அத்தியாயம் - 4
அடுத்த நாள் காலை அலுவலகத்தில் யோசனையுடன் அமர்ந்திருந்தான் விமல். அவனை நெருங்கினான் சேகர்.
"விமல்... என்னடா இப்படிப் பண்ணிட்டா ? " என்று கேட்ட படியே தன்னை நெருங்கி வந்த நண்பனை வினோதமாகப் பார்த்த விமல்,
"இப்ப நான் என்ன பண்ணிட்டேன் ? " என்று கேட்டான்.
"ஏன் டா... என் வண்டியை எடுத்திட்டு போனியே.. திரும்பி வந்து என்னைப் பிக்கப் பண்ணிட்டு போகனும்னு தோணிச்சா உனக்கு ? "
"பக்கப் பண்ண... நீ என்ன என் லவ்வரா ? "
"டேய்... என்னடா பொசுக்குன்னு இப்படிப் பேசிட்ட. "
"பின்ன என்ன ஒருநாள் உன் வண்டியை எடுத்திட்டு போனதுக்கு இப்படிக் கேள்வி கேட்பியா ? "
"அது... இல்லடா... "
"எது இல்ல... ஏன் டா ஒரு நாளைக்குக் கேப் புக் பண்ணி போக மாட்டியா ? இப்படியா வந்ததும் கேள்வி கேட்டு எரிஞ்சி விழுவே ? "
"விமல் என்னடா அப்ஷட்டா இருக்க ? அந்தப் பொண்ணு எதுவும் உன்னை இன்சல்ட் பண்ணிட்டாளா என்ன ? " என்றான் சேகர்.
அதற்கு அவனை நிமிர்ந்து பார்த்த விமல், "இல்லடா... அவ என்னைப் பார்த்து சிரிச்சா ! அதுதான்... ஒரே குழப்பமா இருக்கு. "
"என்னது சிரிச்சாளா ? அவளுக்குச் சிரிக்கவே தெரியாது டா. யாரைப் பார்த்தும் மருந்துக்கும் சிநேகமா கூடச் சிரிக்க மாட்டா டா அவ... அவ எப்படி உன்னைப் பார்த்து சிரிச்சிருப்பா ? ஒருவேளை அது உன் பிரமையா இருக்கும். "
"பைத்தியம் மாதிரி பேசாதடா... " என்று சற்றே குரல் உயர்த்தி விமல் பேச... அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் என்னவோ ஏதோவென்று அவர்களைப் பார்த்தனர்.
"ஏன் டா கத்தறே ? எல்லோரும் நம்மையே வெறிச்சி பார்க்கறாங்க பாரு. வா... கேன்ட்டின் போகலாம். " என்ற சேகர் விமலின் கையைப் பிடித்துச் சிற்றுண்டி கூடத்திற்கு அழைத்துச் சென்றான்.
இருவருக்கும் தேநீர் வாங்கி வந்த சேகர் விமலிடம் ஒரு குவளையை நகர்த்திவிட்டு... "இப்ப சொல்லு என்ன நடந்துச்சு ? " என்றிட... நேற்று மாலை நடந்ததைக் கூறி முடித்தான் விமலாதித்தன்.
