கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை 01, 02, 03...கதை திரி

Status
Not open for further replies.

Arjun

Moderator
Staff member
IMG-20200718-WA0017.jpg



காதலின் மாய விசை 01...

தன் காதலன் கதிரவனின் வருகையை உணர்ந்த காதலி வெண்ணிலா நானத்தால் தன்னை மேகத்தினுள் மறைத்து கொண்டாள். கதிரவனோ தன் காதலியை தேடி அவளை காண முடியாத ஏக்கத்தில் தன் காதலி எங்கே சென்றாள் என அறிய எண்ணி தன் கதிர்களை பரப்பி உறங்கி கொண்டிருந்த மலர்கள் யாவையும் தட்டி எழுப்பினான். மலர்களோ என்றும் போல் இன்றும் தன் தோழி நிலாவை காட்டி கொடுக்க முடியாமல் தவித்து கதிரவனை சமாதானம் செய்ய பல்வேறு மணங்களை வெளியிட்டன. இப்படியான அழகிய அதிகாலை பொழுதில் கொடைக்கானலை நோக்கி வெண்ணிற ஆடி கார் ஒன்று சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தது.

வத்தலக்குண்டு வழியாகக் கொடைக்கானலை நோக்கிச் சென்ற கார் கொடைக்கானல் மலைமீது ஏற ஆரம்பித்தவுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்த சித்தார்த் ஜன்னலை திறந்தான். ஜன்னலை திறந்தவுடன் அந்த இடமெங்கும் சுற்றியிருந்த மலர்களின் மணமும் சில்லென்ற தென்றலும் மூவரின் தேகத்தையும் வருட மூவரும் அந்த நொடியை வெகுவாக ரசித்தனர். தன் மீது தீண்டும் தென்றலை ரசித்தவாறு காரை ஓட்டிய சித்தார்த் தன் இடது புறம் தெரிந்த மஞ்சளாறு அணையின் அழகைக்கண்டு காரை ஓரமாக நிறுத்தினான்.

கார் நின்றவுடன் காரிலிருந்த சஞ்சனா, முகிலன் இருவரும் சித்தார்த்தை கேள்வியாகப் பார்க்க அவனோ தன் ஆள் காட்டி விரலை இடது பக்கம் காட்டினான்.சித்தார்த் காட்டிய திசையைக் கண்ட இருவரும் மஞ்சளாறு அணையின் அழகை இமைக்க மறந்து பார்த்தனர். பின் மூவரும் காரை விட்டு இறங்கி மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மீது நின்று கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சளாறு அணையின் அழகை ரசித்தனர்.

மெல்லிய குளிரானது தேகமெங்கும் ஊடுருவிச் செல்ல தன்னை சுற்றியுள்ள பசுமை நிறைந்த செடிகளையும் சுத்தமான காற்றையும் மஞ்சளாறு அணையின் அழகையும் ரசித்தவர்கள் அந்த தருணத்தை தன் மொபைலில் அழகாய் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் பாக்ஸை எடுத்த முகிலன் ஒரு சிகெரட்டை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைக்கப் போக முகிலன் வாயிலிருந்த சிகெரட்டை சஞ்சனா பிடுங்கி எறிந்தாள். முகிலனோ கோபமாக "பிசாசே ஏன்டி சிகிரெட்ட தூக்கி எறிஞ்ச" என்று சண்டைக்கு போக சஞ்சனாவோ அவனை முறைத்துக்கொண்டே "உனக்கெல்லாம் அறிவிருக்காடா இங்க காத்து எவ்வளவு சுத்தமா இருக்கு அதை அனுபவிக்காம மதுரையில இருக்க மாதிரியே இங்க வந்தும் சிகரெட் குடிக்கிற"என்று திட்டத் தொடங்கினாள்.

முகிலனோ "அடியே போதும்டி நிறுத்து நானே குளிருல உடம்பெல்லாம் நடுங்குதுன்னு ஒரு
சிகிரெட் அடிக்கலாம்ன்னு நெனச்சா நீ ஏன்டி அதுக்கு இப்படி சாமியாடுற".. சஞ்சனா நக்கலுடன் "ஏன் சார் சிகெரட் இல்லாம இருக்க மாட்டிங்களா. எனக்கு
தெரியாது நீ மதுரை போறவரையும் நீ சிகெரட் அடிக்க கூடாது" என்று அவன் கையில் வைத்திருந்த சிகெரட் பாக்ஸை புடுங்கி
அருகிலிருந்த பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்தாள்.

முகிலனோ கோபம் வந்தாலும் வழக்கம் போல சஞ்சனாவை ஒன்றும் செய்ய முடியாமல் தன் கோபத்தை சித்தார்த் புறம் திருப்பினான். "டேய் சித்து வளர்ந்து கெட்டவனே எத்தனை தடவை சொன்னே இந்த அரைலூச மதுரையாலிலையே விட்டுட்டு வந்துறலாம். நம்ம கூட கூட்டிட்டு வர வேணாம்ன்னு கேட்டியா" என்று கத்திக்கொண்டிருக்க சித்தார்த்தோ முகிலன் பேசுவதை துளியும் கண்டுகொள்ளாமல் மஞ்சளாறு அணையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

முகிலன் "டேய் இங்க ஒரு மனுசே கத்திக்கிட்டு
இருக்கே நீ அப்படி என்ன தெரியுதுன்னு அங்கையே வெறிச்சு பாத்துகிட்டிருக்க".. என்று சித்தார்த் தோள்பட்டையின் மீது கை வைக்க சித்தார்த் "ஒண்ணுமில்ல முகி தூரத்துல இருந்து பாக்கும்போதே மஞ்சளாறு அணை இவ்வளவு அழகா இருக்கே பக்கத்துல போய் பாத்தா
எவ்வளவு அழகா இருக்கும்ன்னு யோசிச்சு பாத்துக்கிட்டிருக்கேன்"..

சித்தார்த் கூறியதைக் கேட்ட முகிலன் "டேய் பைத்தியம் வந்ததும் ஆரம்பிச்சுட்டியாடா
உன்னோட வேலைய. இதுக்கு
முன்னாடி உன்னால அழகர் கோவில் மலைக்கு மேல ஏறி நா பட்டதே போதும்டா சாமி. உன் பேச்சை கேட்டு மலையில இருக்க கோவிலயும் தாண்டி மலை மேல ஏறிட்டு மொபைல்ல
சிக்னலும் இல்லாம ஒண்ணுமில்லாம திரும்பி போக வழியும் தெரியாம இருட்டுல விடிய விடிய உயிர கையில பிடிச்சுக்கிட்டு இருந்ததை என்னால
இன்னும் மறக்க முடியல. என்னால இனிமே ரிஸ்க் எடுக்க முடியாதுடா.
மக்கள் நடமாட்டம் எங்க இருக்கோ மக்கள் எங்க போறாங்களோ அங்கயே கூட்டத்தோட கூட்டமா நாமளும் போய்ட்டு வருவோம். ஆனா ஆள் நடமாட்டமில்லாத ஏரியா பக்கம் எங்கயும் தலைய வச்சே படுக்க வேண்டாம். இப்ப மரியாதையா வந்து வண்டிய எடு ராஜா" என்று கூறி சித்தார்த்தை காரை நோக்கி இழுத்து சென்றான்.

முகிலன் செயலை பார்த்த சஞ்சனா புன்னகைத்தவாரே அவர்கள் பின் சென்று காரில் ஏறினாள். அவளும் சித்தார்த்தினால் முகிலன் அனுபவித்த தொல்லைகளை பற்றி நன்கு அறிந்தவளே அதனால் முகிலனின் பயம் சஞ்சனாவிற்கு சிரிப்பை உண்டாக்கியது. சித்தார்த்தின் அன்னை மரகதம் சித்தார்த்திற்கு எட்டு வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். சித்தார்த்தின் தந்தை சுதாகர் மதுரையிலுள்ள மிக பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் எனவே சித்தார்த்தின் அன்னை மரகதம் இறந்தவுடன் சுதாகரால் சித்தார்த்த்தையும் தன் தொழிலையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியவில்லை. எனவே சுதாகர் தன் உறவுகார ஏழை பெண்ணான சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சாந்தி சித்தார்த்திற்க்கு
வளர்ப்புத் தாயாக நடந்து கொண்டாரே தவிர ஒரு போதும் சொந்த தாயாக நடந்து கொள்ளவில்லை. தாய் பாசத்திற்கு ஏங்கிய சித்தார்த் எவ்வளவு தான் சாந்தியிடம் பழக முயற்சித்தாலும் சாந்தி சித்தார்த்தின் சராசரி தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தார் மற்றபடி சித்தார்த்தை ஒதுக்கியே வைத்தார். சாந்தி சித்தார்த்தை ஒதுக்கி வைத்தாரே தவிர சித்தார்த்தை ஒருமுறை கூட அடித்ததோ திட்டியதோ கிடையாது. சாந்திக்கு சித்தார்த்தை தன் சொந்த பையனாக எண்ணிப் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் சுதாகருக்கும், சாந்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க சித்தார்த் என்ற ஒருவன் அந்த வீட்டில் இருக்குமிடம் தெரியாமல் போனது. ஒரு எல்லைக்கு மேல் தனிமையைத் தாங்க முடியாத சித்தார்த் தன் தந்தையிடம் கூறி ஊட்டியிலுள்ள ஒரு புகழ் பெற்ற தனியார்ப் பள்ளியில்
ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஆரம்பித்தான்.

