கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -22

Jothiramar

Moderator
Staff member
என் வானம்-22


குட் மார்னிங் டேடி, குட் மார்னிங் மாம், பத்துக்கா எனக்கு ஒரு காபி என்று சத்தமாக சொல்லிவிட்டு தன் அப்பாவின் அருகே அமர்ந்தாள் தேவா.


தேவா என்ன இது? தூங்கி எழுந்ததோடு வந்திருக்க, போ போய் முதல்ல பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வந்து காபியை குடி என்று மகளை அதட்டியவர், பத்மா தேவாவுக்கு காபியை கொண்டு வராதே என்று உத்தரவிட்டார்.


அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் பத்மா.


தேவா சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு உட்கார்ந்துகிட்டே இருக்க என்று சத்தமிட, தன் அருகே நிழலாடுவதை கண்ட குணமதி என்ன பத்மா இங்கேயே நிற்கிற?


அம்மா பாப்பாவுக்கு போட்ட காபித்தண்ணிய என்ன செய்றதுங்க என்று தயக்கத்துடன் சொல்ல, என் தலையில கொட்டு என்ற முதலாளியம்மாவை பார்த்து அதிர்ந்தாள் பத்மா.


மாம் இப்போ எதுக்கு பத்துக்காவை திட்டுறிங்க என்று வந்த இளைய மகளை பார்த்தவர், முதல்ல நான் சொன்னதை செஞ்சிட்டு வந்து அப்புறமா நியாயம் அநியாயம் பத்தி பேசலாம் என்று கடுப்படிக்க… அம்மாவுக்கு என்னாச்சி வழக்கத்தை விட இன்னைக்கு கோபத்துல கொந்தளிக்குறாங்க” என்ன காரணமா இருக்கும் என யோசித்தவளுக்கு பதில் கிடைக்கவே இல்லை.


பத்மா ஏன் இன்னும் கையிலேயே வச்சிட்டு தவமிருக்கிற, அந்த காபியை ப்ளாஸ்க்ல ஊத்திவச்சிடு, கழுத எப்போ வேணாலும் குடிச்சிக்கட்டும்…லீவ் நாள் வந்துட்டா போதும், இவகிட்ட போராடியே என் பிராணன் போகுது என்று அலுத்துக் கொண்டார் குணமதி.


போங்க மாம், சின்ன புள்ளையை போய் இப்படி திட்டுறிங்க? என்று கண்ணில் கண்ணீரை நிறைக்க,

தேவா, அம்மா ஏற்கனவே பல டென்ஷன்ல இருக்கேன் தொல்லை செய்யாமல் போ என்று விரட்ட,

அவளோ தன் அம்மாவை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.


இதை எதிர்பார்க்காத குணமதியோ, “ஐயோ, ராமா என்னை படுத்துறாளே, அடியே தேவா, என்னை விடுடி, நான் கோயிலுக்கு போகணும், பல் தேய்க்காமல், குளிக்காமல் என்னை தொடாதே என்று சத்தமாக சொல்லியும், தேவா அவரை விடவில்லை.


என்னங்க உங்க பொண்ணுக்கிட்டே இருந்து என்னை காப்பாத்துங்க" என்று கணவனை பார்த்து சத்தமாக குரல் கொடுக்க, இளவேந்திரனிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லை என்பதை கண்ட குணமதிக்கு கோபம் அதிகரித்தது.


உன் அப்பாவை பாரு தேவா, இவ்ளோ கத்து கத்துறேனே, அவர் காதுல விழுந்திருக்கும், அப்படி என்ன தான் அந்த செய்தியில இருக்கோ தெரியல, இடியே விழுந்தாலும், அவருக்கு கேட்காது என்ற குணமதியின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது.


