கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை ....அத்தியாயம் 04.

Status
Not open for further replies.

Arjun

Moderator
Staff member
காதலின் மாய விசை 04...

ஆதவனின் செவ்வண்ண கதிர்கள் முகத்தில்ப்பட்டு உறுத்த சித்தார்த் மெதுவாக கண்விழித்தான். இரவு நடந்த அனைத்தும் கனவு போலிருக்க தன் கரத்தை உயர்த்தி முகத்தில்படும் ஒளியை மறைத்து கொண்டு சுற்றி பார்த்தான். தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தவன் மிக பெரிய குகையின் வாயிலில் தான் படுத்திருப்பது தெரிய தன்னை சுற்றி பார்த்தவனுக்கு பெரிய பெரிய பாறைகளையும் மயங்கிய நிலையிலிருந்த தன் நண்பர்களையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.

மயங்கி கிடந்த தன் நண்பர்களை கண்டவன் வேகமாக எழுந்து அவர்களின் அருகில் சென்றான். தன் நண்பர்கள் அருகில் சென்றவனுக்கு குகையின் வெளியே ஏதோ சத்தம் கேட்க குகையின் வாயிலுக்கு வந்து எட்டி பார்த்தான். குகையின் வாயிலில் இருந்து ஐம்பதடி தூரம் வரை பச்சை கம்பளம் போர்த்தியவாறு சிறிய அளவில் புற்களாய் வளர்ந்திருக்க ஐம்பதடிக்கு மேல் மரங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி அடர்த்தியாய் வளர்ந்திருந்தன.

சித்தார்த்தோ சத்தம் வந்த திசை பக்கம் திரும்பி பார்க்க தோட்டி வகையான குர்தா அணிந்து அதன் மேல் பழங்கால முறையில் போர் வீரனை போன்று உடையணிந்த மங்கையொருவள் கையில் வாளோடு பயிற்சி செய்து கொண்டிருந்தாள். பெண்ணவளின் வெண்ணிலவு போன்ற பால் வண்ண முகத்தில் ஆங்காங்கே கோர்த்திருந்த வியர்வை துளிகள் ஆதவனின் ஒளிபட்டு நட்சத்திரமென மின்னிக்கொண்டிருந்தன. தன் வெண்டை விரல்களால் நீண்ட வாளினை இறுக்கமாக பிடித்து சுழற்றி பயிற்சி செய்துகொண்டிருந்த மங்கையவளின் மீன் போன்ற விழிகளில் சொல்ல முடியாத அளவு கோபமும் பகைமையும் குடிகொண்டிருந்தது.

சித்தார்த் மெதுவாக நடந்து அந்த பெண்ணின் அருகில் சென்று "ஹலோ மேடம் இது என்ன இடம்" என்று இடத்தை சுற்றி பார்த்தவாறு பேசி கொண்டே கொண்டே முன்னோக்கி நடந்து சென்றான். பேசி கொண்டே முன்னோக்கி நடந்து சென்றவன் பின் மீண்டும் பெண்ணவளை திரும்பி பார்க்க அவளது கரத்தில் சுழன்று கொண்டிருந்த வாளானது சித்தார்த்தின் வலது விழியில் இரண்டு நூல் வித்தியாச தூரத்தில் நீட்டிக்கொண்டிருந்தது.

தன் விழிகளுக்கு மிக அருகில் வாளை கண்டவனது இதயம் ஒரு நொடி நின்று துடிக்க பயத்தில் நொடி பொழுதில் உடலெங்கும் வியர்வை கோர்த்தது. தன் முன்னே வாளை கண்டவனது கால்கள் தானாக இரண்டடி பின்னோக்கி சென்றது. சித்தார்த் பதற்றத்துடன் "ஹே உனக்கு அறிவில்ல நல்லவேளை கத்தி கண்ணுல படல இந்நேரம் கொஞ்சம் தள்ளி நீட்டி கத்தி கண்ணுல பட்டா என்ன ஆகிருக்கும்" என்று பதட்டத்துடன் கேட்க மங்கையவளோ சிறிதும் அச்சமின்றி "என்ன நடந்திருக்கும் நீ உனது விழிகளில் ஒன்றை இழந்திருப்பாய்" என்று கூறிவிட்டு தன் வாளை தன் இடுப்பிலுள்ள உறையினுள் சொருகினாள்.