தன் அன்னை தன்னை விட்டுச் சென்ற பிறகு தனிமை எண்ணும் நோயில் அவதிப்பட்டவனுக்கு மருந்தாக அமைந்தது ஊட்டியில் பள்ளி சேர்ந்தவுடன் கிடைத்த சஞ்சனா மற்றும் முகிலனின் நட்பு. பள்ளி சேர்ந்த சில நாட்களில் மூவரும் இணை பிரியாத நண்பர்களாக மாறினார்கள். முகிலன் எதையும் பெரிதாக எண்ணாமல் வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழ நினைப்பவன். சஞ்சனா எப்போதும் எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பவள் சித்தார்த் மற்றும் முகிலன் இருவரும் செய்யும் குறும்புகளால் வரும் பிரச்சனைகளிலிருந்து இவர்கள் இருவரையும் சாதுரியமாகக்
காப்பவள். சித்தார்த்தின் மொத்த உலகமும் இவர்கள் இருவர் மட்டுமே.

என்னதான் நண்பர்களின் நட்பு கிடைத்தாலும் சித்தார்த்துக்குள் இருந்த ஒரு வித தனிமை எண்ணும் உணர்வு சித்தார்த்தை வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பே இல்லாதவனாகவும், எதை கண்டும் பயமில்லாதவனாகவும் மாற்றியது. தான் இருந்தாலும் இறந்தாலும் தன்னை பற்றி கவலைப்பட யாருமில்லை என்ற உணர்வே ஆபத்தை விரும்பும் நபராக சித்தார்த்தை மாற்றியது.

தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நண்பர்கள் மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து பிசினஸ் செய்ய தொடங்கினர். ஆண், பெண் பேதமின்றி தூய நட்புடன் பழகும் இவர்களின் நட்பை உணர்ந்து சஞ்சனாவின் பெற்றோரும் எந்த விதத்திலும் இவர்கள் பழகுவதில் கட்டுப்பாடு விதித்ததில்லை. நண்பர்கள் மூன்று பேரும் இரவு பகல் பாராது உழைத்ததால் இவர்களின் பிசினஸ் குறுகிய காலத்திலேயே அதிக அளவு வளர்ச்சி அடைந்தது.

தங்கள் பிசினஸில்
எவ்வளவுதான் வேலை இருந்தாலும் தங்கள் தனிப்பட்ட வாழ்வின் சந்தோஷத்தையும் மூவரும் ரசித்து அனுபவித்தனர். எனவே மூன்று மாதத்திற்கு ஒரு முறை மூவரும் சேர்ந்து ஐந்து நாட்கள் எங்காவது சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இந்த முறை இவர்கள் சுற்றுலா செல்ல தேர்ந்தெடுத்த இடம் மலைகளின் இளவரசியான கொடைக்கானல்.

மஞ்சளாறு அணையை பார்த்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்த சித்தார்த் காரை வேறு எங்கும் நிறுத்தாமல் சஞ்சனா தந்தைக்கு சொந்தமான எஸ்டேட்டிலுள்ள கெஸ்ட் ஹவுசில் சென்று நிறுத்தினான். மூவரும் காரை விட்டு இறங்க மூவரையும் கெஸ்ட் ஹவுசில் வேலை செய்யும் முத்து தாத்தாவும் அவரது மனைவி ஆண்டாளும் புன்னகையுடன் வரவேற்றார். மூவரின் அருகிலும் சென்ற முத்து "வாங்க பிள்ளைங்களா எப்படி இருக்கீங்கபா.." என்று புன்னகையுடன் விசாரிக்க அவரைப்பார்த்து சிரித்த சஞ்சனா "முத்து டார்லிங் எங்களுக்கு என்ன நல்லா சந்தோசமா இருக்கோம். நீ ஏன் டார்லிங் போன முறை பாத்தப்போ இருந்ததை விட இப்போ எளச்சு போய்ட்டா..?"..

முத்து "எனக்கு என்ன ராஜாத்தி நா நல்லாத்தே இருக்கே என்ன இவ சமைக்கிறத சாப்பிடுறதுக்கு சும்மாவே இருக்கலாம்ன்னு சரியா சாப்பிடுறதில்ல. அதா உடம்பு எளச்சு போச்சு" என்று ஆண்டாளை காட்டி குறைபட்டு கொள்ள ஆண்டாள் முகம் உக்கிரமானது. சாதனாவோ எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக "முத்து டார்லிங் இதுக்குத்தா நா போனமுறை வரும்போதே சொன்னே என்னை கட்டிக்கோன்னு கேட்டியா இப்பவும் ஒன்னும் கெட்டு போகல நீ ஓகே சொன்னா நா இப்பவும் கல்யாணத்துக்கு தயார்" என்று கூறி கண்ணடிக்க முத்துவின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.

முத்துவின் முகத்திலிருந்த வெட்கத்தை கண்ட ஆண்டாள். "ஏன்யா கெழவா அதுதே சின்ன புள்ள விளையாட்டுக்கு பேசுதுன்னா காடு வா வாங்குது வீடு போ போங்குது இந்த வயசுல உனக்கு வெக்கம் வேறையா நைட் வீட்டுக்கு தான வரணும் பாத்துக்குறேன்."என்று கூறி முறைக்க ஆண்டாளை பார்த்த முகிலன் "மை டாள் பேபி நீ ஏன் பீல் பன்ற உனக்கு நா இருக்கேன். அந்த ஓல்ட் மேன் போனா போகட்டும் உனக்காக நா உயிரையும் கொடுப்பேன்" என்று கூறி தன் இரு கையையும் நீட்ட இப்போது வெக்கபடுவது ஆண்டாள் முறையானது.


சஞ்சனா மற்றும் முகிலனின் காதை பிடித்து திருகிய சித்தார்த் "வந்ததும் உங்க சேட்டைய ஆரம்பிச்சுட்டீங்களா நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சீராதீங்க வாங்க" என்று வீட்டுக்குள் இழுத்துசென்றான். வீட்டுக்குள் சென்ற மூவரும் தங்களுக்கு என்று ஒதுக்கபட்ட அறைக்கு சென்று பிரெஷ் ஆகினர். பின் ஹாலிற்கு வந்த மூவரும் சின்ன சின்ன குறும்புகள் செய்து கொண்டே ஆண்டாள் சமையலை நன்றாக ஒரு வெட்டு வெட்டிவிட்டு எங்கு ஊர் சுற்றலாம் என்று கூகுளில் தேடி கொண்டிருந்தனர்.

சித்தார்த் கூகுளில் எவ்வளவு தேடியும் அவர்கள் பல முறை சென்ற இடமாகவே கூகுளில் காட்ட மேலும் அதில் தேட சித்தார்த்திற்கு வெறுப்பாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தவன் வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து தனக்கு எதிரே செடிககளை சுற்றி களை புடுங்கி கொண்டிருந்த முத்துவை பார்த்து "முத்து தாத்தா இங்க ஏதாவது வித்தியாசமான இடமா இருக்கா எல்லாரும் போற மாதிரி இல்லாம யாருக்கும் தெரியாத வித்தியாசமான இடம் ஏதும் இருக்கா" என்று கேட்டு கொண்டிருந்தான்.

முத்து "இங்க நிறைய அழகான இடம் இருக்கு ராசா. ஏன் யாரும் அதிகம் காலு பதிக்காத இடமும் நிறையா இருக்கு. ஆனா அதே மாதிரி அந்த எல்லா இடத்துலயும் ஆபத்தும் அதிகமா இருக்கு. இங்க நிறைய இடத்துல காட்டு மிருகம் சாதாரணமா சுத்திகிட்டு இருக்குங்க.
அதே மாதிரி ஒரு சில இடத்துல பேய் பிசாசும் இருக்குன்னு சொல்லுவாங்க. அதனால நீங்க சனங்க எங்க கூட்டமா போறாங்களோ அவுங்க கூடவே போய் சுத்தி பாத்துட்டு வந்துருங்க கண்ணு" என்று உண்மையான அக்கறையுடன் கூறினார்.

முத்து கூறியது எதுவும் சித்தார்த்தின் புத்திக்கு ஏறவில்லை. அவனது இயல்பு குணம் அவனை ஆபத்தை தேடியே போக தூண்டியது. எனவே மீண்டும் தனது மொபைலை எடுத்து கொடைக்கானலிலுள்ள ஆபத்தான இடங்களை தேட ஆரம்பித்தான். அதில் ஒரு இடம் அவனை வெகுவாக கவர்ந்தது எனவே அதை பற்றி முழுவதுமாக சேகரித்து அந்த இடத்திற்கே செல்லலாம் என்று முடிவெடுத்தான். தங்களுக்கு தேவையான அனைத்தையும் பேகில் எடுத்து வைத்த சஞ்சனா மற்றும் முகிலன் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

படிக்கட்டில் அமர்ந்திருந்த சித்தார்த்தை பார்த்த முகிலன் "சித்து என்னடா எங்க போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டியே" என்று கேட்க முடிவு பண்ணிட்டேன் மச்சி இங்க பக்கத்துல மதிகெட்டான் சோலை அப்படின்னு ஒரு காடு இருக்காம் இன்னைக்கு நாம அங்க போகலாம்டா" என்று கூறினான். அருகில் வேலை செய்து கொண்டிருந்த முத்து சித்தார்த் கூறிய இடத்தை கேட்டு அதிர்ந்து போனார்.. முத்து தாத்தா பதட்டத்துடன் "தம்பி என்ன பேசுறீங்க நீங்க உங்களுக்கு கோட்டி பிடிச்சிருக்கா என்ன..? இந்த ஊரு சனங்க அந்த இடத்து பெயர கூட சொல்ல பயப்படுவாங்க நீங்க என்னடானா அங்க போகணும்னு சொல்லுறீங்க" என்று உடலெங்கும் நடுக்கத்துடன் கூறினார்.

