கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சாளரச் சாரலே - 1

Poornima Karthic

Moderator
Staff member
மாலை மங்கிய பொன் வேளை, மெல்லிய குளிர் காற்று, கார்மேகங்கள் போர்த்தி வைத்திருந்த முழுநிலவு, மேகம் தெளித்த பன்னீர் தூவல் என ரசனை என்னவென்று தெரியாதவரையும் ரசிக்க வைக்கும் சீதோஷ்ண நிலை.

சூரியன் நோக்கி முகம் காட்டும் சூரியகாந்தி போல், முகத்தை மெல்ல ஆகாயம் நோக்கி உயர்த்திக் காட்டி, 'ம்ம்ஹ்ஹ்ம்' என மூச்சிழுத்தான் உதிரன் பிரதாப். பட்டென முகத்தில் அறையாமல், தொடவா வேண்டாமா என கண்ணாமூச்சி ஆடும் மழைத்துளிகளை ரசித்தவாறு ஒரு மெல்லிய சீழ்க்கை ஒலியை எழுப்பினான் அவன்.

"அடேய் ரோட்டைப் பாத்து ஓட்டுடா! சீக்கிரம் போ மழை வலுத்துடப் போகுது! வேகமாக மழை வரப் போகுது அதுக்கு முன்னாடி நீ வீட்டுக்குப் போடா!" என இருசக்கர வாகனத்தை வானம் பார்த்தபடி ஓட்டுபவனின் தோளை, பின்னால் இருந்து தட்டியவாறு புலம்பினான் அவன் நண்பனும், தூரத்து சித்தியின் மகனுமான யாழினியன்.

"மழை வலுக்கட்டும்டா அதுக்காகத்தானே பொறுமையா வண்டி ஓட்டுறேன். பட் பட்னு மேல மழை பட்டா எப்படி இருக்கும் தெரியுமா? தாய் மசாஜ் தோத்துடும்!" என சிலாகித்துச் சொல்பவனைக் கண்டு பின்னால் இருந்து பெருமூச்சு விட்ட யாழினியன், "போதும் வண்டியை நிறுத்து! நான் நனையாம எலக்ட்ரிக் ட்ரெயின் பிடிச்சு வீட்டுக்கு வந்துடறேன்!" என வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டான்.

இறங்கியவன் விடுவிடுவென பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

"ஏய் யாழினி என் மொபைலைக் குடுத்துட்டுப் போடா!" என உதிரனின் குரல் முதுகில் மோதியதும், திரும்பி அவனை உக்கிரமாக முறைத்த யாழினியன், "முடியாது போடா!" என கோபமா கர்ஜித்து மேலும் சில வார்த்தைகளையும் அர்ச்சித்துவிட்டு போயே போய்விட்டான்.

"அடேய் யாழினியன் செல்போன்டா!" என உதிரன் கத்துவதை அலட்சியம் செய்துவிட்டு போய்விட்டான்.

யாழினியன் என்ற பெயர் வித்தியாசமாகவும், பெரிதாகவும் இருந்ததினால் யாழினி என உதிரனால் செல்லமாக அழைக்கப்பட்டான் அவன்.

"அப்படி கூப்பிடாதடா யாரோ பொண்ணைக் கூப்பிடற மாதிரி இருக்குடா!" என எத்தனை முறை யாழினியன் எடுத்துரைத்தும் உதிரன் கேட்பதாய் இல்லை. இதுவே இந்த முறைப்பிற்குக் காரணம்.

செல்போன் மழையில் நனைந்தால் அதற்கு யார் அதீத பணம் தந்து வைத்தியம் பார்ப்பது, இப்போது இனியனிடம் தஞ்சம் அடைந்து, தப்பித்து விட்டது என்ற நிம்மதியுடன் முகத்தை வான் நோக்கி ஆவலுடன் நீட்டியவனுக்கு பட் பட்டென முத்தம் தந்தன மழைத்துளிகள்.

அவனுக்கும், மழைக்குமான அழகிய தருணத்தைப் பிரிப்பது போன்ற ஒரு சிறு சலசலப்பு அவனுக்குப் பின்னால் கேட்க, யாரோ எவரோ என அதைக் கண்டு கொள்ளாதவன், அந்த சலசலப்பு சற்று வலுவாகத் தொடரவே திரும்பிப் பார்த்தான்.

