அவந்திகா விஷயத்தைப் பெரிசா எடுத்துக்காதே!”


“என்னது... அவந்திகாவா?” என்று திடுக்கிட்டுப் பார்த்தாள் குழலி.


“இன்னும் எஸ்.பி. அவளைப் பற்றி உன்னிடம் சொல்லலையா? அவள் என்னுடைய ஒன்றுவிட்ட நாத்தனார். சரத், எஸ்.பியோட வெரி க்ளோஸ் ப்ரெண்டுன்னு நான் சொல்லாமல் உனக்கே தெரியும்! சரத்தின் நட்புகாக மட்டும் தான்... எஸ்.பி. இவ்வளவு தூரம் அவளிடம் பொறுத்துப் போகிறார். அவளுக்கு எஸ்.பின்னா சின்ன வயதிலிருந்தே ஒரே க்ரேஸ்! இதில் ஆச்சரியம் என்னன்னா... எஸ்.பி அதிகம் பேசும் ரகம் இல்லை. இருந்தும், அந்த அழுத்தம் கலந்த திமிர் தான்... பெண்களை இழுக்குதுன்னு கண்கூடாகப் பார்த்தவள் நான்!” என்று கூறி லேசாகப் புன்னகைத்தவள், மீண்டும் சொல்லத் தொடங்கினாள்.


“அவந்திகா தனக்குக் கிடைத்த வேலைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, ஒரே பிடியாய் நின்று... அவரோட செகரட்டரியாக வேலைக்குச் சேர்ந்தாள். எஸ்.பியின் குணத்தைப் பற்றிச் சரியா தெரியாமல்... அவர் தன்னைத் தினமும் பார்த்தால்... தன் அழகில் மயங்கிவிடுவார் என்று நினைத்திருப்பாள் போல! இப்படித் திடுதிப்புன்னு உன்னை மணம் செய்து கொண்டு வந்து நிற்கவும்... அவளால் ஜீரணிக்க முடியவில்லை! அதனால் தான் அப்படி நடந்து கொண்டாள். முற்றபடி, அவள் ஒன்றும் அவ்வளவு மோசமானவள் இல்லை! அப்படி இருந்திருந்தால்... சரத்தே விட்டிருக்க மாட்டார். ஏன்னா... எஸ்.பியின் சந்தோஷம் தான் எங்களுக்கு ரொம்ப... ரொம்ப முக்கியம்!


கூடிய விரைவில் அவள் இடம் எதுவென்று அவளே புரிந்து கொள்வாள்! அப்படியில்லைன்னா கூட... எஸ்.பியே அவளுக்குப் புரிய வைத்து விடுவார்! அதற்குள் அவள் சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது நடந்து கொண்டு... அதனால் உங்கள் இருவருக்கும் ஏதாவது மனஸ்தாபம் வந்துவிடக் கூடாது. இதுவரை அவள் ஏதாவது அப்படி நடந்திருந்தால்... அவள் சார்பில் நான் மன்னிப்பு...”


இவ்வளவு தூரம் பூஜா பேசிய பின், ஏதோ சொல்லிச் சமாளிக்க வேண்டுமே என்று “விடுங்கள் பூஜா... இதற்குப் போய் மன்னிப்பு... மத்தாப்பூன்னு... ஏதேதோ வார்த்தையெல்லாம் சொல்லிப் பயமுறுத்துறீங்களே? என் சூர்யாவைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்று சொல்லி வைக்க, அது இன்னொரு மண்டைக் குடைச்சலை அவளுக்குத் தர வித்தாக அமைந்துவிட்டது.


“இது... இது போதும் குழலி! இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகு... ஹீ டிசர்வ்ட் டூ பீ ஹேப்பி! அதை உன்னால் மட்டும் தான் கொடுக்க முடியும்!” என்று உள்ளார்ந்த அன்போடு, உணர்ச்சிப்பூர்வமாக லேசாகத் தொண்டை கமற பேசினாள் பூஜா.


மயக்கம் வராத குறை குழலிக்கு... இதற்குச் சத்தியமாக என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.


“நான் பார்த்துக்கொள்கிறேன் பூஜா!” என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னவள், லேசாக அவளது கையை அழுத்திவிட்டு வேறு பேச்சிற்குத் திசை திருப்பினாள் குழலி.


