அத்தியாயம்---1 கனவு மலர்கள்
காலை நேரக் காற்று அவள் முகத்தில் வந்து மோதியது. செல்லம் கொஞ்சியது. இளம் சூரியன் தன் இளம் கதிர்களை அந்த வீட்டினுள் நுழைக்க முயற்சித்தது. கொஞ்சம் தோல்வி தான். அந்த வீட்டின் ஜன்னல்கள் எல்லாம் மூடி கொண்டிருக்கும் போது எப்படி நுழைய முடியும்? அவள் மெதுவாக, தான் வந்த ஸ்கூட்டியை அந்த வீட்டின் ஒரு ஓரமாக நிப்பாட்டினாள். இது தான் அவள் வேலைப் பார்க்க வேண்டிய வீடு. மூடிய பெட்டி போல் இருக்கும் இந்த பங்களாவுக்குள் எப்படித்தான் இந்த வீட்டு மனிதர்கள் இருக்கிறார்களோ? முதலில் ஜன்னல்களை திறக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் அவள். வாசல்படி ஏறி சார் என்று அழைத்தாள். விடிந்துவிட்டது என்று உள்ளிருக்கும் மனிதர்களுக்குத் தெரியவில்லையோ? அது சரி சிக்கென்று எல்லா ஜன்னல்களும் மூடிக் கொண்டிருக்கும்போது வெளிச்சம் பரவிய விடியலை எப்படி உணர்வார்கள்? வேடிக்கை மனிதர்கள் போலும்.
“பெண்ணே விடிந்திவிட்டது எழுந்திரு...” என்று திருப்பள்ளி எழுச்சி பாடவா முடியும்? மீண்டும் குரல் கொடுத்தாள். இப்போ சார் என்று சொல்லாமல் அம்மா என்று கூப்பிட்டாள். பதிலில்லை.
“ஏம்மா நீ என்ன லூசா? காலிங் பெல்லை அழுத்த வேண்டியது தானே?” எங்கிருந்து வருகிறது இந்தக் குரல்? நிமிர்ந்து மாடியைப் பார்த்தாள் அவள். அங்கே ஒரு இளைஞன் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தான். அவன் தான் சொல்லியிருக்க வேண்டும். என்ன திமிர்...முன் பின் அறிமுகம் இல்லாதவளை லூஸ் என்று சொல்கிறான்! நீதாண்டா லூஸ் என்று சொல்ல நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை உள்ளே தள்ளினாள் அவள். இவன் தான் அவளின் எஜமானனோ என்னவோ.....நேர்காணலுக்கு வந்திருக்கிறாள், ஏதாவது துடுக்காக சொல்லப் போய் வேலை இல்லை என்று சொல்லிவிட்டால்?
“உங்க விளம்பரம் பார்த்து வேலைக்கு வந்திருக்கேன்..” என்று சத்தமாகச் சொன்னாள். அவன் அவளை அங்கிருந்தே அளவெடுப்பது போல் பார்த்தான்.
“நீயா?” என்றான்
“நான்தான்...ஏன் நான் வரக்கூடாதா?”அவன் புன்முறுவல் செய்வது தெரிந்தது. காலைக் கதிரின் மஞ்சள் வெளிச்சம் பட்டு அவன் முகம் தங்கம் போல் ஜொலித்தது. என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு. கதவை திறப்பது தானே? பல்லைக் காட்டினால் போதுமா?
“தெரியுது தெரியுது. இங்கே மனுஷா நுழைவது அபூர்வம் அதான் சொன்னேன்..” அவன் தலை மறைந்தது. சிறிது நேரத்தில் அவன் வந்து கதவு திறந்தான்.
“உன் பெயர் என்ன?”
“ராக்காயி...”
“கிண்டலா? பார்த்தா படிச்சவ மாதிரி இருக்கே...பெயர் பொருத்தம் இல்லையே?”
“நீங்களும் தான் படிச்சவர் மாதிரி இருக்கீங்க. வாசலிலேயே நிற்க வச்சு பேசறீங்க. தோற்றத்துக்கும் பேருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? உங்க பெயர் மோகனப் பிரியன் தானே? கோபப் பிரியன் போல இருக்கீங்க...”
