முக்தாவும் சித்தார்த்தும் கிழக்கு திசையை நோக்கி சிவியின் மீது அமர்ந்தவாறு பயணித்துக் கொண்டிருந்தனர். குழலி பருவியின் மீது அமர்ந்து காற்றைக் கிழித்தவாறு ஆகாயத்தில் பறந்து வந்தாள். குழலி பருவியில் அமர்ந்தவாறு சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டு தாங்கள் செல்லும் பாதை பாதுகாப்பாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே வந்தாள்.
முக்தா சிவியின் கழுத்து புறத்தில் அமர்ந்து சிவியின் கழுத்திலிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு சிவியை காட்டுப் பாதை வழியாக வேகமாகவும் அதே சமயம் லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தாள். சித்தார்த் மெது மெதுவாக சிவியின் முதுகிலிருந்த
கயிற்றைப் பிடித்துக் கொண்டு முக்தா அருகில் சென்றான். முக்தாவும் சித்தார்த் தன் அருகில் வருவதை உணர்ந்தாலும் அமைதியாக இருந்தாள். சித்தார்த் வெகு அருகில் வந்தவுடன் முக்தா சிவியை செலுத்துவதில் கவனம் செலுத்திக் கொண்டு திரும்பாமலே சித்தார்த்திடம் "தங்களுக்கு என்ன வேண்டும்..?"..
சித்தார்த் முக்தா கூறியதைக் கேட்டு ஆச்சிரியத்துடன்" அது எப்படி முக்தா திரும்பி பாக்காமலே நா உங்க பக்கத்துல
வந்ததை கண்டுபிடிச்சீங்க".. என்று கேட்க முக்தா அலட்டிக்கொள்ளாமல் "எப்போதும் நான் கவனமாகவே இருப்பேன். அதனால் தாங்களும் என்னிடம் சற்று கவனமாகவே இருங்கள்"..
சித்தார்த்தோ முக்தாவின் முகத்தை பின்னாலிருந்து எட்டிப் பார்த்தான். சித்தார்த்தின் பார்வை முக்தாவின் முகத்திற்கு செல்ல முக்தாவின் பின்னலிட்ட கூந்தலில் தன் கூட்டத்திடமிருந்து தப்பிய ஒரு சில முடிகள் அடிக்கடி அவளது வெண்ணிலவு போன்ற அழகிய கன்னத்தை வருடின. முக்தா ஒரு கையால் சிவியை செலுத்திக்
கொண்டே மறு கையால் தன் முடிகளை தன் வெண்டை விரல் கொண்டு காதோரம் ஒதுக்க அதை கண்ட சித்தார்த் தன்னையறியாமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.
சித்தார்த்தின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்த முக்தா "ஏன் தங்களின் உலகில் பெண்களே இல்லையா என்ன.. ஏன் இப்படி என்னையே பார்த்துக் கொண்டு வருகிறீர்கள்..?".. என கேட்க முக்தாவின் திடீர் கேள்வியால் சற்று பதறியவன் வேகமாய் தன்னை சமன் செய்து கொண்டு "அது ஒண்ணுமில்ல நீங்க எப்பவும் கவனமா இருப்பேன்னு சொன்னிங்களே அப்பொறம் ஏன் அந்த அரக்கர்கள் நம்மள தாக்க வந்ததை கவனிக்கலன்னு கேட்டேன்".. என்று ஏதோ கூறி சமாளித்தான்.
சித்தார்த் சமாளிப்பதற்க்காக கூற முக்தா
"என்ன செய்ய யானைக்கும் அடி சறுக்கும்".. என கூறிவிட்டு தன் மனதிற்குள் "குழலி எவ்வாறு அவர்கள் பின்தொடர்வதைக்
கவனிக்காமல் இருந்திருப்பாள். அவள் யாரும் நம்மைப் பின்தொடரவில்லை என்று கூறியதால் தானே நான் அஜாக்கிரதையாக இருந்தேன். அதனால் தானே சித்தார்த்தின் நண்பர்களையும் நாம் இழந்தோம். அதோடு என் கவனக் குறைவு இந்நேரம் ஒரு உயிரையே பறித்திருக்குமே".. என்று எண்ணும் போதே கோடாரி பட்டுத் துடித்த சித்தார்த்தின் வலி நிறைந்த முகம் கண்முன் தோன்றி முக்தாவின் இதயத்தில் ஒரு சிறு வலியை உண்டாக்கியது.
முக்தா அமைதியாக இருக்கவும் சித்தார்த் "இளவரசி உங்க சிவியும் யாளிதான, ஆனா நா கோவில்ல பார்த்த சிலை வேற மாதிரி இருந்துச்சு, இது வேற மாதிரி இருக்கு".. முக்தா "யாளிகளில் பல வகை உண்டு. சிம்ம யாளி, கஜ யாளி, மகர யாளி, ஞமலி யாளி மற்றும் பெரு யாளி. இதில் என் சிவி கஜ யாளி வகையைச் சேர்ந்தவன்" சிவியை பற்றிப் பேசும் போது முக்தாவின் குரலில் அன்பும் ஒரு வித அமைதியும் தெரிந்தது. சித்தார்த் "உங்களுக்கு ஏன் சிவி மேல இவ்வளவு பாசம்".. என்று கேட்க முக்தா பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
சித்தார்த் மீண்டும் "இளவரசி என்ன ஆச்சு".. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவளது விழியில் வழிந்த ஒரு துளி கண்ணீர் காற்றின் வேகத்தில் பறந்து வந்து சித்தார்த்தின் மீது மோதியது. முக்தா கண்ணீரின் காரணம் புரியாதவன் குழம்பியவனாய் "என்ன ஆச்சு முக்தா நா ஏதாவது தப்பா கேட்ருந்தா மன்னிச்சிருங்க".. என்று வருந்தினான்.
சித்தார்த்தின் குரலிலிருந்த உண்மையான வருத்தத்தை உணர்ந்தவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு "அப்படியெல்லாம் எதுவுமில்லை பழைய நினைவுகளின் சிறிய தாக்கம் அவ்வளவு தான் தாங்கள் வருந்தத் தேவையில்லை. நான் சிறுமியாக இருக்கும் போது ஒரு முறை நானும் என் அன்னையும் காட்டிற்க்குலுள்ள ஒரு அழகிய ஏரியைக் காண சென்றோம். நாங்கள் சிவியின் அன்னையின் மீது அமர்ந்து படை வீரர்கள் சூழ குட்டியாக இருந்த சிவியையும் அழைத்துக்
கொண்டு சென்றிருந்தோம். ஏரி கரையில் நான் சிவியோடு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென எங்கிருந்தோ வந்த இரண்டு சிம்ம யாளிகள் எங்களைத் தாக்கத்
தொடங்கின.
யாளிகளில் பலமானது சிம்ம யாளியும் கஜ யாளியும் தான். அப்படிப்பட்ட பலம் பொருந்திய இரு சிம்ம யாளிகள் எங்களை திடீரென தாக்கவும் எங்கள் வீரர்களுக்கு என் செய்வதென்று தெரியவில்லை. என் அன்னை வீரத்தில் சிறந்தவர் அதே அளவு விவேகமும் கொண்டவர். என் அன்னை என்னையும் சிவியையும் பாதுகாப்பாக ஏரி கரையிலிருந்த பாறையின் பின்னால் ஒளிந்திருக்கக் கூறினார். பின் சிம்ம யாளிகள் இரண்டும் சிவியின் அன்னையைக் குறி வைப்பதை உணர்ந்த என் அன்னை விரைந்து யோசித்து சிம்ம யாளிகள் இரண்டையும் பிரித்துத் தாக்கத்
திட்டமிட்டார்.