‘இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகு... ஹீ டிசர்வ்ர்ட் டூ பீ ஹேப்பி...ன்னா என்ன அர்த்தம்? ஏன் இப்படிச் சொன்னாள்? அப்படி என்ன கஷ்டப்பட்டு விட்டான்?’ என்று ஆயிரம் கேள்விகள் பூதாகரமாய் மனதில் எழ, மண்டையைக் குடைந்தது அவளுக்கு.


பத்தாதற்கு அவன் மேல் உள்ள கடுப்பில், வீம்பிற்காக எல்லோரிடமும் செயற்கையாகப் பேசிச் சிரித்தாலோ என்னவோ... உடம்பிலிருந்த ஒவ்வொரு அணுவும் வலிக்க, தொண்டை காந்தியது. இதுவும் போதாதென்று, தலைகுள்ளே யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்க... ‘எப்பொழுதுடா இந்த விழா முடியும்?’ என்று ஏங்கத் தொடங்கினாள் குழலி.


ஒருவழியாக ஒரு மணி வாக்கில் விருந்தினர் அனைவரும் கிளம்பிச் செல்ல... ஹோட்டல் ஆட்களும் தங்களது வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப, மேலும் ஓர் அரை மணிநேரம் சென்றது.


“ஹப்பா!” என்று மூச்சு விட்டபடி, தலைவலியுடன் ஆயாசமாகப் படுக்க தன் அறைக்கு விழைய யத்தனித்தவளை, “நில்!’’ என்ற அதிகாரமான குரல் தடுத்து நிறுத்தியது.


அமைதியாகத் திரும்பி, “என்ன?” என்றாள் அவனைப் போல் ஒற்றைச் சொல்லாக.


“நீ ஜுவல் டிசைனர்ன்னு ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்றான் தோரணையாக.


“சொல்லியிருந்தால் மட்டும் என்ன செய்திருப்பீங்க... ம்ம்ம்?” என்று தலையைச் சாய்த்து ஒற்றை விரலை கன்னத்தில் தட்டி யோசிப்பது போல் பாவனை செய்தவள், “ஒருவேளை நான் முன்பே சொல்லியிருந்தால்... இப்படிச் சின்னதாய் பார்ட்டி வைக்காமல்... பெரிய ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருப்பீங்களோ?” என்று நெடுநாளாய் மனதைக் குடைந்த கேள்வியைப் போட்டு உடைத்தாள்.


“வாட் டூ யூ மீன் பை தட்?” என்றான் புருவங்கள் முடிச்சிட.


“ம்ம்ம்... சுரைக்காயில் உப்பில்லன்னு சொன்னேன்!” என்று விட்டேற்றியாகப் பதிலளித்துவிட்டு நகர முற்பட்டாள்.


“ஏய் நில்லு டீ... இப்ப நீ பேசியதற்கான அர்த்தத்தைச் சொல்லிட்டுப் போ!”


குழலி நின்று, அவன் புறம் நன்றாய் திரும்பி “எந்த அர்த்தத்தைக் கேட்கிறீங்க? நான் சுரைக்காயில் உப்பில்லைன்னு சொன்னனே... அதையா?” என்றாள் வேண்டுமென்றே புரியாதது போல்.


“என்னை ரொம்பக் கோபமூட்டாதே கார்குழலி... அது உனக்கு நல்லதில்லைன்னு முன்பே சொல்லியிருக்கேன்!” என்று மிகக் கடுமையாக எச்சரித்தான்.


“ஆமாம் நீங்க என்ன பெரிய துர்வாச முனிவரா... கோபம் மூட்டியவுடன் ‘இந்தா... பிடி சாபம்!’ என்று கொடுக்க? அப்படியே நீங்க துர்வாசரா இருந்தாலும் கூட எனக்கு ஒன்றும் பயமில்லை!” என்று கூறிவிட்டு, மீண்டும் திரும்பி தனது ரூமை நோக்கி நடந்தாள்.


இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள், அதற்குள் அவளுடைய தோள்பட்டையே இற்று விழுந்துவிடும் அளவுக்கு இறுக பிடித்து, ஆவேசமாக அவளைத் திருப்பினான் சூர்யா.


