கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே.... அத்தியாயம் - 3

Status
Not open for further replies.

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 3


அவனைக் கண்ட மாத்திரத்தில் அவளுள் தடாலடியாக இத்தனை ரசாயன மாற்றங்கள் ஏற்பட, அவனிடம் எந்தச் சலனமுமில்லை.


அவளை அடையாளம் தெரியாத மாதிரிப் பார்த்திருந்தால் கூட, ‘சரி... மறந்துவிட்டான் போல!’ என்று தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டிருப்பாள். ஆனால் அவளை என்னவோ ‘வேற்று கிரக ஜந்து’வைப் பார்ப்பது போல் விசித்திரமாக வீசினானே... அந்தப் பார்வையைத் தான், அவளால் ஜீரணிக்க முடியவில்லை.


“டேய் எஸ்.பி... வாடா!” என்ற ஓர் ஆண்குரல் கேட்க... குழலி தன் திகைப்பு மாறி சுயவுணர்வு பெற்று விலகுவதற்குள், சூர்யபிரகாஷாகப்பட்ட அந்த எஸ்.பி. மாயமாக மறைந்திருந்தான்.


தன் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் அவனைத் தேட... அவனின் உயரத்திற்குச் சூழ நடந்தோரைக் குள்ளமாக்கிக் கொண்டு, அந்த உயரத்திற்கு கூன் போடாமல் நிமிர்வோடு, அதே சமயம் அலட்டல் இல்லாமலும், கம்பீரத்துடன் அவன் நடந்து சென்ற விதம்... ‘மகாராஜா, மந்திரிகள் புடைசூழ ராஜவீதியில் இப்படித்தான் நகர்வலம் சென்றிருப்பாரோ?’ என்று தோன்றும்படியாக ஓர் எண்ணம் எழ... தன்னிலை மறந்து அவன் தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டு, அப்படியே நின்றுவிட்டாள்.


‘இவ்வளவு உதாசீனப்படுத்தியும்... நான் இப்படி வெறிக்கப் பார்ப்பதை, அவன் மட்டும் கண்டால்... எவ்வளவு இழிவாக நினைப்பான்?’ என்ற எண்ணம் எழ, ‘நல்ல நாளிலேயே அப்படித்தான் நினைப்பான்!’ என்று மனம் பதிலுக்கு இடித்துரைக்க, சரேலென்று திரும்பி நடக்கலானாள்.


‘இவனுக்கு நேரம் பொன் போன்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக இப்படியா? தெரிந்தவரைக் கண்டால் ஒரு சிரிப்பு, முகமன் விசாரிப்பது கூடவா முடியாது? ம்கூம்... என்று இவன் சகமனிதரை மட்டு மரியாதையுடன் நடத்தியிருக்கிறான்... இப்போ திடீரென்று நடத்துவதற்கு? இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால்... ஏமாந்து தானே போகணும்? மூச்சு விடுவது போல்... இவனுக்கு அகங்காரமும், ஆணவமும் இயல்பான விஷயம்! பரம்பரை பணத்துடன், அழகும், அறிவும் இருந்தால்... இலவச இணைப்பாக திமிரும் சேர்ந்து கொள்ளும் போல!’ என உள்ளே குமுறினாள்.


“ஐயா காதலித்த பெண்... இவனை வேண்டாம்னு உதறிட்டுப் போய் விட்டாளாம்! அதனால் தான் துரை தாடி வைக்காத தேவதாஸ் ஆகி... இன்னமும் அவளை நினைத்து... கல்யாணம் செய்துக்கலையாம்!” என்று பி.பி.சி. மஞ்சு சொன்னது அசந்தர்ப்பமாய் நினைவிற்கு வந்து தொலைக்க... எப்பொழுதும் போல் மனதில் சுருக்கென்று ஏற்படும் வலி, இன்றும் தவறாமல் எழுந்த போதிலும்... கூடவே, ‘பின்ன... எந்தச் சுய கௌரவமுள்ள பெண் இவனை மணப்பாள்?’ என்ற வினாவும் சேர்ந்தே எழுந்தது.


