கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சாளரச் சாரலே - 5

Poornima Karthic

Moderator
Staff member
"அடேய்! நீ என்னை விட பத்து மாசம் சின்னவன்டா! உனக்கு என்னடா இவ்வளவு அவசரம், நீ இன்னும் விளையாட்டுப் புள்ள தான்டா, மெச்சூரிட்டி வரவே இல்லியே டா உனக்கு!" என பொங்கி வரும் சிரிப்பை அடக்கிய படி உதிரன் பேச,

"ஏய், உன்னை எவன்டா முந்திரிக்கொட்டை மாதிரி எனக்கு முன்னாடி பொறக்கச் சொன்னது. எனக்கு முன்னாடி பிறப்பியாம், எனக்கு முன்னாடி எல்‌கேஜி போவியாம், பத்தாவது பனிரெண்டாவது எழுதுவியாம், காலேஜ் போவியாம் எல்லாத்துலயும் நீ தானே முதல்ல இருந்த, இந்த ஒண்ணுத்தலயாவது என்னை முதல்ல வர விடேன்டா!


ஆமாம் மெச்சூரிட்டின்னா என்ன! எமேசனுக்கு மயங்காத ஏகாம்பரம் நான்னு, நீ அடிக்கடி விட்டத்தைப் பார்த்துக்கிட்டு உர்ர்னு இருப்பியே, அப்படி இருந்தாத் தான் மெச்சூரிட்டின்னா கண்டிப்பா எனக்கு மெச்சூரிட்டி இல்ல போதுமா!" என யாழினியனும் பதிலுக்குப் பதில் பேசினான்.

"சரிடா டென்ஷன் ஆகாத, நீ என்னைத் தாண்டி முதல்ல வரணும்னா, அதுக்கு உங்க அம்மாக்கிட்டல்ல கேக்கணும், எதுக்கு எங்க அம்மாவை சப்போர்ட்டுக்குக் கூப்பிடற!" என்று விளையாட்டுக்கு பேசுகிறேன் என்று நினைத்து வினையைப் பேசியது வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வந்த பிறகே உதிரனுக்குப் புரிந்தது.

யாழினியன் கண் கலங்கி நிற்கவும் தான், என்ன சொன்னோம் என்று உணர்ந்த உதிரன், "அய்யோ சாரிடா! லூசுத்தனமா ஏதோ சொல்லிட்டேன். இப்ப என்ன உடனே அம்மாவுக்குப் போன் போட்டு சீர் வரிசை தட்டோட வரச் சொல்றேன் போதுமா!" என சமாதானப்படுத்தினான்.

"அய்யோ!" என வலது கையால் நெற்றியில் அடித்துக் கொண்ட இனியன், "தட்டு எல்லாம் அப்புறம்டா முதல்ல பெரியம்மாவை வந்து கண்ணாத்தா ஆச்சிக்கிட்ட பேசச் சொல்லு போதும்" என்றான்.

"அது சரி!" என அழகாக நாலாபுறமும் தலையைச் சுழற்றிய உதிரன், "சும்மா பேச்சுக்கு தட்டு சீர்வரிசைன்னு சொன்னா நீ உடனே நம்பிடுவியா! முதல்ல அமரிஷாவுக்கு உன்னைப் பிடிக்கணும்லடா!" என்றான் நியாயமான குரலில்.

"அவளுக்கு நிச்சயமா என்னைப் பிடிச்சிருக்குடா! என்னைப் பார்க்கும் போதெல்லாம், அவ கண்ணுல லேசா ஒரு மின்னல் தெரியும்டா. அன்னிக்கு கூட கேம் ஸோன்ல என்னைக் காணும்னு தேடுனாடா! ஒற்றைப் புருவம் தூக்கி பார்ப்பதுன்னு என் மேனரிசத்தைப் பத்தி கவிதை கூட எழுதி, நம்ம ப்ளாக்கு தந்திருக்காடா!" என தேடித்தேடி ஆதாரங்களைத் திரட்டிச் சொன்னான் இனியன்.