அவன் மீண்டும் முறுவலித்தான். புத்தம் புது முறுவல் போல் அது கவித்துவமாக கொஞ்சியது. பரவாயில்லை சிரிக்கும் போது முசுடு கொஞ்சம் அழகாத்தான் இருக்கு. சரி எப்படியிருந்தால் நமக்கென்ன...வந்த வேலையைப் பார்ப்போம். அதற்குள் அவன் சுதாரித்துக் கொண்டான்.
“உள்ளே வா. நான் கேக்கும் கேள்விகளுக்கு நீ திருப்திகரமா பதில் சொல்லணும். அப்ப தான் வேலை. இதுவரை நான்கு பேர் வந்து போய்ட்டாங்க. ஒருவரும் உருப்படியில்லை. டைம் வேஸ்ட்...சரி உன் பெயர் என்ன? ஜோக் வேண்டாம்..” உன்னிடம் ஜோக் சொல்லிட்டாலும்...அப்படியே ....
“என்ன உனக்குள் முணுமுணுக்கிற? உன் பெயர் சித்ரா தானே?”
“இல்லே...மித்ரா.” நியாபக மறதி கேஸ் போல. சின்ன வயசிலேயே அல்சீமர் வியாதியோ? கொட்டை எழுத்தில் மித்ரா வேல்முருகன் அப்படின்னு குறிப்பிட்டிருந்தேனே. கண்ணும் கோளாறு போலிருக்கு...
“பேட்டிக்கு ரெடியா?’
“ரெடி ரெடி...”
“உனக்கு பாடத் தெரியுமா?”
“என்னது?”
“ஆடத் தெரியுமா?”
“என்னது?”
“சமைக்கவாவது தெரியுமா?”
“ஹலோ...நான் சமையல் வேலைக்கு வரலை. ஆடவும் பாடவும் வரலை. பதிமூணு வயசு பெண்ணுக்கு நர்ஸ்ஸாக வந்திருக்கேன். சம்பந்தம் இல்லாத கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு...நீங்க என்ன லூசா?”
“பேஷ் பேஷ். எஜமானனைப் பார்த்து லூசான்னு கேக்ற, உனக்கு நான் எப்படி வேலை கொடுப்பேன்? கெட் அவுட்...”
“ரொம்ப சந்தோசம். ச்சே....தத்தி. என் டைமை வேஸ்ட் பண்ணிக்கிட்டு.” ஜன்னல்களைத் தான் மூடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் இவர்கள் மனசையும் அல்லவா மூடி வைத்திருக்கிறார்கள்!
மித்ரா எழுந்து கொண்டாள். இந்த வீட்டில் இந்தப் பயித்தியத்தை தவிர வேறு யாரும் இல்லையா? அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். குகை போல் இருட்டாக இருந்த ஹாலின் ஒரு மூலையில் இரண்டு கண்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன இது மர்ம பங்களா மாதிரி இருக்கு. இங்கெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. அவள் கிளம்ப யத்தனித்தாள். இந்த வேலை கிடைக்கும் என்று எவ்வளவு ஆசையாக இருந்தாள்.
“நில்லு...” கட்டளையிடும் குரல் அந்தக் கண்களுக்குரிய தொண்டையோ?
“வேலைக்கின்னு வந்திட்டு அப்படியே போனா எப்படி?” சொல்லியபடி இருட்டை கிழித்துக் கொண்டு வந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி. ஸ்க்ரீன் பின்னால் கண்களை மட்டும் காட்டியவள் இப்பொழுது பூரணமாக வந்து நின்றாள். அப்படியோர் நிறம். முழுப் பௌர்ணமி வெளியில் வந்து நின்றது போல் இருந்தது.
“மோகன் நீ என்ன இவளிடம் வம்பு பண்ணிட்டு இருக்கே? நான் பேசிக்கிறேன் நீ உள்ளே போ.”
“சரிம்மா...” அவன் மறைந்தான். அவனுக்கு இவள் அம்மாவா? அக்கா போல் இருக்கிறாள். இளமையின் ரகசியம் கேக்கணும்.
“உக்கார். உன் கூட பேசணும்...”
“சொல்லுங்க மேம்..” அவளை அறியாமல் அவள் மரியாதை கொடுத்தாள்.
