கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சாளரச் சாரலே - 7

Poornima Karthic

Moderator
Staff member
ஆத்மிகா சொன்ன சூப்பர் மார்க்கெட்டிற்கு 'டான்' என்று ஐந்து மணிக்கு வந்தவன், சூப்பர் மார்க்கெட்டின் வெளியே இருந்த செருப்புகளை ஆராயத் தொடங்கினான்.

கருப்பு வாரில் சிறிய வெண்கற்கள் பதித்த செருப்பினைக் கண்டு அவன் மனது டாலடிக்க, 'அப்பாடா வந்திருக்கா!' என செருப்பினை வைத்தே, அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்ற கணிப்போடு கதவைத் திறந்து கடையின் உள்ளே சென்றான்.

'துவரம் பருப்புக்கும், கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியலையாம், ஆனா இவரு செருப்பைப் பார்த்தே, உள்ள ஆது இருக்காளான்னு கண்டுபிடிப்பாராம்!' என தெய்வானை மைண்ட் வாய்ஸில் வந்து கொமட்டில் குத்துவது போல் இருந்தது உதிரனுக்கு.

'நல்லவேளை இந்த சூப்பர் மார்க்கெட்ல காலணிகளை வெளியே போடணும்னு சட்டம் வெச்சிருக்காங்க, இல்லைன்னா அவ உள்ள இருக்காளா இல்லியான்னு ஒவ்வொரு இடமா தேடணும்' என்றபடி உள்ளே சென்றவனுக்கு இரும்பு ட்ராலி நிறைய பொருட்களை வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்த ஆத்மிகா கண்ணில்பட்டாள்.

இவனை அவளும் பார்த்துவிட, "ஹாய்!" என்று சம்பிரதாய சொல்லிவிட்டு ஷெல்பில் அடுக்கியிருந்த பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரம் ஆனாள்.

இவன் அவளருகில் சென்றதும், "சொல்லுங்க உதிரன், என்னமோ பேசணும்னு சொன்னீங்க?" என்றாள் ஒன்றுமே தெரியாதது போல்.

சுற்றும் முற்றும் பார்த்த உதிரனுக்கு நிறைய மனிதத் தலைகள் தென்பட, இங்கே என்ன பேசுவது என்று தயங்கியபடி, "இல்ல, மறுபடியும் உங்களுக்கு நினைவுபடுத்தணும்னு அவசியம் இல்ல, நீங்க அப்பாக்கிட்ட என்ன பேசுனீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று பதட்டத்தில் கம்மியிருந்த குரலை சரி செய்து கொண்டே கேட்டான் உதிரன்.

"ஏன் அப்பா உங்ககிட்ட எதுவும் சொல்லியா?" என்றபடி அவள் பாட்டிற்கு இந்த பெருங்காயம் வாங்கலாமா, இல்லை அதுவா என்ற சிந்தனையில் இரண்டு பெருங்காய டப்பாக்களை இரண்டு கையில் வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

'தனியா பேசணும்னு சொல்லியும் இங்க வரச் சொல்லிருக்கான்னா, நம்ம இனியனோட வாழ்க்கை இந்த பெருங்காய டப்பா அளவு கூட வொர்த் இல்லைன்னு தானே சொல்லாம சொல்றா!' என்ற தார்மீகக் கோபம் எழ, "சரிங்க நான் வரேன்" என்று கோபத்தில் கொந்தளித்த இதயத்தை அடக்கியபடி விர்ரென்று திரும்பி நடந்தான் உதிரன்.

"உதிரன் நில்லுங்க! எல்லாப் பொருளும் எடுத்துட்டேன் டூ மினிட்ஸ்ல வந்துடறேன்" என அவன் முதுகிற்குப் பின்னாலிருந்து ஆதுவின் குரல் வர, "ஓகே நான் வெளிய வெயிட் பண்றேன்!" என்றான் திரும்பியும் பாராமல்.

"இல்ல, நீங்க அந்த பில் போடுற எடத்துல நில்லுங்களேன் ப்ளீஸ்!" என்று முதல்முறையாய் அவளிடம் இருந்து மென்மையான கோரிக்கை ஒன்று வரவும், "ம்ம் சரி!" என தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றான்.

தன் திட்டம் சரியாக வேலை செய்வதை நினைத்து நிறைவான புன்னகை சிந்தியவள், தன்னையும் அறியாமல் மெல்லிய சீழ்க்கை ஒலி எழுப்பியபடி பணம் செலுத்தச் சென்றாள்.