சித்தார்த்தோ அவளருகில் நெருங்கி "என்னது கண்ணு போயிருக்குமா, சாதாரணமா கண்ணு போயிருக்கும்னு சொல்லுற நா யாருன்னு தெரியுமா" என்று கூறிகொண்டே முன்னேறி நடந்தான். சித்தார்த் தனதருகே நெருங்கியவுடன் இடுப்பிலிருந்த சிறிய கூர்வாளை எடுத்து அவனது கழுத்தில் வைத்தவள். "அதை தான் நானும் கேட்க்கிறேன். நீ யார்..? எதற்காக அந்த காட்டில் கீழே விழுந்த என்னை காப்பாற்ற உன் உயிரை பணயம் வைத்தாய்..?..".. மிக நெருக்கத்தில் பெண்ணவளின் விழியை கண்டவன் தன் கழுத்தில் கத்தி இருப்பதையும் மறந்து அவளது விழிகளையே பார்த்து கொண்டிருந்தான்.

கழுத்தில் கத்தி வைத்தும் அச்சமின்றி தன் விழிகளையே தொடர்ந்து பார்ப்பவனை தன் பார்வையால் ஆராய தொடங்கினாள். ஆறடிக்கு அதிகமான உயரத்தில் மாநிறத்தில் கட்டுமஸ்தான தேகத்துடன் தன் விழியையே தொடர்ந்து பார்ப்பவனது விழிகளில் கெட்ட எண்ணமும் பயமும் துளியுமில்லை. சித்தார்த்தின் கழுத்திலிருந்த கத்தியை இன்னும் அவனது கழுத்தில் படுமாறு ஒட்டி வைத்தவள் "சொல் யார் நீ..? என்னை ஏன் காப்பாற்றினாய்..? ".. என்று கேட்டு அவன் முகம் பார்த்தாள்.

சித்தார்த்தோ மனதிற்குள் "நீ அழகா இருந்த அதா காப்பாத்துனேன்னு சொன்னா கத்திய கழுத்துல இறக்கிருவாளோ" என்று மனதினில் யோசித்தவன் அவளது விழிகளில் தெரிந்த கடுமையை பார்த்து விட்டு "ஒருத்தருக்கு ஆபத்து வரும் போது எப்படி பாத்துகிட்டு சும்மா இருக்க முடியும்..? அதா காப்பாத்துனே இப்ப கழுத்துல இருக்க கத்திய எடுக்குறீங்களா" என்று கேட்பவனை ஒரு முறை மீண்டும் ஆராய்ந்தவள் தன் கூர்வாளை கழுத்திலிருந்து எடுத்தாள்.

சித்தார்த் "ஆமா இது என்ன இடம் ரொம்ப அழகா இருக்கு. இதுவரை கொடைக்கானல்க்கு எத்தனையோ முறை வந்திருக்கே ஆனா இங்க ஒரு தடவை கூட வந்ததே இல்லையே" என்று அந்த இடத்தை ஆராய்ந்தவாறு கேட்டான். பெண்ணவளோ தனதருகே இருந்த பாறையின் மீது தான் வைத்திருந்த துணியாலான பைக்குள் தனது பொருட்களை எடுத்து வைத்து கொண்டே " இது மாய குன்று"... சித்தார்த் "என்னது மாய குன்றா கொடைக்கானல்ல இப்படி ஒரு இடம் இருக்கதா நா கேள்வி பட்டதே இல்லையே" என்று கேட்டு விட்டு சுற்றி பார்க்க அவனுக்கு எதிரே நீளமாக சென்ற ஒரு பாதையை தவிர மற்ற இடமெங்கும் ஓங்கி உயர்ந்த மரங்களும் மலையும் மட்டுமே இருந்தன.

தன் பைக்குள் அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்தவள் "கண்டிப்பாக நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இது உங்கள் உலகமல்ல" என்று கூறினாள். அந்த பெண் கூறியதை கேட்டு அதிர்ந்து திரும்பி பார்த்த சித்தார்த் "என்ன எங்க உலகமில்லையா என்ன உளற்ற" என்று கேட்டு மங்கையவளின் முகம் காண அவளிடம் மௌனமே குடிகொண்டிருந்தது. பின் நேற்று இரவு நடந்தது பற்றி யோசிக்க தொடங்கியவன் "காட்டுக்குள்ள போனே மரமெல்லாம் நடந்துச்சு வெள்ளையா ஒரு பூ இருந்துச்சு அதை நீதான அதை தூக்கிட்டு ஓடுன, மரம் அடிச்சதால நீ கீழ விழுந்த. நீ கிழ விழுந்ததும் நா உன்னை தூக்கிட்டு ஓடுனேன். திடீருனு ஏதோ ஒரு பெரிய மிருகம் வந்து நம்மள தூக்கிட்டு பாறை மேல மோத போச்சு அப்பொறம் எல்லாமே இருட்டாக்கிருச்சு" என்று அதுக்கு மேல் யோசித்தவனுக்கு எதுவும் நினைவில்லை.