அப்படி என்ன தான் அந்த செய்தியில சொல்லிட்டு இருக்காங்க என்று தன் அம்மாவை விடுவித்துவிட்டு டீவியை பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதுல அப்படி என்னத்த சொல்லிட்டாங்க இடைத்தேர்தல் எப்போன்னு தேதி அறிவிச்சி இருக்காங்க, இதையா டேடி அவளோ சீரியஸா ஃபேஸ வச்சிட்டு பார்க்கிறாங்க! என்று நினைத்தவள் அதை அலட்சியப்படுத்திவிட்டு , ம்மா இதுல அப்படி என்னதான் சொல்லுறாங்க? எனக்கு போரிங்கா இருக்கு மாம், ஆனால் அப்பாவை பாருங்க முகமே சீரியஸா இருக்கு என்று சொல்லவும்,


உன் அப்பா முகமே அப்படித்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, எப்படி டேடி போயும் போயும் இவனுக்கு சீட் கொடுத்திருக்காங்க என்று கோபத்தில் பொங்கிய அக்காவை பார்த்து, ஏன்கா அப்படி சொல்ற?

இவன் எல்லாம் எம்எல்ஏ வா வந்தால் நம்ம நாட்டையே வித்துட்டு போய்ட்டே இருப்பான் என்றாள் கவி அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம்.


உன் அக்கா சரியாத்தான் சொல்றா தேவா, ம்கும் இனி என்னென்ன நடக்குமோ தெரியல என்றபடியே எழுந்த இளவேந்திரன், குணா போகலாமா? என்று கேட்க,


நான் எப்பவோ ரெடி நீங்க தான் லேட் என்று முகத்தை திருப்பினார். மனைவியின் கோபத்தை கண்டு நகைத்துக் கொண்டவர், சரி சரி பூஜை சாமானை எடுத்துக்கிட்டியா நாம போகலாம் என்றவர், டிரைவருக்கு போன் செய்து காரை கொண்டுவர சொன்னார்.


கவி வீட்டுலேயே இரு, உன்கிட்ட நானும் உன் டேடியும் பேசணும், வேலை அது இதுன்னு நீ பாட்டுக்கு வெளியே போகாதே என்று குணமதி கண்டிப்புடன் சொல்ல,


ஐயோ மாம் எனக்கு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு அதை முடிச்சிட்டு சீக்கிரமே வந்துடுறேன் ப்ளீஸ் என்று கெஞ்சவும் சரி சரி ஆனால் பாத்து பத்திரமா போய்ட்டுவா, ரொம்ப நேரம் வெளியே இருக்காதே என்று தன் சம்மதத்தை சொன்னவர், தேவாவிடம் திரும்பி, நீயும் வெளில சுத்த போகாதே வீட்டுலேயே இருக்கணும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.


பை மாம் பை டேடி என்று வழியனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று குளித்துவிட்டு வெளியே வரும் போது கவியும் வெளியே போவதற்கு தயாராகி தேவாவுக்காக காத்திருந்தாள்.


அக்கா எங்கே போற? ப்ளீஸ் ப்ளீஸ் நாம வீட்டுலேயே விளையாடலாம் கா”


சாரி தேவா முக்கியமான வேலை நான் கிளம்புறேன் அம்மா சொன்னமாதிரி நீ வீட்டுலேயே இரு, நான் போயிட்டு சீக்கிரமே வர பார்க்கிறேன் என்று கவியும் கிளம்பி சென்றுவிட, ச்சே யாருமே இல்லை நான் மட்டும் தான் வீட்டுல இருக்கனுமா, முடியாது நானும் வெளியே போய் சுத்திட்டு தான் வருவேன் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், மொபைலை எடுத்து தன் தோழிகளை தொடர்பு கொண்டு வரவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு, ஆவி பறக்க பறக்க வைத்த இட்லியை ஒரு பிடி பிடித்துவிட்டு வெளியே கிளம்புவதற்கு தயாராக அறைக்கு சென்றாள்.


