கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை 13..

Arjun

Moderator
Staff member
அத்தியாயம் 13..


பௌர்ணமி முடிந்து எட்டு நாட்களான நிலையில் பாதி தேய்ந்த வெண்ணிலாவின் வெளிச்சத்தின் உதவியோடு முக்தா பருவியில் மேற்கு திசை நோக்கி பறக்க ஆரம்பித்தவள், சிறிது தூரம் சென்றவுடன் ஜிங்கு கூறிய இடத்தை கண்டாள்.
ஜிங்கு கூறியதை போன்று பரந்து விரிந்திருந்த சமவெளியை சுற்றி மரங்கள் அனைத்தும் வேலியை போன்ற அமைப்பை உருவாக்கி அரணாக நிற்க, சமவெளியின் நடுவே மாய திரவ குளம் இருந்தது. அக்குளமானது மையத்திலிருந்து ஐந்தடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்டு வட்ட வடிவில் அமைந்திருந்தது. இருள் படர்ந்திருந்த சமவெளியின் நடுவே குளத்தில் தேங்கி இருக்கும் திரவமானது வெள்ளி நிறத்தில் மின்னி பிரகாசிக்க அந்த வட்ட வடிவ குளமானது பார்ப்பதற்கு வானத்து நிலவு தரையில் விழுந்ததை போன்று காட்சியளித்து.
அந்த குளத்தை கண்ட முகதாவின் இதழ்கள் மகிழ்ச்சியில் புன்னகைக்க குளத்திலுள்ள திரவத்தில் வெளிச்சத்தில் அதை சுற்றி திரியும் நூற்றுக்கு மேற்பட்ட பெரு வகை யாளிகளை பார்த்தவளின் இதழ்கள் மீண்டும் அவளின் புன்னகையை தொலைத்தது.

முக்தா பருவியோடு குளத்தின் மேல் வட்டமடிக்க கீழே இருந்த யாளிகள் சிறிய அளவில் கர்ஜனையுடன் பருவி செல்லும் திசையையே விரட்டி வந்து கொண்டிருக்க, முக்தா அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் தடுமாறினாள். முக்தா அனைத்து வகையான யாளிகளை பற்றியும் நன்கு அறிந்தவள். யாளிகளில் மிகவும் ஆபத்தானவை சிம்ம யாளியும் கஜ யாளியும் தான் இவை இரண்டும் நன்கு வளர்ந்திருந்தால் யானையை விட அளவில் ஐந்து மடங்கு அல்லது ஆறு மடங்கு பெரிதாக இருக்கும். தன் பலத்தால் ஒரே அடியில் நன்கு வளர்ந்த பெரிய யானையையே சாய்த்து விடும். ஆனால் மற்ற வகை யாளிகள் அளவில் சிறியவை அதனால் ஆபத்தும் குறைவு.

யாளிகளில் பெரு வகை யாளிகள் தான் அளவில் மிகவும் சிறியவை. நன்கு வளர்ந்த பெரு வகை யாளியே பெருச்சாளியின் அளவில் தான் இருக்கும். அதாவது உருவ அமைப்பானது மற்ற யாளிகளுக்கு இருப்பதை போன்று சிங்க உடல் அமைப்பின் காரணத்தால் சிங்கத்தின் ஆற்றலையும், வாலானது பாம்பை போன்று நெளிந்து கொண்டு பாம்பின் பயகாரணிகளை கொண்டிருக்கும். அதன் தலையானது சிங்கத்தை போன்ற அமைப்புடன் பிடரிமயிர் தலையை சுற்றி காற்றிலாட சிறிய அளவில் இருந்தாலும் பார்ப்போரை அச்சமடைய செய்யும் விதமாக காட்சியளிக்கும். மொத்தத்தில் பெரு வகை யாளிகள் சிங்கமானது முயலின் அளவு இருந்தாள் எப்படி இருக்குமோ அதே போன்று காட்சியளிக்கும்.

பெரு வகை யாளிகள் மற்ற யாளிகளை போன்று தனித்து வாழாமல் எப்போதும் கூட்டமாகவே வாழ கூடியவை. பெரு வகை யாளிகள் அளவில் சிறியதாக இருப்பினும் கூட்டமாகவே வேட்டையாடும் போது பெரு வகை யாளிகளின் கூட்டத்தில் எந்த ஒரு மிருகம் சிக்கினாலும் அந்த மிருகம் உயிர் பிழைப்பது கடினம்.

முக்தா எவ்வாறு குளத்தினருக்கே செல்வது என்று சிந்தித்தவாறு பெரு யாளிகளை கூர்ந்து கவனித்தாள். யாளிகள் அனைத்தும் பருவி செல்லும் திசை பக்கமே பருவியை விரட்டி கொண்டு தாவி குதித்து கொண்டே வர அவற்றின் கண்களில் தெரிந்த வெறியை கண்டவள் நிலத்தில் இறங்குவது முடியாத காரியம் என்பதை உணர்ந்தாள். உடனே ஒரு திட்டம் தீடியவள் பருவியை மரங்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று நிலவின் வெளிச்சத்தோடு கஷ்டப்பட்டு மரங்களில் சுற்றி இருக்கும் கொடிகளை எடுத்து கயிறாக திரித்தாள்.

திரித்த கயிற்றை எடுத்து தன்னிடமிருந்த குடுவையோடு சேர்த்து கட்டியவள், குளத்தின் மேல் பருவியை பறக்குமாறு செய்து கையிலிருந்த குடுவை கட்டிய கயிற்றை குளத்தை நோக்கி தூக்கி எறிந்தாள். குடுவையும் சரியாக குளத்தில் விழ வெள்ளியென மின்னும் திரவம் குடுவையை நிறைத்தது. முக்தா மந்திர திரவம் எளிதில் கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில் கயிற்றை இழுத்து குடுவையை மேலே தூக்க ஆரம்பித்தாள்.

முக்தா குடுவையை குளத்தை விட்டு மெதுவாக வெளியே எடுக்க குளத்தை சுற்றி முற்றுகையிட்ட யாளிகளில் ஒன்று மற்றொரு யாளியின் மீது மிதித்து தாவி குதித்து தன் கோரை பல்லால் கயிற்றை பலமாக கவ்வியது. யாளியின் கோரை பல் பட்டவுடன் கயிறானது அறுந்து குடுவையோடு குளத்தில் விழுந்தது. கயிறு அறுக்கப்பட்டதால் முக்தா கோபத்தோடு அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்து கொண்டே கயிற்றை அறுத்த யாளியை பார்த்தாள்.

கயிற்றை கடித்த யாளியும் கயிறு அறுந்ததால் குளத்தில் விழுந்து வேகமாக நீந்தி கரையேறியது. கரையேறிய யாளியை விட்டு மற்ற யாளிகள் விலகி நிற்க, குளத்தில் விழுந்த யாளியின் உடல் முழுவதும் வெள்ளி நிறத்தில் வெளிச்சமாக மந்திர திரவம் பிரகாசித்தது. மந்திர திரவம் உடல் முழுதும் இருக்கவும் நடுங்கி கொண்டே சென்ற யாளி சிறிது தூரத்திற்கு மேல் நகராமல் அதே இடத்தில் நிற்க மற்ற யாளிகள் அதை மெதுவாக தொட்டு விட்டு விலகி சென்று அதையே வட்டமடித்தன. அந்த யாளியின் உடலில் ஒரு இடம் விடாமல் மந்திர திரவம் பரவியிருக்க யாளியின் உடல் பிரமாண்டமாக பிரகாசிக்க, முக்தா என்ன நிகழ்கிறது என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

குளத்தில் விழுந்த யாளியை மற்ற யாளிகள் தொட்டு பார்த்தும் குளத்தில் விழுந்த யாளி அசையாமல் ஒரே இடத்தில் நிற்க சுற்றி இருந்த அணைத்து யாளிகளும் சிங்கத்தை போன்று பலமாக கர்ஜித்தன. அனைத்து யாளிகளும் பருவியை துரத்தாமல் குளத்தில் விழுந்த யாளியையே சுற்றி கொண்டு அதன் மீது முட்டிவிட்டு கீழே தள்ளிவிட்டன. ஆனால் கீழே விழுந்த யாளியிடம் எந்த ஒரு அசைவுமினிறி, கீழே விழுந்தும் தான் நின்ற அமைப்பிலே சிலையை போன்று யாளி விழுந்து கிடக்க, அதை கண்டவுடன் தான் முக்தாவிற்கு ஒரு விஷயம் புரிந்தது. குளத்திலுள்ள திரவமானது உடலில்பட்டால் அந்த திரவம் பட்ட இடமானது சிலையை போன்று மாறிவிடும் என்று அறிந்துகொண்டவள், இன்னும் கவனமாக செயல்பட ஆரம்பித்தாள்.

