கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் --17

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள் அத்தியாயம்---17

அத்தியாயம்—17



ரிஷி சிடுசிடுப்புடன் கண்ணாடியை பார்த்து தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தார். பிரசாத் வீட்டில் இல்லை.



“டேய்...உனக்கு ஏண்டா ஆசை? இல்ல பேராசை.....தாயம்மாவிடம் மீண்டும் ஒண்ணு சேரணும்னு ஆசை...நடக்கக் கூடிய காரியமா அது? உனக்கு வெக்கம் மானம் ரோஷம் எதுவும் இல்லை. அமிர்தாவை வேறு பார்க்கனும்னு ஆசை. உருப்பட்ட மாதிரி தான். அவ தான் உன் மேல் பெரிய அவதூறு சொல்லி விரட்டி விட்டுட்டாளே....மானம் கெட்டுப் போய் அவள் தான் உன் மகள்ன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கே....” சோர்வுடன் தன் உருவத்தை பார்த்து கத்திவிட்டு தொப்பென்று கட்டிலில் உட்கார்த்ந்தார். அன்று அமிர்தா அவரை விரட்டிய நாள் ஞாபகத்துக்கு வந்தது.



“அம்மா...உன் புருஷனை வீட்டை விட்டு போகச் சொல்லு..”


“அமிர்தா என்னாச்சு உனக்கு? நான் என்ன தவறு செய்தேன்? அப்பா உன்னை பார்க்க ஆசையோட வந்திருக்கேன்டா...”



“நீ அப்பாவா? என் முஞ்யிலே விழிக்காதேடா பாவி. என்னிடம் கேவலமா நடத்துக்கிட்டு இப்ப வேஷம் போடறியா?”



திடுக்கிட்டு நின்றார் ரிஷி. மனசே உடைந்து போய்விட்டது. அமிர்தா தான் சொன்னாளா? மடியிலும் தோளிலும் போட்டு தாலாட்டிய பொண்ணு அப்பாவை பார்த்து சொல்லும் சொல்லா இது?



“உனக்கு என்னாச்சு ஸ்வீட்ஹார்ட்? நான் உன் அப்பாடா...”



“பொறுக்கி ராஸ்கல்....கொடிய ராட்சசனே...கெட் அவுட். என்னை வந்து அசிங்கமா கட்டி புடிச்சியே.....மானம் கேட்ட நாய்...தெரு நாய்....எச்சப்பொறுக்கி. போயிடு....அம்மா அவனை போகச் சொல்லு....போகச் சொல்லு...” பத்ரகாளி போல் கத்தியவள் அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள். ஓடிப் போய் அவளை கவனிக்க முற்பட்டார்.



“ரிஷி...டோன்ட் டச் ஹர்...” என்றாள் தாயம்மா.



அந்த ஒரு வார்த்தை அவரை ஸ்தமிக்க வைத்தது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்த மனைவியுமா என்னை நம்பவில்லை?. அதற்கு மேல் அங்கு நின்றால் அப்படியே கொலாப்ஸ் ஆகிவிடுவோம்ன்னு தோன்றவே அங்கிருந்து அகன்றார்.

அதன் பின் ஒரு போன் இல்லை...ஒரு சந்திப்பு இல்லை. அப்படியே அவர் குரூரமாக புறக்கணிக்கப் பட்டார். அந்த வலி அவர் நெஞ்சை கீறியது. ரத்தம் வழிந்தது. அமிர்தா தான் பெற்ற பொண்ணு இல்லை என்பதால் தானே அவரை சந்தேகப்பட்டாங்க?. அவர் அவளை நெஞ்சில் அல்லவா சுமந்தார். மகளாக இல்லை, தாயாக. பார்த்து பார்த்து அவளை கண் இமை காப்பது போல அல்லவா காத்தார். இதனால் இன்னொரு குழந்தை கூட வேண்டாம்னு சொன்னாரே....செருப்பாவது வீட்டின் வெளி வாசலில் இருக்கும். இவர் அதை விட கேவலமாக மிதிக்கப்பட்டார். குப்பை தொட்டியில் வீசப்பட்ட அழுகிய முட்டை போல் அருவருப்புடன் துரத்தப்பட்டார்.



