கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே.... அத்தியாயம் - 7

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 7


பாயிண்ட் ப்ளாங்க்கில் அவளை நிற்க வைத்து, ஒவ்வொரு புல்லட்டையும் குறி தப்பாது சுட்டது போல்... அவன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் புல்லட்டாய் உள்ளே இறங்க... அந்த மரண வலியின் வீரியம் தாங்காது, உடலெல்லாம் திகுதிகுவென்று பற்றி எரிய, அவளையும் அறியாது கண்கள் கலங்கியது.


என்ன பதில் சொல்லுவாள்? தன் வாழ்க்கையே புரட்டிப் போட்ட அச்சம்பவத்தை அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை.


‘ஆனால் அந்தச் சமயத்திலும்... இவன் தானே எனக்கு எல்லாமுமாய் நின்றான்?’ என்று எண்ணமிட்டவள்... எதுவும் பேசாது, பேசவும் தோன்றாது, தான் உணரும் அந்த மரணவலியை அப்படியே அவளது கண்கள் பிரதிபலிக்க... அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கண்ணீர் தரையை மறைக்க அங்கிருந்து வெளியேறினாள்.


பதிலுக்குப் பதிலுக்குப் பேசும் அவள், எதுவும் பேசாது உயிரையே கரைய வைக்கும் ஒரு பார்வையை இவன் மீது வீசிவிட்டு வேகமாக ஓட... அவளைக் கண்ணில் தோன்றிய வலியோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சூர்யா.


பின்னர் விரக்தியுடன் தன் நீண்ட தலைமுடியைக் கோதியபடி, “இதுக்குத் தான்டி... என்னைக் கோபப்படுத்தாதேன்னு சொன்னேன். கேட்டியாடி நீ?” என்று தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவன், தன்னைத் தானே கடிந்து கொண்டவனாய் மெல்ல அவள் சென்ற திசையை நோக்கி நடையைக் கட்டினான்.


கண்ணீர் வழியை மறைக்க அழுதபடி இறங்கியவள், தன் பெரியம்மா வீட்டின் அருகிலிருந்த மாடிப்படி மழையால் நனைந்திருக்க... அந்த ஈரத்தைக் கூட உணராது அதிலேயே அமர்ந்து, தன் முட்டியில் தலையைச் சாய்த்து, கண்களை மூடினாள்.


இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரைக் கண்கள் உகுக்க, அது மடைதிறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.


எதற்காக அழுகிறாள்? நாளை காலை எட்டு மணிக்கு ட்ரெயின் டிக்கட் புக்காகி இருக்க... சாவியைத் தொலைத்துவிட்டு, ஊருக்குப் போக முடியாமல் நிற்பதற்காகவா? அவனின் முத்தத்திற்காகவா? இல்லை ஏற்கனவே நொந்து போய் இருந்த வேளையில், மறக்க நினைத்த விஷயத்தை எல்லாம் அவனின் பேச்சு கீறி கிளறிவிட்டதாலா... என எதுவும் புரியாத போதும், அவளது அழுகை மட்டும் நின்றபாடில்லை.


‘இதே படிக்கட்டில் எத்தனை முறை மஞ்சு, ப்ரியாவுடன் அமர்ந்து சிரிக்கச் சிரிக்க பேசியிருப்பேன்?’ என்று நினைக்கையிலேயே... முதல்முறை சூர்யாவைப் பார்த்த அன்று இரவு, மூன்றாம் முறையாக இவளும் அவனும் தனியாக மாடியில் மீண்டும் சந்தித்துக் கொண்டது நிழல் படமாக மனத்திரையில் ஓடியது.


அன்று மாலை... தன் கம்ப்யூட்டர் கிளாஸை முடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க படியேறி வந்த மஞ்சு, நான்காவது தளத்தில் மாடிப்படியில் அமர்ந்திருந்த ப்ரியாவையும் குழலியையும் பார்த்துவிட்டு நின்றாள்.