சற்று நேரத்திற்கு முன்பு வீராப்பாக அவனிடம் பயமில்லை என்று உரைத்தவளுக்கு, எரிமலையிலிருந்து வழியும் லாவாவைப் போல் தகதகவென்று சிவந்த நிறத்திற்கு மாறியிருந்த அவனின் தேன் நிற விழிகளைக் காண்கையில் வெலவெலத்துப் போனது.


‘தலைக்கு மேல் வெள்ளம் போன பின்... ஜான் என்ன? முழம் என்ன?’ என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அவனின் இரும்புப்பிடிக்குள் சிக்குண்ட தோள்பட்டைகள் முறிந்துவிடும் அளவுக்கு வலித்தபோதும்... பல்லைக் கடித்துச் சமாளித்தவள், தப்பித் தவறி கூட வலிக்குது என்றோ, விடுங்கள் என்றோ வாயைத் திறக்காது, அவனை நேருக்கு நேராக நோக்கினாள்.


“பட்டிக்காட்டில் பிறந்து வளர்ந்து, படிப்பு வாசனையே இல்லாத என்னை... உங்க நண்பர்களிடம் அறிமுகப்படுத்த அவமானமாக உணர்ந்ததால் தானே... அவசர அவசரமாகக் கல்யாணத்தை திருப்பதியில் முடித்துவிட்டு, ரிசப்ஷனே வேண்டாம்னு என் அப்பாவிடம் சொன்னீங்க?” என்று குமுறினாள்.


“என்ன மாதிரியான பேத்தல் இது?” என்று கர்ஜித்தவன், “ஒன்று புரிந்து கொள் கார்குழலி... எனக்கு பிஸினஸ் வேறு... பர்சனல் லைப் வேறு! இது இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் பழக்கம் எனக்கு இல்லை. என்னுடைய பிரைவசி... எனக்கு ரொம்ப... ரொம்ப முக்கியம்! இன்று வந்தவர்கள் எல்லாரும், சிறு வயதிலிருந்து பழக்கமான என் நெருங்கிய நண்பர்கள். எனக்குத் திடீரென்று திருமணம் என்றவுடன்... அவர்களாகவே காதல் திருமணமாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டார்கள். அவ்வளவு தான்! அவர்கள் முன்னாடி... உன்னுடைய ப்ரொபஷன் கூடத் தெரியவில்லை என்றால், எனக்கு எவ்வளவு அசிங்கம் என்று நினைத்தாயா?” என்றவாறு அவளுடைய தோள்களை உலுக்கினான்.


“என்னது நீங்க அசிங்கப்பட்டீங்களா?” என்று வெகுண்டவள், அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “இங்கே அனைவரின் முன்பும் அசிங்கப்பட்டது நான்... அசிங்கப்படுத்தியது நீங்க!” என்று கீறிச்சிட்டாள்.


“என்னது நானா?”


“ஆமாம்... ஆமாம். இந்த எஸ்.பி... தி கிரேட் தான்!” என்று ஆள்காட்டி விரலால், அவன் நெஞ்சைத் தொட்டு ஹிஸ்டீரியா வந்தது போல் கத்தினாள் குழலி.


சபை நாகரிகம் கருதி அனைவரின் முன்பும் பல்லைக் கடித்து அமைதி காத்தவள், இப்போது அவனே வந்து வாய் கொடுத்து மாட்டிக்கொள்ள... தன் மனக்குமுறலைக் கொட்டத் தொடங்கினாள்.


“இன்றைக்கு வந்த எல்லோரும்... உங்களுக்கு நண்பர்கள்... ஆனால் எனக்கோ முகமறியாத அந்நியர்கள்! முன் பின் தெரியாதவர்களிடம் என்னை ‘அம்போ’ன்னு விட்டுட்டு... ஒரு அழகான பெண் வந்தவுடன் அவளுக்கு ஓடியோடி உபசாரம் செய்தீங்களே... அந்தச் செயலுக்குப் பெயர் என்ன? என்னை அறிமுகப்படுத்தும் பார்ட்டின்னு... என்னிடம் முன்பே ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல்... என்னுடன் நிற்காமல்... பெவிகால் போட்டு ஒட்டின மாதிரி அவளோடு சுற்றினீங்களே... இதுதான் நீங்க சொன்ன ‘காதல் கணவன்’ செய்யும் வேலையா?