பத்து வருஷ பந்தம் பத்து நிமிடத்தில் உடைந்தது. மனசு ஆறவேயில்லை. தினம் தினம் இரவு அவருக்கு அமிர்தாவின் நினைவு தான். சாப்பிட்டாளா? தூங்கினாளா? பள்ளிக்கு செல்கிறாளா? கடவுளே அவள் மனசுக்கு இதமா நடந்துக்க, நீயே போய் அவளுக்கு தந்தையாக இரு என்று வேண்டிக் கொண்டார். அமிர்தா நீ குழந்தைம்மா. உனக்கு உலகம் புரியலை. உனக்கு யாராவது தீங்கு செய்திடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு. தாயம்மா மகளுக்காக தானே என்னை டோன்ட் டச் ஹர்ன்னு சொன்னே? தெரியும் நீ அந்தப் பழியை நம்பமாட்டே.....



இரவில் புதிது புதிதாக ரத்தக் கண்ணீர் மனசில் வழிந்தது. தூக்கம் போயிற்று. மனசோடு புலம்புவது, பிரசாத்திடம் போலி உற்சாகத்துடன் பழகுவது என்று இந்த மூன்று மாசம் அவர் நரகத்தின் சிறைக் கைதியாக இருக்கிறார்.



“அப்பா...ஆர் யூ ஒ.கே?” என்று அவன் கேட்டுக் கொண்டே இருந்தான். இந்த நிலைமையில் அவர் இருக்க மித்ரா அவரைப் பார்க்க வந்தாள்.



“வணக்கம்...நான் மித்ரா...”



“உங்க பெயரை சொன்ன உடனே தெரிஞ்சுக்றதுக்கு நீங்க என்ன இந்தியாவின் பிரதம மந்திரியா?...” தன் கொதிப்பை அவளிடம் காட்டினார்.



“நான்..பிரதம மந்திரி இல்லை. ஆனா தாயம்மாவின் காரியதரிசி.”



“ஒ...அப்படி சொன்னா அப்படியே பூமாலை போட்டு வரவேற்பேன்னு எண்ணமா?”



“இல்லை.....செருப்படி காத்திருக்குன்னு தெரியும். வாங்கிக்க தயாரா வந்திருக்கேன்.” அவர் அவளை அப்ப தான் சரியாகப் பார்த்தார். அவள் கண்களில் என்னவோ ஒரு உண்மை தன்மை, அவள் இட்டிருந்த மையோடு கலந்திருந்தது போல் தோன்றியது. நான் வித்தியாசமானவள் என்று அவளுள் ஒரு கம்பீரம் தெரிந்தது.



“சரி...சொல்லு. ஊரை விட்டுப் போணுமா? இல்லை நாட்டை விட்டே போணுமா? எப்படி சொல்லி அனுப்பியிருக்காங்க.”



“உக்காரச் சொல்லக் கூடாதா?”



“என் அனுமதி இல்லாமல் தானே வந்தே. அப்புறம் உக்கார மட்டும் என் அனுமதி எதுக்கு? சித்ரா...”



“சித்ரா இல்லை மித்ரா. வேணும்னா பாஞ்சாலின்னு வச்சுக்கலாம்...”



“யூ மீன் மாகாபாரதத்து பாஞ்சாலி?”



“ஆமா. மாகாபாரத யுத்தம் மனிதர்கள் உள்ளவரை நடந்துக்கிட்டே தான் இருக்கும். பாஞ்சாலிகளுக்கு பஞ்சமே இருக்காது....”



“பாஞ்சாலி பக்கம் நியாயம் இருந்தது. இங்கே பாஞ்சாலிகளே தப்பு பண்ணா யார் என்ன சொல்ல முடியும்?”



“எதுக்கும் ஆதாரம் வேண்டும். அதை கலைக்ட் பண்ண தான் இந்த பாஞ்சாலி வந்திருக்கேன். சார்...அமிர்தா உங்கள் மேல் பழி சுமத்றான்னா அதில் என்னவோ இருக்குன்னு உங்களுக்கு தோணலையா? யாரோ உங்க சாயலில் வந்து இந்த காரியத்தை பண்ணியிருக்கணும்.”



“நீ என்ன சொல்றே?”



“உங்களுக்கு ட்வின் பிரதர் உண்டா?”



“இல்லை. நோ சான்ஸ்...”



“அப்ப யாரோ தான் உங்க மாதிரி வந்திருக்கணும். அது உங்க மனைவி சந்திரிகா ஏவிவிட்ட ஆளா இருக்கலாம். “

அவர் மனதில் ஒரு சின்ன வெளிச்சம் வந்தது.