சித்தார்த் சாகசத்தை விரும்புபவன் தான் ஆனால் தன்னால் தனது நண்பர்களும் ஏதோ ஆபத்தில் மாட்டி கொண்டார்கள் என்று தோன்றியவுடன் அவனுக்குள் பயம் தோன்றியது. சித்தார்த் "இங்க பாரு நீ சொல்லுறது எனக்கு புரியல. இது என்ன இடம் நாங்க அந்த காட்டுக்குள்ளதான இருந்தோம் அப்பொறம் எப்படி இங்க வந்தோம். நம்மள தூக்கிட்டு வந்த பயங்கர மிருகம் என்ன..?".. என்று குழப்பத்தில் கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றான்.

சித்தார்த்தின் அருகில் வந்தவள் "உங்களின் அருகில் இருந்தும் உங்களை போன்றவர்கள் அறியாத பல உலகங்களில் ஒன்றுதான் இந்த ஆதிவனம். உங்கள் உலகிற்கும் இந்த உலகிற்கும் வரும் பல பாதைகளில் ஒன்று நீங்கள் மயங்கி கிடந்தீர்களே அந்த குகைக்குள் தான் உள்ளது. குள்ள மனிதர்களிடமும், மாய மரங்களிடமும் அகப்பட்ட நம்மை நீங்கள் பயங்கர மிருகம் என்று கூறும் என்னுடைய சிவி தான் பாதுகாப்பாக காப்பாற்றி இங்கு அழைத்து வந்தான்"..

சித்தார்த் "என்ன பாதுகாப்பா கூட்டிட்டு வந்துச்சா எங்கள இந்த மாதிரி விசித்திரமான இடதுக்குள்ள மாட்டி விட்ருக்கு" சித்தார்த் கூறியதை கேட்ட மங்கையவளோ கோபத்தில் "என்னுடைய சிவி மட்டும் இல்லையென்றால் அந்த குள்ளர்கள் செலுத்திய மயக்கி ஊசியின் வீரியம் அதிகமாகி அதே இடத்தில் மடிந்திருப்பீர்கள், சிவி சரியான நேரத்தில் வந்து காப்பாற்றியதால் தான் குகைக்குள் வந்து விழுந்தவுடன் நிலவு மலரின் உதவியால் என்னால் உங்கள் மூவரின் உயிரையும் காக்க முடிந்தது".

சித்தார்த் சிறிது நேரம் சிந்தித்தவன் "சரி உங்க பெயர் என்ன".. சிவியை திட்டியதால் கோபம் வந்தந்தாலும் தன் உயிரை கைப்பற்றியதால் வேறு ஏதும் பேசாது "முக்தா" என்று மட்டும் கூறினாள். சித்தார்த் "இங்க பாருங்க முக்தா நீங்களும் உங்க மிருகமும்தா எங்கள காப்பாத்திருக்கீங்க அதுக்கு ரொம்ப நன்றி. ஆனா நாங்க எப்படி எங்க உலகத்துக்கு போறது. அந்த குகை முழுக்க வெறும் பாறை மட்டும் தான இருக்கு எங்கையுமே பாதையில்லயே. எனக்கு என்னோட உயிர பத்தி கூட கவலையில்லை. எனக்கு என்னோட நண்பர்கள்தா முக்கியம் தயவுசெஞ்சு நாங்க வெளிய போறதுக்கு எப்படியாவது உதவி பண்ணுங்க" என்று கேட்டவனது விழிகளில் தங்கள் நண்பர்களை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பு மட்டுமே இருந்தது.

மயக்க நிலையிலிருந்த சஞ்சனா மயக்கம் தெளிந்து எழுந்தவள் தனதருகே இருந்த முகிலனை எழுப்பினாள். சஞ்சனாவின் கரம் பட்டவுடன் முகிலன் பயத்தில் பதறி கொண்டு எழ உடனே முகிலனின் கரம் பிடித்து அவனை சமன்செய்தவள் "முகி ஒன்னுமில்லடா நாம இப்ப பாதுகாப்பாதா இருக்கோம் நீ பயப்படாத" என்று அவனது பயத்தை போக்கினாள். தான் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை உணர்ந்தவுடன் அந்த இடத்தை சுற்றி பார்த்த முகிலன் "சஞ்சு இது என்ன இடம்டி..?".. சஞ்சனா "ம்ம்ம்.. உங்க மாமனார் வீடு. ஏன்டா நானும் உன்னோடதான இருக்கே என்கிட்ட கேக்குற. இப்ப வரைக்கும் உயிரோட இருக்கோம் அவ்வளவுதா எனக்கு தெரியும். வேகமா எழுந்திரு வெளிய போய் பாப்போம்" என்று கூறிவிட்டு முகிலனின் கையை பிடித்து எழுப்பிவிட்டாள்.