நீங்க தான் இப்படின்னா... அந்த அவந்திகா? அடுத்தவள் கணவருடன் எப்படி நடந்துக்கணும்னு கூடத் தெரியாத, விவஸ்தையில்லாத ஜென்மம்! இந்த மாதிரி மட்டும் எங்க பட்டிக்காட்டில் நடந்திருந்தா... இந்நேரத்திற்கு அந்தப் பெண்ணிற்குக் கன்னம் பழுக்க நாலு அறையும், அப்படிப் பழக இடம் கொடுத்த ஆணிற்குத் தோள்பட்டையும் உரிந்திருக்கும். தெரியுமா?” என்று உக்கிரமாகக் கேட்டாள்.


குழலி முடிக்கும் முன், “ஆனா என்னை மாதிரி... அவனுக்குக் கல்யாணம் என்னும் ஆயுள் தண்டனை கிடைத்திருக்காதே?” என்று மூர்க்கத்தனமாய் ஒரே வரியில் முடித்து வைத்தான் சூர்யா.


அவனது மூர்க்கத்தனத்தில்... முகம் இரத்தப்பசையே இல்லாமல் வெளுக்க, அவளின் உடம்பெங்கும் திகுதிகுவென்று எரிந்தது.


‘எவளுக்காகவோ... தன்னை ஆயுள் தண்டனை என்று சொல்லிவிட்டானே? அன்று அடிப்பட்டு மயங்கிச் சரிந்தபோது தன்னைத் தூக்கிச் சென்று ஹாஸ்பிட்டலில் சேர்த்த அதே சூர்யாவா இவன்? சூர்யா அலட்சியமாகப் பேசுவான் தான். மகா... மகா திமிர் பிடித்தவன் தான். ஆனால் கொடூர மனம் படைத்தவன் அல்லன். இப்பொழுதிருக்கும் சூர்யா... வாய் திறந்தாலே வன்மம் தானே வெளிப்படுகிறது! அப்படி என்ன செய்துவிட்டேன்? இதற்கே அவனைவிட்டு ஒதுங்கித் தானே போகிறேன்?’


“அப்படி யாரும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, கழுத்தில் கத்தியை வைக்கவில்லையே சூர்யா? இப்படி எல்லோர் முன்னிலும் அசிங்கப்படுத்துவதற்கு... என்னைக் கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாமே!”


“எப்படிடீ நிறுத்த சொல்ற? உன் வீட்டிலும், என் வீட்டிலும் நாள் குறிக்க ஜோசியர் வீட்டுக்குப் போன போது... உன் ஹேண்ட் பேகில் இருந்ததுன்னு... இதை எடுத்து வந்து தேவிம்மா என் கையில் கொடுத்தாங்களே... அப்போவா?” என்று கேட்டபடி, அவசரமாக அங்கேயிருந்த ‘டிரா’வைத் திறந்து எதையோ எடுத்தவன், அதை அவளை நோக்கி ஆவேசமாக எறிந்தான்.


அது நேராகச் சுழன்று வந்து அவளது கால் கட்டைவிரலில் பட்டு, ‘வின்’னென்று வலியை ஏற்படுத்தியது.


துள்ளிக் குதித்து நகர்ந்து நின்று, அது என்ன என்று பார்த்தவளுக்கு... வலியின் மிகுதியால், கண்ணில் கண்ணீர் படலமாகத் துளிர்த்து பார்வையை மறைத்தது. அதைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு, மீண்டும் ‘என்ன’வென்று பார்த்தவளுக்கு... அது ‘என்ன’ வென்று புரிய ஓரிரண்டு நிமிடம் ஆனது!


காரணம்... அது, அவள் தொலைந்து விட்டதாக சொன்ன... அதே சாவி! இன்னமும் நிற்காமல் சுழன்று கொண்டே இருந்தது... அவளது வாழ்க்கையைப் போலவே!
 

Dra ananth

New member
இந்த அவந்திகாவால ஏதோ பெரிய சம்பவம் நடக்கும் நினைச்சேன் .... அதுக்கு அறிகுறியா இப்போவே சண்டை போட்டுடாங்களே !!!! 🥺
என்னது சாவி bag ல தான் இருந்ததா???!!!
அய்யோ !!! அப்போ குழலி பொய் சொல்லி அவன் கிட்ட help கேட்டானு இல்ல நினைச்சிப்பான்.. 🙄 😱
 
Top