“அப்படியா சொல்றே? நான் அமிர்தா ஏதோ கற்பனை பண்றான்னு நினச்சேன்.”

“ஆளாளுக்கு ஏதேதோ நினச்சே பிரச்னையை இப்படியே வளரவிட்டிட்டீங்க. உங்க மனைவி வசித்த வீட்டை போய் பார்க்கலாமா? அவங்க இறந்து போகும் முன் ஏதாவது வெறுப்பா தாயம்மா மேடம் மேல் எழுதி வச்சிருந்தா...நாம ஒரு முடிவுக்கு வரலாம்...என்ன சொல்றீங்க?”



“அவ இறந்த பிறகும் அவள் குடியிருந்த மாடி போர்ஷன் காலியாத் தான் இருக்கு.”



“அப்ப வாங்க போய் பார்க்கலாம்.”



புதிய உற்சாகத்துடன் அவர் கிளம்பினார்.



சந்திரிகா வசித்த வீட்டின் மாடியில் அவர்கள் போய் பார்த்தனர்.

டைரி குறிப்புகள்...ஏதாவது பொருள் ஆதாரமாக கிடைத்தால் நன்றாக இருக்கும். தேடித் தான் பார்ப்போமே.

அவள் கையில் ஒரு நீல நிற டைரி கிடைத்தது. அதன் மூன்றாவது பக்கத்தில் ச்ன்றிகா எழுதியிருந்தாள்.



“ரிஷி என் மேல் உயிரையே வச்சிருந்தார்ன்னு நினச்சேன். அது வெறும் அனுதாபம்னு தெரிஞ்சதும் எனக்கு சீ என்றாகிவிட்டது. நான் சித்தியிடம் சித்ரவதை பட்டதாக அவரிடம் நடிச்சு தான் சிறு வயது முதல் அவர் அனுதாபத்தை பெற்றேன். அது மெல்ல காதலாக மாறும்னு பார்த்தேன். இல்லை அவர் மனசில் நான் இல்லை...நான் இல்லை...நான் இல்லை...”



ரிஷி இதைப் படித்து திடுக்கிட்டார். நடித்தாளா?



“சார் இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”



“எனக்கு ஆச்சர்யமா இருக்கு. நான் அவளை நிஜமாத் தான் நேசிச்சேன். எதுக்கு அவள் இப்படி ஃபீல் பண்ணினான்னு தெரியலை.”

சிறு குழந்தை போல் பரிதவித்தார்.

பீரோவின் அடி தட்டில் அவர் தன்னுடைய ஷர்ட் ஒன்றை எடுத்தார்.



“இத பார் மித்ரா...”

மித்ரா புரிந்து கொண்டாள். அது ரிஷி தாயம்மா வீட்டில் உள்ள பெரிய படத்தில் அணிந்திருந்த ஷர்ட் தான்.



“இது எப்படி இங்கு வந்தது? நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். அமிர்தா எனக்கு ஒரு பிறந்த நாளின் போது வாங்கிக் கொடுத்தது. மித்ரா இது என்ன மர்மம்? சந்திரிகாவுக்கும் இந்த தில்லு முல்லுவுக்கும் சம்பந்தம் இருக்குமோ?”



“இருக்குமோ என்ன...இருக்கு....”



“ஒருத்தரைப் போல் இந்த உலகத்தில் ஏழு பேர் இருப்பாங்களாம். அப்படி ஒருத்தரை உங்க மனைவி பார்த்திருப்பாங்களோ? அவரிடம் இப்படி நடந்துக்கச் சொல்லி ஏவி விட்டு உங்க குடும்பத்தில் புயலை கிளப்பி இருப்பாங்களோ?’



“மித்ரா ஒரே குழப்பமா இருக்கு. சந்திரிகா இறந்து இரண்டு வருஷம் ஆகுதே. இந்த சம்பவம் மூணு மாசத்துக்கு முந்தி தானே நடந்தது...”

வேறு ஏதாவது ஆதாரம் இருக்கான்னு பார்க்கலாம். குடைந்தார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. யோசனையுடன் அவர்கள் கிழே வந்த போது கீழ் வீட்டில் குடியிருக்கும் அம்மாள் அவர்களை பார்த்து புன்னகைத்தார்.