“என்னடி ப்ரியா... ஒரு பேஸ்ல கரண்ட் இல்லையா? ஏன் இன்னும் டி.ஜியைப் போடாமல் இருக்காங்க?” என்று கேட்டாள்.


“டி.ஜியை சர்வீஸ் செய்யறாங்க... அதனால இரண்டு நாள் வேலை செய்யாது!”


“ஆமால்ல...” என்று கூறியபடி, இவர்களின் பேஸ்து அடித்தது போலிருந்த முகத்தைப் பார்த்துவிட்டு, “ஏன்... என்ன என்னாச்சு?” என்றாள் கேள்வியாக.


இவர்கள் பதில் சொல்லாது திருதிருவென்று விழிக்கவே, அதுவும் குழலியின் அசாத்திய அமைதியே ஏதோ நடந்திருக்கிறது என்று காட்டிக்கொடுக்க, “என்னத்தடி பண்ணித் தொலைச்ச?” என்று நேராக விஷயத்துக்குத் தாவினாள் மஞ்சு.


“நானா? நான் என்ன பண்ணினேன்?” என்றாள் குழலி, அவசரமாகத் தன் தலையை ஆட்டி.


“இன்னும் என்னடி பண்ண இருக்கு? அதுதான் எல்லாத்தையும் பண்ணிவிட்டாயே!” என்று ப்ரியா வாயைத் திறந்தாள்.


“ஏய் சும்மா சும்மா என்னையே குற்றம் சொல்லாதே! நீ தான் எனக்கு யோசனை சொன்னதே!”


“பின்ன நீ என்னைப் பண்ணின டார்ச்சருக்கு... எனக்குத் தோன்றியதை நான் சொன்னேன்! அப்புறம், அது வேலைக்கு ஆகாது, வேண்டாம்னு சொல்லிட்டேன்! ஆனா நீ தானே என்னை கன்வின்ஸ் பண்ணி வாங்க வைச்ச?” என்றாள் ப்ரியா.


“இதோ பார் மஞ்சு... கடைசியில் அவள் வாயாலே உண்மையை ஒத்துக்கொண்டு விட்டாள்!” என்று மஞ்சுவிடம் பஞ்சாயத்து வைத்தாள் குழலி.


“ஏய் இரு... இரு! இப்ப நான் என்னத்தை ஒத்துக்கொண்டு விட்டேன்னு நீ சொல்ற?”


“முதலில் நீ தானே இப்படிச் செய்யலாமுன்னு யோசனை சொன்ன... அப்புறம் என்மேல் ஏன்டி குற்றம் சொல்ற?” என்று பதலளித்தாள் குழலி.


அவர்களது பேச்சின் தலையும் புரியாது, வாலும் புரியாது இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், பொறுமையிழந்து “ஏய்ய்ய்ய்ய்... உங்க குழாயடி சண்டையை நிறுத்துங்கடி! முதலில் என்ன நடந்ததுன்னு ஒழுங்கா சொல்லித் தொலைங்கடி!” என்று எரிந்து விழுந்தாள் மஞ்சு.


