கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல் பந்தம்

Rithi

Moderator
Staff member
நாளை திருமணமாம்..

எப்படி எப்படி! 'எனக்கு நீ தேவை இல்லை போ டி' என்றவனின் சொற்கள் ஞாபகம் வர முயன்று திருமண சடங்குகளில் ஈடுபட்டாள் அவள் தருண்யா.

ஆனாலும் மனம் முழுதும் பயம்.. திருமண வாழ்வில் சாதாரண பெண்ணாக தன்னால் தன்னை ஈடுபடுத்த முடியுமா என்ற மனதின் கேள்வியினால்!.

"ரித்தி எனக்கு ரொம்ப மூட்அவுட்டா இருக்கு. எங்காவது கூட்டிட்டு போ டா" என்றவளை,

"நோ வே தருணி! இன்னைக்கு அம்மாவும் அப்பாவும் கோவில்ல இருந்து வர்ராங்க. சோ சீக்கிரம் போய் அவங்களை பிக்கப் பண்ணனும்" என்றதும் முகம் வாடியது அவளுக்கு.

"மூஞ்சை அப்படி வச்சுக்காத டி. நாளைக்கு கண்டிப்பா போலாம்" என்றதும் தான் பழைய மலர்ச்சி வந்தது.

அதை நினைத்து இப்போது ஆவதென்ன?

அவனை கொஞ்சம் கொஞ்சமாகவே காதலித்து இருக்கலாம். அளவுக்கு அதிகமான எதுவும் விஷம் தானே?.

'நீ அவசரப்பட்டதும் தவறு தானே?' உள்ளத்தின் கேள்வியை ஒதுக்குகிறாள் என்றால் பதிலில்லை என்று தானே அர்த்தம்.

அதே நேரம்!

"விடிஞ்சா கல்யாணம். எதாவது பண்ணுடா ரித்தி.." ரித்தேஷ் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

எதற்காகவாம் இந்த அவசரம்? யாரை காப்பாற்ற இந்த அவசரம்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.

'அவளை விட்டு வந்துவிட்டேன் தான். ஆனால் அவளை மறந்துவிட்டேனா? இல்லையே! பின் எப்படி என்னால் இன்னொரு பெண்ணுக்கு?...' நினைத்து கூட பார்க்க முடியவில்லையே!

அனைத்து சொத்துகளுக்கும் ஒரே வாரிசு நான். என் திருமண்ம் பற்றி அம்மா அப்பா பாட்டி எவ்வளவு கனவு இருந்தது அவர்களுக்கு! ஏன் இப்படி ஒரே நாளில் யார் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க அனைத்தையும் விட்டு கொடுத்தார்கள்?

"எப்பவுமே அம்மா அப்பா தானா?. நான்லாம் உனக்கு முக்கியமே இல்லையா?" தருணி அன்று ஒருநாள் கேட்க,

"நீ ஏன் இப்படி கேட்குறனு தெரில. ஆனால் அவங்க எப்பவும் ஏனக்கு முக்கியம். அவங்களுக்கு அப்புறமா தான் யாரா இருந்தாலும்" என்றிருந்தான் ரித்தேஷ்.

நினைத்து பார்த்தவன், 'ஒரு நிமிடம் கோபத்தை விட்டு அவளிடம் பேசியிருக்கலாமோ?' இப்போது யோசித்து தான் என்ன செய்ய? தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

'ஏன் அப்படி கேட்டாள்? அவள் முக்கியம் என்பதற்காக இத்தனை வருடம் தன்னை பெற்று வளர்த்தவர்களை எதற்காக வதைக்க நினைத்தாள்? நான் எப்படி அதற்கு சம்மதிப்பேன் என நினைத்தாள்?'

விதியின் வசமா?
வாழ்வின் நியதியா?
தெரியவில்லை. இதோ அழைத்துவிட்டார்கள் மாப்பிள்ளையை.

தன் அருகில் இருப்பவனை பார்க்க முடியவில்லை தருண்யாவிற்கு. பயம், பயம், பயம் மட்டுமே! ரித்தி இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவன்...