“என்னடா வீடு இவ்வளவு இருட்டா இருக்கேன்னு பார்க்றியா?”
ஆம் என்று தலையாட்டினாள்.
“அசாதாரனமான மனிதர்கள் போல் தோணுதா?”
“ஆம்..” என்று தலையாட்டினாள்.
“பேசாம ஓடிவிடலாம்னு தோணுதா?”
இப்போ மித்ரா மெல்ல வாய் திறந்து சொன்னாள்.
“இல்லை. என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய ஆசைப்படறேன். ஓடிப் போக நான் ஒன்னும் பிரச்சனைகளை கண்டு பயப்படுகிறவள் இல்லை. சொல்லுங்க என்ன பிரச்சனை இங்கே? நான் பார்க்கவேண்டிய பெண் அமிர்தாவை நான் சந்திக்கலாமா? நீங்க எனக்கு வேலை கொடுத்தால்...”
இந்த பதில் அந்தப் பௌர்ணமிக்கு பிடித்திருந்தது போலிருக்கு. மெல்ல திருப்தி புன்னகை செய்தது. அது வசீகரமாக இருந்தது. அம்மாவிடம் தான் அவன் இந்தப் புன்னகையை திருடி இருக்க வேண்டும். ஆளுமையுடன் கம்பீரமாக அந்தப் பெண்மணி அவளைப் பார்த்தாள். “யூ ஆர் அப்பாயின்டட்.”
இதைக் கேட்டு ஜாக்பாட் அடித்தது போல் உணர்ந்தாள் மித்ரா. பெரிய சம்பளம். அவள் குடும்பத்துக்கு தேவையான விட்டமின் அது. தம்பியை கல்லூரியில் சேர்க்கலாம். தங்கையை பள்ளியின் டூருக்கு அனுப்பலாம். அக்காவுக்கு வரன் பேச ஆரம்பிக்கலாம். அம்மாவின் மூட்டு வலிக்கு சிகிச்சை பண்ணலாம். அப்பாவின் காட்டராக்ட் ஆபரேஷனை செய்யலாம்....எல்லாத்துக்கும் மேலாக அண்ணன் பிரம்பநாயகத்திடமிருந்து விடுதலை. காசுக்கு அவனிடம் கையேந்த வேண்டாம். எவ்வளவு பெரிய நிம்மதி!
“ஆனால் ஒரு கண்டிஷன்...”
பக்கென்றது. என்ன கண்டிஷன்? மென்று விழுங்கினாள். என்னவாக இருக்கும்?
“சொல்லுங்க மேடம்.” சுரத்தில்லாமல் சொன்னாள்.
“நீ இங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும். உனக்கு சகல வசதியும் செய்து தரப்படும். மாதம் ஒரு முறை நீ போய் உன் குடும்பத்தோடு நேரம் செலவழிக்கலாம்.” சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆர்வத்தோடு பார்த்தாள் பௌர்ணமி. தலை குனிந்து யோசித்தாள் மித்ரா. அதெப்படி முடியும்? அவளுக்கு அவள் குடும்ப என்றால் உயிர். கெடுபிடி பண்ணும் அண்ணனையே அவள் பாசத்துடன் தான் பார்க்கிறாள். மீனை தண்ணீரை விட்டு எடுத்துப் போட்டு நீ நீந்து என்று சொன்னால் எப்படி?
“ஸாரி மேடம். என்னால் முடியாது...” அவள் சொல்ல வாய் எடுத்த போது பௌர்ணமியின் மகன் தூர நின்று ஜாடை காட்டினான். என்ன சொல்கிறான்? அம்மாவின் பின் நின்று கொண்டு ஏதோ நாட்டியம் ஆடுவது போல் செய்கை செய்கிறானே. அவள் குழம்பினாள்.
“ஏய்...அங்கே என்னடா டான்ஸ் ஆடறே? இவளுக்கு விருப்பம் இல்லேன்னா நாம கம்பெல் பண்ண முடியாது. போகட்டும் விடு. என்னம்மா சொல்றே?...”
விருப்பம் இல்லாவிட்டாலும் அவளையும் அறியாமல் அவள் வாய் சரி என்று சொன்னது. அது கேட்டு மோகன் முறுவலித்தான். அந்த முறுவல் அவளுக்கு கிடைத்த பரிசு போல் அவளுக்குத் தோன்றியது. அடே இங்க நமக்கு ஒரு ஃப்ரெண்ட கிடச்சிருக்கு போல.....