“நான் சொல்றேன்... நான் சொல்றேன்!” என்று முந்திக்கொண்ட ப்ரியா, “நீ கம்ப்யூட்டர் கிளாஸ் போன ஐந்தாவது நிமிஷம்... இவள் என்னிடம் வந்து, ‘என் முடியை ஸ்ரெயிட்னிங் பண்ணணும்... அதுவும் இப்பவே பண்ணணும். ப்யூட்டி பார்லர் கூட்டிக்கொண்டு போ’ன்னு ஒரே பிடுங்கல்! சரிடி அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு நல்ல பார்லரா நாளைக்குப் போகலாம்னு எவ்வளவோ சொன்னேன். ஆனா இவ அடங்கல... சரின்னு இவளோட தொல்லை தாங்க முடியாம, நான் த்ரீ நாட் டூ சில்வியிடம் ஹேர் ஸ்ரெயிட்னர் இருக்குன்னு மட்டும் தான்டி சொன்னேன்! அதுக்குள்ள... நீ போய் அதை வாங்கிட்டு வா... அதுவும் இப்பவே வாங்கிட்டு வந்தாகணும்னு ஆட்டமா ஆடுனா! சரி போய்த் தொலையுது வாங்கிட்டு வந்து கொடுத்தா... ‘எனக்கு எப்படிப் பண்ணணும்னு தெரியாது... நீயே பண்ணு’ன்னு சொல்றாடி... எனக்கு மட்டும் என்னடி இன்ஜினியரிங் காலேஜில் ஹேர் ஸ்ரெயிட்னிங் பத்தி சொல்லியா தந்திருக்காங்க? நானும் ஏதாவது ஆகிவிடப் போகுதுன்னு தான்டி... யூ ட்யூப்பில் ஒரு முறைக்கு இரண்டு முறை... எப்படி யூஸ் பண்றதுன்னு பார்த்த பின்னாடி தான், இவளோட சுருட்டைத் தலைமுடியில்... அந்தக் கருமம் புடிச்ச ஹேர் ஸ்ரெயிட்னரை வைச்சேன்!”


“அப்புறம் என்னடி ஆச்சு? முழுசா சொல்லிட்டு... தண்ணியைக் குடிக்கக் கூடாதாடி?” என்று கடுப்பாகக் கேட்டாள் மஞ்சு.


“ம்ம்ம்... நீயேன் கேட்க மாட்ட? அதை நினைக்கும் போதே... எனக்கு நெஞ்சு பதறுது!” என்றுவிட்டு, மீண்டும் தண்ணீரைக் குடித்தாள் ப்ரியா.


பின்னர், “இவள் முடியில் அந்த ஸ்ரெயிட்னரை வைத்துவிட்டு, இப்படித் திரும்பி சீப்பை எடுக்கிறதுக்குள்ள... அவளோட குருவிக்கூட்டிற்குள்ளே போன அந்த மெஷின் மாட்டிக்கிச்சு! இப்படித் திருப்பறேன்... அப்படித் திருப்பறேன்... ம்கூம் எப்படி எடுத்துப் பார்த்தும்... அதை எடுக்கவே முடியலை!” என்று சற்றும் படபடப்பு குறையாது சொல்லியவள்,


“லேசா முடி பொசுங்குகிற ஸ்மல் வேற வர்ற மாதிரி இருந்துச்சா... சூடு தாங்காம எங்க முடி முழுசா பொசுங்கிட போகுதோங்கிற பயத்திலும், படபடப்பிலும்... நான் அவசரமாக அந்த மெஷினை இழுத்தேன் பாரு... அடுத்து என்ன நடந்துதுன்னே தெரியலை! டப்புன்னு ஹேர் ஸ்ரெயிட்னரிலிருந்து ஒரு சத்தம்! அப்புறம் டம்முன்னு மெயின் பாக்ஸிலிருந்து ஒரு மாதிரி சத்தம் வர... அடுத்த நிமிஷம் மொத்த ப்ளாட்டுக்கும் ஒரு பேஸ் பவர் கட்டாயிடுச்சி! இதை வெளியில எப்படிச் சொல்றதுன்னு கூடத் தெரியலை. அப்படிச் சொன்னா... யாரும் நம்புவாங்களான்னு கூடத் தெரியலை!” என்று அழ மாட்டாத குறையாகச் சொல்லிவிட்டு, மீண்டும் தண்ணீரைப் பருகினாள் ப்ரியா.


குபீரென்று பொங்கிச் சிரித்த மஞ்சு, “நான் நம்புவேன்! ஆமாம் அவள் சொன்னா... நீ போய் ஏன்டி கடன் வாங்கிட்டு வந்த? அவள் முடியின் அருமையைப் பற்றித் தெரிந்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்ட!” என்றாள் புன்னகையுடன்.