முத்து பேசியதை கேட்ட சஞ்சனாவிற்கும், முகிலனுக்கும் பயம் தொற்றி கொள்ள சஞ்சனா முத்துவிடம் "என்ன தாத்தா சொல்லுறீங்க அப்படி என்ன தாத்தா இருக்கு அங்க ஏன் எல்லாரும் அதை பத்தி பேசவே பயப்படுறாங்க..?".. என்று கேட்க முத்துவோ அந்த இடத்தை பற்றி கூற தொடங்கினர்.

முத்து "மதிகெட்டான் சோலை ரொம்ப அடர்த்தியான காடுமா. அந்த காடு ஏறக்குறைய பன்னெண்டு கிலோமீட்டர் வரையும் பெருசா இருக்கும்ன்னு சொல்லுவாங்க. அந்த காட்டுகுள்ள போன யாரும் அவ்வளவு சுலபமா உசுரோட வெளிய வர முடியாது. அப்படியே வந்தாலும் சித்தம் கலங்கிதா வருவாங்க. அதுக்குதா அந்த காட்டுக்கு மதிகெட்டான் சோலைன்னு பெயரு வந்துச்சு. அதுக்குள்ள போன எல்லாரும் பைத்தியம் பிடிச்சு வெளிய வர பாதை தெரியாம உள்ளேயே செத்துருவாங்கமா.

அந்த காட்டுக்குள்ள இருக்க ஏதோ ஒரு பூக்குள்ள இருந்து வர்ற வாசனை நம்ம புத்திய பேதலிக்க வைக்கும்ன்னு சொல்லுறாங்க. இதுவரை பன்னெண்டு பேருகிட்ட அதுக்குள்ள போய் செத்து போனதால நம்ம சர்க்காரும் யாரும் அந்த காட்டுக்குள்ள போகக்கூடாதுனு சொல்லி காட்டை சுத்தியும் வேலியடைச்சு காட்டுக்குள்ள போற வழியில அங்க அங்க கேமரா வச்சிருக்காங்க."

முத்து கூறியதை கேட்ட சஞ்சனா பயத்துடன் முகிலனை பார்க்க முகிலனோ தான் மாட்டியிருந்த பேகை கீழே போட்டுவிட்டு சித்தார்த்தை பார்த்து "அடபாவி உனக்கு நா என்னடா துரோகம் பண்ணேன். உன்னோட பழகுனது ஒரு குத்தமாடா. என்னை எதுக்குடா அந்த காட்டுக்குள்ள கூட்டிட்டு போய் கோர்த்துவிட பாத்த" என்று பயம் படர்ந்த முகத்துடன் கேட்க
சித்தார்த்தோ "மச்சி தாத்தா சொல்லுறதெல்லாம் சும்மாடா. அங்க நிறைய மூலிகை இருக்கு. அதை யாரும் பறிக்க கூடாதுன்னு இது யாரோ கட்டிவிட்ட கதைடா" என்று கூறி சமாதானம் செய்ய முயன்றான்.

சஞ்சனா "சித்து அது கதையோ இல்லை உண்மையோ அது நமக்கு தேவையில்லை. நம்ம சந்தோசமா இருக்கதா இங்க வந்தோம் தேவையில்லாம நாம ரிஸ்க் எடுக்க வேண்டாம். நாம வேற எங்காவது சுத்தி பார்க்கலாம். இங்க சுத்தி பாக்க இடமாயில்லை இனிமே அந்த காட்டை பத்தி பேச வேண்டாம்". முகிலனும் "சஞ்சனா சொல்லுறதுதா சரி நாம சுத்தி பார்க்கதா இங்க நிறைய இடமிருக்குல அப்பொறம் ஏன் அங்க போகணும் இனிமே அந்த காட்டை பத்தியே பேச வேண்டாம்" என்று கூறினான்.

அனைவரும் எவ்வளவு கூறியும் சித்தார்த் விடுவதாகயில்லை. "இங்க பாரு ஆன்லைன்ல போட்ருக்காங்க சித்தர் போகர் செஞ்ச மூன்றாவது நவபாஷாண சிலையும் மதிகெட்டான் சோலையிலதா இருக்குன்னு ஒரு வதந்தியும் இருக்காம். நாம ரொம்பலா உள்ள போக வேண்டாம் சும்மா கொஞ்ச தூரம் போய்ட்டு வந்துருவோம். சாகசம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்கை " என்று எவ்வளவு சமாதான படுத்தியும் சஞ்சனாவும் முகிலனும் சமாதானம் ஆகவில்லை.

சித்தார்த் ஒரு எல்லைக்கு மேல் அவர்களிடம் பேச முடியாமல் கோபத்தில் படிக்கட்டில் அமைதியாக அமர்ந்தான். பின் அவன் அருகில் வந்து அமர்ந்த சஞ்சனா அவனது நாடியை பிடித்து கொஞ்சிக் கொண்டே"சித்துமா புரிஞ்சுகோடா செல்லம் உனக்கு சாகசம் பன்றது, உயிர பணயம் வச்சு ரிஸ்க் எடுக்குறதுனா ரொம்ப பிடிக்கும்ன்னு எங்களுக்கு தெரியும். ஆனா எங்க நிலமைய யோசிச்சு பாத்தியா உனக்கு எதை பாத்தும் பயம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்களுக்கு அப்படியில்லைடா முகிலன்லா நைட் ஆகிட்டா அவனோட நிழலபாத்தே பயப்படுவா. இப்படி இருக்க அரசாங்கமே உள்ள போக கூடாதுன்னு தடை செஞ்ச இந்த மாதிரி ஆபத்தான காட்டுக்குள்ள வர சொன்னா எப்படிடா வர முடியும்". என்று பொறுமையாக எடுத்து கூறினாள்.

சஞ்சனா கூறியதை கேட்டு அமைதியாக அமர்ந்திருந்த சித்தார்த் திரும்பி முகிலனின் முகம் பார்க்க முகிலனோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு சித்தார்த்தை பார்த்தான். பின் சிறிது சிந்தித்து விட்டு "சரி சஞ்சு நாம அந்த காட்டுக்குள்ள போக வேண்டாம். ஆனா அதுக்கு பக்கத்துல இருக்க பேரிஜம் ஏரிக்கு போவோம். அதுவும் எல்லாரும் போற மாதிரி சாதாரண சுற்றுலாதளம்தா இதுகவாவது போக சம்மதமா" என்று கேட்டான்.

சித்தார்த் மதிகெட்டான் சோலைக்குள் போக வேண்டாம் என்பதை சொன்ன சந்தோஷத்தில் முகிலனோ "சித்து சரிடா இதுல என்ன இருக்கு சாதாரண ஏரி தான நீ காட்டுக்குள்ள போக வேணாம்ன்னு சொன்னதே சந்தோசம்டா சரி சரி எந்திரி போகலாம்" என்று கீழே போட்ட பேக்கை எடுத்து மாட்டினான்.

முகிலனை பார்த்த சித்தார்த் "சரி முகி வா போகலாம். முத்து தாத்தா போய்ட்டு வாரோம்" என்று கூறிவிட்டு விசிலடித்து கொண்டே வண்டிக்குள் ஏறினான். வேகமாக முகிலன் அருகில் வந்த சஞ்சனா முகிலன் தலையில் பலமாக கொட்ட வலி தாங்க முடியாத முகிலனோ "அம்மா வலிக்குதே.. ராட்சசி என்னை ஏன்டி கொட்டுன" என்று கோபமாக கேட்க சஞ்சனா கோபத்துடன் "நீ ஏன்டா அந்த ஏரிக்கு போக சம்மதம் சொன்ன".. முகிலன் "இதுல என்னடி இருக்கு சித்துதா காட்டுக்குள்ள போக வேண்டாம்ன்னு சொல்லிட்டான்ல அப்பொறம் என்னடி".

மீண்டும் முகிலனின் தலையில் கொட்டிய சஞ்சனா "நாம பழகுன இத்தனை வருசத்துல நம்ம சொன்னதை சித்து எப்போடா உடனே கேட்ருக்கா. அப்படியே கேட்டாலும் அன்னைக்கு முழுக்க முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டுதான திரிவா. ஆனா இன்னைக்கு என்னடானா சிரிச்சுகிட்டே போறா அப்பவே உனக்கு புரியல ஏதோ பிளான் பண்ணிட்டான்னு. மகனே ஏதாவது பிரச்சனை வந்தா சித்துக்கு அடி விழுகுதோ இல்லையோ உனக்கு இருக்குடா" என்று மிரட்டிவிட்டு அவளும் முத்துவிடம் கூறிவிட்டு காரில் ஏறினாள்.