“குட்....நாளையே நீ வந்து ஜாயின் பண்ணு. டிரெஸ் எல்லாம் எடுத்து வரவேண்டாம். உன் சைசுக்கு நான் சூடிதார் வாங்கி வைக்கிறேன். உன் அறைகுள் எல்லா வசதியும் உள்ளது. அமிர்தாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் தான் உன் வேலை. என் மகன் மோகனிடம் நீ பல்லைக் காட்டிக் கொண்டு நிக்கக் கூடாது. புரியுதா?” பௌர்ணமி சொல்லிவிட்டு எழுந்தது.
“யூ மே கோ...” ஹாலை விட்டு அந்தப் பெண்மணி போனதும் ஏதோ ஒரு வெளிச்சம் அணைந்தது போல் இருந்தது. கொஞ்ச நேரம் மித்ரா அங்கேயே நின்றாள். எப்படி ஒப்புக் கொண்டோம் என்று அவள் தனக்குத் தானே அதிர்ச்சியுடன் யோசித்துப் பார்த்தாள். இங்கேயே இருக்க முடியுமா? கஸ்தூரி அக்கா, தங்கை மாலா, தம்பி பிரபு இவர்களோடு சண்டையிட்டும் கொஞ்சியும் பாச மழை பொழிந்தும் பழகிவிட்ட அவளுக்கு இந்த இருண்ட குகை தானா ஆறுதல் தரும்?
“தாங்க்ஸ்...” கேட் அருகே வந்து மோகன் சொன்னதும் அவள் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தாள். இவன் எதுக்கு தாங்க்ஸ் என்கிறான்?
“எதுக்கு தேங்க்ஸ்?”
“என்னைப் பார்க்கத்தானே...என் அருகில் இருக்கத் தானே இந்த வேலையை ஒப்புக்கிட்டே. அதுக்கு தான் தேங்க்ஸ்.”
“யார் சொன்னது? உங்களுக்காக எல்லாம் நான் இங்கு இருக்க ஒப்புக்கலை.”
“பின்னே?”
“என் சுயகௌரவத்துக்காக ஒப்புக்கிட்டேன். காசு சம்பாதித்தால் தலை நிமிர்ந்து நிக்கலாம். அதுக்குத் தான்.” நினைத்தாலே இனித்தது. இனி அவமானப்பட வேண்டாம்...அண்ணனிடம் கெஞ்ச வேண்டாம். அண்ணியின் ஏளனப் பார்வையில் பொசுங்க வேண்டாம்....இதை மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
“எனக்கு நீ இங்கு இருக்கப் போவதில் ரொம்ப சந்தோசம் தெரியுமா?”
“ஏன்? நான் என்ன வலி தீர்க்கும் மருத்துவச்சியா?”
“அதுக்கும் மேலே...”
“புரியலை...”
“என் மனசுள் புகுந்த தேவதை...”
அவள் சிரித்தாள். “பணக்காரப் பசங்க பிதற்றுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை..” அவள் சொன்னதும் அவன் சொன்னான்.
“நீ வா...உனக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு போகப் போகப் புரியும். உன்னைப் பற்றி நான் தெரிஞ்சுக்கலாமா?”
அவள் பதில் ஏதும் சொல்லாமல் விடை பெற்றாள் . வீட்டில் வந்து அவள் இது பற்றி பேசியபோது அண்ணன் அவளை ஒரு அறைவிட்டான். “யாரைக் கேட்டுக் கொண்டு இந்த வேலையை ஒப்புக்கிட்டே? அதெல்லாம் போகக் கூடாது. கண்ட வீட்டில் தங்கி வேலை செய்ய உன்னை அனுமதிக்க மாட்டேன்...” அவன் வாயை மூடுவதற்குள் அண்ணி சொன்னாள்.
“அவள் போகட்டும்...”
மித்ரா குழம்பினாள். அண்ணியின் அனுமதிக்கு சந்தோஷப்படுவதா? அண்ணனின் எதிர்ப்புக்கு கட்டுப்படுவதா?
கனவுகள் தொடரும்.