சிலையாக மாறிய யாளியை சுற்றி கொண்டிருந்த மற்ற யாளிகளின் கோபம் இப்போது பன்மடங்காக அதிகரிக்க, இப்போது முன்பை விட ஆக்ரோஷத்துடன் பருவி செல்லும் இடமெங்கும் பருவியை தரை இறங்க விடாமல் விரட்டின. முக்தாவிற்கு இவற்றின் ஆக்ரோஷத்தை கண்டு சிறிது அச்சம் அதிகரித்தாலும் வேறு வழியில்லை என்பதால் அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தாள்.

பாறையின் துளையிலிருந்து தங்களின் வவ்வளொடு வெளியே வந்த குள்ள இன வீரர்கள் காவலுக்கு இருந்த வீரர்கள் அனைவரும் மயங்கி கிடப்பதை கண்டு அவர்கள் அருகில் சென்றனர். குள்ள இன வீரர்களின் தலைமை பொறுப்பில் இருந்த திவான் மற்ற வீரர்களை பார்த்து "வீரர்களே அனைவரது முகத்திலும் நீரை தெளித்து எழுப்புங்கள்.." என்று கூற வீரர்கள் மயங்கி கிடந்த அனைவரையும் தண்ணீர் தெளித்து எழுப்பினர். மயக்கம் தெளிந்து எழுந்த வீரர்கள் திடீரென தங்களை ஏதோ வெள்ளை புகை சூழ்ந்ததாகவும் அதன் பின் எதுவும் நினைவில்லை என்று கூறினர்.

ஜிங்குவும் தன் மீது நீரை தெளித்து எழுப்பவும் வீரர்களிடம் முன் மயக்கம் தெளிந்து எழுவது போன்று நடித்து கொண்டே எழுந்து அமர்ந்தான். வீரர்கள் ஜிங்குவிடமும் என்ன நடந்தது என்று கேட்க ஜிங்குவும் வீரர்களிடம் "நம் வீரர்களில் யாரோ ஒருவன் தான் வெண்ணிற புகையை உருவாக்கி எங்களை மயங்க வைத்து விட்டு கைதிகள் இருந்த திசை பக்கம் ஓடினான்.." என்று கூறினான்.

தலைமை வீரன் திவான் தன் வீரர்களிடம் "பாதி பேர் ஜிங்கு கூறிய திசையில் சென்று யாராவது இருக்கிறார்களா என்று தேடி விட்டு கைதிகளையும் பார்த்துவிட்டு வாருங்கள்.." என்று கூற வீரர்களில் பாதி பேர் வவ்வாலில் சென்று கைதிகளை பார்க்க, கைதிகள் அனைவரும் தப்பித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிவியை சுற்றி இருந்த வேர்களை பார்த்த ஒரு வீரன் வேர்களின் பலவீனமான பகுதி வாளால் வெட்டப்பட்டிருக்கும் தடத்தை கண்டான். அதை உடனே தன் சக வீரர்களுக்கு கூற இதை கண்ட அனைவரும் தங்கள் வீரர்களில் யாரோ ஒருவன் தான் மற்ற வீரர்களை மயங்க வைத்து கைதிகளை தப்பிக்க வைத்திருக்கிறான் என்று அறிந்து கொண்டனர்.

தங்கள் இனத்தில் யாரோ ஒருவன் தான் தங்களின் இனத்திற்கு துரோகம் செய்துள்ளன் என்று புரிய, அனைவரும் வீரர்கள் மயங்கி கிடந்த இடத்துக்கே வந்தனர். திவான் ஜிங்கு உட்பட அனைவரிடமும் தீவிரமாக விசாரித்து கொண்டிருந்தான். அப்போது அவனின் அருகே வந்த வீரர்கள் வேர்கள் வாளால் வெட்ட பட்டிருப்பதையும் கைதிகள் தப்பித்து இருப்பதையும் கூறினார்கள். இதை கேட்ட திவான் கோபத்தோடு ஜிங்கு உட்பட அனைவரையும் முறைத்துக்கொண்டு "வீரர்களே உண்மையை கூறுங்கள் உங்களில் யார் இந்த துரோகத்தை செய்தது.." என்று கேட்க, அனைவரும் பயத்துடன் எதுவும் தெரியாமல் முழித்தனர்.

ஜிங்கு "திவான் நீங்கள் எங்களை சந்தேகப்படுவதில் நியாயமில்லை, நாங்கள் அனைவரும் இங்கு மயங்கிய கிடக்க, நாங்கள் எப்படி அதை செய்திருக்க முடியும்..?"
திவனோ கோபத்துடன் "அதை தான் நானும் கேட்கிறேன், நீங்கள் மட்டும் தான் இங்கு இருந்தது மயங்கியது எல்லாம் அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கிருக்கும் ஒருவர் தான் இதை செய்திருக்க வேண்டும். மரியாதையாக உண்மையை கூறுங்கள் இல்லையென்றால் யார் என்றும் பார்க்காமல் அனைவரின் உயிரும் இங்கேயே பிரிந்துவிடும்.." என்று மிரட்டினான்.

ஜிங்குவிற்கு மனதிற்குள் பயம் இருந்தாலும் அதை மறைத்து கொண்டு "ஏன் நாங்கள் மட்டும் தான் அவர்களை தப்ப வைத்திருக்க வேண்டுமா..? உங்களோடு பரிகார பூஜை நடக்குமிடத்திலிருந்து வந்து யாரவது அவர்களுக்கு உதவியிருக்கலாம் அல்லவா..?"
ஜிங்கு கூறியதை கேட்ட பரிகார பூஜை நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து இவர்களுடன் வந்த வீரர்களில் ஒருவன் "திவான் ஜிங்கு கூறுவதிலும் உண்மையுள்ளது, சிறிது நேரத்திற்கு முன்பு நம் வீரர்களில் ஒருவனான சதன் பூஜை நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென பாறையில் உள்ள வாயிலுக்குள் சென்றான். நான் எங்கு செல்கிறாய் என்று கேட்டதற்கு அவன் என்னிடம் பதில் கூறாமல் சிரித்து விட்டு உள்ள நுழைந்து விட்டான்.."

சற்று நேரத்திற்கு முன்பு பருவியால் கொல்லப்பட்ட வீரன் தான் சதன். அவனை இங்கு பலருக்கும் பிடிக்காது என்பதால் வீரர்கள் பலரும் ஆம் நாங்களும் அவனை பரிகார பூஜை நடந்த இடத்தில் பார்க்கவில்லை. இதை அவன் தான் செய்திருக்க வேண்டும் என்று ஒரு சேர கூறிட, ஆனால் திவானின் விழிகளோ ஜிங்குவையே சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

திவானின் சந்தேக பார்வையை உணர்ந்த ஜிங்கு தன்னை நல்லவன் என்று காட்டிக்கொள்ள தலைமை வீரனை நோக்கி "தலைமை வீரர் திவான் அவர்களே நமக்கு துரோகம் செய்த அந்த துரோகி சதனை நான் உயிரோடு விட மாட்டேன். மதிலை தேசத்தவர் நமது நாட்டிற்கு வந்ததன் நோக்கம் மந்திர திரவத்தை திருடுவதற்காக தான். எனக்கு தெரிந்து சதனும் அவர்களை மந்திர திரவமிருக்கும் குளத்திற்கே அழைத்து சென்றிருப்பான். நாம் நமது மொத்த படையுடன் அங்கு சென்றாள். அந்த துரோகி சதனோடு சேர்த்து அனைவரையும் சிறைபிடித்துவிடலாம்.." என்று தன் வீரர்களின் நம்பிக்கையை பெற முக்தாவை பலியாக்கினான்.