"ச்சுப்! இந்த மின்னல் மழை மோகினி எல்லாம் வேலைக்கு ஆகாது. உன்னை அவளுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாளா? உன்னோட குணாதிசயங்கள் எல்லாம் அவளுக்குத் தெரியுமா? உன் வீட்டு ஆளுங்களைப் பத்தி அவளுக்குத் தெரியுமா? இதே கேள்விகளுக்கான அவளைப் பற்றிய விடைகள் உனக்குத் தெரியுமா? மின்னல், கவிதை இதையெல்லாம் வெச்சுக்கிட்டு வாழ முடியாது‌. பீ ப்ராக்டிகல் யாழினி. ரெண்டு பேரும் நிறைய பேசி புரிஞ்சுக்கோங்க, அதுக்கு அப்புறம் நானே அம்மாவை வரச் சொல்றேன்!" என தோழனாக மட்டுமல்லாமல் ஆசனாகவும் கூறினான் உதிரன்.

அதற்குப் பதிலாக, "அய்யய்யோ!" என்ற சத்தம் மட்டுமே இனியனின் வாயில் இருந்து வந்தது.


"என்னடா?"

"இல்லடா..அது வந்து நான் ஏற்கனவே பெரியம்மாவை கிளம்பி வரச் சொல்லிட்டேன். அவங்க இன்னும் ஒரு மணி நேரத்துல சென்னை வந்துடுவாங்க" என்றான் இனியன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே,

"அடப்பாவி! என்னை முந்திரிக் கொட்டைன்னு சொல்லிட்டு நீ என்ன செஞ்சு வெச்சிருக்க? அவங்ககிட்ட என்னன்னு சொல்லி வர வெச்ச? அப்பாவும் கூட வராரா, அம்மா வந்தா அவரும் தானே வருவாரு, அய்யோ அய்யோ நகருடா!" என திட்டிக் கொண்டே, கலைந்து கிடந்த அறையை சுத்தப்படுத்தினான்.

"கொடியில் துணி தொங்குனா தரித்தரம்னு சொல்லுவாங்களே! குப்பையாக் கிடந்தா மகாலக்ஷ்மி போயிடுவான்னு சொல்லுவாங்களே! ஏய் யாழினி, என்ன என்னையேப் பார்த்துக்கிட்டு இருக்க ஒழுங்கா எனக்கு உதவி பண்ணு, ஓடிப் போய் அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணு போ, நீ செஞ்ச வேலைக்கு அது தான் தண்டனை!" என கையில் வைத்திருந்த துண்டை சுருட்டி, அவன் முதுகில் ஒன்று சுளீர் என்று போட்டான்

"டேய் அடிக்காத டா உதிரா! நான் என்னோட லவ் மேட்டர் எல்லாம் ஒண்ணும் சொல்லலை, உதிரனுக்கு மனசு சரியில்லைன்னு சொல்லித்தான் வர வெச்சிருக்கேன்!" என மறுபடி எங்கே அவன் அடிப்பானோ என்று பயந்தபடி, பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டுக் கத்தினான் யாழினியன்.

"அடப்பாவி! எனக்கு மனசு சரியில்லைன்னு தெரிஞ்சா அம்மா அப்பா சாப்பிடாம கொள்ளாம ஓடி வருவாங்களேடா, ஏன்டா இப்படி செஞ்ச?" என்று கத்தியபடி, அவசரமாக சமையலறைக்குள் ஓடினான் உதிரன்.

அம்மாவிற்கு சாதம் மட்டும் போதும் அவர் கொண்டு வரும் தொக்கு, குழம்பு இன்ன பிற வகைகள் அதற்குத் தோதாய் இருக்கும் என அரிசி களைந்து உலை வைத்தவன், அப்பாவிற்கு பிடித்த நூடுல்ஸ் மஞ்சள் நிற உடையில் அழகுற வீற்றிருப்பதைக் கண்டு திருப்தியுற்று, அதற்கு தேவையான காய்கறிகள் பொடியாக நறுக்கி பாத்திரத்தில் மூடி வைத்தான்.

முகம் கழுவி, என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு முகத்தை பளிச்சென்று காட்ட பவுடர் போட்டு, நெற்றியில் சிறு கீற்றாய் திருநீறைப் பூசிக் கொண்டான் உதிரன். முகம் சற்றே பொலிவிழந்து இருந்தாலும், இரண்டு பேரும் புலம்பித் தள்ளிவிடுவார்களே என்று எண்ணியபடி தன் முகத்தை அப்படியும், இப்படியும் செல்ஃபி கேமிராவில் திருப்பிப் பார்த்துக் கொண்டு திருப்தியுற்று, தன் கன்னங்களைத் தானே கிள்ளி, ஐந்து விரல்களால் அள்ளி முத்தம் வைத்துக் கொண்டான்.

