தன்னை மறந்து சித்தார்த்தின் தோளில் சாய்ந்து நிலவினை ரசித்த முக்தாவை எங்கிருந்தோ கேட்ட மெல்லிய இசையானது தன்னிலையடைய செய்தது. சித்தார்த்திடம் இருந்து வேகமாக விலகியவள் "சித்தார்த் தாங்கள் தங்களது குடிலுக்கு சென்று ஓய்வெடுங்கள். நாம் காலையில் வெகு விரைவில் இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும்"..
சித்தார்த்தின் மனதோ முக்தாவின் அருகாமைக்கு ஏங்க "முக்தா ஏன் இப்பவே போகணும் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கலாமே"..
முக்தா "நாளை அதிகாலையே நமது பயணத்தை தொடர வேண்டும். எனவே வேகமாக சென்று உறங்குங்கள்".. என்று சித்தார்த்தை அவனது குடிலுக்கு அனுப்பிவைத்தவள் இசை வந்த திசை நோக்கி சென்றாள். தன் பாதங்களை மெதுவாக பதித்து சத்தம் வராமல் நடந்தவள் முக்கோண வடிவில் எட்டு ஓட்டைகள் கொண்ட உள்ளங்கை அளவிலான சிறிய இசைக்கருவி ஒன்று கீழே கிடப்பதை கண்டாள். பின் அந்த இசைக்கருவியை கையில் எடுத்தவள் தன் பார்வையை சுழல விட தன்னை சுற்றி யாருமில்லாததால் இசை கருவியை தன் இடுப்பில் சுற்றியிருந்த துணிக்குள் பதுக்கிவிட்டு தன் குடிலுக்குள் சென்று உறங்க ஆரம்பித்தாள்.
அதிகாலை ஆதவன் உதித்தவுடன் அனைவரும் சுவான் ராஜ்ஜியத்திற்கு செல்ல தயாராகி மைஜித்தின் குடிலை நோக்கி சென்றனர். இவர்களுக்காக காத்திருந்த மைஜித் முக்தவிடம் "இளவரசி உங்கள் பயணத்திற்கு தேவையான அனைத்தும் தயாராக உள்ளது. சுவான் இனத்தவருடன் நீங்கள் பேசும் போது எங்கள் கலப்பியன் இனத்தின் சார்பாக பேச என் நம்பிக்கையான வீரன் ஒருவனையும் நான் உங்களோடு அனுப்புகிறேன்"..
முக்தா "மைஜித் உங்கள் இனத்திற்கும் சுவான் இன மக்களுக்கும் இடையே பெரிய அளவில் நல்லுறவு கிடையாது. எனவே உங்கள் இனத்தை சேர்ந்த வீரனை சுவான் இன மக்கள் தங்களின் ராஜ்ஜியத்திற்குள் அனுமதிக்கவும் வாய்ப்பில்லை. எனது நண்பர்களையே நான் எனது பாதுகாவலர்கள் என்ற முறையில் தான் சுவான் ராஜ்ஜியத்திற்குள் அழைத்து செல்ல முடியும். இதில் எவ்வாறு தங்கள் வீரனை என்னால் அங்கு அழைத்து செல்ல முடியும்".
மைஜித் "இளவரசி தாங்கள் நினைத்தால் என் வீரனையும் சுவான் ராஜ்ஜியத்திற்குள் அழைத்து செல்ல இயலும்".. என்று கூறியவனின் விழிகளிலில் நேற்று இருந்த நட்புணர்வு மறைந்து வன்மம் மட்டுமே குடிகொண்டிருந்தது. மைஜித்தின் விழிகளை கண்ட முக்தா இதை நன்றாக உணர்ந்து கொண்டாள். முக்தாவிற்கு மைஜித்தை பற்றி நன்கு தெரியும். மைஜித் இயற்பிலேயே பதவி வெறி கொண்டவன் மதிலை தேசத்தை எப்படியாவது கைப்பற்றி மதிலை மக்களை தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று சரியான சந்தர்பத்திற்க்காக காத்திருப்பவன்.
