நெகிழ்வான கதை...நாம் எல்லோருமே ஒருவகையில் மிரா தான்
நன்றி சிஸ்.
கதை சங்கமம் 2021
நெகிழ்வான கதை...நாம் எல்லோருமே ஒருவகையில் மிரா தான்
Super
கதை தலைப்பு: காரிருளில் கண்டறிந்தேன்
அந்திமாலை மயங்கி சூரியன் பொன்னிறமாக தன் கதிர்களை மாற்றி பூமிப்பந்தின் மற்ற பகுதியை சஞ்சரிக்க கிளம்பிக்கொண்டு இருந்தான்.
அந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து குழந்தைகள் சிலர் விளையாடுவதை கவனித்துக்கொண்டிருந்தார் ஹரிஹரன். அவர் மனதில் ஆயிரம் ஏக்கங்கள். இருட்டுவதற்குள் கிளம்ப வேண்டும். மெல்ல எழுந்து தன் கைத்தடியை ஊன்றினார். இரண்டு வருடங்களுக்கு முன் வரை ராஜா போல நடைபோட்டவர், இப்போது கைத்தடி இன்றி இரண்டு எட்டு வைக்க முடியவில்லை. நீண்ட பெருமூச்சை வெளியிட்டவர், கோவில் விமானத்தை நோக்கி கை கூப்பி விட்டு, நடக்க துவங்கினார்.
அந்த ஆறே முக்கால் மணி இருளும் வெளிச்சமும் கலந்த கலவையான பொழுதில், வானத்தை வெறித்தார்.
"ஏன்னா, நான் இன்னிக்கு பிரதோஷத்துக்கு கோவிலுக்கு போறேன். கொஞ்சம் நீங்களும் கூட வாங்களேன்."
"ஏன்டி, உனக்கோ நன்னா தெரியும், நான் சாயங்காலம் நியூஸ் பார்க்க உக்காந்தா எழுந்துக்க மாட்டேன்னு. பின்ன ஏன் என்னை கூப்பிட்டுண்டே இருக்க?"
"இல்ல, பூஜை முடிஞ்சு வர்றச்சே லேசா இருட்டிடறது. நேக்கு முன்ன மாதிரி பார்வை நன்னால்ல. அதான் நீங்க துணைக்கு..", என்று இழுத்தார் அவரின் சகதர்மினி மீரா.
"அப்போ போகாதே. அதோ அந்த ரூம்ல இருக்கற டிவியை போட்டு சங்கரால காட்டுவான் பாரு காசி விஸ்வநாதர் கோவில் பூஜை, அதை பாரேன். என்னை ஏன் படுத்தற. ",என்று அவர் சலித்துக்கொள்ள,
மீரா வாடிய முகத்துடன் கோவிலுக்கு கிளம்பிப்போவார். இதோ இன்று நியூசும் இருக்கிறது, டிவியும் இருக்கிறது, ஏன் ஹரிஹரன் கோவிலுக்கு பிரதோஷ பூஜைக்கு கூட வந்து விட்டார். ஆனால் அவர் பத்தினி மீரா தான் இல்லை.
வீட்டை அடைந்த அவருக்கு ஏனோ தான் மிகவும் சோர்ந்து போனது போல தோன்ற, கண்ணை மூடி ஈஸி சேரில் சாய்ந்தார்.
"ஏன்னா.. ஏன் ஒரு மாதிரி இருக்கேள். தலை வலிக்கறதா? நான் வேணா ஒரு வாய் காபி தரட்டுமா? ",என்று சமையலறை வாசலில் நின்று என்றோ மீரா கேட்ட வார்த்தைகள் காதுக்குள் ஒலித்தது.