ஜிங்கு கூறியதை கேட்டு அனைவரும் சதனை கொல்ல வேண்டும்.. கொல்ல வேண்டும்.. என்று ஆர்ப்பரித்தனர். ஆனால் திவானிற்கு ஜிங்குவின் மீது நம்பிக்கையில்லாததால் "ஜிங்கு உனது யூகத்தை வைத்து மொத்த படையையும் ஒரே இடத்திற்கு அனுப்ப முடியாது. வீரர்களே அனைவரும் நான்கு புறங்களிலும் பிரிந்து சென்று தேடுங்கள். ஜிங்கு கூறியதால் மேற்கு திசைக்கு மட்டும் அதிகமான வீரர்கள் செல்லுங்கள். மற்றொரு முக்கியமான விஷயம் அனைவரும் சற்று கவனமாக இருங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நிலவு மலர் இல்லாததால் வன தேவதைகளால் கூட நமக்கு உதவ முடியாது.." என்று கூறி படைகளை மூன்று திசைகளிலும் பிரித்து அனுப்பி விட்டு திவானும் ஜிங்குவுடன் சேர்த்து மேற்கு திசை நோக்கி தன் வவ்வாலில் செல்ல ஆரம்பித்தான்.

முக்தாவும் தன்னை நோக்கி வரும் ஆபத்தை அறியாமல் மந்திர திரவத்தை எவ்வாறு எடுப்பது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள். அப்போது சுற்றுப்புறத்தை நன்கு ஆராய்ந்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற பருவியை மீண்டும் மரங்கள் இருக்குமிடத்திற்கு அழைத்து மூங்கில் மரங்களை வெட்டி அதை பயன்படுத்தி குடுவையை உருவாக்கினாள். தான் உருவாக்கிய குடுவையோடு சில மரக்கட்டைகளை எடுத்து கொண்டு மீண்டும் அந்த குளத்தின் அருகே வந்தாள்.

முக்தா வானத்திலிருக்கும் நிலவை பார்க்க நிலவானது தன் பயணத்தை முடித்து கொண்டு மேற்கு திசை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதை கண்டவள் இனி தாமதித்து பயனில்லை என்பதால் குளத்தின் மேலே நின்று கொண்டு தன் கையிலிருந்த கட்டையை தூரமாக தூக்கி எறிந்தாள். மரக்கட்டை கீழே விழுந்து சத்தம் கேட்டவுடன் பாதி யாளிகள் சத்தம் வந்த திசை நோக்கி சென்றன. யாளிகள் பாதிக்கும் மேல் சத்தம் வந்த திசை நோக்கி செல்ல முக்தா தன் கையிலிருந்த குடுவையை இடுப்பில் சொருகி கொண்டு தன் வாளை கையில் எடுத்துக்கொண்டு பருவியிடம் "பருவி என்ன நடந்தாலும் இவர்களை ஒரு கை பார்த்து விடுவோம் வா.." என்று கூறிவிட்டு தரையில் குதித்தாள்.

முக்தா பருவியிலிருந்து குதித்த நேரம் குள்ள இன வீரர்கள் அனைவரும் மந்திர திரவமிருக்கும் இடத்திற்கு வந்தனர். முக்தா திரவத்தை எடுப்பதற்காக கீழே குதிப்பதை கண்டவுடன் குள்ள இன வீரர்கள் தாக்க முற்பட, அவர்களை தடுத்த திவான் "வேண்டாம் யாரும் தாக்காதீர்கள். அவள் யாளிகளின் நடுவே சிக்கி அவளின் உடல் உறுப்புகள் அனைத்தும் துண்டாக்கப்பட வேண்டும். அவளது நண்பர்களுக்கு கூட அவளை அடையாளம் தெரியாதவாறு யாளிகளின் நகங்களால் அவளது உடல் சிதைக்க பட வேண்டும். அவள் இறந்த பின் அவளின் சிதைந்த உடலை இங்கிருந்து எடுத்து செல்வோம்.." என்று கூறியவுடன் அனைவரும் அமைதியாகி முக்தா அனுபவிக்க போகும் துன்பங்களை ரசிக்க ஆரம்பிக்க, ஜிங்கு தன் தோழியின் மீது கோபமிருந்தாலும் அவளின் நிலை கண்டு வருந்தினான்.

முக்தா கீழே குதித்தும் அவளை சுற்றி இருந்த யாளிகள் அனைத்தும் அவளை தாக்க வெறியோடு பாய்ந்து வர, முக்தா தன் வாளை எடுத்து சுழற்ற ஆரம்பிக்க, சிறிது நொடிகளில் அவளது வாள் முழுவதும் யாளிகளின் குருதியால் நனைய ஆரம்பித்தது. பாய்ந்து வரும் யாளிகளின் கால்கள் தலைகள் என அனைத்தும் முக்தாவின் வாளினால் துண்டாக்கப்பட்டு அந்த இடம் முழுவதும் சிதறி கிடக்க, அந்த இடமே ரத்த வெள்ளத்தில் நரகத்தை போன்று காட்சியளித்தது. இதை கண்ட குள்ளர்கள் கூட முக்தாவின் திறமையை கண்டு திகைத்து தான் போகினர்.

முக்தா தன்னை நெருங்கும் யாளிகளை கொன்று குவித்து கொண்டே குளத்தை நோக்கி முன்னேற, யாளிகளும் முக்தாவின் வாளை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறி கொண்டே வந்தன. ஆக்ரோஷத்தோடு பாய்ந்து வந்த ஒரு யாளி முக்தாவின் வாளிலிருந்து தப்பித்து முக்தாவின் வலது கையில் தன் நகத்தை பாய்ச்சி கீறலிட்டது. முக்தா கையில் அடிபட்ட ஒரு நொடி வாளை சுழற்ற முடியாமல் தடுமாற, மற்றொரு யாளி அவளின் கால் முட்டிக்கு கீழுள்ள பின்புற சதையை தன் கோரை பற்களால் கடித்தது.

தன் கால் சதைகளை கிழித்துக் கொண்டு பற்களை, சதைகளுக்குள் பாய்ச்சி கொண்டிருக்க, வலியால் துடித்தவள் தன் வாளை கொண்டு யாளியின் கழுத்தை ஒரே வெட்டி துண்டாக வெட்டினாள். தலை வெட்டப்பட்ட யாளியின் உடல் தரையில் சரிய, அதன் தலையோ யாளியின் காலில் தன் கோரை பற்களை சதையோடு தைத்திருந்ததால் தலை மட்டும் கீழே விழாமல் முக்தாவின் கால்களை கவ்வியவாறே இருந்தது.

முக்தா தன் மீது பட்ட காயம் எதையும் பொறுப்பெடுத்தாமல் தன் வாளை விடாமல் சுழற்றி தன்னை நெருங்கும் யாளிகளின் குருதியால் தன்னை சுற்றியுள்ள இடத்தை சிவப்பாக மாற்றிக் கொண்டிருந்தாள். மரக்கட்டை விழுந்த சத்தத்தில் பிரிந்து சென்ற பாதி யாளிகள் மீண்டும் முக்தாவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதை கண்ட பருவி யாளிகள் முக்தாவை நெருங்காமல் அவற்றின் முன்பு பறந்து சென்று போக்கு காட்டி கொண்டிருக்க, பருவியின் செயலை பார்த்த திவான் தன் வீரர்களிடம் "வீரர்களே அனைவரும் அந்த பறவையை தாக்குங்கள்.." என்று கட்டளையிட, அவன் குரல் கேட்ட முக்தா திடுக்கிட்டு தனக்கு மேல் உயரத்தில் பறந்து கொண்டிருந்த குள்ள இன வீரர்களை பார்த்தாள்.

முக்தா யாளிகளிடம் சண்டையிட்டு கொண்டே அவர்களை பார்க்க, ஜிங்கு உட்பட அனைத்து வீரர்களும் தங்கள் குழல் போன்ற ஆயுதத்தில் மயக்க ஊசிகளை சொருகி பருவியை நோக்கி தாக்க தயாராகினர். இதை கண்ட முக்தா "ஜிங்கு அவ்வாறு செய்யாதே வேண்டாம்.." என்று கத்தினாள்.
முக்தாவை பார்த்து ஏளனமாக சிரித்த திவான் "வீரர்களே தொடர்ந்து தாக்குங்கள்.." என்று கத்திவிட்டு தன் ஆயுதம் கொண்டு மயக்க ஊசியால் பருவியை தாக்க, அனைவரும் அவரை தொடர்ந்து தாக்க ஆரம்பித்தனர். குள்ள வீரர்கள் செலுத்திய ஊசி யாளிகளுக்கு போக்கு காட்டியவாறு பறந்து கொண்டிருந்த பருவியின் மீது பட்டு பருவி பறக்க முடியாமல் மயங்கி யாளிகளின் நடுவே விழுந்தது.