கண்டிப்பாக இந்த திருமணத்தில் ஒன்றி வாழ முடியும் என தோன்றவில்லை. எழுந்து ஓட அவகாசமும் இல்லை. துணிக்கடை வாசல் பொம்மை போல அவள்.

மனம் முழுதும் தன் தருணியிடம் இருக்க, தன் அருகில் இருக்கும் பெண்ணை பார்க்க முடியவில்லை ரித்திக்கு.

பழைய காலம்.. பிரிவின் காரணம்.. நினைக்கவா! மறக்கவா என மனம் இருவரினுடையதும்..

பிரிந்த இரு குடும்பங்கள் சில வாரங்களுக்கு முன்னே இணைந்திருக்க, அதை புதுபிக்கும் விதமாய் தருணி திருமணம்.

தருணி அம்மா ஒரு பெரியவரிடம் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன் தோழி மற்றும் சொந்தத்தில் நடந்த ஒரு சோக திருமணம் என சிலவற்றை கேட்ட தருணி தான் தன் வாயை விட்டாள் அவனிடம்.. அந்த நாள் மட்டும் இல்லையையென்றால்???

"யாரும் வேண்டாம் ரித்தி. நான் இருக்கிறேன் உனக்கு. நாம், ஆம்! நீயும் நானுமாய் ஒரு வாழ்வு போதும்"

'எப்படி டீ சொல்ல முடிஞ்சது உனக்கு? என் அம்மா அப்பாவை வேணாம்னு சொல்ல எப்படி முடிஞ்சது? எப்படி வாழ வேண்டிய வாழ்வு?.. இப்படி இன்னொருத்தி பக்கத்துல உட்காரவே முடியலையே!! ஆண்டவா!!!.. ரித்தி மனம் ஊமையாய் கதறியது என்றால் தருணி மட்டும்??..

'தெரியாம சொல்லிட்டேன் டா.. உன் கால்ல விழுந்து ஆயிரம் தடவை வேணாலும் சாரி கேட்குறேன். வந்துடு டா.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. யாரோ எதுவோ சொன்னாங்கனு உன்னை அப்படி கேட்ருக்க கூடாது தான்.. அதுக்காக என்னை அப்படியே விட்டுட்டியே? என்னை எவ்வளவு வேணா அடிச்சிக்கோ டா.. வந்திடு'

தருணி வேண்டுதல் வைத்த நேரம் அவள் காதில் கேட்டது,

கெட்டிமேளம்... கெட்டிமேளம்...

இறுக கண்களை மூடிக் கொண்டவளின் கண்களில் இருந்து வந்த இருதுளி கண்ணீர் தாலி கட்டும் அவன் கைகளில் விழுந்து தெறித்தது.

இரண்டாவது முடிச்சு போடும்வரை தன்நினைவில் மூழ்கியிருந்தவன், கைகளில் தண்ணீர் விழுவது போல உணர்ந்து திரும்பினான்...

கனவு அனைத்தும் கலைந்து போனது.. விருப்பங்கள் விலகி போனது.. எல்லாமே முடிந்து போனதாக தோன்ற கண்களை திறந்தாள் தருணி.

அருகில் தாலி கட்டும் உருவம் தன்னையே பார்த்து கொண்டிருப்பது போல தோன்ற வெற்று கண்களோடு திரும்பினாள்.

அதிர்ச்சியா! உண்மையா? நிஜமா? பல கேள்விகளோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அவனை பார்த்து திரும்பும் நேரம் உதட்டில் தோன்றிய புன்முறுவலோடு கண்களும் சிரித்ததோ கயவன் ரித்திக்கு!!!..

"ரித்தி... வந்துட்டியா? என்கிட்டயே வந்துட்டியா? சாரி டா சாத்தியமா நான் இனி தப்பா பேசமாட்டேன். எனக்கு நீ தான் வேணும். என்னை விட்டு போயிடாத. ப்ளீஸ் ரித்தி"

அவள் தன் திருமணம் தன்னுடைய ரித்தேஷுடன் தான் நடந்து முடிந்துள்ளது என்பதையும் மறந்து, அந்த இடத்திலேயே அவன் தோளில் சாய்ந்து அழ, அவனோ மொத்த சந்தோஷமும் தன் கைகளுக்குள் வந்த திருப்தியில் அவளை அணைத்து உலகை மறந்திருந்தான்.