முகிலன் சுற்றி பார்த்துவிட்டு "சஞ்சு சித்து எங்கடி" முகிலன் கேட்டவுடன் தான் சித்தார்த்தை காணவில்லை என்பதை யோசித்த சஞ்சனா "அவனை பத்தி தெரியாதா என்ன..? இந்நேரம் இது என்ன இடம்ன்னு சுத்தி பாக்க போயிருப்பா நாமளும் வெளிய போய் பாக்கலாம்" என்று இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர். வெளியே வந்த இருவரும் சித்தார்த் வித்யாசமான உடையணிந்த பெண்ணொருவளிடம் பேசிக்கொண்டிருந்ததை கண்டனர்.

முக்தவுடன் பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தை கண்ட முகிலன் "சித்து" என்று கத்தியவுடன் முக்தாவும் சித்தார்த்தும் திரும்பி பார்த்தனர். முகிலனை கண்ட சித்தார்த் "ஆத்தி கொலைவெறில இருக்கானே என்ன பண்ண காத்திருக்கானோ" என்று மனதில் எண்ணி கொண்டே "குட் மார்னிங் முகி அண்ட் சஞ்சு" என்று சிரித்து கொண்டே அவர்களின் அருகில் சென்றான்.

சித்தார்த் தங்களருகே புன்னகையுடன் வரவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவர்கள் சித்தார்த் அருகில் வந்தவுடன் இருவரும் சேர்ந்து சித்தார்த்தை அடிக்க ஆரம்பித்தனர். முகிலன் "டேய் பிராடு பயலே காட்டுக்குள்ள போக வேணாம்ன்னு சொல்லிட்டு எங்களுக்கு அல்வா கொடுத்துட்டு தனியா ஓடிட்டா உன்னை காப்பாத்த நாங்க காட்டுக்குள்ள வந்தா சும்மா நிக்குற மரம் கூட எங்கள துரத்துதுடா. அது கூட பரவாயில்ல ஒரு ஜான் கூட இல்லாத அந்த குள்ளனுங்களுக்கெல்லாம் என்ன பயந்து ஓட வச்சுட்டியேடா" என்று இருவரும் மீண்டும் அடிக்க ஆரம்பித்தனர்.

தங்கள் கோபம் குறையுமளவு அடித்தவர்கள் ஒரு எல்லைக்கு மேல் "போதும்டா முடியல" என்று சித்து கெஞ்சவும் விட்டனர். முகிலன் "இங்க பாரு உனக்கு இதுதா கடைசி மகனே மறுபடியும் எங்கவாவது இந்த மாதிரி போன அப்படியே போடான்னு விட்ருவோம்" என்று திட்ட சித்தார்த் அப்பாவியை போல் முகத்தை வைத்து கொண்டு அமைதியாக நின்றான். சஞ்சனா "சித்து இது என்ன இடம், அந்த பொண்ணு யாரு அவ போட்ருக்க டிரஸ் வேற வித்தியாசமா இருக்கு".. என்று கேட்கவும் சித்தார்த் திரு திருவென்று முழித்தான்.

சித்தார்த் முழிப்பதை பார்த்த சஞ்சனா ஏதோ சரியில்லை என்று தோன்ற "சித்து கேட்டுகிட்டு இருக்கேன் பதில் சொல்லுடா".. என்று அழுத்தமாக கேட்டாள். சித்தார்த்தும் வேறு வழியின்றி முக்தா கூறிய அனைத்தையும் இருவரிடமும் கூறினான். முகிலனோ "டேய் சித்து என்னடா உளறுற அவதா ஏதோ சொல்லுறான நீயும் அதை நம்பிகிட்டு இருக்க".. என்று கூறிவிட்டு முக்தா புறம் திரும்பியவன் "யாரு நீ எங்கள கடத்தி பணம் பறிக்க பாக்குறிய உன்னோட இன்னும் வேற யாரெல்லாம் இருக்கா".. என்று கேட்டு கொண்டே முக்தாவின் அருகில் நெருங்கினான்.

