கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே!!!... அத்தியாயம் - 9

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 9


அவன் அமிலமாய்க் கொட்டிய வார்த்தைகளைக் கேட்டு மனதால் பொசுங்க, மனமும் கண்ணும் கலங்கிய போதும் ஆவேசமாகப் பதில் பேச வாய் எடுத்தாள் கார்குழலி.


“சொல்லிட்டுத் தானே போனேன் பிரகாஷ்... கல்யாணம் முடியும் வரை ஒழுக்கமா இருக்கணும்னு?” என்ற பாட்டியின் குரல் அதிகாரமாகக் காதில் விழ, இருவரும் துள்ளிக் குதித்துப் பின்னால் நகர்ந்தனர்.


அவன் முதுகிற்குப் பின்னாலிருந்து பார்ப்பவர்களுக்கு, எப்படிக் காட்சி தந்திருப்பார்கள் என்று புரிய... விக்கித்துப் போய் அவனையே பார்த்தாள் குழலி.


“என்ன அவனையே பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? இங்கே வா!” என்று பாட்டி தோரணையாகப் பேச, இப்பொழுது புரிந்தது சூர்யாவிற்கு எங்கேயிருந்து இத்தனை மிடுக்கு வந்தது என்று!


கால்கள் தள்ளாட அருகே வந்தவளை ஏற இறங்க ஒரு முறை பார்த்தவர், “நல்லகாலம்! நான் உன் பெற்றோர்களை ஸ்டேஷனுக்கு அனுப்பி... உன் பெரியம்மா பெரியப்பாவை அழைத்து வரச் சொன்னேன்! இல்லன்னா...” என்று முடிக்காமல் நிறுத்தி, இருவரையும் பார்த்தாரே ஒரு பார்வை.


இவருக்கு ஏன் ‘நீலாம்பரி’ என்று பட்டப்பெயர் வைத்தார்கள் என்று அந்த நொடி புரிந்தது.


‘அம்மா... அப்பா...’ என்ற வார்த்தைகள் தாமதமாக மனதில் பதிய, ‘அப்போ அதெல்லாம் கனவு இல்லையா?’ என்று உறைக்க, “என்னது பெரியம்மா, பெரியப்பா அதுக்குள்ள வர்றாங்களா?” என்று மண்டையைக் குடைந்த கேள்வியைக் கேட்டாள்.


“அவங்க சரியாத்தான் வர்றாங்க. நீ தான் என்ன தேதி, நாள்ன்னு தெரியாத நிலையில் படுத்து இருந்த... கிட்டத்தட்ட பத்து நாள்!” என்றார் பாட்டி.


‘கடவுளே! இன்றைய அதிர்ச்சிக்களுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?’ என்று சோர்வாக எண்ணியபடி, “அப்பா, அம்மா எப்போ வந்தாங்க?” என்றாள் கிசுகிசுப்பாய்.


“அவங்க வந்து நாலு நாள் ஆச்சு. உனக்கு உடம்புக்குச் சுகமில்லைன்னு சொன்னதுமே... உடனே வர்றேன்னு தான் சொன்னாங்க. ஆனா மழையால் வர முடியவில்லை!”


“அவங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்க வீட்டிற்கு போன் பண்ணிச் சொன்னீங்களா?” என்று கண்களைத் திருப்பி, அவனிடம் வினவினாள்.


“நீ மயங்கி கிடந்தபோது... உன் வீட்டிலிருந்து நொடிக்கு ஒரு கால் வந்த வண்ணம் இருந்தது. அதனால்...” என்று இழுத்தான் சூர்யா.


“அதனால்... நான்தான் எடுத்துப் பேசினேன்!” என்று குறுக்கே புகுந்தார் பெரியவர்.


“என்ன... என்ன பேசினீர்கள்?” என்றாள் பரிதாபமாக.