திரும்பிப் பார்த்த உதிரனுக்குள் புயல் அடித்தது.

'இது அவள் தானே!' என உதிரனின் இதயத்தில் எழுந்த சந்தேகத்திற்கு, 'இது அவளே தான், சந்தேகம் என்ன!' என்று அதட்டலாய் பதில் தந்து அடக்கியது மூளை.

வாடாமல்லியின் நிறத்தில் அவள் அணியும் துப்பட்டாவும், அதற்கு தோதாய் அவள் வழக்கமாய் அணியும் வெளிர் ஊதா நிற சுடிதாரும் எப்போதும் அவனைக் காதல் சிம்பொனி வாசிக்கச் செய்யும். ஆனால் இப்போது அவன் இதயத்தில் யாரோ டமாரம் வாசிக்கும் ஓசை திகிலாய் ஒலித்தது.

'அது அவள் தானா!' என கழுத்தை ஒருபுறமாகத் திரும்பிப் பார்த்தபடி இருந்தவனுக்குள் திடீர் பதட்டம், அங்கே அவள் யாரோ ஒரு ஆளை கீழே தள்ளி அடிவயிற்றில் எட்டி உதைத்துக் கொண்டிருந்தாள். அவனும் எட்டி உதைக்கும் இவள் காலை வாரிவிடத் தயாரானான்.

'அய்யோ!' என்று பதறியபடி உதிரன் தன் இருசக்கர வாகனத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கி ஓடுவதற்குள், அவள் ஓடிச் சென்று மறைந்திருந்தாள். கீழே விழுந்திருந்த அந்த நபரும் தள்ளாட்டத்துடன் எழுந்து நின்றிருந்தார்.

உதிரன் அவருக்கு உதவி செய்வதற்கு நெருங்குவதற்குள், அவர் உடலில் இருந்து வீசிய சாராய வாடையும், வாயில் இருந்து வந்து விழுந்த அபத்தமான ஆபாசமான வார்த்தைகளும் அவனை தள்ளி நிறுத்தின.

'இந்த ஆளுக்கு அந்த உதை தேவை தான்!' என சற்று முன் அவன் இதயத்தில் நிறைந்திருப்பவள் செய்ததற்கு அவனின் மனசாட்சி துணை போனது.

'எதுக்காக அவரை இப்படி அடிச்சு உதைச்சிருப்பா! அது அவ தானே!' என்று நினைத்தபடி வீட்டை அடைந்தவன், வாயில் திண்ணையில் வேறொரு நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு காபியை உறிஞ்சியபடி வரவேற்றாள் ஆத்மிகா.

'நம்ம இவளைத் தான் பார்த்தோமா!' என்ற சந்தேகத்துடன் அவளைப் பார்த்தபடியே தங்கள் குடியிருப்புக்கு செல்ல மாடிப்படி ஏறியவன், படி தடுக்கி, கால் இடறி பெருவிரலில் இடித்துக் கொண்டான்.

"அய்யோ!" என வலியில் அனிச்சையாய் அவன் அலற, "அதுக்குத்தான் பார்வையைப் படி மேல வைக்கணும்னு சொல்றது!" என நக்கலான குரல் அவன் முதுகுப்புறத்தில் ஒலித்தது.

"அய்யய்யோ கால்ல ரத்தம் வருது பாருங்க. வீட்டுக்குப் போய் காலைக் கழுவிட்டு மருந்து போடுங்க!" என குருதி வழியும் அவன் விரலின் மேல் விழி பதித்தவள், நக்கலை மறந்து அக்கறையோடு கூறினாள்.

"ம்ம் சரி!" என தன் வழக்கமான சலசலக்கும் பேச்சை நிறுத்தி அசுவாரஸ்மாகப் பதில் சொன்னவனைக் கண்கள் சுருக்கி தன் வழக்கமான கூர்முனைப் பார்வையைச் செலுத்தினாள் ஆத்மிகா.

"உதிரன் என்னாச்சு! ஏன் இப்படி குழப்பமா என்னைப் பார்க்குறீங்க!" என்றபடி மழைத் தூறலையும் பொருட்படுத்தாது, தோளில் கிடந்த பூந்துவாலையை தலையில் போட்டபடி அவன் அருகில் வந்தாள்.

