கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கோடுகள் 3

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
கோடுகள் 3

தன் மேல எந்த தப்பும் இல்லாம தூய்மையான மனசோட வாழ்ந்தாலே அது அறமான அழகான வாழ்க்கை தான். அதை விட்டுவிட்டு மனத்தூய்மை இல்லாம வார்த்தை ஜாலங்களால, நடிப்புத்திறமையால மற்றவர் நம்ம பார்க்கணும் அப்படிங்கறதுக்காக செய்யற ஆர்ப்பாட்டம் எல்லாமே ஆடம்பரமான ஒன்னு தான். அது அறம் ஆகாது.

- பொதுமறையில் பொதிந்தவை

◆3◆

புது தில்லியில் குளிர்காலம் துவங்கி பக்கத்தில் இருப்பவரையே கண்ணுக்குத் தெரியாமல் போகும் அளவுக்கு பனி படர்ந்து இருந்தது. அந்த அதிகாலை நேரத்தில் மக்கள் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கி இருக்க, , ஹுடியோடு இருந்த ஒரு ஜெர்கின் அணிந்து மிதமான வேகத்தில் ஜாகிங் செய்து கொண்டிருந்தாள் அவள்.

ஆதவன் ஆதிக்கம் செலுத்த இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதாகவே வானிலை அறிவிக்க, கடைசி சுற்றில் வேகத்தைக் கூட்டி ஓடியபடி ஹாஸ்டல் வாசலுக்கு வந்தவள், இன்னும் அதில் பெரிய பூட்டு தொங்கியபடி இருக்கக் கண்டு எரிச்சலுடன் பக்கசுவர் ஏறி உள்ளே குதித்தாள்.

அங்கே அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் நடிகர் ஆயுஷ்மன் குரானாவோடு டூயட் பாடிக்கொண்டிருந்த அவளின் ரூம்மேட் அதிதியை எழுப்ப நினைத்தவள், எழுந்தால் அந்த நடிகரைப் பற்றி புராணம் பாடுவாள் என்பதால் சத்தமில்லாமல் போய் குளித்து விட்டு வந்து தன் பொருட்களை எடுத்து வைத்து கல்லூரிக்குக் கிளம்பத் தயாரானாள்.

அனைவருக்கும் முன் எழுந்துவிடுவதால் ஜாகிங் முடிந்து வந்ததும் குளித்து கிளம்பிவிடும் அவளுக்கு ஹாஸ்டல் வாசம் அவ்வளவு கடினமானதாக இல்லை.

அவளுக்கு கஷ்டமெல்லாம் அங்கே கொடுக்கப்படும் வரட்டி போன்ற ரொட்டியை விழுங்குவது மட்டும் தான். அதிலும் அவள் அதற்கு இணைப்பாய் மோர் கேட்டு வைக்க, ஹாஸ்டல் வாசிகள் கண்களில் அவள் ஏலியன் போலவே தென்பட்டாள்.

ஏற்கனவே அவளின் உருவ அமைப்பாலும் அடாவடித்தனத்தாலும் அவளை எட்டவே நிறுத்திய ஹாஸ்டல்வாசிகளுக்கு அவளது உணவின் தேர்வும் அவளை ஒதுக்கி வைக்குமாறே அமைந்தது.

அவர்கள் அவளை என்ன ஒதுக்கி வைப்பது என்று முதல் செமெஸ்டரின் போதே அவள் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டாள்.

அவள்... அவள் தான் ஹர்ஷி.

கல்லூரிக்கு ஜீன்ஸ் பேன்ட்ஸ் போடக்கூடாது என்று அறிவிப்பு தந்துவிட அன்று முதல் பார்மல் பேன்ட்ஸ் மற்றும் சட்டையில் ஆண் பிள்ளைகளை தோற்கடிக்கும் ஸ்டைலுடன் கல்லூரிக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அவளின் பாய் கட் ஹேர்ஸ்டைலை ஆரம்பத்தில் கிண்டல் அடித்தவர்கள் அவளின் பதில் தரும் பாணியைப் பார்த்து வாயை இறுக்க மூடிக்கொண்டனர்.