முகிலனோ சஞ்சனா கூறியதை யோசித்தவன் "டேய் முகி சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்டியேடா. இப்ப போய் வேணாம்ன்னு சொன்னா அந்த வளந்து கெட்டவே வேற கேக்க மாட்டானே. விடு நடக்குறது நடக்கட்டும்" என்று மனதினில் நினைத்து கொண்டு காரில் ஏறினான். மூவரும் காரில் ஏறியவுடன் காரானது கொடைக்கானலிருந்து மூணாறு செல்லும் பாதையில் இருபது கிலோமீட்டர் தூரத்திலுள்ள பேரிஜம் ஏரியை நோக்கி சென்றது.

தோழமைகளே கதைக்கான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பதிவிடவும்..🙏

 
Last edited:

Arjun

Moderator
Staff member
காதலின் மாய விசை 02...


உடலை தீண்டும் மெல்லிய குளிரோடு காரில் ஓடி கொண்டிருந்த இனிய கீதத்தையும் ரசித்தவாறு பாடலை முணுமுணுத்துக்கொண்டே சித்தார்த் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். சித்தார்த்தின் முகத்தில் தெரிந்த புன்னகையே முகிலனின் அடிவயிற்றில் பயப்பந்துகளை உருள செய்தது.

சித்தார்த்தின் முகம் பார்த்தவன் திரும்பி சஞ்சனாவை பார்க்க சஞ்சனாவோ அனல் கக்கும் விழிகளுடன் முகிலனை முறைத்து கொண்டிருந்தாள். முகிலன் "டேய் முகிலா இந்த சித்து நாய பாத்தா கண்டிப்பா ஏதாவது பெருசா பஞ்சாயத்தை இழுத்துவிட்ருவா போல இருக்கு. இந்த சஞ்சு பிசாசு வேற பார்வையாலேயே உன்னை எரிச்சுக்கிட்டு வாரா அலார்ட்டா இருந்துகோடா கொஞ்சம் கவனம் செதறுனாலும் நம்மள வச்சு செஞ்சுருவாங்க" என்று மனதினில் எண்ணி கொண்டு சித்தார்த்தை கண்கொத்தி பாம்பாக கவனிக்க தொடங்கினான்.

மதிகெட்டான் சோலை என்னும் அறிவிப்பு பலகையை மூவரும் பார்த்தவாரே கடந்து செல்ல அடுத்த ஐந்து நிமிடத்தில் சித்தார்த் காரை நிறுத்தினான். சித்தார்த் காரை நிறுத்தியவுடன் சஞ்சனா "சித்து இங்க ஏன்டா வண்டிய நிறுத்துன" என்று பதறியவாறு கேட்டாள். சித்தார்த்தோ அலட்டி கொள்ளாமல் "அதா நம்ம வர வேண்டிய இடம் வந்துருச்சே, கீழ இறங்குங்க கூகுள் அண்ணாச்சி இங்கதா நிறுத்த சொல்லுறாரு" என்று கூறி காரை விட்டு கீழிறங்கினான்.

காரை விட்டு கீழே இறங்கிய முகிலனும், சஞ்சனாவும் தங்களை சுற்றிலும் ஆங்காங்கே சில வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டிருக்க கொஞ்சம் நிம்மதியடைந்தனர். பின் அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்த சித்தார்த் "மை டியர் தொல்லைகளா ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிக பெரிய நன்னீர் ஏரியான பேரிஜம் ஏரி தங்களை அன்புடன் வரவேற்கிறது வாங்க போகலாம்" என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

சித்தார்த் முன்னே நடக்க ஆரம்பித்தவுடன் முகிலனின் அருகில் வந்த சஞ்சனா "டேய் முள்ளங்கி தலையா சித்து ஏதோ பிளான் பண்ணிதா நம்மளை இங்க கூட்டிட்டு வந்திருக்கான். அந்த காடும் இங்க பக்கத்துலதா இருக்கு நடந்து போனா கூட பத்து நிமிசத்துல போயிரலாம் போல. சித்து இங்க வரலாம்ன்னு சொன்னதும் நீதா உடனே மடையா ஆட்டுன. அதனால மரியாதையா சித்துவ கவனமா பாத்துக்கோ மகனே சித்துனால ஏதாவது பிரச்னை வந்துச்சு உன்னை கொண்டேபுடுவேன்" என்று மிரட்டிவிட்டு சென்றாள்.

முகிலனோ "கடவுளே இந்த ரெண்டு இரத்த காட்டேறிங்க கிட்ட இருந்தும் என்னை எப்படியாவது காப்பாத்துபா" என்று வேண்டிக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தான். மூவரும் பேரிஜம் ஏரியின் அருகே செல்ல ஏரியின் அழகு மூவரின் எண்ண ஓட்டங்கள் யாவையும் மறக்க செய்தது. சுற்றி எங்கும் பச்சை நிற கம்பளம் விரித்ததை போன்று பார்க்கும் இடமெங்கும் பசுமையாய் பல வகையான மரங்களும் செடிகளும் நிறைந்திருந்தன. மிக பெரிய மரங்களுக்கும், அழகிய மலர்களை கொண்ட செடிகளுக்கும் நடுவே பேரிஜம் ஏரி பரந்து விரிந்து காட்சியளித்தது. கண்ணாடி போன்று காட்சியளித்த ஏரியின் நீரிலிருந்து பனி மூட்டமானது மேலெழுந்து அந்த பகுதியே சொர்க்கமென காட்சியளித்தது.

நண்பர்கள் மூவரும் தங்களை மறந்து ஏரியின் அழகை
ரசித்தனர். ஏரியை சுற்றிலும் கடைகள் எதுவுமின்றி சிறிது கூட மாசில்லாமல் அந்த இடமே அடர்ந்த கானகத்தின் நடுவே இருப்பதை போன்றதொரு பிரம்மையை உண்டாக்கியது. இந்த ஏரியை பற்றியறிந்த சுற்றுலா பயணிகள் பலர் கூட்டம் கூட்டமாக ஏரியின் கரையில் புகைப்படம் எடுத்து கொண்டும் தங்கள் குழந்தைகளுடன் நீரின் அருகில் விளையாடி கொண்டுமிருந்தனர்.

மக்கள் கூடியிருந்த இடத்தை நோக்கி செல்ல சஞ்சனா முன்னேற சித்தார்த்தோ "சஞ்சு அங்க வேணாம் அங்க பாரு பெரிய மரம் ஏரி மேல விழுந்திருக்கு நாம அந்த மரத்து மேல ஏரி உட்க்காரலாம்" என்று கூப்பிட்டான். கரையிலிருந்த மரமானது ஏரியின் மீது சாய்ந்து சில கிளைகளின் உதவியால் நீரில் விழாமல் நீரின் மேல் ஐந்தடி உயரத்தில் எப்போது வேண்டுமானாலும் நீரினுள் விழுந்துவிடும் நிலையிலிருந்தது. அந்த மரத்தை பார்த்த சஞ்சனா தலையிலடித்து கொண்டு "டேய் நீ சாதாரணமாவே இருக்க மாட்டியாடா எப்ப பாரு எங்க ஆபத்து இருக்கோ அங்கேயே எங்கள கூட்டிட்டு போற" என்று வேண்டா வெறுப்பாக முகத்தை வைக்க சித்தார்த்தோ "அதெல்லாம் ஒன்னும் ஆகாது வாங்க" என்று இருவரின் கையையும் பிடித்து இழுத்து சென்றான்.

மூவரும் அந்த உடைந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சிறிது நேரம் ஏரியின் அழகை ரசித்தனர். பின் அந்த ஏரியிலுள்ள அனைத்து இடங்களுக்கும் சுற்றி திரிந்தவர்கள் நேரமாக நேரமாக சித்தார்த்தை கவனமாக கவனிக்க தொடங்கினர். சித்தார்த்தும் தன் நண்பர்கள் தன்னை கவனிப்பதை கவனித்து கொண்டிருந்தான். சித்தார்த் தன் மொபைலை எடுத்து ஏதோ செய்து கொண்டிருக்க முகிலன் அதை பார்க்கவும் உடனே தன் மொபைலை மறைத்தான். பின் தங்களை சுற்றி இருந்த கூட்டமானது குறைய ஆரம்பித்தவுடன் சஞ்சனா "சரிடா வாங்க கிளம்பலாம் நேரம் ஆகிருச்சுல" என்று கூறிவிட்டு மூவரும் காரின் அருகே வந்து கொண்டிருக்கும்போதே சஞ்சனாவின் தொலைபேசி அலற தொடங்கியது.

சஞ்சனா மொபைலில் தெரிந்த தன் தோழி கீதாவின் பெயரை பார்த்தவுடன் சஞ்சனா அழைப்பை ஏற்று பேச தொடங்கினாள். சஞ்சனா பேசுவது சரியாக கேட்கவில்லை என்று அவளது தோழி கூறியவுடன் முகிலனிடம் கண்ணசைவில் சித்தார்த்தை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு தங்கள் கார் நிற்குமிடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி சென்று பேசினாள்.