பருவி கீழே விழுந்தவுடன் யாளிகள் அனைத்தும் பாய்ந்து சென்று பருவியை தாக்க ஆரம்பிக்க, முக்தா தன்னை தாக்கும் யாளிகளையே சமாளிக்க முடியாமல் திணற முக்தாவின் கண் முன்னே யாளிகள் தன் கூரிய நகங்களாலும் தன் கோரை பற்களாலும் பருவியின் உடலை கிழிக்க ஆரம்பித்தன. பருவியின் தோல்களை யாளிகள் கிழிக்க பருவி அரை மயக்கத்தில் வலியால் ..கியா..கியா.. என்று கத்தி கொண்டே துடித்தது.

பருவி துடிப்பதை கண்டு குள்ள இன வீரர்கள் சிரிக்க, திவானும் கொடூரமாக சிரித்தான். ஜிங்குவிற்கு பருவியின் விழிகள் வலியை கொடுத்தாலும் அவன் கொண்ட பதவி வெறி அவனை கண்ணிருந்தும் குருடனாகியது. பருவியின் கூக்குரலில் முக்தா ஆக்ரோஷத்தோடு தன் இடுப்பில் சொருகி இருந்த தனது சிறிய கூர்வாளை எடுத்து திவானை நோக்கி வீசினாள். பருவியை மட்டுமே பார்த்து கொண்டிருந்த திவான் முக்தா வீசிய கத்தி தன் அருகில் நெருங்கிய பிறகே கண்டவன் அதனிடமிருந்து தப்பிக்கும் முன்பு அவனது தலை உடலை விட்டு பிரிந்திருந்தது.

நொடியில் நடந்த இந்த நிகழ்வில் சுற்றி இருந்த அனைவரும் அசைய மறந்து நிற்க, திவானின் உடலும் தலையும் தனித்தனியாக பிரிந்து தரையில் விழ திவானின் வவ்வால் முக்தாவை நோக்கி வேகமாக தாக்க வர, முக்தாவின் வாள் வீச்சில் அதுவும் உடல் இரண்டாகி விழுந்தது. திவான் இறந்தவுடன் குள்ள இன வீரர்கள் கோபத்தோடு முக்தாவை தாக்க முயல அவர்களை தடுத்த ஜிங்கு "என்ன காரியம் செய்கிறீர்கள்..? நமது தலைமை வீரர் திவான் அவர்களின் இறுதி ஆசையை நடக்க விடாமல் தடுக்க நினைக்கிறீர்களா..? அவர் கூறியவாறு முக்தா யாளிகளால் துடிதுடித்து இறக்க வேண்டும். அதுவே திவானின் இறுதி ஆசை, அதனால் யாரும் அவளை தாக்காதீர்கள் நம் தலைமை வீரரை கொன்றதற்கு இதுவே அவளுக்கான தண்டனை.." என்றுக் கூற அனைவரும் அமைதியாக, அனைவரும் வானத்தில் இன்னும் உயரத்தில் பறந்து கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

முக்தா ஒரு எல்லைக்கு மேல் சண்டையிட முடியாமல் சோர்வடைய, யாளிகள் முக்தாவின் உடலிலும் ஆங்காங்கே தாக்கி காயங்களை ஏற்படுத்தி கொண்டிருந்தது. முக்தா சண்டையிட்டு கொண்டே பருவியை பார்க்க பருவியின் கழுத்து பகுதியில் துளையிட்டு சென்ற யாளிகள் வயிற்று பகுதியை கிழித்து கொண்டு உடலுக்குள் இருந்து வெளியே வர பருவியின் விழிகள் மரண வலியோடு முக்தாவையே பார்த்து கொண்டிருந்தது. பருவியின் வலி மிகுந்த அந்த பார்வை முக்தாவின் உயிர் வரை வலியை உண்டாக்கியது.

முக்தாவிற்கு பருவியோடு கொஞ்சி மகிழ்ந்த பழைய நினைவுகள் கண்முன் தோன்றி மறைய, தன் விழியில் வழியும் கண்ணீரோடு தன்னை தாக்கி கொண்டிருந்த யாளிகள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினாள். தன்னை தாக்கிய அணைத்து யாளியும் இறந்தவுடன் தன் வாளை நிலத்தில் சொருகி சிந்தி கிடந்த குருதியின் நடுவே மண்டியிட்டு பருவியை நினைத்து கண்ணீர் சிந்தினாள். இதை கண்ட ஜிங்குவின் மனது வலித்தாலும் அவனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.

பருவியை தாக்கி கொண்டிருந்த யாளிகளில் சில முக்தாவை நோக்கி வர, மெதுவாக எழுந்தவள் குருதி படிந்து நடுங்கும் கரத்தோடு வாளை நிலத்திலிருந்து உருகினாள். தன் காலின் பின் மாட்டியிருந்த யாளியின் தலையை புடுங்கி ஏறிய அது முக்தாவின் சதையை கிழித்து கொண்டு வெளியே வந்தது. முக்தா தன்னுள் மிஞ்சி இருந்த மொத்த சக்தியையும் கொண்டு யாளிகளை தாக்க தயாராக, அசுர வேகத்தில் வேலியை போன்று சுற்றி இருந்த மரங்களை தாண்டி சிவி பாய்ந்து வந்தது.
மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த சிவி தனக்கெதிரே ரத்த வெள்ளத்தில் மிதந்த பருவியை கண்டு கோபத்தோடு சிம்ம கர்ஜனையும் யானையின் பிளிறலும் சேர்ந்தவாறு ஒலியெழுப்ப, அந்த சத்தத்தில் பெரு யாளிகள் அனைத்தும் மிரண்டு ஓட தொடங்கின.

சிவியோ மதம் கொண்ட யானையும் சினம் கொண்ட சிங்கமும் இணைந்தது போல் வெறியில் தன் கண்ணில் படும் பெரு யாளிகள் அனைத்தையும் தன் காலால் நசுக்கியும் துதிக்கையால் பிடித்து தூக்கி எரிந்தும் கொன்றது. குள்ள இன வீரர்கள் அதன் கோபம் கண்டு அஞ்சி அதை தாக்க முற்பட அவர்களை தடுத்த ஜிங்கு "வீரர்களே பின் வாங்குங்கள் கஜ யாளியின் கோபம் பற்றி உங்களுக்கு தெரியாது. இங்கிருக்கும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள வீரர்களை கொண்டு அதை ஒன்றும் முடியாது. நாம் நமது படையோடு வந்து இவர்களை திருப்பி தாக்கலாம் வாருங்கள்.." என்று தன் வீரர்களிடம் அற்ப காரணம் கூறி அழைத்து செல்ல முயன்றான்.

குள்ள இன வீரர்களில் ஒருவனோ "ஜிங்கு இப்போது இவர்களை இங்கு விட்டு சென்றால் கண்டிப்பாக தப்பித்து விடுவார்கள். நமது படைகள் பிறகு வரட்டும் அதுவரை நாம் தாக்குவோம.."
முக்தாவை கண்ட சிவி பெரு யாளிகளை தாக்குவதை நிறுத்தி விட்டு முக்தாவின் அருகில் வந்து மண்டியிட, சிவியின் மீதிருந்த லியாடோவும் சித்தார்த்தும் நிலத்தில் குதித்தனர். முக்தாவின் அருகில் வந்த சித்தார்த் உடல் முழுதும் காயத்தோடு இருந்தவளை கண்ட நொடி கண்ணீரோடு வந்து கட்டியணைத்தான். வாடிய கொடியாய் இருந்தவள் சித்தார்த்தின் மீது முழுதாய் சரிய, முக்தாவின் செயலை கண்ட ஜிங்குவிற்கும் லியாடாவிற்கும் சித்தார்த் முக்தாவிற்கு எவ்வளவு முக்கியமானவன் என்று புரிந்தது.