"அட, சித்த கண்ணை மூடிடப்படாதே, வந்துடுவியே, காபி, தைலம்ன்னு.. போ நேக்கு பேங்க்ல ஒரு சிக்கல், அதை யோசிக்க கொஞ்ச நேரம் அமைதி வேணும். நீ அந்த அடுத்தாத்து கோமதி கூட பேசிட்டு வா போ. ", என்று இவர் இரைந்த பொழுதுகளும் மனக்கண்ணில் தோன்ற,
இன்று தலைவலி இரண்டாக பிளந்து விடும் போல தாக்க குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்கவே ஆளில்லாமல் இருக்கும் தன் நிலையை நினைத்து ஏனோ இதழோரம் ஒரு சிரிப்பு வந்தது.
மகன் குகன், எட்டு மணிக்கு வீடியோ காலில் வந்தவன், "என்னப்பா என்ன பண்றேள். சாப்டாச்சா ?",என்றான் சம்பிரதாயமாக,
வாரம் ஒரு நாள் கூப்பிட்டு கேட்டுவிடுவான். அவனால் அது தான் முடியும். அவன் இருப்பதோ கனடாவில். ஒரு முறை வா என்று அழைத்தான். போனார். ஆனால் அங்கே நடந்த நிகழ்வால் மிகவும் நொந்து போனவர், அதன் பின் அவன் அழைத்தாலும் செல்வது இல்லை.
அந்த நிகழ்வில் மனம் செல்ல, கை தன் போக்கில், ரவா உப்புமாவை கிண்டியது.
அன்று குகன் வீட்டில் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் ஹரி. மணி மதியம் ஒன்று. அவருக்கோ சக்கரை நோய். உணவு உண்டு ஒன்றரைக்குள் மாத்திரை போட்டாக வேண்டும்.
அவர் மருமகள் முகத்தை முகத்தை பார்த்தார். அவளோ செல்லில் தோழியோடு ஏதோ கலந்துரையாடல் செய்து கொண்டு இருந்தாள். அவரால் தாள முடியவில்லை.
எழுந்து முன்னும் பின்னும் நடந்தார். அவள் கவனிக்கவில்லை. ஏனோ மனம் மீராவின் அருகாமைக்கு ஏங்கியது.
அவளும் தான் எத்தனை நாட்கள் "மணியாச்சுன்னா.. வாங்கோ.. தட்டு வச்சிட்டேன். ", என்று கூப்பிட்டு கொண்டே இருப்பாள்.
"இரு டி. இந்த பென்ஷன் வந்ததான்னு பார்த்துட்டு வரேன். எப்பபாரு சாதம்.. சாதம்ன்னு சதா சர்வ காலமும் நோக்கு சமையலும் சாதமும் தானா? மனுஷா கஷ்டம் தெரியறதா நோக்கு? "
அவளோ, அமைதியாக அவர் வரும் வரை காத்திருந்து பரிமாறி, பின் உண்டு எழுந்தபோது பாதி நாட்கள் அது மாலைப்பொழுதாக இருக்கும். இன்றோ..
ஒரு கவளம் உணவு உள்ளே போனால் போதும், எங்கே சாதம் என்று கண்கள் தேட, மருமகளோ படு பிசி.
நான்கு நாட்கள் மதியம் இரண்டுக்கு மேல் சாப்பிட்டு அவருக்கு சேராமல் போய், ஹாஸ்பிட்டலில் சேர்த்தும், ஊர், சீதோஷ்ணம் சேரவில்லை என்று சொல்லி உடனே கிளம்பி வந்துவிட்டார்.
இன்று வரை கனடா போகும் எண்ணம் வரவில்லை அவருக்கு.
தட்டில் ரவா உப்புமாவை வைத்து, தொட்டுக்கொள்ள ஊறுகாய் தேட, அதுவோ எப்போதோ நான் தீர்ந்துவிட்டேன் என்றது.
மீரா இருந்தவரை வகை வகையாக எத்தனை பொடி, ஊறுகாய் என்று அவள் அவருக்கு பிடித்த ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வாள். ஆனால் ஒருநாளும் அதை பாராட்டியதோ, ஏன் நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொல்லியதோ கூட இல்லையே.