“என்ன தம்பி அடிக்கடி இங்கு வந்து போவீங்க. நல்ல பேசுவீங்க. இப்ப என்ன பேசாம போறீங்க.....”


ரிஷிக்கு வம்பு பேச வந்திருக்கும் அந்த அம்மாள் மேல் கோபம் வந்தது.



“சரீங்க நாங்க கிளம்பறோம்...”



“பிரசாத் நல்லாயிருக்கானா?”



“இருக்கான்...” சொல்லிக் கொண்டே அவர் வாசலில் நின்ற காருக்கு போய்விட்டார். மித்ரா அந்த அம்மாவிடம் கேட்டாள்.



“ரிஷி சார் அடிக்கடி இங்கு வருவாரா?”



“ஆமாங்க. என்னதான் தாயம்மான்னு ஒருத்தியை கட்டிக்கிட்டாலும். டிவோர்ஸ் ஆன பொண்டாட்டியை அவர் விடலை. நீ யாரு அவருக்கு? ஜாக்கிரதையா இரு. இவர் ஒரு மாதிரின்னு பேசிக்கிறாங்க...”



“உங்க அட்வைஸுக்கு ரொம்ப நன்றி. நான் வரேன்மா...”



“இரு அவசரப்படாதே. சந்திரிகா இறந்த பின் மறுநாள் அவளுக்கு ஒரு கவர் வந்தது. யாரும் இங்கு வராததால் நான் அதை கொடுக்க முடியவில்லை. அவர் கிட்டே கொடுத்திடுங்க....” அந்தம்மாள் உள்ளே சென்று ஒரு வெள்ளைக் கலர் கவரை கொடுத்தாள்.

“வாடகை வாங்க பிரசாத் சார் வருவதில்லையா?”



“எல்லாம் ஆன்லைனில் செலுத்திடுவேன்...அதனாலே அவர் வர்றதில்லை.”



“தேங்க்ஸ் அம்மா. நான் வரேன்...”



அவள் கை கனத்தது. சந்திரிகா செத்தும் ரிஷி மேல் கல்லை தூக்கி போட்டுவிட்டுத் தான் போயிருக்கிறாள் என்று தோன்றியது. இதை எப்படி அவரிடம் காட்டுவது? இதில் என்ன இருக்கும்? பிரச்னை தீர ஏதாவது துப்பு கிடைத்தால் நல்லது. அது அல்லாமல் ஏதாவது வில்லங்கம் இருந்தால்? அவள் அந்தக் கவரில் உள்ளதை பார்த்துவிட்டு ரிஷியிடம் சொல்லலாம் என்று இப்போதைக்கு மறைத்துவிட்டள். அந்த அம்மாள் என்ன சொன்னாள்? ரிஷி சந்திரிகாவை பார்க்க இங்கு அடிக்கடி வருவார் என்றாளே...ரிஷி ரெட்டை வேஷம் போட சான்ஸ் இல்லை. அனேகமாக இவரைப் போல் ஒருவர் இங்கு வந்து போய்கிட்டு இருக்கணும். ரிஷி சார் ரெட்டை பிறவி இல்லை...பின் யாராக இருக்கும்? மித்ரா யோசானையில் ஆழ்ந்தாள்.



வீட்டுக்கு வந்தபோது மாலா வீட்டில் இல்லை.



“எங்கேம்மா மாலா?”



“அவள் அட்வோகேட் பிரேமலதா வீட்டுக்கு போயிருக்கா?”



“அங்கேயா? இவ்வளவு லேட்டா எதுக்கு போயிருக்கா?”



“அவங்க வரச் சொன்னாங்களாம்.”



“சரிம்மா...எனக்கு என்ன இருக்கு சாப்பிட? பழைய சோறு இருந்தாலும் போதும்.”



“எதிர் வீட்டு மாமி திருவாதிரை நோன்புக்கு செய்த களி கொடுத்தாங்க. உனக்கு வச்சிருக்கேன்...”



“நீ சாப்பிட்டியா?”



“ஆங் ஆச்சு...”



“பொய்.”



“இல்லேடி...ஆச்சு...”

“அப்பா...பிரபு இங்கே வாங்க..”



ஆளுக்கு ரெண்டு கிண்ணத்தில் களியை வைத்துக் கொடுத்தாள்.



“எதுவானாலும் எனக்கு மட்டும் வச்சிட்டு நீங்க பட்டினி கிடந்தா என்னம்மா அர்த்தம்? எனக்கு எப்படி தொண்டையில் இறங்கும்?”

