கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையிலே இனிமை காண முடியுமா?- சக்தி பாலா

siteadmin

Administrator
Staff member
தனிமையிலே இனிமை காண முடியுமா?

சுவரில் இருந்த கடிகாரம் இரவு மணி பதினொன்றை காட்டியது!

சமயலறையில் பாத்திரங்களை எடுத்து வைக்கும் சத்தம்! சிறிது நேரத்தில் விளக்கு அணைக்கும் சத்தம்! கட்டில் கிரீச்சிடும் சத்தம்!

ஒரு பத்து நிமிடங்கள் மின்விசிறியின் சத்தத்தை தவிர வேறெந்த சத்தமும் கேட்கவில்லை அந்த அறையில்!

பட்! பட்! பட்! பட்!

நித்திராதேவியின் கரங்களுக்குள் சிக்க இருந்தவள் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்!

மறுபடியும் பட்பட்டென்ற சத்தம்! கதவின் மேல் யாரோ கல் எரியும் சத்தம்!

ஜன்னலை திறந்து பார்த்தாள்! தெருவே அமைதி கோலம் பூண்டிருந்தது! சுற்றிலும் ஆள் அரவமே இல்லை!

ஜன்னலை மூடிவிட்டு வந்து படுத்தாள்! மீண்டும் கல் வந்து விழும் சப்தம்! காதை பொத்திக் கொண்டு முகம் வரை கம்பளியை இழுத்து போர்த்திக் கொண்டு மீண்டும் நித்திராதேவியின் பிடிக்குள் நுழைந்தாள்!

இது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்று தான்!

வீட்டின் மீது கல் எறிவது, வீட்டு சுற்று சுவரில் கண் காண முடியாத படங்கள், வாசகங்களை கிறுக்குவது, வெளியில் செல்லும்போது ஜாடைமாடையாக பேசுவது, நக்கல் சிரிப்பு, கள்ள பார்வை, வழிசல் பேச்சு இது எதுவுமே அவளுக்கு புதிதல்ல. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தினம் தினம் அவள் அனுபவித்து வருவது!

அவள் மட்டுமே அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தாள். அதுவே பலரின் வாய்க்கு அவலானது!

பார் டான்சர், சினிமா டான்சர், வேறு தோழில் செய்பவள் இப்படி பல பெயர்கள் அவளுக்கு சூட்டப்பட்டன!

அவள் ஒரு ஆடை வடிவமைப்பாளர். வித விதமான ஆடைகளை வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப வடிவமைப்பதில் அவளை மிஞ்ச ஆள் கிடையாது. ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்துவம் மிளிரும். அதுவே அவளுக்கு பல வாடிக்கையாளர்களை ஈட்டி தந்தது. இலவச இணைப்பாக பல வேடிக்கையாளர்களையும் ஈட்டியது!

துணி தைக்க குடுக்க வரும் சாக்கில் அவளிடம் நட்பு பாராட்டுவது போல பேசி வழியும் வேடிக்கை ஆண் வர்க்கம் ஒரு புறம்!

அவளுக்கு புத்தி சொல்வது போல பேசி அவளை கவர முயலும் வஞ்சக குணம் கொண்ட ஆண் வர்க்கம் ஒரு புறம்!

நேரடியாகவே நீ தனியா தானே இருக்க என் கூட வாவென்று அழைக்கும் அரக்க குணம் கொண்ட ஆண் வர்க்கம் ஒரு புறம்!

இப்படி பல புறத்தில் இருந்து வஞ்சக தீ அவளை சூழ்ந்தாலும், அதை எதையுமே தன் அகத்தே கொண்டு செல்லாமல் ஒரு புன்னகையுடன் கடந்து விடுவாள் அவள்!

காலை எழுந்ததும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அன்று தைப்பதற்கு வாங்க தேவையான பொருட்களை பட்டியலிட்டு கதவை பூட்டி வெளியே நடந்தாள் அவள்!

அவள் வெளியே வருவதை பார்த்ததும், கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மனிதரும் அவர் மனைவியும் சட்டென்று உள்ளே சென்று கதவை அடைத்தனர்!