வேகமாக ஓடிச் சென்று
சிவியின் அன்னையின் மீது இருந்த தன் வாளையும் ஈட்டியையும் எடுத்தவர். சிவியின் அன்னையை விட்டு இடது புறத்தில் தள்ளி வந்து நின்று கொண்டு தன்னோடு வந்த வீரர்களில் சிலரை மட்டும் சிவியின் அன்னையோடு சேர்ந்து ஒரு சிம்ம யாளியை மட்டும் தாக்கக் கூறினார். மீதி இருந்த வீரர்களை இங்கயே நின்று கொண்டு மற்றொரு சிம்ம யாளியின் மீது மட்டும் தொடர்ந்து அம்பை எய்திட சொன்னார்.
என் அன்னை கூறியதை போன்று வீரர்கள் ஒரு சிம்ம யாளியை மட்டும் தொடர்ந்து அம்பினால் தாக்கினார்கள். எத்தனை முறை தாக்கினாலும் யாளியின் உடலில் அம்பானது சிறு காயத்தை கூட உண்டாக்க வில்லை. ஆனால் ஒரு சிம்ம யாளியின் கவனம் மட்டும் அம்பு ஏய்தும் வீரர்களின் புறம் திரும்பியது. எனவே ஒரு சிம்ம யாளியை மட்டும் வீரர்களுடன் சேர்ந்து சிவியின் அன்னையால் எளிதாக எதிர்க்க முடியும் என்பதால் என் அன்னை அம்பு எய்தும் வீரர்களுக்கு முன்னால் இருந்த மரத்திற்கு விரைந்து சென்று மரத்தின் மீது வேகமாக ஏறி உயரமான கிளையில் அமர்ந்து கொண்டார்.
ஒரு சிம்ம யாளி மட்டும் அம்பு ஏய்தும் வீரர்களின் அருகில் வரவும் மரத்திலிருந்து குதித்த என் அன்னை சரியாகச் சிம்ம யாளியின் தலையில் அமர்ந்தார். தலையில் அமர்ந்தவர் யாளியானது தன்னை தாக்கும் முன்னரே விரைந்து சென்று யாளியின் கருவிழியில் சரியாக தன் ஈட்டியைப் பாய்ச்சினார். ஈட்டியானது பாதிக்கு மேல் தலைக்குள் சென்று மூளை வரை தாக்க மிக பெரிய சிம்ம யாளியானது அதே இடத்தில் மாமிச மலையென சரிந்து விழுந்தது.
வீரர்கள் தன் மீது வீசும் ஈட்டிகளை துரும்பை போன்று தட்டிவிட்ட மற்றொரு சிம்ம யாளி சிவியின் அன்னையின்
கழுத்தை தன் கூறிய பற்களால் கவ்விக் கொண்டிருந்தது. அதை
கண்ட என் அன்னை விரைந்து சென்று சிம்ம யாளியின் விழியை நோக்கி ஈட்டியை வீச முயன்றார். இதை கண்ட சிம்ம யாளி சிவியின் அன்னையின் கழுத்தை கவ்விக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு தன் கூறிய நகங்களை என் அன்னையின் நெஞ்சின் மீது பாய்ச்சியது.
ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த செயலை யாரும் எதிர் பார்க்கவில்லை. என் அன்னை இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்க நான் என் அன்னையின் அருகில் ஓடினேன். என்னைக் கண்ட சிம்ம யாளி என்னையும் தாக்க வர சிவியின் அன்னை விரைந்து வந்து தன் தந்தங்களைச் சிம்ம யாளியின் வயிற்றில் சொருகி கொண்டு ஏரியை நோக்கி தள்ளி கொண்டு சென்றது.
ஏரிக்குள்ளும் விடாமல் சிவியின் அன்னை சிம்ம யாளியை தள்ளி கொண்டு செல்லவும் சிம்ம யாளி தன் நகங்களால் சிவியின் அன்னையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சிம்ம யாளியால் நீந்த முடியாமல் போக நீருக்குள் மூழ்க ஆரம்பித்தது. சிம்ம யாளியின் பிடி வலுவாக இருந்ததால் சிவியின் அன்னையாலு நீந்த முடியவில்லை. எனவே சிம்ம யாளியோடு சிவியின் அன்னையும் ஏரிக்குள் மூழ்கி இறந்து விட்டது.
இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த என் அன்னையின் அருகில் நின்று நான் கதற சிவியோ ஏரியில் மூழ்கிய தன் அன்னையை காணாது கத்தி கொண்டிருந்தது. அன்று ஒரே நாளில் நானும் சிவியும் எங்கள் இருவரின் அன்னைகளையும் இழந்தோம். அன்று சிவியின் அன்னை இல்லையென்றால் இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். அந்த நிகழ்விற்கு பிறகு என் தந்தைக்கு அடுத்து எனக்கு ஒரு சகோதரனாகவும் நல்ல நண்பனாகவும் எல்லாமுமாகவும்
சிவி மாறி போனான்.
என் தந்தையும் இப்போது உயிரோடில்லை. எனக்கென இப்போது இருக்கும் உறவு என் சிவியும் என் நாட்டு மக்களும் மட்டுமே".. இதை அனைத்தையும் கூறும் போதே முக்தாவின் விழியில் அவள் இதயம் கொண்ட வலி அப்பட்டமாக தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்கள் மூவரும் கிடைக்கும் இடத்தில் தங்கி கிடைக்கும் உணவுகளை உண்டு கொண்டு இவர்களின் பயணம் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக தொடர முக்தாவிற்கும் சித்தார்த்திற்கும் இடையே ஒரு வித அன்பு உருவாக ஆரம்பித்தது.
மூன்றாம் நாள் தொடங்கிய இவர்களின் பயணத்தில் பருவியின் மீது அமர்ந்து வானத்தில் பறந்து கொண்டிருந்த குழலி கீழே கவனித்த போது மரங்களுக்கு இடையே ஏதோ நகர்வதை போன்று தோன்ற கூர்ந்து கவனித்தாள். மரங்களுக்கிடையே இருப்பது என்ன என்று உணர்ந்தவள் தாங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து பட்டு துணியில் ஒரு தகவலை எழுதி இதை தளபதியிடம் சென்று ஒப்படைத்து விடு என்று கூறி பருவியின் காலில் துணியை கட்டிவிட்டாள்.
பின் பருவியை முடிந்த அளவு கீழே பறக்க வைத்தவள் "இளவரசி" என்று கத்திகொண்டே பருவியிலிருந்து குதித்தாள். குழலியின் குரல் கேட்டு இருவரும் மேல் நோக்கி பார்க்க குழலி அந்தரத்தில் பறந்து வந்து கொண்டிருந்தாள். பருவியானது தனியாக வட கிழக்கு திசை நோக்கி பறந்து சென்று கொண்டிருந்தது. காற்றை கிழித்து கொண்டு பறந்து வந்த குழலி ஓங்கி உயர்ந்திருந்த மரத்தின் மீது மோதுவதை போல் வந்தவள் மெதுவாக தன் உடலை வளைத்தாள். தன் உடலை வளைத்து தன் கால் முட்டியை கொண்டு மரத்தின் அருகில் யார் கண்களுக்கும் புலப்படாமல் மரத்தின் பட்டையை போன்ற நிறத்தில் மரத்தில் அமர்ந்திருந்த உருவத்தின் மார்பில் தன் கால் முட்டியால் இடித்தாள்.