போச்சுடா! குரல், உடல் மொழி, விழி மொழி, முக மாற்றம் என அனைத்தையும் வைத்து ஆட்களை எடை போடுவதைக் கரைத்துக் குடித்திருந்தவளின் முன், எதையும் மறைப்பது கடினம் எனத் தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்திருந்தவன் தொண்டையைச் செறுமியபடி, "அது வந்து நான் இப்ப வர வழியில், அந்த பர்பிள் கலர் சுடிதார்..." என வாக்கியத்தை முடிக்காமல் நீட்டி முழக்க,

"அது பர்பிள் இல்ல மாவ் கலர் உதிரன்!" என கண்கள் பளபளக்கக் கூறியவளை, 'இந்த கலர் ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் இப்ப!' என நினைத்தபடி மெலிதாக முறைத்தான்.

"ஹா ஹா! ஒரு குழப்பமும் வேண்டாம் உதிரன் அது நானே தான். அந்த ஆளு கூட பழைய கணக்கு ஒண்ணு இன்னும் தீர்க்காம இருக்கு, அதான் கணக்கை திருப்பிக் குடுத்துக்கிட்டு இருந்தேன். வட்டியை மட்டும் தான் குடுத்தேன் முதலைக் கொடுக்குறதுக்கு முன்னாடியே, கையில வெச்சிருந்த ப்ளேடால என் காலை கிழிச்சுவிட்டுட்டான் ராஸ்கல்!" என வலது காலில் கொலுசு போடும் இடத்தைப் பார்த்தபடி அவள் கூற, அவன் பார்வையும் அங்கே பதிந்தது.

அவள் கணுக்காலில் வேகவேகமாக இழுத்த நான்கைந்து கோடுகள் கோணலும் மாணலுமாய் இருந்தது.

"ச்சுப் முனை மழுங்கின கத்தி அவனை மாதிரியே! துருப்பிடிச்சிருந்தா ஆபத்து தானே, அதுனால சேஃப்டிக்கு டிடி ஊசி போட்டுட்டு வந்துட்டேன், சரி தானே நான் செஞ்சது!" என கண் சிமிட்டிய படி ஆத்மிகா கேட்கவும், "ம்ம் ஆமாம் ஆது!" என தலையை மெதுவாக நாலாபுறமும் சுழட்டி ஆட்டினான் உதிரன்.

"நீங்க ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க போல!" என அவள் தலையாட்டலை வைத்து கணித்தவள், "ஒன் மினிட்!" என்றபடி அவள் குர்தியின் பக்கவாட்டில் இருந்த பேக்கட்டில் இருந்து ஒரு சிறு மருந்து குழாயை எடுத்துத் தந்தாள்.

"இந்தாங்க கால் கட்டை விரலை நல்லா கழுவிட்டு போட்டுக்கோங்க பை!" என்று சிரித்த முகத்துடன் அவளின் வீட்டின் உள்ளே புகுந்து விட்டாள்.

அவள் நகரவும், மழை வலுக்கவும் சரியாக இருந்தது.

'அய்யோ! வழக்கம் போல பேச மறந்து இடிச்ச புளி மாதிரி அப்படியே நின்னுன்னுட்டியேடா உதிரா!' என தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், காலை தரையில் ஓங்கி உதைக்க, பட்ட காலிலே மறுபடியும் அடிபட்டது.

"ஆ" என்ற அவன் அலறல், மழைச் சாரலைத் தாண்டி கேட்க, "உதிரன் சீக்கிரம் வீட்டுக்குப் போங்க!" என்று ஆத்மிகாவின் குரல் திண்ணை சன்னலில் இருந்து சிரிப்போடு கேட்டது.

ஹ்ம்ம் என தலையை இடமும், வலமுமாய் ஆட்டியபடி மேலேறிச் சென்றவனை பூட்டியிருந்த வீடு வரவேற்றது.

"சே இந்த யாழினி இன்னும் வரல போல! மொபைல் வேற இல்லயே!" என மறுபடியும் காலை தரையில் அடிக்க ஓங்கியவன் அப்படியே நிறுத்திக் கொண்டு மழையில் நின்றான்.