“முதலில் நான் வேண்டாம்னு தான்டி சொன்னேன். ஆனா இவள் தான் ஏதேதோ சொல்லி... என்னை மூளைச்சலவை செய்துட்டா!”


“முதலில் உன்னிடம் மூளை என்று ஒன்று இருந்தா தானே... மூளைச்சலவை செய்ய முடியும்?” என்று குறுக்கே புகுந்தாள் குழலி.


“இவளைப் பாருடி மஞ்சு!” என்று ப்ரியா பரிதாபமாகச் சொல்ல,


“ஏன்... இவள் என்னைப் பார்த்ததே இல்லையா? இப்ப போய்ப் பார்க்க சொல்ற?” என்று அதற்கும் வம்பிழுத்தாள் குழலி.


‘ஏற்கனவே அழமாட்டாத குறையாக இருக்கும் ப்ரியாவை... இவள் சும்மா விடமாட்டாள் போலவே!’ என்று எண்ணிய மஞ்சு, அவளை அங்கிருந்து விரட்ட எண்ணி “நீ கொஞ்சம் நேரம் சும்மா இருக்கியா குழலி!” என்று கூறிவிட்டு, “விடுடி ப்ரியா! இவள் ஊரில்...” என்று சிரித்தபடி ஆரம்பித்தாள்.


‘மஞ்சு எதைப் பற்றிப் பேசப் போகிறாள்!’ என்று அவள் ஆரம்பித்த விதத்திலேயே புரிந்து கொண்ட குழலி, “ம்கூம்... என்னால் சும்மா எல்லாம் இருக்கமுடியாது! அதனால நீங்க இரண்டு பேருமே பேசிக்கோங்க... எனக்கு வேலை இருக்கு!” என்றவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு, ‘இதற்குமேல்... இவர்களிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கு?’ என்ற எரிச்சலோடு இருவரையும் பார்த்துவிட்டு வெடுக்கென்று மாடிப்படி ஏறியவள், அங்கே திருப்பத்தில் நின்றிருந்த கரிய பெரிய உருவத்தோடு முட்டிக்கொண்டு நின்றாள்.


“என்னைக் கண்ணு தெரியுமான்னு மதியம் வியாக்கியானம் பேசிட்டு... இப்படிப் பார்க்கும் போதெல்லாம் மோதுகிறாயே?” என்று வம்பிற்கு இழுத்த சூர்யா, அவள் சூடாகத் திருப்பிக் கொடுக்கும் முன், “ஆமாம்... நீ எனக்காகத் தானே உன் முடியை ஸ்ரெயிட்னிங் பண்ண போன?” என்று தடாலடியாகக் கேட்டான்.


ஒரு நிமிடம் ‘ஐயோ’ என்று இருந்தபோதும், தான் ஒத்துக்கொண்டால் தானே அவனுக்குத் தெரியும் என்று நினைத்தவள், அவனைத் திசை திருப்ப “என்ன ஒட்டு கேட்கிறீங்களா?” என்றாள் நக்கலாக.


“என்னது ஒட்டு கேட்டேனா? ஆமாமாம்... நீங்கள் என்ன சிதம்பர ரகசியமா பேசினீங்க... ஒட்டு கேட்பதற்கு? நீங்கள் போட்ட கூச்சலில் தான்... நான் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்ததே!”


“எனக்குக் குழந்தையா இருக்கும் போதே காது குத்தி, கம்மல் போட்டாச்சு! யாருகிட்ட இந்த மலைமுழுங்கி மகாதேவன் கதையெல்லாம் அள்ளி விடுறீங்க? யாராவது எட்டு மணிக்கெல்லாம் தூங்கி விடுவாங்களா?”


அவள் கண்களை உருட்டிப் பேசிய விதத்தில் அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர, அதை அடக்கிக்கொண்டான்.