பணம் செலுத்தும் இடத்தின் அருகே நின்றவன், அவள் ட்ராலி நிறைய அப்படி என்ன வாங்கியிருக்கிறாள் என்பதை கவனிக்காதது போன்ற பாவனையுடன் நோட்டம் விடத் தொடங்கினான்.

இருபது கிலோ பிரியாணி அரிசி இரண்டு மூட்டைகள் மற்றும் எக்கச்சக்கமாகப் பிரியாணி தயாரிக்க தேவையான பொருட்கள் என வாங்கி அடுக்கியிருந்தாள்.

'மூணு பேருக்கா இத்தனை! ஒரு நாளைக்கு மூணு வேலையும் பிரியாணி சாப்பிட்டாலும் தீராதே!' என கணக்கு போட்டுக் கொண்டிருந்தவனுக்கு, "அண்ணா, வழக்கம் போல எல்லாத்தையும் பிரியாணி அக்கா வீட்டுல டெலிவரி செஞ்சுடுங்க!" என பர்ஸில் இருந்த கார்ட்டை நீட்டியபடி கூறினாள்.

'ஓ! பூக்கார அக்கா மாதிரி பிரியாணி அக்கா போல, அவங்ககிட்ட குடுத்து பிரியாணி செஞ்சுத்தர சொல்லி சாப்பிடுவாங்க போல, பெரிய இடம்' என மனதிற்குள் நினைத்து புருவம் உயர்த்தி உதட்டை கீழ் நோக்கி வளைத்துக் கொண்டிருந்தவனின் பார்வை விளிம்பில் வந்தவள், "என்னாச்சு ரொம்ப யோசனையா இருக்கீங்க, உங்களுக்கு ஏதாச்சும் வாங்கணுமா!" என்றாள்

"இல்ல இல்ல நத்திங்!" என்றான் உதிரன் வேறு எங்கோ பார்த்தபடி,

"சரி உதிரன், உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லைன்னா பக்கத்துல உள்ள காபி ஷாப்ல உக்காந்து ஒரு அரை மணி நேரம் பேசிட்டுப் போகலாம்!" என்றவளை, 'ஷ்ஷப்பாடா! ஒரு வழியா பூசாரி வரம் குடுத்துட்டார்' என்பது போல் பார்த்தான் உதிரன்.

காபி ஷாப்பில் அவளுக்கு வேண்டிய ஃபில்டர் காபியைச் சொல்லிவிட்டு, உதிரனிடம் கேட்டு அவனுக்குப் பிடித்த கோல்ட் காபியையும் சொன்னவள்.

"ம்ம் சொல்லுங்க உதிரன் என்ன பேசணும்?" என்றாள் தன் இரு கைகளைக் கோர்த்து மேஜை மேல் வைத்து, அதன் மேல் முகத்தை வைத்தபடி,

'மறுபடியும் முதல்லேர்ந்தா' என்ற சலிப்பு மேலோங்க, "இல்லங்க, உங்க அக்கா அமரிஷாவை, என் கசின் யாழினியன் கல்யாணம் செஞ்சுக்கணும்னு விரும்புறான். என் அப்பா, அம்மாக்கு அவன் சந்தோஷம் தான் முக்கியம். அதான் உங்க விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு... ஏற்கனவே கண்ணம்மா ஆச்சிக்கிட்ட பேசிட்டோம், உங்களுக்கு ஓகேன்னா, அவங்களுக்கும் ஓகேன்னு சொல்லிட்டாங்க!" என்று தெளிவாகவும், மென்மையாகவும் தன் மனதில் இருப்பதைத் தெரியப்படுத்தினான்.

"முதல்ல அமரிஷா என்னோட அக்கான்னு யாரு உங்ககிட்ட சொன்னாங்க?"

"அய்யோ சாரிங்க, அவங்களைப் பார்த்தா உங்க அக்கா மாதிரி இருந்துச்சா அதான் அப்படி நினைச்சுட்டேன். சரி உங்க தங்கச்சி அமரிஷாவோட கல்யாணத்தைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?"

"அமரிஷா என்னோட தங்கச்சின்னு உங்ககிட்ட யாரு சொன்னாங்க உதிரன்?"

'அய்யோ இவள் கேட்கும் கேள்விகளுக்கு, ஒன்று தன் தலையை சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் இல்லை அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க வேண்டும்' என்று உதிரனின் மனசாட்சி கதறியது.