"ம்ம்கும்.‌..உதிரன் உங்க அப்பா அம்மா வந்திருக்காங்க, சீக்கிரம் கீழ வாங்க!" என அவனுக்குப் பின்னாலிருந்து குரல் கொடுத்தாள் ஆத்மிகா.

சட்டென குரல் கேட்கவும் பதறிப் போய் திரும்பியவனுக்கு, ஊதாப் பூ போன்று வெளிர் ஊதா சல்வார் கமீஸ் மற்றும் அடர் ஊதா துப்பட்டாவில் காட்சி தந்தாள் ஆது.

"என்ன சொன்னீங்க?" என தன் காதில் விழுந்தது சரி தானா என்று மறுபடி ஒருமுறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவன், தோளில் கிடந்த துண்டை தூரம் எறிந்துவிட்டு கீழே ஓடினான்.

"அப்பா, அம்மா!" என வீட்டின் வாயிலில் இருந்தே அழைத்தவனுக்கு, "வாப்பா தம்பி உள்ள வா!" என பதிலளித்து அழைத்தது கண்ணம்மா ஆச்சி தான்.

'இந்த அம்மா, அப்பா பதில் கூட சொல்லாம அப்படி என்ன செய்யுறாங்க வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்காங்க!' என்று எரிச்சல் மேலோங்க, வீட்டில் உள்ளே நுழைந்தவனை வாய் நிறைய கேசரியோடு வரவேற்றார் அவனின் தந்தை பிரதாப்.

"வாப்பா உதிரா! உனக்கு ஒண்ணும் இல்லியே!" என கையில் வைத்திருந்த பாதி தின்ற வடையைத் தட்டில் போட்டுவிட்டு அவனருகே ஓடிவந்தார் தாய் தெய்வானை.

"தெய்வா! புள்ளைய பார்த்தாலே தெரியுதே நல்லாத்தான் இருக்கான்னு, நீ வா, வந்து சாப்பிடு! நேத்து நைட்லேர்ந்து ஒண்ணும் சாப்பிடாம இருக்க, அப்புறம் சுகர் கம்மியாகி மயக்கம் வந்துடும்" என வடையை அரைத்து சுவைத்துக் கொண்டே பேசினார் பிரதாப்.

"அப்பா, மாடியில் உங்களுக்காக சமைச்சு ரெடியா வெச்சிருக்கேன் வாங்க போவோம். பாவம் இவங்களுக்கு வேற உங்களால தொந்தரவு!" என கண்ணம்மா ஆச்சியிடம் கண்களால் தொந்தரவிற்கு மன்னிப்புக் கோரினான்.

"தம்பி இருக்கட்டும் தம்பி! இன்னிக்கு நம்ம ஆத்மிகாவுக்கு பிறந்தநாள் அதான் நம்ம அமரி கேசரி வடை எல்லாம் செஞ்சு அசத்தி இருக்கா! அமரி தம்பிகளுக்கும் கிண்ணத்துல போட்டு குடுத்துவிடு!" என்ற கண்ணம்மா ஆச்சியின் கட்டளையை உடனே நிறைவேற்றினாள் அமரிஷா.

கிண்ணத்தோடு மாடிக்கு ஏறியவன், மாடியின் முதல்படி விளிம்பில் நின்று கொண்டிருந்த இனியனின் கையில் அதைத் திணித்து, "இன்னிக்கு ஆத்மிகா பர்த்டேவாம், நல்லா தின்னு" என சொல்லாமல் கொள்ளாமல் தன் பெற்றோரை அழைத்துக் கலகப்படுத்தி இருக்கிறானே என்ற கடுப்பு அவன் கையில் வைத்த கிண்ணத்தின் அழுத்தத்தில் தெரிந்தது.

"டேய்! ஆது பர்த்டேன்னா நீதான்டா திங்கணும்" என கிண்ணத்தில் நெய்யில் குளித்துப் பூரிப்புடன் இருந்த கேசரியைப் பார்த்துக் கொண்டே கூறினான் யாழினியன்.