முகிலனோ சித்தார்த்தை விட்டு பார்வையை அகற்றாமலிருக்க சித்தார்த் முகிலனிடம் "மச்சி அங்க பாத்தியா அந்த பொண்ணுங்க கூட்டமா நிக்குறாங்கள்ல அதுல அந்த மஞ்ச கலர் சுடிதார் போட்ட பொண்ணு மட்டும் உன்னையே அடிச்சு பாக்குதுடா பாத்தியா" என்று கூற முகிலனும் பெண் என்றதும் விரைந்து திரும்பினான். தூரத்தில் கூட்டமாக இருந்த பெண்கள் முகிலனை பார்க்க பின்னாலிருந்த சித்தார்த் முகிலன் தலையில் மான் கொம்பு வைப்பதை போன்றும் முகிலனை அடிப்பதை போன்று விளையாட்டு காட்ட அந்த பெண்கள் அனைவரும் முகிலனை பார்த்து சிரித்தனர்.

வேகமாக சித்தார்த் புறம் திரும்பிய முகிலன் "மச்சி ஆமாடா மஞ்ச சுடிதார் போட்ட பொண்ணு மட்டுமில்லடா எல்லா பொண்ணுங்களும் என்னை பாத்து சிரிக்குறாங்கடா, ஐயோ எனக்கு வெக்க வெக்கமா வருதே. இவ்வளவு நாள் என்னோட ரேஞ்சு தெரியாம இருந்துட்டனே" என்று கூறி வெட்கப்பட்டான். சித்தார்த்தோ முகிலனை எண்ணி மனதில் சிரித்து கொண்டிருக்க சித்தார்த்தின் மொபைல் அலறியது.

தனக்கு வந்த அழைப்பை ஏற்ற சித்தார்த் "ஹலோ ஹலோ நீங்க சொல்லுறது கேக்கல ஹலோ" என்று கத்திக்கொண்டே நடக்க முகிலன் "சித்து எங்கடா போற".. சித்தார்த் "இங்க சிக்னல் கிடைக்கலடா வேணும்னா நீயும் வா அந்த பக்கம் போய் போன் பேசிட்டு வந்துரலாம்" என்று கூறினான். முகிலனோ தன்னை பார்த்து சிரிக்கும் பெண்களை பார்த்து கொண்டே "ஆஹா இங்க இருந்தா இவனுக்கு சிக்னல் கிடைக்கல அவேன் கூட போனா நமக்கு சிக்னல் கிடைக்காதே" என்று மனதில் எண்ணியவன் "சித்து எனக்கு காலு ரொம்ப வலிக்குது மச்சி நீ பக்கத்துலயே நின்னு பேசு ரொம்ப தூரம் போகாத" என்று கூறிவிட்டு திரும்பி தன் சைட் அடிக்கும் வேலையை தொடர்ந்தான்.

சித்தார்த்தோ மனதில் உண்டான மகிழ்ச்சியுடன் "சரி முகிலா பக்கத்துலயே நின்னு போன் பேசுறேன்" என்று கூறிவிட்டு நடக்க தொடங்கினான். முகிலன் தன்னை பார்த்து சிரித்த பெண்களை மீண்டும் பார்த்து சிரித்து கொண்டே கை காட்ட இப்பொழுது அந்த பெண்களில் சிலர் அவனை பார்த்தனரே தவிர யாரும் சிரிக்கவில்லை. முகிலனோ ஏன் இப்போது யாரும் சிரிக்கவில்லை என்று யோசித்து கொண்டிருக்க அவனது தலையை ஒரு கை பதம் பார்த்தது.

தன் தலையில் கொட்டு விழுந்தவுடன் முகிலனோ தன்னை கொட்டியது யாரென்று திரும்பி பார்க்க கோபத்தில் சிவந்த விழிகளுடன் சஞ்சனா பத்திரகாளியாக நின்று கொண்டிருந்தாள். தலையில் கொட்டியதால் வலி பொருக்க முடியாத முகிலன் "ராட்சசி ஏன்டி கொட்டுன வலிக்குதுடி".என்று தலையை தடவி கொண்டே கூற சஞ்சனா முறைத்தவாறு "சித்தார்த் எங்க" என்று கேட்டாள். சஞ்சனா கேட்ட கேள்வியில் முகிலன் காணாமல் போனா குழந்தை போன்று பேந்த பேந்த முழித்தான்.

சஞ்சனாவின் மொபைலிற்கு ஒரு குறுஞ்செய்தி வர அதை பார்த்தவளுக்கு முகிலனின் மீது கொலை வெறியே வந்தது. முகிலனோ "ஆத்தி என்ன முகம் முன்னாடி இருந்ததை விட கொடூரமாகுது அப்படி என்ன மெசேஜ் வந்திருக்கு" என்று மனதில் எண்ணி கொண்டே சஞ்சனா கையிலுள்ள மொபைலை வாங்கி பார்த்தான்.

சித்தார்த் எண்ணிலிருந்து வந்திருந்த அந்த குறுஞ்செய்தியில் "மை செல்ல சஞ்சுமா கோச்சுக்காதடா எனக்கு மதிகெட்டான் சோலைக்குள்ள போகணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்குடா. ஆனா அங்க என்ன ஆபத்து இருக்கும்ன்னு தெரியல. நீங்க சொன்ன மாதிரி உங்களையும் அதுக்குள்ள கோர்த்துவிட எனக்கு விருப்பமில்லை. அதனால அந்த காட்டுக்குள்ள நா மட்டும் தனியா போய்ட்டு வாரேன். நீங்க ரெண்டு பேரும் இப்ப நம்ம வண்டி எங்க நிக்குதோ அதே இடத்துல இதே நேரம் நாளைக்கு வந்து எனக்காக காத்திருங்க நா வந்துருவேன். அப்பொறம் நா முகிலனுக்குதா நன்றி சொல்லணும் முகிலன் மட்டும் அந்த பொண்ணுங்கள பாத்துகிட்டு நிக்கலைனா என்னால இங்க வந்திருக்க முடியாது. ஓகே நாளைக்கு அதே இடம் அதே நேரம் பாக்கலாம் டாட்டா". என்று அனுப்பியிருந்தான்.

சித்தார்த் அனுப்பிய குறுஞ்செய்தியை படித்த முகிலன் "டேய் சித்து பாவி பயலே உனக்கு என்னடா பாவம் பண்ணேன். எல்லாம் அனுப்புன சரி கடைசியில எனக்கு ஏன்டா நன்றின்னு வெடி குண்ட போட்ட" என்று யோசித்து கொண்டிருக்கும் போதே சஞ்சனாவின் மொபைல் மீண்டும் அலறியது. முகிலனோ மனதில் "இப்ப என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ" என்று எண்ணிக்கொண்டு சஞ்சனாவின் முகம் பார்த்தான்.

முகிலனின் கையிலிருந்து மொபைலை வாங்கிய சஞ்சனா மொபைலை பார்க்க இதற்க்கு முன்பு கூப்பிட்ட தோழி கீதா மீண்டும் அழைக்க கடுப்புடன் அழைப்பை ஏற்ற சஞ்சனா "சொல்லுடி இப்பதான வச்ச அதுக்குள்ள மறுபடியும் கூப்பிடுற என்ன ஆச்சுடி" என்று கேட்க எதிரிலிருந்தவளோ "ஒண்ணுமில்லடி சித்து உனக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுத்தான்னு கேக்கதா கூப்பிட்டேன்டி" என்று கூறியவுடன் சஞ்சனா குழம்பி போனாள்.

சஞ்சனா "புரியலடி சித்து எனக்கு ஏன் சர்ப்ரைஸ் தரணும்" என்று கேட்க கீதாவோ "இல்லடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சித்துதா எனக்கு மெசேஜ் பண்ணா சஞ்சனாக்கு கால் பண்ணி பேசு அப்படியே நீ பேசுறது சரியா கேக்கலை தள்ளி வந்து பேசுன்னு சொல்லு சஞ்சனாவும் எங்களை விட்டு தள்ளி போவா நானும் முகிலனும் அதுக்குள்ள சஞ்சனாக்கு ஒரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணி வச்சிருவோம் சஞ்சனா அதை பார்த்தா ரொம்ப சந்தோசபடுவா அப்படின்னு என் கிட்ட சொன்னான். நானும் என்ன சர்ப்ரைஸ் அதுன்னு கேட்டேன். அதுக்கு சஞ்சனா கிட்ட கேட்டுக்கோன்னு சொல்லிட்டான். பாத்தியா உன்னை எப்படி நடிச்சு ஏமாத்துனேன்னு என்னோட நடிப்ப உன்னாலேயே கண்டுபிடிக்க முடியலைல " என்று கீதா பெருமிதமாக கூற சஞ்சனா பல்லைக்கடித்துக் கொண்டே "ஆமா ஆமா கண்டுபிடிக்கவே முடியல இதுக்காக மதுரை வந்ததும் உனக்கு கண்டிப்பா பரிசு தாரேன்".. என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

சஞ்சனா கோபத்துடன் "பிராடு எல்லாம் பிளான் பண்ணி பண்ணிருக்கா இவனை பத்தி தெரிஞ்சும் சாதாரணமா விட்டது என்னோட தப்பு" என்று தனக்குள் வருந்தியவள். முகிலனை பார்த்து "என்ன அவனை தேடி போகலாமா இல்லை அந்த பொண்ணுகள இன்னும் நின்னு பாக்கணுமா" என்று கோபமாக கேட்க முகிலனோ எதுவும் பேசாமல் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை இயக்கினான்.

