கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சாளரச் சாரலே - 4

Poornima Karthic

Moderator
Staff member
"அடியேய் ஆது! லீவு நாளும் அதுவுமா வீட்டுல இருக்கீங்களா! இன்னிக்கு அங்க போய் தான் ஆகணுமா! அமரி நல்லாத்தானே இருந்தா இப்பப்பாரு மூஞ்சி எல்லாம் வீங்கிப் போய் அழுதிட்டு வந்திருக்கா!" என ஞாயிற்றுக்கிழமையில் சீரியலை தடை செய்திருந்த கடுப்பில் பொறிந்து தள்ளினார் கண்ணாத்தா ஆச்சி.

"ஐமாதா! உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லவா?" என ரகசியக்குரலில் பேசியபடி அவருடன் டேப் கட்டிலில் இடித்தபடி அமர்ந்தாள் ஆத்மிகா.

"ச்சுப் தள்ளிப் போடி! சும்மா மபினு மாதிரி வந்து ஈஷிக்கிட்டு" என தன்னிடம் உள்ள நோய் எங்கே மற்றவர்களுக்கும் வந்து விடுமோ என்ற சதா அச்சத்தில் இருக்கும் கண்ணாத்தா, இப்போதும் ஆதுவை கடிந்தபடி நகர்ந்து அமர்ந்தார்.

"ஐமாதா, உங்களுக்கு வந்த நோய் ஒட்டுவார் ஒட்டி இல்ல, உங்களுக்கு வந்தது பக்கவாதம் தான் அதுவும் இப்ப சரியாப் போச்சு. இப்ப நான் சொல்ற கதையைக் கேளுங்க!" என மறுபடியும் அவரின் அருகே நகர்ந்து உட்கார்ந்து, அவரின் தோளின் மேல் கையைப் போட்டுக் கொண்டாள் ஆத்மிகா.

கண்ணாத்தா உம்மென்று இருக்க அவரின் தாடையைத் தொட்டுத் தூக்கி, "ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தானாம்..." என்று ஆத்மிகா சொன்னதும், "ம்ம் அப்புறம்.." என கண்களில் பல்ப் எரிய ம்ம் கொட்டினார் கண்ணாத்தா.

"அதானே கதைன்னு சொன்னதும் முகம் முழுக்க மத்தாப்பு தான்" என தன் முஷ்டியால் அவரின் கன்னத்தில் செல்லமாகக் குத்திய ஆது, கதையைத் தொடர்ந்தாள்‌.

"எங்கவிட்டேன்..ஹாங் அந்த பையன் ஒரு நாள் காட்டு வழியில சாப்போட்டா பழம் சாப்பிட்டுக்கிட்டே போனானாம். அப்படி சாப்பிடும் போது அகப்பட்ட பழத்தோட கொட்டைகளை அங்கயும், இங்கயும் காட்டுக்குள்ள வீசிட்டுப் போயிட்டானாம்".

"ஆமாம், காட்டுல என்ன மக்கும் குப்பை மக்காத குப்பைன்னு குப்பைத் தொட்டியா இருக்கும். ஜவ்வு மாதிரி இழுக்காம டப்புனு சொல்லு புள்ள!" என்றார் ஆச்சி கடுப்புடன்.

"அப்புறம் அந்த பையன் பாட்டுக்கு அவன் வேலையை முடிச்சுட்டு, வீட்டுக்குப் போய் சாப்பிட்டு தூங்கிட்டானாம்".

"கொடுமை, கொடுமை இதுவாடி கதை‌. நீ சொல்ற கதையை ஓட்டு மேல் உக்காந்திருக்குற காக்கா கூட கேட்காது".