இயற்கை அன்னை தலையில் வைக்கும் செல்ல கொட்டுக்களாய் விழுந்த மழைத் துளிகளில் தன்னை மறந்து சில நொடிகள் கண்மூடி நின்றிருந்தவனை வேகமாக உலுக்கியது ஒரு கரம்.

கண் திறந்து பார்த்தவனின் எதிரில் தொப்பலாக நனைந்தபடி, மூச்சு வாங்க நின்றிருந்தான் யாழினியன்.

"சீ! மழைக்கு பயந்து இப்படியா மூச்சு வாங்க ஓடி வருவ! என்னமோ மழையில நனையமாட்டேன்னு என் செல்போனை வேற தூக்கிட்டு ஓடுன, சீக்கிரம் கதவைத் திற, என் செல்போனுக்கு சளி பிடிச்சுடப் போகுது!" என தான் கண்டிருந்த காட்சியின் அதிர்ச்சியில் உதிரன் கத்த, "இருடா!" என பதிலுக்கு எறிந்து விழுந்த இனியன், சாவியை எடுத்து பூட்டின் துவாரத்திற்குள் நுழைக்காமல் கைகள் நடுங்க துழாவிக் கொண்டிருந்தான்.

அவன் கையிலிருந்த சாவியை வெடுக்கென்று பிடுங்கிய உதிரன், கதவைத் திறந்துவிட்டு அவனை முறைத்தான்.

"முறைக்கிறது தீவிரவாதம், கண்ணு இருக்குன்னு நீ முறைக்கக் கூடாது. கண்ணு பார்க்கத்தான் இருக்கு, முறைக்க இல்லை சரியா!" என வழக்கமாய் நாலு பக்கத்திற்கு வசனம் பேசும் இனியன் அப்போது ஏதும் பேசாமல், பேயறைந்தார் போல் வீட்டினுள்ளே நுழைந்தான்.

ஒரு சின்ன மழைக்கா இந்த ரியாக்ஷன் என அவனை மேலிருந்து கீழ் கேலியாகப் பார்த்த உதிரன், உள்ளே சென்று உடை மாற்றிவிட்டு தலை துவட்டியபடி வந்தான்.

அப்போதும் ஈர உடையின் நீர் தரையில் சொட்டியடி இனியன் அசையாமல் நிற்பதை கண்டதும், உதிரனின் அடிவயிற்றில் யாரோ மெல்லிய நூல் கட்டி இழுப்பது போன்ற கிலியுணர்வு ஏற்பட்டது.

"ஹேய் என்னாச்சுடா ஏய் யாழினி...ஏய் இனியா!" என கத்தியபடி யாழினியனின் தோளை அவன் குலுக்க, மந்திரக் கட்டில் இருந்து விலகியது போல் அதிர்ந்து நின்றான் யாழினியன்.

"என்னடா ஆச்சு!" என அவன் கண்களையேப் பார்த்தபடி கேட்ட உதிரனிடம், "அவளைப் பார்த்தேன்டா, யாரோ ஒரு ஆளை அடி பொளந்துக்கிட்டு இருந்தாடா!" என்றான் யாழினியன் அதிர்ச்சி மீளாமல்.

"நீயும் பார்த்தியா நானும் பார்த்தேன்டா அவளோட சுடிதார் கலரை வெச்சுத்தான் கவனிச்சேன்" என்றான் உதிரன்.

"சுடிதாரா இல்லையேடா, அவ சேலை தானே கட்டியிருந்தா. அந்தாளு சேலையைப் புடிச்சு இழுத்தான் அப்படியே கன்னத்தைக் காட்டி விட்டா பாரு ஒரு அறை. செம்ம அறை அந்தாளு பொறி கலங்கி நின்னுட்டான்டா. அவளுக்குள்ள இவ்வளவு தைரியமான்னு எனக்கு அதிர்ச்சியாவும், ஆச்சரியமாவும் போச்சுடா!" என எங்கோ வெறித்துப் பார்த்தபடி ஆழ்ந்த குரலில் கூறினான் இனியன்.