“அந்த மலைமுழுங்கி மகாதேவனுக்குத் தூக்கம் வருமா... வராதான்னு எல்லாம் எனக்குத் தெரியாது! ஆனா இருபது மணிநேரம் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி வந்தா... ஜெட் லேக்கில் காலை ஒன்பது மணிக்குக் கூடத் தூக்கம் வரும்! ஒரு ப்ரீ அட்வைஸ்... உனக்கு இந்த ஸ்ப்ரிங் முடி தான் நல்லா இருக்கு! அதையேன்...”


அவன் முடிக்கும் முன், “என் முடி... நான் அதை ஸ்ரெயிட்னிங் பண்ணுவேன்... இல்ல ஸ்கொயர் பண்ணுவேன். அது என் இஷ்டம்!” என்றாள் காட்டமாக.


“அஃப் கோர்ஸ் உன் இஷ்டம் தான்!” என்று தெனாவட்டாகத் தோளைக் குலுக்கியவன், “நீ ஸ்ரெயிட்னிங், ஸ்கொயரிங்... ஏன் ஸ்கொயர் ரூட் கூட உன் முடியில் போட்டுக்கோ! ஆனா அது என்னைத் தொந்தரவு செய்வதாக இருக்கக் கூடாது ஸ்ப்ரிங் முடி!” என்றான் அலட்சியமாக.


“இப்ப உங்களை... நான் எந்த விதத்தில் தொந்தரவு செய்தேன்?”


“ஓராயிரம் இருக்கும் போது... எதைன்னு சொல்லுறது?” என்று தன் ஷேவ் செய்யாத கன்னத்தில் தடவியபடியே யோசிக்க, குழலிக்குப் பொத்துக்கொண்டு வந்தது.


“என்னது... ஓராயிரமா?”


“பின்னே உனக்கு மட்டும் தான் ஒண்ணு, இரண்டுன்னு எண்ண தெரியுமா?” என்று மொழிந்தவன், அவளைப் போலவே தன் விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி “ஒன்று... சத்தம் போட்டுப் பேசி என் தூக்கத்தைக் கெடுத்தது! இரண்டு... என் மேல் ஒவ்வொரு முறையும் வந்து மோதியது! மூன்று... மோதியது மட்டுமல்லாது, என்னிடம் ஒரு சாரி கூட சொல்லாது... என்னிடமே சண்டைக்கு மல்லுக்கட்டுவது! நாலு... இது எல்லாத்துக்கும் மேல, உன் முடியை ஸ்ரெயிட்னிங் பண்றேன்னு சொல்லி... ஒரு பக்க ப்யூஸையே பிடுங்கியது! ஆக்சுவலி... இதை அசோசியேஷனிடம் புகார் கொடுக்கணும். இருந்தும் ஏன் கொடுக்காம இருக்கேன் தெரியுமா? நல்லகாலம்... உன் ஸ்ப்ரிங் முடி அப்படியே இருக்கு... அதனால தான்!” என்று மேலே ஏதோ பேச வாயைத் திறந்தவன், பட்டென்று அதை நிறுத்திவிட்டு “ஆமாம்... ஹயர் ஸ்டடிஸ்ஸிற்காக உன் பெரியம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாயா? நீ என்ன படிக்கிறாய்?” என்று அவளை ஆர்வமாகப் பார்த்தபடிக் கேட்டான்.


“ம்ம்ம்... வாழ்க்கையைப் படிக்கிறேன் சார்!” என்று அவனைப் போலவே தெனாவட்டாகப் பதில் கூறியவள், விசுக்கென்று திரும்பி மொட்டைமாடிக்கு ஏறிச் சென்றாள்.


அவளையே வைத்த கண் வாங்காமல் நோக்கிய சூர்யாவை, “அடப்பாவமே!” என்ற ப்ரியாவின் குரல், திசை திருப்பியது.


“வெறும் பாவம் இல்லைடி... ஐய்யோ பாவம்! இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது?” என்று மஞ்சு கேட்க,


“எதிலிருந்து தப்பினாலும் தப்பலாம்... ஆனா குழலியோட வலையிலிருந்து மட்டும் தப்பவே முடியாது போல?” என்று உணர்ந்து சொன்னாள் ப்ரியா.