அம்மாவின் கண்ணீரில் அவள் மடி நனைந்தது.



“உன் அண்ணன் எங்களை பட்டினி போட்டிட்டு எங்க கண்முன்னேயே சாப்பிட்டான். ஆனா நீ.....அதுக்குத் தான் மகள் வேணும்னு சொல்றாங்க.”

என்று கண்கலங்கினார் அப்பா. சமீப காலமாக அவர் வீட்டில் உள்ளவரிடம் அதிகம் பேச ஆரம்பித்திருந்தார்.



“வீட்டின் தேவதைகள் மகள்கள்.” என்று பெருமைபட்டார்.



“இன்னும் கொஞ்ச நாள் தான்...பாருங்க மூணு நேரமும் வயிறார சாப்பிடப் போறோம். கவலைப்படாதீங்க...உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு....இப்ப சொல்ல மாட்டேன். அப்புறம் சொல்வேன்”



“என்னடி புதிர் போடறே? சொல்லு அந்த சர்ப்ரைசை. சஸ்பென்ஸ் தாங்கலை.”



“வெயிட்...வெயிட். சர்ப்ரைஸ் எல்லாம் எளிதில் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காது....காத்திருங்கள்.”





மாலா சொன்ன செய்தி மித்ராவை யோசிக்க வைத்தது.

“என்ன சொல்றே மாலா?”

“அட்வோகேட் மேடம் தான் சொன்னாங்க. இந்தக் கைதி முத்துச்செல்வன் தப்பித்து விட்டாராம். தேடிட்டு இருக்காங்களாம். கோர்ட்டில் அது பத்தி தான் பேச்சாம்.”



அந்தக் கைதியின் படத்தை காட்டினாள் மாலா. அது தாயம்மா மேடத்தின் முன்னாள் கணவர் முத்துச்செல்வன் என்று தெரிந்தது. யோசனையில் ஆழ்ந்தாள் அவள்.



தனி அறையில் அமர்ந்து சந்திரிகா வீட்டு கீழே குடியிருந்த அம்மாள் கொடுத்த கவரை பிரித்துப் பார்த்தாள் மித்ரா. திடுக்கிட்டாள். ரிஷியும் சந்திரிகாவும் மிக அருகே அமர்ந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருகிறார்கள். ஒரு வரி அடியில் எழுதியிருந்தது.



“சந்திரிகா நீ சொன்ன ஐடியாபடி நடக்கப் போறேன். இந்த படத்தைப் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டார்கள் தெரியுமா? நமக்கு வெற்றி தான்.”



சந்திரிகாவை சந்திக்கவே இல்லைன்னு ரிஷி சொல்றார். ஆனா இந்த ஃ போட்டோவைப் பார்த்தா அவர் போய் சொல்லியிருக்கலாமோன்னு முதல் முதலாக அவளுக்கு தோன்றியது.



தப்பிய கைதி முத்துச் செல்வன்......சந்திரிகாவோடு ரிஷி இருக்கும் இந்த போட்டோ.---இதை வைத்து என்ன முடிவுக்கு வருவது? ஒரே குழப்பமாக இருந்தது. துப்பறிய வேண்டியது தான். ரிஷி உண்மையில் நல்லவரா? கெட்டவரா? அமிர்தா சொன்னது போல் இவர் அவளிடம் தப்பாக நடந்தகொண்டது உண்மையா? அல்லது தாயம்மாவிடம் அன்பொழுக நடந்து கொண்டது உண்மையா? அந்த அம்மாள் சொன்னதை பார்க்கும்போது ரிஷி சந்திரிகாவை அடிக்கடி சந்தித்திருக்கார் என்று தெரிகிறது.



மித்ரா பிரசாத்திடம் பேசினாள். போட்டோவை காட்டினாள். அவன் வெகு நேரம் பார்த்துவிட்டு சொன்னான்.



“மித்ரா இது என் அப்பா இல்லை.”



“எப்படி சொல்றீங்க?”



“எங்கப்பாவுக்கு வலது பக்க தாடையில் ஒரு மச்சம் இருக்கும். நல்ல பாரு. அது இதில் இல்லை. இந்த முகத்தைப் பார் வித்தியாசமா இருக்கு...சம்திங் பிஷ்ஷி.”



மித்ராவுக்கு பொறி தட்டியது.