அந்த உருவத்தை தன் முட்டியால் தாக்கியவள் மேலிருந்து விழும் வேகம் குறைந்தவுடன் அருகிலிருந்த மரத்தின் கிளைகளை பிடித்து கொண்டு தொங்கினாள். குழலியிடம் அடி வாங்கிய உயிரினமோ மார்பின் மீது பலமாக அடிபட்டவுடன் மரத்திலிருந்து பறந்து வந்து சிவியின் முன்னால் வந்து விழுந்தது. கீழே விழுந்த உருவத்தை பார்த்த முக்தாவின் இதழ்கள் தானாக "கலப்பியன்" என்ற வார்த்தையை உதிர்த்தன. உடனே தன்னை மீட்டு கொண்ட முக்தா ஆபத்தை உணர்ந்து திரும்பி குழலியை பார்த்து "குழலி வேகமாக சிவியின் மீது குதி".. என்று கத்தியவுடன் குழலி வேகமாக மரத்தின் கிளைகளை பிடித்து மாறி மாறி தாவி கொண்டே சிவியின் மீது குதித்தாள்.
குழலி பருவியிலிருந்து குதிக்கும் போது அவளை அதிர்ச்சியுடன் பார்க்க ஆரம்பித்த சித்தார்த் சிவியின் முன்னால் வந்து விழுந்த ஜந்துவை கூட கவனிக்காமல் குழலி சிவியின் மீது வந்து அமரும் வரை அவளையே விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தான். முக்தா தனக்கு முன்னால் வந்து விழுந்த கலப்பியன் இன வீரனை பார்த்தவள் சிவியை வேகமாக வந்த வழியே திருப்பினாள்.
சித்தார்த் குழலியின் இந்த செயலை விழி விரிய பார்த்துக் கொண்டிருக்க கண்ணிமைக்கும் நொடியில் ஒரு கலப்பியன் இன வீரன் பறந்து வந்து சித்தார்த்தை தூக்கி சென்றான். குழலி சித்தார்த்தை தூக்கி சென்ற திசையில் வேகமாக திரும்பி பார்க்க அங்கு மரத்தின் கிளைகள் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தது. சித்தார்த்தை தூக்கி சென்றவுடன் முக்தா சிவியை முன்னேறி செல்லாமல் நிறுத்தியவள் தன் பார்வையை கூர்மையாக்கி சுழலவிட்டாள்.
குழலியும் கவனமாக பார்த்து கொண்டிருக்க திடீரென ஒரு கலப்பியன் வீரன் குழலியை நோக்கி வர சுதாரித்த குழலி தன்னை நோக்கி வரும் வீரனினின் நெஞ்சிலையே ஒரு உதை விட்டாள். குழலியை நோக்கி வந்த உருவம் வந்த வேகத்திலையே பறந்து சென்று விழுந்தது. முக்தா அந்த வீரன் விழுந்த இடத்தை பார்க்க நொடி பொழுதில் அந்த வீரன் மரங்களுக்கு இடையில் மறைந்து கொண்டான்.
மீண்டும் ஒரு வீரன் குழலியை நோக்கி வர குழலி அதை தாக்க முயன்ற நொடி அவளின் வலது புறம் வந்த மற்றொரு வீரன் குழலியை தூக்கி சென்றான். கலப்பியன்கள் குழலியையும் தூக்கி சென்றவுடன் முக்தா வேறு வழியின்றி சரணடைய முடிவெடுத்தாள் "நான் சரணடைகிறேன். என்னை உங்கள் தலைவர் மைஜித்திடம் அழைத்து செல்லுங்கள்".. என்று கூறி தன் இடுப்பில் சொருகியிருந்த வாளை எடுத்து கீழே தூக்கி எறிந்தாள். முக்தா வாளை கீழே போட்டவுடன் இதுவரை மரங்களுக்குள் மறைந்திருந்த கலப்பியன் வீரர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
கலப்பியன் இனம் பல ஆயிரம் ஆண்டுகளாக காடுகளின் நடுவே தங்களுக்கு என்று ஒரு சிறிய ராஜ்ஜியத்தை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். கலப்பியன்கள் சார்ஸ்டின் உலகிலுள்ள மற்ற அனைத்து உயிரினங்களையும் விட மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இவர்களால் நீர் நிலம் இரண்டிலும் வாழமுடியும் அதோடு வானில் பறக்கவும் முடியும்.
கலப்பியன்களின் கால் பாதம் பார்ப்பதற்கு கழுகின் பாதம் போன்று இருக்க அவற்றின் நகங்கள் மிகவும் கூர்மையாகவும் பலமாகவும் இருக்கும். இதனால் இவர்கள் எதை பிடித்தாலும் மிகவும் பலமாக பற்றிக் கொள்வார்கள். அவர்களின் கணுக்காலிலிருந்து கழுத்து வரை சாதாரண மனித உடலமைப்போடு இருந்தாலும் உடல் முழுவதும் தோலிற்கு பதிலாக மீன்களுக்கு இருப்பதை போன்ற ஆயிரக்கணக்கான செதில்கள் மரப்பட்டையின் நிறத்தில் உடலெங்கும் இருக்கும். இதனால் இவர்களால் நீருக்குள் எளிதில் நீந்தவும் முடியும் அதோட செதில்கள் மரப்பட்டையின் நிறத்தில் இருப்பதால் காட்டில் மரங்களுக்கு இடையே மறைந்து கொண்டாலும் யாரின் கண்களுக்கும் எளிதில் புலப்பட மாட்டார்கள்.
கலப்பியன்கள் கடுமையாக உழைக்க கூடியவர்கள் எனவே இயற்கையாகவே அவர்களின் உடல் மிகவும் வலிமையாக கட்டுமஸ்தாகவும் காட்சியளிக்கும். கலப்பியன்களின் முதுகில் எக்ஸ் வடிவில் இளஞ்சிவப்பு நிற துணியை மடித்து வைத்திருப்பதை போன்றதொரு அமைப்பு இருக்கும். கலப்பியன் இனத்தை பற்றி அறியாதவர்கள் அவர்களின் முதுகில் ஏதோ பையை வைத்திருப்பதாகவே எண்ணுவார்கள். ஆனால் அவை உண்மையில் கலப்பியன்களின் றெக்கைகள் கலப்பியன்கள் தேவைப்படும் போது மட்டுமே தங்களின் முதுகில் மடித்து வைத்திருக்கும் றெக்கைகளை விரிப்பார்கள். கலப்பியன்கள் றெக்கைகளை விரிக்கும் போது றெக்கைகளுக்கு உடலிலிருந்து குருதி பாய்ந்து அவர்கள் வானில் பறக்க உதவியாக இருக்கும். தங்களின் தேவை முடிந்தவுடன் அவர்களின் றெக்கைகளை மீண்டும் முதுகிற்கு பின்னால் எக்ஸ் வடிவில் மறைத்து கொள்வார்கள்.
கலப்பியன்களின் கைகள் முழுவதும் சாதாரணமாக மீன்களின் செதில்களை போன்ற தோலுடன் இருந்தாலும் அவர்களின் மணிக்கட்டிற்கு மேலுள்ள உள்ளங்கை மற்றும் விரல்கள் குரங்கின் கைகளை போன்று சற்று வளைந்து எளிதாக மரம் ஏற உதவும் வகையில் இருக்கும். கலப்பியன்களின் முக அமைப்பு மனிதர்களை போன்று ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாக இருந்த போதும் அவற்றின் தோல் மிகவும் கடுமையாக இருப்பதால் பார்ப்பதற்கு மரக்கட்டையால் தலை உருவாக்கப்பட்டதை போன்று காட்சியப்பார்கள்.