“பின்ன... சும்மாவா அவளுக்குச் ‘சிலந்திவலை’ன்னு பேரு வைச்சிருக்காங்க? அதுவும் ஓரறிவு ஜீவனிலிருந்து, ஆறு அறிவு ஜீவன் வரை... எனக்குத் தெரிந்து இதுவரைக்கும் அந்த வலையில் மாட்டித் தப்பிப் பிழைத்தாகச் சரித்தரமே இல்லை. அப்படிப்பட்ட வலை அவளுடையது! ஆனா இதை அவள் முன்னாடி சொல்லிடாத... அவ்வளவு தான்... பத்ரகாளியா ருத்ரதாண்டவம் ஆடிடுவா!” என்று எச்சிரிக்கையோடு முடித்தாள் மஞ்சு.


இதை அட்சரம் பிசகாமல் கேட்ட சூர்யபிரகாஷின் கண்கள், யோசனையுடன் வெளியே நின்றவளை ஆராய்ந்தது.


அவ்விருவரும் மாடியேறும் சத்தம் கேட்க, தன் பார்வையை குழலியிடமிருந்து பிரிக்க மனமில்லாமல் பிரித்துக்கொண்டு, அவசரமாகத் தனது ஃப்ளாட்டிற்குள்ளே நுழைந்தான்.


சிலரை வாழ்க்கையில் ஓரிரு முறை தான் சந்திப்போம். ஆனால் அவர்கள் நம்முள் விட்டுச்சென்ற தடங்களை மறக்கவே முடியாது! அதுபோல் தான் சூர்யாவிற்கும்... ஏனோ அவ்வளவு எளிதில் அவனால் அவளை மறக்கவும் முடியவில்லை... மீண்டும் ஒரு வருடம் கழித்துச் சந்தித்த போதிலும்!


முட்டியில் முகம் புதைத்து, சோகமே வடிவாய் அமர்ந்து ‘விக்கி விக்கி’ அழுபவளை சிறிதுநேரம் ஒரு வலியுடன் வேடிக்கை பார்த்தவன்... அவள் இப்போதைக்கு நிறுத்துவதற்கான அறிகுறி ஏதும் தென்படாதது மட்டுமல்லாது, குளிரில் அவளது உடம்பு நடுங்க தொடங்கியதை உணர்ந்து, அதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது அவளை நெருங்கினான் சூர்யபிரகாஷ்.


“அழுதது போதும்! வீட்டுக்குப் போகலாம்... வா!” என்றான் அமைதியாக.


விசுக்கென்று தலையை உயர்த்தி சிவந்த கண்ணும், அதில் வெள்ளி மணியாய் உருண்டோடிய கண்ணீர் மல்க அவனைக் கண்ணுற்றவள், “என் வீட்டில் நான் இருக்கிறேன். நீங்க உங்கள் வீட்டிற்குப் போங்க!” என்றாள் சூடாக.


“பப்ச்ச்... இரவு முழுவதும்... அடிக்கும் சாரலில் உன்னால் இப்படி உட்கார்ந்திருக்க முடியாது! அதனால்...”


“நான் எப்படிப் போனால் உங்களுக்கு என்ன வந்தது?” என்றாள் வெடுக்கென்று.


“வேண்டாம்! நான் இருக்கும் மூடில்... வார்த்தையைக் கொட்டாதே கார்குழலி. வட்டியோடு திருப்பிக் கொடுப்பேன்!”


“இன்னும் கொடுக்க பாக்கி கூட இருக்கா? தேவையில்லாமல் உங்களுக்கும், எனக்கும் எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு? நான் எக்காரணத்திற்காகவும் அங்க வரமாட்டேன்!” என்றாள், அவள் வளர்க்கும் செல்ல பிராணி கல்யாணியைப் போல பிடிவாதமாக.