"ச்சுப் இன்னும் கதை முடியல கண்ணு! அந்த பையன் தூங்கினாலும் அவன் தூக்கிப் போட்டுட்டுப் போன விதை தூங்கலையாம்! அது கொஞ்ச நாள்ல துளிர் விட்டு, செடியா மாறி, அப்புறம் பெரிய மரமா மாறி, காட்டு வழியாக போற வரவங்களுக்கு எல்லாம் நிறைய சப்போட்டா பழங்களைத் தந்துச்சாம். இதைத்தான் கார்ல் மார்க்ஸ் விதைத்தவன் உறங்கினாலும், விதை உறங்காதுன்னு சொன்னாரு. அதாவது இப்ப நான் அமரை கவுன்சிலிங் கூட்டீட்டுப் போனேன்ல, அங்க அவங்க விதைச்ச நல்ல எண்ணங்கள் அமர் உறங்கினாலும், உறங்காம மனசுக்குள்ள விழிச்சுக்கிட்டு இருக்கும். அதுவே அவளுக்கு பெரிய நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். என்ன நான் சொல்றது புரிஞ்சுதா!" என தோளில் இருந்த கையை மேலும் இறுக்கி அவரை அணைத்துக் கொண்டபடி கேட்டாள் ஆத்மிகா.

"எனக்கு என்ன புரிஞ்சுச்சு! நீ என்னிக்கு என் வாழ்க்கையில வந்தியோ, அன்னிலேர்ந்து நீ சொல்றது தான் எனக்கு வேதவாக்கு. பகவானாப் பாத்து, பதினாறு வயசுல எனக்குத் தந்த சிங்கக்குட்டி நீ, நீ உன்னோட சேர்த்து இன்னொரு தங்கக்கட்டியையும் கூட்டீட்டு வந்துட்ட!" என ஆத்மிகாவின் முகத்தை வழித்து நெட்டி முறித்து, திருஷ்டி கழித்தார் கண்ணாத்தா.

"கண்ணு, ரொம்ப ஓவரா இருக்கு இதெல்லாம், நம்ம எலியும் பூனையுமா இருந்தாத்தான் நல்லா இருக்கு, இந்த பாசம் எல்லாம் நமக்குள்ள செட்டாகுது ஐமாதா!" என அவரின் கன்னத்தில் இச்சொன்று வைத்து சிரிக்கும் ஆதுவையே தூரம் நின்று கொண்டிருந்த அமரி கண்கள் பனிக்கப் பார்த்திருந்தாள்.

இருவரும் கொஞ்சிக் கொள்வதைப் பார்க்கையில், அமரிஷாவிற்குள் ரசனை ஊற்றெடுத்தது.

"ரெண்டு பேரும் அப்படியே இருங்க!" என உரக்கக் கத்திவிட்டு உள்ளே ஓடிச் சென்றவள், கை நிறைய கல் உப்பினை அள்ளி வந்து, "நாய் கண்ணு, நரி கண்ணு, தாய் கண்ணு, ஊர் கண்ணு" என சுற்றிப் போட்டாள். அவள் கையை வட்ட வடிவில் சுழட்டுகையில், அவள் பின்னே நின்றிருந்த மஃபினும் அவள் கையின் கூடவே தலையை வட்டமாகச் சுழற்றியது.

"ம்ம் இப்ப துப்புங்க!" என்று இருவரையும் துப்பச் சொன்னவள் அந்த உப்பை கரைக்க உள்ளே ஓடினாள். அவளின் பின்னே மஃபினும், முதல் ரயில் பெட்டியைத் தொடரும் அடுத்த பெட்டி போல் அவள் போகும் திக்கெங்கும் ஓடியது.