முக்தா மைஜித் தனக்கு தரும் மரியாதையும் நேற்று அவனது மக்களுக்காக அவன் பேசிய பேச்சையும் கேட்டவள். தன் மக்களின் துயர் கண்டு மைஜித் திருந்தி இருப்பான் என்று எண்ணினாள். ஆனால் இரவு தனக்கு கிடைத்த அந்த இசை கருவியின் மூலம் முக்தா தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.
முக்தா "மைஜித் நீங்களே அறிவீர்கள் அரசோடு வரும் மெய்க்காப்பாளர்களை தவிர மதிலை தேசத்து மக்களுக்கே சுவான் ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை. இந்த நிலையில் உங்கள் இனத்தில் அரச வம்சத்தை சாராத ஒரு வீரனை என்னால் எப்படி சுவான் ராஜ்ஜியத்திற்குள் அழைத்து செல்ல முடியும். வேண்டுமென்றால் என்னோடு உங்கள் சகோதரன் லியாடோவை அழைத்து செல்கிறேன்".
முக்தா தன் தம்பியை அழைத்து செல்வதாக கூறியவுடன் அதிர்ச்சி அடைந்த மைஜித் தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டு "லியாடோவையா அவன் இப்போது இங்கு இல்லை லியாடோ என் வீரர்களோடு சேர்த்து என் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளான்".. என்று கூறிக்கொண்டிருக்கும் போதே "என்ன சகோதரா என்னை தான் தேடிக்கொண்டிருக்கிறாய் போல".. என்று கேட்டுக் கொண்டே பக்கத்திலுள்ள குடிலிலிருந்து லியாடோ வெளியே வந்தான்.
லியாடோ இங்கு எப்படி வந்தான் என்று மைஜித் அதிர்ச்சியில் உறைந்திருக்க மைஜித்தின் முன்னால் லியாடோ வந்து நின்றான். லியாடோ உருவம் மற்ற கலப்பியன் மக்களை போன்று இருந்தாலும் லியாடோவின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்தது. மற்ற அனைத்து ஜந்துக்களும் போர் விரனின் கவசம் போன்று உடலோடு ஒட்டிய கருப்பு நிற மேலாடையும், கால்ச்சட்டையும் அணிந்திருக்க லியாடோ மற்றவர்களை போன்று உடையணிந்திருந்தாலும் இடுப்பில் ஐந்தாறு துணிகளை சுற்றி கொண்டு இரு கைகளிலும் பல இரும்பு வளையங்கள் மாட்டிக்கொண்டு பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தான். இவர்களின் அருகில் வந்து நின்றவனின் இடுப்பின் ஒரு புறத்தின் வாள் மாட்டியிருக்க மறு புறத்தில் தன் சாட்டையை மாட்டியிருந்தான்.
மைஜித் முன்னால் வந்து நின்ற லியாடோ "என்ன சகோதர என்னை பற்றி தான் ஏதோ பேசிக்கொண்டிருந்தாய் ஆனால் என்னை பார்த்தவுடன் சிலையென நிற்கிறாய்".. என்று கேட்டுவிட்டு முக்தாவின் புறம் திரும்பி "ஆஹா நமது இடத்திற்கு விருந்தாளிகள் வந்துள்ளனரா அட நமது மதிலை தேசத்து இளவரசி" என்று கூறி முக்தாவின் அருகில் சென்று "மதிலையின் இளவரசிக்கு கலப்பியன் ராஜ்ஜியத்தின் இளைய இளவரசன் லியாடோவின் அன்பு கலந்த வணக்கங்கள்".. என கூற முக்தா மைஜித்தின் முகத்தில் இருக்கும் கோபத்தை பார்த்து மென்மையாக சிரித்தாள்.