அதற்குமேல் பொறுமை இழந்தவனாய், “ப்ப்ச்ச்... நீ சொன்னா கேட்க மாட்ட இல்ல?” என்றபடி குனிந்தவன், அவளை ஏதோ பஞ்சு மூட்டையைத் தூக்குவது போல் அலேக்காகத் தூக்கிக்கொண்டான்.


‘வீல்’லென்று அலறியவள், “என்னைக் கீழே விடப் போறீங்களா... இல்லையா?” என்று மிரட்டினாள்.


அதைக் கொஞ்சமும் சட்டையே செய்யாமல், அப்படியே திரும்பிப் படியேற ஆரம்பித்தான் சூர்யா.


குழலி திமிறியபடி வீட்டில் இருக்கும் அருவாள்மனையில் தொடங்கி, உலகத்தில் இருக்கும் ஆயுதங்களையெல்லாம் வரிசைபடுத்தியதோடு நில்லாமல், அவற்றை எப்படிப் பயன்படுத்தி அவனைப் பழி தீர்க்கப் போகிறாள் என்று சூளுரைத்ததை... காது குளிர அஞ்சாநெஞ்சனாக கேட்டபடியே படியேறியவனைப் பார்த்தவளுக்கு, ரத்த நாளங்கள் வெடித்து விடும் அளவுக்குக் கொதித்தன.


இது போதாதென்று முத்தாய்ப்பாய், “நிராயுதபாணியாக நிற்கும் என்னிடம்... உன் வீர தீர பாராக்கிரமத்தை, நான் உன்னைக் கீழே இறக்கி விட்டவுடனே தொடங்கி விடுவாயா ஸ்ப்ரிங் முடி? இல்ல, அதையெல்லாம் கூட... நீ சொன்னது போல ஏவல், பில்லி, சூன்யம் பார்த்துத்தான் செய்வாயா?’’ என்று கேட்டு முறுவலித்தான்.


கோபமிகுதியில் “சூர்யாஆஆஆ...” என்றபடி வாயைத் திறந்தவள், பிறகு வாயில் ஈ புகுவது கூடத் தெரியாது திறந்தபடி மௌனமாக அவனை வெறித்தாள்.


காரணம்... இத்தனை அருகில் தெரிந்த சூர்யாவின் அந்த முறுவல், அவளை அப்படியே கட்டிப் போட்டிருந்தது!


‘உஸ்ஸ்...’ என்று உக்கிரமாகப் பொங்கி வரும் பாலின் மேல், ஒரு துளி தண்ணீர் விட்டால் எப்படி ‘புஸ்ஸ்’ என்று அடங்கிவிடுமோ... அதுபோல வெடித்துவிடும் கோபத்திலிருந்த குழலியை, அவனின் ஒரு சிறு புன்னகை சாந்தமாக்க... அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் அவள்.


சூர்யாவின் தோள்கள் அவளது கன்னத்தில் லேசாக உராய, அவனுக்கே உரிதான மனம் நாசியை நிரப்ப, அவளின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.


அந்த ஒரு நிமிடத்திற்காகவே காத்துக் கொண்டிருந்த மாறன்... தன் கரும்பு வில்லில் வண்டுகளை நாண் ஏற்றி, அரும்பு முல்லை போன்ற வாசனை மலர்களினாளான அம்பை அவர்கள் மீது தொடுத்தான்.


சூர்யாவின் நெற்றியில் புரண்ட நீண்ட முடியை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பீறிட, அவளையும் அறியாது அவனது பிடரியில் இருந்த கேசத்தைத் தொட... அவளின் உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் மேனி சிலிர்த்தது.