"ஏய் ஆது! என்னவோ விதை மரம்னு எல்லாம் சொன்ன, ஆனா இவ தாய் கண்ணுக்கு அப்புறம் தகப்பன் கண்ணுன்னு சொல்லாம போறா பாத்தியா! அப்படின்னா அவ இன்னும் மனசு தெளியலைன்னு தானே அர்த்தம்" என கண்ணாத்தா விசனப்பட,

"பார்த்துக்கலாம் ஆச்சி! நல்லதே நடக்கும்னு நினை, நல்லது மட்டும் தான் நடக்கும் சரியா. இப்ப உன்னோட மாடலிங் டைம். புதுசா வல்க்ரோ வெச்ச நைட்டி தைச்சுருக்கேன். அது உன்ன மாதிரி உடம்பு முடியாம இருக்குறவங்க தானா போட்டுக்கலாம். அப்புறம் படுத்த படுக்கையாக இருக்கறவங்களோட அட்டென்டர்ஸுக்கும் போட்டுவிட ஈசியான டிசைனா இருக்கும். இப்ப வரேன், நீ மூஞ்சு கழுவி ரெடியா இரு என்ன!" என உள்ளே சென்று உடைகளை எடுத்து வரச் சென்றாள் ஆத்மிகா.

ஆத்மிகா நான்கைந்து பெண்களை வைத்துக் கொண்டு, ஒரு சிறிய பொடிக்கை நடத்திக் கொண்டிருந்தாள். பாரீஸ் கார்னர், சௌகார் பேட்டை, தியாகராய நகர் மற்றும் ஆன்லைன் என தரமான துணிகளைத் தேடித் தேடி கொள்முதல் செய்து, ஆளை அசரடிக்கும் வகையில் விதவிதமான வடிவங்களில் உடைகளைத் தைப்பதில் வல்லவள் அவள். போதாததற்கு சிறு உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் வீட்டில் தயாரிக்கும் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொடிகளை மொத்தமாக வாங்கி, சில்லறையில் விற்பனை செய்து கொண்டிருந்தாள்.

தான் பள்ளி செல்ல முடியாத சூழலை என்றும் குறை சொல்லாதவள், இன்று தனியார் வழியில் பத்து, பனிரெண்டு மற்றும் இளநிலை ஃபேஷன் டெக்னாலஜி படித்து முடித்திருந்தாள். அமரிஷாவையும் தொலை தொடர்பில் இளநிலை உளவியலில் சேர்த்து விட்டிருந்தாள்.

"ஆச்சி! அவ படிக்கிறது மத்தவங்களுக்கு உதவுதோ இல்லையோ அவளுக்கு உதவும். அவளோட மன உணர்வுகளை ஆராய்ச்சி செய்யவாவது உதவும் ஆச்சி!" என்று கூறுபவள் ஆத்மிகா.

"ஏண்டி ஆது நீ என்னிக்குத் தான் உனக்குன்னு வாழப் போற, சம்பாதிக்குற பணம் எல்லாத்தையும் என் வைத்திய செலவுக்கும், அமரியோட செலவுக்கும் செலவழிக்கிற!" என அடிக்கடி கண்ணாத்தா கேட்பது உண்டு

"யார் சொன்னா அப்படின்னு, நம்ம மூணே பேர் பேர்லயும் பேங்க்ல பணம் இருக்கு, அப்புறம் இன்னும் எங்கெல்லாமோ சேர்த்து வெச்சிருக்கேன். பணம் ரொம்ப முக்கியம் ஐமாதா. அதெல்லாம் சீக்ரெட், நான் இப்ப வீடியோ எடுக்கப் போறேன். டயலாக் எல்லாம் எப்போதும் பேசுறது தான், என்ன ரெடியா!" என்றபடி அவளின் புது மாடல் நைட்டியை மாட்டிக் கொண்டு கண்ணாத்தா ஆச்சி கொடுத்த போஸ்களை புகைப்படம் எடுத்தவள் அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினாள்.

அதே நேரம் அமரிஷா பத்து வருடங்களிற்கு முன் தன் கழுத்தில் ஆத்மிகா கத்தியால் போட்டிருந்த நட்பின் தழும்பை கண்ணாடியின் முன் நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

"ஓய்! என்ன அமர், என் லவ் பைட்ட (love bite) அப்படி பார்த்துக்கிட்டு இருக்க!"

"இல்ல, அன்னிக்கு கழுத்துல வச்சு அழுத்தினதுக்குப் பதில் ஒரேயடியா சரக்குன்னு நீ இழுத்திருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன் ஆது?".