முகிலன் முகதாவின் அருகில் நெருங்கிய நேரம் திடீரென அவன் முன் ஒரு ராட்சச மிருகம் குதித்தது. அதை கண்டவுடன் மூவரும் சர்வமும் அடங்கி அதே இடத்தில் அசையாமல் நின்றனர். முகிலன் முன் வந்து நின்ற மிருகமானது சாதாரண யானையின் உருவத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிதாக இருந்தது. அதன் உருவமானது சிங்கத்தின் உடலமைப்போடு யானையின் முகத் தோற்றத்தையும் கொண்டிருந்தது. அதன் வாலானது பாம்பை போன்று வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. அதன் துதிக்கையில் பின்புறம் சாதாரண யானைகளுக்கு இருப்பதை விட இரண்டு மடங்கு பெரிய தந்ததையும் கொண்டிருந்தது. முகிலனின் முன் வந்து நின்ற அந்த மிருகமானது யானையின் பிளிறலோடு சிங்கத்தின் கர்ஜனையும் கலந்தவாறு வித்யாசமாக சத்தமிட அதை கேட்டவன் பயத்தில் அந்த இடத்தை விட்டு ஓட தொடங்கினான்.

முகிலன் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் அதன் பின்னாலிருக்கும் பாதாளத்தை பற்றி அறியாமல் மரங்கள் இருந்த பகுதியை நோக்கி அலறி கொண்டே ஓடினான். மரத்திற்கு அருகே வந்தவுடன் எதிரே இருந்த பாதாளத்தை கண்டவன் தன் வேகத்தை குறைத்து மரத்தின் கிளையை பிடித்து கொண்டு பாதாளத்தை எட்டி பார்க்க அந்த பாதாளமானது ஆயிரம் அடிக்கும் கீழ் ஆழமாக சென்று கொண்டிருந்தது. அந்த பாதாளத்தை பார்த்தவன் உடலெங்கும் பயம் மட்டுமே ஆக்கிரமித்திருக்க தனக்கு பின்னால் திரும்பி பார்த்தவன் தனக்கு வெகு அருகே அந்த மிருகம் வந்து நிற்கவும் பயத்தில் பின்னால் நகர்ந்தான். பின்னாலிருந்த கல் இடறி பாதாளத்தில் விழ போனவனை தனது துதிக்கையால் தாங்கி பிடித்த மிருகம் முகிலனை தனது துதிக்கையால் சுற்றி முக்தாவின் அருகில் வந்து இறக்கி விட்டது.

சித்தார்த்தும் சஞ்சனாவும் அந்த மிருகத்தையும் அது நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய் நின்றனர். முகிலனை இறக்கிவிட்ட மிருகமானது முக்தாவின் அருகில் சென்று அமைதியாக கால்களை மடக்கி கொண்டு தலையை காலின் மீது வைத்தவாறு படுத்துக் கொண்டது. நண்பர்கள் மூவரும் பேச்சற்று இருக்க முக்தா முகிலனருகில் சென்று "எதோ என்னிடம் கேட்க வந்தீர்களே இப்போது கேளுங்கள்"என்று அந்த மிருகத்தின் முதுகில் சாய்ந்து கொண்டு கேட்டாள். முகிலானோ மிருகத்தையும் அந்த பாதாளத்தையும் கண்டவன் உடல் நடுங்கி கொண்டே பேச்சற்று நின்றான்.

சித்தார்த் விரைவாக தன்னை மீட்டு கொண்டு "முக்தா அது என்ன மிருகம் இதுதா நேத்து எங்கள தூக்கிட்டு வந்துச்சா".. முக்தா "மிருகம் என்று கூறாதீர் இவன் என் நண்பன் சிவி. இவன் தான் நேற்று உங்களை அந்த குள்ளர்களிடமும், மாய மரங்களிடமும் இருத்து காப்பாற்றியது"..

சஞ்சனாவும் தன்னை மீட்டுக்கொண்டு "முக்தா உங்க மிருகம்தா சாரி உங்க சிவிதா எங்கள இங்க கூட்டிட்டு வந்துச்சுனா தயவுசெய்து செஞ்சு நீங்களே எங்கள இங்க இருந்து எங்க இடத்துக்கு அனுப்பிவச்சிருங்க".. என்று பயத்துடன் கேட்டாள்.