இவனையே காதலில் விழச் செய்த அந்த முகம்தெரியாத பெண்ணைப் பார்க்க வேண்டும் போல் ஏனோ தோன்ற, ‘ச்சீ... இது என்ன வெட்டிச் சிந்தனை! அவள் எப்படி இருந்தால்... நமக்கென்ன வந்தது? ஏன் இன்று இந்த வெட்கம் கெட்ட மனம்... செக்குமாடு சுழல்வதைப் போல அவனையே சுற்றிச் சுற்றி வந்து தொலைக்கிறது?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டே, கொட்டும் மழையில் நனைந்தபடி ரோட்டைக் கடந்து, பஸ் ஸ்டாப் நோக்கி நடையைக் கட்டினாள்.


என்றும் இல்லா திருநாளாய் வருணபகவானுக்கு சென்னையின் மீது என்ன அப்படி ஒரு கருணையோ... மாலை ஆறரை மணிக்கே இரவு பத்து மணி போல் இருட்டி, வானத்தையே கிழித்துக்கொண்டு மழை கொட்ட தொடங்கியது.


பேய்மழை அடித்துக்கொண்டிருப்பது போதாதென்று, ஊதக்காற்று வேறு தன் பங்கிற்கு அங்கு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்களை வாரி அணைத்து அராஜகம் செய்தது.


‘எப்போதுடா இந்த பஸ் வந்து தொலைக்கும்?’ என்று நொடிக்கு ஒருதரம் காலியான ரோட்டைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டபடி, ‘இப்படி ரோட்டில் நின்று... கால் மாற்றிக் கால் வைத்து தவமிருக்க விட்டுவிட்டார்களே பெரியம்மா!’ என்று பொருமியபடி குழலி நின்று கொண்டிருக்க... அவளின் வெகு அருகில், கருப்பு நிற ஏ சிக்ஸ் ஆடி கார் ஒன்று வழுக்கிக்கொண்டு வந்து நின்றது.


‘சூர்யபிரகாஷ் கூட... இதே போல் ஆடி கார் தானே வைத்திருப்பான்?’ என்று நினைவு மீண்டும் அவனைப் பின்தொடர்ந்து ஓடுகையிலையே, வீர்ரென்று ஜன்னல் கதவு கீழே இறங்க... அங்கே அவள் எண்ணங்களின் நாயகன் சற்று முன்புறம் குனிந்து “ஏறு!” என்று அதிகாரமாக ஆணையிட்டான்.


‘சற்று நேரத்திற்கு முன் என்னை ஏலியன் ஜந்து போல் பார்த்துவிட்டு... இப்போ என்ன அதிகாரமாய் ஏறுன்னு அழைக்கிறான்? காரைக் கொண்டு வந்து கூப்பிட்டால்... எலும்புத் துண்டிற்கு ஆசைப்பட்டு, வாலைக் குழைத்துக்கொண்டு ஓடி வரும் நாயைப் போல... இந்த குழலியைப் பார்த்தால் இவனுக்குத் தோன்றுகிறதோ?’ திரி பற்றிய பட்டாசு போல சுறுசுறுவென்று கோபம் தலைக்கு ஏற, பொது இடம் கருதி அமைதி காத்து “நோ தேங்ஸ்!’’ என்றாள் மிடுக்காகவே.


‘பஸ் வரவே இல்லைன்னா கூட, இங்கிருந்து நடந்தே வீட்டிற்குப் போனாலும் போவேனே தவிர... உயிரே போனாலும் இவனுடைய காரில் அடியெடுத்து வைக்க மாட்டேன்!’


அவள் மனதில் ஓடிய எண்ணங்கள் யாவும், அவளுடைய பளிங்கு முகத்தில் அப்பட்டமாகப் பிரதிபலிக்க... ஸ்டியரிங்கில் இருந்த அவனின் விரல்கள் இறுகியதைத் தவிர, அவன் முகத்தில் எந்தவிதச் சலனுமுமில்லை.


“இதோ பார் ஸ்ப்ரிங் முடி... உன்னோடு வார்த்தை விளையாட்டு விளையாட எனக்கு நேரமில்லை... சீக்கிரம் ஏறு!” என்றான் தன் ஆழ்ந்த குரலில் அழுத்தமாக. அடித்து விலாசிய மழையையும் மீறி, அவன் குரல் தெளிவாக அவளது காதில் விழுந்தது.