"என்ன ஆயிருக்கும், நீ பொட்டுன்னு போயிருப்ப, நான் ஜெயில்ல களி தின்னுக்கிட்டு இருந்திருப்பேன். ஆனா இந்த ஆது அப்படியெல்லாம் செய்யமாட்டா, கோவத்துலயும், ஆத்திரத்துலயும் ஒருத்தனுக்குத் தண்டனை குடுக்குறோம்னு நினைச்சுக்கிட்டு கொலை செஞ்சுட்டோம்னு வையு, அது நமக்கு நாமே தண்டனை குடுத்துக்குறதுக்கு சமம் அமர்!" என்று பேசியபடி அமரிஷாவின் முதுகில் செல்லமாக ஒரு அடி வைத்தாள்‌.

"ஆது, ஏய் மாடி வீட்டு தம்பி வந்திருக்குடி!" ஆச்சியின் குரல் உள்ளறையை எட்ட, "எந்த தம்பி?" என்றபடி வெளியே வந்தாள் ஆத்மிகா.

அமரியோ தலையை மட்டும் நீட்டி வந்திருப்பது யார் என்று பார்த்தாள். கையில் பணத்துடன் வந்து நின்றது உதிரன் தான் என்றதும், ஓட்டிற்குள் தலையை இழுத்தும் கொள்ளும் ஆமை போல் தன் தலையை இழுத்துக் கொண்டு உள்ளே மறைந்தாள் அமரிஷா.

"இந்தாங்க வாடகைப் பணம்" என்று நீட்டியவனிடம், "இன்னிக்குத் தேதி ஒண்ணு தானே, மூணாம் தேதி ஆக இன்னும் ரெண்டு நாள் இருக்கே!" என்று ஆதுவின் வாய் பேசினாலும், கைகள் தானாக அவன் கொடுத்திருந்த பணத்தை எண்ணி சரி பார்த்துக் கொண்டிருந்தன.

"தம்பி செஞ்சது தான் சரி, சம்பளப் பணம் வந்ததும் வாடகை குடுத்துடணும், இல்லைன்னா பணம் எது எதுலயோ செலவாயிடும்ல!" என அவன் மனதில் இருந்த கருத்தைக் கச்சிதமாகக் கவ்வியிருந்த கண்ணாத்தா ஆச்சியைப் பார்த்து சிரித்தான் உதிரன்.

"ம்ம் பணம் சரியா இருக்கு, தேங்க்யூ!" என்றவள் உள்ளே திரும்பி நடக்க, "ஆத்மிகா, உங்க ஜி பே நம்பர் குடுத்தா நான் அடுத்த மாசத்துல இருந்து அகௌண்ட்ல போட்டுருவேன்" என்று கேட்டு நிறுத்தினான் உதிரன்.

"சாரி உதிரன், எனக்கு பணமா குடுக்குறது தான் பெட்டர்னு தோணுது!" என்று சொன்னவள் அவனின் புருவம் ஏறி இறங்குவதைப் பார்த்து, "டேக்ஸ் எல்லாம் சரியாத்தான் கட்டுறேன். ஆனா இந்த வாடகை பணம் தங்க நகை சீட்டுக்குன்னு எடுத்து வெச்சிருக்கேன், சோ நீங்க எனக்கு பேங்க்ல போட்டு, அதை நான் மறுபடி எடுத்து கடையில் கொடுத்துன்னு எதுக்காகத் தேவையில்லாத வேலை செய்யணும், அதான்!" என்று கூறி மையமாகப் புன்னகைத்து விட்டுச் சென்றாள் ஆத்மிகா.

"தம்பி பாத்தியா என் ஆதுவோட அறிவை!" என்று கூறிய கண்ணாத்தா ஆச்சியின் முகத்தில் அத்தனை பெருமிதம்.