“அப்ப இது ரிஷி சார் இல்லே. அந்த மட்டும் சந்தோசம் தான்.”



“எஸ்..கண்டிப்பா இது எங்க அப்பா இல்லே. எங்கம்மாவுக்கு பழி வாங்கணும்கற ஆசை இருந்துச்சு.. பொருமிக்கிட்டே தான் இருப்பாங்க. அப்பாவை அவன் இவன்னு தான் பேசுவாங்க. எப்படி அவன் அந்தப் பொம்ளையோடு ஜாலியா இருக்கான் பார். நான் இங்கே வயிறு எறிஞ்சிட்டு இருக்கேன்...அப்படிம்பாங்க....”



“தேங்க்ஸ் ரொம்ப தேங்க்ஸ். இந்த தகவல் எனக்கு போதும்.”



“என்ன பண்ணப் போறே மித்ரா?”



மித்ரா பதில் சொல்லாமல் சென்றாள்.





மாலாவின் அட்வோகேட் மேடம் மூலம் அந்தக் கைதியின் விவரம் தெரிந்துகொண்டாள். அவனை கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவு பண்ணிக் கொண்டாள் மித்ரா. அதற்குள் எலி தானே பொறியில் மாட்டியது. அட்வோகேட் மேடம் வீட்டிலிருந்து அவள் வெளியே வந்தபோது அவளை வழிமறித்து ஒரு காரில் அவளை கடத்தி சென்றது ஒரு கும்பல். அவள் கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தான் ஒரு ரௌடி. கார் விரைந்து சென்றது. அவள் கத்தவில்லை.



“என்னடி திமிரா உனக்கு? என்னைப் பற்றி தகவல் சேகரித்து உள்ளே தள்ள பாக்றியா? உன் வேலையை பார்த்திட்டு போறத விட்டிட்டு உனக்கு எதுக்குடி இந்த வேண்டாத வேலை? உன்னை உயிரோடு விட்டால் தானே?”



“நீயே உயிரோடு இருக்கப் போறதில்லை. என்னைக் கொல்லப் போறியா?” அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். பயந்தவள் போல் பேசாமல் மருண்ட பார்வை பார்த்தாள்.



“அது. அந்த பயம் இருக்கட்டும்.”



மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் அவள்.





இந்த மித்ரா எங்கே? நாலு நாளாக காணவில்லை என்று சலித்துக் கொண்டாள் தாயம்மா. அம்மாவும் மகளும் மீண்டும் ஒருவருக்கு ஒருவர் எதிரி போல் பேசாமல் இருந்தார்கள். மோகன் சலித்துக் கொண்டான்.



“என்னதான் பிரச்னையோ? எப்படித்தான் இதுக்கு ஒரு முடிவு வருமோ?”



அமிர்தா மித்ராவுக்கு போன் செய்தாள்.

“மித்ரா நீ வரலைன்னு அம்மா கவலைப்படறாங்க.” அவள் குரலில் ஏளனம்.

“அது தான் நீ சரியா ஆகிட்டியே...அப்புறம் நான் எதுக்கு?”



“குட் நல்ல முடிவு..” என்று போனை வைத்தாள்.



அன்றிரவு அமிர்தா நன்கு தூங்கினாள். அவள் அறையில் எட்டிப் பார்த்துவிட்டு. மகள் நன்கு தூங்குவது கண்டு நிம்மதியடைந்து தன் அறைக்குச் சென்றாள் தாயம்மா. நல்ல வேளை ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அமைதியாக இருக்கிறாள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள். பிரச்சனை தீரவில்லை. ஆனால் ஏதோ ஒரு நிம்மதி அவள் மனசில். மகளுக்கு கடிதம் எழுதியது அவள் மனதின் பாரத்தை குறைத்திருந்தது. அவளும் நன்கு தூங்கிவிட்டாள். மோகன் எப்பொழுதும் கும்பகர்ணன் தான். இடி இடித்தாலும் அவன் பாட்டுக்கு தூங்குவான். மறுநாள் அவர்கள் இருவரும் எழுந்து கொண்டபோது அங்கு அமிர்தா இல்லை என்று தெரிந்தது. எங்கு போனாள் அவள்? தாயம்மா கண்களில் கண்ணீர் வழிந்தது. பயம் அப்பிக் கொண்டது.



கனவுகள் தொடரும்
 
Top