லியாடோ பருவியை சென்று பார்க்க பருவியோ உயிரற்ற உடலாய் கிடக்க, மனதில் வலியோடு திறந்திருந்த பருவியின் விழியை மூடியவன் முக்தாவின் அருகே வந்தான். லியாடோ "முக்தா சூரியன் உதயமாக போகிறது. நாம் உடனே இங்கிருந்து சென்றாக வேண்டும்.."
முக்தாவின் விழிகள் பருவியை நோக்க லியாடோ "முக்தா முடிந்ததை பற்றி நினைத்து பயனில்லை. நீ காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையில் பல உயிர்கள் காத்திருக்கின்றன. அதற்காகவாவது நீ உயிரோடு இருக்க வேண்டும்.." என்றுக் கூறி முக்தாவை இருவரும் சிவியின் அருகில் அழைத்து சென்றனர்.

சிவியின் அருகே சென்றவுடன் தன் இடுப்பிலிருந்த குடுவையை எடுத்தவள் "இன்னும் மந்திர திரவத்தை எடுக்கவில்லை.."
முக்தாவின் கையிலிருந்த குடுவையை வாங்கிய சித்தார்த் "நீ சிவி மேல உட்க்காரு நான் மந்திர திரவத்தை எடுத்துட்டு வர்றேன்.." என்று கூறி குளத்தில் மந்திர திரவத்தை எடுக்க சென்றான்.
ஜிங்கு தன் வீரர்களை முடிந்த அளவு உயரத்திற்கு அழைத்து சென்று இங்கிருந்து கிளம்பி நம் வீரர்களை அழைத்து கொண்டு வரலாம் என்று விவாதம் செய்து கொண்டிருக்க, சித்தார்த் குளத்தின் அருகே செல்வதை பார்த்த ஒரு குள்ள இன வீரன் "அங்கு ஒருவன் நம் மந்திர திரவத்தை திருடுகிறான்.." என்று கத்தினான்.

அந்த வீரன் கத்திய சத்தத்தில் லியாடோவும் முக்தாவும் குள்ள இன வீரர்களை பார்க்க, அப்போது தான் குள்ள இன வீரர்கள் இருப்பதையே தான் மறந்துவிட்டோம் என முக்தா உணர்ந்தாள். ஆனால் அதற்குள் அனைத்து வீரர்களும் ஜிங்கு தடுப்பதற்கு முன்பே சித்தார்த்தின் மீது தங்கள் மயக்க ஊசிகளால் தாக்க, சித்தார்த் அரை மயக்கத்தில் தடுமாறி குளத்துக்குள் விழுந்தான்.
இதை கண்ட முக்தா "சித்தார்த்.." என்ற அலறலோடு, தன் பலம் திரட்டி குளத்தின் அருகே வர, சித்தார்த் தன் உடல் முழுவதும் வெள்ளி நிற திரவம் படிந்திருக்க அரை மயக்கத்தில் குளத்திலிருந்து மெதுவாக வெளியே எழுந்து நின்றான். என்ன நடக்க போகிறது என்ற பயத்தோடு முக்தா சித்தார்த்தை பார்க்க, சித்தார்த் முக்தாவை பார்த்து புன்னகைத்தவாரே வெள்ளி சிலை போன்று மாறினான்.

முக்தா பயந்ததை போன்று குளத்திலிருந்து வெளியே வந்த சித்தார்த் வெள்ளி நிற முலாம் பூசிய சிலையென அசையாமல் நின்றான். தன்னவனின் நிலை கண்டவள் தான் இளவரசி என்ற எண்ணம் யாவும் மறந்து தன்னவனின் நிலை கண்டு மனம் தாங்காமல் அவன் முன்னே மண்டியிட்டு வீறிட்டு கதறி அழ, அதை கண்ட ஜிங்குவிற்கும் லியாடோவிற்கும் முக்தா சித்தார்த்தின் மீது கொண்ட அன்பின் ஆழம் புரிந்தது.

புன்னகை ததும்பும் முகத்தோடு சிலையென நிற்கும் தன்னவனை விழியில் மடைதிறந்த வெள்ளமென பாயும் கண்ணீர் திரையின் வழிய கண்டாள். சிலையாய் மாறி நிற்கும் சித்தார்த்தின் புன்னகையை கண்டவளுக்கு கூர்வாளை தீயிலிட்டு பழுக்க காய்ச்சி தன் மார்பை பிளந்து இதயத்தின் மீது குத்தியதை போன்றதொரு வலியை கொடுத்தது. முக்தாவின் கண்ணீர் சிந்திய விழிகள் நேரமாக நேரமாக நெருப்பு ஜுவாலையாய் மாற ஆரம்பித்தது.

கண்ணீர் வடித்த விழிகள் நேரமாக நேரமாக அனலை கக்க, தன் விழிகளை உயர்த்தி வவ்வாலின் மேல் அமர்ந்து வானில் பறந்து கொண்டிருந்த ஜிங்குவையும் அவனது வீரர்களையும் கண்டாள். ஜிங்குவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இது நேரம் வரை அவளின் கண்ணீரை கண்டு ரசித்தவர்கள் இப்போது முக்தாவின் கோப விழிகளை கண்டு அஞ்சினர்.

முக்தாவின் கோப விழி குள்ள இன வீரர்கள் ஒவ்வொருவரின் அடி வயிற்றிலிலும் பயப்பந்துகளை உருள செய்தது. முக்தவின் பார்வை அனைவரிடமும் சென்று இறுதியாக ஜிங்குவிடம் வந்து நிலைத்து நிற்க, ஜிங்குவிற்கு அவனையும் அறியாமல் கைகள் நடுங்க ஆரம்பித்து. நாம் செய்யும் அனைத்து செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதை ஜிங்கு முழுமையாக நம்புபவன். முக்தா செய்த தவறினால் தான் ஒரு தேசத்தின் இளவரசியாக இருந்தும் கூட சிறிது நேரம் முன்பு தன் முன் மண்டியிட்டு நின்றாள். தான் இப்போது செய்த செயலின் எதிர்வினையும் எதிர்காலத்தில் தான் அனுபவிக்க நேரும் என்பதை முக்தாவின் பார்வையே அவனுக்கு உணர்த்தியது.

அடிபட்ட வேங்கை தன்னை மீட்டு கொண்டு திரும்பி பலம் கொண்டு தாக்க, களிறும் கூட கலங்கி தான் போகும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் அடிபட்ட வேங்கையாய் நிற்பவளை இப்போது தப்பிக்க விட்டால் முக்தா நாளை அவளுக்கான வாய்ப்பு வரும் போது நம் இனம் இருந்த தடமின்றி செய்து விடுவாள் என்பதை உணர்ந்த ஜிங்குவின் மனதில் முக்தாவை கொன்று விடலாமா என்ற எண்ணம் கூட ஒரு நொடி தோன்றி மறைந்தது. ஜிங்குவின் எண்ணத்திற்கு சாதகமாய் நிலவு மகள் மேற்கு நோக்கி தன் பயணத்தை முடித்து கொள்ள, ஆதவன் தன் செவ்வண்ண கதிர்களை நிலமகள் மீது பாய்ச்சியவாறு உதிக்க ஆரம்பித்தான்.

முக்தா வானில் பறந்து கொண்டிருக்கும் குள்ள இன வீரர்களை எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் இருக்க, அவர்கள் அனைவரையும் தன் சுடர் விழியால் அஞ்ச செய்து கொண்டிருப்பவளின் கரத்தை லியாடோ பிடித்தான். லியாடோ பல முறை கூப்பிட்டும் முக்தா குள்ளர்களையே பார்த்து கொண்டிருந்ததால் வேறு வழியின்றி அவளின் கரத்தை பிடித்து இழுத்தான். "முக்தா ஆதவன் உதிக்க ஆரம்பித்துவிட்டது. நிலவு மலர் குகையை விட்டு வெளியே வந்தால் மரங்களுக்கு உயிர் வந்துவிடும் நாம் அதற்குள் இங்கிருந்து விரைந்து செல்ல வேண்டும்.." என்று வலுக்கட்டாயமாக அவளை இழுத்து கொண்டிருந்தான்.