"என்னது நீ தங்கியிருக்கற அப்பார்மெண்ட்டில் தான் அவளும் தங்கியிருக்காளா ? "
"ம்... ஆமாம் டா. "
"இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா... காலையில் உன் வீட்டுக்கு வந்தப்பவே அவகிட்ட பில்லை கொடுத்திருப்பேனே ! "
"டேய்... "
"இல்லடா... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். அதை விடு... ஆனா அவ உன்னைப் பார்த்து சிரிச்சான்னு சொன்ன பாரு அதைத் தான் என்னால நம்ப முடியல. அவ கூட வேலை பார்க்கறவங்களைப் பார்த்துக் கூடச் சிரிக்க மாட்டா. உன்னைப் பார்த்து எப்படிச் சிரிச்சான்னு தெரியலையே. "
"எனக்கும் அதுதான் குழப்பமா இருக்கு மச்சி. அவளை எங்கையோ பார்த்த ஞாபகம் வருது. நானும் நேத்திலிருந்து அதை ஞாபகப்படுத்திக்க முயற்சி பண்றேன்... முடியல. "
"பார்த்த மாதிரி இருக்கா ? "
"ம்... "
"டேய்... நேத்து பார்த்த மாதிரி லிப்டில் பார்த்திருப்ப. ஒரு மாசமா அங்க தானே தங்கியிருக்க. அவசரத்தில் சரியா பார்த்திருக்க மாட்ட. இதைப் போய் யோசிச்சி மண்டையை உடைச்சிக்காதே. "
"நீதானே சொன்ன அவ கூட வேலை பார்க்கறவங்களைப் பார்த்து கூடச் சிரிக்க மாட்டான்னு. அப்புறம் லிப்டில் பார்த்த என்னைப் பார்த்து மட்டும் எப்படிச் சிரிப்பா சொல்லு ? "
"அதுவும் யோசிக்க வேண்டிய விசயம் தான். அவ அவ்வளவு சாதாரணமா யாரையும் நம்ப மாட்டா. " என்ற சேகரும் யோசனையில் மூழ்க...,
"ஏன்டா... அவ எந்த ஊரு ? " என்று கேட்டான் விமல்.
"தெரியாது "
"அவ அப்பா அம்மா எங்க இருக்காங்க. "
"அதுவும் தெரியாது. "
"எங்க படிச்சா ? "
"விமல் அவளைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது டா. "
"யாரை கேட்டா தெரியும். "
"ம்... அதுவும் தெரியாது. "
"டேய்... "
"பின்ன என்ன விமல்... அவதான் யாரோடையும் சகஜமா பேச மாட்டான்னு சொல்றேன் இல்ல. அப்ப அவளைப் பத்தி யார் கிட்டக் கேட்க முடியும் சொல்லு. "
"கூட வேலை பார்க்கறவங்க யார் கிட்டையாவது... கேட்கலாம். அவளுக்கு நெருக்கமான தோழிகள் யாராவது ஆபீஸில் இருப்பாங்க தானே ? "
"ம்... " என்று யோசிப்பதைப் போலப் பாவனைச் செய்த சேகர்... "வேணும்னா வித்துக் கிட்ட கேட்டுப் பார்க்கலாம். " என்றிட,
"வித்துவா ? யார் அது ? "
"ம்... ஆடிட்டர் சாரோட பொண்ணு. "
"அவளை உனக்குத் தெரியுமா ? "
"என் கிளாஸ் மெட் தான். பழக்கம் இருக்கு. ஆனா பேசி ரொம்ப நாளாகுது. உனக்காகப் பேசி பார்க்கறேன். "
"ஏன்டா ஆடிட்டர் பொண்ணைச் சிநேகிதியா வெச்சிக்கிட்டு தான் நேத்து அந்தச் சீன் போட்டியா ? "
"டேய்... வேலை வேற... கா... இல்ல... பிரண்ட்ஸுப் வேற... " என்று சேகர் உளற
"எது... காதலா ? என்னடா சொல்றே ? "
"காதலா ? நான் எப்ப அப்படிச் சொன்னேன். அதெல்லாம் ஒன்னுமில்ல. " என்று மழுப்பினான்.
"சேகர்... "
"இல்ல விமல்... "
"ஓ... நான் ஒன்னும் உன் கூடவே படிச்சி வளர்ந்தவன் இல்லையே. ஏதோ வேலைக்காக வந்த இடத்தில் நட்பா பழகினோம். அவ்வளவு தானே... சரி விடு... நான் தான் நிறைய எதிர்பார்த்திட்டேன். "
"விமல் அப்படியெல்லாம் இல்லடா... " என்றவன் தயக்கத்துடன்... "நான் ஏதாவது பண்ணிட்டு தான் அவங்க அப்பா கிட்ட இதைப் பத்தி பேசனும்னு இருக்கேன். வித்துவும் அதைத் தான் விரும்பரா. எனக்கும் அதுதான் கௌரவமா இருக்கும். இப்ப எங்க குடும்பம் இருக்கற நிலையில் போய் நானும் உங்க மகளும் காதலிக்கறோம்னு சொன்னா... அவங்க அப்பா ஏத்துக்கறது கஷ்டம் தானே. " என்றான் சேகர் தயக்கத்துடன்.