"சரி அவங்க உங்க அக்காவும் இல்லை தங்கச்சியும் இல்லைன்னா அவங்க உங்களுக்கு யாரு?" என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்தபடி,

"இந்த கேள்விக்கு நான் கடைசியா பதில் சொல்றேன் உதிரன். இப்ப என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க, உங்களைப் பொறுத்தவரை மனுஷ வாழ்க்கையில எது கஷ்டம்?" என்று மர்மமான புன்னகையோடு அவனைப் பார்த்துக் கேட்டாள்.

'ம்ம்: என சில நொடிகள் மேல் நோக்கி யோசித்தவன், "மனுஷனோட அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இல்லாம தவிக்கிறது தான் என்னைப் பொறுத்தவரை ரொம்ப கஷ்டம் ஆத்மிகா!" என்று அவள் கேட்ட கேள்விக்கு மிகச் சிறப்பாகத் தான் பதில் சொல்லிவிட்டோம் என்கிற பெருமிதத்தில் அமர்ந்திருந்தான் உதிரன்.

"சரி தான் நீங்க சொன்ன இந்த அடிப்படை 'உ' ஆண்களுக்கு, ஆனா அது இல்லாம வேற ரெண்டு 'உ' ஆன உடம்பு, உறக்கம் இந்த கஷ்டம் பெண்களுக்கு இருக்கே உதிரன். என்ன பாக்குறீங்க, அதுதான் தன்னோட உடம்பைப் பாதுகாக்குற கஷ்டம். என்னதான் கற்பு உடம்புல இல்ல மனசுல தான் இருக்குன்னு சொல்லப்பட்டாலும், நம்ம உடைமையான உடம்ப, நம்ம அனுமதி இல்லாம எப்படிங்க மத்தவங்க உபயோகிக்கலாம்.

நாலு வயசு குழந்தையோட பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு அது ரத்தம் வழிய நின்னப்ப, அவளை கையில அள்ளிக்கிட்டு கண்ணு நிறைய தண்ணியோட ஆஸ்பத்திரி போனேங்க நானு. அந்த சம்பவத்தை கடந்த பிறகு எப்படிங்க எங்களால நிம்மதியா இருக்க முடியும். தூங்கும் போது கூட நிம்மதியா தூங்க முடியாது, எப்ப எவன் வந்து மேல விழுவான்னு பயந்துக்கிட்டே தூங்கணும். அப்படியே எல்லாத்தையும் மறந்துட்டு தூங்கும் போது, சின்னதா பல்லி சத்தம் கேட்டாலும் கூட படபடன்னு அடிச்சுக்கிட்டு எழுந்திருச்சுப் பார்ப்போம் தெரியுமா!" என்று பேசுபவளை, அதிர்ச்சியில் சன்னமாக வாயைத் திறந்தபடி பார்த்திருந்தான் உதிரன்.

"என்ன உதிரன்! நான் பேசுறதைக் கேக்கும் போது உங்களுக்கு கொஞ்சம் சங்கடமாத் தான் இருக்கும், நீங்க இதுவரை கேட்டிராத அசௌகரியமான விஷயங்களாவும் இருக்கும். ஆனா எனக்கு வேற வழி தெரியலை. நான் பிறந்தது மும்பை சிவப்பு விளக்கு பகுதியில இருக்குற வீட்டுல தான். என் அம்மா எனக்கு செஞ்ச நல்லதுலயே எது உசத்தி தெரியுமா! நான் பிறந்ததும் என்னை ஆண் குழந்தைன்னு சொல்லி மறைச்சது தான். ஒரு கட்டத்துக்கு மேல ஆண் குழந்தைங்க அந்த வீட்டுல இருக்க முடியாது, துரத்தி விட்டுறுவாங்க. வெளியில் ஆணாகவும், உள்ள பெண்ணாவும் ரோட் ரோடா சாப்பாட்டுக்கு திரிஞ்சேன் சார் நானு. மத்தவங்க என்னை ஆணாப் பார்த்தாலும், எனக்கு நான் பொண்ணுன்னு தெரியுமே, எப்படா மாட்டுவோம்னு பயந்துக்கிட்டே இருப்பேன்" என்றவள் சட்டென்று மிடறு கூட்டி விழுங்கி, கண்களை மூடித் திறந்து எதிரில் இருந்த சூடான காப்பியை தொண்டையில் சரித்துக் கொண்டாள்.