எத்தனை தடவை சொன்னாலும் சரி... இவன் மட்டும் தோரணையாக ‘ஸ்ப்ரிங் முடி’ என்று தான் அழைத்துத் தொலைப்பான். ஏற்கனவே பஸ் வராத எரிச்சலில் இருந்தவள், இதைக் கேட்டது தான் தாமதம்... எண்ணெயில் இட்ட கடுகாய் எகிற தொடங்கினாள்.


“ஆமா... உங்களோடு வார்த்தை விளையாட்டு விளையாடணும்னு தான்... இப்படி வானத்தைக் கிழித்துக்கொண்டு கொட்டுகிற மழையில், ஒற்றைக்காலில் தவம் செய்து கொண்டு, இங்கேயே நின்று கொண்டிருக்கிறேன்!” என்றாள் குதர்க்கமாக.


அவனது தேன் நிறக் கண்களிலிருந்த இறுக்கம் தளர, புன்னகை போல ஏதோவொன்று உதட்டில் தோன்றி, அது தோன்றிய வினாடியே மாயமாக மறைந்தும் போனது.


“உன் தவத்தை மெச்சித்தான்... நான் வந்து விட்டேனே! அப்புறம் காரில் ஏற வேண்டியது தானே?”


‘குபுக்’கென்று பொங்கி வந்த சிரிப்பை அடக்கி, ‘இந்தப் பேச்சில் ஒன்றும் குறைவில்லை!’ என்று எண்ணிய போதும், விரைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு “நான் வரவில்லை!” என்றாள் அழுத்தமாக.


“இதோ பார் ஸ்ப்ரிங் முடி... மழைத்தண்ணீர் வீட்டுக்குள் புகும் நிலைக்கு மோசமாகிக் கொண்டு இருப்பதால்... அங்கங்கே ரோட்டை வெட்டி விட்டுருக்காங்க! வீட்டிற்குப் போகும் வழி வெள்ளக்காடா இருக்கு... அந்தப் பக்கமாகப் போகும் எல்லா பஸ் ரூட்டையும் திருப்பிவிட்டார்கள்! இப்ப வீட்டுக்குப் போகணும்னா... பத்து கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டுதான் போக வேண்டும்! இல்லயில்ல... நான் பஸ்சில் தான் வருவேன்னு அடம்பிடித்தால்... ஓ.கே! மழை ஓய்ந்து... ரோட்டை சரி பண்ண எப்படியும் விடிந்துவிடும்... அதுவரை இப்படியே ப்ளாட்பார்மில் இருந்து கொண்டு, பஸ் வரும் வரை சொட்டச் சொட்ட நனைந்து... உன் உடல் அழகை எல்லோருக்கும் காட்டு!” என்றவன், அலட்சியமாய்த் தோளைக் குலுக்கிவிட்டு விர்ரென்று கார் கிளாஸை ஏற்றினான்.


அவன் சொன்ன வார்த்தைகள் அடிபட்ட காயத்தில் உப்பு தடவியது போல் திகுதிகுவென்று எரிந்த போதும், அவள் சூட்டோடு சூடாகப் பதிலளிக்கும் முன்... கண்ணாடி முழுவதுமாக மூடிக்கொள்ள, காரை ஸ்டார்ட் செய்தான் சூர்யபிரகாஷ்.


இவள் வீட்டை விட்டு ஸ்டேஷன் கிளம்பி வந்த நான்கு மணிநேரத்தில் அவ்வளவு மழையா... அதுவும் சென்னையில்? நம்பமுடியாத நிகழ்ச்சியாக இருந்த போதிலும், நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. காரணம்... சொல்லும் நபர் சூர்யாவாயிற்றே!


இரவு முழுவதும் இங்கே எப்படி நிற்பாள்? பஸ் ஸ்ட்டாப்பில் சில தடிமாடுகள் கண்களால் அவளை துச்சாதனன் வேலை செய்ய... அந்தப் பார்வையிலிருந்து தப்பிக்கத் தான், அவள் சற்று தள்ளி நின்றதே! ஆனால் அதுவே ஊதக்காற்றில் அவள் முழுவதும் நனைய காரணமாயிற்று. உண்மை இப்படி இருக்க... இவன் என்னவோ வேண்டுமென்றே தான், இப்படி நின்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறான்.