முக்தா "எனக்கும் உங்களுக்கு உதவ ஆசைதான். ஆனால் இப்போது என்னால் உங்களுக்கு உதவ முடியாது".. முக்தா கூறியதை கேட்ட முகிலன் கோபத்துடன் "என்ன இப்ப உதவ முடியாத நீங்கதான எங்கள இதுக்குள்ள மாட்டிவிட்டிங்க இப்ப வெளிய போக உதவி பண்ண மாட்டேன்னு சொன்ன என்ன அர்த்தம்".. என பேசிக்கொண்டே கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு அடி முன்னே எடுத்து வைத்தான். முகிலனின் குரலை கேட்டு படுத்திருந்த மிருகமானது மெதுவாக தலையை தூக்கி முகிலனை பார்த்தது. முகிலனோ மிருகத்தை பார்த்து முகத்தில் பயத்துடன் "ஆத்தாடி என்னமா மொறைக்குது இதுக்கு எங்க அம்மா பரவாயில்ல போலயே" என்று மனதில் எண்ணிக்கொண்டு கோபமான தன் முகத்தை மிருகத்தின் முன் சிரிப்பதை போன்று மாற்றி கொண்டு பின்னால் நகர்ந்து நின்றான். முகிலன் பின்னால் நகர்ந்ததும் அந்த மிருகமானது மீண்டும் தலையை கீழே போட்டு படுத்து கொண்டது.

முக்தா மூவரையும் நோக்கி "நண்பர்களே என்னால் இப்போது தங்களுக்கு உதவ முடியாது. இந்த குகையிலுள்ள மந்திர கதவானது நிலவு தன் முழு உருவமடைந்து பௌர்ணமியாக பிரகாசிக்கும் நாளின் போது மட்டுமே திறக்கும். அன்று மட்டுமே என்னால் உங்களை இங்கிருந்து உங்களது உலகத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் உங்கள் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்த பௌர்ணமி வரும் வரை காத்திருக்க வேண்டும்"..

சஞ்சனா "என்ன அடுத்த பௌர்ணமியா அதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகுமே அதுவரை எங்களால எப்படி இங்க இருக்க முடியும். இங்க என்ன ஆபத்து இருக்கும்ன்னு தெரியல அந்த நடக்குற மரம், குள்ள மனிதர்கள் அப்பொறம் இந்த மிருகம் இது எதையும் நாங்க எங்க வாழ்க்கையில பாத்ததேயில்லை. இப்படி சுத்தியும் ஆபத்து இருக்க இடத்துல எங்களால எப்படி இருக்க முடியும்." என்று ஆற்றாமையுடன் கேட்டாள்.

முக்தா சஞ்சனாவின் கரம் பற்றி கனிவான குரலில் "தோழியே உன் பயமும் வருத்தமும் எனக்கு புரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலாது. நீங்கள் இன்னும் ஒரு மாத காலம் காத்திருக்க தான் வேண்டும். அடுத்த பௌர்ணமி வந்தவுடன் நான் கண்டிப்பாக உங்களை அந்த குகையிலுள்ள கதவு வழியாக உங்கள் உலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்." என்று கூறினாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க இவர்கள் இடத்தை நோக்கி தீடிரென வானத்திலிருந்து ஒரு ராட்சச பறவை பறந்து வந்தது. நன்றாக வளர்ந்த குதிரையின் அளவிலிலிருந்த பறவையானது பார்ப்பதற்கு அன்னப் பறவை போன்ற உடலமைப்புடன் உடல் முழுவதும் மங்கிய பிங்க் நிறத்துடன் காட்சியளித்தது. உடல் முழுவதும் பிங்க் நிறத்திலிருக்கும் பறவையின் கழுத்து பகுதியில் மட்டும் கழுத்தை சுற்றிலும் மயிலிறகின் ப்ளூ நிறத்தில் வளையம் போன்ற அமைப்பிருந்தது. அந்த பறவையில் தலையில் அதிக அளவில் இறகுகள் வளர்ந்து கிரீடம் போன்ற அமைப்புடன் பார்ப்பதற்கே உலகின் மொத்த அழகையும் தன்னுள் அடக்கி வைத்தார் போலிருந்தது.

அந்த அழகிய ராட்சச பறவையில் முக்தாவை போன்று போர் வீரனின் உடையணிந்த மற்றொரு பெண் வேகமாக வந்து இவர்கள் அருகில் தரையிறங்கினாள். ராட்சச பறவையில் வந்த பெண் முக்தாவின் அருகினில் நெருங்கி "வணங்குகிறேன் இளவரசி" என்று கூறி மண்டியிட்டாள். அவ்வளவு பெரிய பறவையை கண்டதில் வாயடைத்து போயிருந்த மூவரும் முக்தாவை இளவரசி என்று புதிதாக வந்த பெண் கூறியதும் மூவரும் முக்தாவை ஆச்சிரியமாக பார்த்தனர். முக்தா அந்த பெண்ணை பார்த்து "குழலி நான் உன்னை மக்களுக்கு பாதுகாப்பாக தானே அனுப்பி வைத்தேன் நீ ஏன் பருவியோடு இங்கு வந்தாய்".. என்று கோபமாக கேட்டாள்.