“நீங்க ரெண்டு பேரும் அடிச்ச கூத்தையெல்லாமா சொல்ல முடியும்? அப்படிச் சொன்னா... என் குடும்ப மானமும் சேர்ந்து தானே கப்பலில் ஏறும்?” என்று நொடித்தவர், “அதனால... உன் அப்பாவிடம் நீங்க இரண்டும் பேரும் காதலிப்பதை பக்குவமாகச் சொல்லி, மத்த விஷயமெல்லாம் நேரில் பேசுவதாகச் சொன்னேன்! அதே மாதிரி, மழை வெள்ளம் வடிந்தவுடன் வந்தவர்களிடம்... எல்லாம் பேசி முடிச்சாச்சு! ஜோசியரைப் பார்த்ததில்... இரண்டாவது வாரத்தில் நல்லநாள் ஒன்றை குறித்துத் தந்திருக்கார். அதற்கும் உங்க அப்பா சம்மதம் சொல்லிவிட்டார்! இன்று மாலையே உன்னை முறைபடி பெண் கேட்டு... உன் பெரியம்மா வீட்டுக்கு வருவதாகவும் சொல்லிட்டேன்!” என்றார் தடாலடியாக.


பாட்டி மூச்சு விடாமல் சொல்வதைக் கேட்க, அவளுக்குத் தான் மூச்சு முட்டியது.


‘என்னது... பக்குவமாகவா? என் தந்தையிடம் எந்த லட்சணத்தில் இந்த நீலாம்பரி பாட்டி பக்குவமாகச் சொல்லி இருந்தால்... தன்னிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் பெண் கேட்டு வர சம்மதித்து, கல்யாணத் தேதி வரை குறித்திருப்பார்கள்? இந்நேரம் இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியிருக்குமே? ஒரே இரவில்... என் வாழ்கை தடம் மாறி, திசை மாறிப் போகக் கூடுமா?’ கதைகளிலும் சினிமாவிலும் தான் இப்படி மாறும் என்று கிண்டலடித்தவள், தன் வாழ்க்கையில் அதை நேரடியாகக் காணவும் தாங்க முடியவில்லை அவளுக்கு!


“என்ன சூர்யா இது?” என்றாள் துக்கம் தெண்டையை அடைக்க.


“ஏன் நான் சொன்னால் நம்ப மாட்டியா? அவன் சொன்னால் தான் நம்புவாயா?” என்றார் பாட்டி மிடுக்காக.


“அது பாட்டி... வந்து... வந்து”


“அதுதான் வந்தாச்சே! அப்புறம் என்ன வந்து... வந்துன்னு இழுக்கிற?”


“இல்ல பாட்டி!” என்று சூர்யா குறுக்கே புக முயல,


“அவளுக்கு வாய் இல்லை... அவள் பேச மாட்டாளா?” என்று பாட்டி கண்டிப்பாகக் கூற, எதுவும் பேசாமல் அமைதியானான்.


“இப்படி திடுதிப்புன்னு கல்யாணம்னா... எனக்கு ஒண்ணுமே புரியலை!”


“உனக்கு மட்டுமா புரியலை... எனக்குக் கூடத் தான்! உன்னைக் காட்டி, நான் கட்டிக்கப் போகும் பெண் இவள் தான்னு சொல்லும்போது... ஒண்ணும் புரியலை! ஏன் இப்பக் கூட...”


“தட்ஸ் இட் பாட்டி... இனி அதைப்பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம்! நாள் குறித்துச் சொல்லியாச்சு இல்ல... அதோட விடுங்க!” என்று முடித்து விட்டான்.


குழலி மேலே பேச வாய் திறப்பதற்குள்... பாட்டி அவளைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் ஏதோ கேட்க ஆரம்பிக்க... சிறிது நேரம் அமைதியாக இருந்த சூர்யா, சீக்கிரத்தில் கழன்று கொண்டான்.


எவ்வளவு யோசித்தும்... நடந்த சம்பவத்தை யாரிடம் எப்படிச் சொல்வது என்று புரியவே இல்லை அவளுக்கு!