எந்த டிரஸ் போடலாம் என வாட்ரோபை திறந்து வைத்துக் கொண்டு யோசனையுடன் நின்றாள் தேவா. இனிமேல் நாம வெளியே போற மாதிரி இருந்தால் டிரெஸ் கோட் வச்சிக்கணும், நீண்ட தேடுதலுக்கு பிறகு அவளுக்கு பிடித்த பிங்க் நிறத்தில் இருந்த உடையை எடுத்து அணிந்துக் கொண்டவள், தன் கூந்தலை கிளிப்பிற்குள் அடக்கிவிட்டு, இடைக்கு கீழ் வரை நீண்டிருந்த முடியை நான்காக மடக்கி அதனை போனிடைல் போல போட்டுக் கொண்டு தன்னுடைய கைப்பையை எடுத்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என சரிபார்த்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பினாள்.


பத்துக்கா அம்மா கேட்டா நான் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்லணும், வெளியே போனதை சொல்லக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றாள்.




தேவா வீட்டில் இருந்து கிளம்பி போக வேண்டிய இடத்தை நெருங்குவதற்கு இன்னும் ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் நேரம் அவளுடைய போன் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்க, தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு யாரென்று பார்த்த தேவாவுக்கு இளாவின் நம்பராக இருக்கவும், ஆன் செய்து காதில் வைத்த நொடி அந்த பக்கம் சொன்ன செய்தியில் தேவாவின் முகம் தொங்கி விட்டது.


ம்ஹூம் இன்னைக்குன்னு பார்த்து தானா இளாவோட அப்பா வரணும், இன்னைக்கு போட்ட ப்ளான் எல்லாமே பிளாப் ஆகிடுச்சே, அட, ச்சே கிளம்புன நேரமே சரியில்லை என்று வண்டியில் இருந்து இறங்கியவள், இப்போ என்ன செய்றது வீட்டுக்கே போகலாமா இல்லை, நாம மட்டும் தனியாவே ஷாப்பிங் போகலாமா, என்று யோசித்துக் கொண்டிருக்க, திடிரென கேட்ட குரலில் கவரப்பட்டு திரும்பியவள் அர்ஜுனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.


கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு அவனை பார்க்கின்றாள், என்ன அவன் வண்டியை சுற்றி ஒரே கூட்டமாக இருக்கு, எப்போ பாரு ஏதாவது ஒன்னு செஞ்சிக்கிட்டே தான் இருப்பானா? தேவா சாலையை கடந்து போவதற்குள் அர்ஜுன் காரில் ஏறி சென்றிருந்தான். அர்ஜு அர்ஜு என்றவள் கத்தியது காற்றோடு கலந்தது.


ச்சே போய்ட்டான் என்று காலை தரையில் உதைத்துவிட்டு தன் வண்டியை நோக்கி நகர்ந்தவளின் அருகே வந்த வயதான பாட்டி யாரு பெத்த புள்ளையோ தெரியலையே, மகராசி மூக்கும் முழியுமா லட்சணமா இருந்த பொண்ணு மேல எப்படித்தான் வண்டியை விட்டு மோதிபுட்டு போயிட்டானே படுபாவி, அவன் நல்லா இருப்பானா என்ற பாட்டியின் புலம்பலை கேட்ட தேவாவின் நடை சட்டென நின்றது. வேகமாக அவரின் அருகே சென்றவள் என்ன நடந்தது என்று கேட்டாள் தேவா.


அதை ஏன் கேட்கிற தாயி, ஒரு பொண்ணு மேல லாரி மோதிட்டுமா, ஒரு மகராசன் வந்து தன்னோட காருல அந்த பொண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கார் என்று சொல்லவும், என் அர்ஜு எப்போவுமே சூப்பர் தான் என்றவளின் பார்வை கீழே சிதறிக் கிடந்த பொருட்களின் மீது பதிய, இ இது என்றவளின் கைகள் நடுங்க, கண்களில் இருந்து கண்ணீர் போல பொலவென கொட்டியது.