லியாடோ எவ்வளவு இழுத்தும் முக்தாவின் கால்கள் இறுக்கமாய் அதே இடத்தில் அசையாமல் நிற்க, லியாடோ எவ்வளவு முயன்றும் முக்தா ஒரு இன்ச் கூட அசையாதவள் குள்ளர்களிடமிருந்த தன் பார்வையை சித்தார்த் புறம் திருப்பினாள். தன்னவனின் கரத்தோடு தன் கரம் கோர்க்கும் ஆசையில் சித்தார்த்தின் கரம் பார்க்க அதில் அவளுக்காக மந்திர நீரை நிரப்பியவாறு இரு குடுவைகள் இருந்தன. அதை கண்டவள் கண்ணீரோடு குடுவையை எடுக்க போக முக்தாவின் கரத்தை லியாடோ தடுத்தான்.

"முக்தா என்ன செய்கிறாய்..? அதை எதற்காக தொடுகிறாய்..? அவனை தொட்டு நீயும் சிலையாக மாறிவிட்டால் என்ன செய்வது, நாம் இங்கிருந்து விரைந்து செல்ல வேண்டும். சுவான் ராஜ்ஜியம் செல்ல நமக்கு வேறு ஏதாவது வழி கிடைக்கும்.." என்று லியாடோ கூற என்ன கூறியும் முக்தாவின் விழிகள் சித்தார்த்தை விட்டு சிறிது கூட அசையவில்லை.

ஆதவன் பாதி உதித்த நிலையில் இருக்க, லியாடோ என்ன செய்யலாம் என்று யோசித்தவன் "முக்தா உன் மக்களை பற்றி யோசித்தாயா..? அவர்கள் அனைவரும் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். உன் உயிரை கொடுத்தாவது உன் மக்களை காப்பாய் என நீ உன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாய். அந்த சத்தியத்தை காக்கவாவது நீ இங்கிருந்து தப்பிக்க வேண்டும்.." என்று கூற தன் மக்களை பற்றி லியாடோ கூறியதும் முக்தாவின் கால்களில் இறுக்கம் தளர்ந்தது. இதை பயன்படுத்தி கொண்ட லியாடோ முக்தாவை சிவியின் அருகே அழைத்துச் சென்றான்.

முக்தாவை கொல்ல எண்ணிய ஜிங்குவின் ஒரு மனமோ அவள் நம் உயிரை காப்பாற்றியவள், அதோடு உன் தோழி என்று முக்தாவிற்க்காக துணை நின்றது. ஆனால் ஜிங்குவின் மூளையோ அவள் உன் உயிரை காப்பாற்றினாள் நீயும் பதிலுக்கு ஒரு முறை அவள் உயிரை காப்பாற்றிவிட்டாய், அதோடு அவள் உனக்கு துரோகம் செய்த போதே உங்கள் நட்பு முறிந்து விட்டது. இப்போது அவள் உன்னோடு ஒப்பந்தம் செய்து கொண்டாள் எனவே பிற்காலத்தில் அவளை பயன்படுத்தும் எண்ணத்தில் இன்று அவளை நீ தப்பிக்க வைக்கலாம். ஆனால் நாளை அவள் உன் கிராமத்தையே அழிக்கும் நிலையும் நேரிடலாம். நிலவு மலரோடு அதை காக்கும் நான்கு மரங்களையும் அவள் அழித்துவிட்டால். உங்கள் ஒப்பந்தமும் பயனற்று போய்விடும் அதனால் தான் கூறுகிறேன். அவளை இப்போதே கொன்றுவிடு என்று மூளை கட்டளையிட்டது.

ஜிங்கு மனதின் பேச்சை கேட்பதா..? அல்லது மூளையின் பேச்சை கேட்பதா..? என்று அறியாமல் தவித்து கொண்டிருக்க, அதற்குள் லியாடோ முக்தாவை சிவியின் மீது ஏறி அமர வைத்தான். பின் லியாடோவும் சிவியின் மீது ஏறி சிவியை மீண்டும் தான் வந்த பாதையில் செலுத்த தொடங்கினான். முக்தாவின் பார்வையில் அவளை கண்டு அஞ்சிய குள்ள இன வீரர்கள் முக்தாவை தாக்கலாமா..? வேண்டாமா..? என்று யோசித்து கொண்டிருந்தனர்.

குள்ள இன வீரர்கள் அனைவரும் ஜிங்குவின் முகம் பார்க்க, அவனும் என்ன செய்ய என்று குழப்பத்தில் தான் இருந்தான். அதற்குள் சூரியன் உதித்து விட மரங்கள் அனைத்தும் அசையா ஆரம்பித்தன. லியாடோ முடிந்த அளவு வேகமாக சிவியின் காது புறம் அழுத்தம் கொடுத்து சிவியை வேகமாக செல்ல வைத்தான். முக்தா தன்னவனை திரும்பி பார்க்க, சித்தார்த்தின் அருகே மந்திர திரவத்திற்குள் விழுந்து வெள்ளி நிறத்தில் மின்னி கொண்டு சிலையை போன்று கிடந்த யாளி அசைவதை கண்டாள்.

யாளியிடம் அசைவை கண்டவள் அதை கூர்ந்து கவனிக்க, சியையென கிடந்த யாளியின் மேலிருந்த வெள்ளிநிற திரவமானது முட்டை ஓட்டை போன்று உடைந்து விழ ஆரம்பித்தது. மேலே படிந்திருந்த வெள்ளி திரவமானது உடைந்து கீழே விழுந்தவுடன் வெண்ணிறத்தில் பிரமாண்ட ஒளியோடு யாளி எழுந்து நின்றது. இதை கண்டவள் லியாடோவிடம் "சிவியை நிறுத்து லியாடோ.." எனக் கூறினாள்.
லியாடோ கோபத்தோடு "முக்தா எத்தனை முறை கூறினாலும் புரிந்துக்கொள்ள மாட்டாயா..?" என்று கத்த முக்தாவும் இனிமேல் இவனிடம் சொல்லி பயனில்லை என்று எண்ணியவள் சத்தமாக சிவியிடம் "சிவி சித்தார்த் இருக்குமிடத்திருக்கே திரும்பி செல்.." என்று கட்டளையிட சிவி உடனே தன் வேகத்தை குறைத்து, சித்தார்த் இருக்கும் பக்கம் திரும்பியது.

லியாடோ சிவியின் காதுப்பகுதியில் பார்வையை செலுத்தி காதின் பின்புறம் அழுத்தம் கொடுத்துவிட்டு, அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை திருப்ப முயற்சிக்க சிவி எதற்க்கும் கட்டுப்படாமல் முக்தாவின் வாக்கே வேதமே எண்ணி அவள் சொல்லிய திசையில் ஓடியது.
லியாடோ கோபத்துடன் "முக்தா உனக்கு மூளை மழுங்கிவிட்டதா..?" என்று கேட்டுக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவன் வெண்ணிற ஒளியின் நடுவே தன் பிடரிமயிரை சிலுப்பி கொண்டு கர்ஜிக்கும் பெரு யாளியை விழி விரிய கண்டான்.

வெள்ளி நிற திரவத்திலிருந்து விடுபட்ட யாளி தன்னை சுற்றி இறந்து கிடந்த யாளிகளை கண்டு கோபமாய் கர்ஜிக்க, தூரத்தில் உயிரோடு மிஞ்சி இருந்த யாளிகளை கண்டதும் தன் கூட்டத்தின் அருகே விரைந்து ஓடியது. இதை அனைத்தையும் மேலே இருந்து பார்த்து கொண்டிருந்த குள்ளர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தோடு பார்க்க சிவியும் மறுபடியும் குளத்தை நோக்கி வருவதால் என்ன நடக்க போகிறது என்று புரியாமல் பார்த்தனர்.

ஆதவனின் ஒளி பட்டதால் தான் சிலையாக இருந்த யாளிக்கு உயிர் வந்தது என்று எண்ணிய முக்தா சித்தார்த்தின் அருகே வந்தவள் சித்தரத்தை பார்க்க, அவன் மீது வெயில்பட்டும் அசையாமல் நின்றிருந்தான். முக்தாவின் மனமோ ஏன் சித்தார்த் மட்டும் இன்னும் பழைய நிலைக்கு மாறவில்லை என்று குழம்பி தவித்தது. லியாடோ பாதுகாப்பிற்காக பார்வையை சுழல விட, அவர்களை சுற்றி வேலியாக நின்ற பல மரங்கள் மண்ணை விட்டு எழுந்து இவர்களை நோக்கி நடந்து வர ஆரம்பித்தது

முக்தா என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க, மேலிருந்து அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த ஜிங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டான். இறந்து கிடந்த மற்ற யாளிகளின் குருதி சிலையாக கிடந்த யாளியின் மீதுபட்டதால் தான் சிலையாக இருந்த யாளி உயிர் பெற்றது என்பதை கண்டறிந்தான். இந்த சமயத்தில் முக்தாவிற்கு உதவி செய்தால் முக்தா தன் மீது கொண்ட கோபம் மறைந்துவிடும் என்பதை உணர்ந்தவன் தன்னருகே இருந்த மற்ற வீரர்களை கண்டான். குள்ள இன வீரர்கள் அனைவரும் மரங்கள் மண்ணை விட்டு எழுந்து வருவதை பார்த்து கொண்டிருக்க அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு தன் இடுப்பில் வைத்திருந்த முக்தாவின் உதிரம் இருந்த கண்ணாடி குடுவையை சித்தார்த்தின் மீது தூக்கி எறிந்தான்.