இவளைப் பற்றிய அக்கறையற்று, தன் கடமை முடிந்தது என்பது போல் அவனது கார் பஸ் ஸ்டாப்பை விட்டு நகரத் தொடங்கியது.


‘இந்த இடி, மழையில் எப்படி ஆட்டோவிலோ, கால் டாக்ஸியிலோ போவது? உயிரே போனாலும்... அவன் காரில் ஏறக்கூடாது தான் என்று நினைத்தால்... இங்கே மானம் போகும் போல இருக்கே?’ என்று நினைக்கையிலேயே... சென்னையில் அவளுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லாத நிலையில், திடீரென்று எங்கிருந்தோ பயம் பந்தாக வந்து நெஞ்சை அழுத்த... பதறி, “நானும்... நானும்... வருகிறேன்!” என்று கூறியபடி, வேகமாக ஓடிப்போய் காரில் ஏறிக்கொண்டாள்.


சிலசமயம், சிறு நிகழ்ச்சியில் தான் வாழ்க்கையின் பாதையே திசை திரும்புகின்றது. அப்படிப்பட்ட நிகழ்வு தன் வாழ்க்கையில் நேரப்போவதை உணராது, அந்த ஆடி காரில் அமர்ந்தாள் அந்தத் தாரகை!


‘நீ வந்தால் எனக்கென்ன... வராவிட்டால் தான் என்ன?’ என்ற விட்டேற்றியான பாவனையில் அமர்ந்திருந்தவன், அவள் அமர்ந்த அடுத்த நிமிடம் அவனது கைகளில் கார் விர்ரென்று பறந்தது.


‘இதைத்தான்... சாத்தான் வேதம் ஓதுதுன்னு சொல்லுவாங்களோ? இவன் என்னவோ மகா யோக்கியவான் போலப் பேசுகிறானே... இவனும் முதல்முறை இப்படித்தானே வெறித்துப் பார்த்தான்? பார்க்க மட்டுமா செய்தான்... வாய்க்கு வந்ததை எப்படியெல்லாம் பேசினான்? அன்று மட்டுமா... பார்க்கும் ஒவ்வொரு முறையும் அப்படித்தானே! ஒரு தரம்... ஒரே தரம் மட்டும் தான்... அதுவும் இதே காரில் தான்’ என்று எங்கோ ஓடிய தன் நினைவை, குழலி இழுத்துப் பிடித்து நிறுத்த முயல... ‘முன்பு போலவே... இந்த காரை வீண் செய்கிறோமே!’ என்ற எண்ணமும் கூடவே சேர்த்து எழ... அவசரமாகத் தன் ஈர உடலைச் சுருக்கிக்கொண்டு, கதவோடு கதவாய் பல்லி போல் ஒட்டி அமர்ந்தாள்.


அவளுடைய ஒதுக்கத்ததை ஓரக்கண்ணால் கண்ணுற்றவனின் முகமும் கையும் ஒருசேர இறுக, “ஏன்... கையில் கூழாங்கல் துப்பாக்கி இல்லையாக்கும்?” என்றான் ஏகத்தாளம் துள்ள.


எதற்காக அப்படி அமர்ந்தோம் என்பதை மறந்து விசுக்கென்று அவன் புறம் திரும்பியவள், “எப்படி... எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றாள் தடுமாற்றத்துடன்.


“எனக்குக் கண் நல்லாவே தெரியும்னு உன்னிடம் முன்பே சொல்லியிருக்கிறேன் ஸ்பிரிங் முடி! அதுவும் எனக்கு பத்து அடிக்கு முன்னால்... உன்னுடைய வீர, தீர பாராக்கிரமத்தைக் காட்டி... துப்பாக்கியால் கண்மண் தெரியாமல் சுட்டியே... அந்த என்கவுண்ட்டரில் நானும் பாதிக்கப்பட்டேன்!”


அவள் என்னவோ அவனை நிஜத் துப்பாக்கியால் சுட்டது போல அவன் சித்தரிக்க, “என்கவுண்ட்டரில் பா... பாதிக்... பாதிக்கப்பட்டீங்களா?” என்றவள் அதிர்ச்சி தாளாது தடுமாறினாள்.


“ஆமாம்! அந்த என்கவுண்ட்டரில்.. உன் குறி தவறி என் கழுத்திலும் ஒரு குண்டு விழுந்தது!” என்றான் படு நக்கலாக.