முக்தா சரணடைந்தவுடன் அனைத்து கலப்பியன் வீரர்களும் மெது மெதுவாக முக்தவின் அருகில் வர சிவி கோபத்தில் பிளிறலுடன் கர்ஜித்தது. சிவியை கண்ட வீரர்கள் முக்தாவின் அருகில் வர அஞ்சி நிற்க்க முக்தா அவர்களைப் பார்த்து "நீங்கள் முன்னேறி செல்லுங்கள் நான் உங்களை பின்தொடர்கிறேன்" என கூறினாள்.
எனவே பாதி வீரர்கள் முன்னாள் நடக்க முக்தா சிவியில் அமர்ந்து அவர்களை பின் தொடர்ந்தாள். மீதி பாதி வீரர்கள் மரங்களில் தாவி குதித்தும் பின்னால் நடந்து வந்தும் கொண்டிருந்தனர். ஆனால் குழலி மற்றும் சித்தார்த்தை எப்படி அழைத்து செல்கின்றனர் என்று முக்தாவினால் அறிய முடியவில்லை. எனவே முக்தா வேறு வழியின்றி அமைதியாக அந்த வீரர்களை தொடர்ந்து சென்றாள்.
முக்தாவை கலப்பியன் வீரர்கள் தங்களின் இருப்பிடத்தை நோக்கி அழைத்து சென்று கொண்டிருந்தனர். முக்தாவோ தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா என்று தன் பார்வையால் வழியெங்கும் ஆராய்ந்து கொண்டே வந்தாள்.
சித்தார்த் மற்றும் குழலி இருவரையும் முக்தாவை அழைத்து வருவதற்கு முன்பே கலப்பியன் வீரர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அழைத்து வந்திருந்தனர். சித்தார்த் மற்றும் குழலியை கடத்தியவுடன் தன் முதுகில் எக்ஸ் வடிவில் செந்நிற துணி போன்றிருந்த தன் இறகுகளை விரிக்க அப்போது தான் அவை துணியல்ல அந்த உயிரினங்களின் இறக்கைகள் என்பதை சித்தார்த் உணர்ந்தான். சித்தார்த் வினோத கலவையாக இருந்த அந்த உயிரினங்களை ஆச்சிரியமாகவும் அதே சமயங்களில் சிறிது பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
சித்தார்த்திற்கு கலப்பியங்களின் உருவமே ஆச்சிரியமளிக்க அதை விட அவர்கள் இருந்த இடம் இன்னும் ஆச்சிரியமளித்தது. சித்தார்த் அந்த இடத்தையே விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தான். அடர்ந்த காட்டில் ஐம்பது அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களில் மேல் மரக்கட்டைகளை வைத்து கயிற்றால் வலுவாக கட்டி மரங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து பல குடில்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த குடில்களை இணைக்கும் வகையில் தரையிலுள்ள நடைபாதை போன்ற பல பாலங்களும் மரத்தில் மேல் மரக்கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்டு ஒரு சிறிய கிராமமே மரங்களின் மேல் இயங்கிக் கொண்டிருந்தது.
சித்தார்த் தங்களை சுற்றி வினோத உயிரினங்களை கொண்ட ஒரு கிராமமே இருக்க என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்தான். குழலியோ இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தாள். அப்போது குழலியிடம் காட்டில் அடிவாங்கிய ஒரு கலப்பியன் வீரன் தன் ஒரு காலை குழலியின் காலின் மீது வைத்து தன் கூரிய நிகத்தை குழலியின் பாதத்தின் மீது பாய்ச்சினான். திடீரென நடந்த நிகழ்வினால் குழலி வலியில் அலர அதை கண்ட சித்தார்த் கோபத்தில் அந்த வீரனினின் நெஞ்சில் எட்டி உதைத்தான்.
சித்தார்த் உதைத்தவுடன் அந்த உயிரினம் சற்று தள்ளி சென்று விழுந்தது. சித்தார்த் உடனே குழலியின் முன் மண்டியிட்டு அவளின் காலை தன் தொடையில் தூக்கி வைத்தவன் தன் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து குழலியின் காயம் பட்ட இடத்தில் கட்டி ரெத்தம் வெளியேறாமல் தடுத்து நிறுத்தினான். சித்தார்த் தனக்காக அந்த உயிரினத்தை அடித்ததை கண்டு குழலி அதிர்ச்சியிலிருக்க அடுத்ததாக தான் ஆண் என்ற கர்வமின்றி தன் பாதத்தை எடுத்து அவன் மீது வைத்து கட்டு போட்ட சித்தார்த்தின் குணம் குழலியை வெகுவாக கவர்ந்தது.
தங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவனை சித்தார்த் அடித்தவுடன் அங்கிருந்த மற்றொரு வீரன் மண்டியிட்டு அமர்ந்து குழலிக்கு கட்டு போட்டு கொண்டிருந்த சித்தார்த்தின் முதுகில் எட்டி உதைக்க சித்தார்த் சற்று தள்ளி சென்று விழுந்தான். சித்தார்த்திடம் அடி வாங்கிய வீரன் இப்போது சித்தார்த்தை அடிக்க முயல அப்போது அங்கு வந்த அவர்களின் தலைமை பொறுப்பிலிருந்த வீரன் சித்தார்த்தை அடிக்க சென்ற இருவரையும் தடுத்து நிறுத்தினான். அந்த இரு வீரர்களையும் பார்த்து கோபத்துடன் "முட்டாள்களே இவர்களை இங்கு அழைத்து வரும் முன்பு வரை நாம் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நமது இடத்திற்கு வந்த பிறகு இவர்களை தண்டிக்கும் உரிமை நமது அரசருக்கு மட்டுமே உள்ளது. மீறி நீங்கள் இவர்களை ஏதாவது செய்தால் அரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் ஜாக்கிரதை".. என்று மிரட்ட இரு வீரர்களும் அமைதியாக தள்ளி சென்று நின்று கொண்டனர்.
சித்தார்த் அந்த இரண்டு வீரர்களையும் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு எழுத்து குழலியின் அருகில் வந்து நின்றான். குழலிக்கு சித்தார்த்திடம் என்ன கூறுவது என்றே புரியவில்லை. இதுவரை தனக்காக யாரும் சண்டையிட்டதுமில்லை அடி வாங்கியதுமில்லை. அதோடு உரிமையாய் தன் காயத்திற்கு சித்தார்த் மருந்திட்டத்தை நினைத்து குழலியின் மனதில் சொல்ல முடியாத ஒரு புது வித உணர்வு உருவாகியது.
குழலி என்ன பேச என்று தெரியாமல் யோசிக்க சித்தார்த்தே குழலியிடம் "குழலி இன்னும் ரெத்தம் வெளியேறுற மாதிரி இருந்தா சொல்லுங்க நல்லா கட்டி விடுறேன்".. என்று கேட்க குழலி தயங்கியவரே "பரவாயில்லை இப்போது குருதி வெளியேறுவது நின்று விட்டது. அதோடு எனக்காக சண்டையிட்டதற்கு மற்றும் கட்டு போட்டுவிட்டதற்கு மிகவும் நன்றி"..