இருவரின் கண்களிலும் கண்ணீர் வற்றாமல் ஓட, சுற்றியிருந்த அனைவரும் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல பார்த்து நிற்க, காதலர்கள் இவ்வுலகில் இருந்தால் தானே அவர்களின் நிலையறிய!.

கல்பனா தன் மகளை அழைத்து உன் அண்ணனை கூப்பிடு என சொல்ல, சூர்யாவும் சிரித்தவாறே மணமேடையில் தன் அண்ணன் ரித்தேஷ் அருகே குனிந்து "அண்ணா! அண்ணா!" என அவன் கைகளை பிடித்து இழுத்த பின்பே அவன் கொஞ்சமாய் தெளிந்தான். ஆம் கொஞ்சமாய் தான்!

அப்போதும் கண்ணீர் வடிய, தன் கைகளை இறுக்க பற்றியிருக்கும் தன் மனைவியை பார்த்தவன் யார் பார்த்தால் எனக்கு என்ன என்றவாறு அவளையும் முயன்று இந்த உலகம் கொண்டு வந்தான்.

இப்போது எதுவும் கேட்க வேண்டாம் என பெரியவர்கள் அடுத்தடுத்த சடங்குகளில் ஈடுபட, புது தம்பதியரும் இவ்வளவு நேரம் கரைந்து கலைந்து போன தன் உயிர் தன்னிடம் சேர்ந்த நிம்மதியில் எதுவும் பேசாமல் பிடித்த பிணைந்த கைகளையும் விடாமல் சந்தோசமாக அனைத்து சடங்குகளிலும் நின்றனர்.

நேரம் இரவு 9 ஆன பின்பு வந்தவர்கள் மெதுவாய் கலைந்து சென்றனர்.

"தரு! மணமேடைல ஏன் அப்படி பிகேவ் பண்ணின? அந்த தம்பிய முன்னாடியே உனக்கு தெரியுமா?" தருண்யா அம்மா ஜெயா கேட்க,

"எல்லாம் உங்களால் தான்மா! நீங்க மட்டும் அன்னைக்கு எனக்கு தப்பான எக்ஸாம்பிள்ஸ் சொல்லலைனா நான் இன்னைக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்"

என அழுதவள் தன் மனதில் இருந்த காதலையும், முன்பு அம்மா ஒரு கூட்டு குடும்பத்தில் நடந்த பிரச்சனையை கூறியதை தன் கண்ணோட்டத்தில் அவள் பார்த்ததையும், தன் தோழி திருமணத்தில் கூட்டு குடும்பத்தில் நன்றாக வாழ முடியாது என கூறியது என அனைத்தயும் கூற,

"அடி அசடு! அதெல்லாம் வாழத் தெரியாதவங்களுக்கு..." என ஆரம்பித்து வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை அவளுக்கு கூறி சந்தோசமாக வாழுமாறு அனுப்பி வைத்தார்.

அங்கே ரித்தியும் தன் அன்னை தந்தையிடம் நடந்த அனைத்தயும் கூறி தன்னவளை தான் நல்லபடியாக மாற்றிக் காட்டுவேன் எனவும் உறுதி எடுத்தான் அவளின் மாற்றம் தெரியாமலே.

அவர்களின் குடும்ப வாழ்வு மட்டும் அல்ல உண்மையான அன்பும் அன்று முதல் பெருக ஆரம்பித்தது.

தருணியின் குணநலனை அப்படியே ஏற்று நல்லனவற்றை போற்றியும் வேண்டாததை சொல்லி புரிய வைக்கவும் முயலும் ரித்தியின் அன்பு என்றும் வெல்லும் தானே?

இவர்கள் காதல் என்றும் அழகான பந்தமாகவே அமையும்..


சுபம்
 
Top