மைஜித் கோபத்தோடு "உன்னை நான் நமது மக்களுக்கு பாதுகாப்பாக தானே இருக்க கூறினேன் பிறகு நீ ஏன் இங்கு வந்தாய்".. என்று கத்தினான். லியாடோ "சகோதரா நீ இங்கு தனியாக கஷ்டப்பட்டு கொண்டிருப்பாய் நான் உனக்கு உதவலாம் என்று வந்தால் நீ என் மீதுதே கோபம் கொள்கிறாயே".. என்று கூற மைஜித் பதில் கூறும் முன்பே இடையில் புகுந்த முக்தா "மைஜித் எப்படியும் லியாடோவை தான் நான் சுவான் ராஜ்ஜியத்திற்கு அழைத்து செல்ல முடியும். லியாடோவும் வந்துவிட்டான் உங்கள் ராஜ்ஜியத்தின் சார்பாக நான் லியாடோவையே அழைத்து செல்கிறேன்"..
லியாடோவின் வருகையால் தன் திட்டம் பாழாகி விட்டதே என்று கோபம் கொண்டு மைஜித்தின் இயல்பு குணம் வெளியே வர "முக்தா இங்கு நான் தான் அரசன் நீ இல்லை. நான் சொல்பவனைதான் நீ அழைத்து செல்ல வேண்டும் என்று கோபத்தில் கர்ஜித்தான்". அப்போது ஓடிவந்த கலப்பியன் காவலன் ஒருவன் "அரசே மதிலை தேசத்து வீரர்கள் நம்மை தாக்க படையுடன் வருகிறார்கள்".. என்று கூறினான்.
காவலாளி கூறியதை கேட்டு கோபம் தலைக்கேறிய மைஜித் "துரோகி நேற்று என்னுடன் நட்பு பாராட்டிவிட்டு இன்று என்னையே தாக்க வீரர்களை அழைத்திருக்கிறாயா உன்னை உயிரோடு விடமாட்டான்" என்று கூறி இடுப்பிலிருந்த வாளை எடுத்து முக்தாவை வெட்ட ஓங்கினான்.
லியாடோ தன் வாளை எடுத்து மைஜித்தின் வாளின் குறுக்கே விட்டு சாதாரணமாக தடுத்தவன் "சகோதரா ஏன் தேவையின்றி கோபம் கொள்கிறாய் அவர்கள் இதற்க்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை முதலில் கேள். இப்போது நம்மிடமும் குறைந்த எண்ணிக்கையிலேயே வீரர்கள் உள்ளனர். மதிலை வீரர்கள் எத்தனை பேர் வந்துள்ளனர் என்றும் தெரியவில்லை இந்த நேரத்தில் அவர்கள் நம்மை தாக்கினால் நமக்கு பணயக் கைதியாக இவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்"..
லியாடோவை பற்றி மைஜித் நன்கு அறிவான். லியாடோ பேசுவது அனைத்துமே தனக்கு எதிரே இருப்பவருக்கு சாதகமாகவே இருக்கும் ஆனால் இறுதியில் லாபம் அடைவது என்னவோ லியாடோ மட்டுமே இதை முழுமையாக அறிந்திருந்த மைஜித் "லியாடோ உனது வாயை திறக்காதே நீ என்ன செய்தாலும் அது உனக்கே சாதகமாக இருக்கும்" என்று கூறியவுடன் லியாடோ "சரி உனது விருப்பம் உன்முடிவை நீயே தேடி கொள்ள போகிறாய். தமையன் என்ற முறையில் எச்சரித்தேன் இனி நீயே பார்த்துக்கொள்"..என்று கூறிவிட்டு தன் கத்தியை தன் உறையில் வைத்து விட்டு கைகட்டி வேடிக்கை பார்த்தான்.