சாதாரணமாகவே ஜொலிக்கும் அவளின் கண்கள், இப்போது நீர் திரண்டு ஒரு சிறு குளம் போல காட்சி தந்தது. நிச்சயம் அதற்குக் காரணம் காபியின் சூடாக இருக்காது என்று உதிரனுக்குப் புரிந்தது.

"ஒரு கட்டத்துக்கு மேல என்னால பெண் அப்படிங்குற அடையாளத்தை மறைக்க முடியல, சோ அங்கேர்ந்து சென்னைக்கு எஸ்கேப் ஆயிட்டேன்!" என மெலிதாகச் சிரித்தபடி கூறினாள்.

"ஜமுனா அக்கா?" என்று கேள்வியோடு நிறுத்தியவனிடம், "ஆமாம் ஜமுனா அக்கா, என் அம்மாவோட இருந்தவங்க தான். மிஞ்சி மிஞ்சி போனா என்னை விட எட்டு வயசு பெரியவர்களா இருப்பாங்க! காதலிச்சவன் செஞ்ச சதியால போய் சேர்ந்துட்டாங்க! என்ன செய்ய இப்படியும் சில காதல்கள்!" என்றவளின் பேச்சு உதிரனை வெகுவாக பாதித்தது.

'அவள் எல்லா காதலும் இப்படித்தான், ஆண்களே இப்படித்தான்' என்று மறந்தும் கூட கூறவில்லை, சில காதல்கள் என்று தான் சொல்கிறாள் எப்படி இவளால் இப்படி பேச முடிகிறது என அவளையேப் பார்த்திருந்தான் உதிரன்.

"ஆனா இப்ப நான் தெம்பா, தைரியமாத்தான் இருக்கேன். வெறி நாய் நம்மளைக் கடிச்சு வெச்சா ஊசி போட்டுட்டுக் கடந்து போயிடறதில்ல அது போல தான் இதுவும். ஏன்னா நம்ம ஊர்ல தான் தண்டனைங்குற பெயருக்கே இடமில்லையே, கடந்து போகவும், நடந்ததை மறைக்கவும் தானே கத்துக் கொடுக்கப்படுது! ஹ்ம்ம் எல்லாத்தையும் படிப்பாலயும், சிந்தனையாலயும் கடந்து வந்துட்டேன். நீங்களும் நான் சொன்னதை எல்லாம் கேட்டதும் மறந்துடுங்க!" என்று அன்றலர்ந்த மலராய் சிரித்தபடி கூறினாள்.

'ம்ம்: என்று தலையாட்டியவனிடம், "சூப்பர் மார்க்கெட்ல கொஞ்ச நேரம் உங்களைக் காக்க வெச்சதுக்கே உங்களுக்கு சுர்னு கோவம் வருதே! நாங்கள்ளாம் பல நூற்றாண்டுகளாக எங்க உடம்பு எங்க உரிமைன்னு போராட்டம் செஞ்சு நீதிக்காகக் காத்துக்கிட்டு இருக்கோம். சரிவிடுங்க நீங்க என்ன செய்வீங்க பாவம்", என நகைத்தவள், "ஆமாம், நாங்க பிரியாணி ஃபேமிலினு தானே சூப்பர் மார்க்கெட்ல நினைச்சீங்க!" என்று கலகலத்து சிரித்தவளிடம் ஆமாம் என்பது போல் தலை அசைத்தான் உதிரன்.

"அதுக்குப் பின்னாடியும் ஒரு சூப்பர் கதை இருக்கு, இன்னொரு நாள் சொல்றேன். பிரியாணி அக்கா கதைன்னு சந்தர்ப்பம் வரும் போது ஞாபகப்படுத்துங்க சொல்றேன். ஆங், அப்புறம் அமரிஷா எனக்கு ஒருமுறை ரத்தம் கொடுத்ததைத் தவிர, எந்த வித ரத்த சம்பந்தமும் எங்க ரெண்டு பேருக்கு இடையிலும் இல்லை. இன்ஃபாக்ட் எங்களுக்கும், கண்ணம்மா ஆச்சிக்குமே எந்த சம்பந்தமும் இல்லை. ஏதோ ஜமுனா அக்கா தயவால தான் எங்களுக்கு ஆச்சி கிடைச்சாங்க. அப்புறம் சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா எங்க உண்மையான பெயர் ஆத்மிகாவோ இல்லை அமரிஷாவோ கிடையாது அது எங்களுக்கு நாங்களே சூட்டிக் கொண்ட பெயர்கள் " என்று தெத்துப் பல் தெரியக் கூறி கண் சிமிட்டினாள் ஆது.