‘என்னவென்று சொல்லி விளக்க? முதலில் எப்படி விளக்குவது?’ என்று கூடப் புரியாது, மனதிற்குள் குமைந்து கொண்டே வேண்டாவெறுப்பாக பாட்டியிடம் பேசும்போது தான்... சூர்யா சிறுவனாக இருக்கும் போதே அவனுடைய பெற்றோர் இருவருமே ஒரு விபத்தில் மறைந்துவிட்டார்கள் என்பது புரிய வர, முதல் முறையாக அவன் மேல் இரக்கம் பிறந்தது. ஏன் பாட்டியிடம் மரியாதையாகப் பேசச் சொன்னான் என்றதும் புரிவது போல் இருந்தது.


‘தஞ்சாவூர் ஜமீன் கமலம், தன் பேரனுக்குப் பெண் கேட்டு வந்தால்... பெண்ணைப் பெற்றவர்கள் சந்தோஷத்தில், அப்படியே பெண்ணிடம் ஒரு வார்த்தை கூடச் சம்மதம் கேட்காமல்... சரி என்று சொல்லி விடுவார்களா?’ என்று மனதிற்குள் குமைந்தாள்.


அதுவும் தன் தந்தை அப்படிப்பட்டவர் இல்லை என்று நன்கு அறிவாள். பணத்திற்காகவும், பதவிக்காகவும் கூட தன் பிறந்த ஊரை விட்டு வெளியே போகாது, சொந்த ஊரிலேயே வாத்தியார் வேலை செய்யும் அவர், ஏன் இப்படிச் செய்தார் என்று சுத்தமாகப் புரியவில்லை.


குழலியின் தந்தை, எப்பொழுதும் அவளின் தந்தையாக மட்டும் இருந்ததில்லை. சிறந்த ஆசானாக, மனது ஒடிந்து துன்பப்பட்ட வேளையில் உற்ற நண்பனாக, அதுவும் அவள் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு திக்கு தெரியாத காட்டில் முட்டிக்கொண்டு நின்ற வேளையில், அவளுக்குப் பக்க பலமாக இருந்து புதிய பாதையைக் காட்டியவர். அதுவும் அன்று காவேரி படுகையில், அவர் சொன்ன வார்த்தைகள் மறக்கவே முடியாதவை.


கண்களில் வெள்ளம் பெருக்கெடுக்க, இலக்கின்றி வெறித்தபடி துள்ளி ஓடும் காவேரியைப் பார்த்துக்கொண்டு இருந்தவளின் அருகில் அமைதியாக வந்தமர்ந்தார் அவளின் தந்தை.


“யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் - இந்தக் குறளை உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன்டா கண்ணா?” என்றபடி அவளது தோளைத் தொட்டார்.


நீர் முட்டிய கண்களோடு, “அப்பா! தூப்பாக்கியை என் கையால் எடுக்கக் கூட முடியாத நிலையில் இருக்கேன்! இப்ப போய்... ‘எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ... அந்தந்தப் பொருளால்... துன்பம் அடைவதில்லை’ன்னு தத்துவம் சொல்றீங்களேப்பா?” என்றாள் ஆற்றாமையோடு.


மென்மையாகச் சிரித்தவர், “திருக்குறளோட சிறப்பே... எந்த இடத்திலேயும் அதைப் பொருத்திப் பார்க்க முடியும்டா கண்ணா! இப்ப ஏன் இந்த அழுகையும், அரற்றலும்... சொல்லு?” என்று கனிவாகக் கேட்டார்.


“என்னப்பா எல்லாம் தெரிந்தும்... ஒன்றுமே தெரியாத மாதிரிக் கேட்கிறீங்க? என் கனவு, லட்சியம், பயிற்சி... எல்லாம் வீணா போச்சேப்பா! இனி நான் எந்தக் காலத்திலும் ப்ரொபஷனல் ஷூட்டராக ஆக முடியாதேப்பா!” என்றாள் துக்கம் தொண்டையை அடைக்க.


“இப்ப உனக்கு எது மேல் ஆசை குழலி... துப்பாக்கி சுடுவதிலா? இல்ல துப்பாக்கி சுடுவதில் வரும் பணம், பேர், புகழிற்காகவா?” என்று கேட்டபடி, அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினார்.


“அப்பா?” என்று பதில் சொல்லத் தெரியாது, மலமலங்க விழித்தாள் குழலி.