லியாடோ கூறியதை கேட்டு மைஜித்தின் மனம் குழம்பியது. லியாடோ கூறியதை போன்று தன்னிடமும் வீரர்கள் குறைவாக உள்ள நிலையில் மதிலை வீரர்களை எதிர்த்து சண்டையிட முடியாது என்பதால் அமைதியாக தன் வாளை உறையில் சொருகியவன் "லியாடோ நீ கூறியதால் அமைதியாகிறேன் இதில் ஏதாவது உனக்கு சாதகமான செயலை நீ செய்தால் நான் உன்னை தம்பி என்றும் பார்க்காமல் கொடூரமான முறையில் தண்டிப்பேன்".. என எச்சரித்தான்.
பின் இவர்களின் புறம் திரும்பிய மைஜித் "உங்கள் வீரர்கள் எப்படி இங்கு வந்தார்கள்".. என கேட்க குழலி முன் வந்து "நேற்று நான் உங்கள் வீரர்களை கண்டவுடன் எங்களை தாக்க தான் வந்துள்ளனர் என்று எண்ணி என்னுடைய வீரர்களுக்கு என் பறவையின் மூலமாக தகவல் அனுப்பினேன். அதை பார்த்தே எங்கள் வீரர்கள் இங்கு வந்துள்ளனர். நான் சென்று எங்கள் வீரர்களுடன் பேசிக்கொள்கிறேன் அவர்கள் உங்களை தாக்க மாட்டார்கள்"..
குழலி கூறியதை கேட்ட மைஜித் "உங்கள் இளவரசி இங்கு இருக்கட்டும் நீ மட்டும் சென்று உன் வீரர்களிடம் சென்று பேசி அந்த படைகளுக்கு தலைமை தாங்கி வந்திருப்பவனை மட்டும் இங்கு அழைத்துவா".. என்று கூறி அனுப்பிவைத்தான். குழலி முக்தாவை பார்க்க முக்தாவும் தன் விழியால் சம்மதம் கொடுக்க குழலி தன் வீரர்களை நோக்கி சென்றாள். தன் வீரர்கள் இருக்குமிடம் சென்றவள் ஆயிரக்கணக்கான வீரர்கள் வந்து கொண்டிருக்க அவர்களின் அருகில் சென்றாள்.
முக்தாவை கண்ட வீரர்கள் முன்னேறாமல் அதே இடத்தில் நின்றனர். தன் வீரர்கள் நின்றவுடன் பருவியில் பறந்து வந்து கொண்டிருந்த தளபதி பருவியை குழலியின் அருகே தரை இறக்கினார். பருவியில் இருந்து குதித்த தளபதி ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் இருக்கும் தன் உடலை விரைப்புடன் நிமிர்த்திக் கொண்டு எப்போதும் கோபத்தில் சிவந்திருக்கும் தன் விழிகளால் குழலியை பார்த்து முறைத்தார். ஐம்பதுகளில் வயதிருக்கும் என்று சொன்னால் நம்ப முடியாத அளவு காட்சியளிக்கும் தன் கட்டுமஸ்தான தேகத்துடன் தன்னருகே நடந்து வரும் தளபதியை கண்ட குழலி பயத்துடன் அமைதியாய் நின்றாள்.
தளபதி இறங்கியவுடன் பருவி விரைந்து வந்து குழலியை தன் சிறகால் வளைத்து தன் தன் மயில் வண்ண வளையம் கொண்ட கழுத்தை குழலியின் இடுப்பில் வைத்து தேய்த்து கொண்டிருந்தது. குழலியும் பருவியின் இரு விழிகளுக்கும் நடுவே தன் இதழ்களை ஒற்றி எடுத்தவள். பருவியிடமிருந்து விலகி தளபதியின் அருகில் சென்றாள்.