குழலி தயங்கி கூறியதை கண்டவன் குனிந்து அவளின் காலை பார்க்க தான் கட்டிவிட்ட கட்டையும் மீறி குருதி வெளியேறுவதை கண்டான். உடனே மீண்டும் முன்பு செய்ததை போன்றே குழலியின் பாதத்தை தன் தொடையின் மீது வைத்து கட்டு போட்டுவிட முதல் முறை ஒரு ஆண் தன் பாதத்தை பிடித்தவுடன் குழலி கூச்சத்தில் நெளிந்தாள். ஆனால் சித்தார்த் எந்தவொரு தவறான எண்ணமுமின்றி குழலிக்கு கட்டு போட்டுவிட்டு குழலியின் அருகில் எழுந்து நின்றான்.
சித்தார்த் குழலியிடம் சகஜமாக பேச எண்ணியவன் "குழலி எப்படி நீங்க அவ்வளவு உயரத்துல இருந்து தாவுனீங்க. என்ன பத்தடி உயரத்துல இருந்து குதிக்க சொன்னாலே குதிக்க மாட்டேன். நீங்க எப்படி கொஞ்சம் கூட பயமில்லாம அவ்வளவு உயரத்துல இருந்து குதிச்சீங்க"..
சித்தார்த் தன்னை பற்றி பெருமையாக பேச குழலியின் மனம் ஆனந்தத்தில் கூத்தாடியது ஆனால் அதற்க்கான காரணத்தை பாவையின் மனம் அறியவில்லை. மனம் மகிழ்ச்சியில் துள்ள குழலி உற்சாகத்துடன் "நான் பிறந்தது முதல் பலவேறு போர் பயிற்சிகள் கொடுத்தே வளர்க்கப்பட்டேன். எனவே எனக்கு இதெல்லாம் சாதாரணமான விஷயமே ஏன் உங்களின் உலகில் பெண்கள் யாரும் எங்களை போன்று சாகசங்கள் செய்ய மாட்டார்களா"..
குழலி உற்சாகமாய் பேசுவதை ரசித்த சித்தார்த் "அப்படிலாம் இல்லையே எங்க உலகத்துல இது மாதிரி சாகசம் செய்ற நிறைய பெண்கள் இருகாங்க. ஒரு சில பொண்ணுங்க கராத்தே பாக்ஸிங்ன்னு நிறைய கத்து வச்சிருக்காங்க. இப்படிதா என்னோட நண்பன் முகிலன் ஒரு பொண்ணு கிட்ட காதல சொல்ல பின்னாடியே போனா. அந்த பொண்ணு இவனை திருடன்னு நெனச்சு கராத்தே ஸ்டைல்ல எட்டி உதைச்சுச்சு பாருங்க பையன் பத்தடி தள்ளி விழுந்தான். அப்பொறம் நானும் சஞ்சனாவும் கஷ்டப்பட்டு அவனை காப்பாத்தி தூக்கிட்டு வந்தோம்"..
குழலிக்கு சித்தார்த் கூறிய வார்த்தைகளில் பாதி புரியவில்லை என்ற போதிலும் அவன் கூறிய சில வார்த்தைகளே குழலி தன்னை மறந்து சிரிப்பதற்கு போதுமானதாக இருந்தது. குழலி சிரிப்பதை கண்ட சித்தார்த்தின் மனதில் சிறிது மகிழ்ச்சி பரவியது. கலப்பியன் வீரர்களின் பின்னால் சிவியில் அமர்ந்து வந்து கொண்டிருந்த முக்தாவோ மரத்தின் சித்தார்த்தும் குழலியும் பக்கத்தில் நின்றிருக்க குழலி சிரிப்பதை ஆச்சரியமாக பார்த்தாள். குழலி பொதுவாகவே எந்த ஒரு ஆடவனிடமும் அதிகம் பேசுவதில்லை ராஜ காரியங்களுக்காக பேசும் போது கூட தேவையானதை பேசுவாளே தவிர யாரிடமும் தேவையற்று சிரித்து பேசியதில்லை. குழலிக்கு எப்போதும் ஆண்களின் மீது துளியும் நம்பிக்கையுமில்லை. ஆனால் முதல் முறை குழலி தான் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும் ஒரு ஆடவனுடன் பேசி சிரிப்பது முக்தாவிற்கு ஆச்சிரியத்தை அளித்தது.
குழலியின் புன்னகையை பார்த்த முக்தாவிற்கு அவளின் புன்னகைக்கு காரணமானவனின் புறம் பார்வை சென்றது. சித்தார்த்தை பார்த்தவள் தன்னை மறந்து "மற்ற ஆண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று இவனிடம் உள்ளது. கள்வன் எப்படி பட்ட இதயத்தையும் தன் விழிகளால் தன்னிடம் சாய்த்து விடுகிறான்." என எண்ணினாள். சித்தார்த்தையே பார்த்துக் கொண்டு வந்தவள் தன் எண்ணத்தின் போக்கை அறிந்து அதிர்ச்சியடைந்தாள். உடனே தன் மனதிற்குள் "முக்தா இவனிடம் சற்று கவனமாகவே இரு அது தான் உனக்கு நல்லது".. என கூறிவிட்டு அவர்களின் இடத்தின் அருகில் சென்றாள்.
முக்தா அவர்கள் குடில் இருக்கும் மரத்தின் அருகில் வந்தவுடன் அவளை தூக்கி கொண்டு பறக்க இரண்டு வீரர்கள் முன்னேறி வந்தன. அவர்கள் இருவரையும் சிவி கொடூரமாக முறைக்க இருவரும் அஞ்சி நின்றனர். உடனே முக்தா "சிவி நான் மேலே இருக்கிறேன். நீ எனக்காக கீழேயே காத்திரு" என்று கூற சிவி முக்தாவை தன் துதிக்கையால் பிடித்து மரத்தின் மேலே ஏற்றி விட்டது. பின் அந்த மரத்திற்கு அடியிலேயே மண்டியிட்டு படுத்துக் கொண்டது.
மரத்தின் மேலுள்ள இடத்திற்கு சென்ற முக்தா அந்த இடத்தை சுற்றி பார்க்க சுற்றி இருந்த அனைத்து குடிலுக்குள்ளும் உடலில் காயம்பட்ட நிலையில் பல கலப்பியன் வீரர்கள் இருந்தனர். குடிலை சுற்றி எங்கும் சிவப்பு நிறத்தில் கலப்பியன் வீரர்களின் இரத்த கரையாக படிந்திருந்தது. பல உயிரினங்களின் கைகள் கால்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தன. அனைத்து குடிலுக்கு நடுநாயகமாக அமைந்திருந்த மற்ற குடில்களை விட மிக பெரிய குடிலுக்குள்ளிருந்து இவர்களின் அரசன் மைஜித் வெளியே வந்தான்.