தெருவில் நின்று அடுத்தவர் வீட்டு படுக்கையறை வரை சென்று புறம் பேசிக் கொண்டிருந்த ஓரிருவர் இவள் வருவதை பார்த்ததும் கழுத்தை திருப்பிக் கொண்டு சென்றனர்!

ஒன்றுக்கு பத்தாக விலை வைத்து காய்கறி விற்கும் அந்த தெருவின் வாடிக்கை விற்பனையாளர் இவளை கண்டும் காணாதது போல வண்டியை தள்ளிச் சென்றார்!

இவர்கள் எல்லாம் மிகவும் ஒழுக்க சிகாமணிகள்! இவளின் நிழல் படுவதை கூட பாவமாக கருதுபவர்கள்!

இதையெல்லாம் கவனித்தும் ஒரு புன் சிரிப்புடன் கடந்து, நடந்து சென்றாள் அவள்!

அவளின் எதிரே வந்து நின்றான் அவன்! அவன், அவளின் பார்வையில் மனிதன்! கடந்த இரண்டு வருடங்களாக அவளிடம் நேசத்தை மட்டும் எதிர்பார்த்து பழகுபவன்! அவளின் இறந்தகாலம், அவளின் தோற்றம், பிறர் அவளை பற்றி கூறும் அவதூறுகள் போன்ற புறக்காரணிகளை தவிர்த்து அவளை அவளுக்காக மட்டுமே நேசிப்பவன்! அவள் சம்மதத்திற்காக காத்திருப்பவன்!

“நேத்து நைட் என்னாச்சு?”

“என்னாச்சு? ஒன்னும் ஆகலையே?”

“எனக்கு எல்லாம் தெரியும்? சொல்லுங்க என்னாச்சு?”

“ம்ம்ச்ச்....எப்பவும் போல தான். கல் எறிஞ்சாங்க. எட்டி பார்த்தா ஆளை காணோம். நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். எரிஞ்ச கல்லெல்லாம் பொறுக்கி வச்சிருக்கணும்”

“எதுக்கு? திருப்பி எரியுறதுக்கா?”

“இல்லை அவங்க எரிஞ்ச கல்லெல்லாம் பொறுக்கி வச்சிருந்தா இந்நேரம் ஒரு புது வீடே கட்டியிருக்கலாம்” சிரித்துக் கொண்டே அவள் கூறினாள். அவன் சிரிக்கவில்லை. முகம் வேதனையில் கசங்கியது.

“ஹலோ! ஜோக் சொன்னா சிரிக்கணும்!”

“இது ஜோக் இல்லை. தயவுசெஞ்சு சிரிக்காதீங்க. எனக்கு கோபம் வருது. மனசு ஆறவே இல்லை. இன்னும் எத்தனை நாள்? எத்தனை நாளைக்கு இதையெல்லாம் பொறுத்துக்கணும்?” நரம்புகள் புடைக்க பேசியவன், கண் மூடி தன் ஆத்திரத்தை மட்டுபடுத்தினான்.

மீண்டும் கண்களை திறந்தபோது அது சிறிது கலங்கியிருந்தது, “போதும்! எல்லாம் போதும்! நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிகோங்க. இப்பவே வாங்க. ஒரு கோயிலுக்கு போய் கல்யாணம் பண்ணிக்குவோம். கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணுவோம். யாரை பத்தியும் கவலைப்பட வேண்டாம். எனக்கு நீங்க, உங்களுக்கு நான். வாழ்க்கையோட கடைசி மூச்சு வரைக்கும் நல்ல நண்பர்களா, உற்ற துணையா இருப்போம்”

“இல்லை அது சரிபட்டு வராது”

“அதான் ஏன்?”