குழலி "மதிலையின் தளபதிக்கு இளவரசியின் மெய் காப்பாளரின் வணக்கங்கள்".. என்று கூறி தலைகுனிந்து வணங்கினாள். தளபதி "ம்ம் நீ அனுப்பிய தகவல் உண்மையா அந்த அருவருப்பான ஜந்துகள் இளவரசியை தாக்கினார்களா".. குழலி "அவர்கள் இளவரசியை தாக்கவில்லை தளபதி. என்னை தாக்கி பணயம் வைத்து இளவரசியை கைது செய்தனர்"..
குழலி கூறியதை கேட்டு தளபதி இளம் பருதியின் சிவந்த விழிகள் மேலும் சிவக்க "என்ன உன்னை பணயம் வைத்து இளவரசியை சிறையிட்டனரா இதை கூற உனக்கு அவமானமாக இல்லை. உன்னை சிறையிட்ட நொடியே நீ இறந்திருக்க வேண்டாமா. நீ அகப்பட்டு சிக்கி கொண்டது மட்டுமின்றி இளவரசியையும் சிக்க வைத்து விட்டு இங்கு வந்து இளவரசியின் மெய் காப்பாளர் என்று வேறு உன் பெருமையை பாடுகிறாய்" என்று உறுமினார்.
வீரர்கள் அனைவர் முன்னிலையிலும் தன்னை திட்டயவுடன் குழலி கூனி குறுகி நின்றாள். குழலியின் அமைதி தளபதியை மேலும் கோபபடுத்த "பதில் கூறு இளவரசி இப்போது எங்கே".. தளபதியின் கர்ஜனையில் மிரண்ட குழலி கடினப்பட்டு வரவைத்த குரலில் "தளபதி எங்களை கைது செய்து அழைத்து சென்றது உண்மைதான் ஆனால் பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் கலப்பியன்களும் அரக்கர்களை எதிர்க்க நம்மோடு இணைவதாக இளவரசியிடம் ஒப்புகொண்டனர்".
குழலி கூறியதை கேட்டு ஏளனமாக சிரித்த தளபதி "என்ன அந்த அருவருப்பான ஜந்துக்களுடன் இணைந்து மதிலை வீரர்கள் போர்புரிய வேண்டுமா" என்று கேட்க குழலி உணர்ச்சியற்ற முகத்தோடு "தளபதி இது நமது இளவரசியின் முடிவு. இதை கூறி தங்களை மட்டும் என்னோடு அவர்களின் குடிலுக்கு அழைத்து வருமாறு கூறினார்கள்".
தளபதி தன் வீரர்களின் புறம் திரும்பி "வீரர்களே இரண்டு அடுக்காக காட்டை சுற்றி வட்டமிடுங்கள் இன்னும் இரண்டு நாழிகைக்குள் நான் திரும்பா விடில் ஆதவனையே அஞ்சி ஓட செய்யும் மதிலை தேசத்தின் அம்புகள் அந்த ஜந்துக்களின் மார்பில் அணிகலனென சூடப்பட்டிருக்க வேண்டும்".. என்று கூறிவிட்டு முன்னேறி நடக்க ஆரம்பித்தான். குழலியும் அமைதியாக தளபதியை பின் தொடர்ந்து போகும் பாதையை மட்டும் கூறிக்கொண்டு பின்னால் நடந்து வந்தாள்.
அந்த ஜந்துக்களின் இடத்திற்கு அருகே வந்த தளபதி படுத்து கிடந்த சிவியை கண்டு "எதற்கும் உதவாத பிண்டம்" என்று கூறி முறைக்க ஒரே நேரத்தில் மூன்று யானையை வீழ்த்தும் பலம் கொண்ட சிவி தளபதியை கண்டு பயத்தில் மிரண்டது. குழலி அமைதியாக நிற்க்க கலப்பியன் வீரர்கள் தளபதி மரத்தில் ஏறுவதற்கு பலகையை நான்கு புறத்திலும் கயிற்றை கட்டி இறக்கினர். அதில் தளபதி ஏறி நின்றவுடன் கலப்பியன் வீரர்கள் கயிற்றை இழுத்து தளபதியை மேலே தூக்கினர்.