பாதையெங்கும் சித்தார்த் தென்படுகிறானா என்று தேடிகொண்டே சென்றவர்கள். ஐந்து நிமிடத்தில் மதிகெட்டான் சோலையின் முன் வந்து நின்றனர். காரை விட்டு கீழே இறங்கியவர்கள் சுற்றி பார்க்க காவலர்கள் யாருமின்றி வெறும் கேமராக்கள் மட்டும் ஆங்காங்கே பொருத்தபட்டிருந்தது.

இருவரும் வெளிப்புறத்திலிருந்து அந்த காட்டை ஆராய முப்பத்தடிக்கும் அதிகமான உயரத்தில் பல வகையான மரங்கள் காடெங்கும் செழித்து வளர்ந்திருந்தன. மரங்களின் கிளைகள் மேல்புறமெங்கும் அடர்த்தியாக வளர்ந்திருக்க பகலிலும் அந்த கானகம் இரவை போலவே காட்சியளித்தது. அந்த காட்டின் அமைப்பே மனதிற்குள் பயத்தை உண்டாகக்கிட அதிலும் அரசாங்கம் வைத்திருந்த எச்சரிக்கை பலகையில் தடை செய்யபட்ட பகுதி யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை. இதுவரை இதற்குள் சென்ற பனிரெண்டு பேர் இறந்துள்ளனர். என்று எழுதப்பட்டிருந்த வாசகமே மனதிற்குள் பயப்பந்துகளை உருள செய்தது.

எல்லாவற்றையும் பார்த்த சஞ்சனா முகிலனிடம் "முகி உன்னோட பேக் எடுத்துக்கோ வேற என்ன இருக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கோ நாம உள்ள போகலாம்". சஞ்சனா கூறியதை கேட்டு திரும்பி ஒருமுறை காட்டை பார்த்த முகிலன் "சஞ்சு புரிஞ்சுதா பேசுறியா இந்த காட்டை பாரு இப்பவே இவ்வளவு பயங்கரமா இருக்கு. இதுல இருட்டிருச்சுனா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சியா, அதுமட்டுமில்லாம அரசாங்கமே உள்ள போக கூடாதுன்னு போர்டு வச்சிருக்காங்க பாரு. நம்ம இப்ப நேரா வனத்துறைகிட்ட போய் நடந்ததை சொல்லுவோம். அவுங்க நமக்கு உதவி பண்ணுவாங்க" என்று அந்த காட்டை பார்த்து கொண்டு நடுக்கத்துடனே கூறினான்.

சஞ்சனா "முகி நீ சொல்லுறதெல்லாம் சரிதா ஆனா அனுமதியில்லாம சித்து காட்டுக்குள்ள போனது வனத்துறைக்கு தெரிஞ்சா கண்டிப்பா சித்து மேல நடவடிக்கை எடுப்பாங்க அதுகூட பரவாயில்ல. ஆனா கண்டிப்பா இந்த டைம்க்கு மேல சிந்துவ தேடி உள்ள போக மாட்டாங்க. நம்மையும் உள்ள போக அனுமதிக்க மாட்டாங்க. நீயே பாரு இந்த இருட்டுக்குள்ள சித்து எப்படி வெறும் மொபைல் லைட் வெளிச்சத்தை வச்சு சமாளிப்பான். நம்ம கிட்ட ரெண்டு டார்ச் லைட் இருக்குல நாம உள்ள போக யோசிச்சு சித்துக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பன்றது. சித்து தனியா இருக்கான் ஆபத்து வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. நம்ம ரெண்டு பேரு இருக்கோம் அதனால உள்ள என்ன பிரச்னை வந்தாலும் சமாளிச்சுக்கலாம்".என்று பேசியே முகிலனை காட்டிற்குள் செல்ல சம்மதிக்க வைத்தாள்.

தங்களுடைய பேக் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்ட இருவரும் ஆதவன் தன் அன்னை மடி உறங்க போகும் அந்திமாலை நேரம் ஒருவர் கையை மற்றவர் கோர்த்து கொண்டு மனதில் பயத்துடன் இருள் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த மதிகெட்டான் சோலைக்குள் காலடி எடுத்து வைத்தனர்.


போன பதிவிற்கு கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி 🙏...
வழக்கம் போல் இந்த பதிவிற்கான உங்களின் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கதை திரியில் பதிவிடுங்கள் 🙏🙏🙏


 
Last edited:

Arjun

Moderator
Staff member
காதலின் மாய விசை 03...

ஆதவன் தன் பனிமுடித்து ஓய்வெடுக்க சென்ற அந்தி மாலை நேரம் வெண்ணிலவோ முழு வட்ட வடிவில் வான்வெளியை ஆட்சி செய்ய தொடங்கியது. முகிலனும் சஞ்சனாவும் காரிருள் சூழ்ந்த மதிகெட்டான் சோலைக்குள் கையிலிருந்த டார்ச் லைட்டின் உதவியால் கவனமாக அடியெடுத்து வைத்து முன்னேறி சென்றனர். ஆனால் இவர்கள் இருவரின் இந்த நிலைக்கு காரணகர்த்தாவாகிய சித்தார்த்தோ துளியும் அச்சமின்றி தனது மொபைல் வெளிச்சத்தின் உதவியால் இருளிலும் மிளிரக்கூடிய மின்மினி பூச்சிகளை ரசித்தவாறு முன்னேறி சென்று கொண்டிருந்தான்.

முகிலன், சஞ்சனா இருவரும் கரம் கோர்த்து சென்று கொண்டிருக்க அவர்கள் முன் பூனையின் அளவில் ஏதோ ஒன்று வந்து விழுந்தது. பதறிய முகிலனோ "ஐய்யயோ சிறுத்தை" என்று அலறியவாறு சஞ்சனாவை இழுத்து கொண்டு ஓடியவன் தடுமாறி கீழே விழ சஞ்சனாவும் அவன் மீது விழுந்தாள். கீழே விழுந்த சிறிது நொடியில் சுதாரித்த சஞ்சனா தனது டரர்ச்சின் உதவியால் அந்த மிருகம் விழுந்த இடத்தை சுற்றி டார்ச்சை அடித்து பார்க்க காட்டு அணில் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

தனது கையிலிருந்த டார்ச்சால் முகிலனின் மண்டையில் அடித்த சஞ்சனா "நாயே நாயே நீ பயந்து என்னையும் ஏன்டா பயமுறுத்துற, இங்க பாருடா பயத்துல கையெல்லாம் நகத்தை வச்சு பிராண்டி வச்சிருக்கடா" என்று கூறிக்கொண்டே முகிலனின் கரம் பற்றி தூக்க முயல முகிலனின் கரமோ பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது. முகிலனின் நடுக்கத்தை பார்த்தவளுக்கு கோபம் மறைந்து முகிலனின் கரத்தினை பற்றியவள். "முகி ஒண்ணுமில்லடா அது வெறும் காட்டு அணில்தா கொடைக்கானல் வரும் போது எத்தனை முறை அதை பாத்திருக்கோம் பயப்படாதடா" என்று முகிலனை நிற்க்க வைத்து பேக்கிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகிலனை தண்ணீரை குடிக்க வைத்தாள்.

கீழே விழுந்ததில் கை முட்டியெங்கும் சிராய்ப்புடன் கைகால்கள் நடுங்கும் நிலையில் முகிலனை கண்டவளுக்கு அவசரப்பட்டு காட்டிற்குள் வரவேண்டும் என்று தவறான முடிவெடுத்து விட்டோமோ என்று குற்றவுணர்ச்சி தோன்றியது. முகிலன் தண்ணீரை குடித்தவுடன் பயம் விலகி நடுக்கம் குறைந்தது. சஞ்சனா "முகி சாரிடா நீ வேணாம்ன்னு சொல்லியும் நா உன்னை இந்த காட்டுக்குள்ள கூட்டிட்டு வந்திருக்க கூடாது" என்று விழியில் கோர்த்து நிற்க்கும் நீரோடு பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினாள். முகிலனோ "அட என்னோட செல்ல ராட்சசி நீ எதுக்கு இப்ப வருதப்படுற எல்லாத்துக்கும் காரணம் அந்த வளந்து கெட்டவன்தா அவே மட்டும் கையில சிக்குனா செத்தா, நா இப்ப ரெடி வா போகலாம்" என்று முகி கூறியவுடன் மீண்டும் இருவரும் கரம் பற்றி நடக்க தொடங்கினர்.

சித்தார்த்தோ மாலை ஐந்து மணியளவில் காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தவன் மணி இரவு பதினொன்றுக்கு மேலாகியும் வித்தியாசமாக எதுவும் கண்ணில் படாததால் வெறுப்புடன் நடந்து கொண்டிருந்தான். தீடிரென தூரத்தில் கோடு போன்ற வெண்ணிறத்திலான ஒளியானது மரங்களை எல்லாம் ஊடுருவி தன்னை நோக்கி வர சித்தார்த் மிரண்டு போனான். மரங்களை ஊடுருவி வந்த ஒளியானது சித்தார்த்தின் உடலையும் ஊடுருவ அவனது உடலெங்கும் மின்சாரம் பாய்ந்ததை போன்ற ஒரு உணர்வை உண்டாக்கியது.