உணவும் அப்படித்தான். அவருக்கு உப்புமா அறவே பிடிக்காது. அதனால், சிறுதானிய தோசை, புட்டு என்று அவ்வளவு கவனமாக அவரை பார்த்துக்கொண்டவள், தன்னை பார்க்க மறந்து போனாள்.
இன்று தட்டில் அவரை பார்த்து ரவா உப்புமா சிரித்தது. எடுத்து வாயில் வைத்தார். மீராவின் சமையலில் கால் தூசிக்கு கூட வராத அதை, மாத்திரை எடுத்துக்கொள்ளும் முன் சாப்பிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக முயன்று உள்ளே தள்ளினார்.
மாலை குகன் பேசுகையில், "அங்க தனியா இருந்து என்னப்பா பண்றேள். இங்க வந்தா கிருஷ்ணா கூட விளையாடலாம், லேகா உங்களை அடிக்கடி கேக்கறா தாத்தா எப்போ வருவார்ன்னு.",என்று பேரன் பேத்திகளை காட்டி கேட்டு விட்டான். ஆனால் அவர் மனம் ஏனோ அன்று மீரா பேசிய பேச்சுக்களில் உழன்றது.
"ஏன்னா போய் குழந்தேளை பார்த்துட்டு வருவோமா? கண்ணுக்குள்ளயே நிற்கிறா ரெண்டு பேரும். ",என்று ஆசையாய் கேட்டாள்.
" பேஷா போய்ட்டு வாயேன். நேக்கு இங்க பென்ஷனர் மீட்டிங் இருக்கு.நீ போறதுன்னா போய்க்கோ. நான் இங்கே நிம்மதியா இருந்துப்பேன்."
"ஏன்னா இப்படி சொல்றேள். நான் உங்களை நன்னா பார்த்துக்கலையா?", ஆதங்கமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
"ஏன்டி நேரத்துக்கு சமைச்சு போட்டுட்டா ஆச்சா? ஒரு நாட்டு நடப்பு தெரியல. நாலு விஷயம் தெளிவா பேச முடியல நோக்கு. அந்த தோசையையும் அடையையும் நான் பண்ணிப்பேன். நீ நன்னா போய் உன் மாட்டு பொண்ணோட பேசி, குழந்தேளை கொஞ்சிட்டு வா. ",என்றார் எரிச்சலுடன்.
"இல்லன்னா. உங்களோட போறதானா சரி. இல்லாட்டா நான் எங்கயும் போகலை.", என்று எழுந்து சமையலறைக்குள் தஞ்சமானாள். அதன் பின் ஒரே மாதத்தில் அவளும் சிவலோகத்துக்கு இடம் மாறி விட்டாள்.
எந்த அடையும் தோசையும் நானே செய்வேன் என்றாரோ.. அது இன்றளவும் அவருக்கு நன்றாக வரவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளாக அவரே தான் சமைக்கிறார்.