தளபதி மரத்தின் மேலே சென்றவுடன் மைஜித் உட்பட சுற்றி இருந்த அனைத்து ஜந்துக்களையும் அலட்சியமான ஒரு பார்வை பார்த்தவன். இளவரசியின் முன்னால் சென்று "வணங்குகிறேன் இளவரசி" என்று மண்டியிட்டு வணங்கினான். முக்தா "எழுந்தரியுங்கள் தளபதியே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா"..
தளபதி "மக்கள் அனைவரும் நமது இடத்தில் பாதுகாப்பாக உள்ளார்கள் இளவரசி. நான் இருக்கும் வரை தாங்கள் மக்களை பற்றி கவலை கொள்ள தேவையில்லை"..
குழலி மரத்தை பிடித்து மேல ஏறி வந்தவுடன் குழலியை கண்ட தளபதி "இளவரசி நான் கேள்விப்பட்ட தகவல் உண்மையா, இந்த அருவருப்பான ஜந்துக்களும் நம்மோடு இணைந்து அரக்கர்களை எதிர்த்து போராடுவதற்கு நீங்கள் சம்மதம் கூறினீர்களா".. என்று கேட்டார். தங்களை அருவருப்பான ஜந்து என்று கூறியவுடன் கொதித்தெழுந்த மைஜித் "யாரை பார்த்து அருவருப்பான ஜந்து என்று கூறினாய்" என்று கோபத்துடன் தன் உறையிலிருந்து வாளை வெளியே எடுத்தான்.
தளபதியும் தன் வாளை வெளியே எடுத்து மைஜித்தை தாக்க தொடங்கினார். இருவரும் சண்டையிட தொடங்கவும் முக்தா "நிறுத்துங்கள்" என்று கத்த அதை காதில் வாங்காமல் இருவருக்கும் சண்டையிட்டனர். சினம் கொண்ட முக்தா தன் வாளை எடுத்து சுழற்ற ஆரம்பித்த மறு நொடியே மைஜித் மற்றும் தளபதி ஆகிய இருவரின் கையிலிருந்த வாளும் அவர்களின் கையை விட்டு நழுவி எதிர் எதிர் திசைகளில் பறந்து சென்று மரங்களில் குத்தி நின்றது.
மைஜித் மற்றும் தளபதி முக்தாவை பார்க்க முக்தாவின் விழியில் கண்ட கோபத்தில் இருவரும் அமைதியாக நின்றனர். முக்தா "உங்கள் இருவருக்கும் மக்களின் நலனை விட உங்களின் தனிப்பட்ட கோபமே முக்கியமானதாக தெரிகின்றதா. அங்கு அரக்க படைகள் நமது கோட்டைகளை தகர்த்து நம் மக்களை கொன்று குவித்து நம் மக்களின் பிணங்களை சிதைமூட்டி அதில் குளிர்காய்ந்தும் கொண்டிருக்கின்றனர். ஆனால் நீங்கள் இங்கு காரணமே இன்றி சண்டையிட்டு கொண்டிருக்கிறீர்கள்".. என்று கோபத்துடன் கத்த இருவரும் அமைதியாக நின்றனர்.
தளபதியின் மீது தன் பார்வையை பதித்த முக்தா "தளபதியாரே நிலவு மலரை உங்களிடம் கொடுக்கின்றேன் நீங்கள் அதை எடுத்து கொண்டு நம் மறைவிடத்திற்கு சென்று நமது வீரர்களின் காயத்தை குணபடுத்துங்கள். நான் சுவான் இன மக்களிடம் சென்று அவர்களின் உதவியை பெற்று கொண்டு வருகிறேன். நீங்கள் நமது படைகளோடு தயாராக இருங்கள் எந்த நொடி வேண்டுமானாலும் நாம் மிக பெரிய போரை சந்திக்க வேண்டிய நிலை வரும்" என்று கூறியவள் மைஜித்தின் புறம் திரும்பி "மைஜித் நாங்கள் இப்போதே கிளம்புகிறோம். உங்கள் மக்களின் சார்பாக லியாடோவை அழைத்து செல்கிறேன். நீங்களும் தயாராக இருங்கள் சுவான் இன மக்களிடம் பேசிவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன் அது வரை நீங்களும் உங்கள் மக்களுடன் சென்று பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறினாள்.