முக்தா ஒப்பந்தம் செய்து கொண்ட போது ஜிங்குவிடம் கொடுத்த முக்தாவின் உதிரம் அடங்கிய கண்ணாடி குடுவை சித்தார்த்தின் தலையில் பட்டு உடைந்து முக்தாவின் உதிரமானது சித்தார்த்தின் நெற்றியில் இருபுருவங்களின் நடுவே கோடு போன்று வடிந்தது. சித்தார்த்தின் தோள்பட்டையில் உடைந்த குடுவை கிடக்க அதை கண்டவள் தன் பார்வையை வானத்தை நோக்கி ஜிங்குவை காண அவனோ புன்னகையோடு முக்தாவை பார்த்தான். சித்தார்த்தின் மேல் முக்தாவின் உதிரம்பட்டவுடன் அவன் மீது திடமாக படிந்திருந்த வெள்ளி திரவத்தில் விரிசல் விட தொடங்கியது.

வெள்ளி சிலையென இருந்தவனின் மீது உண்டான விரிசல் அதிகமாக அந்த விரிசலின் வழியே வெண்ணிறத்தில் பிரமாண்டமான ஒளியானது வெளிப்பட்டது. மெதுவாக விரிசல் அவனது முகத்திற்கு செல்ல அவன் மீது படிந்திருந்த வெள்ளி நிற திரவம் முழுவதும் உடைந்து கீழே விழ முட்டையிலிருந்து பிறக்கும் புதிய குஞ்சு போல் தன் மீது திட நிலையில் மாறி இருந்த திரவங்களை உடைத்து கொண்டு வெளியே வந்தான்.

சித்தார்த் என்ன நடக்கிறது என்று புரியாமல் தன் உடலில் உண்டான மாற்றத்தால் நிலையில்லாமல் தடுமாற அவனது கையிலிருந்த குடுவை தானாக கீழே விழுந்தது. சித்தார்த் உடனே தன் கை கால்களை பார்க்க, அவன் உடல் முழுவதும் வெண்ணிறத்தில் பிரமாண்டமாக ஜொலித்தது. சித்தார்த் தான் முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருப்பதை போன்று உணர்ந்தான். தன்னுள் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று புரியாமல் குழம்பியவன் தன்னெதிரே காதலோடு நிற்கும் தன்னவளை கண்டு தன் விழிகளிலும் காதலை தேக்கி தன்னவளை கண்டான். தன் வாழ்வில் இனி பார்க்கவே முடியாதோ என்று எண்ணி கலங்கிய தன்னவன் மீண்டு வந்ததோடு மட்டுமின்றி உடலெங்கும் வெண்ணிற ஒளி சூழ தன் அழகிய புன்னகையை இதழ்களில் படரவிட்டவாறு காதலோடு தன்னை காண, இதற்க்கு மேல் பேதையவளால் தன் உள்ளத்தை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்.

தன்னவளின் உணர்வுகளை ரசித்தவன் காதல் பார்வையை வீசியவாறு தன் கைகளை விரிக்க, பெண்ணவளோ விரைந்து சென்று தன் உயிரில் கலந்தவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள். முக்தாவை மார்போடு அனைத்தவன் அவளின் கன்னம் வருட பெண்ணவளோ அதை தன் இமை மூடி ரசித்தாள். சித்தார்த் முக்தாவின் முகத்தில் தெரிந்த ஒரு வித மயக்கத்தில் மங்கையவளை மேலும் தன் மார்போடு இறுக்கி அணைக்க, முகதாவின் மீதிருந்த காயங்கள் அனைத்தும் தானாக மறைய தொடங்கியது.

இவர்களின் இந்த அழகிய நிலையை கலைக்க லியாடோவிற்கு மனமில்லை என்றாலும் மரங்கள் தங்கள் அருகில் நெருங்கியதால் "நண்பர்களே உங்களின் நிலை எனக்கு புரிகிறது. ஆனால் இதற்கு மேலும் நாம் இங்கிருந்தால் நம் அனைவரின் நிலையும் மோசமாகி விடும்.." என கூறியவுடன் இதுவரை வேறு உலகில் இருந்தவர்கள் தங்கள் அருகில் லியாடோ இருப்பதை உணர்ந்து வேகமாக விலகி நின்றனர்.

சித்தார்த்தை விட்டு விலகிய பிறகே தனக்கு காயம்பட்ட இடத்தில் இப்போது சிறிது கூட வலியில்லை என்பதை முக்தா உணர்ந்தாள். முக்தா உடனே தன் கையில்பட்ட காயத்தை ஆராய யாளியின் நகம்பட்ட இடத்தில் இப்போது சிறு கீறல் கூடயில்லை. தன் உடலில் இருந்த காயங்கள் எவ்வாறு மறைந்தது..? என முக்தா சிந்திக்க "வேகமாக சிவியின் மீது ஏறுங்கள்" என்ற லியாடோவின் குரல் முக்தாவின் சிந்தனையை களைத்தது.

லியாடோ கூறியவுடன் முக்தா சிவியின் மீது ஏற சித்தார்த்தும் கீழே விழுந்த இரு குடுவைகளையும் எடுத்து முக்தாவுடன் சேர்ந்து சிவியின் மீது ஏறினான். இருவரும் சிவியின் மீது ஏறியவுடன் லியாடோ சிவியை வேகமாக செலுத்த ஆரம்பித்தான். நூற்றுக்கணக்கான மரங்கள் இவர்களை சுற்றி வளைத்தவாறு நடந்து வர சிவி தன்னெதிரே வரும் மரங்கள் அனைத்தையும் தன் தந்தங்களால் இரண்டாக உடைத்து கொண்டு முன்னேறி சென்றது. சிவி மரங்கள் அனைத்தையும் நொறுக்கி கொண்டு முன்னேறி செல்ல மரங்கள் தங்கள் வேர்களின் மூலம் சிவியின் கால்களை நகரவிடாமல் சுற்றி வளைத்தது. நூற்றுக்கு மேற்பட்ட மரங்களின் வேர்கள் காலினை சுற்ற சிவி அசையமுடியாமல் தரையில் விழுந்தது.
சிவி கீழே விழுந்தவுடன் சிவியின் மீது அமர்ந்திருந்த மூவரும் தடுமாறி கீழே விழ, முக்தாவின் அருகில் இருந்த ஒரு மரம் தன் கிளையினால் முக்தாவின் நெற்றியில் தாக்கியது. கிளை தாக்கியவுடன் முக்தாவின் நெற்றியில் சிறு வெட்டு காயம் உண்டாகி உதிரம் வடிய ஆரம்பித்தது. தன்னவளின் நெற்றியில் குருதி வடிவத்தை கண்ட சித்தார்த்தின் விழிகள் ரத்தமென சிவக்க, தன்னவளுக்கும் உயிர் பெற்று பதினைந்து அடியில் நிற்கும் மரத்திற்கும் நடுவில் வந்து நின்றான்.

ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான தேகத்துடன் விழி இரண்டும் ரத்தமென சிவக்க கோபத்துடன் வந்து நிற்பவனின் உடலெங்கும் வெண்ணிறத்தில் நெருப்பு எரிந்தது. சித்தார்த்தின் மீது வெண்ணிறத்தில் நெருப்பு எரிவதை கண்ட முக்தா பயத்துடன் விரைந்து சென்று சித்தார்த்தின் கரம் பற்றினாள். ஆனால் சித்தார்த்தின் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்போ அவளை சுடாமல் அவளின் கரத்திற்குள் ஒரு வித குளுமையை உண்டாக்கியது.