‘ஆடு நனையுதேன்னு... ஓநாய் அழுததாம்!’ இந்தக் கதையின் அர்த்தம் இதுதான் போல... ஸ்டேஷனில் கண்டுகொள்ளாமல் சென்றவன், வலிய வந்து உதவி செய்யும் போதே யோசித்து இருக்க வேண்டும். கடைசியில் அவளிடம் சண்டையிட தான், காரில் ஏற்றி இருக்கிறான் என்பது இப்பொழுது தானே புரிகிறது.


“உங்கள் நக்கலு... விக்கலு எல்லாம் வேற யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள்! நான் ஒன்றும் குறி தவறவில்லை... அந்த மெஷின் கன்னில் மூன்று முறை அவன் கழுத்திலும், ஏழு முறை அவன் காதிலும் சுட்டேன்!”


“கம் அகெய்ன்... இப்ப காதுன்னா சொன்ன?” என்றான் தலையை அவள் புறம் திருப்பி, லேசாகக் கண்களில் ஆச்சரியம் மிக.


“ஆமாம்! எனக்கு முதுகு காட்டி ஓடும் போது... சின்ன அளவு கூழாங்கல்லை வைத்து வலிக்கற மாதிரி எங்க சுட? கழுத்திலும்... காதிலும் தானே சுட முடியும்?” என்று அவனையே எதிர்கேள்வி கேட்டாள்.


“ஓகோ... அப்போ இதையெல்லாம் முன்னாடியே பக்காவா ப்ளான் பண்ணித்தான்... அவனை உன் பாய் ப்ரெண்டாக செலக்ட் பண்ணினேன்னு சொல்லு?” என்றபோது, அவனது குரலில் மிதமிஞ்சிய எகத்தாளம் துள்ளியது.


‘என் கையிலிருந்து கீழே விழுந்த பேகை எடுத்துத் தந்ததற்கு நன்றியுடன் ஒரு புன்னகை புரிந்தால்... உடனே அவன் என் பாய் ப்ரெண்டாகி விடுவானா? அதுவும் தட்டிவிட்டதே... திருடும் நோக்கில் தான் என்னும் போது! ஒரு களவாணிப் பயலை... தன் பாய் ப்ரெண்டாக இவனால் எப்படி நினைக்க முடிந்தது?’ என்ற கேள்வி தீயாய் உள்ளுக்குள் பரவ, கோபம் கொப்பளிக்க குழலி நன்றாகத் திரும்பி அவனை உறுத்து விழித்தபோது... அவள் எத்தனை அழகாக மிளிர்ந்தாள் என்பதை அவளே அறியாள்.


ரத்த சிகப்பு நிற சுடிதார் மழையால் தோலோடு தோலாக உடம்போடு ஒட்டி அவளின் பெண்மையின் அழகை எடுத்துக்காட்ட... வளையம் வளையமாக இருந்த சுருள்முடியில் சொட்டுச் சொட்டாக வழிந்த மழைநீர், அவள் முகத்திலும் கழுத்திலும் வெண்முத்தாக அமர்ந்து... பார்ப்பதற்கு பன்னீரில் நனைந்த சிகப்பு ரோஜாவைப் போலத் தோற்றமளித்தாள்.


மனதை மையலுறுத்துக்கின்ற அந்தக் காட்சிக்கு நேரெதிராக, அவளுடைய கண்கள் கனலைக் கக்க... கருப்பும் வெள்ளையும் சேர்ந்த காம்பினேஷன் எப்படிப் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்குமோ... அதுபோல குளுமையில், அந்த வெம்மை சுண்டி இழுக்க... அசந்து போய் அவளைப் பார்த்தான் சூர்யபிரகாஷ்.


அவனின் கண்களில் வந்த ரசனையை உணராது, முன்பே அவன் மீது ஆத்திரத்தில் உழன்றவளுக்கு, இந்தப் பேச்சு... ஹோமக்குண்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் ஜூவாலைக்கு, நெய் வார்ப்பது போலிருந்தது.


“ஆமாம்! நான் ஊரிலிருக்கும் களவாணிப் பயலை எல்லாம்... பாய் ப்ரெண்டா வைத்துக்கிட்டு திரியிற ரகம்! அப்போ எஸ்.பி. சார் எந்த ரகமோ?” என்றாள் வரவழைத்துக் கொண்ட அலட்சியத்துடன்.