அவனின் கதகதப்பான மூச்சுக்காற்று அவளுடைய சிவந்த கன்னத்தைத் தீண்ட, குளிர்ந்த எவரஸ்ட் பனிச்சிகரத்தில் வெட்பமான காற்று வீசுவது போல் இருக்க, அவளுடைய கைகள் தானாக மாலையாய் சூர்யாவின் கழுத்தில் தொடுக்க... இவை எல்லாவற்றிக்கும் சிகரமாய், அந்தத் தேன் நிற விழிகளில் கரைந்து விடுபவள் போன்றதொரு பரவசத்தில், சுற்றியுள்ள உலகை மறந்து அவனிடம் ஒன்றினாள் குழலி.


அவளைப் போலவே, அவனும் குழலியின் அருகாமையால் பாதிக்கப்பட்டான் என்பதற்குச் சாட்சியாக... அவனுடைய வேகமாக ஏறியிறங்கிய மூச்சுகளும், அவளுடைய மெல்லிடையில் இறுக்கிய அவனது விரல்களும், சிமிட்டாத அவனுடைய விழிகளும் கட்டியம் கூறின.


“குழலி!” எனத் தன் ஆழ்ந்த குரலால் தாபத்துடன் அழைத்தபடி, அவளுடைய செவ்விதழில் முத்தம் பதிக்க முற்பட்டான் சூர்யா.


“பிரகாஷ்ஷ்ஷ்ஷ்...” என்ற ஆவேசமான ஒரு குரல் உரக்க அழைக்க... பேரதிர்ச்சியில் இருவரும் அப்படியே உறைந்தனர்.


முதலில் சுதாரித்த சூர்யா, பின் அவசரமாக அவளை விடுவித்து, “பாட்டி!” என்றான்.


“என்னது... பாட்டியா?” என்று இவள் அலறிய அலறலில், இன்னும் இரண்டு பேர் அங்கே வந்தனர்.


‘யார் இவர்கள்? எங்கிருந்து புற்றீசல் போல... இப்படிக் கிளம்பி வருகிறார்கள்?’ என நினைத்த குழலி, தன் கண்களைச் சுழற்ற... அது ஒரு படுக்கையறை என்பது புரிந்தது.


“இதுதான்... நீ லேட்டாக வரக் காரணமா?” என்று அவளை ஓர் அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் அவனது பாட்டி பார்க்க, கண்களைக் கட்டியது குழலிக்கு.


வேறொரு சமயமாக இருந்திருந்தால், அவர் தன்னை ஜந்துவோடு ஒப்பிட்டுப் பேசியதற்கு பிலுபிலுவென்று ஒரு பிடி பிடித்திருப்பாள். ஆனால் அந்த அசாதாரண சூழலில், அவளால் மிரட்சியுடன் சூர்யாவையும் அவனுடைய பாட்டியையும், அவரின் அருகிலிருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஓர் ஆணையும், அவளை விடவும் படப்படப்பாக இருந்த பெண்மணியையும், திகிலுடன் மாறி மாறிப் பார்த்தபடி நெடுமரமாய் நிற்க தான் முடிந்தது.


“நம் குடும்பத்தின் தகுதி என்ன... தாராதரம் என்ன? இந்த மாதிரிப் பெண்ணை எல்லாம்?”


“போதும் பாட்டி!” என்று அவரை மேலே பேசவிடாமல் தடுத்து நிறுத்தியவன், ஒருமுறை அவளை உற்று நோக்கிவிட்டு... பின்னர் ஒரு பெருமூச்சுடன் தன் பாட்டியிடம் திரும்பி “நான் மணக்கவிருக்கும் பெண்ணை... ஒரு வார்த்தை இனி தப்பா பேசாதீங்க!” என்றான் தீர்க்கமாக.


“என்ன?”


“என்ன?”


“என்ன?”


‘என்ன?’ என்று ஆளாளுக்கு ஓர் ‘என்ன’ போட்டதில், குழலியின் ‘என்ன’ காணாமல் போனது!


தொடரும்...

அடுத்த பதிவு - திங்கள்

DEAR READERS...

உங்களின் மேலான கருத்துக்களை கீழே தெரிவிக்கவும்.
 
Top