இது அந்த அடிபட்ட பொண்ணோடது தாயி, என்று சொல்லிவிட்டு தன்னுடைய பழக்கூடையை சுமந்தபடி சென்றார் அந்த பாட்டி.


அக்கா ஆஆ என்று கதறி அழுதபடியே ஆங்காங்கே சிதறிக் கிடந்த அவளுடைய பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவளிடம் இருந்து கைப்பையை ஒருவன் பிடுங்கவும், யார் அவன் என்று பார்த்தவளிடம், கத்தியை காட்டி ஏய் மரியாதையா இந்த பையை கொடுத்துடு இல்ல உடம்புல உசுரு தங்காது என்று கட்டைக்குரலில் மிரட்டியவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டவள் சாலையை கடந்து தன்னுடைய, டூவிலரை நோக்கி வேகமாக ஓடினாள் தேவா.


உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி வேகமாக தேவா சென்று விட, “அவனோ தொடர்ச்சியாக வந்த வண்டிகளை கண்டு சற்றே நின்றவனின் அருகில் வந்தவன், என்னடா அந்த குட்டியோட பையை எடுத்துட்டு வர இவ்ளோ நேரமா? என்று கேட்டதும்,


எங்கடா எடுக்குறது யாரோ ஒரு குட்டி வந்து பையை எடுத்துக்கிட்டு தப்பிச்சி போய்ட்டா என்று சொன்னதும்,


தூத்தேறி போயும் போயும் ஒரு பொட்டச்சி கிட்ட வாரி குடுத்துட்டு நிக்கிற? இப்ப அண்ணே கேட்டா என்ன பதிலை சொல்லுறது என்று எரிந்து விழுந்தவனிடம், டேய் என்னமோ சொல்லிட்டே அழுதாடா ஹான் அக்கான்னு தான் அழுதா, நீ வா மாப்பு அவள் எங்கே போயிருக்க போறா? அடிபட்டவளை சேர்த்த ஆஸ்பத்திரிக்கு தானே என்று இழுத்துக் கொண்டு சென்றான்.


எந்த மருத்துவமனையில் தன் அக்காவை அட்மிட் செய்திருக்கிறான் என்று தெரியாமல் அருகேயே இருந்த ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலுக்கு வண்டியை ஒட்டிக் கொண்டு சென்றவளின் மனமோ, அக்கா இங்கே எப்படி வந்தாள்? இந்த பர்ஸ் அக்காவோடதா இல்லாமல் இருக்கலாமே தேவா, இதே மாடல் கலர்ல எத்தனையோ பேரு இந்த மாதிரியான பர்சை வச்சிருப்பாங்களே என்று மனசாட்சி சொல்லவும், அந்த செயின் கூட அக்காவோடது மாதிரி தானே இருந்துச்சி, என்று தேவா சொல்லவும், ஒரே டிசைன்ல எத்தனை செயின் வேணாலும் நாம வாங்க முடியும் என்று மனசாட்சி சொல்லவும், தேவாவின் முகம் தெளிந்தது. அப்படி தான் இருக்கும் அடிப்பட்டது என் அக்காவா இருக்காது என்று புது நம்பிக்கையோடு மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்.


யார் அவன்? எதற்காக அக்காவுடைய பேக்கை பிடுங்கினான், ச்சே மறுபடியும் அக்கான்னே சொல்றேன் பாரு என்று மனதுக்குள் குட்டிக் கொண்டவள், ஆக்சிடென்ட் ஆகி கிடப்பவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பலாக இருப்பானோ, அப்போ அவன் திருடனாக தான் இருக்கவேண்டும் என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை தன்னை ஆபத்து தொடர்ந்து வருகிறது என்று.


மனதில் பலவித சிந்தனைகள் எழுந்தாலும், அடிப்பட்டு இருக்கும் பெண் என்னோட அக்காவாக இருக்கக் கூடாது இறைவா என வேண்டிக் கொண்டே சென்றாள் தேவா.