“உன்னைப் பற்றிச் சொன்னால்... என்னைப் பற்றி ஏன் கேட்கிற?”


“நான் இந்தப் பேச்சை ஆரம்பிக்கவில்லை... மற்றவர்களைப் பேசும்போது மட்டும் குளுகுளுன்னு இருக்கும். அதுவே உங்களைப் பற்றிக் கேட்டால்... பொத்துக்கொண்டு வருதா?”


ஸ்டியரிங்கிலிருந்த நீண்ட விரல்கள் தாளமிட “உன் கேள்வியே தப்பு என்பதால்... அப்படிச் சொன்னேன்! இந்த எஸ்.பி... எந்தப் பெண்ணையும் தேடி ஓடும் ரகமில்லை. என்னை நாடி, ஓடி வர வைக்கும் ரகம்! இப்ப நீ... ஓடியே வந்தியே... அது மாதிரி!” என மிதமிஞ்சிய கர்வத்துடன் பீற்றிக்கொண்டான் அந்த உத்தம புத்திரன்.


‘என்னது? இவனின் எல்லையற்ற அகந்தைக்கு இமயம் கூட சிறு குன்று போல் தெரியும் போலயிருக்கே! ஒரு தடவை பட்டும் புரியவில்லை பார்!’ என்று கொதித்தவள்... அவனுக்குச் சூடாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில், நாக்குக்குக் கடிவாளமிடாமல் “ஓகோ அப்படியா!” என்று அநியாயத்திற்கும் ஆச்சரியப்பட்டு, “அப்ப நீங்க உயிருக்கு உயிராய்க் காதலித்த பெண், உங்களை வேண்டாம் என்று உதறிவிட்டு ஓடியது... எந்த ரகத்தில் சேர்ந்ததாம்?” என்று அவள் ஆவேசமாகக் கேட்டு முடிக்கும் முன்... நட்ட நடு ரோட்டில் டயர்கள் கிறீச்சிட, சடன் ப்ரேக் இட்டு காரை நிறுத்தினான்.


காரை நிறுத்திய வேகத்தில் “இப்ப என்னடி சொன்ன?” என்று உறுமியபடியே, அவளுடைய முகவாயை இறுக பற்றி உலுக்கினான். வெளியே சடசடவென்று பொழியும் பெருமழையைத் தாண்டியும், அவனின் குரல் பேரிடியாய் காரில் எதிரொலித்தது.


‘ஏன் எப்போதும் போல் மிஸ்டர். தெனாவட்டாக பதில் சொல்லாமல்... இப்படிக் கொந்தளிக்கிறான்?’ என்று குழலி யோசிக்க, தான் உணர்ச்சிவசப்பட்டு அவனுடைய பழைய காதலியைப் பற்றிப் பேசியது, தாமதமாகத் தான் அவளது புத்திக்கு உறைத்தது.


“அது வந்து நாக்கு... தவறி... தவறுதலாய்...” என நாக்கு தந்தியடிக்க, தன் மடத்தனத்தை நொந்து கொண்டபடி, பயத்தில் எதையும் கோர்வையாகப் பேச முடியாமல் திக்கித் திணறினாள்.


“இருப்பத்திமூன்று வயதில்... உன்னுடைய நாக்கின் மீது உனக்கே ஆளுமையில்லை என்றால்... ஒன்று உனக்கு நாவடக்கத்தைப் பற்றி யாரும் சொல்லித் தரவில்லை. இல்லை தறிக்கெட்டு ஓடும் உன் நாவை அடக்க, யாரும் முன்வரவில்லைன்னு அர்த்தம் கார்குழலி!”


“நான்... நிஜமாகவே தெரியாமல்... தெரியாம... தப்பா...”


“ம்கூம்... கார்குழலி! தெரிந்து செய்தாலும்... தெரியாமல் செய்தாலும்... தப்பிற்கான தீர்வு தண்டனை தான்!” என்றான் நிர்தாட்சண்யமாக.