“உங்களை மாதிரி ஒரு நல்ல நண்பரை நான் இழக்க விரும்பலை. கல்யாணம், இல்லறம் நமக்கிடையே உள்ள இந்த புனிதமான நட்பை இழக்க வைக்கும், என் சுயத்தை இழக்க வைக்கும், என் மேல உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கும். கடைசியில நம்ம வாழ்க்கையை இழக்க வைக்கும். இது எதுவுமே நமக்கு நடக்க வேண்டாம்”

“இதெல்லாம் உங்க கற்பனை. இதெல்லாம் நடக்கும்னு உங்களால உறுதியா சொல்ல முடியாது. ஆனால் என்னால உறுதியா ஒரு விஷயம் சொல்ல முடியும். தனிமை ரொம்ப கொடுமையானது. இப்போ உங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமா தெரியாம இருக்கலாம். ஆனால் காலபோக்குல இந்த தனிமை உங்களை கொல்லும். வயசாகி முடி நரைச்சு, கால் ஊன்றி நடக்க முடியாத கட்டத்துல நமக்குன்னு ஒரு உறவு இல்லாதது பெரிய இழப்பா தெரியும். உங்களை உயிரோட சாகடிக்கும். மனுஷனா பிறந்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு துணை கண்டிப்பா வேணும்”

அவள் மௌனமாக நின்றாள். இரண்டு வருடமாய் போராடும் அவனுக்கு கிடைத்த முதல் மௌனம் இது! அவள் மௌனம் அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது!

“நல்ல யோசிச்சு பார்த்து ஒரு முடிவு சொல்லுங்க” மனநிறைவுடன் முகத்தில் புன்னகையுடன் அவன் செல்ல, செல்லும் அவனையே பார்த்த வண்ணம் நின்றுவிட்டாள் அவள்.

மறுநாள் காலையில் எழுந்ததும் உற்சாகத்துடன் அவளைக் காணச் சென்றான்.

அவள் வீட்டிலிருந்து புதிதாய் பேச்சு சத்தம் கேட்டது.

யோசனையுடன் உள்ளே நுழைந்த அவனை அவள் குரல் உற்சாகமாய் வரவேற்றது.

உள்ளே அவளுடன் எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவரும், ஒத்த வயதுள்ள அவர் மனையாளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அவள் அவன் பக்கம் வந்து முகம் நிறைந்த புன்னகையுடன் பேசினாள்.

“நேத்து நீங்க பேசுனதெல்லாம் ரொம்ப சரி. தனிமை ரொம்ப கொடுமை தான். அதான் ரொம்ப யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன். முதியோர் இல்லத்துக்கு போய் இவங்க ரெண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வந்துட்டேன். இவங்களும் தனிமையில வாடுறவங்க தான். இவங்க பசங்க இவங்களை தனிமைல விட்டுட்டாங்க. எனக்கும் சொந்தமில்லை அவங்களுக்கும் சொந்தமில்லை. அதான் நாங்க மூணு பேரும் சொந்தமாகலாம்னு முடிவு பண்ணிட்டோம். நீங்க எனக்கு ரொம்ப முக்கியம். உங்க நட்பு எனக்கு முக்கியம். என் வாழ்க்கையில எப்பவுமே நீங்க ஒரு நல்ல நண்பரா இருக்கனும்”

ஒருநிமிடம் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான். அந்த பெரியவர்களை பார்த்தான். அங்கிருந்த மூவரின் முகங்களிலும் கள்ளமில்லா சிரிப்பும், எல்லையில்லா பாசமும் பிரதிபலித்தது. அவனும் சிரித்தான். அங்கிருந்து வெளியேறினான்.

அவள் பெயரென்ன? உண்மையில் அவள் கதையென்ன? அவள் பெற்றோர் எங்கே? அவள் ஏன் தனியே இருக்கிறாள்? இது எதுவுமே நமக்கும் தெரிய வேண்டியதில்லை. அவளை அவளாகவே ஏற்று கொள்வோம், அவன் தோழியாக ஏற்று கொண்டதை போல, அந்த முதியவர்கள் தங்கள் மகளாக ஏற்றுக் கொண்டதை போல!

தனிமையில் இனிமை காண முடியுமா? தெரியவில்லை?!

ஆனால் ஒருவரின் தனிமையை போக்கி அதில் இனிமை காண முடியும்......

நட்புடன்

சக்தி பாலா




 

Sakthi bala

New member
சக்தி பாலா நல்ல முடிவை கொடுத்திருக்கீங்க... :love: :love:
நன்றி நன்றி க்கா

என் கதையை படிச்சு கமெண்ட்ஸ் குடுத்தது ரொம்ப மகிழ்ச்சி க்கா😍😍😍
 
Top