'ஆச்சி, பசி தாங்கல எனக்கும் இவளுக்கும், உன் குடிசைல இடம் தருவியா ஜமுனா அக்கா தான் அனுப்பிவிட்டாங்க' என இந்தி கலந்த தமிழில் புகலிடம் தேடி அகதியாய் வந்தவளா இவள், சிறு புல் பூண்டு போல் பூஞ்சையாய் இருந்தவளைக் கண்டு பரிதாபம் கொண்டவருக்கு அப்போது தெரியவில்லை, அவள் புல் இல்லை ஒரு அடர்ந்த காட்டை உருவாக்கும் வல்லமை கொண்ட விருட்சம் என்று.

கடவுள் தமக்கு அளித்த இரு தேவதைகள் என அவர்கள் இருவரையும் பற்றிப் பெருமையாக அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஆச்சி இப்போதும் நினைத்துக் கொண்டார்.

********

மெல்ல தன் கூட்டிற்குள் இருந்து வெளிவர உளவியலாளர் மற்றும் ஆதுவின் துணையோடு முயற்சி செய்து கொண்டிருந்த அமரிஷா, நான்கு மாதங்களுக்கு முன்னால் தான் ஒரு பல்கடை அங்காடியின் விளையாட்டுப் பகுதியில் (game zone) வேலைக்கு அமர்ந்திருந்தாள்.

குடும்பம் குடும்பமாய் சிறு பிள்ளைகளுடன் வந்து விளையாடுவோரைக் காண்கையில் அமரிக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். சிறுவயதில் தவறவிட்ட மற்றும் கிடைக்காத விளையாட்டுக்களை பிள்ளைகளோடு அம்மாவும், அப்பாவும் சேர்ந்து விளையாடுவதைக் காண்கையில் அமரியின் அடிநாக்கில் தித்திக்கும்.

இரண்டோ அல்லது அதற்கும் மேலோ பிள்ளைகளோடு வருபவர்களின் பாடு தான் திண்டாட்டம். 'எனக்கு இந்த விளையாட்டு தான் வேணும் இல்ல எனக்கு அது தான் வேணும்' என இரண்டும் இரு வேறு பக்கம் கை காட்டும், பெற்றோர்களோ கையில் இருக்கும் விளையாட்டு அட்டையினை வைத்து, இங்கே ஒரு தட்டு அங்கே ஒரு தட்டு என தட்டுவர், பிள்ளைகளின் மகிழ்ச்சி எகிற எகிற, அட்டையில் உள்ள காசும் சரசரவென குறையும்.

பலர் கேம் ஸோனுக்கு உள்ளே நுழைந்ததும் கண்ணில் கண்டதை எல்லாம் விளையாடி அட்டையைத் தேய்க்க, சிலரோ மற்றவர்கள் விளையாடுவதை ஆழ்ந்து அனுபவித்துப் புரிந்து கொண்டு விளையாடுவர். வேறு சிலரோ விளையாட்டில் வரும் டிக்கெட்டிற்காக விளையாடுவர்‌. டிக்கெட்டில் வரும் பரிசுப் பொருள் கால் பணம், அதற்காக விளையாடுவதற்கு செலவழிப்பது முக்கால் பணம் என பலருக்குத் தெரியவில்லை, தெரிந்தாலும் விளையாட்டில் வரும் மகிழ்ச்சிக்கு எதுவும் இணையில்லை என்பது போல் இருந்தனர்.

இப்போதெல்லாம் சிறு குழந்தைகளோடு வரும் பெற்றோரைக் காண்கையில், தனக்கும் அப்படி குடும்பம் சகிதமாக வந்து இது போல் விளையாட வேண்டும் என்ற ஆவல் அமரிக்கு எழுந்தது. முதன்முதலில் அந்த எண்ணம் வந்த போது சற்று நெருடலாய் இருந்தாலும், மறுபடி மறுபடி அதே எண்ணம் வந்து நெருடலைப் போக்கி ஏக்கத்தைத் தந்தது.