"அப்படி அமரிஷாக்கு என்ன தாங்க பிரச்சனை? எப்படி அவங்க உங்ககூட சேர்ந்தாங்க!"

"வேணாமே! என் கதையை சொல்லத் தான் எனக்கு உரிமை இருக்கு. அவ கதையை அவளா பிரியப்பட்டா தான் என்னால சொல்ல முடியும். ஆனா ஒண்ணு, என்னை விட அவளோட கதை கொடுமை, அப்படின்னா நீங்களே கற்பனை செஞ்சுக்கோங்க. உங்க ப்ரெண்டுக்கிட்டயும் இதை சொல்லிடுங்க, என் கதையை அவர்கிட்ட சொல்றதுல எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. சொல்லப்போனா அடுத்த மாசம் என் கதையை நானே டெட் ஸ்பீச்ல (ted speech) சொல்லப் போறேன்.

அமரிஷா இன்னமும் பழைய விஷயங்கள்ல இருந்து வெளிய வரலைங்க! இப்ப இப்பத் தான் வேலைக்குப் போக, கவுன்சிலிங் போக, படிக்கன்னு இருக்கா! இந்த நேரத்தலு கல்யாணத்தைப் பத்தி பேசிஒ, ரெண்டு பேரோட வாழ்க்கையும் கெடுத்துட வேண்டாம்னு பார்க்குறேன். அவ எப்ப முழுசா மீண்டு வருவான்னு தெரியாம, உங்களை நான் சூப்பர் மார்க்கெட்ல காக்க வெச்ச மாதிரி, நம்மால இனியனை காத்திருக்க வைக்க முடியாது" என்று அவள் சொன்னதும், சிறிது நேரம் கூட காத்திருக்காமல் கோபப்பட்டதற்கு வருந்தினான் உதிரன்.

'இதற்கே காத்திருக்க முடியவில்லை, உன் உடன்பிறப்பு எப்படி அமரிஷாவிற்காய் வருடக்கணக்கில் காத்திருப்பான் என்று சொல்லாமல் சொல்கிறாளோ' - உதிரன்.

ஆத்மிகா, "அவரோட கனவைப் பத்தி, உங்க அப்பா அதான் பிரதாப் சொன்னாங்க‌. ஏற்கனேவே காயம்பட்ட ரெண்டு பேர் சேர்ந்தா அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியல‌ உதிரன். இனியனை முதல்ல அவரோட அம்மாக்கிட்ட எனக்காகப் பேசச் சொல்லுங்க‌‌! பேசி உண்மையைத் தெரிஞ்சுக்க சொல்லுங்க என்றாள் மாறாத தன்னம்பிக்கை நிறைந்த புன்னகையுடன்.

"சாரிங்க! இத்தனை நாளா இல்லாம, இப்ப இன்னிக்கு ஆம்பளையா பிறந்ததுக்கு ஃபீல் பண்றேங்க. அப்புறம் இன்னொரு சாரியும் கூட, பீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்துருச்சு வந்திருக்கிற உங்களை மறுபடியும் காதல்னு பெயரைச் சொல்லி நெருப்புல தள்ளி இருந்திருப்பேன்!" என்றவன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு, "நிச்சயமா உங்க ஃப்ளேஷ்பேக்கைக் கேட்டு நான் என் காதலை மறைக்கலை, மறக்கல. எனக்கேத் தெரியாமக் கூட உங்களை ஹர்ட் செஞ்சுடக் கூடாதுன்னு தான் சொல்லாம இருக்கேன். மத்தபடி உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்ங்க. நான் உங்களைப் பொத்திப் பாதுகாப்பேனான்னு தெரியாதுங்க, ஆனா வாழ்க்கையில என்ன நடந்தாலும் உங்க பக்கத்துலயே ஆதரவா இருப்பேங்க! நான் ஏன் இப்படி லூசு மாதிரி பேசுறேன்னும் எனக்குத் தெரியலைங்க!" என்று படபடப்பாக கூறியவன், அவ்விடத்தில் இருந்து விரைவாக வெளியேறினான்.

அவன் என்ன சொல்லிச் சொன்றான் என்று விளங்கியதும், உதிரன் அருந்தாமல் சென்ற கோல்ட் காபியோடு சேர்ந்து ஆத்மிகாவும் குப்பென்று வியர்த்திருந்தாள்.

 
Top