முக்தாவின் குரலிலிருந்த கோபத்தை கண்ட குழலி "இளவரசி தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கூறியதை போன்று நான் நமது மக்களுக்கு பாதுகாப்பாக தான் சென்றேன். ஆனால் பைஜர் இனத்தை சேர்ந்த அரக்கர்கள் நாங்கள் எதிர்பார நேரத்தில் எங்களை தாக்க ஆரம்பித்து விட்டனர். திடீரென நடந்த தாக்குதலால் நமது பல வீரர்கள் மடிந்துவிட்டனர்.

அந்த கொடூரர்கள் இரு குழுவாக பிரிந்து ஒரு குழு எங்களை தாக்கினர். எனவே அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக வந்ததால் நாங்கள் சமாளித்து விட்டோம். ஆனால் மற்றொரு குழுவானது இந்த மாய குன்றை நோக்கி வருவாதாக ஒற்றர்கள் கூறினார்கள். எனவே தளபதி மக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறிவிட்டு என்னை தங்களிடம் அந்த அரக்கர்கள் குன்றை நோக்கி வரும் தகவலை தெரிவிக்க கூறினார். நீங்கள் பருவியை எடுத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள் நான் சிவியோடு சேர்ந்து அந்த அரக்கர்களை சமாளித்துக் கொள்கிறேன்.

தன்னிடம் பறவையை ஒப்படைத்து விட்டு தன் உயிரை தியாகம் செய்ய வந்த குழலியை பெருமையாக பார்த்த முக்தா "குழலி நீ பருவியில் ஏறி பறந்து வா நான் சிவியுடன் காட்டு பாதை வழியாக அரக்கர்கள் கண்ணில் படாமல் குன்றின் கீழே வந்து விடுகிறேன்".. குழலி "இல்லை இளவரசி காட்டுப்பாதை வழியாக இனி பயணிக்க முடியாது. அரக்க படை காட்டு பாதையை தாண்டி நமக்கு வெகு அருகில் நெருங்கி விட்டனர்." என்று கூறியவள் சித்தார்த் மற்றும் அவனது நண்பர்களை நோக்கி தன் பார்வையை செலுத்தினாள்.

குழலியின் பார்வை சென்ற திசையை கண்ட முக்தா "குழலி இவர்களை பற்றி கூற இப்போது நேரமில்லை பிறகு கூறுகிறேன்" என்று கூறிவிட்டு மூவரின் புறம் திரும்பிய முக்தா "நண்பர்களே நீங்களும் இங்கு இருப்பது பாதுகாப்பு அல்ல. மூவரும் சிவியின் மீது ஏறிக்கொள்ளுங்கள்." முக்தா கூறியதை கேட்ட முகிலன் "என்ன அதுமேல ஏறணுமா வாய்ப்பேயில்ல. என்னால அது மேல ஏற முடியாது".. முக்தா உடனே சித்தார்த் மற்றும் சஞ்சனாவை பார்க்க அவர்களும் யோசனையுடன் நின்றனர்.

இருவரின் முகத்திலும் தெரிந்த தயக்கத்தை பார்த்த முக்தா குழலி புறம் திரும்பி "குழலி நீ பருவியில் வா நான் சிவியின் மீது ஏறி அரக்க படை என்னை நெருங்கிய உடன் மலை மீது ஏறி மலையின் எதிர் புறம் அரக்க படை வரும் பாதையில் அவர்களின் படைக்கு பின்னால் சிவியுடன் இறங்கி கொள்கிறேன். பிறகு நான் மலையை விட்டு இறங்க ஆரம்பித்தாள் அந்த அரக்க படையால் சிவியின் வேகத்தில் பாதி கூட வர இயலாது. " என்று கூறிவிட்டு சித்தார்த் புறம் திரும்பியவள். "தோழர்களே என்னோடு வந்தால் எப்படியாவது நான் உங்களை உங்கள் உலகத்திற்கு அனுப்பி வைப்பேன். இல்லை இங்கு தான் இருப்பேன் என்று அடம்பிடித்தால் உங்களது விருப்பம் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வர போகும் அரக்கர்களின் வாளிற்கு இரையாவீர்கள்." என்று கூறிவிட்டு தனது துணிப்பையை சிவியின் முதுகில் கட்டிவிட்டு சிவியின் மீது ஏறி அமர்ந்தாள். முக்தா சிவியின் மீது ஏறியவுடன் குழலியும் பருவியில் ஏறி வானத்தில் பறந்து கொண்டே இவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