சித்தார்த்தின் கரம் பற்றிய நொடி முக்தாவின் நெற்றியிலிருந்து வெட்டுகாயம் மறைய ஆரம்பிக்க, தன்னவளின் நெற்றியில் இருந்த காயம் தானாக மறைவதை கண்டவன் அவளின் நெற்றியின் நேரே காயத்தை தொட அவனது வலது கரத்தை எடுத்து சென்றான். தன்னவளின் நெற்றியை நோக்கி தன் கரத்தை எடுத்து சென்றவன் தன் கரத்தின் மீது வெண்ணிறத்தில் நெருப்பு எரிவதை போன்று இருப்பதை கண்டவன் பயத்தில் தன்னவளுக்கு ஏதும் பாதிப்பு உண்டாக கூடாது என்று வேகமாக முக்தாவை விட்டு விலகி கரத்தை உதற நெருப்பானது கொஞ்சமும் அணையவில்லை.

தன் கரத்தில் பற்றி எரியும் நெருப்பை கண்டு பயத்தில் தன் நெஞ்சில் தன் கையை தட்ட அப்போது தான் சித்தார்த் தன் உடல் முழுவதையும் சுற்றி வெண்ணிறத்தில் நெருப்பு எரிவதை கவனித்தான். திடீரென தன் மீது எரியும் நெருப்பை கண்டு பயத்தோடு பதறியவாறு மரங்களின் அருகே நெருங்க மரங்கள் அனைத்தும் சித்தார்த்தை பார்த்து பயத்துடன் விலகி நின்றன.

சித்தார்த்தின் மீது எரியும் நெருப்பை கண்டு மரங்கள் அஞ்சுவதை கண்ட லியாடோவின் மனதில் உடனே ஒரு யோசனை தோன்றி, சித்தார்த்தின் அருகில் வந்தவன் "சித்தார்த் கொஞ்சம் பொறுமையாக இரு இது நீ மந்திர திரவத்தில் விழுந்ததால் உண்டான சிறு பாதிப்பு என்று எண்ணுகிறேன். இந்த நெருப்பை கண்டு மரங்கள் அஞ்சுகின்றன, இதுதான் நமக்கான வாய்ப்பு உன்மீது படர்ந்திருக்கும் நெருப்பு அணையும் முன்பே நாம் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் வா.." என்று சித்தார்த்தை பிடித்து நிறுத்த சித்தார்த்தும் அமைதியானான்.

சித்தார்த்தின் மீது எரியும் நெருப்பை கண்ட மரங்கள் இவர்களை நெருங்காமல் விலகி நிற்க, சித்தார்த்தின் மனதிலிருந்த பயம் விலகி மரங்களை பார்த்து கோபமான விழிகளோடு புன்னகை புரிந்தவன் தன் கையை சிவியின் கால்களை சுற்றி இருந்த வேரின் அருகே கொண்டு சென்றான். சித்தார்த் அருகே வருவதை கண்டு சிவியை சுற்றி இருந்த வேர்கள் அனைத்தும் விலகி செல்ல, லியாடோ வேகமாக சிவியின் கழுத்து பகுதியில் ஏறி அமர்ந்தான்.

சித்தார்தின் உடலில் உண்டான இந்த மாற்றங்களையும் சித்தார்த்தை கண்டு மாய மரங்கள் அனைத்தும் விலகி நிற்பதையும் கண்ட குள்ள இன வீரர்கள் என்ன நிகழ்கிறது என புரியாமல் நடப்பதை விழிவிரிய பார்த்தனர். அனைவரும் சித்தார்த்தை பார்த்து கொண்டிருக்க ஜிங்கு தூரத்தில் தன் கிராமத்தின் மொத்த வீரர்களும் வவ்வாலில் பறந்து வருவதை கண்டான். உடனே தன்னுடன் இருந்த வீரர்களிடம் "வீரர்களே இவர்கள் யாரும் இங்கிருந்து தப்பி செல்ல கூடாது. அனைவரும் ஒன்றாக தாக்குங்கள்.." என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தான். சித்தரத்தை கண்டு மிரண்டு போய் நின்ற வீரர்கள் அனைவரும் ஜிங்கு தாக்க ஆரம்பித்தவுடன் வேறு வழியின்றி அவர்களும் தாக்க ஆரம்பித்தனர்.

குள்ள வீரர்கள் குழலிலிருந்து வெளியேறிய மயக்க ஊசிகள் அனைத்தும் மொத்தமாக சிவியோடு சேர்த்து நால்வரையும் நோக்கி வர ஒரு ஊசி முக்தாவின் விழியிலிலுள்ள கருவிழியை நோக்கி வந்தது. சித்தார்த் தங்களை நோக்கி மயக்க ஊசிகள் வருவதை கண்டவன் என்ன செய்ய என்று தெரியாமல் கண்ணை மூடி மயக்க ஊசிகளுக்கு நேராக தன் கையை நீட்டி தன் கண்ணை மறைக்க, மயக்க ஊசிகள் அனைத்தும் இவர்களை தாக்காமல் அந்தரத்தில் மிதந்தது.

மயக்க ஊசிகள் தங்களை தாக்கவில்லை என்றவுடன் கண்ணை திறந்து பார்த்தவன் மயக்க ஊசிகள் அந்தரத்தில் மிதப்பதை கண்டவுடன், அந்தரத்தில் மிதக்கும் மயக்க ஊசிகள் அனைத்தையும் தன் கைகள் தான் கட்டுப்படுத்துகின்றது என அவனால் உணரமுடிந்தது. தன்னுள் புதிதாய் உருவான சக்தியால் உதட்டில் உதித்த புன்னகையுடன் தன்னவளை காண ஜிங்கு முதலில் ஊதிய மயக்க ஊசி சரியா முக்தாவின் இமைகளின் மேல் ஒரு நூல் இடைவெளியில் மிதந்து கொண்டிருந்தது. தன் விழியிலிருந்து ஒரு நூல் இடைவெளியில் மிதக்கும் மயக்க ஊசியை கண்ட முக்தாவின் முகத்தில் பயத்தில் வியர்வை பூத்திருக்க, சித்தார்த்தின் கோபம் அதிகமாகி அவன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பானது முன்பை விட கொழுந்துவிட்டு ஏரிய தொடங்கியது.

சித்தார்த் கோபத்தோடு தன் கையை பறந்து கொண்டிருப்பவர்களை நோக்கி அசைக்க, மயக்க ஊசியானது மின்னல் வேகத்தில் சென்று வானில் பறந்து கொண்டிருந்த குள்ள வீரர்கள் ஒரு சிலரையும் அவர்களின் வவ்வால்களையும் தாக்கியது. மயக்க ஊசி தாக்கிய குள்ள வீரர்களும் வவ்வால்களும் மயங்கி சரிந்து உயரத்திலிருந்து விழ ஜிங்குவும் மிஞ்சி இருந்த வீரர்களும் கீழே விழும் தங்கள் வீரர்களை காப்பாற்ற போராடி கொண்டிருந்தனர். தங்களை சுற்றி இருந்த ஆபத்துகள் அனைத்தும் நீங்கியவுடன் சித்தார்த் முக்தாவை சிவியின் மீது ஏற கூறி சித்தார்த்தும் அவளை தொடர்ந்து சிவியின் மீது ஏறி அமர்ந்தான். சித்தார்த்தின் கரம் சிவியின் மீது பட்டவுடன் சிவியின் உடலிலிருந்த சிறு காயங்கள் கூட குணமாக சிவி புத்துணர்ச்சியடைந்து கர்ஜனையுடன் பிளிறியது.

சித்தார்த்தும் முக்தாவும் சிவியின் மீது ஏறியவுடன் லியாடோ சிவியை செலுத்த ஆரம்பித்தான். சித்தார்த் சிவியின் மீது அமர்ந்திருப்பதால் மரங்கள் அனைத்தும் சிவியின் முன் பாதையை மறைந்து கொண்டு நிற்க்கமால் ஒதுங்கி நிற்க, சித்தார்த்தின் கரம் பட்டதால் சிவியும் புத்துணர்ச்சியோடு வேகமாக பாய்ந்து ஓடியது. சிவி ஓட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே குள்ள மனிதர்களின் எல்லையை கடந்து அவர்களின் காட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான இடத்திற்கு வந்த பிறகே மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
 
Top