அந்தச் சமயம் பார்த்து, அவன் சொன்ன வார்த்தையை ஊர்ஜிதப்படுத்துவது போல், வானத்தையே இரண்டாகப் பிளந்துகொண்டு இடியுடன் கூடிய மின்னல் ஒன்று தோன்றி, சூர்யாவின் கண்களில் கொப்பளித்த கொலைவெறியை வெட்ட வெளிச்சமாக்க காட்ட...


‘ஒரு மனிதனால்... கண்களில் இத்தனை ரௌத்திரத்தைக் கொண்டு வர முடியுமா?’ என்ற அதீத பயத்தில், குழலியின் கண்களில் லேசாக நீர் திரையிட்டது.


அவளின் கலங்கிய கண்களை ஊடுருவி நோக்கியவன், பின் தன் தோளை அலட்சியமாகக் குலுக்கிக் கொண்டு... “யூ சீ... என் தண்டனை வரம்பிற்குள் உன்னை மாதிரியான அழகான பெண்களுக்கு இடமில்லை என்பதால்...” என்று கூறியபடி அவளை விகாரமாகப் பார்த்தான்.


குழலியின் கலங்கிய கண்கள், சூழயிருந்த இருட்டில் அவன் கண்களில் தோன்றிய பாவத்தைக் கண்டிருந்தால்... ‘அப்பாடா’ என்று நிச்சயமாக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்க மாட்டாள்.


“அதற்காக உன்னை அப்படியே சும்மா விட்டுவிடுவேன் என்று வீணாக பகல்கனவு காணாதே!” என்று இளக்காரமாக மொழிந்தபடி, அவளின் நிலாமுகத்தைத் தன்புறம் இழுத்து “இந்த... இந்த உதடு தானே... வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டியது? அப்போ அதற்கான தண்டனையை... அதற்குத் தானே கொடுக்க வேண்டும்?” என்று வினயமாகப் பேசியவன், அவள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவளது செவ்விதழைச் சிறை பிடித்தான்.


‘ஐய்யோ... இவன் என்ன செய்கிறான்?’ என்று எண்ணும்போதே, அவன் அவளை விடுவிக்க... அடுத்த ஒரு சில வினாடிகளுக்குப் பின்னரே, அங்கே என்ன நடந்தது என்று அவளின் மசமசத்த மூளைக்கு உறைத்தது.


அன்பின், காதலின் வெளிப்பாட்டாகக் கொடுக்கப்படும் முத்தத்தை... கோபத்திலும், வெறுப்பிலும் கூடக் கொடுக்க முடியும் என்று அவள் கனவிலும் நினைத்தே பார்த்தில்லை. அவனுடைய உதட்டின் கதகதப்பையும், முத்தத்தின் நினைவுகளையும் ஒருசேர அழிக்க எண்ணி, அன்னிச்சையாக தன் இடது கையால் முத்தத்தால் சிவந்திருந்த இதழை அழுத்தித் துடைத்தாள்.


அவளின் சிறுபிள்ளைத்தனமான அந்தச் செய்கை, அவனுடைய கண்ணில் அத்தனை நேரம் குடியிருந்த கோபத்தை நீக்கி, ரசனையுடன் கூடிய சிறு புன்னகை ஒன்றைத் தோற்றுவித்தது


இந்த மனமாற்றத்தை ஏதும் அறியாத குழலியோ... குமுறும் எரிமலையாய் கண்கள் கனல் கக்க அவனைத் துவேஷத்துடன் பார்த்தவள், அன்று இரண்டாவது முறையாகத் தன்னிலை மறந்து கையை ஓங்கி வீசினாள்.


கண்ணிமைக்கும் நேரத்தில் வீசிய கையைச் சிறை பிடித்தவனின் முகத்தில், சற்று முன்பு குடியேறிய அந்த இளக்கம் நொடிப்பொழுதில் மறைய... பிடித்த கையை நசுக்கியபடி “யூ ஆர் அ வெரி பேட் ஸ்டூடண்ட்! பட்டும் புத்தி வரவில்லை இல்லை?” என்றபடி குரோதத்துடன் அவளின் மணிக்கட்டை மேலும் அழுத்தினான்.