வாசலிற்கு வந்தவள், திரும்பி கேண்டினை ஒரு பார்வை பார்த்துவிட்டு, செக்யூரிட்டியிடம், "இன்னிக்கும் ரொட்டி தானா?" என்றாள் எரிச்சலாக.

அவரோ அவளைப்பற்றி இந்த இரண்டாண்டில் நன்றாக அறிந்திருந்தால், ஆமாம் என்று தலையசைத்து, "பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி தமிழ்நாடு மெஸ்ன்னு ஒன்னு புதுசா திறந்திருக்கு. போய் சாப்பிட்டுப் பாரும்மா" என்று அக்கறையோடு ஹிந்தியில் சொன்னார்.

அவரை ஏற இறங்கப் பார்த்தவள், "அது திறந்து பத்து நாள் ஆகுது, இப்போ சொல்றீங்க என்கிட்ட. அதுவும் இல்லாம நான் மெஸ் பீஸ் கட்டி இருக்கேன். நான் ஏன் வெளில சாப்பிடணும்?" என்று கேட்டு மெஸ் நோக்கி நடை போட்டாள்.

அவள் குணம் அவருக்கு நன்றாகத் தெரியுமென்பதால் சிரித்துக்கொண்டவர், இன்று மெஸ் படப்போகும் பாட்டை நினைத்து சிரித்தார்.

நேராக உள்ளே போனவள் தட்டில் இரண்டு ரொட்டியை வாங்கி அதற்கு தட்டே மூழ்கும் அளவுக்கு தால் கேட்க, மெஸ் மேற்பார்வையாளரோ ஒரு கரண்டி தான் என்று கறாராக பேசினார்.

"ஓ அப்படியா. சரி வாங்க, வந்து நீங்க செஞ்ச இந்த வரட்டியை.. ச்சி சீ.. ரொட்டியை ஒரு கரண்டி பருப்புன்னு பேர் பண்ணி வச்சிருக்கற இந்த கஞ்சில முக்கி தின்னு காமிங்க" என்று கலாட்டா செய்ய ஆரம்பித்தாள்.

இது தினமும் நடப்பது தான். அதிகம் வடமாநில மாணவர்களே இருக்கும் விடுதியில் தொன்னூறு சதவிகிதம் உணவு ரொட்டி, தால் தான். ஆனால் தென்னிந்திய உணவு மட்டுமே பழக்கப்பட்ட ஹர்ஷிக்கு இந்த மூன்றாம் ஆண்டு அதே ரொட்டி என்ற கடுப்பில் அன்று கோபமுகம் காட்ட,

அவளை பின்னால் வந்து தோளில் தட்டி அழைத்தார் மிஸஸ்.கிளாரா. அவர் தான் இந்த ஹாஸ்டலில் வார்டன். இவள் செய்யும் அத்தனை அடாவடிக்கும் சிரித்த முகமாய் அவளை சாந்தப்படுத்தும் ஒரே ஜீவன். ஹாஸ்டல் வாசிகளுக்கு அவள் மேல் கோபமும் கொந்தளிப்பும் இருந்தாலும் அவளிடம் போய் பேசவோ சண்டைக்கு நிற்கவோ பயப்படுவர். காரணம் அவள் கேட்பதும் நியாயம் தான் என்று பேசும் வார்டன் கிளாரா.

அவள் முன்னால் ஒரு தம்ளர் மோரை நீட்டியவரிடன், "இதுக்கு பதிலா ஒரே ஒரு நாள் எனக்கு இட்லியோ, பொங்கலோ.. ஏன் ஒரு ரவா உப்புமா கிண்டி தரலாம்ல மேம்?" என்று காய்ந்தபடி அந்த மோரை தட்டில் ஊற்றி ரொட்டியை ஊற வைத்தாள்.