“உன்னை எல்லாத்தையும் துறந்து, பற்றற்று ஞானியாகச் சொல்லவில்லை! உன் பற்றைத் துப்பாக்கி சுடுவதில் வைத்திருந்தால்... உனக்குத் துன்பம் இல்லை! ஏன்னா... நீ எடுத்த பயிற்சியும், அதன் பலனும் உன்னோடு தான் இருக்கும். அதை யாராலும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது! இனி அதை ப்ரொபஷனலாக எடுக்க முடியாவிட்டாலும்... உனக்குப் பிடித்த நேரத்தில் பயிற்சி செய்யலாம்! ஆனால் நீ வைத்த பற்று... துப்பாக்கி சுடுவதில் மட்டும் இல்லை. துப்பாக்கி சுடுவதினால் வரும் பெருமைக்காகவும், புகழிற்காகவும் கூட ஏங்கியிருக்கிறது... அதனால் தான் உனக்கு இவ்வளவு கஷ்டமும், அழுகையும்!” என்று அமைதியாக ஒரு சிறிய விளக்கத்தின் மூலம் அவளது கண்களைத் திறந்துவிட்டார்.


“யாரால் அப்படி இருக்க முடியும் அப்பா?” என்றாள் ஆச்சரியமாக.


“இருக்கப் பழகணும் கண்ணா! எப்போ நாம் வேண்டி விரும்பியது கிடைக்கவில்லையோ... அப்போ அவற்றால்... பின்னால் விளைய போகும் துன்பங்களையும் கூட நாம் இழக்கிறோம் என்று உணரும் பக்குவம் வர வேண்டும்!”


அன்று அவள் தந்தை சொன்னது பசுமரத்து ஆணி போல் மனதில் நின்றது.


‘அப்படித் தெள்ளிய சிந்தனை உடையவர், இப்படி நடந்து கொண்டதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்!’ என்று மனதில் உதிக்க, அவளுள் புரிந்தும் புரியாத ஒரு படபடப்பு உருவாகியது.


அடுத்த அரை மணிநேரத்தில்... அவளது பெரியம்மா, பெரியப்பா, அம்மா, அப்பா என அனைவரும் வந்து சேர... நல விசாரிப்புகளிலேயே அரை நாள் கழிய... குழலி, தன் தந்தையைத் தனிமையில் சந்திக்க மாலை ஆகியிருந்தது.


“என்னடா?” என்று அவள் முகக்குறிப்பிலேயே கண்டுகொண்டு கேட்டார் தேவநாதன்.


“அப்பா! நான்...” என்று எதையும் முழுதாகக் கேட்க முடியாமல் தடுமாறினாள் குழலி.


“நானா தேடிப் பிடித்திருந்தாலும்... இப்படி ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்து இருக்கமாட்டேன் டா கண்ணா!” என்று வாஞ்சையுடன் கூறினார்.


மயக்கம் வராத குறையாக அவரை வெறித்துப் பார்த்தாள் குழலி.


“எந்த ஒரு தகப்பனுக்கும், தன் பெண்ணைக் கட்டிக்கொள்ளும் பையன்... அவளைப் பத்திரமா, கண் கலங்காம பார்த்துப்பானா என்ற சந்தேகம் தான் முதல்ல இருக்கும்! ஆனா மாப்பிள்ளையைக் கலங்கடித்து, கதறிக் கதறி அழ வைக்கப் போற உன்னைத் தாக்குப்பிடிக்கும் தைரியசாலியான மாப்பிள்ளையை... எங்கே போய் நான் தேடிக் கண்டுபிடிப்பதுன்னு உள்ளுக்குள்ளே ஒரு பயம்!” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்,


இத்தனை நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் “அப்பா...ஆஆஆ!” என்று கூவியபடி, தன்னை மீறி சிரித்தாள்.


“ஆ... இது அழகு! உம்முன்னு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்... பார்க்க சகிக்கலை! சரி சரி... இப்ப முக்கியமான விஷயத்துக்கு வருவோம்!” என்று சிரித்தபடி கையை உயர்த்தியவர், “நாங்க வருவதற்கு முன்னாடி, நீ உடம்பு முடியாமல் இருந்த ஐந்து நாளும்... மாப்பிள்ளை தான்டா உன்னைப் பார்த்துக்கிட்டார். எவ்வளவு பொறுமை அவருக்கு?” என்று சிலாகித்தார்.