அந்த ஒளியானது தன்னை கடந்தவுடன் சித்தார்த் மீண்டும் அதை திரும்பி பார்க்க அந்த வெண்ணிற ஒளியானது ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் மறைந்து போனது. பின் மீண்டும் ஒளி வந்த திசையை திரும்பி பார்க்க அவனது விழிகளையே அவனால் நம்ப முடியவில்லை. இருளின் பிடியில் சிக்கியிருந்த சோலையானது மாலை நேரம் போன்ற மங்கலான வெளிச்சத்துடன் காட்சியளித்தது. ஆங்காங்கே சுற்றி திரிந்த மின்மினி பூச்சிகள் யாவும் ஒரே குழுவாய் அந்த ஒளி வந்த திசையை நோக்கி பறந்து சென்றன.

பதினைந்து அடி உயரத்திலிருந்த ஒரு சில சிறிய மரங்கள் பயங்கரமான சத்தத்துடன் மெதுவாக சுழல மரத்தின் வேர்கள் யாவும் மண்ணைவிட்டு வெளியே வந்தன. மரத்தின் கிளைகள் கைகளை போன்றும் வேர்கள் கால்களை போன்றும் செயல்பட மரங்கள் அனைத்தும் ஒளி வந்த திசையை நோக்கி மெதுவாக மனிதனை போன்று நடக்க ஆரம்பித்தன.

தன் கண்முன்னே நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்டவனுக்கு பயத்தை விட அவை எங்கு செல்கின்றன என்று அறிய வேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கியது. எனவே சித்தார்த்தும் சத்தமிடாமல் மெதுவாக அந்த மரங்களை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். சஞ்சனாவையும் முகிலனையும் அந்த வெண்ணிற ஒளி ஊடுருவி செல்ல அவர்களும் உடலில் மின்சாரம் தாக்கியதை போன்று உணர்ந்தனர்.

முகிலன் "சஞ்சு அந்த வெளிச்சம் பட்டதும் எனக்கு திடீருனு உடம்புக்குள்ள கரண்ட் அடிச்ச மாதிரி இருந்துச்சுடி".. சஞ்சனா "எனக்கும் அப்படித்தான்டா இருந்துச்சு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சுடா" என்று விட்டு தங்கள் உடலில் லைட் அடித்து பார்க்க முகிலனின் கைகளிலிருந்த சிராய்ப்புகள் வேகமாக குணமாகின. சஞ்சனாவின் கைகளிலிருந்து நக கீறல்களும் விரைந்து குணமாகிட தங்களின் காயங்கள் நொடியில் குணமாவதை இருவரும் மிரட்சியுடன் பார்த்தனர்.

முகிலன் "சஞ்சு அந்த வெளிச்சம்பட்டதும் நம்ம உடம்புல இருந்த காயமெல்லாம் மறைஞ்சு போச்சு பாரு அடிபட்ட இடத்துல சுத்தமா வலியே இல்ல".. என்று முகிலன் ஆச்சிரியமாக பார்த்து கொண்டிருந்தான். சஞ்சனா "முகி அங்க பாரு வெளிச்சம் வந்த இடமே சாயந்தரம் மாதிரி ஆகிருச்சு. சரி வா அந்த வெளிச்சம் வந்த திசையிலதா கண்டிப்பா சித்து போயிருப்பா நாம வேகமா போனா அவனை பிடிச்சிரலாம்" என்று முகிலனின் கையை பிடித்து சஞ்சனா இழுத்து சென்றாள்.

சிறிது தூரம் வேகமாக சென்றவர்கள் திடீரென தங்களது வலது புறத்தில் பயங்கரமாக சத்தம் கேட்க இருவரும் அசையாமல் நின்றனர். சத்தம் கேட்ட திசையில் இருவரும் திரும்பி பார்க்க இருபதடி தூரத்தில் பதினைந்து அடி உயரம் கொண்ட ஒரு மரமானது மண்ணை விட்டு தன் வேரை வெளிய எடுத்து நடந்து செல்ல அதை கண்ட இருவரும் பயத்தில் உறைந்து போய் நின்றனர்.

முகிலனும், சஞ்சனாவும் உடலெங்கும் வியர்வையுடன் அந்த மரத்தை பார்த்து வெட வெடத்துப் போய் நின்றிருந்தனர். அந்த மரமானது ஒளி வந்த திசையை நோக்கி நகரவும் முகிலனோ "சஞ்சு நா இப்ப கனவு காணுறன இல்லை நமக்கு முன்னாடி உண்மையாவே ஒரு மரம் நடந்து போகுதா" என்று பயந்து உள்வாங்கிய குரலுடன் கேட்க சஞ்சனாவோ "சத்தியமா என்னோட கண்ணுக்கும் அப்படிதாண்டா தெரியுது" என்று கூற அந்த மரம் கண்ணை விட்டு மறையும் வரை அசையாமல் நின்றனர்.

முகிலன் "சஞ்சு இதுக்கு மேல நீ என்னை அடிச்சு கூப்பிட்டாலும் நா வர மாட்டேன்டி" தன் கையிலிருந்த பேகை கீழே போட்டு அதே இடத்தில் அமர்ந்தான். சஞ்சனாவோ "முகி சொன்னா கேளு நம்ம மேல பட்ட வெளிச்சத்தை பாத்த எனக்கு தப்பா தெரியல. அந்த வெளிச்சம் நம்ம மேல பட்டதும் நமக்கு நல்லதுதா நடந்துச்சு. அதனால நமக்கு அங்க எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாம சித்து இந்நேரம் கண்டிப்பா அந்த வெளிச்சம் வந்த திசை பக்கமாதா போயிருப்பா. நம்ம வேகமா போனா அவனை எப்படியாவது கண்டுபிடிச்சி கூட்டிட்டு போயிரலாம் வாடா" என்று பொறுமையாக கூப்பிட்டாள்.

முகிலன் "சஞ்சனா உனக்கு அறிவிருக்கா இல்லையா நீயே பாத்த எவ்வளவு பெரிய மரம் தரைய விட்டு எழுந்து நடக்குன்னு. அந்த மரம் மட்டும் அதோட கிளைய வச்சு ஓங்கி ஒரு அடி அடிச்சா நம்ம கண்டிப்பா சட்னிதா சொன்னா கேளு நானும் வரல நீயும் போகாத இப்படியே திரும்பி போயிரலாம் நாளைக்கு போலீஸ்கிட்ட சொல்லி நிறைய பேர கூட கூட்டிட்டு வரலாம்" என்று முகிலன் கூற முகிலனை பார்த்து கோபமாக முறைத்த சஞ்சனா "சித்து என்னோட ப்ரண்ட் அவனுக்கு பிரச்சனை வரும் போது என்னால என்னோட உயிர்தா முக்கியம்ன்னு ஓடி ஒழிய முடியாது. உனக்கு விருப்பம் இருந்தா என்னோட வா இல்லையா இப்ப வெளிச்சமாதா இருக்கு நீ வெளிய போய்கிட்டே இரு" என்று கூறி விட்டு வெளிச்சம் வந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சிறிது யோசித்த முகிலனும் வேறு வழியின்றி சஞ்சனாவை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

சித்தார்த் நடந்து செல்லும் மரங்களின் பின்னே தானும் சத்தமிடாமல் கவனமாக நடந்து சென்றான். சித்தார்த் முன்னேறி செல்ல செல்ல அந்த இடமே பிரகாசமாகிக் கொண்டே வந்தது. ஒரு எல்லைக்கு மேல் மரங்கள் அனைத்தும் முன்னேறி செல்லாமல் ஒரே இடத்தில் நிற்க்க சித்தார்த் அந்த இடத்தை ஆராய்ந்தான். ஐந்தடி உயரத்தில் பத்தடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டு சமதளமாக இருந்த பெரிய பாறை ஒன்று இருந்தது. அந்த பாறையின் மீது தண்டுகள் இலைகள் என அனைத்தும் வெண்மை நிறத்தையுடைய அழகான ஒரு கொடி படர்ந்திருந்தது. அந்த கொடியில் ஆங்காங்கே இருபதுக்கும் மேற்பட்ட தாமரை மொட்டுகள் போன்ற மலர்கள் சிறிதும் பெரிதுமாய் நட்சத்திரம் போன்று பிரகாசமாய் வளர்ந்திருக்க பாறையின் நடுமையத்தில் முழுதாக மலர்ந்து விரிந்து வானத்து நிலவு பூமிக்கு இறங்கி வந்துவிட்டதோ என்று என்னுமளவு ஒரு மலர் மட்டும் பிரகாசமாக காட்சியளித்தது.

கொடி படர்ந்திருந்த பாறையை சுற்றி மரங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கிளையை கோர்த்து வட்டமாக நிற்க மின்மினி பூச்சிகள் யாவும் மரங்களை சுற்றி வட்டமடித்து கொண்டிருந்தன. திடீரென பாறையின் அடியில் சிறிய அளவிலான துவாரம் ஒன்று உருவாகி ஒரு ஜான் அளவுடைய குள்ள மனிதர்கள் துவாரத்தின் வழியாக வெளியே வந்தனர். சித்தார்த் இதையனைத்தையும் சற்று தூரத்தில் ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று பார்த்து கொண்டிருந்தவன் தோளை தீடிரென ஒரு கரம் பற்றியது.