"நல்ல முடிவு தான் சேகர். காதலிச்சோம்... வீட்டை எதிர்த்து கல்யாண பண்ணினோம்... அப்புறம் ஒத்து வரல பிரிஞ்சிட்டோம்ன்னு இருக்கிறவங்களுக்கு மத்தியில... நாளை பத்தி யோசிச்சி பார்க்கற பாரு... உன்னை எனக்கு இப்ப இன்னும் ரொம்பப் பிடிச்சிருக்கு டா. " எனக்கூறி விமல் சேகர் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"இது வேற யாருக்கும் தெரியாது விமல். நீயும் இதை வெளிப்படுத்திடாதே... "
"நீயா சொல்ற வரை நானா யார் கிட்டையும் சொல்ல மாட்டேன். "
"தேங்க்ஸ் மச்சி... "
"சரி... அப்ப வித்துவுக்குப் போன் போடறது. "
"இப்பவா ? "
"ஏன் ? இப்ப நீ கூப்பிட்டா எடுக்க மாட்டாளா ? "
"அப்படி இல்ல... " என்றவன் "சரி இரு... நான் போய்ப் பேசிட்டு வரேன். " எனக்கூறி தனியாகச் சென்றான்.
சில நிமிடங்களில் மீண்டும் வந்த சேகர்... "அந்தப் பொண்ணுக்கு இங்க கிளோஸ் பிரண்ட்ஸ்ன்னு யாரும் இல்லையாம் விமல். படிச்சது ஏதோ ஒரு ஆசிரமம் மூலமாவாம். அந்தக் காலேஜில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ வழியா இங்க வந்து சேர்ந்திருக்கா. இப்ப சி.ஏ. படிச்சிக்கிட்டு இருக்காளாம். " என்று தான் சேகரித்த தகவல்களை விமலிடம் கூறினான்.
"ஆசிரமம் மூலமா ? " என்றவன் "ஊர் பேரு... "
"அது அவளுக்குத் தெரியல மச்சி. "
"அவளுக்கு எனக்கும் ஏதோ ஒரு பழக்கம் இருக்கற மாதிரி தோணுது சேகர். அவ முகம் பார்த்து பழகின முகம் போலத் தோணுது. அதான்... ஒரே யோசனையா இருக்கு."
"டேய்... நான் ஒன்னு சொல்லுவேன் திட்டக்கூடாது. "
"சொல்லு... "
"அவதான் உன்னைப் பார்த்து சிரிச்சான்னு சொல்றியே... இன்னிக்குச் சாயந்தரம் வீட்டுக்குப் போகும்போது அவளைத் தற்செயலா பார்க்கற மாதிரி பார்த்து... உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்லி பேசி பாரேன். "
"என்னை அவகிட்ட அடி வாங்க வைக்க ப்ளான் போட்டுட்டே... "
"அப்படி இல்ல விமல்... "
"ஆனா... நீ சொல்றதும் பாய்ண்ட் தான். தேவையில்லாம மண்டையைப் போட்டு உடைச்சிக்காம அவகிட்டையே கேட்டுடலாம். நீயும் சாயந்தரம் என்னோட வா... "
"ஆளை விடுடா சாமி. வண்டியை கூட நீயே வெச்சிகோ... நான் நடந்தே கூட ரூமுக்கு போயிக்கறேன். "
"அப்ப நீ கூட வரமாட்ட... "
"புரிஞ்சிக்கோ மச்சி.. என்னைப் பார்த்தா அவ கடுப்பாகி... உன்கிட்ட பேசறதை கூட அவாய்ட் பண்ணிடலாம். "
அவனையே பார்த்த விமல்... "இந்தா உன் வண்டி சாவி. என் வண்டி மதியம் வந்திடும்... நானே பார்த்துக்கறேன். " என்றுவிட்டு சிற்றுண்டி கூடத்திலிருந்து கிளம்பி அலுவலகக் கேபினுக்குச் சென்றான்.