முக்தாவின் முகத்திலிருந்த கோவத்தையும் அவளின் வாளிலிருந்த வேகத்தையும் கண்டவர்கள். அவள் கூறிய அனைத்திற்கும் தன்னிசையாக சம்மதம் தெரிவித்தனர். சித்தார்த்தை கண்ட தளபதி அவனின் உடையை கண்டு குழம்பினார். குழலியிடன் "கோழையே யாரிவன் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக உள்ளான்" என்று கேட்க குழலி நடந்த அனைத்தையும் கூறினாள்.
குழலி கூறியதை கேட்டு சித்தார்த்தை ஒரு ஆழமான பார்வை பார்த்த தளபதி "இளவரசி இவனை ஏன் நீங்கள் எல்லா இடங்களுக்கும் இழுத்து கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். இந்த தேவையற்ற சுமைகளை பேசாமல் உங்கள் யாளிக்கு இரையாகி விடலாமே" என்று கேட்டார். சித்தார்த் குழலியை கோழை என்று தளபதி அழைத்த நொடியிலிருந்தே தளபதியை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்.
முக்தாவும் சற்று எரிச்சலுடன் "தளபதி சற்று கவனமாக பேசுங்கள் இவர் என் நண்பர் என் உயிரை இரு முறை காப்பாற்றியுள்ளார். இவரிடம் இவர் நண்பர்களை கண்டுபிடித்து எப்படியாவது இவர்களின் உலகத்திற்கு அனுப்புவதாக வாக்கு கொடுத்துள்ளேன்"..
தளபதி "தகுதியற்ற மெய்க்காப்பாளரை உடன் வைத்திருந்தால் வேறு உலகில் உள்ளவர்கள் தான் தங்களை காப்பாற்ற வேண்டும்".. தளபதி கூறியதை கேட்ட முக்தா "தளபதியாரே தகுதி இருப்பதால் தானே தாங்கள் குழலியிடம் என்னை காப்பாற்றுமாறு பருவியை கொடுத்து அனுப்பினீர்கள்" பிறகு ஏன் அவளை தகுதியற்றவள் என்று கூறுகிறீர்கள்.
தளபதி "பருவியை நான் இவளிடம் கொடுத்து அனுப்பும் போதே பருவியை உங்களிடம் கொடுத்துவிட்டு உங்களை நிலவு மலரோடு நம் மறைவிடத்திற்கு அனுப்புமாறு கூறினேன். பின் இவளை உங்கள் யாளியுடன் சேர்த்து அனைத்து அரக்கர்களும் மடியும் வரை இல்லை இவள் மடியும் வரை சண்டையிடு என்றே கூறினேன். ஆனால் இவளோ மரணத்தை கண்டு அஞ்சி உயிர் வாழும் ஆசையில் பருவியை உங்களிடம் ஒப்படைக்காமல். தங்களின் உயிருக்கு அரக்கர்களால் ஆபத்து ஏற்படும் போதும் உங்களை காப்பாற்றாமல் பயத்தில் ஓடி ஒளிந்துள்ளாள். தன் நிழலை கண்டே அஞ்சும் இவளை போன்றவர்கள் எல்லாம் மெய்காப்பாளர்களா".. என்று கேட்க குழலி தரையை பார்த்தவாறு தலை குனிந்து நிற்க்க அவளின் விழிகளில் நீர் கோர்த்தது.