கண்மூடி கட்டிலில் சரிந்த போது, பக்கத்தில் அவளின் புடவையை விரித்து அதன் மேல் கை வைத்து, "மீரா, குகன் ஆத்துக்கு கூப்பிடறான் டி. எனக்கு தான் போக பிடிக்கல. மாட்டு பொண்ணு சாதம் போட மாட்டான்னு இல்ல. அவளும் நல்ல பொண்ணு தான். மா மணியாச்சு, இல்ல சாதம் போட்றயான்னு கேட்டா, தோ வந்துட்டேன் பா ன்னு தட்டு வச்சிடுவா. ஆனா பாரு. நேக்கு தான் வாய் விட்டு அப்படி கேக்கவே வரல டி. என்னை நீ எப்படி தாங்கி இருக்கன்னு இன்னிக்கு புரியறது டி மீரா. நீ போன கோவிலுக்கு நானும் போறேன். உன்னாட்டம் சமைக்க முடியறதா பாக்கறேன். ஆனா உன்னாட்டம் ஒன்னுமே வரல டி நேக்கு. நீ எவ்ளோ திறமைசாலி இல்ல. நான் தான் புரிஞ்சுக்காம போய்ட்டேன். அந்த நாட்டு நடப்பை வச்சு இன்னிக்கு ராத்திரிக்கு ஊறுகாக்கு ஆகல. ஆனா தினப்படி வாழ்க்கைக்கு நீ எவ்ளோ கத்து வச்சிண்டு இருந்திருக்க. நேக்கு பேச கூட ஆள் இல்லை டி இப்போ. முன்ன மெயின் ரோடு கடைல உக்காண்டா நாள் பூரா எதானம் விவாதம் பண்ணின்டு இருப்பேன். இன்னிக்கு அவால்லாம், அவா ஆத்துக்காரி சமையல், துணின்னு பேசறச்ச உன்னை தொலைச்சுட்டேனேன்னு இருக்கு டி.
இதே ஆத்துல நீ இருந்தும் உன்னோட பேசாம நான் இருந்திருக்கேன்டி. ஆனா பாரு, இன்னிக்கு நீ இல்ல. ஆனா நான் உன்னோட பேசிண்டு இருக்கேன். எனக்கே சிரிப்பா இருக்கு டி மீரா. பகவான் என்ன கூப்பிட்டுகற வர உன்னோட பேசாம விட்ட எல்லாத்தையும் இந்த தனிமைல பேசிக்க போறேன் டி. அதான் குகன் கூப்பிட்டப்போ, நான் வரலன்னு சொல்லிட்டேன். இந்த வீடு பூரா உன் வாசனை இருக்கிறச்ச உன்ன விட்டு போக நேக்கு மனசில்ல டி மீரா.", என்று புடவையை தடவியபடி பேசினார் ஹரிஹரன்.
அதே வீட்டில் பல நாள் அவர் தூங்கிய பின்பு," ஏன்னா ஏன் என்னோட உங்களால நன்னா பேச முடில, நான் தத்தியா? நாட்டு நடப்பு பேச தெரியாதா? தெரியும்ன்னா.. ஆனா உங்க எண்ணமும் என்னுதும் வேறயா இருக்கும். நமக்குள்ள எதுக்கு பூசல்ன்னு நான் தான் பேசறது இல்ல. அதுக்காக சாப்பிட்டியா கொண்டியான்னு கூடவா என்னண்ட பேச மாட்டேள். என்னமோ போங்கோ. இன்னிக்கு புரியாது உங்களுக்கு. நான் இல்லாத போறச்சே புரிஞ்சுப்பேள்.",என்று சொல்லிவிட்டு படுத்திருக்கிறார் மீரா.
இதோ அவர் சொன்னது தானே நடந்திருக்கிறது. தனிமை. மீரா இல்லாத தனிமை. ஹரிஹரன் தான் யார் என்று உணர்ந்துள்ள இந்த தனிமை.
தனிமை என்பது நாமாக ஏற்றுக்கொள்ளும் போது வரம். அதே தனிமை நம் மீது திணிக்கப்படும் போது சாபம். வாழும் நாட்களில் நம்முடன் இருக்கும் உறவுகளை விட்டு நாம் தனிமையை நாடுகிறோம். ஆனால் அவர்களே நம்மை கடந்து சென்ற பின் உருவாகும் வெற்றிடமும் தனிமையும் நம்மை கொல்லாமல் கொன்று விடும். தன் மனையாளை தொலைத்து அந்த காரிருளில் கண்டறிந்தார் தன் வாழ்வின் ஒளி அவளென்று.
◆◆◆◆◆
மொத்த வார்த்தைகள் : 979
அன்புடன்
ஜெயலட்சுமி கார்த்திக்
Thanks daஇருக்கும் போது அருமை யாருக்கும் புரிவதில்லை. நல்லா இருக்கு கா