'உன் பக்கம் நியாயம் இருக்கும் போது நீ ஏன் சாதாரணமா மத்தவங்க மாதிரி வாழாம, கூனிக் குறுகி இருக்க அமரிஷா. உனக்கும் மத்தவங்களைப் போல் வாழ அத்தனை தகுதியும் உண்டு' என உளவியலாளர் அடிக்கடிக் கூறியதாலோ என்னவோ அமரிக்கும் அப்படித் தோன்றத் தொடங்கியது.

அவள் மனதில் எழுந்த ஆவல் மட்டும் ஆத்மிகாவிற்குத் தெரிந்தால், 'கல்யாணத்தை செஞ்சுக்கிட்டு உன் அம்மா, என் அம்மா, இந்த கண்ணாத்தா எல்லாரும் என்னத்தைக் கண்டாங்க அமர். அது ஒரு மாயவலை அமர், வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு எப்ப உள்ள போவோம்னு இருக்கும். உள்ள போய் மாட்டிக்கிட்டவங்களைக் கேட்டா எப்படா வெளிய வருவோம்னு காத்துக்கிட்டு இருக்குறது தெரியும்' என நான்கு பக்கத்திற்கு அறிவுரை கூறுவாள்.

அவளின் ஆது சொல்வதும் சரி தானே என்ற பெருமூச்சோடு கணினித் திரையில் இருந்து தலையை நிமிர்த்தியவள், 'அய்யோ இவன் எங்க இங்க வந்தான்!' என தான் வேலை பார்க்கும் பல்கடை அங்காடியின் சிறுவர் விளையாட்டுப் பகுதிக்கு அதே வாரத்தில் மூன்றாம் முறையாக வந்த இனியனைக் கண்டு துணுக்குற்றாள்.

'சரி தினமும் எவ்வளவு பேரோ வருகிறார்கள், போகிறார்கள் அதில் இவனும் ஒன்று' என தன் கலக்கத்தை மறைத்தபடி விளையாட்டில் வெற்றி பெறும் டிக்கெட்டிற்கான பரிசுப் பொருட்களை அடுக்கி வைத்தாள்.

சிறு வயதிலிருந்து அவளுடனேயே வளர்ந்து வந்த பயத்தின் வளர்ச்சியை தற்சமயத்தில் தான் உளவியல் சிகிச்சை மேற்கொண்டு தடை போட்டு நிறுத்தி இருந்தாள் அமரி. ஆனால் இப்போது இனியனைக் கண்டதும் அந்த பயம் மறுபடி துளிர்க்க ஆரம்பித்தது.

விளையாட்டுப் பொருட்களையும், விளையாடுபவர்களையும் சுற்றி சுற்றி வந்த யாழினியன், அமரிஷாவின் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான், அவன் அருகே வர வர துளிர் விட்டிருந்த பயம், கிளை பரப்பி ராட்சச உருவம் எடுத்தது.

அவளின் மனதிற்குள், அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே என்ற பாடல் ஆதுவின் குரலில் ஒலித்தது. ஒரு கணம் கண் மூடித் திறந்தவள், அவனை அருகில் காணாது திகைத்தாள்.

அவன் ஏதோ பேசப் போகிறான் என பயம் கலந்த ஆவலில் இருந்தவளுக்கு வழக்கம் போல் எதுவுமே பேசாமல் சென்று விட்டானே என நினைத்ததும் நசநசத்த மழையில் கூம்பிப் போன பூவைப் போல் ஆனது அவளின் முகம்.

அவள் அங்கும் இங்கும் தேடுவதை அவளுக்குத் தெரியாமல் தூரமாய் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்த இனியனுக்கு, அவளின் தேடல் ஒரு சொர்க்க அனுபவத்தைத் தந்தது.
 

Latha S

Administrator
Staff member
கொஞ்சம் குழப்பமா இருக்கு. என்ன நடந்து இருக்கும் இவர்கள் வாழ்க்கையில்..
 
Top