அவன் கேபினுக்கு வந்து சேரவும் அந்த நிறுவனத்தின் முதலாளி மதன்குமார் விமலை இன்டர்காமில் அழைக்கவும் சரியாக இருந்தது.
"விமல்... அடுத்த கட்டுமான பணிக்களுக்கான விரைவு திட்டம் தயாராகிடுச்சா ? " என்றவர் கேட்க,
"தயாரா இருக்கு சார். "
"அப்ப அதை எடுத்துக்கிட்டு வாங்க. நாம போய் டிசைனை காட்டி சம்மதம் வாங்கிட்டு வந்திடலாம். "
"ஓகே... சார். " என்ற விமல் இணைப்பைத் துண்டித்துவிட்டுத் தான் வரைந்து வைத்திருக்கும் புதிய வரைவு திட்டம் அடங்கிய கோப்புகளை எடுத்துக் கொண்டு மதன்குமாரின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.
"வாங்க விமல்.. " என்றவர் அழைக்க விமல் உள்ளே சென்று கோப்புகளைக் கொடுத்தான்.
"நீங்க ஒருமுறை சரி பார்த்திடுங்க சார். " என்று விமல் கூறவும் மதன்குமாரும் மென்னகையுடன் அதைச் சரி பார்த்தார்.
"பைஃன்... " "போகலாம் விமல்... நேரமாகுது. " என்று கூறிய மதன்குமார் கோப்புகளை விமலிடம் கொடுத்துவிட்டு முன்னே நடந்தார். அவரை விமல் தொடர... இருவரும் அலுவலகத்தில் இருந்து கிளம்பினர்.
அன்றைய நாள் விமலுக்குப் புதிய கட்டுமான தொடக்கத்திற்கான பணியில் கரைந்திட... மனோன்மணியைச் சந்திக்க அவன் போட்டு வைத்திருந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாமல் போனது. இரவு நேரம் நெருங்க அலுவலகத்திலிருந்து தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினான் விமல்.
"இன்னிக்கு நாள் வேலையில் கரைச்சிடுச்சே. இந்தச் சேகர் பையனையும் பார்க்க முடியல. நாளைக்குச் சீக்கிரம் கிளம்பி சைட்டுக்கு போகனும். இனி எப்பதான் அவளைப் பார்க்க போறோமோ தெரியல. " என்ற சிந்தனையுடன் தன் வீடு இருக்கும் அப்பார்மெண்ட்டை அடைந்தான். வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு.. மின்தூக்கி நோக்கிச் சென்றான்.
மின்தூக்கியின் கதவு இவன் செல்லும் முன்பே மூடிக்கொள்ளப் போக... அதைப் பிடிக்கத் தாவி ஓடினான். ஆனாலும் அதற்குள் கதவு மூடிக் கொண்டது. "ச்சே..." என்ற சலிப்புடன் கால்களைத் தரையில் தட்டியவன் தலை நிமிர.. மீண்டும் கதவு திறந்து கொண்டது. ஆச்சரியத்துடன் மின்தூக்கி உள்ளே தன் பார்வையை அவன் செலுத்த அங்கு அவள் நின்றிருந்தாள். அவன் வரவை பார்த்து... மூடிய கதவைத் திறந்திருக்கிறாள்... என்பதை உணர்ந்தவன் மின்தூக்கி உள்ளே தன்னை நுழைத்துக் கொள்ள... அது மேல் தளம் நோக்கி பயணித்தது.