இவர்களின் அரசனும் மற்ற கலப்பியன்களை போன்ற உடல் அமைப்போடு இருந்தாலும் மற்றவர்களை விட சற்று வலிமையாகவும் ஏழடி உயரத்திலும் இருந்தான். இவர்கள் மூவரையும் கண்ட மைஜித் ஏளன பார்வையுடன் குடிலின் வெளியே அமைக்கபட்டுள்ள மரத்தினால் செய்யப்பட்டிருந்த அரியாசனத்தில் சென்று அமர்ந்தான். மூவரையும் பார்வையால் எடைபோட்ட மைஜித் தன் கடினமான உதடுகள் விரிய "வணக்கம் இளவரசி உங்களை கண்டு எத்தனை நாட்களாகி விட்டது. தாங்கள் எங்களின் காட்டு பகுதிக்கு திடீரென விஜயம் செய்ததன் காரணம் ஏனோ".. என கேட்டு அலட்சியமாக பார்த்தான்
முக்தா கோபத்தோடு "மைஜித் இது ஒன்றும் உனது காடு அல்ல. இது அனைவருக்கும் பொதுவான காடு. இந்த காட்டை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. ஏன் எங்களை கைது செய்துள்ளாய். நமது இரு நாடுகளும் தான் பிரச்சனைகளை மறந்து சமாதானம் ஆகி விட்டோமே பிறகு என்ன..?" என்று காட்டமாக கேட்டாள்.
முக்தாவை பார்த்து ஏளனமாக சிரித்த மைஜித் "எந்த நாட்டை பற்றி கூறுகிறாய். உனது மதிலை தேசத்தை பற்றியா இல்லை எங்களின் கலப்பியன் தேசத்தை பற்றியா நீ இரண்டில் எதை பற்றி பேசியும் இனி பயனில்லை. இந்த இரண்டு தேசமும் இப்போது பைஜர் இன அரக்கர்களின் பிடியில் சிக்கி சிதைந்து விட்டது. இதற்க்கு காரணமும் உனது முன்னோர்கள் தான் சுவான் இனத்து மக்கள் அரக்கர்கள் மொத்த பேரையும் அப்போதே அழித்திருப்பார்கள். ஆனால் உங்கள் முன்னோர்கள் தான் அரக்க இன மக்களை தாக்க விடாமல் தடுத்து விட்டீர்கள். அதற்கான பலனை தான் நமது இரு தேசமும் இப்போது அனுபவிக்கிறோம்." என்று கோபமாக கூறினான்.
முக்தா "எங்கள் இனத்தவர்களின் வாளும், ஈட்டியும் எதிரி நாட்டு வீரர்களின் உதிரத்தில் நனையுமே தவிர அவர்கள் நாட்டு பெண்களையும் குழந்தைகளையும் தொட கூட செய்யாது.".. மைஜித் "உங்களின் கொள்கைகளை நீங்கள் மனித இனத்தோடு நிறுத்தியிருக்க வேண்டும். அதை நீங்கள் அரக்கர்களோடும் தொடர்ந்திருக்க கூடாது. அந்த அரக்கர்கள் கருணையற்றவர்கள் அவர்களுக்கு கொள்கைகளோ இரக்கமோ கிடையாது.
அந்த அரக்கர்கள் எங்கள் நாட்டை திடீரென தாக்கினார்கள் போர் வீரரிலிருந்து கர்ப்பிணி பெண்களை வரை பார பச்சம் பாராமல் வெட்டி வீழ்த்தினார்கள். எங்கள் மக்கள் பலர் கொல்லப் பட்டனர். எங்கள் நகரம் முழுவதும் சிதைக்க பட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் முன்னோர்கள் அரக்கர்களிடம் காட்டிய கருணையே அதே கருணையை அவர்கள் திருப்பி காட்டினார்களா இல்லையே உங்கள் நகரத்தை தாக்கி மக்களை கொன்று குவித்தனர். இப்போது நீங்களும் வாழ நகரமின்றி நாடோடிகளாக அழைகிறீர்கள் நாங்களும் எங்கள் நகரத்தை இழந்து பதுங்கி வாழ்கிறோம். இப்போதும் அதே கருணையை அவர்களுக்கு காட்டத்தான் போகிறீர்களா இளவரசி" என்று கோபம் பொங்க கேட்டான்.
முக்தா எதுவும் பேசாமல் அமைதியாகிவிட மைஜித் கண்ணை அசைத்தவுடன் அவரின் வீரர்கள் முக்தாவோடு சேர்த்து மற்றவரின் கட்டுகளை தளர்த்தினர். முக்தா மைஜித்தை கேள்வியாக பார்க்க மைஜித் "இளவரசி பழையதை பேசுவதற்கோ நம் பகையை எண்ணி சண்டையிடுவதற்க்கோ இது சரியான நேரமல்ல இப்போது நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே அந்த அரக்கர்களை நம்மால் வெல்ல முடியும். உங்கள் வீரர்களோடு சேர்ந்து அந்த அரக்கர்களை எதிர்த்து போராட நாங்கள் தயார். அந்த அரக்கர்களை தாக்க நீங்கள் என்ன திட்டம் வகுத்துள்ளீர்கள்."
முக்தா "மைஜித் நீங்கள் கூறுவதை நானும் ஏற்று கொள்கிறேன் நமது பகையை மறந்து உங்களோடு இணைந்து போராட எனக்கு சம்மதம். ஆனால் நமது இரு படைகளும் இணைந்தால் மட்டும் அந்த அரக்கர்களை அழிக்க முடியாது. போன முறை நடந்த போரில் யாளிகளை கொண்டே நாங்கள் அரக்கர்களை வீழ்த்தினோம். ஆனால் இப்போது எங்கள் படைகளில் யாளிகளின் எண்ணிக்கையும் குறைவு. காட்டில் வாழும் யாளிகளை பிடித்து பழக்கி போரில் பயன்படுத்துவது என்பது முடியாத காரியம். நமக்கு இருக்கும் ஒரே வழி சுவான் இன மக்களின் உதவியை நாடுவது மட்டுமே".
மைஜித் "இளவரசி தாங்கள் சுவான் இன மக்களின் நிலையை பற்றி அறியவில்லை போல சுவான் இன மக்களின் அரசர் ஆர்த்தோ போன அமாவாசை அன்றே மரணமடைந்து விட்டார். ஆர்த்தோ மரணித்த உடனே அவர்களின் நாட்டில் குழப்பங்கள் சூழ ஆரம்பித்து விட்டது. ஆர்த்தோ மன்னரின் பிள்ளைகளான சுகீர் மற்றும் ஜலதன் இருவரும் அரியசானத்திற்காக சண்டையிட தொடங்கி விட்டனர். ஆர்த்தோ அரசரின் இறுதி காரியம் கூட இவர்கள் இருவரின் சண்டையால் சிறப்பாக நடைபெறவில்லை".
மைஜித் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முக்தா "என்ன கூறுகிறீர்கள் அரசர் எவ்வாறு மரணமடைந்தார். சுவான் இன மக்கள் இயற்கையாகவே இருநூறு வருடங்கள் உயிர் வாழ கூடியவர்கள் அரசருக்கு வயது எழுபது கூட இருக்காதே கண்டிப்பாக அவர் இயற்கையாக மரணமடைய வாய்ப்பில்லை".. மைஜித் "நீங்க கூறுவது சரிதான் இளவரசி ஆர்த்தோவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. என் ஒற்றர்கள் கூறிய தகவலின்படி ஆர்த்தோ தன் இரட்டை மகன்களில் ஒருவனை அரசனாக தேர்ந்தெடுத்ததால் மற்றொருவன் கோபத்தில் ஆர்த்தோவை கொன்று விட்டதாக அவர்களின் நாட்டில் ஒரு வதந்தி பரவியுள்ளது".
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சித்தார்த் சுவான் இன மக்களின் அரசர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு "முக்தா அந்த அரசர் செத்துட்டார்னா என்னோட நண்பர்களை எப்படி காப்பாத்துறது".. என்று கோபத்துடன் கேட்க அவனின் அருகில் வந்த குழலி "சித்தார்த் தயவுசெய்து சிறிது நேரம் அமைதியாக இருங்கள் நாம் எல்லாவற்றையும் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று கெஞ்ச சித்தார்த் அமைதியானான்.