"ம்ம் அது அமரிஷா செஞ்சதாம்!" என வேகமாக அவனருகில் வந்து பல்லைக் கடித்துக் கொண்டே உதிரன் சொன்னது தான் தாமதம், நெய்யில் குளித்திருந்த கேசரி இப்போது இனியனின் வயிற்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது.

"இன்னுமா நீங்க வரலை!" என தன் தாயும், தந்தையும் கீழ் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பூச்செடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த பெற்றோர்களை மேலிருந்து பார்த்தபடியே கத்தினான்.

"ஏங்க அந்த ஊதாவுல ஒண்ணு, ஆரஞ்சுல ஒண்ணு அப்புறம் மஞ்சள்ல ஒண்ணு!" என சிறு குழந்தை போல் உதட்டினை நாவால் ஈரப்படுத்தியபடியே கை விரல்களை மடக்கிக் கணக்குப் போட்டுக் கொண்டே ஏறிய அம்மாவை உதிரன் முறைக்க, "அதுக்கென்ன தெய்வா இது எல்லாத்தோடயும் உனக்குப் பிடிச்ச அந்த கலர் மாறுற பூ இருக்குற செடியையும் சேர்த்து எடுத்துக்குவோம்!" என்றபடி படி ஏறினார் தந்தை பிரதாப்.

"என்ன கண்ணு! இனியன் உனக்கு மனசு சரியில்லைன்னு சொன்னான். என்னப்பா ஆச்சு?" என நாற்காலியில் குத்துக் காலிட்டு அமர்ந்து, தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த உதிரனிடம் வாஞ்சையுடன் கேட்டார்.

"ம்ம்..‌நல்லா வக்கனையா கீழ் வீட்டுல பொண்ணு பாக்குறா மாதிரி பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் தின்னுட்டு, அப்புறம் எந்த செடியை ஆட்டையைப் போடலாம்னு கணக்கு பாத்துட்டு இப்ப சாவகாசமாக வந்து கேக்குறீங்களா! நான் நல்லாக் குத்துக்கல்லாட்டம் வாட்ட சாட்டமாத்தான் இருக்கேன்!" என்றவனின் வாயில் இருந்து கடுப்புடன் வார்த்தைகள் வெளிவந்தன.

"அதானே நான் சொல்லலை தெய்வா அவன் நல்லாத்தான் இருப்பான்னு, நல்லவேளை இவனை நினைச்சுக்கிட்டு கேசரியையும், வடையையும் மிஸ் பண்ணிருப்ப!" என தொடையைத் தட்டி சிரித்த பிரதாப்பைப் பார்த்து முறைத்தான் உதிரன்.

"டேய் உதிரா! எதுக்கு இவ்வளவு கோபம், ஆமாம் கீழ் வீட்டுல ரெண்டு பொண்ணுங்களைப் பார்த்தோம் எந்த பொண்ணு!" என அவன் எதிரே வந்து நின்று கொண்டு, அவனின் கண்களைப் பார்த்தபடியே கேட்ட தெய்வானையின் காதுகளில், "கேசரி செஞ்ச பொண்ணு பெரியம்மா!" என்ற இனியனின் பதிவிசான குரல் வந்து விழுந்தது.

"உதிரா! டேய்... அப்ப அந்தப் பொண்ணு தானா, நான் சும்மா கேலியால்ல கேட்டேன்" என உதிரன் அந்த பெண்ணை விரும்புகிறானோ என்ற குறுகுறுப்பில் அவனைப் பார்த்தபடி கேட்ட தெய்வானையிடம், "அய்யோ! நான் இல்ல அம்மா அவன் தான்" என்றான் உதிரன் நாற்காலியில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தபடி,

"இனியா, என்னடா இதெல்லாம்! இதுக்குத் தான் எங்களை வரச் சொன்னியா!" என அதுவரை அமைதியாய் இருந்த பிரதாப் கண்டிப்புடன் குரல் கொடுத்தார்.

பெற்ற மகனை விட, இனியனின் மேல் அதிக அக்கறையும், கவனமும் கொண்டிருந்ததாலோ என்னவோ, அவரையும் மீறி கண்டிப்பு வெளிவந்துவிட்டது.