இந்த முறை அவள் இவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவள் தன் கைப்பேசியில் எதையோ தீவிரமாகப் பார்த்து கொண்டிருப்பதைக் கண்டான் விமல். அவளை உற்று நோக்கும் வாய்ப்பு கிட்டியதை போல இருந்தது அவனுக்கு. தலை முதல் காலை வரை அவளைப் பார்த்து அவளின் பிம்பத்தைத் தன் மனதில் ஆழப் பதித்தான் விமல்.
இள மஞ்சள் வண்ணத்தில் அழகிய காட்டன் சுடிதார். ஒப்பனை எதுவும் இல்லாத முகம். நெற்றியில் சிறிய பொட்டு. இடக்கையில் எளிமையான கை கடிகாரம். வலக்கையில் வளையலும் இல்லை வேறு எந்த ஆபரணமும் இல்லை. கூந்தலை போனிடைல் போட்டுக் கட்டியிருந்தாள். கால்களில் எளிய வகையில் காலணி. அவ்வளவுதான் அவள் அலங்காரம். ஆனாலும் அவள் ஒரு ஓவியன் வரைந்து வைத்த அழகோவியம் போலத் தெரிந்தாள். அவள் முகம் பார்க்கும் ஆர்வத்துடன் விமல் நின்றிருக்க... அவன் இறங்க வேண்டிய தளம் வந்து அவனின் ஆசைக்கு ஆணைப்போட்டது.
அவளைப் பார்த்த படியே மின்தூக்கியிலிருந்து வெளியேறியவன் தன் இல்லம் அடைந்து... தன் உடைகளைக் களைந்து ரெப்ரெஷ் செய்து கொண்டு படுக்கையில் விழுந்தான்.
"எவ்வளவு அழகா இருக்கா. இப்பல்லாம் மேக்கப் போடாத முகங்களைப் பார்க்கறதே அரிதா இருக்கு. ஆனா இவ மேக்கப்பே இல்லாம எத்தனை அழகா இருக்கா. தன் அழகை காப்பாத்திக்க... என்னென்னவோ பண்ணற பொண்ணுங்களுக்கு மத்தியில் உடல் அழகை பொருட்படுத்தாம... தன்னை நேர்த்தியா காட்டிக்கறாளே. அன்னிக்கு அவளோட குரலை கேட்டப்ப... எத்தனை ஆணவம்னு தான் தோணிச்சு... ஆனா... அது ஆணவம் இல்லை... தன் வேலையில் அவளுக்கு இருக்கற அக்கறையும் ஈடுபாடும் தான்னு இப்ப புரியுது. அவளோட கண்ணை மட்டும் சரியா பார்க்கவே முடிய மாட்டேங்குது. கண்ணைப் பார்த்தா... ஒரு வேலை அவளை எங்க பார்த்தோம்ன்னு தெரிஞ்சிடும். நல்லா பழக்கபட்ட முகம் மாதிரி இருக்கு. அதனால தான் எனக்கு அவளைப் பார்க்கும்போது மனசுக்குள்ள என்னவோ பண்ணுதோ... ஒருவேளை இது ஈர்ப்போ, காதலோ... இல்லையோ ? யாருன்னு தெரிஞ்சிக்கத் துடிக்கிற தவிப்பு தானோ ? " என்று பலவாறு சிந்தித்தபடியே கண்களை மூடினான். உறக்கம் அவனைத் தழுவ... ஆழ்ந்த உறக்கத்திற்குப் போனான்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் புதிய பணி தொடங்குவதில் வேகமாகக் கழிந்தது. அவளையும் அதன் பிறகு விமலால் பார்க்க முடியவில்லை. அவளைச் சந்திக்கும் அடுத்த வாய்ப்பிற்காகக் காத்திருந்தான் விமல். அந்த வாய்ப்பு அவன் எதிர்பார்க்காத நேரம் அவனை வந்தடைந்தது.
தொடரும்...