"டேய் நீ யாரடா சொல்ற?" என தான் பார்த்த ஆத்மிகா சுடிதார் அல்லவா போட்டிருந்தாள், அதுவும் இல்லாமல் அவள் கன்னத்தில் அறையவில்லையே என்ற குழப்பத்துடன் கேட்ட உதிரனுக்கு, "வேற யாருடா எல்லாம் நம்ம அமர், அமரிஷாவைத் தான் பார்த்தேன்!" என்ற இனியன், தலையை கையை வைத்தபடி தரையில் அமர்ந்தான்.

"சரி அவ அடிச்ச ஆளு எப்படி இருந்தான்டா!" என உதிரனும் அவனுக்கு அருகே அமர, இருவர் பார்த்ததும் ஒரே ஆள் தான் என்பதை யாழினியன் கூறிய அடையாளங்கள் ஊர்ஜிதம் செய்தது.

"டேய் அந்த ஆளு அடையாளம் ஓகே ஆனா நீ பார்த்தது அமர் இல்ல ஆது. நான் அவக்கிட்ட இப்பத்தான் பேசிட்டு வரேன். அவளும் அந்தாளை அடிச்சதை ஒத்துக்கிட்டா. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி, காதலிக்கிறவன் கண்ணுக்கு பாக்குற பொண்ணுங்க எல்லாம் காதலிக்குற பொண்ணு மாதிரியே தெரியுமாம்!" என உதிரன் கேலி செய்ய, அவனை முறைத்துப் பார்த்த இனியன்,

"சரிடா! ஒண்ணு செய்யலாம். இன்னும் அமரிஷா வீட்டுக்கு வரலை நீ நம்ம ஜன்னல்லேர்ந்து கீழ் வீட்டையேப் பார்த்துட்டுக்கிட்டு இரு, அவ மட்டும் மயில்கழுத்து ப்ளூ சேலையில் வந்தான்னா நான் பார்த்தது அவ தான்டா! சீக்கிரம் போய் நில்லு நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்!" என்ற சமயோசித யோசனை சொன்ன இனியனிடம்,

"யாழினி, மயிலுக்கு கழுத்து இருக்கும்னு தெரியும் ஆனா அந்த மயில் கழுத்துல ப்ளூ கலர் இருக்குமாடா அது எப்படி இருக்கும்டா! இப்பத்தான் ஊதா கலருக்கு மாவு, தோசைன்னு அவ கலர் சொன்னா, நீ என்னடான்னா மயில் கழுத்து, மான் கழுத்துன்னு சொல்ற!" என்று கண்ட நேரத்தில் சந்தேகம் கேட்டு உதிரன் கடுபேற்ற, கீழ் வீட்டில் வெளி வாசல் கதவு திறக்கும் க்ரீச் ஒலி கேட்டது.

"தள்ளுடா!" என்றபடி இனியனே ஜன்னலுக்கு விரைந்து வருவது அமரிஷா தானா என்று பார்க்க, அவளே தான் மயிலின் கழுத்து நிறத்தில் புடவை அணிந்து கொண்டு, விடுவிடுவென வீட்டிற்குள் நுழைய நடந்து கொண்டிருந்தாள்.

"டேய் இவனே! இவ தான்டா அந்தாளை தெரு முனையில் வெச்சு அடிச்சுக்கிட்டு இருந்தா!" என பல்லைக் கடித்தபடி யாழினியன் கத்த, "தெருமுனையிலையா! ஆனா ஆத்மிகா அதே ஆளை நீ இறங்கிப் போன இடத்துல தான்டா அடிச்சுக்கிட்டு இருந்தா! ஆக ரெண்டு பேரும் ஒருத்தனையே அடிச்சிருக்காங்க! சரி விடு நம்ம எதிர்கால லைஃப் பார்ட்னர்ஸ்க்கு தற்காப்பு கலை தெரிஞ்சுருக்கு அது நல்லது தானே!" என அவனின் தோளைத் தட்டினான் உதிரன்.

"ம்ம் அதுவும் சரி தான். ஆனா இவ இன்னிக்கு அடிச்சதுக்கு நாளைக்கு அவன் வந்து பழி வாங்கிட்டா, மூஞ்சில ஆசிட் அடிச்சுட்டா என்னடா பண்றது பயமா இருக்குடா! இவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை எப்போதும் அமைதியா சாந்தமா தென்றல் மாதிரி தானே இருப்பா!" என இனியன் கவலை கொள்ள,

"ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!" என தன் கட்டைக் குரலில் பாடி வெறுப்பேற்றினான் உதிரன்.