இங்கே இப்படி இருக்க, இளவேந்திரன் மற்றும் குணமதியின் நிலை மிக மோசமாக இருந்தது. மாசாணி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இளவேந்திரனும் குணமதியும் கடத்தப்பட்டனர். யார்? ஏன்? எதற்கு? என்று பல கேள்விகள் எழுந்தாலும், காரணம் தெரியாமல் மயக்கமருந்தின் மூலமாக இருவருமே மயங்கினர்.


முதலில் மயக்கம் தெளிந்த குணமதிக்கு ஒன்றுமே புரியவில்லை, இருட்டான அறையில் கைகால்கள் நாற்கலியுடன் கட்டப்பட்டு இருப்பதை பார்த்தவர் பயத்தில் கணவனை தேடினார்.


என்ன ங்க எ ங்கே இரு க்கீங்க? என் னங்க உங்களை தான் கூ ப் பிடுறேன் எ ங்கே இருக்கிங்கன்னு சொல்லுங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்றவரின் முகமோ பயத்தில் வெளிறிப் போய் இருந்தது. தன் மனைவி கத்துவதுக் கூட தெரியாமல் மயக்கத்தில் கிடந்தார் இளவேந்திரன்.


டேய் என்னடா அந்த பொம்பள இப்படி கத்துது, மயக்கம் மருந்தை ஒழுங்கா குடுத்தியா இல்லையா? இந்த பொம்பள கத்துற சத்தம் கேட்டு எவனாவது வந்துட போறானுங்க… அப்பறம் பாஸ் என்ன பண்ணுவாருன்னு தெரியுமில்ல, என்று பல்லை கடிக்கவும், அடியாட்கள் நடுங்கினர்.


இதோ இப்போவே போய் அந்த பொம்பளைக்கு மயக்க மருந்தை கொடுக்கிறேன் என்று உள்ளே போன கொஞ்ச நேரத்திலேயே, குணமதியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.


ஒருமணி நேரம் கடந்திருக்கும், அண்ணே அய்யா வந்தாச்சு என்று ஒருவன் வேகமாக உள்ளே வந்து சொல்லும் நேரம் பூமியே அதிரும் அளவிற்கு தன் கால்களில் இருந்த பூட்ஸை தரையில் அழுத்தமாக பதித்து கொண்டு உள்ளே வந்தவனை பார்த்ததும், அனைவரின் முகத்திலும் பயபந்து உருண்டது.


என்னடா என்ன சொல்றான்? என்றபடியே உள்ளே வந்தவனின் முன்பு பவ்யமாய் நின்றனர் அடியாட்கள்.


இன்னும் மயக்கம் தெளியலைங்க அய்யா, என்றான் அடியாட்களின் தலைவன்.


விசாலமான அறையில் நடுநாயகமாக இருந்த சிம்மாசனம் போன்ற தோற்றம் கொண்ட இருக்கையில் சென்று அமர்ந்தவன், வாயில் சிகாரை வைத்து ஊதியபடியே, அவன் பொண்ணை தூக்க சொன்னேனே தூக்கிட்டிங்களா? என்று கேட்டதுமே நடுங்கியபடி நின்றனர்.


சிவப்பேறிய கண்களுடன் தன் முன்னால் இருப்பவர்களின் முகத்தை மெதுவாக ஆராய்ந்தவன், சொல்லுங்கடா என்று கர்ஜிக்க, அய்யா தப்பு நடந்து போச்சிங்க என்று அவன் காலில் விழுந்தவனை எட்டி உதைக்க சுவற்றில் மோதியபடி விழுந்தான்.