சித்தார்த் தன் தோள் மீது ஒரு கரம் பட்டவுடன் உடலெங்கும் நடுங்க திரும்பி பார்க்க முகிலன், சஞ்சனா இருவரும் சித்தார்த்தை முறைத்தவாறு நின்றிருந்தனர். முகிலன் சித்தார்த்தை திட்ட வாயை திறக்க வேகமாக அவனது வாயை மூடிய சித்தார்த் பாறையை நோக்கி கை காட்டினான். வேறு வழியில்லாமல் இருவரும் அமைதியாக மூவரும் அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தனர். பாறைக்குள்ளிருந்து வந்த நூற்றுக்கணக்கான குள்ள மனிதர்கள் கொடியை பிடித்து பாறையின் மேல் ஏறி மலர்ந்திருந்த மலரை சுற்றி நின்றவர்கள் தங்கள் கரங்களை கோர்த்து கொண்டு அமைதியாக நின்றனர்.

ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று புரியாமல் மூவரும் அவர்களையே பார்க்க மணி பனிரெண்டை நெருங்கியவுடன் நடுவிலிருந்த மலரானது இன்னும் பிரமாண்டமாக பிரகாசித்தது. மலரின் பிரகாசமானது அதிகமானவுடன் சுற்றி இருந்த மரங்கள் அனைத்தும் மிளிர குள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நடனமாடுமாறு முன்னாலும் பின்னாலும் நகர்ந்து ம்ம்ம்..ம்ம்..ம்ம்.. என்று பயங்கரமாக ஒலியெழுப்பினர். குள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒலி எழுப்பி கொண்டிருக்க திடீரென சித்தார்த் அவனது சகாக்கள் ஒளிந்திருந்த இடத்தின் எதிர்புறம் மரத்தின் மூலம் கயிறை கட்டி அந்தரத்தில் பறந்து வந்த ஒரு உருவம் லாவகமாக மலர்ந்திருந்த மலரை பறித்து இவர்கள் மூவரும் நின்றிருந்த இடத்தின் அருகே வந்து நின்றது.

ஒரு நொடியில் நடந்த இந்த நிகழ்வில் அனைவரும் திகைத்து நின்றிருக்க கீழே வந்து நின்ற உருவானது ஓட தொடங்கியது. சாதாரண மனிதர் போல இருந்தாலும் வெண்ணிறத்தில் வித்தியாசமாக உடையணிந்து முகத்தை முழுவதுமாக மூடி தங்களுக்கு அருகே வந்து நின்று மீண்டும் ஓடும் உருவத்தை கண்டு மூவரும் ஒரு நொடி திகைத்து போகினர். மரங்கள் அனைத்தும் வேகமாக முன்னேற குள்ள மனிதர்கள் அனைவரும் ஓ..ஓ..ஓ..ஓ..ஓ... என அலற தொடங்கினர். குள்ள மனிதர்கள் அலற தொடங்கியவுடன் பாறைக்குள்ளிருந்து வவ்வால் போன்ற வித்யாசமான பறவைகள் வெளியே வர குள்ள மனிதர்கள் அனைவரும் பாறையிலிருந்து தாவி ஆளுக்கொரு பறவையின் மீது அமர்ந்து அந்த உருவத்தை துரத்த ஆரம்பித்தனர்.

மரங்களும் குள்ள மனிதர்களும் பூவை தூக்கி சென்ற உருவத்தை துரத்த இவர்கள் மூவரும் மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். சஞ்சனா "டேய் எப்படியும் அந்த உருவத்தை பிடிக்க போன அந்த மரங்களும் குள்ளனுங்களும் திரும்பி இந்த பக்கம்தா வருவாங்க போகும் போது நம்மள அவுங்களுக்கு தெரியாது. ஆனா இந்த பக்கம் அவுங்க திருப்பி வந்தா நாம கண்டிப்பா மாட்டிக்குவோம். அதனால அந்த பாறைக்கு எதிர் திசையிலே இருக்க மரத்துக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுக்குவோம்.".. என்று கூறிவிட்டு வேகமாக அந்த உருவம் பறந்து வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

முகிலனும் "எல்லாம் உன்னாலதான்டா இங்க இருந்து வெளிய போனதும் உனக்கு இருக்கு" என்று கூறிவிட்டு சஞ்சனாவை பின்தொடர சித்தார்த்தும் அவன் பின்னால் சென்றான். வெண்ணிற உடையணிந்த அந்த உருவமானது மீண்டும் இவர்கள் இருக்கும் திசை நோக்கியே ஓடி வர இதை கண்ட முகிலனோ "சஞ்சு அந்த உருவம் மறுபடியும் நம்ம பின்னாடிதா வருது. ஐயோ இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலையே" என்று புலம்பி கொண்டிருக்க சஞ்சனா "வந்து தொலைங்கடா தடி மாடுங்களா" என்று கத்திவிட்டு ஓட தொடங்கினாள்.

சஞ்சனாவை பின் தொடர்ந்து இருவரும் ஓட தொடங்கினர். தன் பின்னால் வரும் உருவத்தை சித்தார்த் திரும்பி பார்க்க மரத்தின் கிளைபட்டு அந்த உருவத்தின் முகத்திலிருந்த துணியானது அவிழ்ந்தது.துணி விலக்கியவுடன் முடிந்திருந்த கூந்தலானது அவிழ்ந்து மங்கையவளின் கூந்தல் காற்றிலாடியது. மங்கையவளோ ஓடி வந்தவாறு மையிட்ட விழிகளோடு நேர்கொண்டு தன்னை பார்க்க வெண்ணிற உடையில் மலரின் ஒளியும் சேர்ந்து அவளை பிரகாசமாக்கிட தேவதை போன்று ஓடி வந்தவளின் மீது பின்னால் துரத்தி வந்த மரம் தன் கிளையை தூக்கி எறிந்தது.

கிளையானது சரியாக ஓடிவந்த மங்கையவள் காலில் பட்டு கீழே விழுந்தாள். கீழே விழுந்தவளை கண்ட சித்தார்த் உடனே மீண்டும் பின்னால் சென்று அவளையும் தூக்கி கொண்டு ஓட ஆரம்பித்தான். பெண்ணவள் தன்னை தூக்கி செல்லும் சித்தார்த்தை விசித்திரமாக பார்த்தாள். பின்னால் பறவையில் வந்த குள்ளர்கள் சுற்றி வந்து சஞ்சனாவின் முன்னால் வந்து நின்று நால்வரையும் மூன்று புறமும் சுத்தி வளைத்தனர். சஞ்சனா பின்னால் ஓட முயற்சிக்க நடந்து வந்த மரங்கள் பின்னால் சுற்றி வளைத்தனர். சித்தார்த் கையில் தூக்கிவைத்திருந்த பெண்ணை கண்ட குள்ளர்களில் ஒருவன் "முக்தா" என அதிர்ச்சியுடன் அழைத்தான். மற்ற குள்ளர்கள் நால்வரும் ஒன்றாக ஒரே இடத்தில் சுற்றி வளைக்கப்பட்டவுடன் குழல் போன்ற ஒன்றை எடுத்து மயக்க ஊசிகளை நால்வரின் மீதும் ஊதினர்.

குண்டூசியில் பாதி அளவில் கூட இல்லாத மயக்க ஊசிகள் அதிக அளவில் தாக்கவும் சித்தார்த்தும் அவனது சகாக்கள் இருவரும் மயக்க நிலைக்கு செல்ல ஆரம்பித்தனர். சித்தார்த்தும் கையில் வைத்திருந்த பெண்ணுடன் மயக்கத்தில் தடுமாற ஆரம்பித்தான். சித்தார்த் தூக்கி வைத்திருந்த பெண்ணவளின் கையிலிருந்த மலரானது குள்ளர்களின் மயக்க ஊசி அவள் உடலில் மயக்க மருந்தை செயல்பட விடாமல் காத்தது. உடனே மங்கையவள் தனது இடுப்பில் சொருகி இருந்த விசில் போன்ற ஒன்றை எடுத்து ஊத தூரத்தில் கர்ஜனையும் பிளிறலும் கலந்த சத்தத்துடன் ராட்சச மிருகம் ஒன்று ஓடி வந்தது. மின்னல் வேகத்தில் வந்த மிருகம் சுற்றி இருந்த மரங்களையும் குள்ளர்களையும் மோதி தூக்கி வீசிவிட்டு நால்வரையும் தூக்கி கொண்டு ஓட தொடங்கியது. மூவரும் அரை மயக்கத்திலிருக்க ராட்சச மிருகமானது மிக பெரிய பாறையின் மீது வாயில் போன்று செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டை நோக்கி செல்ல சித்தார்த்தும் அவனது நண்பர்களும் அரை மயக்கத்திலும் அலறினர். ராட்சச மிருகமானது பாறையில் செதுக்கப்பட்டிருந்த வாயில் போன்ற கல்வெட்டின் அருகே சென்றவுடன் அந்த கல்வெட்டின் வாயிலானது திறக்க ராட்சச மிருகமானது நால்வரையும் தூக்கிகொண்டு அந்த வாயிலுக்குள் குதித்தது.

போன பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...🙏🙏🙏 இந்த பதிவிற்கு உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கீழே 👇 உள்ள கருத்து திரியில் பதிவிடவும்.. 🙏🙏🙏


 
Last edited:
Status
Not open for further replies.
Top