"எனக்கு மட்டும் உனக்காக அதெல்லாம் செய்யணும்னு ஆசை இல்லையா ஹர்ஷி. ஆனா பாரு, உன்னையும் அதிதியையும் தவிர இந்த ஹாஸ்டலில் சவுத் இந்தியன்ஸ் இல்லையே! நீ சொல்ற இட்லி பொங்கல் இதெல்லாம் இவங்க சாப்பிட மாட்டாங்க. நீ பாரு, பிடிக்கலன்னா கூட அதை வீணடிக்காம சாப்பிட்டுப் போற. ஆனா இவங்க அப்படி இல்லம்மா. தூக்கி போட்டுடுவாங்க அதான்." என்று பொறுமையாக அவளுக்கு விளக்கம் கொடுத்த மிஸஸ். கிளாராவை ஹாஸ்டலே அனல் கக்கும் விழிகளோடு முறைத்தது.

அதிலும் விடுதி உணவு மேற்பார்வையாளர் ஷாஜிதா, "நீங்க ஏன் பாபி இவளுக்கு இவ்ளோ விளக்கம் கொடுக்குறீங்க? ரொம்ப அடாவடித்தனம் செய்யறா இவ" என்று சொன்னவரை வாயில் ரொட்டியை வைத்து அடைத்துக்கொண்டே பார்த்த ஹர்ஷி,

"நீங்களும் ஒன்னும் தர மாட்டிங்க, தர்றவங்களையும் விட மாட்டீங்களா?" என்று தண்ணீரோடு அதை விழுங்கினாள்.

"என் ரொட்டி சாஃப்ட்டா தான் பாபி இருக்கு" என்று அவர் அவள் செய்கையில் கடுப்போடு வார்டனிடம் சொல்ல,

"ஷாஜி, அது அவளுக்குப் பிடிக்கல அவ்ளோ தான். அதுக்காக சாப்பிடாம போறாளா? இல்ல அடுத்தவங்களை சாப்பிட விடாம தடுக்கறாளா? இல்லல்ல.. சின்ன பொண்ணு, ஊரு விட்டு வந்து இவ்ளோ தைரியமா இருக்கால்ல.. நீ பாராட்டலன்னாலும் பரவால்ல, கண்டுக்காம அப்படியே விட்டுடு, சண்டைக்கு போகாதே." என்று சொல்லிவிட்டு,

"நீயும் தான் உன் வம்புதும்பெல்லாம் கொஞ்சம் கொறச்சுக்கோ ஹர்ஷி. டாக்டர் ஆகப்போற. அதுக்கான பக்குவத்தோட இரு" என்று சொன்னதும்,

தன் நாலு இன்ச் கூந்தலை சிலுப்பி தலையாட்டினாள்.

அவள் வெளியேறியதும் ஷாஜிதா, "பாபி அவளை திட்டுவிங்கன்னு பார்த்தா எனக்கு அட்வைஸ் பண்றீங்க, அவகிட்ட அவ்ளோ பொறுமையா பேசறீங்க?" என்று இத்தனை வருட பழக்கத்தில் மதம் கடந்து உறவாய் மாறிவிட்ட கிளாராவிடம் குறையாக பேசவும்,

"நான் இந்த ஹாஸ்டல்ல யாரையாவது திட்டி நீ பார்த்திருக்கியா ஷாஜி?" என்று கேட்டார்.

"இல்ல பாபி. ஆனா இவளும் மத்தவங்களுக்கு ஒண்ணா? இவ சரியான அடாவடி" என்று முகத்தில் கோபத்தை கொப்பளிக்க விட்டுச் சொன்னவரைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது கிளாராவுக்கு.

"போ ஷாஜி வேலையைப் பாரு. அவளை தேவையில்லாம அட்டகாசம் பண்ண வைக்காம அவ வந்ததும் நீயே மதியத்துக்கு வச்சிருக்கற மோர் ஒரு தம்ளரைக் கொடுத்தா அவ பாட்டுக்கு சாப்பிட்டுட்டு போயிடுவா. உன் சாஃப்டான ரொட்டியை சாப்பிடப் படுத்துறாளேன்னு நீ அவளை வம்பு பண்ற, அதான் அவளும் பண்றா." என்று ஷாஜிதாவை முன்னே போகச் சொல்லி அனுப்பினார்.