‘என்னது... அவன் பார்த்துக்கொண்டானா?’ என்ற அதிர்ச்சியைத் தாங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சியாக அவளது தந்தை “அவர் பொறுமை!” என்று சொல்ல... இம்முறை அதிர்ச்சி தாங்காமல் வேகமாக எழுந்தமர்ந்தாள்.


பின்னே சூர்யாவிற்கும், பொறுமைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?


“அப்பா!” என்று அவள் அழைக்க,


“என்னடா முடியலையா?” என்று அவள் உட்கார்ந்ததைத் தவறாகப் புரிந்து கொண்டு, பதறிப் போய்க் கேட்டார்.


“அதில்லப்பா...”


“உனக்கு நேரமாச்சு ரெடி ஆகணும் இல்ல?” என்று சொன்னவர், “நான் எதுக்குத் தெரியுமா... உன்னிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதித்தேன்? இந்தப் பத்து நாளா... அவரைத் தவிர வேறு யாராலேயும் உனக்கு மாத்திரை கொடுக்க முடியவில்லை! மாப்பிள்ளையின் குரலைக் கேட்டால் மட்டும் தான்... நீ மாத்திரை சாப்பிடவே வாயைத் திறந்த! எவ்வளவு பொறுப்பா... உன்னைப் பார்த்துக் கொண்டாருன்னு நான் கண்கூடா பார்த்தேன். இதுக்கு மேல வேற என்னத்தை அவரிடம் எதிர்பார்த்திருக்கப் போகிறேன் நான்?”


இதற்குமேல் பேச எதுவும் இல்லை என்பது போல் சந்தோஷமாக அவளது தந்தை வெளியேற, வாயடைத்துப் போய் நின்றவளுக்கு அடுத்த ரௌண்ட் ஜுரம் வரும் போல் இருந்தது.


அவள் அப்படி நின்றது அன்று மட்டுமல்ல... அடுத்து வந்த நாட்களும் அதே கதியில் பறக்க... ‘ஜீ...பூம்...பா’ என்பது போல அடுத்த இரண்டே வாரத்தில், சூர்யபிரகாஷின் குலவழக்கபடி திருப்பதியில் அவர்களது கல்யாணம் முக்கியக் குடும்ப அங்கத்தினர் புடைசூழ அமர்க்களமாக அரங்கேறியது.


திருமணத்திற்கு முன்பு, தேவநாதன் ரிசப்ஷன் பற்றிப் பேச...


தயவு தாட்சண்யம் இல்லாமல், “வேண்டாம் மாமா! முதலில் இது கல்யாண சீஸன். பெரிய மண்டபமோ... இல்லை நல்ல ஹோட்டலோ லாஸ்ட் மினிட்டில் கிடைப்பது கஷ்டம்! அப்படியே கிடைத்தாலும்... நிறைய வி.வி.ஜ.பிக்களை அழைக்க வேண்டி வரும். கடைசி நிமிஷத்தில் கூப்பிட்டால் அவர்களுக்கும் சிரமம், நமக்கும் செக்யூரிட்டி ஸீட்டிங் என்று ஏகப்பட்ட தலைவலி! எனக்கு அதையெல்லாம் கவனிக்க நேரம் இல்லை மாமா! இதற்குத்தான் மணநாள் அன்று... நம் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு போனஸும், நம் பண்ணையில் வேலை செய்யும் எல்லோருக்கும் உடை மற்றும் விருந்து சாப்பாட்டிற்கும் ஏற்பாடு பண்ணியாச்சே?” என்று சொல்லி, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.


‘திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று செல்வதுண்டு... தன் வாழ்க்கையில் இனி எத்தகைய திருப்பங்கள் வரப் போகிறதோ?’ என்று நினைவோடு, சூர்யாவின் கையால் தாலி கட்டிக்கொண்டாள் கார்குழலி.