“ச்சீ... என் கையை விடுங்க!’’ என்று சீறியபடி தன் கையை விடுவித்துக் கொள்ள அவள் போராட தொடங்க,


அந்த முயற்சியை உதடு சுழித்து ரசித்தவன், “போன முறை உதடு... இந்த முறை கையா கார்குழலி?” என்று ஏதோ அவள் ஆசைப்பட்டு அவனுக்கு முத்தம் கொடுத்தது போலவும், இப்போதும் அவனைத் தொட நினைத்து கையைத் தூக்கியது போலவும் பேச... அதைக் கேட்க சகிக்கவில்லை குழலிக்கு.


“இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாயில்லை?”


“நான் எதுக்குடி வெட்கப்படணும்?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும், தன் கையின் அழுத்தத்தைக் கூட்டிக்கொண்டே போனான்.


தனது செயல் அவளது வளைகரத்தை அலங்கரித்த கண்ணாடி வளையல்களை உடைத்து, அவளின் மணிக்கட்டைக் கிழித்து ரணப்படுத்தியதை உணராது “உன்னையெல்லாம்....” என்று காட்டமாகத் தொடங்கினான்.


“ஸ்...ஸ்...ஸ்... வலிக்குது சூர்யா!’’ என்று அதற்குமேல் வலி பொறுக்க முடியாது தொண்டை கமற, ஈனஸ்வரத்தில் முனகினாள் குழலி.


அடுத்த நொடி, மாயாஜாலம் போல அவனின் உடும்பு பிடியிலிருந்து அவளது கை விடுபெற்றது.


குழலி, தன் கையில் வழிந்த செந்நீரையோ இல்லை கண்ணில் வழிந்த உவர் நீரையோ கூடத் துடைக்கத் தோன்றாமல், அவனின் மூச்சுக்காற்று படும் அந்த காரில் இருக்கப் பிடிக்காது, அவசரமாக மற்றொரு கையால் கார் கதவைத் திறந்து கொண்டு இறங்க... அடுத்த வினாடி அந்த கார் சீறிப்பாய்ந்து, இருட்டில் எங்கோ சென்று மறைந்தது.


காரின் வெளிச்சம் மறையும் வரை அதையே வெறித்தவளுக்கு... அதன் பின்னர் தான் மழை முன்னிலும் அதிகமாக விளாசிக் கொண்டிருப்பதும், அந்த ஏரியா முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு கும்மிருட்டாக இருப்பதையும் உணர்ந்தாள்.


“ரோடு உடைந்ததால்... சுற்றிக்கொண்டு தான் போக வேண்டும்!” என்று அவன் சொன்னது தாமதமாக நினைவிற்கு வர, சுற்றிலும் பார்க்க கூட முடியாதபடி மழை ஊசியாக முகத்திலடித்துத் துவைத்துக் கொண்டிருந்தது.


வேகமாகத் தன் ஹேண்ட் பேகைத் திறந்து தட்டுத் தடவி செல்லை எடுத்தவளுக்கு ‘நோ சிக்னல்’ என்று வர, எரிச்சலாக வந்தது. செல்லில் வந்த ஒளியைக் கொண்டு பார்த்தவளுக்கு... அங்கே ஆள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியோ, இல்லை வண்டிகள் செல்வதற்கான ரோடோ... அடித்துக்கொண்டு ஓடும் மழைநீரால் எதுவும் புலப்படவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதுவும் சரியாகத் தென்படாது போக, அவளது வயிற்றில் ஒரு பிரளயம் உருவாக ஆரம்பித்தது.


இந்த மாதிரியான இடங்களும் சென்னையில் இருக்கும் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. யாருமற்ற அந்தகாரமும், பேய்மழையின் ஆர்ப்பாட்டமும் அவளின் ஈரக்குலையை நடுநடுங்க செய்ய, கால்கள் அல்லித் தண்டாகத் துவண்டன.


எவ்வளவு அலட்சியமாக பெரியம்மாவிடம், “ஒரு நாள் இரவு தானே?” என்று சொன்னது நினைவிற்கு வர, கண்களிலிருந்து குபுக்கென்று வழிந்த நீரை... அது வந்த தடமே தெரியாமல் அடித்துச் சென்றது மழை.

தொடரும்....

அடுத்த பதிவு - திங்கள் கிழமை


DEAR READERS...


உங்களின் கருத்துக்களை என்னை மயக்கிய கார்குழலே கருத்து திரியில் பதிவிடவும்!!!
 
Status
Not open for further replies.
Top