அதுவரை அவர் பேசுவதை வாசல் கதவருகில் நின்று கேட்டவள், வேகமாக ஓடிவந்து, "லவ் யூ கிளாரா மேம்" என்று அவர் கன்னத்தைக் கிள்ளி காற்றில் முத்தமொன்றை பறக்கவிட்டு கல்லூரிக்கு விரைந்தாள்.

அன்று தென்னக ரயில்வே இன்ஜினியரிங் பிரிவு அலுவலகத்தில் கணினியைத் தட்டும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. ஏனெனில் அன்று அவர்கள் மண்டலத்தின் தலைவர் ஆய்வுக்காக வரவிருக்க, அலுவலகமே அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்தது.

காலையில் அவர் வந்திறங்கும் வேளையில் பலரும் ஆர்ப்பாட்டமாக அவரை வரவேற்க நினைக்க, அதெல்லாம் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் மறுத்து விட்டிருந்தான் அவர்களின் சீஃப் என்ஜினியர் சர்வேஸ்வரன்.

அவர் வந்தபோது அவரை வரவேற்க சர்வா மட்டுமே இரயில்நிலையம் சென்று அவரோடு அலுவலகம் வரவிருந்தான்.

அவர்கள் அலுவலகம் இரயில் நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவு தான் என்பதால் அவருடன் பேசியபடி அவன் நடந்து வர, அவரோடு இணைந்து வந்தவர்கள், மெல்ல அவன் காதருகில் வந்து, "என்ன.. எல்லாம் ஏற்பாடு செய்திருக்கீங்க தான?" என்றதும் அவரை புரியாது நோக்கியவன்,

"என்ன ஏற்பாடு செய்யணும்? இன்ஜினீயரிங் டிப்பார்ட்மெண்ட்டை செக் பண்ண தானே வந்திருக்கீங்க? எல்லா பைல்லும் தயாரா இருக்கு. ஒரு மணி நேரத்துல உங்க வேலை முடிஞ்சிடும்." என்றான் சாதரணமாக.

அவனை உறுத்து விழித்த அந்த மனிதர், பக்கத்தில் நின்ற ஆளிடன், "இதுக்கு தான் ரொம்ப படிச்ச மேதாவியெல்லாம் வேலைக்கு வைக்கக் கூடாதுன்னு சொல்றது. பாரு பெரிய ஆபீசர் வர்றாங்கனு கொஞ்சமாவது பயம்,மரியாதை ஏதாவது இருக்கா பாரு?" என்று முணுமுணுக்க, அதற்குள் அலுவலகம் வந்து சேர்ந்தது.

வாசலில் யாரும் இல்லாமல் இருக்கக் கண்டவர்கள், "எங்கய்யா யாரையும் காணோம்?" என்று எரிச்சலாக வினவ,

"வேலை நேரம் ஆரம்பிச்சாச்சு சார். அவங்க ஏன் வாசல்ல நிற்க போறாங்க? ஆபிஸ் ஒர்கர்ஸ் உள்ள இருக்காங்க சார், கேங் மேன், பாயிண்ட் ஸ்டாஃப் எல்லாரும் லைன்ல இருக்காங்க சார்." என்று கர்மசிரத்தையாக விளக்கம் கொடுத்தவனை அந்த ஆபிசருடன் வந்தவர்கள் மூக்கு முட்ட முறைத்தனர்.

அவர்கள் பார்வைக்கான அர்த்தம் தெரியாமல் அவன் விழிக்க, "என்ன மிஸ்டர் சர்வேஸ்வரன் எப்போ ஜாயின் பண்ணினீங்க?" என்று அவன் தோளில் கைபோட்டு அந்த டிவிஷனல் மேனேஜர் வினவ,

"ஒன் இயர் ஆகுது சார்." என்று தயங்காமல் பதிலளித்தான்.

"போன முறை நான் வந்தப்போ நீங்க இல்லையே, அசிஸ்டண்ட் என்ஜினீயர் அவர் பேரென்ன? "என்று அவர் யோசித்தார்.