மைஜித் சித்தார்த்தின் உடையை வைத்தே இவன் வேறு உலகை சேர்ந்தவன் என்பதை புரிந்து கொண்டான். எனவே மைஜித் முக்தாவை கேள்வியாக பார்க்க முக்தா சித்தார்த் பற்றி மைஜித்திடன் கூறினாள். மைஜித் "அப்படியென்றால் இவர்கள் உலகில் உள்ளவர்களிடம் நாம் உதவி கேட்கலாமே".. முக்தா "இல்லை மைஜித் இவர்கள் உலகம் இப்போது பழைய நிலையிலில்லை இவர்கள் உலகில் உள்ளவர்களிடம் உதவி கேட்பது என்பது இயலாத காரியம். நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சுவான் இன மக்கள் மட்டுமே அரசர் ஆர்தோவின் மூத்த மகனான ஜலதனும் கடைசி மகனான பிரஷித்தும் என் தோழர்கள். எனவே நான் சுவான் தேசத்திற்குள் சென்றாள் போதும் மற்றவற்றை நான் பார்த்து கொள்வேன்".
மைஜித் "சரி நீங்கள் இன்று இரவு இங்கு ஓய்வெடுத்து கொள்ளுங்கள் நாளை உங்கள் பயணத்தை தொடரலாம். உங்களுக்கு தேவையான உணவு தங்கும் வசதி அனைத்தும் என் வீரர்கள் ஏற்பாடு செய்து தருவார்கள். உங்கள் யாளிக்கும் உணவு அளித்துவிடுவார்கள் அதற்கும் சற்று ஓய்வு தேவை". மைஜித் கூறியது சரி என்று தோன்ற முக்தாவும் அங்கு தங்குவதற்கு சம்மதித்தவள் "மைஜித் உங்கள் மக்கள் எங்கே இங்கு வெறும் படை வீரர்கள் மட்டுமே உள்ளனர்".
ஆழ்ந்த பெருமூச்சை விட்ட மைஜித் "திடீரென நடந்த தாக்குதலில் பல பேர் மரணமடைந்து விட்டனர். தாக்குதலில் தப்பித்த மக்களை எங்கள் வீரர்களுடன் எங்களின் ரகசிய இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டேன். காயமடைந்த வீரர்கள் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதால் எங்களின் நகரத்திற்கு அருகே உள்ள இந்த ரகசிய இடத்திற்கு அழைத்து வந்து சிகிச்சை அழித்து கொண்டிருக்கிறேன். மைஜித் கூறியவுடன் முக்தா சுற்றி பார்க்க சுற்றிலுள்ள பல கலப்பியன் வீரர்கள் வலியில் முனங்கி கொண்டிருந்தனர். பலர் இறக்கும் தருவாயில் துடித்து கொண்டிருந்தனர்.
இவர்களின் நிலையை கண்ட முக்தா "மைஜித் சிறிது நேரம் பொறுங்கள்" என்று கூறிவிட்டு மரத்தின் மேலுள்ள பாலத்திலிருந்து அருகில் தொங்கி கொண்டிருந்த கொடிகளை பிடித்து கீழே குதித்தாள். பின் சிவியின் முதுகில் மாட்டப்பட்டிருந்த பையிலிருந்து நிலவு மலரை எடுத்து இடுப்பில் சொருகியவள் மரத்தின் மீது ஏறினாள். மரத்தில் எறியவள் நிலவு மலரை எடுத்து கொண்டு ஒவ்வொரு குடிலுக்குள்ளும் சென்று திரும்ப உயிருக்கு போராடி கொண்டிருந்த அனைத்து வீரர்களின் காயங்களும் குணமடைந்து குடிலை விட்டு வெளியே எழுந்து வந்தனர்.
அந்த நிலவு மலரின் ஒளியானது பட்டவுடன் கை கால்களை இழந்த ஜந்துக்களின் கைகளும் கால்களும் கூட மீண்டும் முளைக்க ஆரம்பித்தன. இதையனைத்தையும் அனைவரும் ஆச்சிரியதுடன் பார்த்து கொண்டிருந்தனர். முக்தா அனைவருக்கும் குணமானவுடன் மீண்டும் நிலவு மலரை சிவியிடன் சென்று பாதுகாப்பாக வைத்திவிட்டு வந்தாள்.
தன் வீரர்கள் அனைவரும் குணமானவுடன் மைஜித் "இளவரசியே அனைவருக்கும் எப்படி உடனே குணமானது தாங்கள் கையில் வைத்திருந்த மலரின் பெயரென்ன".. என்று ஆச்சிரியம் நிறைந்த குரலில் கேட்டான். முக்தா "இது நிலவு மலர் காயம் பட்ட இடங்களின் அருகில் கொண்டு சென்றாலே காயங்கள் தானாக குணமாகிவிடும். இது எங்கள் வீரர்களுக்காக நான் போராடி எடுத்து வந்தேன். இது இப்போது உங்கள் வீரர்களுக்கு பயன்பட்டுள்ளது. நான் இதுவரை இந்த மலர் காயங்களையும் நோய்களையும் தான் குணமாக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இது உங்கள் வீரர்களின் உடல் உறுப்புகளையும் வளர செய்துள்ளது"
மைஜித் "எங்கள் மக்களுக்கு இயற்கையாகவே ஒரு உறுப்பு துண்டிக்கப்பட்டால் மீண்டும் சில நாட்களின் அது திரும்ப வளர்ந்து விடும். ஆனால் அந்த மலரின் ஒளிபட்டு உடனே உறுப்புகள் வளர்ந்துவிட்டது. இந்த மலரை கவனமாக வைத்திருங்கள் அரக்கர்களோடு நிகழ போகும் போருக்கு இது நமக்கு தேவை".. என்று கூறிவிட்டு தன் வீரர்களிடம் இவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்குமாறு கூறிவிட்டு தன் குடிலுக்குள் சென்று விட்டான்.
கலப்பியன் வீரர்களும் தங்களின் தோழர்கள் பலர் உயிரை முக்தா காப்பாற்றியதால் முக்தாவிற்கும் அவளது தோழர்கள் இருவருக்கும் தேவையான உணவும் தங்குவதற்கு குடிலும் அமைத்து கொடுத்து மிகவும் மரியாதையுடன் நடத்தினர்.
ஆதவன் தன் செவ்வண்ண கதிர்களை தன்னுள் மறைத்து கொண்டு மலைகளின் மடியில் தஞ்சம் கொள்ள நிலவுமகளோ வான்வெளியில் தன் உலாவை தொடங்கியிருந்தாள். முக்தா தன் குடிலுக்கு வெளியே உள்ள மர பாலத்தின் மீது அமர்ந்து வெண்ணிலாவின் அழகை ரசித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
தூக்கம் வராததால் வெளியே வந்த சித்தார்த் நிலவினை ரசித்துக் கொண்டிருந்த முக்தாவை கண்டான். வெண்ணிலவின் ஒளி மங்கையவளின் முகத்தில் பட்டு அவள் பால் வண்ண முகம் பிரகாசமாய் மிளிர சுற்றி எரிந்த தீப்பந்தங்களும் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. அவளின் அழகில் தன்னை மொத்தமாய் தொலைத்தவன். மெதுவாக அவளருகில் சென்று நின்றான். தனதருகே நிற்பவனை முக்தா தன் புருவத்தை உயர்த்தி பார்த்தாள். சித்தார்த் "இங்க உட்க்காரலாமா" என்று கேக்க சிறு தலையசைப்போட மீண்டும் நிலவை பார்க்க ஆரம்பித்தாள்.