"தோ பாருடா யாழினி! மனுஷனுக்கு கோபம் தாண்டா இருக்கக்கூடாது, ரௌத்திரம் கண்டிப்பா இருக்கணும். ஆது, அந்தாளை எட்டி உதைச்சதுக்குப் பின்னால கண்டிப்பா நியாயமான காரணம் தான் இருக்கும்னு நான் நம்புறேன். அதுனால அவ அவனை போட்டுத்தாக்கும் போது மனசுக்குள்ள பெருமிதமா அப்படி ஒரு பேய் மழை தெரியுமா! சத்தமா விசில் அடிக்கணும்னு தோணுச்சு. நீ என்னடான்னா இப்படி பயந்து சாகுற!"

"தென்றல், சாரல், இளவெயில், மென்பனி இப்படி இயற்கையில் கூட எனக்கு மென்மை தான்டா பிடிக்கும். பயங்கர இடி, பேய் மழை, புயல் எல்லாம் இயற்கை சீற்றம் தானே, அதே மாதிரி தான்டா இந்த வம்பு சண்டை எல்லாம். ஆணோ பெண்ணோ சண்டை போடாம ஒதுங்கிப் போறது தான் நல்லது" என சற்று நேரம் புலம்பியவன், "நான் போய் நைட்டுக்கு, வயுத்துக்கு இதமா நொய் உப்புமா செய்யறேன்!" என எழுந்து சென்றான்.

"ஏன்டா யாழினி! சாப்பாட்டுல கூட இதமாத்தான் சாப்பிடுவியா!" என அவனை கேலி கிண்டல் செய்து உதிரன் ஓட்ட, அவன் பதிலுக்கு முறைக்க என்று நேரத்தைக் கழித்து, எதற்காக அப்பெண்கள் இருவரும் அந்த நபரை அடித்தார்கள் என ஆராய்ச்சி செய்தபடியே உறங்கிப் போனார்கள்.

மறுநாள் வழக்கம் போல் அதிகாலை வேளை இதமான பனியில் ஜாகிங் போயிருந்த யாழினியன் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து தலை முதல் கால் வரை போர்த்தியபடி உறங்கும் உதிரனை எழுப்பினான்.

அவன் கையில் அன்றைய செய்தித்தாள் இருந்தது.

"டேய் எந்திரிடா, சீக்கிரம் இதைப் பாருடா!" என உறக்கம் முழுதும் கலையாமல் அரைக்கண்களோடு எழுந்து அமர்ந்திருந்த உதிரனின் முகத்திற்கு அருகே அந்த செய்தியைக் காண்பித்தான்.

அரைகுறையாய் அதைப் படித்தவனின் கண்கள் அகலத் திறந்து கொள்ள, கைகள் தானாய் செய்தித்தாளை வெடுக்கென்று பிடுங்கியது.

நேற்று அவர்கள் பார்த்திருந்த நபரின் அடையாளங்களோடு ஒரு ஆண்சடலம் ஒன்று, அவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவில் கைப்பற்றப்பட்டதாகச் செய்தி பதிப்பிக்கப்பட்டிருந்தது. அதனுடனே அந்த நபரின் முகத்தையும் பதிவிட்டிருந்தனர்‌.


'அய்யய்யோ!' என உதிரன் சன்னமாக அலற, "பாத்தியா அதே வழுக்கைத் தலை, அதே அறுபது முதல் அறுபத்தி ஐந்து வயசு, சிவந்த தேகம், மூஞ்சில பெரிய திராட்சை அளவு மருன்னு எல்லாம் அப்படியே இருக்கு. பாரு ஒரு சண்டை மர்டர் வரைக்கும் வந்திருக்கு. கொலை செஞ்சது யாரா இருக்கும் ஆத்மிகாவா இல்ல அமரிஷாவா" என இனிமையைத் தொலைத்து கிலியோடு ஒலித்தது யாழினியனின் குரல்.

"என்னடா சொல்றா மர்டரா!" என அதே திகிலோடு ஒலித்தது உதிரனின் குரல்.
 
Last edited:
Top