அடுத்து என்ன செய்வது என்று கண்கலங்கி நின்ற யாழினியனை கவனித்த உதிரன், "அம்மா கேசரி சாப்பிடாடுட்டு நூடுல்ஸ் சாப்பிடலாம் தானே! அப்பாவுக்காக அவருக்குப் பிடிச்ச காய்கறியை எல்லாம் நூடுல்ஸ் தயார் செஞ்சுருக்கேன், எடுத்துட்டு வரவா!" என தன் தந்தையின் கண்களில் மின்னல் தெறிப்பதைப் பார்த்து உள்ளூற திருப்தியுற்றபடி கிண்ணத்தில் நூடுல்ஸை எடுத்து வந்தான்.

தந்தையின் மனதை அவரின் வயிற்றின் வழி பிடித்தவன், இனியனுக்காக பேசத் துவங்கினான்.

"அப்பா! அவனுக்கு வாழ்க்கையில இருக்குற ஒரே குறிக்கோளே நல்ல அமைதியான பொண்ணாப் பார்த்து கல்யாணம் செஞ்சுக்கணும் தான்!" என மெல்லிய சிரிப்போடு கூறியவனை தடை செய்தபடி வந்து அவர்களின் அருகே அமர்ந்தான் இனியன்.

"பெரியப்பா! உங்களுக்கே என் சின்ன வயசு சோகக்கதை எல்லாம் தெரியும்! எனக்கு உங்களையும் பெரியம்மாவையும் மாதிரி ஒத்துமையா வாழணும்னு ஆசை. அந்த காலத்துலயே நீங்க லவ் மேரேஜ் தானே பெரியப்பா ப்ளீஸ்!" என கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுபவனைக் கருணையோடு பார்த்தார் பிரதாப்.

அதுவரை அமைதியாய் அவர்கள் பேசுவதை ஆதரித்துக் கொண்டிருந்த தெய்வானை சட்டென்று கோபத்துடன் எழுந்து நின்றார்.

"இங்க பாருங்க! இனியனுக்கு பெத்தவன்னு ஒருத்தி இருக்கா, அவ வந்து பார்த்து பேசாம நாமளா கல்யாணத்தை எல்லாம் முடிவு செய்யக் கூடாது" என உறுமும் பெரியம்மாவை எப்படி சமாதானம் செய்வது எனப் புரியாமல் திருதிருத்தான் இனியன்.

‌‌ *****
"இந்தாம்மா ஆது! என் பொண்ணு ஜமுனாக்கு போன் போட்டியாடா! அவளுக்கு இன்னமும் என் மேல கோபம் போலியாடா!" என கண்ணீர் மல்க கேட்ட கண்ணம்மா ஆச்சியின் மேல் கருணை பொங்கியது அமரிஷாவிற்கு.

"செஞ்சேன் ஆச்சி! அவங்களுக்கு உங்ககிட்ட பேச விருப்பமில்லையாம். என்னை அப்ப, உங்க அம்மா, மாப்பிள்ளையா ஒத்துகலைல்ல, அதுனால இப்ப உங்க அம்மாவை நான் மாமியாரா ஒத்துமாட்டேன்னு அவங்க வீட்டுக்காரர் சொல்லிட்டாராம் ஆச்சி. அவரை மீறி பேசுனா, அம்மா வீட்டுக்கே ஒரேயடியா அனுப்பிடுவேன்னும் சொன்னாராம்" என முகத்தில் உணர்வுகளை காட்டாது பேசிக் கொண்டிருந்த ஆத்மிகாவைப் பார்த்து, 'ராட்சசி' என மனதிற்குள் கூறிக் கொண்டாள் அமரிஷா.