என்ன பண்ணி தொலைச்சிங்கடா ஒரு வேலையை கூட ஒழுங்கா செய்ய மாட்டிங்களா என்று அந்த இடமே அதிரும் படி கத்தியின், தன் துப்பாக்கியை எடுத்து நீட்ட,


அய்யா எங்கள ஒன்னும் பண்ணிடாதிங்க பொண்ண தூக்க சொல்லி தான் அனுப்பினேன் ஆனால் அந்த முட்டாபயலுக பொண்ணுமேல வண்டியை ஏத்திட்டானுங்க என்று நடுங்கியபடியே சொல்லி முடித்தவனின் வாயிலேயே ஒரு குத்து விட, வாயிலிருந்து ரத்தத்தோடு பல்லும் சேர்ந்து விழுந்தது.


டேய் உங்க கிட்ட போய் இந்த வேலையை கொடுத்தேனே என்ன என்ன சொல்லணும் என்று தலையிலே தட்டிக் கொண்டவன் வெறிபிடித்தவன் போல கத்த ஆரம்பித்தான். டேய் டேய் அவ எனக்கு உசுரோட வேணும், அவ எனக்கு உசுரோட வேணும் புரியுதா என்று அவன் சட்டையை போட்டு உலுக்கியவன், நீ என்ன பண்ணுவியோ தெரியாது அவளோட உசுருக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உங்க அத்தனை பேரையும் மண்ணுல போட்டு புதைச்சிடுவேன் என்று கர்ஜிக்க, அடியாட்களின் தலைவனோ உடல் நடுங்க நின்றான்.

***
வழக்கத்தை விட வேகமாக சென்ற தேவாவோ, மருத்துவமனையில் தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு, வேர்க்க விறுவிறுக்க ரிசப்ஷனுக்கு போய் நின்றாள். ஓடிவந்ததால் மூச்சிரைக்க நின்றவள், இ இ ங்கே கொ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஆ ஆக்சிடென்ட் ஆனா பொண்ணை அட்மிட் பண்ணிருக்காங்களானு பார்த்து சொல்லுங்களேன் என்றவளின் முகத்தை பார்த்த ரிஷப்சனிஸ்ட், ஒரு நிமிஷம் மேடம் என்று கம்ப்யூட்டரில் தட்டிவிட்டு அட்மிசன் பதிவாகிருக்கிறதா என்று பார்த்தவள், மேடம் எமர்ஜென்சி வார்டுல ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு நேரா போய் லெப்ட்ல திரும்பினா கடைசியா இருக்கும் என்று வழியையும் சேர்த்து சொல்ல தேங்க்ஸ் என்று உதிர்த்துவிட்டு வேகமாக ஓடினாள் தேவா.


மருத்துவமனையின் உள்ளே ஒலித்த பலவிதமான குரல்கள், மருந்தின் நெடி, உள்ளத்தில் இருந்த படபடப்பு, அடிபட்டது யார்? என்று தெரியாமலேயே, தவிப்போடு ரிஷப்சனிஸ்ட் சொன்ன வழியில் வேகாமாக சென்றவள், அர்ஜுனை பார்த்தவுடனே, இங்கே தான் என்று முடிவுசெய்துக் கொண்டவள், அர்ஜு என்று சத்தமாக அழைத்தபடியே அவனை நெருங்கிய தேவாவோ, அவனின் தோள் மீது கையை வைக்கவும் திரும்பியவனை அ அ அங்கே என்று எமெர்ஜென்சி வார்டை காட்டி சொல்ல முயன்றவள், இரு செவிலியர்கள் பேசியதை கேட்டு மயங்கி சரியவும், அவளை கீழே விழாமல் சட்டென தாங்கியவன், ஏய் என்னாச்சி என்று கன்னத்தை தட்டிக் கொண்டிருக்க, அண்ணா என்னாச்சி என்றபடியே அருகே வந்தவனோ, தேவாவையும் அவளை தன் கைகளில் தாங்கியபடி நின்ற கிருஷ்ணாவையும் பார்த்து அதிர்ந்து நின்றான் அர்ஜுன்.
 
Last edited:
Top