"சார்லஸ் சார்" என்று சொல்லும்போதே சர்வாவின் முகம் மலர்ந்துவிட,

"அவரு சொல்லலையா ஒரு ஆபீசர் வரும்போது எப்படி ரிசீவ் பண்ணனும்னு" என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் அவர்.

"போக்கே வாங்கிட்டு வந்தேனே சார். நல்லா தானே ரிசீவ் பண்ணினேன். உள்ள வாங்க சார்" என்று அலுவலக அறை நோக்கி கை நீட்டினான்.

அவருக்குள் ஒரே ஆனந்தம். பரவாயில்லை இன்றைய இளைஞர்கள் கூழைக் கும்பிடு போடாமல் எல்லாம் சரியாக இருப்பதால் தைரியமாக எதிர் நின்று பேசுகின்றனர் என்றவர் வெகுவாக அவனை ரசித்தார். ஆனால் அவருடன் வந்த சகபாடிகளுக்கு அப்படி இல்லை போலும். அவனை முறைத்த வண்ணமே இருந்தனர்.

உள்ளே அவன் அறையில் அவனுக்கும் சார்லஸுக்குமாக இரண்டு மேஜைகள் போடப்பட்டிருக்கும்.

சார்லஸ் அவன் மேஜையில் ஏதோ பைலை நோண்டிக் கொண்டிருந்தவன் டிவிஷனல் மேனேஜர் வந்ததும் எழுந்து நின்றான். அவனை முறைத்த அவரின் சகபாடிகள், "ஏன்யா சார்லஸ் போன முறை வந்தப்ப எல்லாம் ஒழுங்கா தான வரவேற்பு பண்ணின? உன் சீப் என்ஜினியருக்கு சொல்ல மாட்டியா?" என்று கடிக்க, அவனோ,

"சார், அது போன முறை. அவன் இல்லப்போ, இப்போ அவன் தான் இங்கே சீஃப், நான் என்ன சொல்றது, அவன் என்ன கேக்குறது. சொக்கிங் பண்ண வந்தா எல்லாம் சரியா இருக்கான்னு தானே டா பாக்க போறாங்க அதுக்கு எதுக்கு மாலை, காபி, டிபன் எல்லாம்ன்னு கேட்டான். சரி அவன் ஆபிஸ் அவன் இஷ்டம்ன்னு விட்டுட்டேன். உங்களுக்கு காபி, டிபன் வேணும்ன்னா கேளுங்க சார் வாங்கித் தருவான்." என்று சொல்லிவிட்டு, அவன் சமர்ப்பிக்க வேண்டிய கோப்புகளை வரிசைப்படுத்தினான்.

அதே போல ஒவ்வொரு அலுவலர் முன்பும் கோப்புகள் இருக்க, அதில் என்ஜினீயரிங் டிப்பார்ட்மெண்ட், டிராபிக், சிக்னல் கடைசியாக அவ்வப்போது அவர்களோடு இணைந்து கொள்ளும் எலக்ட்ரிகல் என்று அனைத்து துறையுடன் இணைந்து செயப்படுவதற்கான கோப்புகள், அது சம்மந்தமான டெண்டர்கள், வாங்கிய பொருட்கள், அதன் வைப்பு என்று எல்லாம் கனகச்சிதாக இருக்க, டிவிஷனல் மேனேஜருக்கு பரம திருப்தி.

ஒரு மணி நேரத்தில் ஆய்வை முடித்தவர், "சரிப்பா நான் ஓ. ஆர். எச் (ஆபிசர்ஸ் ரெஸ்ட் ஹவுஸ்) போறேன். சாயங்காலம் சேர்ந்து டீ சாப்பிடலாம் வாங்களேன்" என்று அழைத்தார்.

ஆனால் அவனோ, "இல்ல சார் சாயங்காலம் ப்ராக்டிஸ் செஷன் இருக்கு. நான் ஸ்டேடியம் போயிடுவேன்" என்று சொன்னதும், அவன் தோளில் தட்டு, "என்தூசியாஸ்டிக் பாய்" என்று வெளியேற அவரின் சகபாடிகள் அவனை இன்னும் முறைத்து முடிக்காமல் அப்படியே அவர் பின்னே சென்றனர்.

