Jayasingaravelu
Member
அருமை ராஜி
கதை சங்கமம் 2021
Nice and different story sisகறையடி பெருந்துயர்
பாகிஸ்தானின் அனல் காற்று வீசும் உயர் வெப்ப சூழல் என் தலையை வழக்கம் போலச் சூடாக்குகிறது. விடும் மூச்சுக் காற்றில் கூட நெருப்புப் பொறிகள் பறப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழ்நிலையை நான் அறவே வெறுக்கிறேன்.
இஃது ஒன்றும் என்னுடைய பூர்வீகம் கிடையாது. என் இனத்தில் யாருக்குமே பாகிஸ்தான் நிலப்பரப்புப் பூர்வீகமாக இருக்க இயலாது. நாங்கள் இங்கே வாழப் படைக்கப்பட்டவர்கள் இல்லை.
இயற்கை எழில் கொஞ்சும், வன அன்னை தாலாட்டுப் பாடும் உலகின் அத்தனை தேவதைகளும் வசிக்க விரும்பும் அழகிய பிரதேசமான இலங்கைத் தீவில் நான் பிறந்தேன்.
குளுமையும், பூமியை நனைத்தபடியே இருக்கும் வருணனின் ஆசீர்வாதமுமாக எப்போதும் பசுமையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் மலைக்காடுகளில் என் ஜனனம் அழகாய் நிகழ்ந்தேறியது.
தனிமை என்பதை நான் உணர்ந்ததே இல்லை. தாயும் தந்தையும், பாட்டிமார்களும், சித்திகளும், பெரியம்மாக்களும், அத்தைமார்களும், மாமன்களும், அண்ணன் தம்பிகளும் அக்கா தங்கைகளுமாகப் பெரும் கூட்டுக் குடும்பம் எம்முடையது.
எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்லும் நாடோடி கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். எம் இனத்தில் தனியாக ஒருவரை விடுவதென்பது எப்போதும் நிகழாது. அன்பின் பிடிப்பில் அழகியலான உணர்வுகளால் கட்டப்பட்டது எங்கள் வாழ்வு. முன்னோர்களின் வழித்தடம் பற்றி வாழும் உலகின் பெருங்குடி எம்முடையது.
எப்போதும் தாயின் அரவணைப்பில் அவள் உடல் சூட்டில் வசித்தவன் நான். எனக்காகத் தேடித்தேடி அவள் சேகரித்துத் தரும் உணவு அலாதி சுவையுடையது. எனக்கு அவள் காட்டிய உலகமோ பசுமை போர்த்திய அழகியலால் சூழப்பட்டது.
பல்லுயிர் ஓம்பும் குலம் எம்முடையது. பெருமலை காட்டின் அத்தனை ஜீவராசிகளும் என் நண்பர்களாக இருந்தார்கள். தினம் தினம் புதுப் பூமியும், புது வானமுமாய் இயற்கையோடு இயைந்தவன் நான்.
நான் வேறு இயற்கை வேறு என்று பிரிக்கச் சொல்லிக் கொடுக்கவில்லை என் இனம். நானே இயற்கையாய், நானே வாழ்வாய், நானே தவமாய், நான் என்பதே இயற்கையாய், இயற்கை என்பதே குளிர்ச்சியாய்.
கொண்டாட்டமான, குதூகலமான, கவலையற்ற பெருங்குடி நாங்கள். எதற்காகவும் கவலைப்படும் அவதியில்லாத, வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட அழகிய குடும்பம் எம்முடையது.
இன்றோ,
எம் தனிமையும், இச்சூழலின் இன்னல்களும், உடல் உபாதைகளும் எனக்குள் பெரும் எரிச்சலைக் கிளப்பி விடுகின்றன. என்னால் சாதாரணமானவனாக, இயல்பாக அன்பாக இருக்கவே முடியவில்லை. எப்போதும் அழுத்தும் தனிமையின் தாக்கம் என்னைக் கொல்லாமல் கொல்கிறது.