திருப்பதியில் கல்யாணம் முடிந்த கையோடு, தஞ்சாவூர் வந்த மணமக்களை அவர்களின் பரம்பரை வீட்டிலேயே தங்க வைக்க... மறு வீடு, அரசு சுற்றல் என்று அலைகழித்தது போதாதென்று ஜமீன் குடும்பத்திற்கே உரிய சாஸ்திர, சம்பிரதாயம் என்ற பெயரில் அடுத்து வந்த பத்து நாட்களும், தம்பதியனரை நீலாம்பரி பாட்டி கோயில் கோயிலாக இழுத்துக்கொண்டு திரிய... குழலிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.


முதல்நாள் கோயில் என்றவுடன் ஆர்வமாகச் சென்றவள், பின் அடுத்தடுத்து மூச்சு விடக்கூட நேரமில்லாமல் சூறாவளி சுற்றுப்பயணமாகத் திரியவும், ஒரே வெறுப்பாக இருந்தது.


‘இப்படித் தேஷாடனம் போனால்... மனுஷனுக்குக் காவி கட்டிக்கொண்டு சந்நியாசம் வாங்கத் தோன்றுமா? இல்லை சம்சார சாகரத்தில் தொபுக்கடீர் என்று விழத் தோன்றுமா?’ என்ற விபரீதமான கேள்வி நாவில் எழ, அதைப் பெரும் பாடுபட்டு மென்று விழுங்கி, எரிச்சலுடன் கண்களைச் சுழற்றியவளுக்கு... தன் சமீபத்தில் நின்றிருந்த அவளது மணாளன் மீது பார்வை பதிந்தது.


எப்பொழுதுமே ட்ரண்டியாக ‘அக்மார்க் சிட்டி பாயா’கத் திரியும் அந்த எஸ்.பியா இவன் என்று கண்டவர் எல்லாரும் மூக்கின் மீது விரல் வைத்து அதிசயக்கும் அளவிற்கு... பட்டுவேட்டி சட்டை அணிந்துகொண்டு, அதை உடுத்தியிருப்பதற்கான சங்கோஜமோ, இல்லை நடையில் தடுமாற்றமோ சிறிதுமில்லாமல் அவனின் ட்ரேட் மார்க் வேக நடையுடனே வர... புகைச்சலாக அவனை வெறித்தாள்.


குறைந்தபட்சமாக அந்த உடை அவனுக்குப் பொருந்தாமல் ‘காமா சோமா’வென்று இருந்திருந்தாலாவது, குழலிக்குக் கொஞ்சமேனும் சமாதானம் கிட்டியிருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த உடைக்கே உரிய மிடுக்குடன் அவன் பவனி வர, புகைவண்டியை விட அதிகமாகப் புகைந்தது அவளுள்.


இது போதாதென்று, கோவிலுக்கு வரும் இளம் பெண்களின் பார்வை வேறு அவனையே மொய்த்துத் தொலைக்க... அவளால் பொறுக்க முடியவில்லை!


‘கொடுமை... கொடுமை என்று கோயிலுக்கு வந்தால்... அங்கே இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்!’ அந்தக் கதையாக, இந்தக் கூத்தையே ஜீரணிக்க முடியாமல் அவள் பொருமிக்கொண்டு நின்றிருக்கையில்...


சூர்யாவின் பாட்டி வேறு, சும்மா தேமே என்று போய்க் கொண்டிருந்த ஜடாமுடி ஐயரை நிறுத்தி, அந்தப் பழம்பெரும் கோயிலின் ‘ஸ்தல வரலாறை’க் கேட்டு வைக்க... அவரும், ‘நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் டா!’ என்ற ரீதியில் ஒரு கதாகாலட்ஷேபத்தையே சப்லா கட்டை இல்லாமல் அரகேற்றம் செய்தார்.


மிதமிஞ்ச ஆத்திரத்தில் தன் கையிலிருந்த அர்ச்சனை தேங்காயை, சிதறு தேங்காயாக அவன் மண்டையில் உடைத்தால் என்ன என்ற வேட்கை தலைவிரித்து ஆட... பொது இடம் கருதி மிகவும் பிராயசனப்பட்டு தன்னை அடக்கி அமைதி காத்தாள்... நம் மங்கையர்கரசி கார்குழலி!