அவர்கள் போனதும் அலுவலகத்திலுள்ள அனைவரும் சர்வாவை சூழ்ந்து கொண்டனர்.

"ஏன் சார் டிவிஷனல் லெவல் ஆளுங்க வந்தா நல்லா கவனிக்க வேண்டாமா சார்? நீங்களும் ஒன்னும் செய்யல, எங்களையும் கையை கட்டிப்போட்டது போல உட்கார வச்சுட்டிங்க. அவங்க என்னனு ரிப்போர்ட் எழுத போறங்களோ? எதுவும் பிரச்சனை வராம இருக்கணும் சார்." என்று ஆளாளுக்குப் புலம்ப ஆரம்பித்தனர்.

"அட, என்ன நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க. நாம வேலை பார்க்க எப்படி சம்பளம் தர்றாங்களோ அப்படி நம்மை மேற்பார்வை பாக்க அவங்களுக்கு சம்பளம் தர்றாங்க. இதுல நாம அவங்களை கவனிக்க என்ன இருக்கு. எல்லா ரெகார்டும் சரியா இருக்கும் போது நீங்க ஏன் இவ்ளோ பயப்படுறீங்க? நாம என்ன டிராக்ல இருந்து நாலு அயர்ன் பாரை வீட்டுக்கா தூக்கிட்டு போனோம்? இல்லல்ல.. அப்பறம் ஏன்?" என்று சாதாரணமாக உரைத்தவன்.

"லஞ்ச்சுக்கு நேரமாச்சு. போய் சாப்பிட்டு நிம்மதியா வேலையை பாருங்க" என்று கூறிவிட்டு, அவன் தாய் கொடுத்த டிபன் கேரியரை பிரித்தான்.

சார்லஸ் வேகமாக அவனருகில் வந்து, "மாமே உனக்கு தெரியுமா போன தடவை நீ சொன்ன அதே வார்த்தையை தான் மாமே நானும் சொன்னேன். ஆனா இவங்க எல்லாரும் சேர்ந்து கைக்காசு போட்டு, அவருக்கு மாலை, வந்தவங்களுக்கு டீ, ஸ்னேக்ஸ் எல்லாம் வாங்கி வைக்க, அதுவும் சிலர் வெக்கமே இல்லாம இன்னொன்னு கொடு ன்னு கேட்டெல்லாம் வாங்கிட்டு போனாங்க தெரியுமா? இதே இப்போ நீ வேண்டாம்ன்னு சொன்னதும், சீஃப் சொல்லிட்டாரே என்ன பண்றதுன்னு கையை பெசஞ்சுகிட்டு நின்னுட்டு அப்பறம் அமைதியா வேலையை பார்க்க போயிட்டாங்க டா. என்ன சொல்லு உனக்கு இருக்கற மரியாதை எனக்கு இல்லை மாமே.." என்றதும்,

"அதெல்லாம் வேலையை சரியா செய்யாதவங்க காக்க பிடிக்க பண்ற வேலை மாமே, நாம ஏன் பண்ணனும். நீ நீ சொன்னாலும் கேட்டுத்தான் ஆகணும்ன்னு கொண்டு வந்திடுவோம் விடு" என்று ஸ்மிருதி வைத்திருந்த புளி சாதத்தை சார்லஸுக்கும் ஒரு தட்டில் போட்டு நீட்டினான்.

சார்லஸ் அவன் கொண்டு வந்த இடியாப்பத்தை அவனுக்குக் கொடுக்க, இருவரும் பேசிக்கொண்டே உண்டனர்.

அதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த உருவம், "இன்னும் பள்ளிக்கூட பசங்க மாதிரி இருக்கானுங்க இவனுங்கள போய் கவனின்னு சொன்னா அது என் தொழிலுக்கே கேவலம் டா" என்று யாரிடமோ
செல்போனில் பேசியபடி அந்த இடத்தை விட்டு அகன்றது.

இணையுமா??

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

- குறள் 34
 
Top