இந்தச் சுற்றுப்புறச்சூழல் மட்டும் தான் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா இல்லை வயதானதால் உடலில் ஏற்படும் நோய்களா அல்லது இந்த நோய்களே இந்தச் சூழலால் ஏற்பட்டதுதானா எனப் பற்பல சிந்தனைகள் என்னுள் முட்டி முகிழ்த்து வெறுமையைப் பூதாகரமாகக் காட்டிடவே என் நெஞ்சுக்குள் ஏற்படும் தனிமையின் தாக்கம் வெறுப்பாக, கோபமாக, எரிச்சலாக, இரைச்சலாக வெளிப்படுகிறது.
என் துயர் புரியாது என்னைக் கோபக்காரன், மனம் சிதைந்தவன் என வசைபாடுகிறது இவ்வரக்கக் கூட்டம்.
இதோ இந்தச் சின்னஞ்சிறு அறையை விட்டு நான் வெளியே போய் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரவு-பகல் எது என்பது கூட அறிய இயலா கொடும் சிறை;தனிமைச் சிறை. நீல வானமும், பச்சை மரங்களும் காண யாசிக்கிறது என் கண்கள்.
எப்போதாவது கிடைக்கும் சிறிதளவு உணவைத் தவிர எனக்கு இங்கு எதுவும் நிச்சயம் இல்லை. என்னுடைய கொடும் துயர் தாங்காமல் மனச்சிதைவுக்கு ஆளாகி அவ்வப்போது சுவரில் என் தலையை நானே முட்டிக் கொள்கிறேன்.
என்னோடு ஓடியாடி விளையாடிய என் சகோதரர்களை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் இன்னும் இலங்கைத் தீவின் மழைக் காடுகளுக்குள் சர்வ சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்து இனிமையாய் வாழ்வார்கள் என்று கனவு காண்கிறேன். அவர்களது நல் வாழ்விற்காய் என் மனம் ஏங்குகிறது.
ஒரு நாள் பாகிஸ்தானுக்குச் சென்ற எங்கள் பூமியை ஆண்ட மனிதர் இந்த அனல் கக்கும் பிரதேசத்திற்கு எங்கள் இனத்தின் இளம் சுடர்களைப் பரிசீலிப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர்களது நல்லுறவை பேண எம் இனத்தின் மேல் பெரும் வேட்டை நிகழ்ந்தேறியது.
காட்டில் வழி தவறி தாகம் தீர்க்க மலையடிவாரம் சென்ற என்னைச் சிறை பிடித்தார்கள் அக்கொடூரமானவர்கள்.
சிறைக்குள் அடைக்கப்பட்டு, என் அனுமதி இல்லாமலே விமானத்தில் ஏற்றப்பட்டு என் உடல் நிலைக்குக் கொஞ்சமும் ஒத்து வராத இந்த அனல் காட்டில் கொண்டு வந்து தள்ளிவிட்டார்கள். கேட்டால் அன்பைப் பகிர்கிறார்களாம்.
"எனது அன்பான குடும்பத்தில் இருந்து என்னைப் பிரித்துத் தனிமையில் தள்ளுவது தான் உங்கள் அன்பா?" என நான் சப்தமாகக் கேட்டால் எனக்கு மதம் பிடித்து விட்டதெனத் தனிமையில் அடைத்தார்கள். எனதருகே வரவே பயந்தார்கள். அவர்களின் பயம் தெரியாதிருக்க, என்னைச் சங்கிலியால் பிணைத்தார்கள்.
பின், என் மனமாற்றத்தை வேண்டி,
ஓர் அத்தினியை எனக்குத் துணையாகக் கொண்டு வந்தவர்கள் என் தனிமையைப் போக்கிவிட்டதாக அவர்களாகவே சிலாகித்துக் கொண்டார்கள்.