முக்தாவின் அருகில் அமர்ந்தவன் "உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்".. அவனை பார்க்காமலே முக்தா "என்ன..?".. என்று கேட்க "அது ஒண்ணுமில்ல அந்த அரசர் வேற இறந்துட்டதா சொல்றாங்க அப்பொறம் எப்படி எங்கள எங்க உலகத்துக்கு அனுப்புவீங்க"..
முக்தா "தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். என் உயிரை கொடுத்தாவது நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். உங்களையும் உங்கள் நண்பர்களையும் எப்படியாவது உங்கள் உலகத்திற்கு அனுப்பி விடுவேன்"..
சித்தார்த் "இளவரசி உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை எப்படி அனுப்புவீங்கன்னுதா கேட்டேன். என்னோட கவலையெல்லாம் என் நண்பர்களை எப்படியாவது எங்க உலகத்துக்கு பாதுகாப்பா அனுப்பனும் அவ்வளவுதா அவுங்க குடும்பம் இந்நேரம் அவுங்கள நெனச்சு ரொம்ப பயத்துல இருப்பாங்க".. முக்தா "ஏன் தங்களது குடும்பம் தங்களை பற்றி கவலை கொள்ள மாட்டார்களா".. முக்தா கூறியதை கேட்டவன் விரக்தியாக சிரித்தான்.
சித்தார்த்தின் சிரிப்பு சத்தம் கேட்டதும் இப்போதுதான் முக்தா அவனை திரும்பி பார்த்தாள். சித்தார்த்தின் விரக்தியான புன்னகையை கண்டவள் அவனது முகத்திலிருந்த ஒரு வித சோகம் தன்னை தாக்க அவனையே தொடர்ந்து பார்த்தாள்.
சித்தார்த் "முக்தா நீங்க யாரும் இல்லாம தனியா இருக்கீங்க நா எல்லாரும் இருந்தும் தனியா இருக்கேன்.. அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க. என்னை தனியா பாத்துக்க முடியலன்னு அப்பா வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க. நானும் சித்தி வந்ததும் எனக்கு என்னோட அம்மா மறுபடியும் கெடச்சுட்டாங்கன்னு நெனச்சே. ஆனா கடைசி வரையும் எனக்கு என்னோட அம்மா கிடைக்கவே இல்லை. சித்தி நல்லவங்கதா ஆனா அவுங்களால என்னை அவுங்க பையனா நினைக்க முடியல. அப்பொறம் சித்திக்கு ஒரு பையன் பிறந்தான் அதோட எனக்கும் அவுங்களுக்குமான உறவு சுத்தமா முடிஞ்சு போச்சு. அப்பா தொழில் தொழில்ன்னு ஓடுவாரு எனக்கு தேவைக்கு அதிகமாவே பணம் கொடுப்பாரு. ஆனா நா ஏங்கி தவிச்ச பாசம் மட்டும் எனக்கு அவருகிட்ட இருந்து கிடைக்கவே இல்ல. எனக்கு எல்லாமே என்னோட நண்பர்கள் மட்டும்தா" இதை கூறியவனின் கண்களில் வெறுமை குடிகொண்டிருந்தது.
சித்தார்த்தின் முகத்தில் படிந்திருந்த கவலையை பார்த்தவளுக்கு அவனை அணைத்து உனக்கு நான் இருக்கிறேன் என்று கூற வேண்டும் போல் தோன்றியது. பின் தன் எண்ண ஓட்டத்தை நினைத்து திடுக்கிட்டவள் மனதிற்குள் "முக்தா என்ன யோசிக்கிறாய் நீ இவன் உனது உலகை சேர்ந்தவனில்லை வேறு உலகை சேர்ந்தவன் இன்னும் சிறிது நாட்களில் அவனது உலகத்திற்கு சென்று விடுவான். உன்னை நம்பி இங்கு லட்ச கணக்கான மக்கள் உள்ளனர். இந்த பிறவியில் உன் உயிர் உன் மக்களுக்கானது தேவையற்ற எதையும் எண்ணி உன் கடமைகளை மறந்து விடாதே".. என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தன் ஆசைகளுக்கு கடிவாளமிட்டாள்.
சித்தார்த் தன் பர்ஸிலிருந்த தன் அன்னையின் புகைப்படத்தை காட்டி "இதுதா என்னோட அம்மா என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. எப்படி அழகா இருக்காங்களா என்று கேட்டான்".. அவனின் அன்னையின் படத்தை வாங்கி பார்த்தவள் "மிகவும் அழகாக உள்ளார்கள். எப்படி இவ்வளவு சிறிய வடிவில் உங்கள் அன்னையின் ஓவியத்தை வரைந்தார்கள்" என்று முக்தா ஆச்சிரியமாக கேட்க அவளை பார்த்து சிரித்தவன். "இது மனுசங்க வரைஞ்சது இல்லை இது மனுசங்க கண்டு பிடிச்ச இயந்திரம் வரைஞ்சது. அந்த இயந்திரம் பெயரு கேமரா" சித்தார்த் கூறிய அனைத்தையும் முக்தா ஆச்சிரியதோடு கேட்டாள்.
முக்தாவும் சித்தார்த்திடம் சகஜமாக பேச தொடங்கினாள். பின் சித்தார்த் தன் அன்னையின் புகைப்படத்தை வாங்கி பர்ஸிற்குள் வைக்க முக்தாவின் விழிகளில் கண்ணீர் சுரந்தது. அதை கண்டு பதறிய சித்தார்த் "முக்தா என்ன ஆச்சு ஏன் அழுறீங்க".. முக்தா "நீங்க கூறிய இயந்திரம் எங்களிடம் இருந்திருந்தால் என் அன்னையின் புகைப்படமும் என்னிடம் இருந்திருக்கும் அல்லவா".. முக்தாவின் கன்னத்தில் வடிந்த கண்ணீரை துடைத்தவன் முக்தாவின் கரத்தினை பிடித்து கொள்ள முக்தாவின் தலை தானாக சித்தார்த்தின் தோளில் சாய்ந்தது. முக்தா தான் செய்யும் செயலை உணர்ந்து முதலில் திடுக்கிட்டு எழ முயன்றவளை சித்தார்தின் பார்வை எழ விடாமல் செய்தது.
ஐம்பது அடி உயத்தில் மரங்களின் நடுவே கட்டப்பட்டிருந்த அந்த பாலத்தின் ஓரத்தில் தன் கால்களை தொங்கபோட்டவாறு அமர்ந்து கொண்டவன். தன் தோளில் சாய்ந்திருந்தவளை தீப்பந்தங்கள் வெளிச்சத்தோடு நிலவொலியும் சேர்ந்து தேவதையென மிளிர செய்ய அவளின் கரத்தோடு தன் கரத்தை கோர்த்துக் கொண்டான். இருவரின் மனதிலும் எப்படியும் இந்த உறவு இணைய போவதில்லை என்று தெரிந்தாலும் இருவரும் இந்த அழகிய தருணத்தை மணப்பெட்டகத்தில் சேகரித்து கொண்டனர். இவர்கள் இருவரையும் தூரத்தில் நின்று பார்த்த குழலியின் மனதில் ஏனோ முக்தாவின் மீது பொறாமை தோன்றியது.