குழலியின் விழிகளில் கண்ணீரை கண்ட சித்தார்த் கோபத்தோடு தளபதியை நோக்கி முன்னேற லியாடோ அவனது கரத்தினை பிடித்து நிறுத்தினான். தளபதி கூறியதை கேட்டு முக்தா கோபத்துடன் "தளபதி எனக்கு யாரை மெய்காப்பாளராக நிர்ணயக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். குழலியின் வீரத்தையும் விசுவாசத்தை பற்றியும் எனக்கு தெரியும். பல முறை தன்னுயிரை பற்றி கவலை கொள்ளாமல் என் உயிரை காத்திருக்கிறாள்".. என்று கூறிவிட்டு சிவியிடம் தான் மறைத்து வைத்திருந்த நிலவு மலரை எடுத்து தளபதியிடம் கொடுத்து "குழலி பருவியை என்னிடம் கொடுத்து நம் மறைவிடத்திற்கு நிலவு மலரோடு செல்லுங்கள் என்று தான் கூறினாள். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டு சுவான் தீவிற்க்கு செல்ல தேவையான குவீன் இன பறவைகளை பருவியின் உதவியுடன் பிடிக்கலாம் என யோசித்தேன். பிறகு குழலியிடம் நிலவு மலரை கொடுத்து நமது மறைவிடத்திற்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். குழலி மீது எந்த தவறுமில்லை".. என்று கூறினாள்.
பின் முக்தா நிலவு மலரை தளபதியின் கரத்தில் கொடுத்து "இந்த நிலவு மலரை எடுத்து கொண்டு நீங்கள் புரவியில் நம் மறைவிடம் சென்று காயம் பட்ட நமது வீரர்களை குணமாக்குங்கள். அதோடு பருவியை குழலியிடம் கொடுத்து அனுப்புங்கள் என்று கூறி தளபதியையும் குழலியையும் அனுப்பி வைத்தாள்.
தளபதியை அனுப்பி வைத்தவள் மைஜித்திடம் திரும்பி "மைஜித் நாங்கள் கிளம்புகிறோம் நீங்களும் உங்கள் வீரர்களோடு உங்கள் மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உங்களின் மக்களுக்கு பாதுகாப்பாக இருங்கள்".. என்று கூறினாள். கோபத்தில் மைஜித் அமைதியாக இருக்க முக்தா தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு மரத்தில் இருந்த கூடாரத்தில் இருந்து தரையில் இறங்கினாள். பின் முக்தா சிவியின் மீது ஏறி அமர்ந்து கொள்ள அவளை தொடர்ந்து சித்தார்த்தும் சிவியின் மீது ஏறினான்.
லியாடோவோ மைஜித் அருகில் சென்று "விரைவில் மீண்டும் சந்தீப்போம் சகோதரா".. என்று சிரித்தவாறு கூற மைஜித் கோபத்தோடு "நான் நினைத்தது போன்றே நடந்த அனைத்தையும் உனக்கு சாதகமாக்கி கொண்டாய்".. லியாடோ புன்னகையுடன் "சகோதரா உண்மையாக நான் சண்டையை நடக்க விடாமல் தடுக்கவே நினைத்தேன். ஆனால் வழக்கம் போல் அனைத்தும் எனக்கே சாதகமாக அமைந்து விட்டது. இதில் என் தவறு ஒன்றுமில்லை. நான் நல்ல செய்தியுடன் விரைவில் நம்மிடத்திற்கு திரும்புகிறேன்" என்று கூறி சிவியில் ஏறி அமர்ந்தான்.
இருவரும் சிவியில் ஏறி அமர்ந்தவுடன் முக்தா சிவியை சுவான் ராஜ்ஜியத்தை நோக்கி செலுத்தினாள். மைஜித் மனதிற்குள் "மன்னித்து விடு சகோதரா இனிமேல் நீ திரும்ப வாய்ப்பே இல்லை".. என எண்ணி சிரித்தான்.
உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள உள்ள இடத்தில் பதிவிடுங்கள்..