இயற்கையாகக் காடுகளில் என் இணையைத் தேடி அவளோடு ஒத்த வாழ்வு வாழ முடியாது இவர்கள் சேர்த்து வைத்த இணையோடு என் மனதைத் தேற்றியபடி வாழ்ந்தேன் சில காலங்கள். அவள் என் தனிமையைப் போக்க வந்த தேவதை.
இருவரும் சில காலம் அத்திப்பூவாய் நிறைந்த வசந்தத்தைத் துளித் துளியாய் அனுபவித்தோம். அவள் எனக்கு நல்ல தோழியாய், ஆறுதல் தரும் தாயாய் இருந்தாள். எங்களுக்கிடையே மெல்லிய நேசம் இழையோடி, செழித்து வளர்ந்து, பெரு மரமாய் உயிர் கொண்டது.
ஆனால் என்னளவு கூட உடல் பலம் இல்லாத அவ்வதவை, வந்த சில காலங்களிலேயே வெம்மையின் கொடுமையில் மாண்டு போனது விதியால் தான் என, தங்களைக் குற்ற உணர்விலிருந்து காத்துக் கொண்டார்கள் இதயம் இல்லாத அரக்கர்கள்.
மீண்டும் தனிமையே வாழ்வாய். முன்பாவது வெற்றுத் தனிமை. இப்போதோ துணை இழந்த கொடுமை. தகிக்கும் விரகம். இக்கொடூர அனல் கக்கும் புழுதிக் காற்றின் ஊடாக என் அழுகையும், வலியும் எவருக்கும் புரியப் போவதில்லை. ஏனெனில் மனிதம் மரித்துப் போன மனிதர்கள் இவர்கள்.
அன்பு, நேசம் மட்டுமல்ல காதலும் ஒவ்வொரு உயிரின் அத்தியாவசியத் தேவை தான். எவ்வுயிராக இருந்தாலும் துணை என்பதே பற்றுக்கோல், துணையற்ற வாழ்வென்பதே நரகத்தின் பெருந்துயரம்.
மனிதம் அற்றுப் போன மனிதர்களே ஒரு யானையின் துயர் எப்போதும் உங்களுக்குப் புரியாது தான். ஒரு யானையின் வாழ்வோ, மகிழ்வோ, துயரமோ, தனிமையோ உங்களைத் தாக்காது தான். உங்களை அடக்கியாளும் ஓர் உயிரி இப்பூவுலகை ஆள வந்தாலன்றி என் தனிமையின் ரணத்தைச் சுவரில் முட்டியே கடக்கிறேன். இதயமற்றவர்களே, என்னை வேடிக்கை பார்த்து மகிழ்ந்திருங்கள்.
எனை, தனிமையின் கொடுமையில், அந்தகாரத்தில் வீழ்த்துவது தான் உங்கள் அன்பின் பரிமாற்றமென்றால்… மரித்துப் போகட்டும் அன்பெனும் வற்றா ஊற்று.
…
குறிப்புகள்:
கறையடி - யானை (உரல் போன்ற பாதமுடையது)
அத்தினி - பெண் யானை
//ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்து, அதை யானையின் மனதின் வழியே சொல்ல முயன்ற கதையாகும். தற்போது அந்த காவன் எனும் ஆண் யானையை வேறொரு நாட்டிற்கு - அதன் உடல்நிலைக்கு ஏற்ற சூழலுள்ள நாட்டிற்கு அனுப்ப பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்போடியாவிற்கு பயணப்படப் போகிறான் காவன் அங்காவது சஹோலி இல்லாத தனிமைத்துயர் எட்டாத நல்வாழ்வு கிட்டட்டும் காவனுக்கு.
ராஜலட்சுமி நாராயணசாமி
Love u drசெம செம செம ஸ்டோரி தெய்வமே
ஒரு ஆள் பேசுற மாதிரியே கொண்டு போனயே அங்க நிக்கிற பேபி நீ.
உனக்குத்தான் முதல் பரிசுன்னு உறுதியா சொல்ல முடியுமளவு அற்புதமான படைப்பு.
நான் போய் ட்ரீட்டுக்கு ரெடியாகுறேன்