பின்னே? தூக்கமின்மையும், சோர்வும் அவளை வாட்டி வதைக்க... எதைக் கண்டாலும் எரிச்சலாகத் தான் இருந்தது அவளுக்கு! அதற்குக் காரணம்... இதோ அவள் பக்கத்தில் தலையைத் தலையை ஆட்டி, கதை கேட்டுக் கொண்டிருக்கும் அவளின் அருமை மணாளன் தான்!


மணமான பின், இருவருக்கும் தஞ்சாவூர் வீட்டில் ஒரே அறையில் தங்க வேண்டிய நிர்பந்தம். அந்தப் பெரிய கட்டிலில் தனது லேப்டாப், ஐபோன், டாப்ளட் சகிதமாக ‘பப்பரப்பா’ என்று பரப்பிக்கொண்டு, சூர்யா தன் வேலையில் படு மும்முரமாக ஈடுபட... குழலி தான் பல்லைக் கடித்துக்கொண்டு ‘கிராதகா!’ என்று மனதார சபித்தபடி, படுக்கையை விரித்துக் கீழே படுத்தாள்.


அசதியில் தூங்கியவளின் காலை யாரோ மிதிக்க, அலறியடித்துக் கொண்டு எழுந்தவளுக்கு முதலில் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை. அதன்பின் அவன்தான் தூக்கக் கலக்கத்தில் எழுந்து ஸ்விட்சை தேடும்போது, கீழே படுத்திருந்த தன்னைத் தெரியாமல் மிதித்திருக்கிறான் என்று புரிய, அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் அதன்பின் தூக்கமே வரவில்லை.


இப்படியே அடுத்த ஒரு வாரமும் பகலில் ஊர் ஊராகச் சுற்றுவதும், இரவில் அவனிடம் இடிபட்டு மிதிபடுவதுமாகக் கழிய... எதைக் கண்டாலும், கேட்டாலும் எரிச்சலாக வந்தது. அதோடு அவன்மீது மீளாக் கோபத்தில் வேறு இருந்தாள் குழலி!


சரியாக மணமான மூன்றாம் நாள் இரவு, அவன் ஏதோவொரு கவரை நீட்ட “என்ன?” என்றாள்.


“எழுத படிக்கத் தெரியும் தானே... பிரித்துப் பார்!” என்று சுள்ளென்று பதில் வந்தது.


“இது ஆங்கிலத்தில் எழுதியிருக்கு. எழுத்து கூட்டிப் படிக்க எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகும். உங்களுக்குப் பரவாயில்லை என்றால்... எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!” என்று அவள் வாய் வளர்க்க,


கண்ணை மூடி அவள் சொன்ன செய்தியை ஜீரணிக்கப் பெரும்பாடு பட்டவனைக் காண, அவளுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.


‘பின்னே, சொல்லப் பிடிக்கவில்லை என்றால்... பிரித்துப் பார் என்று சொல்ல வேண்டியது தானே? இப்படிச் சொல்லிய பின், இதைப் பிரித்துப் பார்க்க... எனக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?’


“பிடிக்கலன்னா கூட நீ என் மனைவி! இந்தக் குடும்பத்திற்கு என்று ஒரு கௌரவம், மரியாதை இருக்கிறது...”


“கல்யாணம் ஆன இரண்டே நாளில்... அப்படி உங்க மான மரியாதையைக் கப்பலில் ஏறும்படி என்ன செய்துவிட்டேன்?” என்றாள் எரிச்சல் மிக.


“ஓ! லிஸ்ட் போட வைக்காதே கார்குழலி... சுருக்கமாகச் சொல்றேன்! உன் செலவிற்குப் பணம் வேண்டும் என்றால்... என்னிடம் கேட்க வேண்டியது தானே? அது என்ன பாட்டி மூலமாக என்னிடம் கேட்பது?”