"அப்படியா சொன்னான் அந்த எடுபட்ட பய! ம்ம் நான் ஆசை ஆசையா பெத்து வளர்த்த ஒத்த மக! ஹ்ம்ம் எங்க இருந்தாலும் அவ நல்லா இருந்தா சரி தான். அந்த மாரியாத்தா அவ வயுத்துல ஒரு புழு பூச்சி குடுக்காம விட்டுட்டாளே!" என கண்களில் கசிந்த கண்ணீரை முகத்தைத் திருப்பி தோளில் பதிந்திருந்த நைட்டியில் துடைத்தவர்,

"ஏங்கண்ணு ஆது! நேர்ல தான் வரமாட்டேன்னு சொல்லிட்டா! ஒரு போட்டாவாவது அனுப்ப சொல்லேன். நீ கையில வெச்சிருக்குற மொபைல்ல அனுப்ப சொல்லேன்டா! எனக்காக இது மட்டும் செய்யேன் தாயி, உங்கிட்ட நான் வேற என்ன கேக்க போறேன். நான் சாகுறதுக்குள்ள அவளை ஒருக்கா பாத்துடறேன்!" என மறுபடி அழத் தொடங்கினார்.

"ம்ம் நீ அழுவாத ஆச்சி! நான் கண்டிப்பா கேட்டுப் பாக்குறேன். ஜமுனா அக்கா எங்க போயிடப் போகுது, இன்னிக்கு இல்லைன்னாலும் நாளைக்கு கர்ப்பமாகி, பிரசவத்துக்கு இங்க வந்து தானே ஆகணும்" என்று பேசிய ஆத்மிகாவை கொலை வெறியோடு அமரிஷா பார்க்க, கண்ணீர் தளும்பும கண்களோடு, நன்றியோடு பார்த்தார் கண்ணம்மா ஆச்சி.

"சரி நீ படு, நான் போய் என் வேலையைப் பாக்குறேன்!" என உள்ளறைக்கு ஆத்மிகா விரைய, அவளை வேகமாகப் பின் தொடர்ந்து சென்றாள் அமரிஷா‌.

ஜன்னல் கதவினை விரியத் திறந்து அதன் கம்பிகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு நின்றிருந்த ஆத்மிகாவின் முதுகைப் பார்த்தும், அமரிஷாவிற்கு அத்தனை வெறி உண்டானது.

"ஏய்! நீ உன் மனசுல என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க! எத்தனை நாள் தான் ஆச்சியை ஏமாத்துவ! அவங்க அழுவுறைப் பார்த்தா பாவமா இல்ல உனக்கு! நீயெல்லாம் மனுசியே இல்ல தெரியுமா!" என தானும் அழுதாள் அமரிஷா.

"ஆமாம் டி நான் மனுசியே இல்ல, ராட்சசி போதுமா! என்னை என்னன்னு சொல்லச் சொல்ற, உன் பொண்ணு நம்பி ஓடிப் போனவன், அவளை சிவப்பு விளக்கு ஏரியாவுல வித்துட்டுப் போயிட்டான். அவளும் கொஞ்ச நாள் நரக வாழ்க்கை வாழ்ந்துட்டு எயிட்ஸ் வந்து செத்துட்டான்னு சொல்லச் சொல்றியா!

தன்னோட மக எங்கேயோ நல்லா வாழுறான்னு ஆச்சி நம்பிக்கிட்டு இருக்கு. அது அழுவுதேன்னு உண்மையைச் சொன்னோம்னு வையு, அவளோ தான் நம்மளை அழ வெச்சிட்டு, ஒரேயடியா ஆச்சி நம்மளை விட்டுப் போயிடும். உனக்கு உண்மையைச் சொல்லணும்னா, போ போய் நீயே உண்மையைச் சொல்லி ஆச்சியைக் கொல்லு போ!" என முகம் சிவக்க கத்திய ஆத்மிகாவைப் பார்க்க, இப்போது அமரிஷாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

உடனே பாய்ந்து சென்று அவளைக் கட்டிக் கொண்டவள், "ஆமாம், ஆச்சி ஜமுனா அக்காவோட போட்டோ கேட்டுருக்கே என்ன செய்யப் போற!" என்றாள் மெதுவான சமாதானக் குரலில்.

"ஆச்சி, பேரன் பேத்தியைப் பார்க்க ஆசைப்படப் போகுதோன்னு தான், ஜமுனா அக்காவுக்கு குழந்தைங்களே இல்லைன்னு சொன்னேன். இப்ப திடீர்னு அக்காவோட போட்டோ கேக்குதே!" என பெற்ற பிள்ளைகளை விட அவர்கள் பெறும் பிள்ளைகளின் மேல் பாசம் அதிகம் வைக்கும் தாயுள்ளத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தவள் இப்போது என்ன செய்வது என விழித்தாள்.
 
Top