முக்தாவை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்பதால் மூவரும் தங்களது பேக்கை எடுத்து கொண்டு சிவியின் மீது ஏறினர். சிவியின் முதுகின் மீது மனிதர்கள் உட்காருவதற்கு வசதியாக மெத்தை ஒன்று வைக்கப்பட்டு பிடிமானத்திற்க்காக சிவியின் உடலை சுற்றி கயிற்றால் பலமாக கட்டப்பட்டிருந்தது. அனைவரும் சிவியின் மீது ஏறியவுடன் முக்தா சிறிது நேரம் காத்திருந்தாள்.

பத்தடி உயரத்தில் கால்ச்சட்டை மட்டும் அணிந்து கொண்டு உடலெங்கும் இளஞ்சிவப்பு நிறத்தில் முடி வளர்ந்திருக்க வவ்வாலின் முக அமைப்புடன் கத்தி கோடாளி என்று பலவிதமான ஆயுதங்களை கரங்களில் ஏந்தி அரக்க படையானது வேகமாக வந்து கொண்டிருந்தது. அரக்க படையானது கண்ணில் தென்பட்டவுடன் அதன் அகோர உருவம் கண்டு முகிலன் வழக்கம் போல் அலற தொடங்கினான். அமைதியாக இருந்த முக்தா அரக்க படை தங்கள் அருகில் நெருங்கியவுடன் பின் புறம் திரும்பியவள் "தோழர்களே சிவியை சுற்றியுள்ள கயிற்றை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்".. என்று கூறிவிட்டு சிவியின் கழுத்தினருகே அமர்ந்தவள் தன் காலால் சிவியின் காது புறம் அழுத்தம் கொடுத்து விட்டு கழுத்திலிருந்த கயிற்றை கெட்டியாக பிடித்து கொண்டாள்.

முக்தா கொடுத்த அழுத்தத்தில் அவள் சொல்வதை உணர்ந்த சிவி குகையின் மீதிருந்த மலையின் மீது ஏற தொடங்கியது. சிவியின் அருகே நெருங்கிய அரக்க படையானது தனது ஆயுதங்களை சிவியை நோக்கி தூக்கி ஏறிய ஆரம்பித்தன. சிவியின் மீது படும் ஆயுதங்கள் அனைத்தும் துரும்பை போல் அதன் மீது பட்டு கீழே விழுந்தன. சிவி மலையின் மீது ஏற ஆரம்பித்தவுடன் நண்பர்கள் மூவரும் கயிற்றை கெட்டியாக பிடித்துகொண்டு பயத்தில் அலற சிவியோ தன் நகங்களை பதித்து பாய்ந்து மலையின் மீது ஏறி கொண்டிருந்தது. மலையில் ஏறியவுடன் முக்தா சிவியின் கழுத்திலிருந்த கயிற்றை லாவகமாக வளைத்து. கீழே தெரிந்த பாதையில் அரக்கர்கள் படையின் பின் புறம் சிவியை குதிக்க செய்து வேகமாக குன்றை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தாள். இதை சற்றும் எதிர் பார்க்காத அரக்கர்கள் முக்தாவை துரத்தி பிடிக்க முடியாது என்பதை உணர்ந்ததால் தாங்கள் வந்த வேலையான குகையை அழிக்கும் வேலையை செய்ய தொடங்கினர்.


முக்தா சிவியுடன் மூவரையும் கூட்டிகொண்டு குன்றின் அடியில் வந்து மாய குன்றை திரும்பி பார்த்தாள். முக்தாவோடு மூவரும் மாயக்குன்றை திரும்பி பார்க்க அவர்கள் உலகிற்கு திரும்பி செல்வதற்கு இருந்த பாதையானது. அரக்க படையால் முழுவதுமாக தகர்க்கபட்டுக் கொண்டிருந்தது.

போன பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏... உங்கள் கருத்துக்களை கீழே 👇 உள்ள கருத்து திரியில் பதிவிட்டு என்னுடைய தவறுகளை சுட்டிக்காட்டி நான் சரியான பாதையில் பயணிக்கி உதவுங்கள் 🙏🙏🙏

 
Last edited:
Status
Not open for further replies.
Top