“என்னது? நான் பணம் கேட்டேனா... அதுவும் பாட்டி மூலமாகவா? என்ன உளறுறீங்க?” என்றவள், ‘உன்னிடமும், உன் பாட்டியிடமும் பணம் கேட்க எனக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?’ என்று நினைத்துக் கொண்டாள்.


“ம்ம்ம்... முன்னாடியே சொல்லியிருக்கேனே... எனக்கு நடித்தால் பிடிக்காதுன்னு! எதுவாக இருந்தாலும்...”


“சும்மா சும்மா... என்ன நடிப்பு, நடிப்புன்னு சொல்லிக்கிட்டு திரியறீங்க? உங்க பாட்டி வேற ஏதாவது சொல்லி இருக்கப் போய்... நீங்க அதைத் தப்பா புரிந்து இருப்பீங்க!”


நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறும் அளவு அவனது பாட்டி ஒன்றும் கீழ்த்தரமான ஆளில்லை என்கிற அளவுக்கு, கடந்த சில நாட்களில் அவரைப் புரிந்து வைத்திருந்தாள்.


“என் பாட்டி சொல்வதைப் புரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இனி நீ குண்டூசி வாங்கினாலும்... அது என் காசில் தான் இருக்கவேண்டும்! இந்த வீட்டில்... யாரும் அடுத்தவரிடம் எதற்காகவும் கை நீட்டிப் பழக்கமில்லை!” என்று மொழிந்தவன்... வெடுக்கென்று அவள் கையிலிருந்த கவரைப் பறித்து, பரபரவென்று பேப்பரைக் கிழித்து, அதிலிருந்து இரண்டு கார்டுகளை எடுத்தான்.


அதை அவள் முகத்தின் முன் காட்டி, “இது டெபிட் கார்ட்... மாதா மாதம் வீட்டுச் செலவிற்குத் தேவையான தொகையை இதில் டெபாசிட் செய்துவிடுவேன்! இது க்ரெடிட் கார்ட்... உன் தனிப்பட்ட செலவிற்காக! கையில் கார்ட் கிடைத்துவிட்ட குஷியில்... கண்டபடி செலவு செய்யாதே! இது ஆட் ஆன் கார்ட். நீ செலவு செய்யும் ஒவ்வொரு பில்லும் எனக்குத்தான் வரும்!” என்று நீளமாக உரைத்துவிட்டு, அவள் கையில் திணித்தான்.


தீச்சுட்டது போல் பதறி, “யாருக்கு வேணும் உங்க கார்டுகள்? இந்தக் கருமத்தை நீங்களே வைத்து அழகு பாருங்க!” என்றபடி அவ்விரு கார்டுகளையும் அவன் மார்பிலேயே விட்டெறிந்தாள்.


“இது இல்லாம இத்தனை நாள் வாழத் தெரிந்த எனக்கு... இனியும் வாழ முடியும்!” என்றாள் காட்டமாக.


“அப்படியா? ஒன்று தெரியுமா கார்குழலி... புலி தன் கோடுகளை மாற்றிக் கொள்வதே இல்லை! ஏன்னா... அந்த வரிகள் மேல் தோலில் மட்டும் இருப்பதில்லை. தோலின் அடி வரை... வரி வரியாகத் தான் இருக்குமாம்! இந்தத் திடீர் உத்தமி வேஷம் எத்தனை நாளென்று... அதையும் தான் பார்ப்போம்!” என்று தெனாவட்டாக மறுமொழித்தான் சூர்யா.

தொடரும்..

DEAR READERS...

தங்களின் மேலான கருத்துக்களை கீழே பதிவிடவும்.
 

Dra ananth

New member
Paarrrahhhh..... surya tablet கொடுத்தா மட்டும்தான் சாப்டுவாளா????
என்ன இப்படி டக்குனு கல்யாணத்தை முடிச்சிடீங்க !!!!
This surya கும் kuzhali கும் பெரிய misunderstanding pola...
 

Mehala Devi

New member
ரெண்டு பேரும் அடிச்சிக்க போறாங்க. சண்டை எப்போ சமாதானம் ஆகும். Nice epi. Tq kothai.
 
Top